2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அம்மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் ஜெர்ரி பிரவுன் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சு, கலிஃபோர்னியாவின் கலாச்சாரம் பற்றியதாக இருந்தது. அந்த மாகாணம் தொழில்நுட்பத்துறையில் எப்படிப் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது என்றும், திறமைசாலிகளின் பிறப்பிடமாக இருக்கிறது என்றும் அவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு அடுத்ததாக அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர் பேசுவதாக இருந்தது. உரையை முடிக்கும் தறுவாயில் சிறப்பு விருந்தினருக்கான அறிமுகத்தையும் ஆளுநரே வழங்கினார்.
‘இன்று நமது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்ற இருப்பவர் பிரபல தொழில்முனைவர், பொறியாளர் என்று பல பெருமைகளைப் பெற்றவர். அமெரிக்காவின் செல்வந்தர்களில் ஒருவர். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர். நீங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த திரு. எலான் மஸ்க்’.
கூட்டம் ஆர்ப்பரித்தது. எலான் மஸ்க் கையசைத்துக்கொண்டே மேடையில் ஏறினார்.
‘நாங்கள் டெஸ்லாவைத் தொடங்கியதன் நோக்கம் வெறும் பணம் ஈட்டுவதற்காக மட்டுமல்ல. உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும்தான். இந்த உலகம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எரிபொருட்களைப் பயன்படுத்துவதில் இருந்து வெளிவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
அதற்கு மாற்றாக நிலையான ஆற்றலில் இயங்கக்கூடிய போக்குவரத்துத் தேவைப்படுகிறது. நீங்கள் இதைச் சொன்னால் மட்டும் போதாது. செய்தும் காட்ட வேண்டும். நீங்கள் அட்டகாசமான காரை உருவாக்கவில்லை என்றால் மக்கள் உங்களை ஏற்க மாட்டார்கள். எரிபொருள் காருக்கு நிகரான, அல்லது அதைவிட சிறப்பான மின்சாரக் கார்கள் சந்தைக்கு வரவில்லை என்றால் மக்கள் பழமையில் இருந்து வெளிவரவே மாட்டார்கள். அவர்களை வெளியேற்றும் பொறுப்பைத்தான் நாங்கள் ஏற்றுள்ளோம்’
திடீரென இசை மழை பொழிய ஆரம்பித்தது. வண்ண விளக்குகள் பிரகாசித்தன. புதிய கார் ஒன்று மக்கள் கூடியிருக்கும் மேடைக்கு அருகே வந்து நின்றது. அதன் கதவுகள் இறக்கைகளைப்போல திறந்தன. அனைவரும் வைத்த கண் வாங்காமல் அந்தக் காரையே பார்த்துக்கொண்டிருந்தனர். மாடல் எஸ் என்ற புதிய காரை டெஸ்லா சிறிது நாட்களில் விற்பனைக்குக் கொண்டு வரப்போவது அனைவருக்கும் தெரியும். இது என்ன புதிய காராக இருக்கிறது? இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையே?
மஸ்க் மீண்டும் உரையைத் தொடர்ந்தார்.
‘ஒரு மினிவேனை விட அதிக வசதியை ஒரு கார் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதன் தோற்றம் எஸ்.யு.வி ரகக் கார்களை விட அட்டகாசமானதாக இருந்தால் எப்படி இருக்கும்? அதன் செயல்திறன் ஒரு பந்தயக் காரை விட அதீதமாக இருந்தால் எப்படி இருக்கும்?’
கூட்டம் ஒரு நிமிடம் அமைதியாக நின்றது.
‘அதுதான் மாடல் எக்ஸ். டெஸ்லாவின் புதிய கார்’ மஸ்க் கத்தினார்.
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் முடிந்தபோது மஸ்க்குடன் உடன் வந்திருந்த டெஸ்லா பொறியாளர் ஒருவர் அவரிடம் கேட்டார். ‘இன்னும் மாடல் எஸ்ஸையே நாம் விநியோகம் செய்யவில்லை. அதற்குள் மாடல் எக்ஸின் மாதிரியை அறிமுகம் செய்துவிட்டீர்கள். இது விற்பனைக்கு வரும் வரை மக்கள் காத்திருப்பார்களா?’
‘அதற்கு அவசரமில்லை. எனது வாடிக்கையாளர்கள் எனது ரசிகர்கள். அவர்கள் ஒவ்வொரு காருக்கும் காத்திருப்பார்கள்.’
மஸ்க் பெருமையாகச் சொன்னது. உண்மையில் வினையாக முடிந்தது. டெஸ்லா வாடிக்கையாளர்களின் பிரச்னையே காருக்காகக் காத்திருப்பவர்கள் என்று ஆகிப்போனது. ஒவ்வொரு முறையும் டெஸ்லா அறிமுகம் செய்வதாகச் சொன்ன காரை, சொன்ன தேதியில் அறிமுகம் செய்ததில்லை. அதுதான் மாடல் எஸ்ஸுக்கும் நடந்தது. 2011ஆம் ஆண்டுடன் ரோட்ஸ்டரின் தயாரிப்பை நிறுத்துவதாக டெஸ்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
இனி முழுதாக மாடல் எஸ்ஸில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறோம் என்றது. ஆனால் மாடல் எஸ்ஸை சொன்னதுபோல மஸ்க்கால் விநியோகம் செய்ய முடியவில்லை. மாடல் எஸ் அறிமுகம் செய்யப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் முன்பதிவுகள் வந்து குவிந்தன. ஆனால் வாரத்தில் பத்துக் கார்களைத் தயாரிப்பதே அந்நிறுவனத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது. டெஸ்லா திணறத் தொடங்கியது.
மாடல் எஸ் வாகனச் சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது எனப் பார்த்தோம். ஆனால் அது பின்னாட்களில்தான். விற்பனைக்கு வந்த புதிதில் அதன் தொடக்கம் சரியாக அமையவில்லை. மாடல் எஸ் விற்பனையில் மூன்று விஷயங்கள் பிரச்னைகளாக இருந்தன.
ஒன்று, உதிரிப் பாகங்கள். டெஸ்லா தொடக்கத்தில் தயாரித்த கார்களின் உதிரிப் பாகங்களில் நிறைய பிரச்னைகள் இருந்தன. காரில் பயன்படுத்தப்பட்ட சில உதிரிப் பாகங்கள் மூன்றாம் தரத்தில் இருந்தன. சூரிய ஒளியைத் தடுக்கப் பயன்படும் வைசர்களை வேறு ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கி டெஸ்லா பயன்படுத்தி இருந்தது.
அந்த வைசர்கள் கையோடு உடைந்துகொண்டு வந்தன. அதேபோல விண்ட்ஷீல்டுகள் தேவையில்லாத நேரங்களில் இயங்கின. சென்சார்களோ வேண்டிய நேரத்தில் இயங்கவில்லை.
இதுபோன்ற சிறுசிறு பிரச்னைகள் பூதாகரமாகி அந்த நிறுவனத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படத் தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் வேண்டுமென்றே சிலர் இந்தக் குறைகளைப் பெரிது படுத்தியதால் அந்தக் கார் குறித்த தொடக்கக் கால விமர்சனங்கள் எதிர்மறையாகவே வந்தன.
அடுத்த பிரச்னை மின்சார டெஸ்லாவின் சந்தை. டெஸ்லா மட்டுமல்ல மின்சாரக் கார்களுக்கு என்று பெரிய சந்தை எதுவும் கிடையாது. அதனால் தாங்கள் தயாரிக்கும் கார்களை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்று டெஸ்லாவுக்குத் தெரியவில்லை. உதாரணமாக, டெஸ்லா மாடல் எஸ்ஸின் விலை கிட்டத்தட்ட 1 லட்சம் டாலர்கள். அத்தனை விலை மதிப்புள்ள ஒரு காரை வாங்குவதற்குத் தவணை வசதிகளை டெஸ்லா அறிமுகம் செய்யவில்லை. இதனால் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் அந்தக் காரை வாங்க வேண்டும் என்ற நிலை மக்களுக்குச் சிரமமாக இருந்தது.
அடுத்ததாகப் பழைய கார்களுக்கான சந்தை. வழக்கமாகப் புதிய கார்களை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள், அதைப் பழையதாக உணரும்போது விற்றுவிடுவர். எரிபொருள் கார்களில் இந்தப் பழைய கார்களை வாங்குவதற்கு என்றே தனிச் சந்தை உண்டு. ஆனால் மின்சாரக் கார்களுக்கு அப்படி ஒரு சந்தை கிடையாததும் டெஸ்லாவுக்குப் பிரச்னையானது. ஒரு லட்சம் டாலர் செலவழித்து ஒரு காரை வாங்கிவிட்டு, அது பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிவது மட்டும்தான் ஒரே வழியா என்ற கேள்வி அவர்களிடம் இருந்தது. அதனால் சாதாரணப் பொம்மைக் கார்களைப்போல் மின்சாரக் கார்களையும் மக்கள் கருதினர். அதனால் இத்தனை செலவு செய்து டெஸ்லாவின் கார்களை எதற்கு வாங்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது.
அந்தச் சமயத்தில் டெஸ்லாவின் சேவை மையங்களும் மோசமாக இருந்தன. அப்போது டெஸ்லாவுக்கு என்று குறைவான சேவை மையங்களே இருந்தன. அவையும் சிறப்பாகச் செயல்படவில்லை. தொடக்கத்தில் காரில் இருந்த சிறிய பிரச்னைகளைச் சரி செய்வதற்கு மக்கள் சேவை மையங்களை நாடிச் சென்றால் அவர்கள் வாடிக்கையாளர்களைத் திருப்பி விடுவதையே முழு நேரப் பணியாகச் செய்து வந்தனர். இதனாலும் டெஸ்லாவின் மீதான நம்பகத்தன்மை குறைந்துகொண்டதே வந்தது.
அடுத்து, சார்ஜிங் நிலையங்கள். மாடல் எஸ்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 485 கிலோ மீட்டருக்குப் பயணம் செய்யலாம். கவலையில்லை. ஆனால் அதற்கு வேண்டிய மின்சாரத்தை நிரப்புவதற்குப் போதுமான நிலையங்கள் வேண்டுமே? அப்போது டெஸ்லா ஒருசில சார்ஜிங் நிலையங்களை மட்டுமே அமைத்திருந்தது. அது மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இதுவும் டெஸ்லாவைப் பாதித்தது.
அடுத்தது கார் விநியோகம். நாம் முன்பே பார்த்ததுபோல மாடல் எஸ்ஸுக்கான முன்பதிவு குவிந்துகொண்டிருந்தது. ஆனால் கார் தயாரிப்போ ஆமை வேகத்தில் நடந்தது. இதனால் காத்திருக்க விருப்பமில்லாமல் பலர் டெஸ்லாவிடம் இருந்து விலகினர்.
கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்கள் 5000 டாலர்கள் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டு மீதித் தொகையைச் செலுத்தாமல் பின் வாங்கிக் கொண்டிருந்தனர். இதனால் மாடல் எஸ் விற்பனையில் டெஸ்லா தடுமாறத் தொடங்கியது. மஸ்க்குக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஏன் இத்தனை அட்டகாசமான காரைக் கொடுத்தும் மக்கள் வாங்கத் தயங்குகிறார்கள் என்று தெரியாமல் குழம்பினார்.
இந்தச் சமயத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல மற்றொரு சம்பவமும் நடந்தது. அப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அதில் ஒபாமாவுக்கு எதிராகக் குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட மிட் ரோம்னி, விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது டெஸ்லாவைவும் மற்ற மின்சாரக் கார் நிறுவனங்களையும் குப்பை என வறுத்தெடுத்தார். டெஸ்லா உள்ளிட்ட மின்சாரக் கார் நிறுவனங்களுக்கு ஒபாமா அரசு கொடுத்திருக்கும் கடன் திரும்பவும் வராது என்றும், அத்தனைப் பெரிய தொகையை அரசு வீணடித்துவிட்டது என்றும் சாடினார்.
இதுவே மஸ்க்குக்குப் பெரும் அவமானமாக இருந்தது. மிட் ரோமினியைச் சாடுவதைப்போன்று அறிக்கை ஒன்றைத் தயார் செய்த மஸ்க், பி.எம்.டபிள்யூவை விட அதிக அளவிலான லாபத்தை டெஸ்லாவின் மூலம் ஈட்டிக் காட்டுவேன் எனச் சபதம் எடுத்தார். உண்மையில் டெஸ்லாவிடம் என்ன பிரச்னை என ஆராயத் தொடங்கி, அவற்றைச் சரி செய்யத் தொடங்கினார்.
முதலில் டெஸ்லாவின் சார்ஜிங் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முடிவு செய்தார். நாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு நிகரான எண்ணிக்கையில் டெஸ்லா சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஏற்பாடு செய்தார்.
‘முதற்கட்டமாகக் கலிஃபோர்னியாவில் 6 சார்ஜிங் நிலையங்களை அமைத்திருக்கிறோம். அடுத்ததாக அமெரிக்கா முழுவதும் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதில் டெஸ்லா வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை நிறுத்தி வேகமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்’ என்றார். ‘இதில் சார்ஜ் ஏற்றுவதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. முற்றிலும் இலவசம். இதன்மூலம் நீங்கள் அமெரிக்கா முழுவதும் ஒரு டாலர் கூடச் செலவழிக்காமல் பயணிக்க முடியும்’ என்றார். டெஸ்லாவின் சார்ஜிங் நிலையங்கள் அமைந்திருக்கும் இடம் காரில் இடம்பெற்றுள்ள திரையில் காட்டப்படும். அலுவலகம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது சார்ஜிங் நிலையத்துக்குச் சென்று அரைமணி நேரம் காரை நிறுத்திவிட்டு ஒரு டீ சாப்பிட்டு வாருங்கள். உங்கள் கார் தயாராகி இருக்கும்’ என்றார்.
இதன்பிறகு பழைய டெஸ்லா கார்களை விற்பதற்கான வசதியையும் ஏற்படுத்தினார். ‘நீங்கள் பயன்படுத்திய டெஸ்லா கார்களைத் தூக்கி எறிய வேண்டும் என்று அவசியமில்லை. டெஸ்லாவிடமே திருப்பிக்கொடுக்கலாம். நாங்களே நல்ல விலைக்கு எடுத்துக்கொள்வோம்’ என்றார். அதேபோல டெஸ்லா சேவை மையங்களின் அணுகுமுறையையும் மாற்றினார். டெஸ்லா கார்களில் ஏற்படும் பிரச்னைகள் பெரும்பாலும் மென்பொருட்கள் சார்ந்தவையாக இருக்கும். அதனால் மக்கள் சேவை மையங்களுக்கு கார்களை எடுத்துச் சென்று காத்திருக்காமல், வீட்டில் இருந்தே இணையம் மூலம் அவர்களது பிரச்னைகளைச் சரி செய்யும் முறையைத் தொடங்கி வைத்தார்.
இத்தனை முயற்சிகளை மேற்கொண்டும் டெஸ்லா மாடல் எஸ்ஸின் விற்பனை குறைவாகவே இருந்தது. இதனால் ஏகப்பட்ட தொகையை அந்நிறுவனம் இழக்கும் நிலை ஏற்பட்டது. டெஸ்லா தடுமாறுவதைக் கவனித்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை வேகமாக விற்றுவந்தனர். இதனால் டெஸ்லா மீண்டும் திவாலாகலாம் என்ற நிலைக்கும் சென்றது. இந்தப் பிரச்னையைச் சரி செய்வதற்கு மஸ்க்குக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது. நிர்வாகத்தில் மாற்றம் செய்வது.
மஸ்க், டெஸ்லாவின் அனைத்து ஊழியர்களையும் கூட்டினார். அதில் பொறியாளர்கள், விற்பனையாளர்கள், கார் வடிவமைப்பாளர்கள் எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.
‘இங்கே பாருங்கள். நான் ஏன் உங்களை இங்குக் கூப்பிட்டு இருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நம்முடைய நிறுவனம் மீண்டும் திவாலாகும் நிலையில் இருக்கிறது. மாடல் எஸ் விற்பனையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. ஆனால் இதற்கான தீர்வு என்னவென்று தெரியும். நாம் கார்களை வேகமாக விற்பனை செய்வது. நம்முடைய முன்பதிவுகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் விற்பனையோ சில நூறுகளைத் தாண்டவில்லை. என்ன செய்யலாம்?
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள், என்ன படித்திருக்கிறீர்கள், உங்கள் அனுபவம் என்ன ஆகிய எதிலும் எனக்கு அக்கறையில்லை. உங்கள் வேலை இதுவரை முன்பதிவு செய்துவிட்டு தாமதிக்கும் வாடிக்கையாளர்களை அழைத்து மாடல் எஸ்ஸை விற்பனை செய்வது. கார்கள் விற்கப்படவில்லை என்றால் கதை கந்தலாகி விடும். நீங்கள் இந்த நிறுவனத்தில் எந்தப் பதவியில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புது வேலை கார்களை விற்பனை செய்வது’ மஸ்க் முடித்தார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை. பல மூத்த டெஸ்லா நிர்வாகிகளைப் பாரபட்சமே பார்க்காமல் பணியில் இருந்து நீக்கினார். அனுபவம் இல்லாவிட்டால்கூட திறமை இருந்தால்போதும் எனப் பல இளம் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கினார். தன்னால் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையையும் செய்துகொண்டிருந்தார். இருந்தாலும் மஸ்க்கின் மனதுக்குள் ஒரு பயம் இருந்தது. ஒருவேளை டெஸ்லாவால் மாடல் எஸ்ஸை விற்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? நாம் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டால், எல்லா முயற்சிகளையும் தாண்டி டெஸ்லா ஒருவேளை வீழ்ந்துவிட்டால்? இறுதியாக மஸ்க் ஒரு முடிவுக்கு வந்தார். அது டெஸ்லாவை விற்பது.
(தொடரும்)