Skip to content
Home » எலான் மஸ்க் #54 – மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள்

எலான் மஸ்க் #54 – மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள்

ஃபால்கன் 9

டிசம்பர் 22, 2015ஆம் ஆண்டு. ப்ளோரிடா மாகாணம் கேப் கேனவரல் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எல்லாமே திட்டமிட்டபடி சரியாக இருந்தது. திரையில் தலைகீழாக எண்கள் எண்ணப்பட்டன. பத்து, ஒன்பது, எட்டு…

ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை ஒன்றைப் படைப்பதற்கு இன்னும் சில நொடிகளே இருந்தன. அதன் திட்டம் இதுதான். ராக்கெட்டை விண்வெளியில் ஏவி பூமியின் சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின் அதில் எடுத்துச் செல்லப்பட்ட செயற்கைக்கோளை வேண்டிய இடத்தில் நிலை நிறுத்த வேண்டும். இது எளிமையான விஷயம்தான். பல முறை செய்தாயிற்று. அடுத்ததுதான் முக்கியம். ஏவப்பட்ட ராக்கெட்டை மீண்டும் பூமிக்குப் பத்திரமாகக் கொண்டு வந்து தரையிறக்க வேண்டும். அதுதான் இருப்பதிலேயே சிக்கலான விஷயம். இதுவரை யாருமே செய்திராத விஷயம்.

கலிஃபோர்னியா ஹாவ்த்ரோனில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்தில் கூட்டம் கூடி இருந்தது. மஸ்க்கும் அவர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தார். கேப் கேனவரலில் நடைபெறும் விஷயங்கள் திரையில் காட்டப்பட்டன. அனைவரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஃபால்கன் 9 எஞ்சின்கள் சீறின. புகைமூட்டம் எழுந்தது. சில நொடிகளில் இடி முழக்கத்துடன் ராக்கெட் விண்ணில் பறந்தது. மஸ்க்கின் முகத்தில் எந்த ஓர் உணர்வும் இல்லை. இந்தக் காட்சியை ஏற்கெனவே பலமுறை பார்த்தாகிவிட்டது. அதன்பின் என்ன நடக்கும்? அதுதான் விஷயம். பால்கன் 9 விண்ணில் உயர, உயர அதன் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறியதாகி அங்கிருப்பவர்களின் பார்வையில் இருந்து மறைந்தது. இப்போது வானம் முழுவதும் ஒரே கருப்பு நிறம் மட்டுமே. அங்கிருந்த அனைவரும் காத்திருந்தனர். வானுக்குச் சென்ற ராக்கெட்டின் பூஸ்டர் பாகம் மீண்டும் பூமிக்குத் திரும்பி வருமா? ராக்கெட்டின் கட்டுப்பாடுகளை ஆராய்ந்து வந்த குழு ஒலிபெருக்கி மூலம் அத்தனை விஷயங்களையும் உடனுக்குடன் தெரிவித்து வந்தது. மஸ்க் அவர்களிடம் இருந்து அடுத்ததாக என்ன செய்தி வரும் எனக் காத்திருந்தார்.

வானத்தில் ஏதாவது தெரிகிறதா? அவர் மட்டும் பதற்றத்தில் இருக்கவில்லை. அங்குக் கூடியிருந்த அனைவருமே பதற்றத்தில்தான் இருந்தனர். சிலர் வாயை மூடிக்கொண்டு வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது இங்கே?

ஸ்பேஸ் எக்ஸின் பந்தயக் குதிரை என்றால் அது ஃபால்கன் 9 ராக்கெட்தான். 224.4 அடி உயரம், 12 அடி அகலம், 10 லட்சம் பவுண்ட் எடை கொண்ட அந்த ராக்கெட்டின் பிரம்மாண்டம் பார்க்கும் அனைவரையும் ஈர்க்கும். ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் ஒன்பது எஞ்சின்கள். செயற்கைக்கோள்கள், அறிவியல் சாதனங்கள், மனிதர்கள் என நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் இந்த ராக்கெட்டின் மூலம் விண்வெளிக்கு ஏற்றிச் செல்லலாம்.

ஜூன் 4, 2010ஆம் ஆண்டு முதல் ஃபால்கன் 9 வெற்றிகரமாக விண்ணில் பறந்து வருகிறது. மஸ்க் ஒருமுறைகூட அலட்டிக்கொள்ளவில்லை. இப்போது ஸ்பேஸ் எக்ஸ் கத்துக்குட்டி நிறுவனம் அல்ல. சீரான இடைவெளியில் வெற்றிகரமாக ராக்கெட்டுகளை ஏவி வரும் நிறுவனம். தனியார் நிறுவனங்களுக்காகவும், பல சிறிய தேசங்களுக்காகவும் செயற்கைக்கோள்களையும், மற்ற அறிவியல் சாதனங்களையும் பூமியின் தாழ்வட்டப் பாதைக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் மாதம் ஒருமுறை ஏற்றிச் செல்வது அந்நிறுவனத்தின் வாடிக்கையாகி இருந்தது.

ஆரம்பத்தில் ஸ்பேஸ் எக்ஸின் முயற்சிகளைப் பார்த்துக் கிண்டலடித்த போயிங், லாக்ஹீட் மார்டின், ஆர்பிட்டல் சயின்ஸ் ஆகிய நிறுவனங்கள் எல்லாம் இப்போது வாயைக் கட்டிக்கொண்டு மிரட்சியில் இருந்தன. குவாஜ் தீவில் ஃபால்கன் 1 வெடித்தபோது இருந்த ஸ்பேஸ் எக்ஸ் வேறு. இப்போது சீறிப்பாயும் ஃபால்கன் 9 ராக்கெட்டுகளை இயக்கும் ஸ்பேஸ் எக்ஸ் வேறு. இப்போது அந்நிறுவனம் விண்வெளித்துறையின் தவிர்க்க இயலா வல்லாதிக்கச் சக்தி.

நாசாவுக்கு அடுத்தபடியாக ஸ்பேஸ் எக்ஸ் அமெரிக்காவின் அடையாளமாகிப் போயிருந்தது. இதற்குக் காரணம் இரண்டு. ஒன்று குறைந்த விலையில் ராக்கெட் பயணம். இரண்டாவது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ராக்கெட்டுகள். அமெரிக்கா விண்வெளித்துறையில் முன்னேறிய நாடாக இருந்தாலும் நாசா உள்ளிட்ட விண்வெளி நிறுவனங்கள் ராக்கெட்டுகளைத் தயாரிப்பதற்கு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதாக இருந்தது. 2010 காலகட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாகப் பல்வேறு அன்றாடச் சேவைகளுக்குக் கூடச் செயற்கைக்கோள்களை நம்பி இயங்கும் நிலை ஏற்பட்டது.

தொலைக்காட்சி, இணையம், ரேடியோ, வானிலை, திசைகாட்டல் என அனைத்தும் செயற்கைக் கோள்களையே நம்பி இருந்தன. ஒருவர், உலகில் ஏதோ ஒரு மூலையில் விவசாயம் செய்வதற்கு ஏதுவான நிலம் எங்கே இருக்கிறது, அங்குப் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, அதை எப்போது அறுவடை செய்யலாம் ஆகியவற்றைச் செயற்கைக்கோள் துணையுடன் கண்டறியலாம். அமெரிக்காவில் வால்மார்ட் ஷாப்பிங் தளத்திற்கு வரும் கார்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு வணிகத்தை மேம்படுத்தும் திட்டங்கள் கூட செயற்கைக்கோள்களின் துணைகொண்டே வகுக்கப்படுகின்றன. இதனால் தனியார் நிறுவனங்களும், சிறிய நாடுகளும் தங்களுடைய தொலைத்தொடர்பு, உளவு, வணிக நோக்கங்களுக்காகச் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வந்தன. இந்தச் செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்கள் உட்பட ரஷ்யாவையே அண்டி நின்றன. இந்த நிலையைத்தான் ஸ்பேஸ் எக்ஸ் மாற்றிக்காட்டியது. விண்வெளித் துறையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஸ்பேஸ் எக்ஸ் அசைத்துப் பார்த்தது

ராக்கெட்டின் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொரு பாகங்களையும் ஸ்பேஸ் எக்ஸே வடிவமைத்தது. ராக்கெட்டில் இடம்பெறும் ஒரு சிறிய எலக்ட்ரானிக் கருவியைக் கூட வெளியில் இருந்து வாங்கி விடக்கூடாது என்பதில் அந்நிறுவனம் உறுதியாக இருந்தது. முழுக்க முழுக்க அமெரிக்க தொழில்நுட்பத்தால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படும் ராக்கெட். இப்படித்தான் ஸ்பேஸ் எக்ஸை மஸ்க் விளம்பரப்படுத்தினார். இது ஒரு சுதேசி தயாரிப்பு என்று முழக்கமிட்டார்.

அதேபோல ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே ராக்கெட்டுகள் ஏவப்படும் என்ற நிலையையும் ஸ்பேஸ் எக்ஸ் மாற்றியது. உங்களுக்குப் பொருள்களை விண்வெளிக்குக் கொண்டு செல்ல வேண்டுமா? அடுத்த மாதமே கொண்டு செல்லலாம். தேசங்களும், நிறுவனங்களும் ராக்கெட்டை ஏவுவதற்கு ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டாம். இதுதான் ஸ்பேஸ் எக்ஸ் கொண்டு வந்த மாற்றம். அதேபோல ஸ்பேஸின் வருகை அமெரிக்க விண்வெளி நிறுவனங்களுக்கு மத்தியிலும் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. விண்வெளி நிறுவனங்களுக்கு அதுவரை நாசா அளிக்கும் ஒப்பந்தங்களை நம்பியே பிழைத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதையும் ஸ்பேஸ் எக்ஸ் மாற்றியது. தனியார் நிறுவனங்கள், சிறிய தேசங்கள் என யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுடனான வணிகத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக நீடிக்க முடியும் என்று நிரூபித்தது..

அடுத்த மாற்றம்தான் முக்கியமானது. அதுதான் ராக்கெட் பயணத்துக்கான செலவு. அப்போது விண்வெளியில் ராக்கெட்டை ஏவுவதற்கு எக்கச்சக்கமாகச் செலவாகியது. ஒருமுறை ராக்கெட்டைச் செலுத்துவதற்கு பில்லியன் டாலர்களையாவது செலவழிக்க வேண்டும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் வெறும் 60 மில்லியன் டாலர்கள் செலவில் ராக்கெட்டுகளை ஏவியது. மஸ்க்கின் இலக்கு விண்வெளித்துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதும், ராக்கெட் ஏவும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துவதுதான். மக்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்றால் விண்வெளிப் பயணம் எளிதாக வேண்டும். நாம் நினைத்த நேரத்தில் ராக்கெட்டில் பறக்க வேண்டும். இது சாத்தியமாக வேண்டும் என்றால் ராக்கெட் செலவுகள் மேலும் குறைய வேண்டும் என்று அவர் சிந்தித்திருந்தார். இப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிர்ணயித்திருந்த 60 மில்லியன் டாலர்கள் என்பதே அதிக கட்டணம்தான். இதை எப்படிக் குறைப்பது? இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்தார். அதற்கு ஒரு வழியும் இருந்தது. வெளிப்படையான வழி. ஆனால் யாரும் முயற்சித்துப் பார்க்காத வழி. முயற்சிக்க விரும்பாத வழி. அதுதான் ராக்கெட்டுகளை பூமிக்கு வரவழைத்து மீண்டும் பயன்படுத்துவது.

ராக்கெட்டுகளை வடிவமைத்து, தயாரிப்பதற்கு லட்சக்கணக்கான டாலர்கள் செலவாகிறது. இத்தனை செலவு செய்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அதன் வேலையை முடித்த பிறகு என்ன ஆகிறது? வெறும் குப்பையாகத்தான் ஆகிறது. ஒன்று பூமிக்குத் திரும்பி நிலத்திலோ கடலிலோ விழுந்து வீணாகிவிடுகிறது. இல்லை என்றால் விண்வெளியில் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள லட்சக்கணக்கான குப்பைகளில் ஒன்றாகி அச்சுறுத்தும் வகையில் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

இதனை மாற்ற முடியுமா? இத்தனை செலவுகள் செய்து தயாரிக்கப்படும் ராக்கெட்டை யூஸ் அண்ட் த்ரோ தண்ணீர் குப்பிபோல ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா? அனுப்பிய ராக்கெட்டை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து பயன்படுத்தினால் என்ன? மஸ்க் ஆராயத் தொடங்கினார்.

ஒரு சரக்கு விமானத்தை உருவாக்குவதற்கு ஆகும் செலவுதான் ஃபால்கன் 9 ராக்கெட்டை உருவாக்குவதற்கும் ஆகிறது. ஆனால் சரக்கு விமானத்தை நாம் ஒரு நாளைக்குப் பல முறை இயக்குகிறோம். வாழ்நாளுக்கு ஆயிரம் முறையாவது பயன்படுத்துகிறோம். ஆனால் ஃபால்கன் 9 ராக்கெட்டை ஒருமுறைதான் பயன்படுத்துகிறோம். அதையும் அவ்வாறு மறுமுறை பயன்படுத்தினால் எவ்வாறு இருக்கும்?

உண்மையில் மறுபயன்பாடு திட்டம் என்பது புதியது அல்ல. ஏற்கெனவே பல நிறுவனங்களால் முயற்சித்துப் பார்த்துத் தோல்வி அடைந்த திட்டம் அது. இதற்குக் காரணம், பொதுவாக விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டின் பாகம் மீண்டும் பூமியை அடையும்போது அதீதமான அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக அதன் உள்ளே இருக்கும் சாதனங்கள் சேதமடைந்துவிடும். சில நேரங்களில் அதிக வெப்பத்தால் எரிந்துவிடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பிறகு எப்படி அவற்றைப் பயன்படுத்த முடியும்? அப்படியே பாகங்கள் எதுவும் உடையாமல் மீட்கப்பட்டாலும் அவற்றை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பும்போது சேதம் அடைவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதற்குப் புதிய ராக்கெட்டுகளையே தயாரித்துவிட்டுப் போய்விடலாம் இல்லையா? இதனால்தான் மற்ற நாடுகளும், நிறுவனங்களும் அதில் அக்கறைச் செலுத்தாமல் இருந்தன. ஆனால் மஸ்க் விடுவதாக இல்லை. பிரச்னை என்று ஒன்றிருந்தால் நிச்சயம் அதைத் தீர்ப்பதற்கான வழியும் இருக்கும். அதை ஆராயும் வேலையில் இறங்கினார்.

முதன் முறை ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டபோதே இதற்கான முயற்சிகள் தொடங்கின. பாராசூட் மூலம் பூஸ்டர்களைத் தரையிறக்குவது, கடலில் இறக்கி அவற்றைப் பயன்படுத்த முடியுமா என்று சோதிப்பது என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தோல்வி, தோல்வி, தோல்வி என்பதுதான் பதிலாக இருந்தது. மஸ்க் இந்த முயற்சிகளை மேற்கொண்டபோது பலர் இது தேவையில்லாத ஆணி என்றே விமர்சித்தனர். மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் சாத்தியமில்லாதவை என ஏற்கெனவே பலமுறை நிரூபணமாகியும் மஸ்க் நேரத்தை வீணடித்து வருவதாகக் கிண்டலடித்தனர். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் அவர்கள் சொல்வது எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்தது. மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளைக் கொண்டு வருவதன் மூலம் நிறைய சிக்கனம் செய்யலாம். இதன்மூலம் உலக அளவில் பல ராக்கெட் ஒப்பந்தங்களைக் கைப்பற்றலாம் என்பதுதான் அவற்றின் இலக்காக இருந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் பல விதங்களில் யோசித்தது. ராக்கெட் இயக்கத்தின் ஒவ்வொரு சாத்தியத்தையும் ஆராய்ந்தது. புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டது. இதன் காரணமாக அதன் முயற்சிகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பலன் கிடைக்கத் தொடங்கியது. ஸ்பேஸ் எக்ஸின் திட்டம் இதுதான். ராக்கெட் இரண்டு பாகங்களாக இருக்கும். முதல் பகுதி ராக்கெட்டுக்கு உந்து சக்தியை வழங்கும் பூஸ்டர். இரண்டாம் பகுதி சரக்கை ஏற்றிச் செல்லும் விண்கலத்தைக் கொண்டிருக்கும். ராக்கெட் விண்வெளியை அடைந்தவுடன் இரண்டாம் பகுதி பூமியின் சுற்றுப்பாதையை நோக்கிச் சென்றுவிடும். முதல் பகுதி மணிக்கு 4700 கிமீ வேகத்தில் வளிமண்டலத்தில் விழும். இப்போது அதன் உள்ளே இருக்கும் எஞ்சின்களை இயக்குவதன் மூலம் வெளியாகும் உந்துசக்தியை வைத்து அதன் வேகத்தை மணிக்கு 20 கி.மீ ஆகக் குறைத்துவிடலாம். வேகம் குறைந்து இறங்கும் ராக்கெட்டை நிறுத்துவதற்கு கார்பன் ஃபைபரால் ஆன கால்களை உருவாக்க வேண்டும். இவற்றைக் கவனத்துடன் கட்டுப்படுத்தி ராக்கெட்டைத் தரையில் நிறுத்திவிடலாம் என்றது ஸ்பேஸ் எக்ஸ்.

இந்த ராக்கெட்டின் அசைவைக் கட்டுப்படுத்தும் மென்பொருள், ஹார்ட்வேர்களை ஸ்பேஸ் எக்ஸ் தன்னிசையாக இயங்கும் வகையில் உருவாக்கி இருந்தது. மேலும் அதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த தரவுகள் கணினி வழியாகப் பொறியாளர்களுக்குக் கிடைக்கும்படியும், அதை வைத்து உடனுக்குடன் வேண்டிய மாற்றங்களைச் செய்யும்படியும் ஏற்பாடு செய்திருந்தது.

அடுத்ததாக ஸ்பேஸ் எக்ஸ் பாதுகாப்பு, செலவு ஆகிய அம்சங்களை ஆராய்ந்து பார்த்து நிலத்தைக் காட்டிலும் நீரில் தரையிறக்குவதே சரியான தேர்வாக இருக்கும் என்று முடிவு செய்தது. அதனால் பசிபிக், அட்லாண்டிக் ஆகிய பகுதிகளில் ராக்கெட்டைத் தரை இறக்குவதற்கான கப்பல்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் கப்பல்களில் தரையிறங்கும் தளங்கள் அமைக்கப்பட்டன. இப்படியே தோல்வியில் இருந்து கிடைத்த பாடங்கள் மூலம் மறுபயன்பாட்டுத் தொழில்நுட்பத்தை மஸ்க் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தினார்.

இறுதியாக கிடைத்த அனுபவங்களை எல்லாம் வைத்து ஒரு சோதனை முயற்சியைத்தான் அவர் 2015ஆம் ஆண்டு கிறிஸ்துமஸுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு மேற்கொண்டிருந்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்தில் இருந்த அனைவரும் பிரம்மாண்டத் திரையில் ராக்கெட்டின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தனர். அப்போது திடீரென்று விண்ணில் ஓர் ஒளி தோன்றியது. ஆம் ஃபால்கன் 9 ராக்கெட்தான். வான் வெளியைத் தொட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறது. பூமியை நெருங்க, நெருங்க அதன் வெளிச்சம் பெரிதாகிக் கொண்டே வந்தது.

எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. ராக்கெட் நினைத்ததுபோலவே வந்துவிட்டது. ஆனால் பத்திரமாகத் தரையிறங்கிவிடுமா? வேகமாக வந்த ராக்கெட் வளிமண்டலத்தை நெருங்கியவுடன் உராய்வின் காரணமாகச் சுழன்றது. விஞ்ஞானிகள் சட்டென்று கணினிகளில் ஏதேதோ செய்தனர். சட்டென்று பூஸ்டரில் இருந்து நெருப்பு வெளி வந்தது. பூஸ்டர் வெடிக்கப்போகிறதா? இல்லை. உந்து சக்தியைச் செலுத்தி, உராய்வைச் சமன் செய்யும் செயல்பாடு இது. கொஞ்சம் கொஞ்சமாக ராக்கெட்டின் பாகம் திரும்பியது. தரைக்குச் சில கிலோ மீட்டர்கள் அருகில் வந்தபோது ராக்கெட் சமநிலைக்கு வந்தது. அங்கிருந்தவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு. ராக்கெட் கொஞ்சம் கொஞ்சமாகக் கப்பலை நெருங்கியது. ராக்கெட் பாகத்தில் இருந்து கால்கள் விரிந்தன. ராக்கெட் தத்தித் தடுமாறி நிற்கும் குழந்தையைப் போல தரைக்கு அருகே தடுமாறியபடியே நின்றது. இதுதான். இவ்வளவுதான். ஸ்பேஸ் எக்ஸ் அலுவலகத்தில் திடீரென்று கொண்டாட்ட இசை ஒலித்தது. ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கிவிட்டது. அனைவரும் துள்ளிக் குதித்து வெற்றியைக் கொண்டாடினர்.

‘அமெரிக்கா, அமெரிக்கா.. ஸ்பேஸ் எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ்’ ஆர்ப்பாட்டம் செய்தனர். மஸ்க் கண்ணில் ஆனந்தக் கண்ணீருடன் என்ன பேசுவது என்றே தெரியாமல் நின்றார். ஃபால்கன் சாதனை படைத்துவிட்டது. விண்ணில் பாயப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கிவிட்டது. இது ஒரு வரலாற்றுச் சம்பவம். யாரும் செய்திராத சம்பவம். நாம் செய்துவிட்டோம்.

ஃபால்கன் தரையிறங்கிய அந்த நொடி விண்வெளித்துறையின் வரலாறே மாற்றி எழுதப்பட்டிருந்தது. புதிய வரலாறு படைக்கப்பட்டிருந்தது.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி உலக வரலாற்றில் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டை விண்ணில் ஏவி, இந்தமுறை பத்திரமாகக் கப்பலில் தரையிறக்கியது. பிறகு அதே ராக்கெட்டை அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி மீண்டும் விண்ணில் ஏவி சாதனை புரிந்தது. இதன்மூலம் விண்வெளித்துறையே மாறியுள்ளது. ஃபால்கன் 9 ராக்கெட் இதுவரை 240 முறை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதில் 198 முறை வெற்றிகரமாக விண்ணில் இறக்கப்பட்டுள்ளது. இப்படி இறக்கப்பட்ட ராக்கெட்டுகள் மீண்டும் 174 முறை விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

மறுபயன்பாட்டுத் தொழில்நுட்பத்தைச் சாதித்துக் காட்டியதன் மூலம் கிட்டத்தட்ட போட்டியாளர்களை விட 30 சதவிகிதம் கட்டணத்தை ஸ்பேஸ் எக்ஸ் குறைத்தது. யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. இதைச் செய்த நபர் வெறும் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வரலாற்றையே மாற்றி எழுதுவார் என்று. ஆனால் உண்மையில் வரலாறு மாறித்தான் இருந்தது. சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையை மஸ்க் திறந்துவிட்டிருந்தார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *