Skip to content
Home » எலான் மஸ்க் #57 – செவ்வாயில் இருந்து ஒரு வீடியோ சேட்

எலான் மஸ்க் #57 – செவ்வாயில் இருந்து ஒரு வீடியோ சேட்

எலான் மஸ்க்

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறிவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அங்கேயே ஏதோ ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டீர்கள். நாட்கள் செல்கிறது. இப்போது பூமியில் உள்ள உங்கள் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. என்ன செய்வீர்கள்? ஸ்டார்ஷிப்பில் ஏறி அங்கிருந்து கிளம்பி பூமிக்கு வந்துவிடலாம். பிரச்னை இல்லை. ஆனால் அதற்குச் செலவுகள் அதிகம் ஆகும் இல்லையா? வேறு எப்படிப் பூமியில் இருக்கும் உங்கள் பெற்றோரிடம் பேசுவது? பூமியில் இருந்தால் பேஸ்புக், வாட்ஸ்ஆப் என ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது. நினைத்த நேரத்தில் வீடியோ காலில் பேசிவிடலாம். இணையம் நம்மை ஒன்றாக இணைத்திருக்கிறது. இதுவே மனிதன் செவ்வாயில் இருந்தால் என்ன செய்வது? அங்கேதான் இணைய வசதி இல்லையே? மஸ்க்குக்கும் இந்தக் கேள்வி தோன்றியது. அவர் யோசித்தார். 2015ஆம் ஆண்டு கிரகங்களுக்கு இடையேயான இணைய வசதியை உருவாக்கப்போவதாக அறிவித்துவிட்டார்.

கிரகங்களுக்கு இடையேயான இணைய வசதியா? இது எப்படிச் சாத்தியம்? என்ன இந்த மனிதர் படத்தில் வருவதை எல்லாம் பார்த்து உளறிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் மஸ்க் திரைப்படங்களில் காட்டாத அதிசயங்களையும் செய்துகொண்டு இருக்கிறார். 2015ஆம் ஆண்டு ஸ்டார்லிங்க் என்ற இணைய வசதியை உருவாக்கப்போவதாக அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் செயற்கைக்கோள் வழியாகச் செவ்வாய் கிரகத்துக்கு இணைய வசதி வழங்கி அதன் மூலம் பூமியில் உள்ள மக்களிடம் தொடர்புகொள்ள முடியும் என்று கூறினார்.

ஆனால் நாம் இன்னும் செவ்வாய்க்குப் பயணிக்கவே இல்லை அல்லவா? அதனால் இந்த வசதியை முதற்கட்டமாக பூமி முழுமைக்கும் வழங்கப்போவதாகக் கூறினார். இதற்காகச் சுமார் 10 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவித்தார்.

ஸ்டார்லிங்கின் நோக்கம் இதுதான். எல்லோருக்கும் இணையம். குறைந்த விலை இணையம். இணையம் என்பது இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. சம்பளம் வந்தவுடன் என்னென்ன மளிகைப் பொருள்கள் வாங்க வேண்டும் என்று கணக்குப்போடும்போதே இணைய வசதிக்கான கட்டணத்தையும் நாம் கணக்கிட்டு விடுகிறோம். ஆனால் பூமியில் வேகமான, இடையூறு இல்லாத இணையம் கிடைப்பதில்லை. அதைக் குறைந்த விலையில் வழங்குவதே என் முதல் திட்டம் என்று அறிவித்தார்.

உலகம் முழுவதும் தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத கிராமப்புறங்கள் ஏராளமாக இருக்கின்றன. எந்த வசதி வாய்ப்புகளும் சேராத அந்த இடங்களுக்கு இணையத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான கட்டுமானத்தை ஸ்டார்லிங்க் உருவாக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒருசாராருக்கு மட்டும் பயனடையும் வகையில் அமைந்துள்ள டிஜிட்டல் பிரிவினையை ஒழிக்க முடியும். ஒதுக்குப்புறம் வாழும் மக்களையும் கையைப் பிடித்து அழைத்துவந்து பொதுத்தளத்தில் விட முடியும். மனித நாகரீக வளர்ச்சியில் ஒருவரையும் ஒதுக்காமல் அனைவரையும் இணைத்துக்கொள்ள முடியும் என்றார்.

எல்லாம் சரிதான் இந்த ஸ்டார்லிங் சேவை எவ்வாறு இயங்கும்?

ஸ்டார்லிங்க் என்பது செயற்கைக்கோள்கள் மூலம் வழங்கப்படும் இணையச் சேவை. ஆனால் இது மற்ற சேவைகளை விட அதிக வேகம் கொண்டது. பொதுவாக எல்லா இணையச் சேவைகளுமே தகவல் பரிமாற்றத்தில் தாமத நேரத்தை (Latency) கொண்டிருக்கும். இதற்குக் காரணம் தற்போது கிடைக்கும் செயற்கைக்கோள் வழியான இணையம் புவிக்கிடப்பு துணைக்கோள்கள் (Geo Stationary Satellites) வழியாகவே நடைபெறுகிறது. அதாவது பூமியில் இருந்து ஒருவர் அனுப்பும் தகவல் அந்த செயற்கைக்கோளுக்குச் சென்று பின் மீண்டும் பூமிக்குத் திரும்பி, அந்தத் தகவலைப் பெறுபவரை அடைய வேண்டும். பிரச்னை என்னவென்றால் அந்தச் செயற்கைக்கோள் பூமியில் இருந்து 35,786 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அதனால் பூமியில் உள்ளவர்களுக்குத் தகவல் பரிமாற்றம் தாமதமாக நிகழ்கிறது. ஆனால் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் ஆயிரக்கணக்கில் பூமிக்கு அருகில் வெறும் 550 கிலோ மீட்டர் தூரத்தில் அமையப்பட்டிருக்கும். அதனால் அதிவிரைவான இணையத்தை நீங்கள் பயன்படுத்த முடியும் என்று கூறினார். இப்போது கிடைக்கும் இணையத்தின் வேகமே உங்களுக்கு வேகமாகத் தோன்றுகிறது என்றால் ஸ்டார்லிங்கில் இருந்து கிடைக்கும் வேகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் எனக் கேட்டார்.

2018ஆம் ஆண்டு ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு அனுமதி கிடைத்தது. மொத்தம் 42,000 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பப்போவதாக ஸ்டாடார்லிங் அறிவித்தது. முதற்கட்டமாக 4000 செயற்கைக்கோள்களை அனுப்பியது. இதன்பின் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. நீங்கள் இரவில் காத்திருக்கும்போது ஒளி வரிசை வானில் செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கலாம். அது வேறு எதுவும் இல்லை. ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள்கள் ஒன்றாகப் பறக்கும் காட்சிதான் அது. ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்கை அடிக்கடி இப்போது சுற்றுப்பாதைக்கு ஏவுவதால் நாம் அடிக்கடி பார்க்க நேரிடுகிறது.

ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் தடையில்லாமல் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்கிறது அந்நிறுவனம். ஒரு செயற்கைக்கோளில் பிரச்னை ஏற்பட்டால் கூட இணைய நெரிசல் மற்றொரு செயற்கைக்கோளுக்கு. இந்த ஸ்டார்லிங் கருவிகளை நிறுவுவதற்கு யாருடைய உதவியும் வேண்டாம். வெறும் சாதனங்களை வாங்கி நீங்களே வீட்டில் இருந்து நிறுவி இணையத்தைப் பயன்படுத்தலாம். ஸ்டார்லிங் கருவி கடுமையான குளிர், வெப்பம் மழை, காற்று, ஐஸ்கட்டி மழை, பனிப்பொழிவையும் தாங்குகிறது. ஏன் ராக்கெட் எஞ்சின்களில் இருந்து வெளியாகும் ஆற்றலிலும் பாதிப்படையாது. மேலும் நாங்கள் அடிக்கடி விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதால் அதிநவீனத் தொழில்நுட்பங்களை உடனுக்குடன் செயற்கைக்கோள்களில் மாற்றம் செய்வோம் என்கிறது அந்நிறுவனம்.

ஜூலை 2023 வரை 4500க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஸ்டார்லிங்க் ஏவியுள்ளது. 60 நாடுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைப் பெற்றுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியபோது ஸ்டார்லிங்கின் சேவை உலகம் முழுவதும் பேசப்பட்டது. உக்ரைனில் போரின் ஆரம்ப நாட்களிலேயே அந்நாட்டின் தொலைத்தொடர்பை ரஷ்யா துண்டித்தது. இணைய வசதி இல்லாமல் உக்ரைன் மக்கள் திண்டாடினர். அந்நேரத்தில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய வசதியை வழங்க மஸ்க் உடனே ஏற்பாடு செய்தார். பூமியில் இயற்கைப் பேரிடர்களோ, வேறு அபாயமான சூழலோ ஏற்படும்போது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதற்கு, ஸ்டார்லிங்க் சேவை அதிக அளவில் உதவும் என்கிறார் மஸ்க். மேலும் இதுபோன்ற இணையத்தை வழங்குவதன் மூலம் சந்தையில் போட்டியை ஏற்படுத்தி விலையையும் குறைக்க முடியும் என்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கேமராக்கள் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை படம்பிடிக்கிறது

ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பத் தொடங்கியவுடனேயே அதைச் சுற்றி சர்ச்சைகளும் ஏற்படத் தொடங்கின. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயற்கைக்கோள்களை ஏவுவது நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக வானியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக வான்வெளியைப் தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுக்கும்போது செயற்கைக்கோள்கள் உருவாக்கும் பிரதிபலிப்பால் பிம்பங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும், வரிசையாகச் செயற்கைக்கோள்கள் நிறுத்தப்படுவதால் விடியல் மற்றும் அந்தி வேளையைப் புகைப்படம் எடுப்பது, பரந்த களப் புகைப்படங்கள் (Wide Field Imaging) எடுப்பது ஆகியவற்றுக்குத் தடங்கல்கள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் ஸ்பேஸ் எக்ஸோ தாங்கள் உருவாக்கும் செயற்கைக்கோள்களில் ஒளியைப் பிரதிபலிக்கா சிறப்புப் பூச்சுகள் செய்யப்படுவதாகக் கூறுகிறது. இரவு வானத்தில் இடையூறு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல என்றும் சொல்கிறது.

அதேபோல நாசாவும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் கவலை தெரிவித்துள்ளது. 40,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களைச் சுற்றுப்பாதையில் நிறுத்துவது பூமியில் இருந்து விண்வெளியை ஆராய்வதில் பல இடையூறுகளை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் ராக்கெட்டுகளை ஏவுவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. விண்ணில் இருக்கும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது விண்வெளியில் உள்ள தூசுக்கள், விண்கற்கள் மோதும் அபாயமும் உள்ளது என நாசா சுட்டிக்காட்டியது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸோ நாசாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனைத்தையும் பூமியில் இருந்தே கட்டுப்படுத்தலாம். மேலும் அவை தன்னிச்சையாகச் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து தன்னை தகவமைத்துக்கொள்ளும் அம்சங்களையும் கொண்டுள்ளது என்பதால் நாசா பயப்படத் தேவையில்லை என்று பதிலளித்தது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *