Skip to content
Home » எலான் மஸ்க் #53 – அமெரிக்கக் கனவு

எலான் மஸ்க் #53 – அமெரிக்கக் கனவு

எலான் மஸ்க்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவுக்கான அடித்தளம் 1958ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மெர்க்குரி, ஜெமினி திட்டங்கள் மூலம் மனிதர்களைப் பூமியின் சுற்றுப்பாதையில் பயணம் செய்ய வைக்கவேண்டும் என்பது அந்தத் தேசத்தின் கனவு. இதன்மூலம் விண்வெளியின் முடிவில்லாச் சாத்தியங்களை அறியும் முதல் மனிதன் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்பது அதன் விருப்பமாக இருந்தது.

ஆனால் அமெரிக்காவின் கனவுகளைக் கலைப்பதுதான் சோவியத் யூனியனின் கனவாயிற்றே. அந்தத் தேசம் யூரி கேகரின் என்பவரை 1961ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பி அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றது. கேகரின் சென்றதற்குப் பிறகு ஒரு மாதம் தாமதமாகத்தான் அமெரிக்கா தனது வீரர் ஆலன் ஷெபர்ட் ஜூனியரை விண்வெளிக்கு அனுப்பியது. அதன்பிறகும் விண்வெளிப் போட்டியில் அமெரிக்காவை விட ரஷ்யாவே ஓர் அடி முன்னாலேயே இருந்தது. பனிப்போருக்குப் பிறகும்கூட நிலைமை மாறவில்லை. சோவியத்தின் சிதறலுக்குப் பிறகும்கூட இரு நாடுகளும் இணைந்து வேலை செய்யும் நிலைதான் இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, இரு நாடுகளும் தமது வீரர்களை ஆய்வுக்காக அங்கே அனுப்பி வந்தனர். அந்தப் பயணம் ரஷ்ய விண்கலன்கள் மூலமாகவே சாத்தியப்பட்டது. இதனை அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ரஷ்யாவை எப்படியாவது முந்திச் செல்ல வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானித்தது.

இதன் முயற்சியாக 1981ஆம் ஆண்டு ‘விண்வெளிக் கப்பல் திட்டம்’ என்ற ஒன்றைத் தொடங்கி விண்வெளிக்குச் சரக்குகளையும், மனிதர்களையும் அனுப்பி வந்தது. ஆனால் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் விண்கலன்கள் மீது விமர்சனங்கள் எழத்தொடங்கின. பிறகு, 2003ஆம் ஆண்டு கொலம்பியாவில் இருந்து அனுப்பப்பட்ட விண்கலம் பூமிக்குத் திரும்பியபோது மிகப்பெரிய விபத்தைச் சந்தித்தது. இதிலும் 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதுவும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. இது மட்டுமில்லாமல் விண்கலன்களைத் தயாரித்து அனுப்புவதில் ஏகப்பட்ட நிதி நெருக்கடி வேறு அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. என்ன செய்வதென்று புரியாமல் விழித்த நாசா 2011ஆம் ஆண்டுடன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன்பின் விண்வெளிக்குச் செல்லும் தேவை ஏற்பட்டால் மீண்டும் ரஷ்யாவுடன் இணைந்தே அனைத்துப் பயணங்களையும் மேற்கொள்ளும் சூழல்.

அமெரிக்காவால் தாங்க முடியவில்லை. நம் கனவினை நனவாக்க எதிரியுடன்தான் கைகோர்த்துச் செல்ல வேண்டுமா? வேறு வழி இருக்கிறதா? அமெரிக்கா யோசித்தது.

அந்தக் கட்டத்தில்தான் அமெரிக்காவில் உள்ள தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஏகப்பட்ட முன்னெடுப்புகளை எடுத்து வந்தன. நிறைய முதலீடுகள் செய்து விண்வெளி குறித்த திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. இதனை நாசா கவனித்தது. நாமே முயன்று தோற்பதை விட நம் தேசத்தில் உள்ள தனியாருக்கு அந்தப் பாதையைத் திறந்துவிட்டால் என்ன? அவ்வாறு செய்யும் முயற்சியில்தான் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அதில் ஒரு ஒப்பந்தம்தான் சர்வதேச விமான நிலையத்துக்குச் சரக்குகளை எடுத்துச் செல்வது. இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியதால்தான் ஸ்பேஸ் எக்ஸுக்கு 106 கோடி டாலர்கள் கிடைத்தது.

நாசாவின் ஒப்பந்தம் கிடைப்பதற்கு முன்னமே, இதுபோன்ற ஒரு சூழல் உருவாகலாம் என்று கணித்த மஸ்க், டிராகன் எனும் விண்கலத்தைத் தயாரிக்க அறிவுறுத்தியிருந்தார். இதற்கான முதல் சோதனையை 2010ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கினார். இந்த முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் சொதப்பல் எதுவும் செய்யவில்லை. டிராகனில் சோதனைச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு விண்வெளிக்குப் பறந்த ஃபால்கன் 9 வெற்றிகரமாகத் திரும்பியது. பிறகு 2012ஆம் ஆண்டு உண்மையான சோதனை தொடங்கியது.

மே 22ஆம் தேதி ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஃபால்கன் ராக்கெட் அதிகாலை 3.44க்கு கிளம்பியது. அது சுமந்து சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சுமைகளைக் கொண்டிருந்தது. விண்வெளிக்குச் சென்றதும் ராக்கெட்டில் இருந்து டிராகன் மட்டும் பிரிந்து 3 நாட்களுக்குப் பிறகு விண்வெளி நிலையத்தை அடைய வேண்டும். அதுதான் திட்டம். ஆனால் விண்வெளி நிலையத்துக்கு அருகில் சென்ற நேரத்தில் டிராகனில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த சென்சாரால் விண்வெளி நிலையம் இருக்கும் தூரத்தைக் கணக்கிட முடியவில்லை. தூரத்தை அளப்பதற்குப் பயன்படும் லேசர் தொழில்நுட்பம் ஏதோ தடங்கல் காரணமாகச் சரியாகச் செயல்படவில்லை. இரண்டரை மணி நேரம் ஒரே போராட்டமாக இருந்தது. எப்படியும் இந்த வேலை சொதப்பிவிடும் என்று அங்கிருப்பவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

ஆனால் ஸ்பேஸ் எக்ஸின் பொறியாளர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. பூமியில் இருந்தே இணையத்தின் மூலம் டிராகனின் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்தனர். டிராகன் விண்வெளி நிலையத்தை தாண்டிச் செல்ல இருந்த நேரம், சட்டென்று சென்சார் வேலை செய்யத் தொடங்கியது. சரியாகக் காலை 7 மணிக்கு டிராகன் விண்வெளி நிலையத்தை அடைந்தது. உடனே அங்கிருந்த விண்வெளி வீரர்கள் ரோபோட்களின் உதவியுடன் அதில் இருந்த சாதனங்களை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைக் கண்ட ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடினர். மேலும் ஒரு சாதனை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றிருந்தது. நாசாவின் விஞ்ஞானியாக இருந்த ஸ்டோக்கர், ‘எலான் மஸ்க் விண்வெளித்துறையையே மாற்றிக்கொண்டிருக்கிறார்’ என்றார்.

ஆனால், மஸ்க் அமைதியாக இருந்தார். ‘ஸ்பேஸ் எக்ஸின் லட்சியம் இதுவல்ல. இந்தச் சரக்குச் சமாசாரங்களை எல்லாம் அசாத்தியமாகச் செய்துவிடுவோம் என்று ஏற்கெனவே எனக்குத் தெரியும். நான் நினைத்திருப்பது மனிதர்களை விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் திட்டம். இதுவரை யாரும் செய்திராத திட்டம். நாசாவே பின் வாங்கிய திட்டம். ரஷ்ய நாட்டின் பங்களிப்பால் மட்டுமே இன்று வரை நமக்குச் சாத்தியமாகி வரும் திட்டம். அதனைச் சாத்தியமாகிவிட்டால்போதும். அதனைச் செய்வதுதான் எனது இப்போதைய லட்சியம்’ என உறுதி பூண்டிருந்தார். மஸ்க் இந்தத் திட்டத்தில் மும்முரமாக இருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது.

விண்வெளி நிலையத்துக்குச் சரக்குகளை எடுத்துச் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோதே மனிதர்களை அழைத்துச் செல்லும் ஒப்பந்தமும் ஸ்பேஸ் எக்ஸுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நாசா அந்த விஷயத்தில் ஸ்பேஸ் எக்ஸை மதிக்கவில்லை. ஸ்பேஸ் எக்ஸுடன் பழம் பெருமை வாய்ந்த போயிங் நிறுவனத்தையும் நாசா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்தத் திட்டத்திற்காக விண்கலத்தை உருவாக்குவதற்காக ஸ்பேஸ் எக்ஸுக்கு 2.6 பில்லியன் டாலர்களும், போயிங்குக்கு 4.2 பில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட இரட்டிப்புத் தொகை. ஏன் இந்தப் பாகுபாடு என்று கேட்டபோது, நாசாவின் நிர்வாகிகளில் ஒருவர், ஸ்பேஸ் எக்ஸை விட போயிங்கின் சி.எஸ்.டி 100 விண்கலத்தின் மீதுதான் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதுதான் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்போகிறது என்று பதிலளித்தார்.

மஸ்க்குக்குச் சுருக்கென்று இருந்தது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

‘எங்களை விடப் பின் தங்கிய தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் போயிங்குக்கு இரு மடங்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. பிரச்னை இல்லை. இரு நிறுவனங்கள் மனிதர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்வதற்குப் போட்டியிடுகிறது என்றால் அது முன்னேற்றத்தைத்தான் கொண்டு வரும்’ என்று சொல்லிவிட்டுக் கடந்தார்.

ஆனால் உள்ளுக்குள் நாசா நினைத்ததைத் தவறு என்று நிரூபித்துவிட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார். போயிங்கைவிட ஸ்பேஸ் எக்ஸ் சிறந்தது என்று அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார்.

இந்தச் சமயத்தில்தான் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன், தான் கொண்டு சென்ற சரக்கை விண்வெளி நிலையத்தில் பத்திரமாக இறக்கி நாசாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் மக்கள் பயணிக்கும் டிராகன்களை உருவாக்கச் சொல்லி 440 மில்லியன் டாலர்களை நாசா வழங்கியது. மஸ்க் சொன்னார். ‘இந்த விண்கலம் அல்ல. இதைவிடச் சிறந்த விண்கலன் ஒன்று உருவாகிறது. அதைப் பாருங்கள்’.

2014ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்துக்கு ஊடகங்களை வரவழைத்த மஸ்க், டிராகன் 2ஐ அறிமுகம் செய்தார்.

‘கடந்த கால விண்கலன்கள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. இந்தப் புதிய விண்கலத்தில் 7 பேர் வரைப் பயணிக்கலாம். டெஸ்லா மாடல் எஸ்ஸில் எவ்வளவு சொகுசாகப் பயணிப்பீர்களோ, அதே சொகுசை விண்வெளிப் பயணத்திலும் அனுபவிப்பீர்கள். இதன் பெயர் டிராகன் 2. முழுக்க முழுக்கத் தன்னிச்சையாக இயங்கும் ஒரு விண்கலம். இதில் நீங்கள் மனிதர்களையோ, சரக்குகளையோ எடுத்துச் சென்றால் ரோபோட்டின் துணையில்லாமலேயே விண்வெளி நிலையத்தில் இறங்க முடியும். அதேபோல் திரும்பி வரும்போது கடலில் சென்று குதிக்க வேண்டிய அவசியம் இல்லை. டிராகன் 2வை பூமியில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தரையிறக்கலாம். இது 21ஆம் நூற்றாண்டின் விண்வெளிப் போக்குவரத்துச் சாதனம்.’

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை 2015ஆம் ஆண்டிலேயே ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கியது. ஆனால் பல்வேறு விஷயங்களுக்காகத் தாமதமாகி 2019ஆம் ஆண்டுதான் முதல் சோதனை நடைபெற்றது. சோதனையின் முதல் கட்டமே விபத்தில் முடிந்தது. விண்ணில் கிளம்ப இருந்த டிராகன் விண்கலம் புறப்படும் முன்னமே வெடித்துவிட்டது. ஆனால் என்ன சிக்கல் என்று ஸ்பேஸ் எக்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அடுத்த முறை பிரச்னையைச் சரி செய்தும் விட்டது. அதற்கு அடுத்த சோதனை முயற்சியில் ரிப்ளி என்ற பொம்மை விண்வெளி வீரரை ஏற்றிக்கொண்டு பறந்த டிராகன் 2 வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தில் தரை இறங்கியது.

ஆனாலும் மஸ்க்கால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அமெரிக்காவின் கெளரவம் மஸ்க்கின் கைகளில்தான் இருந்தது. இதற்குக் காரணம் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்து. ரஷ்யாவின் சோயஸ் விண்கலம் அமெரிக்கா, ரஷ்ய விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக் கிளம்ப இருந்தது. அந்த விண்கலம் கஜகஸ்தானில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே ஏதோ பிரச்னை ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. நல்லவேளையாக உள்ளே இருந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் இருவரும் காயம் கூட இல்லாமல் உயிர் தப்பித்தனர். ஆனால் இந்த விபத்து அமெரிக்காவின் விண்வெளி லட்சியங்கள் மீது கேள்விகளை எழுப்பியது. நவீனத் தொழில்நுட்பங்களின் முன்னோடி என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் விண்வெளி விஷயத்தில் ரஷ்யாவையே நம்பி இருக்கும் என விமர்சனங்கள் கிளம்பின. இதுதான் அமெரிக்காவின் கோபத்துக்குக் காரணம். எத்தனை நாட்கள் சோதனை சோதனை என்று நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பீர்கள்? நாங்கள் கொடுத்த நிதி என்ன ஆனது? உடனே விண்கலத்தை உருவாக்குங்கள் என்றது.

மஸ்க் விரைவாக டிராகன் சோதனையை முடிக்கப் பணித்தார். 2020ஆம் ஆண்டு அந்த நாள் வந்தது. மே 30ஆம் தேதி ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. அதில் இருந்த டிராகன் 2 விண்கலத்தில் டாக் ஹார்லி, பாப் பென்ஹன் என்ற இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இருவருக்கும் இது முக்கியமான தருணம். முதலில் 30 நிமிடங்களுக்குக் கட்டுப்பாட்டுச் சோதனை நடைபெற்றது. இதில் பென்ஹன், ஹார்லி இருவரும் கலந்துகொண்டனர். பொதுவாக இந்தச் சோதனைகள் நடத்தப்படாது. ஏனென்றால் டிராகன் விண்கலம் தன்னிச்சையாகவே விண்வெளி நிலையத்தை அடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதனால் அந்த விண்கலத்தை யாரும் இயக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதற்கும் அசம்பாவிதம் எதுவும் நடந்தால் சமாளிப்பதற்காக இந்தச் சோதனை நடப்பட்டது.

டிராகன் 2வின் திட்டம் இதுதான். மே 30ஆம் தேதி புறப்படும் இந்த விண்கலம் 19 மணி நேரம் பயணித்து விண்வெளி நிலையத்தில் தரையிறங்க வேண்டும். அதன்பின் பென்ஹனும் ஹார்லியும் அங்கேயே தங்கி பதினாறு வாரங்கள் ஆய்வில் ஈடுபடுவர். பின் அவர்களை மீண்டும் ஏற்றிக்கொண்டு பூமிக்குத் திரும்ப வேண்டும். சொல்லி அடித்ததுபோல் ஸ்பேஸ் எக்ஸின் திட்டம் மிகத் துல்லியமாக இருந்தது. அவர்கள் நினைத்ததுபோலவே மே 30ஆம் தேதி புறப்பட்ட விண்கலம் சிறு பிசறும் இல்லாமல் 31ஆம் தேதி விண்வெளி நிலையத்தை அடைந்தது.

உள்ளே சென்ற வீரர்கள் ஒருவரை, ஒருவர் கட்டிக்கொண்டு அன்பைப் பரிமாறிக்கொண்டனர். ஆனால் அத்துடன் முடியவில்லை. அவர்கள் சோதனைகளை முடிக்கும் வரை காத்திருந்த டிராகன் 2 ஆகஸ்டு மாதம் இருவரையும் அழைத்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது. டிராகனின் எஞ்சின் வளிமண்டலம் வரை உந்து சக்தியை வழங்க, பின் பாராசூட்டுகள் உதவியுடன் அந்த விண்கலம் அட்லாண்டிக் பெருங்கடலில் தரை இறங்கியது.

இருவரும் படகின் மூலம் கரைக்கு அழைத்து வந்தபோதே ஊடகங்கள் சூழ்ந்துகொண்டன.

‘இதை எப்படி உணர்கிறீர்கள்?’

‘டிராகனின் பயணம் அசாத்தியமாக இருந்தது. ஒரு அமெரிக்கனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு பெருமிதம் கொள்கிறேன்!’

மஸ்க் உள்ளுக்குள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார். ஸ்பேஸ் எக்ஸ் பெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருந்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் சுயேட்சையான விண்வெளிப் பயணம். ரஷ்யாவைச் சாராத பயணம். இதை நிகழ்த்தியது நாசா நம்பிக்கைக் கொண்டிராத ஸ்பேஸ் எக்ஸ். ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. இந்தச் சாதனையைக் கொண்டாடிய நாசா, டிராகனுக்கு அன்றாட மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் நம்பகத்தனமான விண்கலம் என்ற சான்றிதழை வழங்கியது. அமெரிக்காவின் நெடு நாள் கனவை மஸ்க் ஒருவழியாக நிறைவேற்றி இருந்தார்.

சரி, ஸ்பேஸ் எக்ஸுடன் சேர்ந்து நாசாவின் ஒப்பந்ததைக் கைப்பற்றிய போயிங் என்ன செய்தது? அந்நிறுவனத்தால் இந்தக் கட்டுரை வெளியாகும் வரையிலும்கூட தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்ற முடியவில்லை. அதன் சோதனை ஓட்டத்தில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாக நிறைவேறியது. அதன்பின் பல்வேறு பிரச்னைகளால் மனிதர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லும் தகுதி வாய்ந்த விண்கலத்தை அதனால் உருவாக்க முடியவில்லை. ஆனால் ஸ்பேஸ் எக்ஸோ இதுவரை 7 முறை நாசாவுக்காக வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளது. மூன்று முறை நாசா அல்லாத வாடிக்கையாளர்களையும் அழைத்துச் சென்றுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் அன்றாடம் தனது தொழில்நுட்பத்தைப் புதுப்பித்துக்கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *