Skip to content
Home » எலான் மஸ்க் #56 – நட்சத்திர மனிதன்

எலான் மஸ்க் #56 – நட்சத்திர மனிதன்

எலான் மஸ்க்

2018ஆம் ஆண்டு. ப்ளோரிடா மாகாணத்தின் கேப் கேனவரல்லில் அமைந்துள்ள 39ஏ ஏவுதளத்தை உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்கர்களுக்கு இந்த ஏவுதளத்துடன் ஒருவிதப் பாசப்பிணைப்பு உண்டு. காரணம், இதே இடத்தில் இருந்துதான் அப்போலோ விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றனர். அந்த நிகழ்வின் எச்சம் இன்னும் அவர்களது நினைவில் கலந்திருந்தது. இப்போது அதே இடத்தில் இருந்து மற்றொரு வரலாற்றுச் சம்பவம் நிகழப்போகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் மிகப் பெரிய டிரக்கில் வைத்து ராக்கெட் ஒன்றை எடுத்து வந்தனர். அதை அங்கே இருந்த ஏவுதளத்தில் இணைக்கத் தொடங்கினர். கிட்டத்தட்ட சில ஆண்டுகளாகவே ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட்டை தயாரிப்பதற்கு வியர்வையையும் ரத்தத்தையும் செலுத்தி வந்தது. ஆம், வரலாற்றில் மிக முக்கியமான ராக்கெட் இது. இதன் பெயர் ஃபால்கன் ஹெவி. நம் பூமியின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட். கிட்டத்தட்ட பதினெட்டு 747 விமானங்களுக்கு இணையான உந்துசக்தியை வெளியிடக்கூடியது.

ஃபிப்ரவரி 6, 2018. கென்னடி விண்வெளி நிலையத்தில் கூட்டம் கூடி இருந்தது. இடம் பற்றவில்லை. ஒரே நெரிசல். அந்தக் கட்டடத்துக்கு வெளியேயும் கூட்டம் நின்றிருந்தது. இதுமட்டுமல்ல அந்த வரலாறு நிகழ்வதைக் காண்பதற்காகச் சாலையிலும், நெடுஞ்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கார்களில் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்தனர். ஊடகங்கள் இந்த நிகழ்வை நேரலையில் காண்பிப்பதற்காகக் கூடி இருந்தன. ஆன்லைனிலும் நேரலையில் லட்சக்கணக்கான மக்கள் திரையில் ஓடும் எண்களைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் ஃபால்கன் ஹெவி ஏவப்படப்போகிறது.

அந்த ராக்கெட் வானத்தில் எழும்புவதையும், பத்திரமாகத் தரையிறங்குவதையும் படம்பிடிப்பதற்கு ராக்கெட்டிலேயே நேரலை கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. நேரம் வந்துவிட்டது. இதோ சில நொடிகளில் ராக்கெட் கிளம்பப் போகிறது. விண்ணை முட்டும் புகையை வெளியிட்டபடி ஃபால்கன் ஹெவி கிளம்பியது. எல்லோரும் தலையை உயர்த்தி ஹெவியைப் பார்த்தனர். அனைவரது கண்ணிலும் அதன் பிரம்மாண்டம் குடிகொண்டிருந்தது. ஓர் அசுரச் சக்தி மேலே பறந்து செல்வது அவர்களுக்குத் தெரிந்தது. மஸ்க்கோ ராக்கெட்டைப் பார்க்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து நெகிழ்ந்துகொண்டிருந்தார்.

எதற்கு இந்த ராக்கெட் விண்ணுக்குப் பறக்கிறது? ஸ்பேஸ் எக்ஸின் திட்டம் என்ன? திட்டம் இதுதான். ஃபால்கன் ஹெவியை வெற்றிகரமாகப் பூமியின் சுற்றுப்பாதைக்குச் செலுத்த வேண்டும். பின் அதில் ஏற்றப்பட்டுள்ள சரக்கை விண்வெளியில் இறக்கி விட வேண்டும். பிறகு வெற்றிகரமாகப் பூமியில் தரையிறங்க வேண்டும். இதைத்தான் ஸ்பேஸ் எக்ஸ் ஏற்கெனவே செய்திருக்கிறதே. இந்த முறை அப்படி என்ன சிறப்பு?

இந்தமுறை இரண்டு சிறப்பு இருக்கிறது. ஒன்று, பறப்பது சாதாரண ராக்கெட் அல்ல. ராட்சசன். மூன்று பூஸ்டர்கள் இடம்பெற்றுள்ள இந்த ராக்கெட்தான் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஸ்பேஸ் எக்ஸ் கனவின் முதல் படி. இதனை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. ஒரு தனியார் நிறுவனம் செய்கிறது. குறிப்பாக ஒற்றை மனிதர் தன் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த அடியை எடுத்து வைக்கிறார். நிச்சயமாக எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வுகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யப்போகும் ஹெவியை நாம் வாழ்த்தி வழியனுப்ப வேண்டாமா?

ஃபால்கன் ஹெவியில் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்ல முடியும். பொதுவாகப் பூமியில் இருந்து கிளம்பும் ராக்கெட்டுகள் பூமியின் தாழ்வட்டப் பாதைக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மட்டுமே பயணிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் ஹெவியில் ஏறிக்கொண்டு நீங்கள் எந்தச் சுற்றுப்பாதைக்கும் செல்லலாம். நிலவுக்குச் செல்லலாம், செவ்வாய்க்குச் செல்லலாம், ஏன் அதையும் தாண்டியும் கூடப் பயணிக்கலாம். அதேபோல எவ்வளவு சரக்குகளை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துச் செல்ல முடியும். இந்தமுறை ஹெவி எதை எடுத்துச் செல்கிறது? அதுதான் முக்கிய சிறப்பம்சமே. அதைப் பார்ப்பதற்குதான் இவ்வளவு கூட்டமும். குதூகலமும்.

வழக்கமாக ராக்கெட்டின் சோதனை ஓட்டங்களில் எடுத்துச் செல்லப்படும் சரக்கு கான்கிரீட் கற்களாகத்தான் இருக்கும். அவற்றை எடுத்துச் சென்று விண்வெளியில் கொட்டுவதையே ராக்கெட் நிறுவனங்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. விண்வெளியில் ஏற்கெனவே இருக்கும் குப்பை போதாதா? நாம் வேறு குப்பையைச் சேர்க்க வேண்டுமா? ஆனால் இந்தமுறை ஃபால்கன் ஹெவியின் மூலம் விண்ணுக்குச் செல்வது கான்கிரீட் குப்பைகள் அல்ல. வேறு ஒன்று. யாரும் முயற்சிக்காத ஒன்று. சொல்லப்போனால் மனிதக் குல வரலாற்றில் முக்கியமான ஒன்றாக மஸ்க்கால் கருதப்படும் ஒன்று. ஆம், இந்த முறை விண்ணுக்குச் செல்வது ஒரு கார். டெஸ்லாவின் முதல் மின்சாரக் காரான ரோட்ஸ்டர் கார்.

மஸ்க்குக்குக் விண்வெளிக் கனவைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அனைவருக்கும் பரப்ப வேண்டும் என்று அவா இருந்தது. விண்ணில் ராக்கெட் ஏவப்படுவதை ஏதோ வியாபாரத்தின் நோக்கமாக மக்கள் பார்க்கக்கூடாது. பரவசமான ஒன்றாகப் பார்க்க வேண்டும். அந்த நிகழ்வில் தாங்களும் பங்கெடுக்க வேண்டும். என்ன செய்யலாம்? இந்த யோசனையில் உதித்ததுதான் ரோட்ஸ்டர் காரை விண்வெளிக்கு அனுப்பும் யோசனை. கார் ஒன்று விண்வெளிக்குச் செல்கிறது என்றால் எல்லோரும் ஆர்வம் அடைவார்கள் இல்லையா? அதைப்பற்றியே பேசுவார்கள் இல்லையா? அதுதான் வேண்டும். ஆனால் வெறும் காரை விண்வெளிக்கு அனுப்பினால் போதுமானதாக இருக்குமா? அதில் ஏறி விண்வெளியில் பயணம் செய்வதற்கு மனிதர்கள் வேண்டாமா?

ஆனால் மனிதர்களை இப்போதைக்கு அனுப்புவது சாத்தியமில்லை. அதனால் விண்வெளி உடை அணிந்த ஓர் இயந்திர மனிதனையும் அனுப்பி வைத்தார். சிவப்பு நிறத்தில் மிளிர்ந்த அந்தக் காரில் ‘ஸ்டார்மேன்’ என்கிற பெயருடைய அந்த நட்சத்திர மனிதன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அந்த மனிதன் விண்வெளியைக் கண்டு பயந்துவிடக்கூடாது என்பதற்காக ‘பயம் கொள்ளாதே’ என்ற வாசகமும் ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் காரில் டேவிட் பவ்வி பாடிய விண்வெளி குறித்த பாடல் ஒன்றும் ஒலித்துக்கொண்டிருந்தது. மேலும் அந்தக் காரில் எலான் மஸ்க் தனக்குப் பிடித்த விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஐசக் அசிமோ எழுதிய மூன்று புத்தகங்களையும் அனுப்பி வைத்திருந்தார்.

இதுகுறித்து எலான் மஸ்க் சொன்னார்: ‘என்னுடைய முதல் விருப்பமே செவ்வாயின் மணலில் செடியை நட வேண்டும் என்பதுதான். அது ஏதோ அறிவியல் ஆய்வுக்காக மட்டுமல்ல. மனிதர்களுக்கு விண்வெளி குறித்த ஆவலைத் தூண்டுவதற்காகவும்தான். பிரபஞ்சத்தின் எல்லையில்லா ஆச்சரியங்களை அறியும் பேரவாவை எழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான். அதன் ஒரு குறியீடாகத்தான் இந்தமுறை ஓர் இயந்திர மனிதனை விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறேன். இனி தினம் தினம் மக்கள் செவ்வாய் கிரகத்துக்குப் பயணிப்பதைக் குறித்துப் பேச வேண்டும் என்றார்.

ஃபால்கன் ஹெவி, ஸ்டார்மேனைப் பத்திரமாக விண்வெளியில் இறக்கிவிட்டு பூமிக்குத் திரும்பியது. அனைவருக்கும் மகிழ்ச்சி. ஒரே குதூகலம். ஸ்டார்மேன் விண்வெளியில் பயணம் செய்யத் தொடங்கியது. அதன் பயணத்தைப் படம் பிடித்துக் காட்டுவதற்காகக் கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டார்மேன் காரை இயக்கிக்கொண்டு விண்வெளியின் ஆழத்துக்குச் சென்றது. செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்ற அந்தப் பயணத்தில் ஸ்டார்மேனுக்குப் பின்னால் பூமி நீல நிற பளிங்குக்கல்லைப் போல ஒளிர்ந்துகொண்டிருந்தது. அதை அந்தக் கேமரா படம் பிடித்துப் பூமிக்கு அனுப்பியது. அந்தப் படம்தான் இந்த நிகழ்வுக்கு மறுநாள் உலகின் பெரும்பாலான பத்திரிகைகளின் முதல் அட்டையில் இடம் பெற்றிருந்த படம். உலகம் முழுவதும் அதைப் பற்றித்தான் பேச்சு. மக்கள் எங்குப் பார்த்தாலும் விண்வெளியைப் பற்றித்தான் பேசினார். அதைத்தான் மஸ்க் நினைத்தார். செய்தும் காட்டினார்.

ஸ்பேஸ் எக்ஸ் வரலாற்றில் ஸ்டார்மேனை விண்வெளிக்கு அனுப்பியது மிக முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இன்றும்கூட ஸ்டார்மேன் ரோட்ஸ்டர் காரில் அமர்ந்துகொண்டு விண்வெளியில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறான். அவன், மஸ்க் நினைத்ததுபோலவே சூரியனைச் சுற்றிக்கொண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறான். பூமி சூரியனை 365 நாட்களுக்கு ஒருமுறை சுற்றுவதைப்போல, டெஸ்லா ரோட்ஸ்டரில் அமர்ந்திருக்கும் ஸ்டார்மேன் 557 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருவான். இவனைக் கண்காணிப்பதற்கு என்றே தனி குழுவும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. www.whereisroadster.com என்ற இணையத்தில் சென்று நீங்களும் ஸ்டார்மேனை தரிசிக்கலாம்.

யாருக்குத் தெரியும்? மஸ்க் நினைத்திருப்பதைப்போலச் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் முதல் மனிதனாகக் கூட இந்த ஸ்டார்மேன் இருக்கலாம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *