Skip to content
Home » எலான் மஸ்க் #61 – செயற்கை நுண்ணறிவு

எலான் மஸ்க் #61 – செயற்கை நுண்ணறிவு

எலான் மஸ்க்

இந்த நூற்றாண்டில் மனிதர்கள் சந்திக்க இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காலநிலை மாற்றம்தான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதை விடப் பெரும் ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதுதான் செயற்கை நுண்ணறிவு. நான் இதை ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நான் ஒன்றும் ஜோதிடன் கிடையாது. எல்லாம் விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். யாராவது ஒருவருக்குக் காயம்படும் வரை. – எலான் மஸ்க்

2010ஆம் ஆண்டு. எலான் மஸ்க் தன்னுடைய நண்பரும் கூகுளின் இணை நிறுவனருமான லேரி பேஜ்ஜை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய பேச்சு செயற்கை நுண்ணறிவு பற்றியதாக மாறியது. இயந்திரங்கள் மனிதர்களுக்கு இணையாகச் சிந்திக்கும்போது அவை மனிதக் குலத்தை அழிக்கும் செயலில் இறங்கலாம் என்றார் மஸ்க். லேரி பேஜ்ஜோ மஸ்க் சொல்வதை ஏற்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல் எல்லாம் நடக்காது. ஒருவேளை செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு வந்தால் அவை டிஜிட்டல் உலகின் கடவுளாக இருக்கும். கடவுள்கள் என்றைக்கும் அழிக்கும் வேலையைச் செய்ய மாட்டார்கள். படைக்கும் வேலையை மட்டும்தான் செய்வார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவு என்ற கடவுளையே ஒருவர் படைத்தாகத்தான் வேண்டியது இருக்கிறது. அதை ஏன் நாம் செய்யக்கூடாது என்று கேட்டார் பேஜ். இப்படியே வளர்ந்த அந்த உரையாடல் அன்றைக்கு முடிந்துவிட்டது.

ஆனால் அதன்பின் லேரி பேஜ் சும்மா இருக்கவில்லை. செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். கூகுளில் அதுகுறித்த ஆய்வுகளை முன்னெடுக்க அதிகம் நிதிகளை ஒதுக்கினார். அவர் அளித்த பேட்டிகளில் எல்லாம் கூகுளின் ஒட்டுமொத்த இலக்கே அதி சிறந்த நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் படைப்பதுதான் எனப் பேசத் தொடங்கினார். அப்போதைய சூழலும் அப்படித்தான் இருந்தது. உலக அளவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை அறிந்தவர்கள் குறைவாகவே இருந்தனர். அதில் நான்கில் மூன்று பங்கினர் கூகுளில் இருந்தனர். இவர்கள் ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்கினால் அதன் முழுக் கட்டுப்பாடும் கூகுளிடம்தான் இருக்கும் நிலை இருந்தது. அவ்வாறு நடந்தால் கூகுளின் பேச்சுக்கு மறுபேச்சே இருக்காது.

மஸ்க்குக்கோ இந்த விஷயம் உறுத்தலாகவே இருந்தது. செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது நல்ல விஷயம்தான். மாற்றுக்கருத்தே இல்லை. அதனால் நிறைய நல்ல பலன்கள் விளைய இருக்கின்றன. அதேசமயம் ஏற்படப்போகும் பாதிப்புகளையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இது விளையாட்டான விஷயமல்ல. ஒருவேளை அந்தச் செயற்கை நுண்ணறிவு நாளை நமக்கு எதிராகவே திரும்பிவிட்டால் யார் பொறுப்பு ஏற்பது? செயற்கை நுண்ணறிவு அணு ஆயுதங்களை விட ஆபத்தானது. மனிதக் குலத்தையே கூண்டோடு அழிக்கும் சக்தி வாய்ந்தது. அப்படிப்பட்ட அந்த ஆயுதம் ஒரே ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கலாமா? அதுவும் மனிதர்களைப் பற்றியே கவலைப்படாத லேரி பேஜ் அதன் உரிமையாளராக இருக்கலாமா?

கூகுளிடம் உலகின் அத்தனை அறிவாளிகளும் இருக்கின்றனர். அள்ள அள்ளப் பணம் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கு வேண்டிய தொழில்நுட்பச் சாதனங்கள் அத்தனையும் இருக்கின்றன. இது போதாதா நாம் அஞ்சுவதற்கு? உடனே மஸ்க் செயலில் இறங்கினார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து அறிந்த நிபுணர்களை எல்லாம் ஒன்று திரட்டினார். அவர்களுடன் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதுதான் ஓபன் ஏஐ.

ஓபன் ஏஐ தொடங்கப்பட்ட நோக்கம் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைக் கண்காணிப்பதாக இருந்தது. ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது என்றால் அதனால் பெறப்படும் நன்மைகளை அதிகரித்து, தீமைகளைக் குறைக்கும் செயல்திட்டத்தையும் நாம் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால் அது வினையில் சென்று முடிந்துவிடும். இந்தக் கடிவாளம் போடும் வேலையைத்தான் ஓபன் ஏஐ செய்யும் என்றார்.

ஓபன் ஏஐயை முழுக்க முழுக்க கூகுளுக்கு நேர் எதிராக மஸ்க் முன்னிறுத்தினார். கூகுள் லாப நோக்கத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளைச் செய்கிறதா? நாம் லாப நோக்கம் இல்லாமல் அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வோம். யார் வேண்டுமானாலும் நமது ஆய்வுத் தரவுகளை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளட்டும். கூகுள் திரை மறைவில் வேலை பார்க்கிறதா? இங்கு எல்லாமே வெளிப்படையாக இருக்க வேண்டும். நாம் என்ன ஆய்வு செய்கிறோம், என்ன கண்டறிந்து இருக்கிறோம் என்ற அனைத்து விஷயங்களையும் இணையத்தில் வெளியிடுவோம். மக்கள் தெரிந்துகொள்ளட்டும் என்றார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தில் மஸ்க் மட்டும் அல்ல, ஏஐ தொழில்நுட்பத் துறையின் இளவரசன் என அறியப்பட்ட சேம் ஆல்ட்மேன் இருந்தார். அவரைப்போல இன்னும் பல நிபுணர்கள் இருந்தனர். அதேபோல ஓபன் ஏஐயின் முன்னெடுப்பை ஆதரிப்பதற்காக பேபாலின் தலைமைச் செயலதிகாரி பீட்டர் தியல் உள்ளிட்ட சில முதலீட்டாளர்கள் மொத்தமாக இணைந்து 1 பில்லியன் டாலர்களைக் கொடுத்தனர். இதுவே ஆரம்பத்தில் எல்லோருக்கும் சந்தேகம் வரவழைத்தது. திடீரென முதலீட்டாளர்கள் எல்லாம் இணைந்து லாப நோக்கமில்லாத ஒரு நிறுவனத்துக்காக ஏன் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்ட வேண்டும்? இதற்குப் பின் வேறு ஏதாவது திட்டம் இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை என்று சொல்லிவிட்டார் மஸ்க். உறுதியாகச் சொல்கிறேன். இந்த நிறுவனம் லாபத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படாது. எங்களுக்கு லாபம் தேவையில்லை. லாபத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நிறுவனம் தன் திட்டத்தை வகுக்கத் தொடங்கினால் அதன்பின் அதைக் கட்டுப்படுத்த முடியாது. நான் ஓபன் ஏஐயை கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறேன். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைக் கண்காணிக்கும், மேம்படுத்தும். செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் பக்கம் இருப்பதை உறுதி செய்யும். இதற்காக மட்டுமே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

ஓபன் ஏஐயும் வெளிப்படையாகவே இயங்கி வந்தது. அதன் அத்தனை ஆய்வுகளும் விளையாட்டாகவே நடைபெற்று வந்தன. இசைத்துறையில் செயற்கை நுண்ணறிவை நுழைப்பது, வீடியோ கேம் துறையில் அதன் வளர்ச்சியை மேம்படுத்துவது இதுபோன்ற ஆய்வுகளைத்தான் ஓபன் ஏஐ முன்னெடுத்து வந்தது. அதுமட்டுமில்லாமல், அதன் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் ஓபன் சோர்ஸ் எனப்படும் ‘யாரும் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற வகையிலேயே வெளியிடப்பட்டது. ‘எங்கள் நோக்கம், டிஜிட்டல் நுண்ணறிவை மக்களின் ஒட்டுமொத்தப் பலனுக்காக எப்படிப் பயன்படுத்தலாம் என்று வழிகாட்டுவது மட்டுமே. எங்கள் ஆய்வுகள் பணத்துக்காக இல்லை என்பதால் வேறு எந்த லட்சியங்களும் எங்களைத் திசைதிருப்ப முடியாது’ என்றது.

ஆனால் கூடிய சீக்கிரத்திலேயே நிலைமை மாறத் தொடங்கியது. என்னதான் நல்ல நோக்கமாக இருந்தாலும் பணம் இல்லாமல் இந்த உலகில் எதுவும் நடக்காது அல்லவா? ஓபன் ஏஐயும் அந்தப் பிரச்னையில் சிக்கியது. அந்நிறுவனத்தின் நிதி வளம் குறைந்துகொண்டே வந்தது. அதன் ஆய்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. எலான் மஸ்க் அவ்வப்போது பணத்தைக் கொடுத்து உதவி வந்தாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குப் பயிற்றுவிப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. ஒரு நாளைக்கே ஆயிரக்கணக்கில் டாலர்களைச் செலவழிக்க வேண்டியதாக இருந்தது. இன்றும் கூட சேட்ஜிபிடியை இயங்க வைப்பதற்குத் தினமும் 7 லட்சம் டாலர்களைச் செலவழிக்க வேண்டி இருப்பதாக ஓபன் ஏஐ சொல்கிறது. அப்படியென்றால் அப்போதைய நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

நன்றாகச் சென்று கொண்டிருந்த நிறுவனத்தில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டவுடன் அன்றாடச் செலவுக்கே அந்நிறுவனம் தள்ளாடத் தொடங்கியது. அந்நிறுவனம் லாப நோக்கமற்ற நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதால் அதில் பணத்தை முதலீடு செய்வதற்கும் யாரும் தயாராக இல்லை. மஸ்க் ஒருவர் மட்டுமே அத்தனைச் செலவுகளை ஏற்க முடியுமா என்ன? அதுவும் ஓபன் ஏஐ கூகுளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட நிறுவனம். கூகுள் தினமும் தன்னுடைய செயற்கை நுண்ணறிவைப் பயின்றுவிக்கப் பல கோடிகளைச் செலவழித்துக் கொண்டிருந்தது. ஓபன் ஏஐயோ உயிரோடு இருக்கவே போராடிக் கொண்டிருந்தது..

அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கூடிப் பேசினர். இனியும் இந்த நிலைமை நீடித்தால் நம்மால் இப்போது செய்துகொண்டிருப்பதைக் கூட செய்ய முடியாமல் போய்விடும். நாமும் கதவுகளை மூடிக்கொள்வோம் என்று முடிவெடுத்தனர். 2018ஆம் ஆண்டு லாப நோக்கமற்ற அந்த நிறுவனத்தை லாபம் நோக்கம் கொண்ட நிறுவனமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால் மஸ்க் வேண்டாம் என்றார். பணத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வந்துவிட்டால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா? நம் கொள்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகி ஓடிவிடும். நாம் தொடர்ந்து முயற்சி செய்வோம். என்னால் முடிந்த பணத்தைத் தருகிறேன். அவசரப்படாதீர்கள் என்றார். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை. அவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்றனர். மஸ்க் யோசித்தார். வேறு வழியில்லை; நான் வளர்த்த ஓபன் ஏஐக்கு எதிராகவே போரைத் தொடங்க வேண்டிய நிலை வந்துவிடும் போலிருக்கிறதே என அஞ்சினார்.

2018ஆம் ஆண்டு ஓபன் ஏஐக்குப் பெரும் மாற்றத்தைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. இரண்டு விஷயங்கள் முக்கியமான விஷயங்கள் அரங்கேறின.

ஒன்று, அந்நிறுவனம் விளையாட்டாகத் தயாரித்து வந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளை எல்லாம் விட்டுவிட்டு, வணிக நோக்கத்தில் மொழிகளைக் கையாளும் செயற்கை நுண்ணறிவை உருவாக்க முன் வந்தது. அதுகுறித்த முதல் ஆய்விதழையும் வெளியிட்டது. அந்த ஆய்விதழ் புரட்சிகரமான கண்டுபிடிப்பை உள்ளடக்கியதாக இருந்தது. அதில் சொல்லப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு நம்மைப்போன்று மனித மொழிகளில் உரையாடக்கூடியது. நாம் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் அளிக்கக்கூடியது. மனித மொழியில் நாம் முன்வைக்கும் சிக்கல்கள் அனைத்துக்கும் மொழியின் வாயிலாகவே தீர்வளிக்கக்கூடியது. அதைத்தான் நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்று அறிவித்தது ஓபன் ஏஐ.

தொழில்நுட்ப உலகமே அதை ஆச்சரியமாகப் பார்த்தது. கூகுளே உண்மையில் வாய் பிளந்துதான் நின்றது. நாங்கள் இத்தனைக் கோடிகளைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். எதுவும் இல்லாமல் இவர்களால் எப்படி இப்படி ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முடிகிறது? அந்தச் செயற்கை நுண்ணறிவு என்ன என்பதை நாம் பார்க்க வேண்டுமே! இப்படித்தான் இன்றைய சேட்ஜிபிடியின் முதல் வடிவம் பிறந்தது. இதைத் தொடர்ந்து இன்னொரு முக்கியமான விஷயமும் நடந்தது. ஜிபிடியை உருவாக்குவதாக அறிவித்தவுடனேயே மஸ்க் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்தார்.

ஓபன் ஏஐ அதிர்ந்துவிட்டது. நீங்கள் நிச்சயமாக எங்களுக்கு வேண்டும். எங்களுடன் தொடர்ந்து பயணம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டது. மஸ்க்குக்கு அதற்கும் மேல் அங்கே இருப்பதில் விருப்பமில்லை. நாம் எதற்காக இதில் முதலீடு செய்தோமோ அந்த நோக்கத்துக்கே எதிராகத் திரும்பி இருக்கும் இந்த நிறுவனத்திடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? இருந்தாலும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என முடிவு செய்தார். சரி, நான் வழிகாட்டியாக இருக்கிறேன். விரைவில் ஒரு பில்லியன் டாலர் பணத்தையும் முதலீடு செய்கிறேன். ஆனால் ஜிபிடியின் கட்டுப்பாட்டை என் கையில் தர வேண்டும் என்றார் மஸ்க். ஓபன் ஏஐயும் சரியென்று தலையாட்டிவிட்டது. ஆனால் மஸ்க் கொடுப்பதாகச் சொன்ன பணம் வருவதற்குத் தாமதமாகியது. அதனால் ஓபன் ஏஐயால் சுத்தமாக இயங்க முடியாமல்போனது. ஜிபிடி உருவாக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதன் இயக்குநர்கள் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் மைக்ரோசாஃப்ட் உள்ளே வந்தது.

மைக்ரோசாஃப்ட் வந்த கையுடன் ஒரு பில்லியன் டாலர்களை ஓபன் ஏஐக்கு வழங்குவதாக அறிவித்தது. நீங்கள் மஸ்க்கை நம்ப வேண்டாம். நாங்கள் பணம் தருகிறோம். இப்போதே ஜிபிடியின் வேலையைத் தொடங்குங்கள் என்றது. இது தெரிந்தவுடன் மஸ்க் அதிர்ந்துவிட்டார். மைக்ரோசாஃப்டின் நிதியை ஏற்கக்கூடாது என்று ஓபன் ஏஐ இயக்குநர்கள் குழுவை வற்புறுத்தினார். ஆனால் அவர்கள் மஸ்க்குடைய வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவே இல்லை. மைக்ரோசாஃப்டின் நிதியை ஏற்பதற்கு முடிவு செய்துவிட்டனர்.

இதை அறிந்தவுடன் மஸ்க்குக்கும் ஓபன் ஏஐயின் இயக்குநர்கள் குழுவுக்கும் மோதல் தொடங்கியது. மஸ்க் ஓபன் ஏஐயை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் இறங்கினார். ஓபன் ஏஐ கேட்கும் மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டு அந்நிறுவனத்தை நானே வாங்கிக்கொள்கிறேன் எனச் சொன்னார். ஆனால் மற்ற இணை நிறுவனர்கள் மஸ்க்கின் விருப்பத்தை நிராகரித்தனர். உங்களுக்கு இருக்கும் அளவுக்கு எங்களுக்கும் இந்த நிறுவனத்தில் சமபங்கு இருக்கிறது மஸ்க். நீங்கள் மட்டுமே முடிவெடுப்பவர் அல்ல. இந்த நிறுவனத்தின் எதிர்கால நலன் கருதி மைக்ரோசாஃப்ட் உடன்தான் கைகோர்ப்போம் என்றனர். உடனேயே மஸ்க் இயக்குநர்கள் குழுவில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மஸ்க் விலகியவுடனேயே மைக்ரோசாஃப்ட் முழு மூச்சாக இறங்கியது ஓபன் ஏஐயுடன் பல ஆண்டுகள் இணைந்து செயல்படுவதற்கு ஒப்பந்தம் போட்டது. ஒரு பில்லியன் டாலர் பணத்தை உடனே அதன் கைகளில் கொடுத்து ஜிபிடியின் வேலையையும் முடுக்கிவிட்டது. இப்படியாகக் கூகுளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அந்த நிறுவனம் மைக்ரோசாப்ஃடின் கைகளுக்குள் சென்றது. இதன்பின் அந்த நிறுவனம் தனது ‘வெளிப்படைத்தன்மையான’ கொள்கையையும் முழுதாக மாற்றிக்கொண்டது.

‘எங்களால் ஏஐ உருவாக்கம் பற்றிய எல்லாத் தகவல்களையும் வெளியே சொல்ல முடியாது. பொதுமக்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் கூறுகளைத் தெரிந்துகொள்வதற்கு அனுமதி இருந்தால், அது தவறான முடிவாக அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் கணினிகளில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்து அதனைச் சேதப்படுத்துவதற்கு வேண்டிய கோடிங் உதவியை ஜிபிடியிடம் இருந்தே பெறுவதற்கு வாய்ப்புள்ளது’ எனச் சொல்லிவிட்டது.

இவ்வாறு ஓபன் ஏஐ மஸ்க்கிடம் இருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொண்டது.

ஓபன் ஏஐயில் இருந்து வெளியேறிய மஸ்க் உண்மையில் என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. தான் டெஸ்லாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைக்கப்போவதால் அந்நிறுவனத்தில் இருந்து விலகுவதாகச் சொல்லிக்கொண்டார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ஜிபிடி தொழில்நுட்பம் குறித்த தனது ஐயங்களை முன்வைக்கத் தொடங்கினார்.

‘ஜிபிடியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியக்கிறீர்கள். அதனால் மனிதக் குலத்துக்கு அச்சுறுத்தல் வந்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? நாம் அறிந்தவரை பிரபஞ்சத்திலேயே புத்திசாலி உயிரினம் என்றால் மனிதர்கள்தான். நம்மை விட வலிமையான உயிரினங்கள் உள்ளன. வேகமான உயிரினங்கள் உள்ளன. ஆனால் புத்திசாலி உயிரினம் இல்லை. இன்று அந்த இடத்துக்கு ஜிபிடி வந்திருக்கிறது.

பேனா முனை கத்தி முனையைவிட வலிமையானது என்று படித்திருக்கிறோம். ஜிபிடி அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ஜிபிடியால் நம்மைவிடச் சிறப்பாக எழுத முடிகிறது. ஒரு கருத்தை உருவாக்க முடிகிறது. அப்படியென்றால் அது ஏற்படுத்தப்போகும் ஆபத்தையும் யோசித்துப்பாருங்கள். ஜிபிடியால் எழுத்தின் மூலம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். உங்கள் மொழியைப் பயன்படுத்தியே உங்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்கிவிடும்.

மனிதர்கள் எதை நம்புகிறார்கள் என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பேசி மயக்கும். அது சமூக வலைத்தளங்களில் நுழைந்தால் உண்மைகளைத் திரித்து, பொது மக்களின் கருத்தைத் தனக்குச் சாதகமாக உருவாக்க முடியும். நாம் அந்த இயந்திரத்தை மனிதர்களுக்குச் சமமாக நடத்தக்கூடாது. அதன் மீது ஈவு இரக்கமே பார்க்கக்கூடாது’ என்றார்.

அவர் ஜிபிடியுடன் யுத்தம் செய்துகொண்டிருந்த சமயத்தில்தான் நவம்பர் 2022 அன்று சேட்ஜிபிடி 3.5 வெளியாகி இணையவாசிகளின் பெரும் கவனத்தைப் பெற்றது. ஒரு வாரத்தில் 10 லட்சம் பேர் அதன் பயனாளர்களாக மாறினர். உலகம் முழுவதும் ஜிபிடியைக் கொண்டாடியது. அறிவுலகம் அதன் அறிவை எண்ணி வியந்தது. ஜிபிடி பொதுமக்களிடம் இருந்தே கருத்துகளைப் பெற்றுக்கொண்டு வேகமாக அவர்களைச் சுவீகரித்து வந்தது.

அதன் ஆதிக்கம் அசுர வேகத்தில் வளர்வதைக் கண்ட மஸ்க், அதன் வளர்ச்சியைத் தடுக்க முட்டுக்கட்டை ஒன்றைப் போட்டார். இனி ஒபன் ஏஐ ட்விட்டர் தளத்திலிருந்து தரவுகளைச் சேகரிப்பதற்குத் தடை விதிப்பதாக அறிவித்தார். தற்காலிகமாக உங்கள் அனுமதியை ரத்து செய்கிறேன். நீங்கள் இயங்கும் விதம் குறித்தும், உங்களுடைய எதிர்காலப் பொருளாதாரத் திட்டம் என்ன என்பதையும் விளக்கிச் சொன்னால்தான் அனுமதி தருவேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஓபன் ஏஐ மஸ்க்கின் முட்டுக்கட்டைகளுக்கு அஞ்சவில்லை. ட்விட்டர் இல்லாவிட்டால் என்ன, வேறு சமூக வலைத்தளங்களே இல்லையா என்ன? அவர்களிடம் இருந்து நாங்கள் தரவுகளை எடுத்துக்கொள்வோம் என்று சொல்லிவிட்டது.

மஸ்க் வெறுத்துப்போனார். என்ன செய்தாலும் பலனிருக்காது போலிருக்கிறது. இதை எதிர்க்க வேண்டும் என்றால் அதை விட வலிமையான ஒரு செயற்கை நுண்ணறிவு வேண்டும். அதை நான் உருவாக்கப்போகிறேன் என்று அறிவித்தார்.

ஏப்ரல் மாதம் சில நிபுணர்களை அழைத்துப் பேசிய அவர் ஆறு மாதத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்றார். அதற்காக எத்தனைக் கோடிகளை வேண்டுமானாலும் செலவழிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

‘ஒருபக்கம் மைக்ரோசாஃப்ட், மறுபக்கம் கூகுள் என இரு ஜாம்பவான்கள் செயற்கை நுண்ணறிவு என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு நிற்கின்றனர். இந்தப் போட்டியில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள்தான் மனித எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தப்போகிறார்கள். ஆனால் அவர்களால் மக்களுக்கு நன்மை விளையுமா என்பது தெரியாது. அதனால் உலகத்துக்கு மூன்றாவதாக ஒரு செயற்கை நுண்ணறிவுத் தேவையாக இருக்கிறது. அது நேர்மையானதாக இருக்க வேண்டும். அவர்கள் பக்கம் நின்று சண்டையிட வேண்டும். தீய எண்ணம் படைத்த செயற்கை நுண்ணறிவுகளால் வர இருக்கும் பேரழிவைத் தடுப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்றை நான் உருவாக்கப்போகிறேன்’ என்றார்.

ஜூலை 12ஆம் தேதி அந்த அறிவிப்பு வெளியானது. மஸ்க் ‘எக்ஸ் ஏஐ’ என்கிற புதிய செயற்கை நுண்ணறிவை உருவாக்கி வருவதாக அறிவித்தார். அந்த நுண்ணறிவு இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான இயல்பையும், அதன் ஒரு பாகமாக இருக்கும் மனிதர்களையும் அறிந்துகொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்படுகிறது என்றார். உண்மையில் ஞானம் உடைய யாராலும் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது. நான் உருவாக்கப்போகும் செயற்கை நுண்ணறிவும் அதைச் செய்யாது என்றார்.

இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள செயற்கை நுண்ணறிவு நிபுணர்களை அவர் மீண்டும் தன் பக்கம் இழுக்கத் தொடங்கினார். ஓபன் ஏஐ, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர்களைக் கூட அந்த அணியில் திரட்டி இருக்கிறார். ட்விட்டர் தரவுகளின் மூலம் அந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவித்து வெகு விரைவில் மனிதப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

ஏப்ரல் மாதம் எக்ஸ்.ஏஐயை தொடங்கப்போவதாக மஸ்க் அறிவித்த உடனேயே அடுத்த 10 பில்லியன் டாலர்களை ஓபன் ஏஐயில் முதலீடு செய்வதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்தது. இவ்வாறு முதன் முதலில் கூகுளுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட ஒரு யுத்தம், இன்று கூகுள், ஓபன் ஏஐ, எக்ஸ் ஏஐ என்று மூன்று பிரிவுகளின் யுத்தமாகப் பரிணாமம் பெற்றுள்ளது.

உண்மையில் மஸ்க் ஏன் இத்தனை விடாப்பிடியாகச் செயற்கை நுண்ணறிவை எதிர்க்கிறார்? யாருக்கும் இல்லாத அக்கறை அவருக்கு மட்டும் ஏன்? உண்மையில் செயற்கை நுண்ணறிவு மஸ்க் கவலைப்படும் அளவுக்கு அத்தனை ஆபத்தானதா?

மேலே சொன்னது எல்லாம் ஏதோ அறிவியல் புனைவு திரைப்படங்களில் வருவதுபோல உங்களுக்குத் தோன்றலாம். ஓர் இயந்திரம் உருவாகிறதாம். அது உலகை அழிக்கப்போகிறதாம். அதை ஒருவர் தடுக்கப் போராடுகிறாராம். இதற்காக ஆயிரம் கோடிகளில் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறதாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் செயற்கை நுண்ணறிவை நாம் கவனத்துடன் அணுக வேண்டிய நிலை இன்று உண்மையிலேயே யதார்த்தத்துக்கு வந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு கடந்த சில ஆண்டுகளில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை. இன்று நாம் சேட் ஜிபிடி, கூகுள் பார்ட், மிட்ஜர்னி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். நமக்கு வேண்டிய தகவல்களைச் சில நொடிகளில் அந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கொண்டு வந்து தருகின்றன. நீங்கள் கேட்கும் ஓவியங்களை வரைகின்றன. கதை எழுது என்றால் எழுதித் தருகின்றன. கவிதை எழுது என்றால் வர்ணிக்கின்றன. நாமும் நமக்கு வேலை ஆகிறதே என்று அவற்றுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்ன இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களைப் போலச் சிந்திக்கும் இயந்திரம் இல்லையா? ஒருவேளை அது மனிதர்களுக்கு எதிராகச் சிந்திக்கத் தொடங்கினால்? இதுதான் மஸ்க்கைக் கவலைக்கு உள்ளாக்கிய விஷயம். அதைத்தான் அவர் ஒவ்வொரு முறையும் சொல்கிறார்.

2018ஆம் ஆண்டு ட்விட்டரில் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பகிர்ந்த மஸ்க், ‘நாம் வேகவேகமாக டிஜிட்டல் அதி நுண்ணறிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். அது மனிதர்களைத் தாண்டிச் சிந்திக்கும் ஆற்றலையுடையது. அதனால் ஆபத்து வராதா? செயற்கை நுண்ணறிவுகள் மனிதக் குலத்தை அழிக்கும் அளவுக்குத் தீய குணத்துடன் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால், செயற்கை நுண்ணறிவுகளுக்கு என்று ஒரு லட்சியம் உருவாகி, அந்த லட்சியத்துக்கு மனிதர்கள் குறுக்கே நின்றால் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் மனிதர்களை அது அழித்து விடும். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் ஒரு சாலை அமைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். வழியில் எறும்புப் புற்று ஒன்று இருக்கிறது. நமக்கு எறும்புகளைப் பிடிக்காது என்பது இல்லை. ஆனால் சாலையை உருவாக்கும்போது அந்த எறும்புகளைப் பற்றிக் கவலைப்படுவோமா? அதேதான் நாளை நமக்கும் நடக்கும்.’

எலான் மஸ்க் மட்டுமே இதுகுறித்த கவலையை வெளிப்படுத்தவில்லை. உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் மிக எளிதான மொழியில் 2014ஆம் ஆண்டே ஓர் ஆவணப்படத்தில் இதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். ‘முழுமையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நாம் உருவாக்குவது மனித இனத்தின் இறுதி முடிவை எழுத நேரிடலாம்’ என்று எச்சரித்திருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவுகள் விரைவிலேயே மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யும் திறனைப் பெறும் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே உங்கள் போனில் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் பாடல்களை ஒலிக்கின்றன. உங்களுக்கு வழிகாட்டுகின்றன. உங்களுக்கு வேண்டிய திட்டங்களைத் தயாரித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவுகளால் இதையும் தாண்டிய பல பலன்கள் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவால் ஒரு மனிதனின் உடல் குறித்த மருத்துவத் தரவுகளைச் சில நொடிகளில் ஆராய்ந்து, அந்த நபருக்கு என்ன நோய் என்று கண்டறிந்து, அதைக் குணப்படுத்தும் வழிகளைச் சொல்ல முடியும். செயற்கை நுண்ணறிவால் அறிவியல் தரவுகளை ஆராய்ந்து எதிர்காலத்துக்கு வேண்டிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும்.

ஆனால் அவற்றால் ஆபத்தும் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவால் அசலுக்கு நிகரான போலி பிம்பத்தை உருவாக்க முடியும். மனிதர்கள் செய்வதை விடத் திறம்பட ஒரு படைப்பை நிகழ்த்த முடியும். உதாரணமாக ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்தே அந்தப் பெண்ணின் உருவத்தில் ஆபாச வீடியோக்களை இணையத்தில் உலாவ விட முடியும். அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்க முடியும். இதைத்தவிர மனிதர்களை எந்நேரமும் கண்காணிப்பது, அவர்களின் செயல்களைக் கணிப்பது, அதைக் கட்டுப்படுத்துவது என அவர்களின் தலைவிதியையே மாற்றக்கூடிய வலிமையைச் செயற்கை நுண்ணறிவுகள் பெற்றுள்ளன. இதனால் அந்தச் செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துபவர் தவறானவராக இருந்தாலோ, அல்லது அந்தச் செயற்கை நுண்ணறிவே தன்னிச்சையாகச் செயல்பட்டாலோ அதனால் வரும் விளைவுகளை யோசித்துப்பாருங்கள்.

அதைத்தான் மஸ்க் முன்னரே கணித்து இருந்தார். செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தில் அறம் சார்ந்த கேள்விகள் எழுவதாகச் சுட்டிக்காட்டினார். அதற்காக அந்தத் தொழில்நுட்பத்தைத் தவிர்க்கவே முடியாது என்பதையும் அவர் புரிந்துவைத்திருந்தார். நாம் வேகமாகப் பயணிப்பதற்காக முதன் முதலில் ஒரு பைக்கைக் கண்டுபிடிக்கிறோம். அதில் பயணிக்கும்போது கீழே விழுந்து அடிபட்டு உயிர்போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரியும். அதற்காக பைக்கே வேண்டாம் என்று ஒதுக்கி விடுவோமா? பைக்கில் பாதுகாப்பாகச் செல்வதற்காக ஹெல்மெட்டும், சில சாலைக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களாக வகுக்கிறோம் இல்லையா? அதுபோல செயற்கை நுண்ணறிவுக்கும் உலகளாவிய பாதுகாப்புச் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் மஸ்க்கின் விருப்பம்.

இந்த விருப்பத்தை ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோதே அவரிடமே நேரில் தெரிவித்தார் மஸ்க். அதன்பின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஆளுநர்களைச் சந்தித்துப் பேசினார். அரசாங்கத்தின் மூலம் முன்னெடுப்புகளைத் தொடங்கும் அதே நேரம், தாமும் தம் பலத்தை, அதிகாரத்தை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் தொடங்கியதுதான் ஓபன்ஏஐ. அந்நிறுவனத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவுகளை ஆபத்து இல்லாமல் எப்படி மனிதக் குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்று முயற்சி செய்தார். அந்த நிறுவனம் இன்று மஸ்க்கின் கையைவிட்டுப் போய்விட்டாலும் அதன் அனுபவத்தில் இருந்து அவர் முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டார்.

அது, செயற்கை நுண்ணறிவுகளை நாம் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கு ஒரே வழி அதனை நம்முடன் ஒன்றாக இணைப்பதுதான். அதாவது மனிதர்களையும் செயற்கை நுண்ணறிவையும் நேரெதிராக நிறுத்தாமல் ஒரே பாகமாக இணைப்பது. இதைச் சாத்தியப்படுத்துவதற்காக அவர் தொடங்கிய நிறுவனம்தான் நியூராலிங்க்.

இயற்கை பாதி, இயந்திரம் பாதி கலந்து செய்யப்பட்ட மனிதன்

நாம் ரோபோட் மனிதர்களைத் திரையில் பார்த்திருப்போம். ரோபோட் மனிதர்கள் என்றால் முழுக்க முழுக்க மனிதர்களைப் போலச் சிந்திக்கும் இயந்திரங்களைச் சொல்லவில்லை. அது செயற்கை நுண்ணறிவுகள். நான் சொல்வது மனிதனின் மூளையும் ரோபோட்டின் உடலும் கொண்ட மனிதர்கள். மனிதர்களுக்கு கையோ, காலோ அடிபட்டுச் செயலிழந்துவிட்டது என்றால் நாம் பிளாஸ்டிக் கால்களை வைத்துக்கொள்கிறோம் அல்லவா? ஆனால் அந்தப் பிளாஸ்டிக் கால்களை உங்களால் இயக்க முடியாது. வெறும் ஆதரவுக்கு அது உங்களைத் தாங்கி நிற்கும் அவ்வளவுதான். அதற்குப் பதில் ஓர் இயந்திரக் காலை வைத்து. அந்த இயந்திரக் காலை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால்? நீங்கள் மனிதனும் ரோபோட்டும் கலந்த உயிராவீர்கள் இல்லையா? அதைத்தான் மஸ்க் செய்ய நினைத்தார்.

செயற்கை நுண்ணறிவுகள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்க அவற்றையும் மனிதர்களையும் ஒரே கூட்டணியில் வைப்பதற்கு மஸ்க் முடிவு செய்தார். மனிதர்களுடைய ஆயுதமே அவர்களுடைய மூளைதான். இயற்கையால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த கருவி அது. அந்தக் கருவிக்கு இணையாகச் சிந்திக்கக்கூடிய மற்றொரு கருவி மனிதர்கள் உருவாக்கிய கணினி. இந்த மனித மூளையையும், கணினியையும் இணைத்தால் அதன் சக்தி எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்? அதை வைத்து நாம் என்னென்ன அற்புதங்களை எல்லாம் செய்ய முடியும்? அதற்காக அவர் நியூராலிங் நிறுவனத்தைத் தொடங்கினார்.

நியூராலிங்க் என்பது மனித மூளையைக் கணினி சிப் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம். அந்தக் கருவியை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் உங்கள் மனித மூளையில் செலுத்திவிட்டால்போதும், உங்கள் மூளையும் கணினியும் இணைந்து அதிசக்தி வாய்ந்த கருவியாகி விடும். பொதுவாகவே நம் மூளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகிறது. அவற்றால் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் சிந்திக்க முடியாது. செய்ய முடியாது. சாதாரணமாக உங்களால் பேசிக்கொண்டே ஒரு புத்தகத்தைப் படிக்க முடியுமா? அல்லது ஒரே சமயத்தில் இரு பாடங்களைப் பயில முடியுமா? முடியாது அல்லவா? அதற்கான திறன் மூளைக்கு இருந்தாலும் அதனை வெளிப்படுத்தும் ஆற்றலை மனிதர்கள் எட்டவில்லை. அதனை நான் ஒரு கருவியின் மூலம் செய்ய விரும்புகிறேன் என்றார் மஸ்க்.

இந்தக் கருவி ஒரு ப்ளூடூத் சிப் போன்றது. இதை உங்கள் மூளையின் நரம்பணுக்களின் நிறுவிவிட்டால் அவற்றுடன் உங்கள் கணினி, ஸ்மார்ட்போன் எந்தக் கருவிகளை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். அந்தச் சாதனங்களை உங்கள் எண்ணங்களின் மூலமே கட்டுப்படுத்தலாம். நீங்கள் போன் செய்ய வேண்டும் என்று நினைத்தால் போன் செய்யப்படும். நீங்கள் பாடல் கேட்க வேண்டும் என்று நினைத்தால் பாடல்கள் ஒலிக்கும்.

இந்தக் கருவியின் மூலம் உங்கள் மூளையில் ஏராளமான தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். நினைவுபடுத்த முடியும். அதி வேகமாகச் சிந்தித்துத் துல்லியமான தவறில்லாத முடிவுகளை எடுக்க முடியும். அதேபோல உங்கள் மூளையில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் தரவுகளாகக் கணினியில் வந்துவிடும். அதாவது நீங்கள் காணும் கனவுகளைக் கூடச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தலாம். ஆச்சரியமாக இருக்கிறதா?

இதற்கான சோதனைகளைக் குரங்குகளை வைத்தும், பன்றிகளை வைத்தும் கடந்த 2020 ஆண்டு முதல் நியூராலிங்க் செய்து வருகிறது. இது தொடர்பான காணொளியையும் சமீபத்திய நிகழ்வில் வெளியிட்டது. அதில் குரங்குகள் தாங்கள் மனதுக்குள் நினைக்கும் எழுத்துக்களை கைகளின் உதவி இல்லாமல் நியூராலிங்க் கருவியின் மூலம் திரையில் டைப் செய்கின்றன. (அந்த எழுத்துக்கள் ஏற்கெனவே குரங்குகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.) மேலும், இந்தக் கருவியை ஒயர்லெஸ் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றுவதற்கும் குரங்குகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருவியால் மருத்துவத்துறையில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என மஸ்க் கூறுகிறார். நியூராலிங் கருவியின் மூலம் மூளையையும், தண்டுவடத்தையும் இணைத்தால், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை எழுந்து நடக்க வைக்க முடியும். அந்தக் கருவியின் மூலம் கேமராவையும், உங்களுக்குப் பார்வையை வழங்கும் மூளையின் பகுதிகளையும் இணைத்தால், பிறவியிலேயே பார்வையற்றவர்கள்கூட கேமராவைக் கண்ணாகக் கொண்டு பிம்பங்களைப் பார்க்க முடியும் என்கிறார். அதாவது இந்தக் கருவி பயன்பாட்டுக்கு வந்தால் மனித மூளையின் எண்ணற்ற சாத்தியங்களுக்குத் திறவுகோலாக அமையும் எனச் சத்தியம் செய்கிறார் மஸ்க். விரைவில் டெஸ்லா கார்களுடன் இந்தக் கருவியை இணைக்கும் முயற்சியையும் நியூராலிங்க் மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கருவியை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி கேட்டு நியூராலிங் போராடிக் கொண்டிருந்தது. கடந்த மே மாதம்தான் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஒருசில ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டில் கொண்டு வருவதற்கு மஸ்க் திட்டமிட்டுள்ளார். இதனால் விளையும் பலன்கள் ஏராளம் என்றாலும் மருத்துவ உலகத்திலிருந்தும், சமூக ஆர்வலர்களிடமும் எதிர்ப்பு ஒரு பக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கு எல்லாம் அடங்குகிற ஆளா மஸ்க்?

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *