2017ஆம் ஆண்டுதான் இந்தச் சரிதம் தொடங்கியது. யாரோ ஒரு பயனர் ட்விட்டரை மஸ்க் வாங்கப்போகிறார் என்று கிளப்பிவிட… மன்னிக்கவும். இப்போது அந்த நிறுவனத்தின் பெயர் ட்விட்டர் இல்ல. எக்ஸ். இணைய முகவரி மட்டுமே ட்விட்டரின் பெயரில் இருக்கிறது. அதேபோல அதன் அழகான நீலக்குருவி இலச்சினையும் மாற்றப்பட்டுவிட்டது. இனி நீங்கள் அந்த இணையதளத்தைப் பற்றி நினைக்கும்போது கருநிற எக்ஸ் வடிவம்தான் உங்கள் மனதில் தோன்ற வேண்டும். இருந்தாலும் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ட்விட்டர் என்றே இந்தப் பகுதியில் எழுதுகிறேன்.
யாரோ ஒரு பயனர் ட்விட்டரை மஸ்க் வாங்கப்போகிறார் என்று கிளப்பிவிட, அதில் சென்று பதிலளித்த மஸ்க், ‘ட்விட்டரின் விலை எவ்வளவு?’ எனக் கிண்டலாகப் பதிவிட்டார். இதிலிருந்துதான் ட்விட்டருக்கும் அவருக்குமான உறவு தொடங்கியது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் ட்விட்டர் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் மஸ்க்கால் முன்வைக்கப்பட்டன. ட்விட்டர் பேச்சுச் சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறதா? ஜனநாயகத்தை ஆதரிக்கிறதா? இப்படிப் பல கேள்விகளை அவர் எழுப்பினார். அதற்கான கருத்துக் கணிப்புகளையும் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து ட்விட்டரைத் தொடங்கிய ஜாக் டோர்சியியையும் சந்தித்து அதன் எதிர்காலம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அவர் ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் இணையப்போவதாக ஒருபக்கமும், ட்விட்டருக்குப் போட்டியாகச் சமூக வலைத்தளம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக மறுபக்கமும் பேச்சு அடிப்பட்டது.
இதன்பிறகு ஏப்ரல் 2022இல்தான் அவர் ட்விட்டரை வாங்குவதற்கான அதிகாரப்பூர்வப் பேச்சு வார்த்தை ஆரம்பமானது. பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்தது. பல நிபந்தனைகளை அவர் விதித்தார். பல கேள்விகளை எழுப்பினார். அவர் வாங்குவாரா, மாட்டாரா என இணைய உலகமே தவியாய் தவித்துக்கொண்டிருந்தது. இறுதியாக அக்டோபர் 22, 2022 அன்று ட்விட்டர் மஸ்க்கின் கைகளுக்குள் வந்தது. 44 பில்லியன் டாலர்களுக்கு அந்த ஒப்பந்தம் நிறைவேறியது. ட்விட்டருக்கு 44 பில்லியன் டாலர்களா? இந்தத் தொகை ரொம்ப அதிகம் இல்லையா? எனப் பல தொழில் வல்லுநர்கள் கேள்வி எழுப்பினர்.
ட்விட்டரை வாங்கியவுடனேயே மஸ்க் பல அதிரடிகளைச் செய்தார். அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளைப் பணியிலிருந்து நீக்கினார். இனி ட்விட்டரில் போலிக் கணக்குகளுக்கு எதிராகச் செயல்படுவேன். மக்களின் பேச்சுச் சுதந்திரத்தைக் காப்பேன். மக்கள் தங்கள் கருத்துக்களை உரையாடி உயர்ந்த நாகரிகத்தைக் கட்டமைக்கும் தளமாக அதை மாற்றுவேன் என்றெல்லாம் சொன்னார்.
மஸ்க் ட்விட்டரை வாங்கியது சர்வாதிகாரத்தை விதைக்கும் என்று சிலர் அலறினர். மஸ்க்கின் கட்டுப்பாட்டில் ட்விட்டர் மேலும் வளர்ச்சியை எட்டும் என்று ஆதரவுக் குரல்களும் கேட்டன. மஸ்க் வாங்கிய புதிதில் ட்விட்டரின் பங்குகள் சரசரவெனச் சரிவைச் சந்தித்தன. இனி அவ்வளவுதான் அத்தனைத்தொகையும் வீண் என விமர்சகர்கள் எள்ளி நகையாடினர். பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கியது. ட்விட்டரின் பங்கு விலைகள் மீண்டும் உயரத் தொடங்கின. மஸ்க்கை விமர்சித்தவர்கள் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். அதன்பிறகுதான் அவர் ட்விட்டரை வாங்கிய நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் தொடங்கியது.
எலான் மஸ்க் ஜிப்2 நாட்களுக்குப் பிறகு எக்ஸ் டாட்காம் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார் இல்லையா? அந்த நிறுவனம்தான் பின்னாளில் பேபாலாக மாறியது என்பதை நாம் பார்த்தோம். வங்கியின் அனைத்துச் சேவைகளையும் இணையத்தின் மூலம் முன்னெடுக்கும் நோக்கத்திலேயே எக்ஸ்டாட்காமை அவர் தொடங்கினார். பிறகு பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக அந்நிறுவனம் அவரது கையைவிட்டுப்போனது. அதன்பின் எக்ஸ் டாட்காம் என்ன ஆனது?
அந்த இணைய முகவரி பல ஆண்டுகளாக பேபாலுக்குச் சொந்தமாகவே இருந்தது. பின் திடீரென்று 2017இல் மஸ்க் ட்விட்டர் பதிவு ஒன்றை எழுதினார். அதில், ‘எக்ஸ் டாட்காம் முகவரியை மீண்டும் என்னிடமே வழங்கியதற்கு பேபாலுக்கு நன்றி. எனக்கு எக்ஸ் டாட்காம் குறித்து எந்தத் திட்டமும் இல்லை. அந்த முகவரி மனதுக்கு நெருக்கமானது என்பதால் சொல்கிறேன்’ என்று மட்டும் சொன்னார்.
இதற்கு அடுத்த அறிவிப்பு அவர் ட்விட்டரை வாங்கியவுடன்தான் வெளியானது. அதில், ட்விட்டரில் புதிதாக எக்ஸ் என்கிற ஒரு சேவையைத் தொடங்கவுள்ளதாகவும், 2028ஆம் ஆண்டில் அதன் பயனர்கள் எண்ணிக்கை 104 பத்து லட்சத்தைத் தொடும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதேபோல மஸ்க்குக்கு நிதியளித்த முதலீட்டாளர்களும் ட்விட்டரை வாங்குவதற்குப் பின்னாலான காரணங்களில் ஒன்றாக எக்ஸ் என்ற ஒரு சேவையும் இருப்பதாகப் பேட்டியளித்தனர்.
இதன்பிறகு எக்ஸ் சேவையை உருவாக்குவதற்காக எலான் மஸ்க் குழு ஒன்றையும் அமைத்தார். அந்தக் குழுவில் ட்விட்டரின் நிறுவனர் ஜாக் டோர்ஸி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் பினான்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் சாங்க்பெங் ஜஹாவ், பே பாலில் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றிய டேவிட் சேக்ஸ், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் (இவரும் முதலீட்டாளர்தான்) ஆகியோரும் உள்ளனர்.
அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் ஓர் ஒற்றுமையும் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் கிரிஃப்டோ கரன்சியில் ஆர்வம் காட்டுபவர்கள். ஜாக் டோர்ஸி, தான் கிரிப்டோ கரன்ஸிக்காக ட்விட்டரை விட்டுக் கூட விலகுவேன் என்று ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தார். அவர் ப்ளாக் (Block) எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதேபோல சாங்க்பெங் நடத்தி வரும் பினான்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் கிரிப்டோ கரன்ஸி பரிவர்த்தனையை மேற்கொண்டு வரும் நிறுவனம். சரி, இதை ஏன் நாம் இப்போது பார்க்க வேண்டும்? இதற்கும் ட்விட்டரின் எக்ஸ் சேவைக்கும் என்ன சம்பந்தம்?
ட்விட்டருக்குப் போய் மஸ்க் 44 பில்லியன் டாலர்களைச் செலவழித்து இருக்கிறார் எனக் கேள்வி எழுந்தது இல்லையா? இதற்குக் காரணம் தான் இழந்த எக்ஸ் டாட்காமை மீண்டும் உயிர் பெற வைப்பதற்குத்தான் அவர் அந்நிறுவனத்தை வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. கூகுள், அமேசானைப்போன்று பரிவர்த்தனை சேவையைத் தொடங்குவதற்காகத்தான் அவர் மேற்சொன்ன நபர்களைக் கொண்டு ஒரு குழுவையும் கட்டமைத்துள்ளார் என்று நம்பப்படுகிறது. புதிதாக ஒரு பணப் பரிவர்த்தனைச் சேவையைத் தொடங்கி அதில் பல லட்சம் பயனர்களை உடனே இணைக்க முடியுமா? அதற்காகத்தான் ட்விட்டர் என்கிற குறுக்கு வழியை அவர் உருவாக்கி இருக்கிறார்.
இந்த யூகங்கள் எழத்தொடங்கியபோதுதான் ட்விட்டரின் பெயரை எக்ஸ் என்றே அதிகாரப்பூர்வமாக மஸ்க் மாற்றியுள்ளார். இப்போது அவர் எக்ஸை வைத்து என்னென்ன திட்டமிட்டிருக்கிறார் என்ற செய்திகளும் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. 2023இன் தொடக்கத்திலேயே எக்ஸ் கார்ப் என்ற தாய் நிறுவனத்தைத் தொடங்கி அதில் ட்விட்டரையும், எக்ஸ்.ஏஐ நிறுவனத்தையும் மஸ்க்இணைத்தார்.
இனி, எக்ஸ் என்று புதுப் பெயர் சூடியுள்ள ட்விட்டர் தளம், சமூக வலைத்தளம், இணைய வங்கி ஆகிய இரண்டு சேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல அமேசான் நிறுவனத்தைப்போல எக்ஸை உலகின் மிகப்பெரிய வணிக தளமாக மாற்றும் திட்டமும் மஸ்க்கிடம் இருப்பதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. இத்தோடு எக்ஸ்.ஏஐயையும் சேர்த்துத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வணிகத் தளம், பணப்பரிவர்த்தனை, சமூக வலைத்தளம். இவைதான் மக்களின் மனப்போக்கைத் துல்லியமாக அறிய உதவும் காரணிகள். இதிலிருந்து கிடைக்கப்படும் தரவுகளை வைத்துத்தான் அவர் எக்ஸ்.ஏஐ எனப்படும் தனது செயற்கை நுண்ணறிவைப் பயின்றுவிக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் அதன் அறிவாற்றல் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்தும் சிதறிக் கிடைக்கும் நீர்த்துளிகளாகத்தான் நமக்குக் கிடைக்கின்றன. உண்மையில் என்ன நடக்கிறது என்பது போகப்போகத்தான் தெரியும். மஸ்க் திட்டமிட்டது மட்டும் நடந்தால் நிச்சயம் இது இணைய உலகின் பெரும் புரட்சியாக அது பார்க்கப்படும்.
(தொடரும்)