Skip to content
Home » எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

ப்ளூ ஆரிஜின்

பங்காளிச் சண்டை என்பது குடும்பத்தில் மட்டும் அல்ல, வியாபாரத்திலும் நடைபெறக்கூடியது. அதேபோல பங்காளிச் சண்டை என்பது நிலத்துக்காக மட்டும் அல்ல, சில சமயம் விண்வெளிக்காகவும் கூட நடைபெறுவது உண்டு!

மஸ்க் எப்படி ஊருக்குள் ஒரு கணினி வல்லுநராக அறியப்பட்டாரோ, அதேபோல இன்னொரு நபரும் இருந்தார். அவர், மஸ்க்கை விட ஏழு வயது மூத்தவர். மஸ்க்கைப் போலவே சிறு வயதில் இருந்து கணினி, அறிவியல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டு திரிந்தார். கல்லூரியில் கணினி, மின்னணுப் பொறியியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்ற அவர், வால் ஸ்ட்ரீட் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். அங்கேயே ஒரு பெண்ணையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒருநாள் திடீரென்று வேலையை விட்ட அவர், தன் மனைவியுடன் சேர்ந்து ஆன்லைன் புத்தகக் கடை ஒன்றை ஆரம்பித்தார். அப்போது யாருக்கும் தெரியாது, அந்தக் கடை வணிக உலகத்தையே புரட்டிப்போடப்போகிறது என்று.

அந்த நபரின் பெயர் ஜெஃப் பெசோஸ். அவர் தொடங்கிய அந்த ஆன்லைன் புத்தகக் கடைதான் அமேசான்.காம். வால்ஸ்ட்ரீட்டில் வேலை பார்த்தபோது இணையத்தின் எதிர்காலச் சாத்தியங்களைப் புரிந்துகொண்டு அவர் தொடங்கிய அமேசான், 2002 ஆண்டு தனது முதல் காலாண்டு லாபத்தை 5 மில்லியன் டாலர்களாகக் கணக்குக் காட்டியது. இன்று அந்நிறுவனம் புத்தகம் மட்டுமில்லாமல் பொம்மை, ஆடைகள், வீட்டு உபகரணங்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விற்பனை செய்து உலகின் மிக வெற்றிகரமான, அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

அமேசானைத் தொடங்கிய ஜெஃப் பெசோஸ் 2000 ஆண்டு வாக்கில் 300 கோடி டாலர்கள் சொத்துக்கு அதிபதியானார். அப்போதுதான் அவருக்கு ஆழ்மனதில் அத்தனை நாட்கள் குடிகொண்டிருந்த தன் சிறு வயது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றியது. சிறு வயது ஆசை என்றவுடன் சொந்த வீடு கட்ட வேண்டும், ஆயிரம் ஏக்கரில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஒரு விண்வெளி நிறுவனம் தொடங்க வேண்டும். விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவ வேண்டும். அதுதான் அவரது கனவு. மஸ்க்கைப் போன்ற அதே கனவு.

ஆனால், மஸ்க்கின் கனவுக்கும், பெசோஸின் கனவுக்கும் ஓர் அடிப்படை வித்தியாசமிருக்கிறது. மஸ்க்கின் கனவு செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்பது. ஆனால் பெசோசின் கனவு விண்வெளிச் சுற்றுலா தொடர்பானது. மக்களை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வதுபோல் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பெசோஸ் நினைத்தார். அதற்காக அவர் தொடங்கிய நிறுவனம்தான் ‘ப்ளூ ஆரிஜின்’.

இரு நிறுவனங்களும் தொடங்கப்பட்ட நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் செல்லும் பாதை ஒன்றாகத்தான் இருந்தது. அதனாலேயே இருவருக்கும் இடையில் போட்டிகள் ஏற்பட்டன. வழக்கமாக ஒரே துறையில் இருக்கும் இரு ஜாம்பவான்களுக்குப் போட்டிகள் நிகழ்வது சாதாரணமானது என்றாலும், ப்ளூ ஆரிஜின் செய்த ஒரு விஷயம் மஸ்க்கைப் பொறுமை இழக்கச் செய்தது.

0

விண்வெளி நிறுவனங்களில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் ஸ்பேஸ் எக்ஸ் எல்லோருக்கும் முன்னோடியாக இருக்கிறது என்று பார்த்தோம். அதேபோல மற்றத் தயாரிப்புகளிலும் ஸ்பேஸ் எக்ஸ் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றியது. இதனால் அந்நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிக்கும் செலவு குறைந்தது. அதன் காரணமாகக் குறைந்த விலையில் ராக்கெட்டை இயக்கவும் முடிந்தது. இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மற்ற நிறுவனங்கள் ஸ்பேஸ் எக்ஸின் தொழில்நுட்பத்தைப் பிரதி எடுப்பதற்கு ஏராளமான முயற்சிகள் செய்தன.

பொதுவாக விண்வெளி நிறுவனங்கள் ராக்கெட்டுகளைத் தயாரிப்பதற்கு ஏராளமான சிறு நிறுவனங்களை நம்பி இருக்கும். அத்துறையின் முன்னோடியான போயிங், லாக் ஹீட் மார்ட்டின் போன்ற நிறுவனங்கள் கூட ஒரு ராக்கெட்டை வடிவமைப்பதில் இருந்து அவற்றை ஏவுவது வரையிலான தேவைகளுக்கு 1200க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைச் சார்ந்து இருக்கிறது. ஆனால், ஸ்பேஸ் எக்ஸோ மற்ற நிறுவனங்களைப் போல இல்லாமல் எஞ்சின்களில் இருந்து சிறு சிறு கருவிகள் வரை தங்களுக்குத் தேவையான 90 சதவிகித ராக்கெட் பாகங்களை உள்ளுக்குள்ளேயே தயாரித்தது.

மற்றவர்களுக்கு இது பார்ப்பதற்கு வேண்டாத வேலையாகத் தோன்றியது. ஒரு நிறுவனம் முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் ரேடியோக்கள், மின்சாரக் கருவிகள், கணினிகள் போன்றவற்றை உருவாக்குவது நேர விரயமாகக் கருதப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஒரு நிறுவனம் எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்று முயல்வது தரமற்றத் தயாரிப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் அந்த அணுகுமுறையையே தனது பலமாக மாற்றிக்கொண்டது.

எஞ்சின்களில் இருந்து, ராக்கெட்டின் உடல்கள், கேப்சியூல்கள், கணினிக்குத் தேவைப்படும் மதர்போர்டுகள், சர்க்கியூட்டுகள், அதிர்வுகளைக் கண்காணிக்கும் சென்சார்கள், கணினிகள், சூரிய ஆற்றல் தகடுகள் என அனைத்தையும் அந்த நிறுவனமே உருவாக்கியது. இதன்மூலம் அந்நிறுவனத்துக்கு இரண்டு பயன்கள் இருந்தன. ஒன்று பணத்தைச் சிக்கனம் செய்ய முடிந்தது. அடுத்தது தங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு சாதனத்தின் வடிவத்தையும், தரத்தையும் மேம்படுத்த முடிந்தது.

உதாரணமாக ராக்கெட்டில் பயன்படுத்தும் ரேடியோ கருவிகளை வெளியில் இருந்து வாங்குவதற்கு 50,000 டாலர்களில் இருந்து 1 லட்சம் டாலர்கள் வரை செலவானது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸில் அந்தக் கருவியைத் தயாரிக்கும்போது வெறும் 5000 டாலர்களுக்கு வேலை முடிந்துவிட்டது. அதேபோல ரேடியோ கருவிகளைத் தங்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைப்பதன் மூலம் அந்தக் கருவியின் எடையை வெளியில் இருந்து வாங்கும் கருவிகளில் இருந்து 20 சதவிகிதம் குறைத்துவிடுவதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் சொல்கிறது.

ஒருமுறை ஃபால்கன் 1 ராக்கெட்டை ஏவுவதற்கு அக்கியுட்டேட்டர் என்ற கருவியை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் விலையை விசாரித்ததில் 1,20,000 டாலர்கள் செலவாகும் என்று தெரிந்தது. இதனை ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் மஸ்க்கிடம் கூறியபோது அவர் சிரித்துவிட்டு, இத்தனை சிறிய கருவிக்கு இவ்வளவு தொகையா? வெறும் 5000 டாலர்களில் நீங்களே உருவாக்குங்கள் என்று சொல்லிவிட்டார். பின்பு ஸ்பேஸ் எக்ஸ் நிபுணர்களில் ஒருவரான டேவிஸ் என்பவர் 9 மாதங்கள் செலவிட்டு அந்தக் கருவியை உருவாக்கினார். அந்தக் கருவியை உருவாக்க ஆன செலவு வெறும் 3900 டாலர்கள்தான்.

விண்வெளிப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்படும் கருவிகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதற்குக் காரணம் சாதாரணத் தரத்திலான கருவிகள் விண்வெளியில் இயங்காது என்று நம்பியதால்தான். அதனால் உயர்தரக் கருவிகளைத் தயாரிக்க அதிக விலை தர வேண்டியதிருந்தது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சாதாரணக் கருவிகளையே விண்வெளிக்குப் பயன்படுத்த முடியும் என்று வாதாடியது.

இதனால் அந்நிறுவனம் ஆரம்பக் கட்டத்தில், தானே சொந்தமாகத் தயாரித்த கருவிகளை நாசா தரமற்றது என்று புறக்கணித்து வந்தது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் ஒவ்வொரு முறையும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்காக நாசாவிடம் அனுமதி பெறுவதற்குப் போராட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அலுத்துப்போன ஸ்பேஸ் எக்ஸ் இதனை மாற்றிக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தது.

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டைத் தயாரிக்கும்போது அதில் மற்ற விண்வெளி நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் விலை உயர்ந்தக் கருவிகளையும், ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ள குறைந்த விலைக் கருவிகளையும் பொருத்தியது. பிறகு சோதனை ஓட்டத்தில் இரண்டு கருவிகளின் செயல்திறனையும் ஆராய்ந்தது. இதில் ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த கருவிகள் மற்ற கருவிகளைவிடச் சமமாகவும், பல நேரங்களில் அதிகத் திறனுடனும் இருந்தது தெரிய வந்தது. இந்தத் தரவுகளைச் சுட்டிக்காட்டும்போதுதான் விலைக்கும், தரத்துக்கும் சம்பந்தம் இல்லை, சாதாரணக் கருவிகளையும்கூட விண்வெளியில் பயன்படுத்த முடியும் என நாசா புரிந்துகொண்டது. இப்படித்தான் நூற்றுக்கணக்கான ராக்கெட் பாகங்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் அனுமதி வாங்கியது.

அதேபோல நவீனத் தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதிலும் ஸ்பேஸ் எக்ஸ் முன்னோடியாக இருந்தது. உதாரணமாக ஸ்பேஸ் எக்ஸ் வெல்டிங் செய்வதற்கு என்றே தனி இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது. இந்த இயந்திரம் ஃபால்கன் ராக்கெட்டுக்கு வேண்டிய உடல் பாகங்களை எந்தச் சிக்கலும் இல்லாமல் தானியங்கி முறையில் வெல்டிங் செய்து தந்துவிடும். பொதுவாக விண்வெளி நிறுவனங்கள் உலோகங்களை வெல்டிங் செய்யாது. ஏனென்றால் வெல்டிங் செய்வது அவர்கள் பயன்படுத்தும் உலோகங்களைப் பலவீனப்படுத்திவிடும் என்ற அச்சம். அதேபோல வெல்டிங் செய்வது மற்ற பாகங்களையும் பாதிக்கும் என்றும் கருதப்பட்டது.

ஆனால் மஸ்க் தொடக்கத்தில் இருந்தே ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளுக்கு உராய்வைத் தூண்டும் வெல்டிங் (Friction Stir Welding) முறையைப் பின்பற்றுமாறு ஊக்குவித்தார். இந்த வகை வெல்டிங் முறை சாதாரண வெல்டிங் முறையை விட வலுவான இணைப்பை உலோகங்களுக்கிடையே உண்டாக்கும் என்பதால் அவ்வாறு செய்தார்.

இந்த வகை வெல்டிங் நிறுவனங்கள் ஏற்கெனவே அமெரிக்காவில் இருந்தன. ஆனால் ராக்கெட்டின் உடலை வெல்டிங் செய்யும் அளவுக்கு அவர்கள் முயற்சி செய்தது இல்லை. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் விடுவதாக இல்லை. தானே இந்த வெல்டிங் முறையைக் கையகப்படுத்திக் காட்டுவேன் என்று சொல்லிவிட்டு, பல தவறுகளைச் செய்து கடைசியாக அந்த உத்தியைக் கற்றுக்கொண்டது. அதன்பின் ஸ்பேஸ் எக்ஸால் மிகப்பெரிய, மெலிதான உலோகத் தகடுகளை எளிதாக இணைக்க முடிந்தது. இதன் மூலம் ஃபால்கன் ராக்கெட்டின் எடையைப் பல மடங்கு குறைக்க முடிந்தது. இந்தத் தொழில்நுட்பம் மற்ற போட்டியாளர்களைவிட ஸ்பேஸ் எக்ஸை மதிப்பு வாய்ந்த நிறுவனமாக மாற்றியது. இங்கேதான் பிரச்னையே தொடங்கியது.

ஸ்பேஸ் எக்ஸின் இந்த முயற்சிகளைக் கண்டு வாய் பிளந்த நிறுவனங்கள் விரைவிலேயே அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. ஸ்பேஸ் எக்ஸின் உத்தியைத் தாங்களும் பிரதி எடுக்கத் தொடங்கின. இந்தக் கட்டத்தில்தான் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் புதிய தந்திரம் ஒன்றைச் செய்தது. அது, ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களையே மஸ்க்கிடம் இருந்து பிடுங்கிக்கொள்ள ஆரம்பித்தது.

ப்ளூ ஆரிஜின் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் குழுவில் யாரெல்லாம் சிறந்த நிபுணர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் தூண்டில் போட்டது. அங்கிருந்த நூற்றுக்கும் அதிகமானோரை இரு மடங்கு சம்பளம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தியது. குறிப்பாக, ஸ்பேஸ் எக்ஸில் இருந்த உலகின் மிகச்சிறந்த வெல்டிங் நிபுணரான ரே மிர்யெக்டா என்பவரை அவர் வாங்கும் சம்பளத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்தது. இது மஸ்க்குக்குத் தெரிய வர, அவர் கடுப்பானார். பெசோஸின் இந்த நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட விரும்பினார்.

ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் பெயரில் இருந்து தன்னுடைய ஊழியர்களுக்கு வரும் மின்னஞ்சல்களை எல்லாம் மஸ்க் கண்காணிக்கத் தொடங்கினார். ப்ளூ ஆரிஜினின் ஊழியர்கள் பெயரை எல்லாம் கண்டுபிடித்து, அவர்களுடைய பெயர்களை எல்லாம் தம் அலுவலக மின்னஞ்சலில் முடக்கினார். அதுமட்டுமில்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வருவதற்கு முன்பே தன்னுடைய முகவரிக்கு வருவதைப்போல மாற்றி அமைத்தார். இப்படி எல்லாம் செய்து பெசோஸின் பித்தலாட்டங்களுக்கு மஸ்க் பதிலடி கொடுத்து வந்தார்.

உண்மையில் ப்ளூ ஆரிஜினுக்குப் பிறகு தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ஸ்பேஸ் எக்ஸ். ஸ்பேஸ் எக்ஸை ஆரம்பிக்கும் முன்னர் பல முறை பெசோஸைச் சந்தித்து மஸ்க் பேசி இருக்கிறார். தன்னுடைய லட்சியங்களைக் குறித்தெல்லாம் உரையாடி இருக்கிறார். ஆனால் இந்தப் பிரச்னைக்குப் பிறகு இருவருக்கும் இடையே விரிசல் விழுந்தது. இருவருக்கும் இடையே பனிப்போரே நடந்துவந்தது.

இன்றைக்கும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு சண்டையிட்டு வருவதை நம்மால் பார்க்க முடியும். மஸ்க் பெசோஸுக்கு எதிராகவும், பெசோஸ் மஸ்க்குக்கு எதிராகவும் ஏகப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கின்றனர். இருவரும் மக்களை யார் முதலில் விண்வெளிக்கு அழைத்துச் செல்வது என்று போட்டியிட்டு வருகின்றனர். சமீபத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நாசா ப்ளூ ஆரிஜினுக்கு வழங்கியது. அதற்கு முன்பு வரை நாசா ஒப்பந்தங்கள் பெரும்பாலும் ஸ்பேஸ் எக்ஸுக்குத்தான் கிடைத்து வந்தன. இது ஓரவஞ்சனையாக இருக்கிறது என்று பல விமர்சனங்கள் எழவே, நாசா ப்ளூ ஆரிஜினுக்கு வாய்ப்பை வழங்கியது. மஸ்க்கோ கடுப்பாகி விட்டார். பெஸோஸ் தங்களுடைய முயற்சிகளை எல்லாம் காப்பி அடித்துச் செயல்படும் ‘காப்பிக் கேட்’ என்று குற்றம்சாட்டினார்.

ஒருமுறை ப்ளூ ஆரிஜின் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளுக்குக் காப்புரிமை வாங்கக்கூட முயற்சித்தது. மஸ்க் கொதித்து எழுந்துவிட்டார். ‘மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த சிந்தனை எங்களுக்கு முன்பே பல்வேறு நிபுணர்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ்தான் அதைச் சரியான முறையில் முயற்சித்து வருகிறது. பெசோஸ் இன்னும் ஒரு ராக்கெட்டைக் கூட ஏவவில்லை. ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தை நாங்கள்தான் சிந்தித்தோம் எனக் காப்புரிமை வாங்கப் போராடுகிறார். அந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி யோசிப்பது பெரிதல்ல. அதைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட்டை உருவாக்குவதுதான் பெரிய விஷயம். அதை நாங்கள் செய்வோம்’ என்றார்.

அவர் சொன்னதுபோலவே ப்ளூ ஆரிஜினுக்கு முன்பாகவே ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9ஐ பத்திரமாகத் தரையிறக்கி அந்தச் சாதனையைச் செய்து காட்டியது.

இன்றும் ப்ளூ ஆரிஜின் விண்வெளித் துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. ஆனால் மஸ்க் செய்ததுபோல் அவற்றால் நிகழ மறுக்கும் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட முடியவில்லை. அதில் ஸ்பேஸ் எக்ஸே முதன்மையானதாக இருக்கிறது.

பெசோஸ் குறித்து மஸ்க் கூறும்போது இதைத்தான் சொல்கிறார்: ‘பெசோஸுக்கு அரசனாக வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவர் சக போட்டியாளர்களைக் கொன்றுவிட்டு தான் அரசனாவேன் என நினைக்கிறார். அது எங்களிடம் வேலைக்கு ஆகாது!’

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *