எலான் மஸ்க் இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. இணையத்தின் வீச்சால் இன்று பட்டிதொட்டியெங்கும் அவரது புகழ் பரவி இருக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களைத் தெரியாதவர்களுக்குக்கூட எலான் மஸ்க்கைத் தெரியும். உலகப் பணக்காரர்களில் ஒருவர் என்று அவரைத் தெரியும். எப்போதும் விவாதங்களை, சர்ச்சைகளை உருவாக்குபவர் என்று தெரியும். தமிழகத்தில்கூட அன்றாடச் செய்திகளில் ஒருமுறையேனும் அவருடைய பெயர் அடிபடாத நாட்களே இல்லை என்று நாம் அடித்துச் சொல்லிவிடலாம். எதிர்மறை கருத்துக்களின் வழியாகத்தான் மஸ்க்கை உலகம் அறிந்துள்ளது. ஆனால் மஸ்க் என்கிற பிம்பத்துக்குப் பின் இருக்கும் ஆளுமை நாம் வியந்து போற்றக்கூடியது.
மஸ்க் உருவாக்கிய நிறுவனங்கள் அனைத்தும் முக்கியமானவை. வெறும் லாபம் என்ற ஒற்றை நோக்கத்திற்காக மட்டும் அவை உருவாக்கப்படவில்லை. உலகைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டவை. மாற்றி அமைப்பதற்காக உருவாக்கப்பட்டவை. கடந்த காலத்தில் அவர் வழிநடத்திய ஜிப்2, பேபால், ஓபன் ஏஐ நிறுவனங்கள்தான் இன்றைய உலகை வடிவமைத்து இருக்கிறது. இன்று அவர் நடத்தி வரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, போரிங், நியூராலிங் நிறுவனங்கள்தான் எதிர்கால உலகை வடிவமைக்கப்போகிறது. சந்தேகமே இல்லாமல் எதிர்காலத்தை வடிவமைக்கும் கலைஞன் அவர்.
இத்தனை பெரிய ஆளுமையான மஸ்க் பெரும்பாலானோரால் விமர்சனத்துக்கு உள்ளாவது ஏன்? விமர்சகர்களால், போட்டியாளர்களால் தூற்றப்படுவது ஏன்?
உலகின் பெரும் சாதனையாளர்கள் ஏதேனும் ஒரு துறையில்தான் முழுமூச்சாக ஈடுபடுவார்கள். அந்தத் துறையிலேயே உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலுத்தி வெற்றி காண்பார்கள். ஆனால் மஸ்க்கோ கொஞ்சம் வித்தியாசமானவர். தான் நினைத்த துறைகளில் எல்லாம் அவர் களமிறங்கி இருக்கிறார். அடித்து ஆடி இருக்கிறார் வெற்றி கண்டிருக்கிறார். ஆனால் அவரது அணுகுமுறைகள் எதற்கும் கட்டுப்படாதவையாக இருந்திருக்கிறது. இதுவே எப்போதும் விவாதங்களை உண்டாக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறது.
மஸ்க்குக்குள் ஒரு கலகக்காரன் இருக்கிறான். இந்தக் கலகக்காரன் மரபுகளுக்கு எதிரானவன். மரபார்ந்த ஞானத்துக்கு எதிரானவன். எது சாத்தியம், எது சாத்தியமில்லாதது என உலகம் வரையறுத்து வைத்திருக்கூடிய அனைத்துக்கும் எதிரானவன். இந்தக் கலகக்காரனின் குணாம்சம்தான் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அவருக்கு விமர்சனங்களைப் பெற்றுத் தருகிறது. அதேசமயம் யாராலும் எட்ட முடியாத ஒன்றை அடைவதற்கான ஆற்றலையும் அவருக்குக் கொடுத்திருக்கிறது.
மஸ்க் யாரையும் பின் தொடர்ந்து செல்பவர் இல்லை. அவர் பாதைகளை உருவாக்குபவர். பாதைகளை உருவாக்குபவர்கள் எல்லைகளைத் தாண்டத்தான் வேண்டும். சட்டத்திட்டங்களை மீறத்தான் வேண்டும். அவருடைய இந்தப் போர்க்குணம்தான் மற்றவர்களுக்குக் கொடுங்கனவாக இருந்திருக்கிறது. கோடிகளில் பணம் புரளும் வணிக உலகில் ஒரு தனிமனிதரின் இத்தகைய பாய்ச்சல்கள் அவரை நம்பிப் பணத்தை முதலீடு செய்பவர்களின் நிலைத்தன்மையைக் குலைத்துவிடும். சந்தேகங்களை ஏற்படுத்தும். அதுதான் அவருக்குத் தொடர்ந்து தன் தரப்பில் இருந்தே முட்டல்களையும் மோதல்களையும் முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்தி வந்திருக்கிறது. இத்தனை சவால்கள் இருந்தாலும் எல்லைகளைக் கடப்பதுதான் புதிய சாத்தியங்களுக்கு வழி வகுக்கும். யாரும் நினைத்திராத எதிர்காலத்தைக் கட்டமைக்க உதவும். அதனால்தான் தன் மீது விழும் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மஸ்க் கலங்காமலேயே இருக்கிறார்.
புதிய முயற்சிகள் தோல்வியைக் கொண்டு வரும் என்று தெரிந்தேதான் அவர் களமிறங்குகிறார். தான் முன்னெடுத்த ஒவ்வொரு முயற்சிகளிலும் அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். தழுவிய தோல்விகள் தாராளம். தொட்டதை எல்லாம் பொன்னாக்கும் மந்திரம் இயற்கையாகவே அவரிடம் அமைந்தது கிடையாது. அது அவராக வளர்த்துக் கொண்டது. அவர் இதுவரை சாதித்தது அனைத்தையும் போராடித்தான் செய்திருக்கிறார். ஒரு விஷயத்தைத் தொடங்கும்போது அதல பாதாளத்தில் சென்று விழுவார். பிறகு சமாளித்து எழுந்து வருவார். தோல்விகளின் பரம பிதா அவர். ஆனால் எல்லோருக்கும் முன் முயன்று பார்ப்பதில் மஸ்க் முன்னோடியாக இருக்கிறார் என்பதில்தான் அவரது வெற்றியின் ரகசியம் பொதிந்துள்ளது.
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அவற்றைத் தாங்கும் மனத்திடம் அவருக்கு உண்டு. இன்று வெற்றிகரமான நிறுவனங்களாகக் கருதப்படும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா எல்லாம் பிறந்தவுடனேயே அழிவின் விளிம்புக்குச் சென்றவை. ஆனால், இன்று உலகுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. தோல்வியை என்றைக்குமே மஸ்க் மறுத்ததில்லை. உண்மையை அவர் பூசி மெழுகியதில்லை. எதையும் வெளிப்படையாகவே அவர் செய்து வந்திருக்கிறார். தன்னைத் தோல்வியின் நாயகனாக அடையாளப்படுத்திக்கொள்வதற்கு மஸ்க் அஞ்சியதே இல்லை. யாரும் முயற்சிக்காத ஒன்றை முயல்வது முதலில் தோல்விக்கே இட்டுச் செல்லும். பின் அங்கிருந்துதான் வெற்றியின் பாதையை அறிய முடியும் என்பதை அவர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார். அதைச் செய்துதான் இன்றைய உயரத்தை எட்டியிருக்கிறார்.
எந்தச் சிக்கலையும் உடைத்து அடிப்படை நிலைக்குக் கொண்டுவந்து, தீர்த்துவைப்பதுதான் மஸ்க்கின் வழி. எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் கூர்ந்த சிந்தனை, முயன்றுபார்த்தலின் மூலம் தீர்க்க இயலும் எனப் பலமுறை நிரூபித்திருக்கிறவர் அவர். நாம் மனதையும், மூளையும் செலுத்தினால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதுதான் அவர் சொல்லும் அறிவுரை.
பைத்தியகரமானது என மற்றவர்கள் சொல்லிய விஷயங்களில் அவர் தைரியமாகப் பணத்தை முதலீடு செய்கிறார். நாங்கள் செய்ய மாட்டோம் என நிறுவனங்கள் அஞ்சிய காரியங்களில் துணிச்சலுடன் இறங்கி இருக்கிறார். தோல்வியை மூலதனமாக்கி அதன் மூலமாக வெற்றியைச் சுவைக்கக்கூடியவர் அவர். மஸ்க் இல்லை என்றால் அவருடைய நிறுவனங்கள் இருந்திருக்குமா என்றே தெரியவில்லை.
எலான் மஸ்க்கின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் இரக்கமில்லாதவர், ஊழியர்களை வதைப்பவர், அடாவடிக்காரர், திமிர் பிடித்தவர். குடும்ப வாழ்க்கையிலும் அவர் ஒரு சர்வாதிகாரி. இதுபோன்ற எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு அவர் சொந்தக்காரராக இருக்கிறார். இருந்தாலும் மஸ்க்கை உலகம் தவிர்க்க முடியாத இடத்தில் வைத்திருப்பது ஏன்? அவரைப் பலரும் ஆதர்ச நாயகனாகக் கொண்டாடுவது ஏன்? அவருக்கு ஏன் இத்தனைப் புகழும் பெருமைகளும்?
ஏனென்றால் எலான் மஸ்க் நம்மைப்போன்று சாதாரண ஒரு நிலையிலிருந்து உயர்ந்தவர். இப்போது இருக்கும் நிலைக்குத் தன்னைத் தானே உயர்த்திக்கொண்டவர். அவருடைய தொடக்கம் மிக எளிமையானது. கையில் பணம் இல்லாமல் கனடாவுக்குக் கிளம்பி வந்து, இன்று அமெரிக்க மண்ணின் அசைக்க முடியா ஆளுமையாக அமர்ந்திருக்கிறார்.
கல்லூரிப் படிப்புக்குப் பின் முதல் நிறுவனம். அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு இன்னொரு நிறுவனம். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து இன்னொன்று. இப்படித்தான் அவர் தன்னுடைய எல்லா நிறுவனங்களையும் படிப்படியாக உருவாக்கி இருக்கிறார். அவருக்கு வேண்டிய பணம் திடீரென்று வானத்திலிருந்து வந்து கொட்டவில்லை. தானே ஒவ்வொரு முறையும் முயற்சி செய்துதான் தனக்கு வேண்டியதை அவர் அமைத்துக்கொண்டிருக்கிறார். ஆரம்ப நாட்களில் அவருக்கென்று இருந்தது கனவுகள் மட்டும்தான். அந்தக் கனவுகளை நனவாக்கத் தனக்கு வேண்டிய தகுதிகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டு அதனை அவரே வளர்த்தெடுத்தார். இன்று நீங்கள் பார்க்கும் மஸ்க்கின் தோரணையான நடை, உடை, பாவனை அனைவரையும் அசரடிக்கும் பேச்சு அனைத்தும் அவர் உருவாக்கியது. அவர் பிறந்தபோது அவருடன் இயல்பாக இருந்தது இல்லை.
மஸ்க்கின் இளமைப் பருவம் அவரது ஆளுமையை உருவாக்குவதற்குப் பெரும் பங்கு வகித்திருக்கிறது. முழுக்க முழுக்கப் புத்தகங்களின் கற்பனை உலகில் வாழ்ந்த அவர் யதார்த்த உலகின் எல்லைகளைத் தாண்டிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அங்கே சென்றடைவதற்கான பாதைகளை அமைப்பதற்குத்தான் அவர் பட்ட அத்தனை சிரமங்களும். கல்லூரி நாட்களிலேயே அவருக்கான திட்டமும் உருவாகிவிட்டது. தனக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். பின் அதனை எப்படி வணிகப்படுத்த வேண்டும் என்றும் கற்கத் தொடங்கினார். இதுவே அவரது எதிர்கால வணிகத் திட்டமாகவும் உருமாறியது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, நியூராலிங், போரிங் நிறுவனம் ஆகியவற்றில் அவர் உருவாக்கும் தொழில்நுட்பங்கள் மனித இன்னல்களைக் களைவதற்கான கண்டுபிடிப்புகள். அதனையே அவர் வணிகமாக்கி விற்று வருமானம் ஈட்டுகிறார். அதனாலேயே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் உயர்ந்திருக்கிறார்.
மஸ்க்கின் வணிக வெற்றிகள் பேசப்பட்ட அளவுக்கு அவரது சமூக பங்களிப்புகள் கவனிக்கப்படவில்லை. அறிவார்ந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் மஸ்க், அதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாகப் பள்ளியையும் நடத்தி வருகிறார். அவரது பள்ளியின் பெயர் ஆஸ்ட்ரா நோவா. அவர் தனது குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, இன்று பல குழந்தைகளுக்கும் கல்வி வழங்கி வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் அலுவலகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளியில் 50 மாணவர்கள் வரை படிக்கின்றனர்.
எலான் மஸ்க் சிறுவயதில் பள்ளியில் சந்தித்த இன்னல்களை எல்லாம் கவனத்தில் கொண்டு, அவற்றைக் களையும் வகையில் இந்தப் பள்ளியை உருவாக்கி இருக்கிறார்.
இந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று வழக்கமான பாடத்திட்டம் எல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க அனுபவங்கள், அறிவியல் பரிசோதனைகள் மூலமே குழந்தைகளுக்குப் பயின்றுவிக்கப்படும். மற்றக் குழந்தைகள் ஏ,பி,சி,டி படிக்கும் காலத்திலேயே மஸ்க்கின் பள்ளிக் குழந்தைகள் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்களைப் பயிலத் தொடங்குகின்றன.
இந்தப் பள்ளியில் மதிப்பெண்கள் கிடையாது. கட்டுப்பாடுகள் கிடையாது. நீங்கள் விரும்பும் நேரத்தில் படிக்கலாம். விளையாட வேண்டும் என்றால் விளையாடலாம். மென்பொருள் எழுதலாம். கதைகள் பேசலாம். கற்றல் என்ற வார்த்தைக்கு மறு அர்த்தம் கொடுப்பதற்காகவே இந்தப் பள்ளியைத் தொடங்கியுள்ளதாக மஸ்க் சொல்கிறார். குழந்தைகளுக்கு இந்தப் பள்ளியில் தொழில்நுட்பம், கணிதம், உய்யச் சிந்தனை (Critical Thinking) பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதாவது குழந்தைப் பருவத்திலேயே அவர்களது படைப்பாற்றலை ஒழுங்கமைக்கக்கூடியதாக இந்தப் பள்ளி செயல்படவேண்டும் என்பதே மஸ்க்கின் விருப்பம்.
முதலில் ஸ்பேஸ் ஊழியர்களின் குழந்தைகள் மட்டும் படித்த இந்தப் பள்ளியில், இப்போது விருப்பமுள்ள யாரும் படிக்கலாம். இதில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். எலான் மஸ்க்கே பார்த்துப் பார்த்துக் கல்வித்திட்டத்தை வடிவமைத்துள்ளார். இந்தப் பள்ளியில் பாரம்பரியக் கல்வி முறையிலிருந்து வேறுபட்ட ஞானம் உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று அவர் சொல்கிறார்.
மனிதர்களின் சிந்தனை எல்லைகளை விரிவு செய்வதே அவரது பாடத்திட்டத்தின் நோக்கமாகச் சொல்லப்படுகிறது.
0
நவீன உலகம் மஸ்க்கை வில்லனைப்போலச் சித்தரித்தாலும் காலம் அவரைக் கதாநாயகனாகக் காட்சிப்படுத்திய நிகழ்ச்சிகளும் உண்டு. நாம் ஏற்கெனவே பார்த்த புயோர்டோ ரிகோ சம்பவம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ரஷ்யா – உக்ரைன் போர் மற்றொரு எடுத்துக்காட்டு. இன்னொரு எடுத்துக்காட்டும் இருக்கிறது.
2018ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் 12 சிறுவர்கள் அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய குகையை ஆராய்வதற்குச் சென்றனர். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கவே குகைக்குள் நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் குகை முழுவதும் நீரால் நிரம்ப அவர்கள் அனைவரும் தப்பிக்க வழியில்லாமல் சிக்கிக்கொண்டனர். அவர்கள் நீரில் மூழ்காத அளவுக்கு ஒரு மேட்டில் ஏறிவிட்டனர். ஆனால் அவர்களால் குகையை விட்டு வெளியே வர முடியவில்லை. மாட்டிக் கொண்ட அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் யாருக்கும் தெரியவில்லை.
தாய்லாந்து அரசு மீட்புப் படையை அனுப்பியது. அவர்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால் பயனில்லை. நாட்கள் சென்றன. குகைக்குள் அவர்களைத் தேடிச் சென்ற மீட்புப்படை நம்பிக்கை இழந்தது. அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர். மக்கள், எலான் மஸ்க்கைத் ட்விட்டரில் குறிப்பிட்டு நேரடியாகவே உதவி கேட்கத் தொடங்கினர்.
உடனே மஸ்க் வழக்கம்போல் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, போரிங் கம்பெனி ஊழியர்களைக் களத்தில் இறக்கினார். அமெரிக்காவிலிருந்து ஆசியாவுக்குப் பறந்த அவர்கள் ஒரு குட்டி நீர்மூழ்கிக் கப்பலையும் உருவாக்கி அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் உடல் பாகங்களால் உடனடியாகச் செய்யப்பட்டது.
நீர்மூழ்கிக் கப்பல் குகைக்குள் தேடுதல் வேட்டை நடத்தியது. மஸ்க் நல்ல எண்ணத்தில் இதைச் செய்திருந்தாலும் ஊடகங்கள் ஒருபக்கம் அந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கிழித்துத் தள்ளின. 12 பேரை மீட்பதற்கு இத்தனை சிறிய கப்பலா? இது விளம்பரத்துக்காகச் செய்யப்பட்டது அன்றி மீட்பதற்காக அல்ல என்று விமர்சித்தன. ஆனால் மஸ்க் கவலைப்படவில்லை. அந்த நீர்மூழ்கிக் கப்பல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டது.
ஆனால் அந்தக் கப்பல் சிறுவர்களைக் கண்டறிவதற்கு முன்பாகவே மீட்புப்படையில் இருந்த சிலர் சிறுவர்கள் இருந்த பகுதியைக் கண்டறிந்தனர். அந்த நீர்மூழ்கிக் கப்பலின் உதவி இல்லாமலேயே அவர்களை மீட்டனர். இதையும் ஊடகங்கள் மஸ்க்குக்கு எதிராகவே சித்தரித்தன. மஸ்க்கின் தொழில்நுட்பத்தால் ஒரு பயனும் இல்லை என எழுதின. ஆனால் மஸ்க் வருந்தவில்லை. முயற்சித்துப் பார்த்தோம். எங்களுக்கு முன்பே வேறு ஒரு குழு கண்டடைந்து விட்டது. எப்படியும் நல்லது நடந்ததே அதுவே போதும் என்று சொல்லிவிட்டார். அந்தக் கப்பலை எதிர்காலத்தில் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கே கொடுத்துவிட்டார்.
மற்றொரு சமயம் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து மஸ்க்குக்கு ஒரு கோரிக்கை. எங்கள் பகுதியில் பொதுக் குடிநீர் அமைப்பில் பிரச்னை உள்ளது. பல ஆண்டுகளாக நீரில் ஈயம் கலக்கப்பட்டு விஷமாகி ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், அவர்கள் எங்கள் பிரச்னையைக் காது கொடுத்துக் கூடக் கேட்கவில்லை. உங்களால் எதுவும் உதவ முடியுமா?
மஸ்க் நிச்சயமாகச் செய்கிறேன் என்றார். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வீட்டுக்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கும் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். இதற்கு உதவி வேண்டித் தனி மின்னஞ்சல் முகவரியையும் உருவாக்கினார். அதன்மூலம் மஸ்க்கும் அவரது தொண்டு நிறுவனமும் 4,80,000 டாலர்களை நன்கொடையாகக் கொடுத்தனர்.
இன்னொரு கோரிக்கை வந்தது. இது கொஞ்சம் விசித்திரமான கோரிக்கை. ஸ்பேஸ் எக்ஸ் நாசா வீரர்களை வெற்றிகரமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்று திரும்பிய சமயம். ஜேரட் ஐசக் மேன் என்கிற செல்வந்தர் மஸ்க்கை அணுகி மூன்று நபர்களை விண்வெளிக்குக் கூட்டிச் சென்று மூன்று நாட்கள் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு நிதி திரட்டுவதற்காக அவ்வாறு செய்வதாக ஐசக்மேன் சொன்னார். மஸ்க் சந்தோஷமாக இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டார். விண்வெளி வீரர்கள் இல்லாத மூன்று சாதாரண நபர்களுக்குப் பயிற்சி அளித்து டிராகன் விண்கலத்தில் ஏற்றி விண்வெளிக்கு அவர் அனுப்பி வைத்தார். இந்தப் பயணத்தின் முடிவில் 243 மில்லியன் டாலர்கள் நிதி ஜேரட் ஐசக்மேனுக்குக் கிடைத்தது. அத்தோடு தனது பங்காக 50 மில்லியன் டாலர்களையும் மஸ்க் வழங்கினார்.
இப்படிப் பல உதவிகளை மஸ்க் தன்னுடைய நிறுவனங்கள் மூலம் செய்து வருகிறார். அதனால்தான் ஓர் அசாதாரணப் பிரச்னை வரும்போதும், பேரழிவு ஏற்படும்போதும், மக்களின் உயிர் ஆபத்தில் ஊசலாடும்போதும் அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் எலான் மஸ்க்கின் உதவியை நாடி நிற்கின்றனர். அவர்கள் உலகைக் காப்பாற்ற வந்த சூப்பர் ஹீரோவைப்போல மஸ்க்கை நினைக்கின்றனர்.
சரி, மனிதக் குலத்தின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தொழில்நுட்பங்களால் தீர்வு காணும் தீர்க்கதரிசியா அவர் என்றால் அதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
மனிதக் குலம் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து நிற்கிறது. அதற்கான தீர்வை ஒவ்வொருவரும் தேடி வருகின்றனர். மஸ்க்கும் தன்னாலான முயற்சிகளைத் தான் உருவாக்கிய நிறுவனங்களின் மூலம் மேற்கொண்டு வருகிறார். செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பப்போகிறார். சூரிய ஆற்றலில் இயங்கும் உலகை நிர்மாணிக்கிறார். மனிதர்களையும் செயற்கை நுண்ணறிவையும் இணைத்துப் புதிய தலைமுறையை உருவாக்கி வருகிறார்.
இப்படியாக அவர் முன்வைக்கும் தீர்வுகள் சரிதானா என்பது இப்போது நமக்குத் தெரியாது. அவரது முடிவுகள் தவறுகளற்றதா என்றும் சொல்ல முடியாது. ஆனால் மனிதக் குலத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்ற அவரது கனவு தூய்மையானது. அந்தக் கனவு தோல்வியில் கூடச் சென்று முடியலாம். ஆனால் முயற்சிகள் இல்லாமல் மடியாது!
(முற்றும்)