Skip to content
Home » எலான் மஸ்க் #45 – வெள்ளை நட்சத்திரம்

எலான் மஸ்க் #45 – வெள்ளை நட்சத்திரம்

எலான் மஸ்க்

‘உங்கள் நிலைமை புரிகிறது. காரின் விலையை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விட காரின் தயாரிப்புச் செலவு அதிகரித்துவிட்டது. என்ன செய்ய முடியும்? நீங்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். எனது கனவை நீங்கள் நிர்மூலமாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்’ ரோட்ஸ்டரை முன்பதிவு செய்துவிட்டுக் காத்திருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மின்னஞ்சல் எழுதிக்கொண்டிருந்தார் மஸ்க்.

ஸ்பேஸ்எக்ஸ்ஸின் பெயரில் கடன் வாங்கி அவற்றைக் கொண்டு திவாலாகும் நிலையில் இருந்த டெஸ்லாவை அவர் காப்பாற்றி இருந்தார். ஆனால் அதற்குப் பின்னும் டெஸ்லா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பவில்லை. அடுத்தடுத்த சறுக்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ரோட்ஸ்டர் கார் அப்போது வரை சில நூறுகளில் மட்டுமே விற்றிருந்தன. 400 வாடிக்கையாளர்கள் அந்தக் காருக்காக முன்பதிவு செய்துவிட்டுக் காத்திருந்தனர். அவர்களுக்குத்தான் மஸ்க் மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்தார்.

முதலில் 92,000 டாலர்களாகச் சொல்லப்பட்ட விலையை இப்போது 1,09,000 டாலர்களாக உயர்த்துகிறோம் என்று அவர் எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்த டெஸ்லா வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஆத்திரமாக வந்தது. ஏற்கெனவே வாகனம் சொன்ன தேதியில் கைக்கு வந்து சேரவில்லை. இதில் எந்தத் தைரியத்தில் அவர் விலை ஏற்றம் செய்திருக்கிறார் என்று எகிறினர். அந்தக் கடிதத்தை மஸ்க் எழுதுவதற்கு முன்பே விளைவுகள் இதுபோலத்தான் இருக்கும் என்று ஸ்ட்ராபெல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் எச்சரித்தும் இருந்தனர். ஆனால் மஸ்க் நம்பிக்கையுடன் இருந்தார். நிச்சயம் நம் வாடிக்கையாளர்கள் நம் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். டெஸ்லாவின் மூத்த நிர்வாகிகள் சொன்னதுபோல சில வாடிக்கையாளர்கள் கோபம் கொள்ளவே செய்தனர். ஆனால் பல வாடிக்கையாளர்கள் மஸ்க் கணித்தபடி ஆச்சரியமூட்டும் வகையில் அவருக்கு ஆதரவாக நின்றனர். அவர் தனது வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தைச் சரியாகத்தான் கணக்கிட்டு இருந்தார்.

‘நீங்கள் விலையைக் கூட்டினாலும் பரவாயில்லை. நாங்கள் பணத்தைத் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால் காரைக் கொஞ்சம் விரைவாகக் கொண்டு வாருங்கள்’ என்று அவர்கள் பதில் கடிதம் எழுதினர். உண்மையில் தயாரிப்புச் செலவைச் சமாளிக்க மட்டும் மஸ்க் ரோட்ஸ்டரின் விலையை உயர்த்தவில்லை. மஸ்க்குக்கு ஏற்கெனவே புதிய கார் குறித்த எண்ணம் ஒன்று மனதில் இருந்தது. அந்தக் காரை உருவாக்கி டெஸ்லாவின் திறமையை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதற்காக அரசாங்கக் கடனுக்கும் விண்ணப்பித்து இருந்தார். கடன் கிடைக்க வேண்டும் என்றால் அந்நிறுவனம் லாபத்தைக் கணக்குக் காட்ட வேண்டும். ரோட்ஸ்டரை விற்பனை செய்து லாபம் காட்ட வேண்டும் என்றால் அதன் விலையை உயர்த்துவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

விலையை உயர்த்தியவுடன் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களின் பிரச்னை தீர்ந்தது. ஆனால் காரை வாங்கிப் பயன்படுத்திக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பிரச்னை வந்தது. ரோட்ஸ்டர், லோடஸ் நிறுவனத்தின் அடிசட்டத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது என ஏற்கெனவே பார்த்தோம் இல்லையா? அந்த அடிசட்டத்தின் தயாரிப்பின்போது சில பிரச்னைகள் இருந்துள்ளது. அதனை லோடஸ் நிறுவனமும் கவனிக்கவில்லை. டெஸ்லாவும் கவனிக்கவில்லை. இப்போது வாடிக்கையாளர்கள் காரை இயக்கும்போது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. அதனைச் சரி செய்து தருவதாகக் கூறி டெஸ்லா அது வரை விற்பனை செய்திருந்த 345 கார்களையும் திரும்பப் பெற்றது. பிறகு அடுத்த ஆண்டிலேயே மற்றொரு பிரச்னை. ரோட்ஸ்டரில் உள்ள பவர் கேபிள்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் மின்கசிவு ஏற்பட்டு, புகை எழும் நிலைமை ஏற்பட்டது. இதனைச் சரி செய்து தருவதாக மீண்டும் 439 கார்களை டெஸ்லா திரும்பப் பெற்றது.

பொதுவாக இதுபோல தொடர் இன்னல்களைச் சந்திக்கும் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்களுக்குக் கோபம்தான் வரும். ஆனால் மஸ்க் தன்னுடைய அணுகுமுறையின் மூலம் தன் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடாமல் தக்க வைத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் ரோட்ஸ்டர்களைத் திரும்பப் பெறும்போதும் மாற்றுக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். சிறிய பிரச்னைகளைக் கூட நாங்கள் கவனத்தில் கொள்வோம், வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாப்பதே எங்களின் பிரதான நோக்கம் என மீண்டும் மீண்டும் பேசி மக்கள் மனதில் அந்நிறுவனம் குறித்த நேர்மறையான பிம்பத்தை உருவாக்கினார்.

ஆனாலும் ஊடகங்கள் மஸ்க்கை விடுவதாக இல்லை. ஊடகங்கள் தொடர் தாக்குதல்களை நடத்தியதில், அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் போனது. மஸ்க் சிலிகான் பள்ளத்தாக்கின் கோமாளி என்ற சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்கின. டிட்ராய்ட் நிறுவனங்கள் மஸ்க்கின் தோல்வியைக் கொண்டாடின. அவரது கார் நிறுவனம் தோல்வியின் அடையாளம் என்றும், டிட்ராய்ட்டைப்போல் கார் தயாரிப்பைச் சிலிகான் பள்ளத்தாக்கினால் சாதித்துக் காட்ட முடியாது என்றும் கூவின. ரோட்ஸ்டர் இன்னும் ஒரு சில மாதங்களில் கல்லறைக்குச் சென்றுவிடும். அடுத்ததாக ஒட்டுமொத்த டெஸ்லாவுக்கும் அதுதான் நிலைமை என்று கொக்கரித்தன.

ஆனால் இத்தனை வசைபாடுகளுக்கு மத்தியிலும் டெஸ்லா தப்பிப் பிழைத்தது. 2008 முதல் 2012 வரை அந்நிறுவனம் 2500 ரோட்ஸ்டர்களை வெற்றிகரமாக விற்பனை செய்திருந்தது. ‘இதுவே போதும்’ என்றார் மஸ்க்.

‘இது நிச்சயம் ஆரோக்கியமான ஒரு தொடக்கம்தான். ரோட்ஸ்டரின் வருகை மின்சாரக் கார்களின் மேல் இருந்த மக்களின் எண்ணத்தை மாற்றி வருகிறது. மக்கள் அதனை விநோதமாகப் பார்க்காமல் பயன்படுத்துவதற்குப் பழகிவிட்டனர். நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திவிட்டோம். அடுத்த முயற்சி சாதனையை நோக்கியதாக இருக்க வேண்டும்!’

ரோட்ஸ்டரின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த காரை டெஸ்லா திட்டமிட்டது. ரோட்ஸ்டரின் அறிமுக விழாவிலேயே அதுகுறித்த அறிவிப்பை மஸ்க் வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அந்தக் காருக்கு ‘வெள்ளை நட்சத்திரம்’ என்று மஸ்க் செல்லமாகப் பெயர் சூட்டி இருந்தார். அந்தக் கார் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைச் சார்ந்து இருக்கக்கூடாது. முழுக்க முழுக்க டெஸ்லாவின் தனித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் ஒரு மின்சாரக் கார் தொழில்நுட்பத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை வாடிக்கையாளர்கள் உணர வேண்டும் என்றார்.

முதலில் ரோட்ஸ்டரை உருவாக்கப் பயன்படுத்திய லோடஸ் எலைஸ் அடிசட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், ஏற்கெனவே நாம் பார்த்த தயாரிப்புப் பிரச்னை. லோடஸ் நிறுவனம் அதன் அடிசட்டத்தைத் தயாரிக்கும்போது கண்டுகொள்ளாமல் விடும் பிரச்னை டெஸ்லாவின் பெயரைக் கெடுப்பதாக இருந்தது. இரண்டாவது, லோடஸின் அடிசட்டத்தைப் பொறுத்தே டெஸ்லா தன் காரை வடிவமைக்க வேண்டியதாக இருந்தது. அதனால் தங்களுக்கு வேண்டிய அம்சங்களை காரில் அமைக்க முடியவில்லை என்று மஸ்க் கருதினார். ரோட்ஸ்டரில்கூட லோடஸின் அடிசட்டத்தின் காரணமாகவே பேட்டரிகள் பின்புறத்தில் பொருத்தப்பட்டன. இதனால் பெரும்பாலான இடம் பேட்டரிக்கு என்றே செலவானது. காரின் எடையையும் கூட்டியது. இது எதுவும் இல்லாமல், டெஸ்லாவின் புதிய கார் முழுக்க முழுக்க நான் விரும்பும் வகையில் அமையும் என்றார்.

முதலில் புதிய காரின் 600 கிலோ பேட்டரி தனியாக ஓர் இடத்தில் பொருத்தப்படாமல், அதன் அடிசட்டத்தின் மேலேயே அமைக்கப்பட வேண்டும் என்று பொறியாளர்கள் முடிவு செய்தனர். இது அந்தக் காருக்கு குறைந்த ஈர்ப்பு மையத்தைக் கொடுக்கும் என எண்ணினார்கள். ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் என்பது, அந்தப் பொருளின் ஒட்டுமொத்த எடையையும் மையம் கொள்ளக்கூடிய பகுதி. கார்களில் அது நடுப்பகுதியில் இருக்கும். கார் எஞ்சின் கனமானது என்பதால் அதை ஈர்ப்பு மையத்துக்கு அருகில் வைக்கும்போது காரின் எடை சமநிலை தவறாமல் இருக்கும். அதனால் அதனை வேகமாகவும் எளிதாகவும் இயக்க முடியும். இதனால்தான் வேகமாக இயங்கும் பந்தயக் கார்களில் எஞ்சின் நடுவில் இருக்கும்.

ஆனால் மக்கள் பயன்படுத்தும் கார்கள் அவ்வாறு இருக்காது. எடை அதிகமான எஞ்சின் முன் பகுதியிலும், பயணிகள் அமர்வதற்கான பகுதி நடுவிலும் இருக்கும். இதனால்தான் மக்கள் பயணிக்கும் கார்கள் பந்தயக் கார்களுக்கு இணையான வேகத்தையும், இயக்கத்தையும் பெறுவதில்லை. இதை மாற்றி வெள்ளை நட்சத்திரத்தின் கனமான பாகங்களை நடுவில் கொண்டு வர வேண்டும் என்று மஸ்க் கூறினார். இதன் மூலம் செயல்திறன், பாதுகாப்பு இரண்டையும் அந்தக் காருக்கு வழங்க முடியும் என்றார்.

காரின் உள்கட்டமைப்பு ஒருபுறம் என்றால் அதன் தோற்றத்திலும் மாற்றம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டது. வெள்ளை நட்சத்திரம் சேடன் வகைக் கார்களாக இருக்க வேண்டும். ஆனால் மற்ற சேடன் வகையறாக்களை விடக் கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். வசதியும் ஆடம்பரமும் ஒருங்கே அதன் தோற்றத்தில் அமைய வேண்டும். இதில் எந்தச் சமரசமும் செய்யக்கூடாது என்று மஸ்க் உறுதியாகக் கூறினார். அப்படி மஸ்க், பார்த்துப் பார்த்து வடிவமைத்த இந்தக் கார்தான் பின்னாளில் டெஸ்லாவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த மாடல் எஸ் என்பதை நீங்கள் இந்நேரம் கணித்திருப்பீர்கள்.

அத்தகைய அழகான, செயல்திறன் கொண்ட காருக்கு உயிர் கொடுக்க ஹென்ரிக் ஃபிஸ்கர் என்ற கார் வடிவமைப்பாளரை மஸ்க் பணியில் அமர்த்தினார். ஃபிஸ்கர், ஆஸ்டன் மார்டின் கார் வடிவமைப்புக்குப் பெயர் போனவர். பிஎம்டபிள்யூ, மெர்செடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் சில சிறப்புமிக்கக் கார்களை வடிவமைத்து இருக்கிறார். அவரால் தான் விரும்பிய கனவுக் காருக்கு உருவம் கொடுக்க முடியும் என்று மஸ்க் நம்பினார். ஆனால் ஃபிஸ்கரோ மஸ்க்கை முதுகில் குத்தப் போகிறார் என்று அப்போது அவருக்குத் தெரியாது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *