Skip to content
Home » எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை

எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை

எலான் மஸ்க்

ஜூன் 22, 2012.

டெஸ்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அறிக்கையின் சுருக்கம் இதுதான், ‘டெஸ்லா உலகத்துக்கு ஓர் ஆச்சரியத்தை வெளியிடப் போகிறது. இந்தத் தேதியில், இந்த நேரத்தில் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது. தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நிகழ்ச்சி நடக்கும் இடம்: டெஸ்லா அலுவலகம்’. அமெரிக்காவில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு, டெஸ்லா வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக ஊடகங்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் அந்த நிகழ்வில் அக்கறையில்லை. மஸ்க் வழக்கம்போல் பொய் வாக்குறுதிகளை வழங்கி ஏதோ பிதற்றப் போகிறார் என்றே அனைவரும் நினைத்தனர். ஊடகங்களோ இன்றைக்கு மஸ்க்குக்கு எதிராகச் சில செய்தித்துளிகளாகவது கிடைக்குமே என்ற ஆர்வத்தில்தான் அங்குச் சென்றன.

வானுயர்ந்த கட்டடத்தில், டெஸ்லா என்று கருப்பு நிறத்தில் பெரிதாக எழுதப்பட்டிருந்த அந்தப் பெயர் பலகையை அருகில் இருந்து பார்த்தபொழுது உண்மையிலேயே அவர்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்களில் பலர் இதற்குமுன் டெஸ்லா தொழிற்சாலையை அருகில் சென்று பார்த்தது கிடையாது. நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும்போதும், வானில் பறக்கும்போதும்தான் பார்த்திருக்கின்றனர். விமானம் வானில் உயரும்போதும், தரையிறங்கும்போதும் டெஸ்லா அலுவலகத்தின் இருப்பை உணரும்படி தான் மஸ்க் அந்தக் கட்டடத்தை நிறுவி இருந்தார். ஆனால் யாருக்கும் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது கிடையாது. இப்போது வெளியில் இருந்து பார்த்தபோதே ஆச்சரியப்பட்டவர்களுக்கு உள்ளே சென்றபோது ஏற்பட்டிருக்கும் உணர்வை விவரிக்கவா வேண்டும்?

டெஸ்லா தொழிற்சாலை முழுவதும் வெள்ளை நிறத்தில் கண்களைக் கவரும் வண்ணம் இருந்தது. ஆங்காங்கே முப்பது அடிக்கும் உயரமான இயந்திரங்கள், சிவப்பு நிற ரோபோட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைக்கு உள்ளே செல்லும் வழியெங்கும் கார்களின் பாகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில கார்கள் பாதி முடிக்கப்பட்ட நிலையில் நின்றுகொண்டிருந்தன. அதையும் தாண்டி உள்ளே சென்றபோது தொழிற்சாலையின் ஒரு பகுதியின் இறுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்குக் கீழ் அனைவரும் அமர்வதற்கு ஏற்ற வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. வந்தவர்கள் கொறிப்பதற்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேடை மூங்கில் மரத்தால் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. வண்ணமயமான விளக்குகள் மேடை முழுவதும் எரியவிடப்பட்டிருந்தன. ஆங்காங்கே அமெரிக்க நாட்டின் தேசியக் கொடி பொருத்தப்பட்டு, காற்றில் அசைந்தபடி இருந்தது.

மணி ஆகிக்கொண்டிருந்தது. அங்குக் கூடி இருந்தவர்கள் மஸ்க்கின் வருகைக்காகக் காத்திருந்தனர். கடிகார முள் சரியாக 6ஐ தொட்டவுடன், சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகள் திடீரெனப் பேரிசையை ஒலித்தன. மேடையின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த திரை மெல்ல விலகியது. மேடையின் பின்புறத்தில் இருந்து வண்ணமயமான கார்கள் வரிசையாக அணி வகுத்து மேடையில் ஏறி வந்தன. அந்தக் காட்சி பார்ப்பவர்களுக்கு அற்புதமான மன எழுச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கார்களின் தோற்றமும் வடிவமும் அட்டகாசமாக இருந்தன. அவற்றின் அழகு கவர்ந்து இழுத்தது. வந்தவர்கள் கட்டுண்டு நின்றனர்.

அந்தக் கார்கள் செடான் (Sedan) வகைக் கார்கள். செடான் என்றால் எஞ்ஜின் இருக்கும் இடம், பயணிகள் அமரும் இடம், உடமைகளை வைக்கும் பகுதி என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கார்கள் செடான் வகையாக இருந்தாலும் வழக்கமான கார்களைப்போல் இல்லை. அதன் தோற்றமே ஆடம்பரமாக இருந்தது. அவை இயங்கும் விதம் இலகுவாக இருந்தது. அந்தக் கார்கள் சிறிது நேரம் மேடையை வட்டமடித்தன. பின் வரிசையாக அதனதன் இடத்திற்குச் சென்று இடைவெளிவிட்டு நின்றன. அங்கு வந்திருந்த டெஸ்லாவின் போட்டியாளர்களே வாய் பிளக்கும் வகையில் அந்தக் காட்சி அமைந்தது. இப்போது ஓர் அரசரின் வருகைக்கான பிரமாண்ட இசை ஒலிக்கப்பட்டது. மேலும் திரைகள் விலகின. எலான் மஸ்க் கம்பீரமாக விரிக்கப்பட்ட கம்பளத்தின் வழியே மேடையின் மீது ஏறி நின்றார்.

அவர் கையில் அந்தக் கார்களுக்கான சாவிக்கொத்துக்கள் இருந்தன. மேடையில் நின்று வந்தவர்களை ஒருமுறை பார்த்த மஸ்க், மைக்கை கையில் எடுத்து உரை ஒன்றை நிகழ்த்தினார்.

‘இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம். இந்த நிகழ்வு எதற்காக என்று உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிகழ்வு டெஸ்லாவின் வரலாற்றில் மிக முக்கியமானது. நாங்கள் அதி அற்புதமான கார் ஒன்றை உருவாக்கி உள்ளோம். அந்தக் காரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிதான் இது. எங்கள் காரின் பெயர் ‘டெஸ்லா மாடல் எஸ்’.

சுருக்கமாகப் பேச்சை முடித்துக்கொண்ட மஸ்க், வாடிக்கையாளர்களை மேடைக்கு அழைத்து கார்களின் சாவியை வழங்கினார். அவர்கள் ஒவ்வொருவரும் காரை எடுத்துக்கொண்டு மேடையில் இருந்து விருந்தினர்களுக்கு அருகே போடப்பட்டிருந்த பாதையின் வழியாக ஓட்டிச் சென்றனர். அந்தக் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்துச் செல்வதைப் பார்த்து அங்குக் கூடியிருந்த அனைவரும் கர கோஷம் எழுப்பினர்.

டெஸ்லா அறிமுகம் செய்த மாடல் எஸ், அந்நிறுவனத்தின் வரலாற்றையே மாற்றி எழுதியது. அமெரிக்க வாகன உற்பத்தித் துறையின் போக்கையே புரட்டிப்போட்டது. முழுதாக மின்சாரத்தில் இயங்கும் அந்த ஆடம்பர செடான் வகைக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால்போதும் 480 கிலோ மீட்டர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். அந்தக் கார் வெறும் 4.2 நொடிகளில் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும். அதில் குழந்தைகள், பெரியவர்கள் என ஏழு பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். வழக்கமாக செடான் கார்களின் பெட்டி, படுக்கைகள் என உடமைகளை வைப்பதற்கு காரின் பின்புறம் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் மாடல் எஸ்ஸில் முன்புறம், பின்புறம் என இரண்டு இடங்கள் வழங்கப்பட்டிருந்தன. முன்புறமும் உடமைகளை வைப்பதற்கு இடம் என்றால் எஞ்ஜின் எங்கே இருக்கும்?

மாடல் எஸ்ஸின் சிறப்பம்சமே அதுதான். அந்தக் காரில் பேட்டரிகள் அனைத்தும் கீழ்த்தளத்தில் சமதளமாக அமைக்கப்பட்டிருந்தன. அதனால் அதற்கு என்று தனி இடம் தேவையில்லை. அதன் தர்பூசணிப் பழத்தின் அளவிலான சிறிய மின்சார மோட்டார், பின்புற டயர்களின் நடுவில் பொருத்தப்பட்டிருந்தது. எஞ்சின்களின் அளவும் இடமும் குறைக்கப்பட்டதால், அந்தக் காரில் இடம் ஏகப்போகத்துக்கு இருந்தது. அதேபோல எஞ்சின்களால் ஏற்படும் தேவையில்லாத இரைச்சலுக்கும் வழியில்லாமல் ஆனது.

மாடல் எஸ் அப்போது இருந்த பல ஆடம்பரச் செடான்களை விடவும் மேம்பட்ட தரத்தில் இருந்தது. அதன் வேகம், மைலேஜ், இயங்கு வசதி, இட வசதி என அனைத்தும் மற்ற கார்களில் நினைத்தே பார்க்க முடியாத வகையில் இருந்தன. மாடல் எஸ் தோற்றத்திலும் புதுமையைக் கொண்டிருந்தது. அந்தக் காரின் கைப்பிடிகள், இருக்கும் சுவடே தெரியாமல் உடல் பாகத்துடன் ஒன்றிப்போய் இருக்கும். ஓட்டுநர் கதவின் அருகில் சென்றால் மட்டுமே கைப்பிடிகள் வெளியே வரும். ஓட்டுநர் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவுடன் மீண்டும் கைப்பிடி அமுங்கிக்கொள்ளும்.

காரை இயக்குவதற்கு என்று தனித்தனியான பட்டன்கள், ஸ்விட்சுகள் எதுவும் கிடையாது. காரின் முன்பக்கம் மற்ற கார்களில் இருப்பதுபோன்ற தேவையில்லாத பாகங்களும் இல்லை. காரின் உரிமையாளர்கள் சாவியைக் கொண்டு காரை இயக்க வேண்டும் என்பதுகூட இல்லை. ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் அமரும்போது அந்த இடையை வைத்தே சென்சாரின் மூலம் கார் தானாகவே இயங்கத் தொடக்கும். டெஸ்லாவின் பாகங்கள் அனைத்தும் மென்பொருள்களின் அடிப்படையில் இயங்குபவை. அதனால் பாடல்கள் கேட்பதற்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை இயக்குவதில் இருந்து, காரின் கூரையைத் திறப்பது வரையிலான நமக்கு வேண்டிய அத்தனை விஷயங்களையும் உள்ளே தரப்பட்டிருக்கும் 17 இன்ச் தொடு-திரையின் உதவியுடன் நாம் மேற்கொள்ளலாம். மாடல் எஸ் எந்நேரமும் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் காருக்கு வேண்டிய சேவைகளைச் செயலிகள் மூலம் நாம் பெற முடியும்.

டெஸ்லா, தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாடல் எஸ்ஸை ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் வகையில் வசதி செய்து கொடுத்திருந்தது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் வழியாக நீங்கள் தூரத்தில் இருந்தே காரை ஆன் செய்ய முடியும். கார் எங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடியும். இதைத்தவிர புதிய அம்சங்கள் வந்தவுடன் உடனுக்குடன் மாடல் எஸ்ஸில் வழங்கப்பட்டன. மலைப் பகுதிகளில் இலகுவாகக் காரை இயக்கும் வசதி, நெடுஞ்சாலைகளில் வேகத்தைக் கூட்டும் வசதி, குரல் மூலம் காரைக் கட்டுப்படுத்தும் வசதி, அதிவேக சார்ஜிங் வசதி என்று தேவைக்கும் அதிகமான அம்சங்களை டெஸ்லா திடீர் திடீரென புதிய அப்டேட்கள் மூலம் வழங்கிக்கொண்டே இருந்தது. ஒரு ஸ்மார்ட்போனை வாங்கியவுடன் புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும் அல்லவா? அதுபோல காரில் வாடிக்கையாளர்கள் நினைத்தே பார்க்காத ஆச்சரியங்கள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட கார் என்பதை விட பெரிய அளவிலான ஸ்மார்ட் எலக்ட்ரானிக் சாதனம் என்றவகையில்தான் மாடல் எஸ்ஸை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நேர்த்தியின் அடையாளமாக மாடல் எஸ் இருந்தது. பாரம்பரியமான எரிபொருள் கார்களிலும், ஹைப்ரிட் வகை கார்களிலும் நூற்றுக்கணக்கான உதிரிப் பாகங்கள் இடம்பெற்றிருக்கும். பிஸ்டன்கள், மாற்றித்தண்டு (Crankshaft), எண்ணெய் வடிகட்டி, ஆல்டெர்நேட்டர்கள், காற்றாடி, வால்வுகள், காயில்கள், சிலிண்டர்கள் என அத்தனை பாகங்களும் இருந்தால்தான் அந்தக் கார் ஒழுங்காக இயங்க முடியும். ஆனால் மாடல் எஸ் இயங்குவதற்குப் பேட்டரிகள், மின்சார மோட்டார் உள்ளிட்ட ஒரு சில பாகங்களே போதுமானதாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் வழக்கமான கார்களில் எஞ்சின் உருவாக்கும் ஆற்றல் கிளட்சுகள், கியர்கள், டிரைவ் ஷாப்டுகள் வழியாகச் சக்கரத்துக்குச் சென்று அவற்றை இயக்கும். பிறகு அவற்றில் இருந்து வெளியாகும் கழிவுகளை எக்ஸாஸ்ட் அமைப்பு கையாளும். அந்தக் கார்களில் எரிபொருளை உந்துசக்தியாக மாற்றும் செயல்திறன் 10-20 சதவிகிதம்தான் இருக்கும். அதிகப்படியான ஆற்றல் வெப்பமாக எஞ்சின்களில் வீணாகும். மிச்சமான ஆற்றலும் பிரேக், காற்றுத் தடுப்பான் உள்ளிட்ட மற்ற இயக்கங்களுக்குச் செலுத்தப்பட்டுக் காணாமல்போகும். ஆனால் மாடல் எஸ்ஸில் வெறும் டஜன் கணக்கான பாகங்களே இருந்ததால் பேட்டரியில் இருந்து மோட்டாருக்குச் செல்லும் ஆற்றலில் 60 சதவிகிதம் காரின் உந்து சக்திக்கே செலவிடப்பட்டது. அதனால் அதன் செயல்வேகம் அட்டகாசமாக இருந்தது. மிச்சமான ஆற்றல்தான் வெப்பமாகத் தொலைந்தது.

காரின் செயல்திறனைத் தாண்டி காரை விற்பனை செய்வதிலும் டெஸ்லா தனித்துவமான நடைமுறைகளைக் கடைப்பிடித்தது. டெஸ்லா கார்களை வாங்குவதற்கு நாம் டீலர்களிடம் செல்ல வேண்டியது இல்லை. அந்நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மூலமாகவும், இணையதளம் மூலமும் நேரடியாகவே கார்களை வாங்க முடியும். டெஸ்லா விற்பனை நிலையங்கள் மால்களிலும், வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளிலும் இருந்தன. குறிப்பாக எங்கெல்லாம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் இருந்ததோ அதன் அருகிலேயே டெஸ்லாவின் விற்பனை நிலையங்களும் இருந்தன. ஆப்பிள் வாடிக்கையாளர்களை மனதில்கொண்டே டெஸ்லா கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

டெஸ்லாவின் விற்பனை நிலையத்துக்கு நீங்கள் சென்றால் அந்தக் கட்டடத்தின் நடுவில் மாடல் எஸ் கார் நிறுத்தப்பட்டிருக்கும். கட்டடத்தின் பின்புறத்தில் காரின் பேட்டரிகளும் மோட்டாரும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். விற்பனை நிலையத்தில் ஆங்காங்கே தொடு திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் மின்சாரக் கார்களுக்கு மாறுவதன் மூலம் எவ்வளவு செலவை மிச்சம் செய்யலாம் எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம். மேலும் உங்களுடைய கார் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அந்த வகையில் மாடல் எஸ்ஸின் தோற்றத்தையும் திரையிலேயே மாற்றி அமைக்கலாம். நீங்கள் மாற்றங்களைச் செய்தவுடன் அங்குள்ள பெரிய திரையில் நீங்கள் விரும்பிய வகையில் மாடல் எஸ் தோன்றும். இந்த அமைப்பு கார் வாங்க வருபவர்களுக்குத் தாங்களே காரை வடிவமைத்த திருப்தியை ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டிருந்தது. மாடல் எஸ்ஸில் நீங்கள் அமர நினைத்தால் உங்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்படும். அதில் நடந்து சென்று நீங்கள் ஏறி அமரும்போது கம்பீரத் தோற்றம் ஏற்படும். உங்கள் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்ததாகத் தோன்றும்.

டெஸ்லா ஊழியர்கள் மற்ற விற்பனையாளர்களைப்போல் உங்களை நச்சரிக்க மாட்டார்கள். அவர்களுக்குக் கார்களை விற்றால்தான் கமிஷன் என்ற நிலை இல்லாததால் உங்களிடம் ஏமாற்றுவதுபோல பேசி காரைத் தள்ளிவிட்டால்போதும் என்ற மனநிலையில் இருக்க மாட்டார்கள். நீங்களும் அவர்களுக்குக் கமிஷன் வழங்க வேண்டியதில்லை. நீங்கள் வீட்டில் இருந்தே காரை வாங்க வேண்டும் என்று நினைத்தால், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், டெஸ்லா ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து காரை இறக்குமதி செய்வார்கள். வீடு மட்டும்தான் என்றில்லை, தியேட்டர்களில், பார்க்குகள், பார்கள், நெடுஞ்சாலைகள் என்று நீங்கள் எங்குக் கேட்டாலும் அந்த இடத்தில் கார் டெலிவரி செய்யப்படும். நீங்கள் டெஸ்லா தொழிற்சாலைக்கே சென்று கார்களைப் பார்த்து வாங்க வேண்டும் என்று விரும்பினால், குடும்பமாகச் சென்று தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்துக் காரை வாங்கும் வசதி செய்து தரப்படும்.

பொதுவாக ஒரு காரை வாங்கியவுடன் அடுத்த சில மாதங்களிலேயே எண்ணெய்யை மாற்றுவது, சர்விஸ் செய்வது போன்ற துணை வேலைகள் நிறைய இருக்கும். ஆனால் மாடல் எஸ்ஸில் அது எதுவும் கிடையாது. இதனால் உங்களுக்கு நேரமும் செலவும் மிச்சம். கார்களில் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்வதிலும் டெஸ்லா மற்ற நிறுவனங்களை விடத் தனித்துவமான முறைகளைக் கையாண்டது. மாடல் எஸ் தயாரிப்பின் தொடக்கக்காலத்தில் நிறையக் கோளாறுகள் இருந்தன. காரின் கைப்பிடிகள் சரியாக வேலை செய்யவில்லை, கண்ணாடி துடைப்பான்கள் ஒழுங்கான வேகத்தில் இயங்கவில்லை என்பதுபோன்ற ஏகப்பட்ட புகார்கள் வரும். இதுபோன்ற பிரச்னைகளைச் சரி செய்ய டெஸ்லா புதுமையான வழியைக் கடைபிடித்தது.

டெஸ்லா கார்களின் மென்பொருள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்ததால், காரில் ஏதாவது பிரச்னை என்றால் வாடிக்கையாளர்கள் நேரில் காரை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. டெஸ்லா ஊழியர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையத்தின் மூலம் பிரச்னைகளைச் சரி செய்தனர். அதுமட்டுமில்லாமல் டெஸ்லா ஊழியர்கள் தாங்கள் விற்பனை செய்த கார்களை இணையம் வழியாக எந்நேரமும் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். அதில் ஏதாவது குறைகள் இருப்பதாகத் தென்பட்டால் புதிய மென்பொருள்களை நிறுவி உடனே பிரச்னையைச் சரி செய்துவிடுவார்கள். உரிமையாளர் காலையில் எழுந்து பார்க்கும்போது பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும். ஏதோ மாயாஜாலம் நிகழ்ந்ததுபோன்ற உணர்வைத் தரும். இந்த வசதியின் மூலம் டெஸ்லா வாடிக்கையாளர்களுக்கு நேரமும் மிச்சமாகியது. தீர்வும் உடனுக்குடன் எட்டப்பட்டது. ஒருவேளை மென்பொருள் சாராத பிரச்னைகள் என்றால் டெஸ்லா உடனுக்குடன் ஆட்களை அனுப்பிக் காரைத் திரும்பப் பெற்றது. பிரச்னை சரியாகும் வரை வாடிக்கையாளர்களுக்கு மாற்றுக் காரையும் வழங்கியது.

இதை எல்லாம் விடச் சிறப்பு என்னவென்றால், மாடல் எஸ்ஸை வாங்கிய பின் நீங்கள் எரிபொருள் செலவுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கவே தேவையில்லை. அந்தக் காரை இயக்குவதற்குத் தேவையான மின்சார வசதியை வழங்குவதற்காக டெஸ்லா நிலையங்கள் அமெரிக்க முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே டெஸ்லா கார்களுக்குக் கட்டணமே இல்லாமல் சார்ஜ் வழங்கப்பட்டது. அதாவது நீங்கள் காரை வாங்கினால் மட்டும்போதும் அமெரிக்கா முழுவதும் ஒரு பைசா செலவில்லாமல் பயணம் செய்யலாம். தினம் தினம் வரிசையில் நின்று எரிபொருள் நிரப்ப வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

மாடல் எஸ் அறிமுகமானவுடன் முதன்முதலில் சிலிகான் பள்ளத்தாக்கில் மென்பொருள் நிறுவனங்களை நடத்தி வந்த பணக்காரர்கள் மட்டுமே வாங்கினர். தொடக்கத்தில் ஓரிரு மாடஸ் எஸ் கார்கள் சான் பிரான்சிஸ்கோ சாலைகளில் தென்பட்டன. அடுத்த சில வாரங்களில் தினமும் 10-15 கார்களைக் காண முடிந்தது. அடுத்த சில மாதங்களில் அந்தப் பகுதிகளில் மாடல் எஸ்ஸே பிரதானமாகக் காணப்பட்டது. லாஸ் ஏஞ்செலிஸில் இருந்து வாஷிங்டன் வரை ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் டெஸ்லாவுக்குக் கிடைத்தனர். மாடல் எஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு வசதியுடன், அந்தஸ்தையும் வழங்கும் காராக பார்க்கப்பட்டது. பாருங்கள் நாங்கள் ஆடம்பரக் காரில் பயணிக்கிறோம். அதேசமயம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துச் சுற்றுச்சூழலையும் காக்கிறோம் என்று பலரும் மார் தட்டிக்கொண்டார்கள்.

மாடல் எஸ்ஸைத் தற்காலிகக் கவர்ச்சி என்றே போட்டிக் கார் நிறுவனங்கள் முதலில் நினைத்தன. அந்தக் காரைச் சிறிது காலம் பயன்படுத்திவிட்டு மக்கள் மறந்துவிடுவார்கள் என்றே கணித்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் விற்பனை அதிகரித்துக்கொண்டே சென்றது. மாடல் எஸ்ஸுடன் போட்டிபோட்ட போர்ஷே, பிஎம்டபிள்யூ, லெக்சஸ், சுபாரு உள்ளிட்ட 11 பிரபல கார்கள் நிறுவனங்கள் விற்பனையில் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மோட்டார் டிரெண்ட் பத்திரிகை 2012இன் மிகச்சிறந்த கார் என்ற பெருமையை மாடல் எஸ்ஸுக்கு வழங்கியது. எரிபொருள் எஞ்சின் இல்லாத கார் ஒன்று அந்த விருதை வென்றது வரலாற்றில் அதுவே முதன்முறை. பந்தயக் காருக்கு நிகரான வசதிகளும், ரோல்ஸ் ராய்ஸ்க்கு நிகரான இயக்கமும், செவி, டொயோட்டா போன்ற கார்களின் நேர்த்தியும் மாடல் எஸ்ஸில் இருப்பதாக மோட்டார் டிரெண்ட் அந்தக் காரைக் கொண்டாடியது. சில மாதங்களுக்குப் பிறகு கன்சியூமர் ரிப்போர்ட்ஸ் என்ற பத்திரிகை மாடல் எஸ்ஸுக்கு 100க்கு 99 மதிப்பெண்கள் கொடுத்து வரலாற்றில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த கார் என்ற அந்தஸ்தை வழங்கியது. எடை குறைவான அலுமினியத்தில் செய்யப்பட்ட அந்தக் கார் அதிகப் பாதுகாப்பான கார் என்ற பெருமையையும் பெற்றது. மஸ்க் ஐபோனுக்கு இணையான ஒரு காரை உருவாக்கி இருந்ததாக ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.

மாடல் எஸ்ஸின் வருகை டெஸ்லாவின் பங்குகளை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் உட்பட முன்னணி கார் நிறுவனங்கள் சிறப்புக் குழுக்களை அமைத்து மாடல் எஸ், டெஸ்லா, எலான் மஸ்க்கின் அணுகுமுறை ஆகியவற்றை ஆராயத் தொடங்கினர். மாடல் எஸ் வெளியான பிறகு டெஸ்லாவின் லாபம் முதல் காலாண்டில் 562 மில்லியன் டாலர்களாக அதிகரித்து இருந்தது. மாடல் எஸ்ஸின் உருவாக்கத்தில் எலான் மஸ்க் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை. அது சிறந்த மின்சார காராக மட்டுமில்லாமல், எல்லா கார்களைவிடவும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றே அவர் எண்ணியிருந்தார். அவ்வாறே அதை உருவாக்கவும் செய்தார்.

அமெரிக்காவுக்கு ஒரு குறை இருந்தது. 1925ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிரைஸ்லருக்குப் பிறகு வெற்றிகரமான கார் நிறுவனம் ஒன்றை அந்த நாடு உருவாக்கவே இல்லை. அதனால் வாகனத் தயாரிப்புச் சந்தையில் அமெரிக்காவை விட ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளே முன்னிலை வகித்தன. அந்த நிலையை மாற்றுவதற்கான தொடக்கத்தை டெஸ்லா மூலம் மஸ்க் ஏற்படுத்தி இருந்தார். அகம்பாவம் பிடித்தவர், ஆர்வக்கோளாறு என்று நினைத்த டெட்ராய்ட் நிறுவனங்கள் உண்மையில் மஸ்க்கைக் கண்டு வாய் பிளந்து நின்றன என்றால் அது மிகையில்லை. ஜெர்மனி, ஜப்பானிய நிறுவனங்களே மஸ்க்கையும், டெஸ்லாவையும் முதன்முதலில் ஒரு பொருட்டாகக் கருதிக் கவனிக்கத் தொடங்கின. இது இருக்கட்டும். 2009ஆம் ஆண்டு அதள பாதாளத்தில் விழுந்து கிடந்த டெஸ்லாவை மஸ்க் எப்படி மீட்டெடுத்தார்? டெஸ்லாவின் வீழ்ச்சிக்கும் மாடல் எஸ்ஸின் எழுச்சிக்கும் நடுவில் நடந்தது என்ன?

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *