Skip to content
Home » எலான் மஸ்க் #52 – முதல் கனவின் துளி

எலான் மஸ்க் #52 – முதல் கனவின் துளி

எலான் மஸ்க்

‘ஆடம்பர கார் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நடுத்தர விலையில் கார்களைத் தயாரிக்க வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தில் எல்லோரும் வாங்கும் விலையிலான காரை உருவாக்க வேண்டும்.’ – எலான் மஸ்க்.

ஸ்பேஸ் எக்ஸில் வழக்கம்போல் ஒரு நிகழ்ச்சி. டெஸ்லா தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி. மக்கள் கூடியிருந்தனர்.

அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் மிகப்பெரிய டிரக் ஒன்று வந்து நின்றது. சாதாரண டிரக் கிடையாது. முழுக்க முழுக்க மின்சாரத்தால் ஓடக்கூடிய டிரக் அது. பெயர் டெஸ்லா செமி. இன்னும் சில நாட்களில் இந்த டிரக்தான் அமெரிக்கச் சாலைகளில் ஓடப்போகிறது என்றார் மஸ்க். பின் உலகம் முழுவதும் சரக்குகளை ஏற்றிச் செல்லும். இந்த வாகனம் பின்னால் இழுத்து வரப்படும் சுமை இல்லாமல் ஐந்து நொடியில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். 37,000 கிலோ எடையையும் சேர்த்தால் 20 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த வேகம் வழக்கமான டிரக்குகளால் ஈடு செய்யவே முடியாது. அமெரிக்க நெடுஞ்சாலைகளில் உள்ள பிரச்னையே இந்த டிரக்குகள்தான். நாம் வேகமாகச் செல்ல முயலும்போதெல்லாம் நமக்கு முன்னே நத்தையின் வேகத்தில் நகர்ந்து சென்று, வழி விடாமல் நமது பயணத்தையும் மட்டுப்படுத்துகின்றன. இனி டெஸ்லாவின் டிரக்குகளால் அந்தக் கவலை இல்லை. ஒருமுறை சார்ஜ் செய்தால்போதும் 805 கிலோ மீட்டர் தூரத்தை அடையலாம்.

மஸ்க் பேசி முடித்தவுடன் அங்குள்ள பெரிய திரைகளில் டெஸ்லாவின் டிரக்குகள் பயணிக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த டிரக்குகளின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள ட்ரெயிலர்களின் கதவுகள் திறந்தன. உள்ளே இருந்து சிவப்பு நிறக் கார் ஒன்று சீறிக்கொண்டு வந்தது.

‘புத்தம் புதிய ரோட்ஸ்டர்’ மஸ்க் கத்தினார். ‘2020ஆம் ஆண்டு நீங்கள் இதில் ஏறிப் பயணிக்கலாம்!’

அங்கே ஒரு சில நிமிடங்கள் அமைதி. அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்த ஊடகங்கள் மஸ்க் சொல்லும் தேதியைக் குறித்துக்கொண்டன. டெஸ்லா அறிமுகம் செய்த டிரக்கும், ரோட்ஸ்டரும் மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகளாக வந்தன. தலைப்புக்குக் கீழ் மற்றொரு கேள்வியும் இருந்தது.

‘டிரக்குகள், ரோட்ஸ்டர்கள் சரி. ஏற்கெனவே சொன்ன மாடல் 3 எப்போது வரும்?’

டெஸ்லாவின் அடிப்படை லட்சியங்களில் ஒன்று சாதாரண வெகுஜன மக்கள் வாங்கும் வகையில் மலிவு விலை காரை உருவாக்குவது. மாடல் எஸ் என்பது விலை அதிகமுள்ள கார். மாடல் எக்ஸ் நடுத்தரம். மாடல் 3 என்ற காரைத்தான் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மஸ்க் விரும்பினார். டெஸ்லாவின் ஒட்டுமொத்த வெற்றியையும், உலகை மாற்றக்கூடிய அதன் லட்சியத்தையும் நிதர்சனமாக்கக்கூடியது மாடல் 3தான் என்று நம்பினார். மாடல் 3 அமெரிக்கக் கார்களின் வரலாற்றில் மிகப்பெரிய அலையாக மாறும் என்று அவர் கணித்தார். கிட்டத்தட்ட ஆடி ஏ4 காரின் விலையில் இந்தக் கார் விற்கப்படும் என்றார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்றார். இந்த மின்சாரக் கார் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் என்றார். நாங்கள் மின்சாரக் கார் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு விட்டோம். எல்லோரும் இனி மின்சாரக் கார்களுக்குப் பின்னால் மக்கள் ஓடப்போகிறார்கள் என்றார். ஆனால் நடந்ததோ முற்றிலும் வேறானது. வழக்கம்போல் உற்பத்தியில் சிக்கல்.

மாடல் 3 குறித்த அறிவிப்பு 2016 இல் வெளியானது. அந்த காரின் விலை 35,000 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. வெறும் 1000 டாலர்களைச் செலுத்தி மாடல் 3ஐ முன்பதிவு செய்துகொள்ளலாம். மஸ்க் அறிவிப்பை வெளியிட்ட ஒரு சில மாதங்களிலேயே 4.55 லட்சம் முன்பதிவுகளை அந்தக் கார் பெற்றது. இப்போது அந்தக் காரின் அறிவிப்பு வந்து ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் டெஸ்லா மாடல் 3இன் உற்பத்தியை அதிகரித்தபாடில்லை. அப்போது வரை சில நூறு கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்தன. மாடல் 3 எங்கே முதலீட்டாளர்கள் கேட்டனர். 1000 டாலர்கள் கட்டி முன்பதிவு செய்திருந்த மக்கள் கேட்டனர்.

மாடல் 3 பிரச்னை செய்யும் குழந்தையாகவே இருந்தது. மஸ்க் அப்போது உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறி இருந்தார். அவருக்கு லாஸ் ஏஞ்சஸில் உள்ள பெல் ஏர் பகுதியில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. ஆனாலும் என்ன செய்வது? அவரால் வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை. எப்போதும் தொழிற்சாலையே கதி எனக் கிடந்தார். அங்கேயே வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே தூங்கினார். விழித்திருக்கும் நேரம் முழுவதும் டெஸ்லாவின் பிரச்னைகளைக் களைவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஏதாவது பிரச்னை என்றால் நடுச்சாமத்தில் கூட என்னை எழுப்புங்கள் என ஊழியர்களுக்குச் சொல்லி வைத்திருந்தார்

ஊடகங்களுக்கோ டெஸ்லாவின் திண்டாட்டம் வழக்கம்போல கொண்டாட்டமாக இருந்தது. அமெரிக்கத் தேசிய ஊடகங்கள் வேறு செய்திகள் எதுவும் இல்லாததைப்போல டெஸ்லாவின் பிரச்னைகளையே முழு நேரமும் விவாதித்துக்கொண்டிருந்தன. மாடல் 3 வருமா வராதா? டெஸ்லா மீண்டும் திவாலாகப்போகிறதா? டெஸ்லாவின் தலைமைச் செயலதிகாரிக்கு மூளை கலங்கிவிட்டதா? மக்களின் பணத்தை வாங்கி மஸ்க் மோசடி செய்யப் பார்க்கிறாரா? பார்க்கும் இடம் எல்லாம் டெஸ்லா, எலான் மஸ்க் என்ற பெயர்களே அடிபட்டன. குறிப்பாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகைகள் மாடல் 3யின் உற்பத்திக் குறைபாட்டை வேண்டும் என்றே பெரிதாக்கி வந்தன.

வாரத்துக்கு 5000 கார்களையாவது தயாரிக்க வேண்டும் என்பது டெஸ்லாவின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்கூட அந்நிறுவனம் தனது லட்சியத்தில் பாதியைக்கூட எட்டியிருக்கவில்லை. உற்பத்தியைத் துரிதப்படுத்துவதற்காக மஸ்க் நிறைய முதலீடுகளைக் கொட்டினார். ஃபிரிமொண்டில் உள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையில் நிறைய ரோபோட்டுகளை வாங்கித் தொகுப்பு வரிசைகளை விரிவுபடுத்தினார். பணி அசுர வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போதுதான் புதிய தலைவலி ஒன்று உருவாகியது.

முதலில் சிறிய பிரச்னை ஒன்று முளைத்தது. மாடல் எஸ் காரில் பவர் ஸ்டீரிங்கில் கோளாறு. அமெரிக்காவில் பனி அதிகம் பொழியும் பகுதிகளில் சாலையில் உள்ள பனிக்கட்டிகளைக் கரைய வைப்பதற்காக உப்புகளைத் தூவுவது வழக்கம். இந்த உப்புக் கற்கள் சக்கரம் வழியாகப் பவர் ஸ்டீரிங்கில் உள்ள மறை ஆணிகளில் புகுந்து சேதம் விளைவித்தன. இதனால் காரைத் திருப்புவதற்குக் கடினமாக இருந்தது. விபத்துக்கள் ஏற்படும் சூழல் நிலவியது. இதனை அறிந்த டெஸ்லா புதிய மறை ஆணிகளை மாற்றித் தருவதாகக் கூறி 1.23 லட்சம் கார்களைத் திரும்ப பெற்றது.

இந்தப் பிரச்னையை சரி செய்த அதே நேரத்தில் அடுத்த பெரிய பிரச்னை ஒன்று வெடித்தது. டெஸ்லா மாடல் எக்ஸ் விபத்து ஒன்றில் சிக்கியது. அதில் அந்தக் காரை ஓட்டிச் சென்றவர் மரணம் அடைந்தார். இந்த மரணத்துக்கு டெஸ்லா அறிமுகம் செய்திருந்த செமி ஆட்டோ பைலட் எனும் அம்சமே காரணம் என்று சொல்லப்பட்டது. செமி ஆட்டோ பைலட் என்பது கேமராக்கள், சென்சார்களின் உதவியுடன் கார் தன்னிச்சையாகவே இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட அம்சம். குறிப்பாக ஓட்டுநர்களுக்குச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அம்சம். அந்த அம்சம் ஒழுங்காக இயங்காததால் ஓர் உயிர் பலியாகிவிட்டதாக இப்போது பேசப்பட்டது. ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பெரிதாகின. பிறகு, தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு இது குறித்து நடத்திய விசாரணையில் விபத்து நடப்பதற்கு 6 விநாடிகளுக்கு முன்பு அவர் காரின் ஸ்டியரிங்கில் இருந்து கையை எடுத்துவிட்டார் என்று தெரிய வந்தது. அதனால் இந்த விபத்துக்கு காரின் ஆட்டோ பைலட் காரணம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் ஊடகங்கள் விடுவதாக இல்லை.

இதேபோல அடுத்த மாதமே மற்றொரு விபத்தும் நடந்தது. 116 மைல் வேகத்தில் மாடல் எஸ்ஸை ஓட்டி வந்த 18 வயது இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார். அதில் ஓட்டுநர் மட்டுமில்லாமல் பயணித்த ஒருவரும் இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். உடனே விசாரணைக் குழு சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தது. இந்த விபத்துக்குக் காரணம் பேட்டரி தீப்பிடித்து எரிந்ததே என்று சொல்லப்பட்டது. இதே நாட்களில் ஆங்காங்கே மாடல் எஸ் பேட்டரிகள் வெவ்வேறு இடங்களில் தீ விபத்தைச் சந்தித்தன. இதையும் ஊடகங்கள் பிடித்துக்கொண்டு மாடல் எஸ்ஸால் உயிருக்கே ஆபத்து என்று பிரசாரம் செய்யத் தொடங்கின.

முதலில் சிறிதாகத் தொடங்கிய பிரச்னை பெரிதாக வெடித்தது. மஸ்க்குக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னடா இது, ஒன்று விட்டால் இன்னொன்று என்று தலையில் அடித்துக்கொண்டார். முதலில் விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்காக அவனது பெற்றோரிடத்தில் மஸ்க் மன்னிப்பு கேட்டார். பின் மாடல் எஸ்ஸை இளைஞர்கள் இயக்கும்போது வேகத்தைக் கவனிக்க மறக்கிறார்கள் என்று அறிந்துகொண்டு, அதைக் கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் அம்சங்களை மென்பொருள் மூலம் எல்லா கார்களிலும் நிறுவினார். ஆனாலும் விமர்சகர்கள் விடவில்லை. எல்லோரும் ஒன்று சேர்ந்து டெஸ்லா மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். டெஸ்லாவின் தவறு உயிர்களைப் பலி கேட்கிறதா? டெஸ்லா வாகனங்கள் ஆபத்தானதா? என பிரசாரங்கள் செய்தன. இந்த நெருக்கடியால் முதலீட்டாளர்களும் மஸ்க்கின் மீது கேள்வி கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

மஸ்க்கோ ஊடகங்கள் முழுக் கோணத்தையும் ஆராயாமல் பாதி உண்மைகளைத் திரித்து வெளியிடுவதாகச் சீறினார். தினமும் ஆயிரக்கணக்கில் கார் விபத்துக்கள் நடைபெறுகின்றன. டெஸ்லா கார் விபத்துக்கு உள்ளானால் மட்டும் அது தேசிய அளவில் முதல் பக்கத்தில் வருகிறது. அதுவே மற்ற கார்கள் விபத்து ஏற்படும்போது அந்தச் செய்தியில் எந்தக் கார் என்ற தகவல்கூட இடம்பெறுவதில்லை. டெஸ்லா மீது மட்டும் ஏன் இந்த வன்மம் என்று கேள்வி எழுப்பினார்.

2018 ஆம் ஆண்டு மற்றொரு விபத்தும் நடந்தது. மாடல் எஸ் கார் நின்றுகொண்டிருந்த டிரக் ஒன்றின் மீது மோதி உருத் தெரியாமல் சிதைந்தது. இதை ஊடகங்கள் பூதாகரமாக்கின. டெஸ்லாவின் ஆட்டோ பைலட் அம்சத்துக்கு மக்கள் கொடுத்திருக்கும் மற்றொரு விலை என்று பேசப்பட்டது. இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்று மஸ்க் முடிவு செய்தார். சம்பவம் நடந்த இடத்துக்குத் தானே சென்று நிகழ்வை ஆராய்ந்தார். அப்போதுதான் தெரிந்தது அந்த ஓட்டுநர் மரணிக்கவில்லை என்று. அவருக்குக் கால் மட்டுமே உடைந்து இருந்தது. ஆனால் ஊடகங்களோ முழு உண்மை தெரியாமல் அவர் இறந்துவிட்டதாகப் பொய்ச் செய்திகளைப் பரப்பின. அதைச் சுட்டிக் காட்டிய மஸ்க், மாடல் எஸ் கார் 60 மைல் வேகத்தில் சென்று டிரக்கில் மோதியுள்ளது. ஆனால் ஓட்டுநருக்குக் கால் மட்டுமே உடைந்துள்ளது. இதுபோன்ற ஒரு வேகம் நிச்சயம் மரணத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். குறைந்தது உயிருக்கு ஆபத்தான நிலையாவது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் விபத்தில் சிக்கிய நபருக்குக் கால் மட்டும் உடைந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் டெஸ்லாவின் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார். தனக்கு எதிராகப் பிரசுரிக்கப்பட்ட செய்தியைத் தனக்குச் சாதகமாகவே மாற்றிக்கொண்டார்.

அடுத்ததாக அதுவரை வெளியாகி இருந்த மாடல் 3 கார்களில் பிரேக் சரியில்லை என்று கன்சியூமர் ரிப்போர்ட் தளம் பதிவு செய்தது. மஸ்க் உடனேயே மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்ததன் மூலம் பிரேக்கின் பிரச்னைகளைச் சரி செய்தார். கன்சியூமர் ரிப்போர்ட்டின் செய்தி மக்களுக்குச் சென்றடையும் முன்னரே பிரச்னை சரியாகியது. இந்த வேகத்தை கன்சியூமர் ரிப்போர்ட்டும் பாராட்டியது. மாடல் 3க்கு அதிக மதிப்பெண்களை வழங்கி, டெஸ்லா இணையத்தின் மூலமாகவே தீர்வை வழங்குகிறது என்று பாராட்டியது. இப்படியாக மாடல் 3 குறித்த வரவேற்புகள் வரத் தொடங்கின.

இருப்பினும் டெஸ்லாவின் உற்பத்தி மட்டும் மந்தமாகவே இருந்தன. வங்கியில் இருந்த பணமும் தீர்ந்துகொண்டே வந்தது. இந்த நிலைமை நீடித்தால் இன்னும் ஒரு மாதத்தில் திவாலாகிவிடும் சூழல். இது அந்நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து மூன்றாவது முறை. இந்தமுறை நிச்சயம் முடிந்துவிட்டது என்றே மஸ்க் நினைத்துவிட்டார். இறுதியாக இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று, அடுத்ததாக டெஸ்லா அறிமுகம் செய்ய இருந்த தானியங்கி ஓட்டுநர் அம்சத்தை முன்னிறுத்தி முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளைச் செய்தார்.

இரண்டாவது அந்நிறுவனம் தேவையில்லாமல் செலவு செய்துகொண்டிருந்த தொகையைக் கட்டுப்படுத்தினார். அந்நிறுவனம் வாரத்துக்கு 400 பேர் என்ற எண்ணிக்கையில் புதிதாக ஆட்களை எடுத்துக்கொண்டிருந்தது. இதனை முதலில் நிறுத்தினார். தேவையில்லாத நபர்களைப் பணி நீக்கம் செய்தார்.

மூன்றாவதாக மாடல் 3 தயாரிப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தொகுப்பு வரிசையிலும் சில மாற்றங்கள் செய்தார். டெஸ்லா நிறுவனத்தின் கார் நிறுத்தும் பகுதிகளிலும் கூடத் தொகுப்பு வரிசைகள் நிறுவப்பட்டன. தொழிற்சாலைகளுக்கு உள்ளே என்று மட்டுமில்லாமல் வெளியேயும் கார்கள் தயாரிக்கப்பட்டன. அதனைப் புகைப்படம் எடுத்து டெஸ்லா ட்விட்டரிலும் பதிவிட்டது. மஸ்க் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்தன. ஓரிரு வாரங்களில் மாடல் 3 தயாரிப்பு வேகமடைந்தது. வாரத்துக்குச் சில நூறு கார்களை டெஸ்லா தயாரிக்க ஆரம்பித்தது. 2018இன் மூன்றாவது காலாண்டில் வாரத்துக்கு 5000 கார்களை டெஸ்லாவால் உருவாக்க முடிந்தது. மாடல் 3 கார்கள் வேகமாக சாலைகளை நிரப்பத் தொடங்கின. மஸ்க், மாடல் 3க்காக முன்பதிவு செய்துவிட்டுப் பின் வாங்காமல் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கும், அதனை துரித வேகத்தில் தயாரித்து வழங்கும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பிரம்மாண்டத் தொழிற்சாலைகள் மட்டுமே தேவையில்லை. மாற்றுச் சிந்தனை, கற்பனைத் திறன் இருந்தால் எந்தக் காரியத்தையும் முடிக்கலாம் என்று பதிவிட்டார்.

இருப்பினும் ஊடகங்கள் அமைதியாக இருக்கவில்லை. டெஸ்லாவின் வெற்றியைக் கேள்வி கேட்கத் தொடங்கின. டெஸ்லாவின் வெற்றி தற்காலிகமானது. டெஸ்லாவால் அடுத்த வாரமோ, அதற்கு அடுத்த வாரமோ இவ்வாறு செய்ய முடியுமா? டெஸ்லாவால் லாபம் காட்ட முடியுமா? அந்நிறுவனம் நிச்சயமாக எதிர்காலத்தில் திவாலாகும் எனக் கொட்டித் தீர்த்தன. ஊடகங்களின் இந்தச் செயல்பாடு டெஸ்லாவின் பங்குதாரர்களிடம் குழப்பங்களை விளைவித்து அதன் வளர்ச்சியைப் பாதிக்குமோ என்ற அளவுக்கு அழுத்தம் கூடியது. மஸ்க் பொறுத்திருந்து பார்த்தார். ஒரு விளையாட்டு விளையாடுவோம் என்று முடிவு செய்தார்.

ஆகஸ்ட் 7, 2018 காலை அவரது கணக்கில் இருந்து ஒரு ட்வீட்டைப் பதிவிட்டார்.

‘நான் டெஸ்லாவை மீண்டும் தனியாராக்க விரும்புகிறேன். டெஸ்லாவின் பங்குதாரர்களின் ஒவ்வொரு பங்குக்கும் 420 டாலர்கள் விலை நிர்ணயித்துள்ளேன்’.

இதுதான் அவர் பதிவிட்ட ட்வீட். இரண்டே வரிகள்தான். ஆனால் ஒட்டுமொத்த நியூயார்க் பங்குச்சந்தையும் ஸ்தம்பித்தது. டெஸ்லாவின் பங்குகளின் விலை ஒரே நாளில் 6 சதவிகிதம் உயர்ந்தது. முதலீட்டாளர்கள் மஸ்க் என்ன செய்கிறார் என்று தெரியாமல் விழித்தனர். இது யாரோ ஒரு மூன்றாம் நபர் பதிவிட்ட ட்வீட் என்றால் பிரச்னை இல்லை. டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி பதிவிட்ட ட்விட். அதுமட்டுமல்லாமல் டெஸ்லாவின் இயக்குநர்கள் குழுவின் தலைவரும் அவர்தான் என்பதால் நிச்சயம் இது உண்மையாகத்தான் இருக்கும் என்று பேச்சு அடிபடத் தொடங்கியது. டெஸ்லா பங்குகளில் தடுமாற்றத்தைக் கண்ட அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இந்த ட்வீட்டை விசாரிக்க முடிவு செய்தது. ஆனால் மஸ்க்கோ அடுத்த சில நாட்களில் மற்றொரு ட்வீட்டின் மூலம் மற்றொரு குண்டைத் தூக்கி எரிந்தார்.

‘என்னிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை. நான் நிறுவனத்தைத் தனியாராக்கும் எண்ணத்தில் இருந்து பின் வாங்கிவிட்டேன்’ என்று பதிவிட்டார்.

இதனால் கடுப்பான பங்குச்சந்தைகள் ஆணையம் மஸ்க் மீது மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் முடிவில் டெஸ்லா 20 மில்லியன் டாலர்களை அபராதமாகக் கட்டியது. மஸ்க்குக்கும் தனியாக 20 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மஸ்க் தலைமைச் செயலதிகாரியாகத் தொடரலாம். ஆனால் இயக்குநர்கள் குழுத் தலைவராக நீடிக்க முடியாது என்று டெஸ்லா முடிவு செய்தது. இறுதியாகப் பிரச்னை முடிவுக்கு வந்தது. அபராதம் செலுத்தியதில் மஸ்க்குக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் அதனை மறக்கச் செய்யும் மகிழ்ச்சிச் செய்தி அவரை விரைவிலேயே வந்தடைந்தது. மாடல் 3இன் பாதுகாப்பு அம்சங்களைப் பரிசோதனை செய்த தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்புக் கழகம் அந்தக் காருக்கு 5 நட்சத்திர மதிப்பெண்களை வழங்கி இருப்பதிலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழையும் வழங்கியது. அதுமட்டுமில்லாமல் இன்னொரு செய்தியும் இந்தக் கொண்டாட்டத்தை அதிகரித்தது. அந்நிறுவனம் அந்த ஆண்டில் 312 மில்லியன் லாபத்தை ஈட்டி இருப்பதாகவும், அந்த லாபம் மேலும் அதிகரிக்கும் என்ற அறிக்கைதான் அது.

மாடல் 3இன் வெற்றிக்குப் பிறகு ஊடகங்கள் வெளியிட்ட தலைப்புகள் என்ன தெரியுமா?

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தலைப்பு: ‘டெஸ்லாவைப்பற்றி எல்லோரும் கூறியது தவறு!’

சி.என்.என்: ‘லாபம் கொழிக்கும் டெஸ்லா உருவாகியது!’

யு.எஸ்.ஏ டுடே: ‘டெஸ்லா கார்களுடன் சேர்ந்து லாபத்தையும் டெலிவரி செய்துள்ளது!’

தன்னைப் பற்றித் தவறான அபிப்ராயங்களை உருவாக்கி வந்த அத்தனைத் தடைகளையும் டெஸ்லா உடைத்து எரிந்தது.

2017ஆம் ஆண்டு வெறும் 1772 மாடல் 3 கார்களை மட்டும் விநியோகம் செய்த டெஸ்லா, அடுத்த ஆண்டு செய்த 1,45,846 கார்களை விற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் மாடல் 3இன் விற்பனை 3,00,807 கார்கள். இதன்மூலம் உலகில் அதிகம் விற்பனையாகும் கார்களில் டெஸ்லா தொடர்ந்து முன்னிலை வகித்தது. 2020 ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று இருந்தபோதுகூட டெஸ்லா மாடல் 3இன் விற்பனை 3.65 லட்சமாக இருந்தது. 2023 ஆண்டு முதல் காலாண்டில் மாடல் ஒய், மாடல் 3இன் மொத்த விற்பனை 4.12 லட்சமாக இருக்கிறது.

டெஸ்லா பல போராட்டங்களுக்கு மத்தியில் இன்று மிகவும் லாபகரமான நிறுவனமாக இருக்கிறது. அந்நிறுவனம் 3 முறை திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளது. ஆனாலும் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கைகளால் மூன்று முறையும் பிரச்னைகளைச் சமாளித்து வெற்றி கண்டுள்ளது. 2017ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மிகவும் மதிப்பு வாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை டெஸ்லா தட்டிச் சென்றது.

டெஸ்லா மாடல் 3 தயாரிப்பு நாட்களில் தடுமாறியபோது எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனர் டிக் குக்கைச் சந்தித்துத் தனது நிறுவனத்தை 10இல் ஒரு பங்கு விலைக்கு விற்க நினைத்ததாகவும் சொல்லப்படுகிறது. பவர் பிளே என்ற புத்தகத்தில் இந்தக் கருத்து இடம்பெற்றுள்ளது. ஆனால் மஸ்க்கும், ஆப்பிளும் இந்தக் கருத்தை மறுத்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மஸ்க், ‘நான் உண்மையில் டெஸ்லாவை விற்க நினைத்தேன். இதுகுறித்துப் பேசுவதற்காகக் குக்கைச் சந்திக்க வேண்டும் என்று என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆனால் அவர் சந்திக்க மறுத்துவிட்டார். அன்றைக்கு டெஸ்லாவின் மதிப்பு இன்றைய மதிப்பில் 6 சதவிகிதம் மட்டுமே இருந்தது’ என்று கூறியுள்ளார்.

மாடல் 3க்குப் பிறகு மாடல் ஒய் என்ற க்ராஸ் ஓவர் காரை டெஸ்லா 2019இல் அறிமுகம் செய்தது. இதற்கான தயாரிப்பு 2020இல் தொடங்கிய நிலையில் அதே ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வந்தது. 2023ஆம் ஆண்டு முதல் காலாண்டில் அந்தக் கார் டொயோட்டா கொரோல்லாவை விட அதிகம் விற்பனையாகி உலகில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன்பின் மஸ்க் ஏற்கெனவே அறிவித்ததுபோல ரோட்ஸ்டர் மீண்டும் புதிய வடிவத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. அதுமட்டுமில்லாமல் டெஸ்லா சைபர் டிரக் என்ற வாகனத்தையும் வெளியிட்டது. அந்த வாகனத்தின் தோற்றம் இணையத்தில் வெளியானபோது சோப்பு டப்பாவைப் போல இருப்பதாகக் கிண்டலுக்கு உள்ளானது. இந்த டிரக்கை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட டெஸ்லா முடிவு செய்துள்ளது. அதேபோல டெஸ்லா அறிமுகம் செய்த செமி டிரக்கும் கடந்த ஆண்டு முதல் விற்பனைக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக பெப்சிகோ நிறுவனத்துக்கு மட்டும் சில டிரக்குகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர வேறு சில வித்தியாசமான முயற்சிகளையும் டெஸ்லா மேற்கொள்ள நினைத்துப் பாதியில் விட்டுள்ளது. உதாரணமாக, நிலத்தில் இருந்து நீருக்குள் பயணிக்கும் நீர்மூழ்கிக் கார் என்ற ஒன்றை உருவாக்கப்போவதாக மஸ்க் அறிவித்தார். ஆனால் அதற்கான சந்தை இல்லை என்று கருதியதால் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.

அதேபோல மாடல் எஸ் கார்கள் வெளியானபோது பேட்டரிகளை மாற்றும் சேவையையும் மஸ்க் அறிமுகம் செய்ய நினைத்தார். அதாவது சார்ஜ் செய்வதற்குப் பதில் டெஸ்லா விற்பனை நிலையங்களுக்கு மாடல் எஸ்ஸை எடுத்துச் சென்றால் வெறும் 90 நொடிகளில் அங்கு இருக்கும் ரோபோட்டுகள் காரைக் கழற்றிப் புதிய பேட்டரிகளை மாற்றிக் கொடுத்துவிடும். இதற்கான விலை ஒருமுறை காருக்கு எரிபொருள் நிரப்பும் செலவை விடக் குறைவு என்றார். அப்போது டெஸ்லா இலவச சார்ஜர்களை வழங்கி வந்ததால், அடுத்தமுறை நீங்கள் சார்ஜ் செய்யும்போது விரைவாக சார்ஜ் செய்ய வேண்டுமா அல்லது இலவசமாக சார்ஜ் செய்ய வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்றார். ஆனால் இந்த பேட்டரி சேவையை டெஸ்லா கொண்டு வரவே இல்லை. இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அறிவிப்புடன் அந்தச் சேவை குறித்த முயற்சியை நிறுத்திக்கொண்டது. அதேபோல டெஸ்லா கார்களுக்கு இலவச சார்ஜ் வழங்கப்பட்டதும் 2017க்குப் பின் நிறுத்தப்பட்டது. இப்போது நீங்கள் புதிய டெஸ்லா கார்களை வாங்கினால் ஆண்டுக்குச் சில ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மட்டும் இலவச சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும் இந்தக் கட்டணம் வழக்கமான பெட்ரோல், டீசல் கட்டணத்தை விடக் குறைவுதான்.

சமீபத்திய முயற்சியாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தானியங்கி முறையில் இயங்கும் கார்களை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்தத் தானியங்கித் தொழில்நுட்பம் மற்ற நிறுவனங்களுடையதுபோலக் கிடையாது. மற்ற நிறுவனங்கள் கேமரா, சாலையின் அளவீடுகள் ஆகியவற்றைக் கொண்டு தானாகக் காரை இயக்கும் வகையில் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. டெஸ்லாவின் கார்களோ ஒருபடி மேலே சென்று ஒட்டுநர் காரை இயக்கும் லாகவத்தைச் சாலையின் கட்டமைப்பு, எதிரே வரும் கார்களின் எண்ணிக்கை, தூரம் ஆகியவற்றுடன் பொருத்திக் கணக்கிடுகிறது. இதனைத் தரவுகளாக எடுத்துக்கொண்டு தானாக இயங்குவதற்குக் கற்றுக்கொள்கிறது. அதாவது நீங்கள் காரை இயக்கும் விதத்தைக் கற்றுக்கொண்டு உங்களைப்போலவே காரை இயக்கப்போகிறது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *