டெஸ்லாவை விற்க வேண்டும் என்கிற முடிவு கவலை அளிக்கக்கூடியதுதான். இருந்தாலும் மஸ்க்குக்கு வேறு வழி தெரியவில்லை. அவராலான அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டுத்தான் அவர் இந்த முடிவுக்கு வந்திருந்தார். சரி, டெஸ்லாவை விற்க முடிவு செய்தாகிவிட்டது. யாரிடம் விற்பது?
ஏதோ மூன்றாம் தர நிறுவனங்களிடம் விற்பதில் மஸ்க்குக்கு விருப்பமில்லை. அவர்கள் நிச்சயம் நமது கார்களை நாசமாக்கி விடுவார்கள். டிட்ராய்ட் நிறுவனங்களிடம் விற்கலாமா? அதுவும் வேலைக்கு ஆகாது. உண்மையில் டிட்ராய்ட் நிறுவனங்களுக்கு டெஸ்லாவை வீழ்த்துவது மட்டும்தான் குறிக்கோளாக இருந்தது. அவர்களுக்கு நான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் நிறுவனத்தை இழுத்து மூடி விடுவார்கள். பிறகு யாரிடம் விற்கலாம்?
அவருக்கு நினைவுக்கு வந்தது தனது நண்பரும் கூகுளின் இணை நிறுவனருமான லேரி பேஜ். கூகுள் அப்போதுதான் ஸ்மார்ட் மின்சாரக் கார்களைத் தயாரிக்கலாமா என யோசித்துக்கொண்டிருந்தது. அந்த ஆலோசனை தொடக்கக் காலத்தில்தான் இருந்தது. அதற்கான உறுதியான திட்டம் எதுவும் கூகுளிடம் இல்லை. ஆனால் இந்த விஷயம் லேரியின் மூலம் எதேச்சையாக மஸ்க்குக்குத் தெரிய வந்தது. இறுதியில் அவரிடமே சென்று கேட்டுவிடலாம் என்று மஸ்க் முடிவு செய்தார்.
2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. எலான் மஸ்க் நம்மூர் அரசியல்வாதிகளைப்போல மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறிக்கொண்டுதான் லேரியைச் சென்று சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த நிலையில், லேசாகத் தனது பேச்சில் டெஸ்லாவின் நிலையைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.
‘லேரி நான் ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொல்லப்போகிறேன். நான் டெஸ்லாவை விற்பதற்கு முடிவு செய்துவிட்டேன்!’
‘என்ன? உண்மையைத்தான் சொல்கிறீர்களா?’ அதிர்ச்சியுடன் கேட்டார் லேரி.
‘இன்னும் ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே டெஸ்லா உயிருடன் இருக்கும் எனத் தோன்றுகிறது. வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் முன்பதிவு செய்துவிட்டு இப்போது காரை வாங்க மறுக்கின்றனர். காரை வாங்குவதற்காக முழுக் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களும் இப்போது பின் வாங்குகின்றனர். நிலைமை மோசமாகிவிட்டது. நாங்கள் ஒரு தொழிற்சாலையையே மூடிவிட்டோம். வெளியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகச் சொல்லி இருக்கிறோம். ஆனால் உண்மையை எத்தனை நாட்கள் மறைக்க முடியும்?
நாம் கடந்த மாதம் பேசிக்கொண்டிருந்தபோது, கூகுள் மின்சார ஸ்மார்ட் கார்களை உருவாக்க விரும்புவதாகக் கூறினாய். நீயே ஏன் டெஸ்லாவை வாங்கிக்கொள்ளக் கூடாது? வெளியில் யாரிடமாவது விற்றால் அவர்கள் டெஸ்லாவின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்து விடுவார்கள். ஆனால் கூகுள் அவ்வாறு செய்யாது என்று நான் நம்புகிறேன். நான் ஒரு விலையை நிர்ணயித்து இருக்கிறேன். உனக்குச் சரி என்றால் சொல். இப்போதே கை குலுக்கி நாம் உடன்படிக்கை செய்துகொள்வோம்’ என்றார்.
லேரிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மஸ்க் இப்படி ஒரு விஷயத்தைப் பேசுவார் என்று அவர் நினைத்திருக்கவே இல்லை. மஸ்க் இத்துடன் வேறு மூன்று நிபந்தனைகளையும் விதித்தார்.
‘முதலாவதாக, கூகுள் டெஸ்லாவை வாங்கினாலும் 8 ஆண்டுகளுக்கு நான்தான் டெஸ்லாவின் தலைமைச் செயலதிகாரியாகத் தொடர வேண்டும். அப்போதுதான் டெஸ்லாவின் அடித்தளத்தையாவது வலுவாகக் கட்டமைக்க முடியும். குறைந்தது டெஸ்லா 3 தலைமுறை கார்களை உருவாக்கும் வரையிலாவது நான் நீடிக்க வேண்டும். இரண்டாவது டெஸ்லாவின் தொழிற்சாலை விரிவாக்கத்துக்காக கூகுள் 500 கோடி டாலர்களை முதலீடு வேண்டும். மூன்றாவது எக்காரணம் கொண்டு டெஸ்லாவை கூகுள் சிதைக்கக்கூடாது. அது எப்போதும் மின்சாரக் கார் நிறுவனமாகவே தொடர வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் சம்மதம் தெரிவித்தால் இப்போதே நான் டெஸ்லாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன்’ என்றார்.
’டெஸ்லாவுக்கு எவ்வளவு தொகை நிர்ணயம் செய்து இருக்கிறீர்கள்?’
‘600 கோடி டாலர்கள். இதில் 500 கோடி டாலர்கள் நான் முன்னமே சொன்னதுபோல தொழிற்சாலை விரிவாக்கத்துக்காக’
கூகுள் நிர்வாகத்துக்குள் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. கூகுளின் வழக்கறிஞர்கள் மஸ்க்கின் நிபந்தனையைக் கேட்டவுடனேயே வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் கூகுளுக்கு என்ன லாபம் இருக்கப்போகிறது? தன் லாபத்துக்காக நஷ்டத்தில் வீழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை மஸ்க் நம்மிடம் தள்ளப் பார்க்கிறார் என்றனர்.
ஆனால் லேரி பேஜ், மஸ்க்குடன் இந்த விஷயம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டுதான் இருந்தார். அப்போதைய டெஸ்லாவின் மதிப்பை ஆராய்ந்து பார்த்துவிட்டு மஸ்க் கேட்ட தொகையைத் தருவதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் கூகுளின் வழக்கறிஞர்கள் இதைவிடக் குறைந்த விலையில் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றிவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் கால தாமதம் செய்துகொண்டிருந்தபோதுதான் அந்த அதிசயம் நடந்தது.
டெஸ்லாவின் ஊழியர்கள் அனைவரையும் கூப்பிட்டு ஒவ்வொருவரும் விற்பனையாளர்களாக மாறி கார்களை விற்க வேண்டும் என்று மஸ்க் கட்டளையிட்டு இருந்தார் இல்லையா? அந்த ஊழியர்களில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் திடீரென்று திறமையாகப் பேசி கார்களை விற்கத் தொடங்கிவிட்டனர். இது யாருமே எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்தது. டெஸ்லாவின் வங்கிக் கணக்கில் அடுத்த சில வாரங்களுக்கு மட்டுமே நிதி இருந்த நிலையில், கார் விற்பனை பிய்த்துக்கொண்டு சென்றது. அந்த நிதியாண்டில் முதல் காலாண்டு முடிவதற்கு முன்னமே போதுமான கார்கள் விற்றுத் தீர்ந்தன. இந்தச் செய்தி மஸ்க்கையே திகைப்படைய செய்தது.
மே 8, 2013 அன்று டெஸ்லா தனது லாபக் கணக்கை வெளியிட்டது. அந்நிறுவனம் முதல் காலாண்டில் மட்டும் 562 மில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டி இருந்தது, இதில் 11 மில்லியன் டாலர்கள் அந்நிறுவனத்துக்குக் கிடைத்த லாபம். அந்தச் சமயத்தில் 4900 மாடல் எஸ் கார்களை டெஸ்லா விற்பனை செய்திருந்தது.
இந்த அறிவிப்பு, வீழ்ந்து கொண்டிருந்த டெஸ்லாவின் பங்குகளை 30 டாலர்களில் இருந்து 130 டாலர்களாக உயர்த்தியது. டெஸ்லாவின் பங்குகள் விலை உயரத் தொடங்கியவுடன் வாடிக்கையாளர்களின் இழந்த நம்பிக்கையும் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. முதல் காலாண்டின் முடிவில் டெஸ்லா, அரசாங்கத்திடம் வாங்கியிருந்த கடனான 465 மில்லியன் டாலர்களை வட்டியுடன் சேர்த்து அடைத்துச் சாதனை படைத்தது. இதில் வேடிக்கையான இன்னொரு விஷயம் என்னவென்றால் டெஸ்லா குறித்து அவதூறு பரப்பிய ரோம்னி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். மீண்டும் ஒபாமாவே வெற்றிபெற்றார்.
மஸ்க் தேசியத் தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி ரோம்னி சொன்னது தவறு என்று நிரூபித்துவிட்டதாகக் கூறினார். அரசாங்கத்தின் முதலீடு வீணாகவில்லை. டெஸ்லா வாங்கிய கடனை வாக்குறுதி கொடுத்ததைவிட 9 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றிவிட்டது என்றார்.
ப்ளூம்பெர்க் தொலைக்காட்சி, டெஸ்லாவுக்குக் கொடுத்த கடனின் மூலமாக 20 மில்லியன் டாலர்களுக்கு மேல் அரசுக்கு லாபம் கிடைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இவ்வாறாகத் தன்னைப் பற்றித் தவறாக எழுப்பப்பட்ட பிம்பங்களை மஸ்க் அடித்து நொறுக்கினார். இப்போது கார் விற்பனையும், டெஸ்லாவின் மதிப்பும் உயரவே கூகுளுடன் போடப்பட இருந்த உடன்படிக்கையையும் மஸ்க் ரத்து செய்தார். இதன்பின் மாடல் எஸ்க்கு கிடைத்த வரவேற்பைத்தான் நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
இன்றும் மாடல் எஸ் டெஸ்லாவின் சிறந்த கார்களில் ஒன்றாக இருக்கிறது. மாடல் எஸ்ஸின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதிலும் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாடல் எஸ் இருக்கிறது. 2012ஆம் ஆண்டு மொத்தமாக 2650 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில் 2013ஆம் ஆண்டு 22,477 கார்கள், 2014ஆம் ஆண்டு 31,655 கார்கள், 2015இல் 50,931 கார்கள், 2016இல் 54,715 கார்கள் என விற்பனையானது. 2019ஆம் ஆண்டு கணக்கின்படி உலகம் முழுவதும் 2.63 லட்சம் மாடல் எஸ்ஸை உலகம் முழுவதும் டெஸ்லா விற்பனை செய்திருந்தது.
(தொடரும்)