எலான் மஸ்க் என்றவுடன் உங்களுக்கு ஆயிரம் சாதனைகள் நினைவுக்கு வரலாம். ஆனால் அவர் அவரையே சாதனையாளனாக உணர்வதற்கு நிகழ்த்த விரும்பும் ஒரே சாதனை மனிதர்களைச் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்வது. உண்மையில் அது சாதனை என்கிற பெருமிதத்துக்காகச் செய்யக்கூடிய விஷயம் அல்ல. அவர் குழந்தையாக இருக்கும்போது உருக்கொண்ட கனவு அது. தான் பிறந்ததற்கான அர்த்தமே அதுதான் என அவர் நினைக்கும் அளவுக்கான கனவு. எலான் மஸ்க்கின் ஒவ்வொரு நிறுவனங்களும் அதை நோக்கிய நகர்வையே முன்னெடுத்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் செல்லும் பாதை வேறு வேறாக இருக்கலாம். ஆனால் சென்று சேரும் இடம். செவ்வாய் கிரகம்.
சரி, செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது முதலில் சாத்தியமா? அதற்கு எப்படிப் பயணம் செய்வது? அதற்காக ஸ்பேஸ் எக்ஸ் என்ன திட்டம் வைத்திருக்கிறது? முதலில் ஏன் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். இதற்கான விடையாக மஸ்க்கின் மனதில் ஒரு மாபெரும் திட்டத்துக்கான வரைபடமே இருக்கிறது.
முதலில் ஏன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டும்?
பூமி இன்னும் சில நூற்றாண்டுகளில் மிக மோசமான நிலையை அடைந்துவிடும். சுற்றுச்சூழல் பேரழிவுகளின் காரணமாக வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவிடும். அப்படி மாறினால் இங்குள்ள ஒவ்வொரு உயிரினமும் அழிவைச் சந்திக்க வேண்டியதுதான். ஆனால் மனிதர்களாகிய நாம் அதற்கு அஞ்ச வேண்டியதில்லை. மனித மூளையின் ஆற்றல் இந்தப் பிரபஞ்ச எல்லைகள் வரை செல்லக்கூடியது. நமக்குப் பக்கத்திலேயே செவ்வாய் இருக்கிறது. பூமி அழிவதற்கு முன்பே மக்களை அங்குக் குடியேற்றிவிட்டால் மனித இனம் பிழைத்துக் கொண்டு விடும் என்கிறார் மஸ்க்.
ஆனால், பெட்டிப்படுக்கையை எடுத்துக்கொண்டு உடனே நம்மால் செவ்வாயில் குடியேறிவிட முடியாது. பூமிக்கு மிக அருகில் இருந்தாலும் அங்கே செல்வதற்கான தூரம் 332.24 மில்லியன் கிலோ மீட்டர்கள். அதுமட்டுமல்லாமல் மிகவும் குளிர்ந்த கிரகம் வேறு. அது பிரச்னை இல்லை, நாம் தேவையான வெப்பத்தை உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் செவ்வாயில் நாம் எதிர்பார்க்கும் வளிமண்டலம் கிடையாது. அங்கு அதிகமாக இருக்கக்கூடியது கார்பன் டை ஆக்சைடும் நைட்ரஜனும் ஆர்கானும் வேறு சில வாயுக்களும்தான். அத்தகைய சூழல் மனிதர்கள் வாழத் தகுதியான இடம் கிடையாது. பிறகு என்ன செய்வது?
அதற்காக நம்மால் அங்கு வாழவே முடியாது என்பதில்லை. நாம் அங்கு மரங்களை வளர்த்தும், பூமியில் முன்பு நடந்ததுபோல நுண்ணுயிர்களை வாழ வைத்தும் ஆக்சிஜனை உருவாக்கி விடலாம். சூரியனில் இருந்து வெகுதூரமாக இருந்தாலும் போதுமான சூரிய ஒளி இருக்கிறது. பிரச்னை இல்லை. பூமியுடன் ஒப்பிடும்போது அதன் புவி ஈர்ப்புச் சக்தி வெறும் 38% மட்டுமே. இதனால் செவ்வாயில் நம்மால் அதிக எடையுள்ள பொருள்களைக்கூட அசால்டாகத் தூக்கிவிட முடியும். நாள் கணக்கைப் பார்த்தால் பூமிக்கும், செவ்வாய்க்கும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கைதான். செவ்வாயில் ஒரு நாளின் அளவு 24 மணி நேரம் 37 நிமிடங்கள். அதனால் உங்களுக்குப் பூமியை விடக் கூடுதலாக 37 நிமிடங்கள் கிடைக்கும். அதை நீங்கள் இஷ்டம்போல செலவிடலாம்.
சரி, வாழ்வதற்காக நாம் தகுதியான கிரகம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. அங்குச் செல்வது எப்படி? பூமியில் இருந்து செவ்வாய்க்குச் செல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. நீங்கள் பூமியில் இருந்து செவ்வாய்க்குச் செல்ல வேண்டும் என்றால் 6 மாதங்கள் பயணிக்க வேண்டும். 2 நிலவுகளைக் கடக்க வேண்டும். 14 செயற்கைக்கோள்களைத் தாண்ட வேண்டும். கிட்டத்தட்ட தன் காதலியைக் கவர்வதற்காக இதிகாச நாயகர்கள் செய்யும் செயலை எல்லாம் நீங்கள் செய்தாக வேண்டும். ஆனால் கவலையில்லை. இந்தப் பயணத்தைச் சாத்தியமாக்குவதற்குத்தான் உங்களுக்காக ஸ்டார்ஷிப் தயாராக இருக்கிறது.
மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்வதற்கு என்றே ஸ்பேஸ் எக்ஸ் பிரத்தியேகமாக உருவாக்கி இருக்கும் வாகனம்தான் ஸ்டார்ஷிப். இது இரு பகுதிகளைக் கொண்டது. சூப்பர் ஹெவி என்பது ஸ்டார்ஷிப்பின் முதல் பகுதி. இது எரிபொருளைச் சுமந்திருக்கும் ராக்கெட் பகுதி. 33 ரேப்டர் எஞ்சின்கள், குளிரூட்டப்பட்ட மீத்தேன், திரவ ஆக்சிஜனைக் கொண்டிருக்கும். இரண்டாம் பகுதி அதில் இருக்கும் விண்கலம். இதில் ஏறி நீங்கள் பூமியின் சுற்றுப்பாதைக்கும், நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும், ஏன் அதைத் தாண்டியும்கூட பயணிக்கலாம். இந்த ராக்கெட்டில் 150 மெட்ரிக் டன் எடை வரையிலான சரக்கை எடுத்துச் செல்ல முடியும். பயணம் முடிந்தவுடன் இந்த விண்கலத்தைத் தூக்கி எறியத் தேவையில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை இந்த ஸ்டார்ஷிப்பை நீங்கள் பூமியில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு உள்ளாகவே நீங்கள் பூமியின் எந்த மூலைக்கும் சென்றுவிட முடியும். ஆனால் இப்போதைக்கு நீங்கள் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று உங்கள் உறவினர் வீட்டில் ஒரு தேநீர் குடித்துவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்காகத்தான் இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
சரி, இதில் எப்படிப் பயணிப்பது?
செவ்வாய் கிரகத்துக்குப் பயணிப்பதற்கான தெளிவான திட்டத்தை மஸ்க் உருவாக்கி வைத்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸின் திட்டம் இரண்டு ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு அனுப்புவது. முதல் ராக்கெட் உங்களையும், உங்களுடைய பெட்டிப் படுக்கைகளையும் சுமந்து செல்லும். இரண்டாவது ராக்கெட் செவ்வாய்க்கு பயணிக்கும் அளவுக்கு வேண்டிய எரிபொருளைக் கொண்டிருக்கும்.
முதல் ராக்கெட் பூமியில் இருந்து கிளம்பியவுடன், அதன் முதற்பகுதி (எரிபொருள் நிரப்பப்பட்ட அடிப்பகுதி) சிறிது நேரத்தில் உங்களுக்கு டாட்டா சொல்லிவிட்டு பூமிக்கு வந்துவிடும். நீங்கள் அமர்ந்திருக்கும் இரண்டாம் பகுதி நேராக விண்வெளிக்குச் சென்று பூமியின் சுற்றுவட்டப் பாதையை அடையும். இப்போது பூமியில் இருந்து கிளம்பும் இரண்டாவது ராக்கெட் எரிபொருளைக் கொண்டு வந்து நீங்கள் செவ்வாய் கிரகம் வரை பயணிப்பதற்குத் தேவையான எரிபொருளை தானாக நிரப்பிவிட்டுப் பூமிக்குத் திரும்பிவிடும். இப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் விண்கலம் சூரியனை ஒரு சுற்றுச்சுற்றிவிட்டு நேராகச் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று இறங்கிவிடும். இடையில் எங்கும் நிறுத்தங்கள் கிடையாது.
செவ்வாய் கிரகத்துக்குச் சென்றுவிட்டோம். தேநீர் அருந்திவிட்டோம். அங்கிருந்து பூமிக்குத் திரும்புவதற்கு என்ன செய்வது? அதற்கும் நமக்கு எரிபொருள் வேண்டுமல்லவா? இதற்கும் மஸ்க் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.
செவ்வாயில் குடியேறுவது சுலபமான காரியம் இல்லை என்பதால் உங்களுக்கு முன்னமே வேண்டிய பொறியாளர்கள், மருத்துவக் குழு, தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் போன்றோர்களை ஸ்பேஸ் எக்ஸ் அங்கே அழைத்துச் சென்றுவிடும். அங்கு நாம் உயிர் வாழ்வதற்கு ஏதுவான சூழல், தேவையான ஆற்றல் ஆகியவற்றை உருவாக்குவதற்குத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலை தொடங்கப்படும். கிட்டத்தட்ட ஒரு நகரத்தையே இதற்காக உருவாக்கிவிட முடியும் என்கிறார் மஸ்க். அதனால் நீங்கள் அங்கிருந்து கிளம்பும்போது தேவைப்படும் எரிபொருளைச் செவ்வாயில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் தொழிற்சாலையில் இருந்தே நிரப்பிக்கொண்டு பூமிக்கு வந்துவிடலாம்.
சரி செவ்வாய் கிரகத்தில் நமது பூமியில் கிடைப்பதுபோல் எரிபொருள் கிடைக்குமா என்ன? கவலையே இல்லை என்கிறார் மஸ்க். செவ்வாயில்தான் போதிய அளவு நீரும், கார்பன் டை ஆக்சைடும் இருக்கிறதே? அதை வைத்து மீத்தேனையும், திரவ ஆக்சிஜனையும் உருவாக்கிவிடலாம் என்கிறார். இந்த எரிபொருளை உருவாக்குவதற்கு ஆகும் செலவும் மிக மிகக் குறைவு என்கிறார். இதனால் சொகுசான பயணத்தை நீங்கள் செவ்வாய்க்கு மேற்கொள்ளலாம்.
ஸ்டார்ஷிப்பில் போதுமான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருப்பதாக மஸ்க் கூறுகிறார். பூமியில் இருந்து கிளம்பும் ஸ்டார்ஷிப் செவ்வாயின் வளிமண்டலத்தை நொடிக்கு 7.5 கிலோ மீட்டர் வேகத்தில் அடையும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை நிறுத்தும். வளிமண்டலத்தில் உராய்வு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் தேய்மானத்தையும் தடுக்கும் அம்சம் இதில் தரப்பட்டிருக்கிறது என்கிறார்.
மேலே கூறியது ஏதோ திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இந்த திட்டத்தைத்தான் ஸ்பேஸ் எக்ஸ் செயல்படுத்தும் முயற்சிகளைச் செய்து வருகிறது.
2012ஆம் ஆண்டு மஸ்க் செவ்வாய் குடியேற்ற வாகனம் என்ற ஒன்றை உருவாக்கி வருவதாக அறிவித்தார். ஸ்பேஸ் எக்ஸ் தன்னுடைய ஃபால்கன் 1, ஃபால்கன் 9, ஃபால்கன் ஹெவி ராக்கெட்டுகள் மற்றும் டிராகன் விண்கலம் ஆகியவற்றில் இருந்து கற்ற பாடத்தை வைத்து இந்த ஸ்டார்ஷிப்பை உருவாக்கத் தொடங்கியது. இந்தத் திட்டம் ரகசியமாக நடைபெற்று வந்தது. 2017ஆம் ஆண்டுதான் மஸ்க் தன்னுடைய ஸ்டார்ஷிப் திட்டத்தை சர்வதேச விண்வெளி காங்கிரஸ் கூட்டமைப்பில் வெளிப்படையாக அறிவித்தார்.
அதன்பிறகு ஸ்பேஸ் எக்ஸ் தொடர்ந்து ஸ்டார்ஷிப்பின் முன்வடிவ மாதிரிகளை உருவாக்கி ஏகப்பட்ட சோதனைகளைச் செய்யத் தொடங்கியது. 2011க்கு முன்பு வரை விண்வெளி நிறுவனங்களின் பகல் கனவாக இருந்த மறுபயன்பாட்டு ராக்கெட் திட்டத்தை வெறும் நான்கே ஆண்டுகளில் ஸ்பேஸ் எக்ஸ் சாதித்துக் காட்டியது அல்லவா? இந்த மறுபயன்பாட்டுத் திட்டமே செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஒரு பகுதிதான். ராக்கெட்டின் அடிப்பாகத்தை ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாகத் தரையிறக்கிவிட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தையும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதுதான் மிகக் கடினம். அதைச் செய்துவிட்டால் நாம் ராக்கெட்டை எளிதாக நிலவிலோ, செவ்வாய் கிரகத்திலோ இறக்கிப் பின் மீண்டும் பத்திரமாகப் பூமிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்கிறது ஸ்பேஸ் எக்ஸ்.
ஸ்டார்ஷிப்பின் முன்வடிவ மாதிரிகளை உருவாக்கி அதனை விண்வெளிக்கு ஏவி, பத்திரமாகத் தரையிறக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் நான்குமுறை நடத்தப்பட்ட சோதனைகளிலும் அந்த வாகனம் காற்றிலோ, ஏவுதளத்திலோ இருக்கும்போது வெடித்துவிட்டது. ஆனால் ஐந்தாவது முறை ஸ்டார்ஷிப் வெற்றிகரமாகப் பறந்து மீண்டும் பூமிக்கு வந்தது. இதன்மூலம் ராக்கெட்டின் 2வது பகுதியை மீண்டும் பயன்படுத்தலாம் என்று ஸ்பேஸ் எக்ஸுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதேபோல இந்த ஸ்டார்ஷிப்பை பூமியை முழுவதுமாகச் சுற்றி வர வைத்துப் பத்திரமாகத் தரையிறங்க வைக்கும் சோதனையும் நடைபெற்று வருகிறது. ஒருமுறை நடத்தப்பட்ட இந்தச் சோதனை தோல்வியையே கண்டுள்ளது. ஆனால் அடுத்த சில முயற்சிகளில் வெற்றி கிட்டும் என நம்பிக்கையாகச் சொல்லி இருக்கிறார் மஸ்க்.
மஸ்க்கைப் பொறுத்தவரை இன்னும் 15 ஆண்டுகளில் நாம் செவ்வாய் கிரகத்தை அடைந்துவிடுவோம். அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளில் அந்தக் கிரகத்தை மனிதர்கள் வாழத் தகுந்த இடமாக மாற்றி குடியிருப்புகளை அமைத்துவிடுவோம். இதற்காகச் சுமார் ஒரு லட்சம் பேர் வரை செவ்வாயில் குடியேற ஆகும் செலவினங்கள் மற்றும் தேவைகளை அவர் ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். ஸ்டார்ஷிப் ராக்கெட் தயாரானவுடன் ஒவ்வொரு எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை அவற்றை ஏவலாம் என்றும், தன்னுடைய கனவு ஆயிரம் ஸ்டார்ஷிப்புகளை உருவாக்கி தினமும் யாரையாவது செவ்வாய் கிரகத்தில் இறக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். ஸ்டாட்ஷிப் திட்டம் வெற்றிபெற்றால் மனிதக்குல வரலாற்றில் அது மிகப்பெரிய மைல்களாக இருக்கும். செவ்வாய்க்கு முயற்சிக்கும் அதே வேளையில் 2025க்குள் நிலவுக்கும் பயணிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சரி, செவ்வாய் கிரகத்துக்குப் பயணிக்க எவ்வளவு செலவாகும்? மஸ்க்கின் திட்டம் அங்கே காலனிகளை அமைப்பது. செவ்வாய்க்கான பயணச் செலவைத் தலைக்கு 1 பில்லியன் டாலர் என்று நிர்ணயித்தால் ஒரு சில பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் முன் வர மாட்டார்கள் என்பதில் கவனமாக இருக்கிறார். அதனால் இப்போதைக்கு 10 லட்சம் டாலரில் இருந்து 5 லட்சம் டாலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறி இருக்கிறார். அதேசமயம் இப்போதைக்குத் தான் செவ்வாய் கிரகத்து வரப்போவதில்லை என்றும் மஸ்க் சொல்லிவிட்டார்.
‘செவ்வாய்க்குச் செல்வதற்கு எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தைத் தொடங்கவில்லை. மக்கள் அங்குச் சென்று குடியேற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஒருவேளை நான் இல்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் இயங்கும் என்ற நிலை வந்தால் அப்போது நான் அங்குச் செல்வதைப் பற்றி யோசிக்கிறேன்’ என்கிறார்.
(தொடரும்)