Skip to content
Home » என்ன எழுதுவது? #3 – ராஜா வந்திருக்கிறார்

என்ன எழுதுவது? #3 – ராஜா வந்திருக்கிறார்

ராஜா வந்திருக்கிறார்

‘சுபாவத்தில் இவன் மிகுந்த சங்கோஜி. தன்னைச் சூழ்ந்த மனித கூட்டத்துக்கு மத்தியில் ஒரு பழகிய முகம் துணைக்கு இருந்தால் அன்றித் ‘தனியாக’ இருப்பது இவனுக்கு நெருப்பின் மேல் இருப்பதைப் போலிருக்கும். குழந்தையைப் போல் பத்ரவுணர்வு தேடுகிறவன். அறிந்த முகம் பக்கத்தில் இல்லையானால் தவித்துப் போய்விடுவான்…’ இந்த ஒரேயொரு பத்தியில் கு. அழகிரிசாமியை உயிரோடு கொண்டுவந்துவிடுகிறார் கி. ராஜநாராயணன்.

கரிசல் காட்டுக் கடுதாசியில் அழகிரிசாமியை அங்கும் இங்கும் குறிப்பிட்டிருப்பார் கிரா. இடைசெவலில் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கிராமத்திலிருந்து அழகிரிசாமி வெளியேறிவிடுவார். ஆனால் சென்னைப் பட்டினம் சென்ற பிறகும் ‘நகரத்தின் மேட்டிமை துளிக்கூட அவனிடம் ஒட்டவேயில்லை’ என்கிறார் கிரா. ‘அங்கேயும் அவன் ஒரு பழுத்த கிராமவாசியைப் போலத்தான் நடை உடை பாவனைகளில் இருந்தான்’ என்று சொல்லிவிட்டு மெட்ராஸ் போனதும் அழகிரிசாமி எழுதிய முதல் கடிதத்திலிருந்து (31 டிசம்பர் 1943) சில வரிகளைப் பகிர்ந்திருப்பார் கிரா.

‘எனக்கு உங்களை எல்லாம் பிரிந்து வந்தது எப்படியோ இருக்கிறது… திடீர் திடீர் என்று ஊர் நினைப்பு வந்து சோர்ந்து போகிறது. இதுபோல் பிரிவுத் துயரில் நான் கஷ்டப்பட்டதே கிடையாது. என்னதான் செய்வது? தெற்கு முகமாய் பார்த்து, ‘ஏ திருநெல்வேலி ஜில்லாவே! நண்பர்களே’ என்று அலறட்டுமா என்றிருக்கிறது…’

கிரா, அழகிரிசாமி இருவருமே தங்களுக்கு நெருக்கமானவர்களை, அக்கம் பக்கத்தினரை, பழகியவர்களை, கேள்விப்பட்டவர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றியிருப்பார்கள். இப்படிப்பட்ட பல கதைகள் அழகிரிசாமிக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தன என்பார் கிரா. அவருக்கும் இது பொருந்தும்.

அழகிரிசாமி என்றவுடன் என் நினைவுக்கு வரும் கதை, ‘ராஜா வந்திருக்கிறார்’. முதல் முதலில் அந்தக் கதையை எப்போது, எங்கே படித்தேன் என்று நினைவில்லை. பெருந்தொற்று காலத்தில் எறும்புகள்போல் மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் நடந்து போனதைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தபோது வேறு ஏதோ நினைவுக்கு வந்து அந்த நினைவுச் சங்கிலியில் ஒட்டிக்கொண்டு இந்தக் கதையும் வெளியில் வந்துவிட்டது. மீண்டுமொருமுறை எடுத்துப் படித்தேன்.

தன்னுடைய சிறுகதைகளில் அதிகப் புகழ்பெற்ற கதை இதுதான் என்பதை அழகிரிசாமியும் உணர்ந்திருந்தார். ‘கதைக்கு ஒரு கரு’ எனும் தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். தன்னுடைய சில கதைகள் எப்படித் தோன்றின என்பதை அவர் அதில் விவரித்திருப்பார். ராஜா வந்திருக்கிறார் எப்படி உருவாகியிருக்கும்?

‘அந்தக் கதைக்குக் கருவே கிடையாது. அந்த மாதிரி ஒரு கதையை எழுதவேண்டும் என்று ஏன் தோன்றியது, எப்படித் தோன்றியது என்று எனக்குத் தெரியவில்லை. கதைக்குக் கரு தோன்றினால், அந்தக் கரு வளர்ச்சி பெற்றுக் கதையாக வெளிவர என்னைப் பொருத்தவரையில் பல வருஷங்கள் ஆகும். எப்பொழுதுமே நான் எழுதுவது பல வருஷங்களுக்கு முன் எழுத நினைத்த கதைகளைத்தான். இப்படிப்பட்ட கதைகளின் கரு நிச்சயமாக ஞாபகத்தில் இருக்கும். ராஜா வந்திருக்கிறார் என்ற கதையையோ அப்பொழுதே எழுத நினைத்து அப்பொழுதே எழுதினேன்.’

தீபாவளிக்கு முந்தைய நாள் அழுக்கடைந்த உடம்போடு ‘கௌபீனம் ஒன்றைத் தவிர, வேறு உடைகள் இல்லாத’ ஒரு சிறுவன் எச்சில் இலையில் ‘ஒட்டிக்கொண்டிருந்த பருக்கைகளையும் கறி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டிருந்தான்.’ உடலெல்லாம் சிரங்கு. பரட்டைத் தலை. துர்நாற்றம் வீசும் உடல். மூன்று குழந்தைகள் அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டு வாசலில் சந்திக்கிறார்கள். போடா என்று மிரட்டுகிறான் தம்பையா. அவனைப் பிடித்துத் தள்ளுகிறான் செல்லையா.

குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வெளியில் வந்த தாயம்மாவிடம், ‘அவன் போன்னா, போகமாட்டேங்கிறான்’ என்று சிணுங்குகிறான் மங்கம்மாள். மூவரையும் கடிந்துகொண்டு அந்தச் சிறுவனை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள் அம்மா. வறுமை பிய்த்துத் தின்னும் வீடு. இருள் கவிந்திருக்கும் வீடு. அதனாலென்ன? நிராதரவான ஒரு சிறுவனுக்கு அங்கே இடம் இல்லாமல் போய்விடுமா? இருப்பதிலிருந்து ஒரு துளியைச் சிறுவனுக்கு வழங்குகிறார்கள். வீடு வெளிச்சத்தால் நிறைந்து போகிறது.

இந்தக் கதையில், அழகிரிசாமி ‘தனது தாயார் தாயம்மாளுக்கு ஒரு கோவிலே கட்டியிருக்கிறான்’ என்கிறார் கிரா. மங்கம்மாள் மட்டுமே அவரைப் பொருத்தவரை கற்பனை. ‘தங்களுக்கு உடன் பிறப்பாக ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம் இவனுக்கு உண்டு. அதை இப்படித் தீர்த்துக்கொண்டான்.’

‘இன்று படித்தாலும்கூட – சில இடங்களை – கண்கள் நனயாமல் படிக்க முடிகிறதில்லை என்னால்’ என்கிறார் கிரா. நான் பல இடங்கள் என்பேன். டால்ஸ்டாயை, டிக்கன்ஸை, ஹியூகோவை, பிரேம்சந்தைப் படிக்கும் உணர்வுதான் இக்கதையை வாசிக்கும்போது எனக்கு உண்டாகிறது. வறுமையும் செல்வமும் சந்தித்துக்கொள்ளும்போது நிகழாத அற்புதம் வறுமையும் வறுமையும் சந்தித்துக்கொள்ளும்போது நிகழ்கிறது. அது எப்போதுமே அப்படித்தான் என்கிறது இலக்கியம். வாழையிலை போட்டுச் சாப்பிடும் ஜமீந்தார் வீட்டிலிருந்து அல்ல, கிழிந்த கோணித் துணி போட்டு படுத்துத் தூங்கும் தாயம்மாவிடமிருந்துதான் அளவற்ற அன்பு பெருகியோடுகிறது.

கிரா, அழகிரிசாமி இருவருடைய நூற்றாண்டும் தொடங்கியிருக்கிறது. இருவரையும் நெருங்கிச் சென்று வாசிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. கிராவின் படைப்புகளைப் பத்து தொகுதிகளாக அன்னம் அகரம் கொண்டுவருவதாக ஓர் அறிவிப்புப் பார்த்தேன். அழகிரிசாமியின் சிறுகதைகளை பழ. அதியமான் முழுமையாகத் தொகுத்திருக்கிறார் (காலச்சுவடு வெளியீடு). கதைகள் வெளியான காலம், வெளிவந்த இதழ்கள் உள்ளிட்ட விவரங்களோடு அழகிரிசாமியின் வாழ்வையும் படைப்புலகையும் அறிமுகப்படுத்தும் ஒரு நீண்ட முன்னுரையையும் அதியமான் வழங்கியிருக்கிறார். நான் மேலே குறிப்பிட்டிருக்கும் கி.ராவின் கட்டுரையும் அழகிரிசாமியின் கட்டுரையும்கூட இத்தொகுப்பில்தான் இடம்பெற்றிருக்கிறது.

0

சென்ற வாரம் திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் நடைபெற்ற ‘அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும்’ நிகழ்வில் பழ. அதியமான் ஐயாவைச் சந்தித்தேன். வ.உ.சி. பற்றிய முந்தைய பத்தியில் அவரைப் பிடித்து இழுத்ததற்காகச் சண்டமாருதம் தொடங்குவார் என்று அஞ்சிக்கொண்டிருந்தேன். நாங்கள் எல்லோரும் மாலையும் கழுத்துமாக மேடையில் நின்றுகொண்டிருந்ததால் இது உசிதமான காலமல்ல என்று கருதி தவிர்த்திருக்கலாம். விருது பெற்ற அனைவரும் தலா ஒரு நிமிடம் ஏற்புரை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டதும், ‘அதிக நேரம் கொடுத்துவிட்டார்களே. உரையை எழுதி எடுத்து வந்துவிட்டீர்களா?’ என்று என்னிடம் அன்போடு விசாரித்தார்.

‘அனைவருக்கும்’ என்று தொடங்கி ‘நன்றி’ என்று முடியும் உரையை எழுதி எடுத்து வந்து வாசித்தால், பள்ளி ஐயுற்று விருதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நேரிடும் என்பதால் அந்த இரு சொற்களை ரயில் பிரயாணத்திலேயே சிறப்பாக மனப்பாடம் செய்து முடித்திருந்தேன். என்னிடம் 30 விநாடிகள் கூடுதலாக இருக்கின்றன. உங்களுக்குத் தேவைப்படுமா என்று கவிஞர் சுகுமாரனிடம் கிசுகிசுத்தேன். வாழ்வில் கடினமான இரு விஷயங்கள், மேடையில் பேசுவதும் பேட்டி கொடுப்பதும்தான் என்று சொல்லி மறுத்துவிட்டார். எனக்குப் பேசத் தெரியாது என்று என்னைத் தவிர வேறு யார் சொன்னாலும் அதை நம்பக்கூடாது என்பதை உணர்ந்துவிட்டேன். ஓர் அழகிய கவிதையால் ஒரு நிமிடத்தை நிறைவாக்கிவிட்டார் சுகுமாரன்.

சுகுமாரனும் பேரமைதியும் நானும் ஓர் அறையில் ஒன்றாகத் தங்கியிருந்தோம். பின்னர் பழ. அதியமானும் இணைந்துகொண்டார். இலக்கிய ஆளுமைகளின் வாரிசுகளைச் சந்தித்த கதைகளை அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நூலாகத் திரட்டும் அளவுக்குச் செய்திகளும் அனுபவங்களும் அவரிடம் இருக்கின்றன.

ஸ்டாலின் ராஜாங்கத்தின் இருக்கை மேடையில் காலியாகவே இருந்தது. அவர் பெயரைச் சொல்லி அழைத்தபோது, பாவம் அவர் வரவில்லை என்பது தெரியாமலேயே அழைக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். எங்கிருந்தோ சட்டென்று தோன்றி உரையாட ஆரம்பித்துவிட்டார். அதே ஒரு நிமிடம்தான் அவருக்கும். ஆனால் அர்த்தமுள்ள முறையில் பயன்படுத்திக்கொண்டார்.

0

திருச்சி ரயில் நிலையத்துக்கு எதிரிலுள்ள புல்வெளியில் ஸ்டாலினும் நானும் அமர்ந்திருந்தோம். எழுதப்பட்ட பதிவுகளை நம்பும் அளவுக்கு வாய்மொழி வரலாற்றைப் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதை ஸ்டாலின் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தார்.

உலகளவில் செல்வாக்குமிக்க வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ஏஜேபி டைலர் வாய்மொழிக்கதைகள் முக்கியத்துவமற்றவை என்றுதான் கருதியிருக்கிறார். ஆப்பிரிக்கா கல்வியறிவு அற்ற நிலம். அங்கே ஆவணங்கள் இல்லை. எனவே ஆப்பிரிக்கர்கள் வரலாறற்றவர்கள் என்று ஆய்வாளர்கள் பலரே சிறிது காலத்துக்கு முன்புவரை நம்பியிருக்கின்றனர். இந்தியாவுக்கு வரலாறு கிடையாது என்னும் முடிவுக்குதான் மார்க்ஸும் வந்து சேர்ந்தார். இந்நிலை மெல்ல மெல்லதான் மாறியது.

புலிட்ஸர் விருது பெற்ற ஸ்டட்ஸ் டெர்கெல், முழுக்க முழுக்க வாக்குமூலங்களின் அடிப்படையில் இரண்டாம் உலகப் போரின் வரலாற்றைத் தொகுத்தளித்திருக்கிறார். அதே இரண்டாம் உலகப் போரின் வரலாற்றைப் பெண்களின் வாக்குமூலங்களிலிருந்தும் குழந்தைகளின் வாக்குமூலங்களிலிருந்தும் திரட்டியெடுத்து இரு நூல்களாக வெளியிட்டிருக்கிறார் ஸ்வெட்லானா அலெக்சிவிச். இலக்கியத்துக்கான நோபல் விருது பெற்றவர். முன்னதாக செர்னோபில் அணு உலை விபத்து பற்றிய வாய்வழி வரலாற்றையும் இவர் பதிவு செய்திருந்தார். பிரிவினையைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான படைப்பு, ஊர்வசி புட்டாலியாவின் The Other Side of Silence (கிழக்கு தமிழில் வெளியிட்டுள்ளது). இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லமுடியும்.

எழுதப்பட்ட பதிவுகள் மட்டுமே உயர்ந்தவை; வாய்வழியாகச் சொல்லப்படுவை நம்பத்தகுந்தவை அல்ல எனும் நம்பிக்கையை அறிவுலகம் இன்று முற்றாக இல்லாவிட்டாலும் பெருமளவு களைந்துவிட்டது. வரலாறு எப்படி எழுதப்படவேண்டும்? எழுதுவதற்கு எத்தகைய தரவுகளைப் பயன்படுத்தவேண்டும்? தரவுகள் என்று எவற்றை அழைக்கமுடியும்? சாமானியர்களின் கதைகள் நம்பத்தகுந்தவையா? நினைவுகளை நம்பமுடியுமா? இக்கேள்விகளை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக விவாதித்து வருகின்றனர்.

வாய்வழி வரலாறு என்பது வரலாற்று ஆய்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இனவரைவியல், மானுடவியல், சமூகவியல் என்று தொடங்கி உளவியல்வரை பல துறைகளில் எழுதப்பட்ட பதிவுகளுக்குச் சமமான செல்வாக்கை வாக்குமூலங்கள் செலுத்துகின்றன. இருந்தும், தலித் வரலாறு, பௌத்தம், நாட்டார் வழக்காற்றியல், பண்பாட்டு வரலாறு ஆகிய துறைகளில் இயங்கும் ஸ்டாலின் ராஜாங்கம் போன்றோர் எடுத்து வைக்கும் வாய்மொழித் தரவுகள் சுலபத்தில் ஏற்கப்படுவதில்லை.

வழிபாட்டு முறைகள், சடங்குகள், பண்பாட்டு நிகழ்வுகள், திருவிழாக்கள் போன்றவற்றை ஆய்வு செய்பவர்களுக்கு வாய்மொழி வாக்குமூலங்கள் தவிர்க்கவியலாத தரவுகள். இன்று எழுத்தில் காணக்கிடைக்கும் தல வரலாறுகள் யாவும் வாய்மொழிக்கதைகளாக இருந்தவையே. இருந்தும் அவை ஏற்கப்படும் அளவுக்கு வாய்மொழிக்கதைகள் ஏற்கப்படுவதில்லை.

எழுத்து வடிவமே பெறாத மொழிகள் ஏராளம் உள்ளன. அம்மொழிகளைக் காலம் காலமாகப் பேசி வருபவர்களுக்கு வரலாறு என்றொன்றே கிடையாதா? ஆவணங்கள் இல்லை என்பதால் பழங்குடிகளின் வரலாற்றைப் பதிவு செய்யாமல் விட்டுவிடமுடியுமா?

சமூகத்தின் வேறெந்த துறைகள் போல் அறிவுத்துறையிலும் அதிகாரமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. எது ஆவணம், எது ஏற்கத்தக்கக் கதை, எது நம்பத்தகுந்த நிகழ்வு, எது சரியான வாதம், எது நம் வரலாறு போன்றவற்றை அதிகாரத்திலிருப்பவர்களே நிர்ணயிக்கிறார்கள். அந்த அதிகாரத்தையும் அது இயங்கும் விதத்தையும் சேர்த்தே ஒரு பண்பாட்டு ஆய்வாளர் கேள்விக்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது.

0

ஹிலாரி மாண்டல் மறைந்துவிட்டார். இருமுறை புக்கர் வென்றவர். பிரெஞ்சுப் புரட்சி பின்னணியை வைத்த அவர் எழுதிய A Place of Greater Safety எனும் நாவலைச் சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அவருடைய சிறந்த நாவல் என்று இதை அநேகமாக ஒருவரும் சொல்ல மாட்டார்கள் என்றாலும் எனக்கு அது பிடித்திருந்தது.

அதன்பின், The Assassination of Margaret Thatcher எனும் நீளமான சிறுகதையைப் படித்தேன். தாட்சரைச் சுட்டுக்கொல்வதற்காக ஐரிஷ் ராணுவ இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள ஓர் அறைக்குள் நுழைந்து அங்கிருக்கும் பெண்ணைச் சிறை பிடிக்கிறான். வன்முறையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவனும் வன்முறையை அறவே வெறுக்கும் ஒரு பெண்ணும் உரையாடிக்கொள்வதுதான் மிச்சக் கதை.

ஹிலாரி மாண்டலின் புகழ்பெற்ற டியூடர் வம்சத்து நாவல்களை இனிதான் வாசிக்கவேண்டும்.

0

பகிர:
nv-author-image

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *