இறுதியில் சொற்களே வெல்கின்றன.
செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம் தொலைந்துவிட்டன. ஒருகாலத்தில் வரலாற்றைப் புரட்டிப்போட்ட எந்தப் பெரிய வெற்றியும் இன்று பொருட்படுத்தப்படுவதில்லை. கடந்தகாலத்தின் சிதிலங்களிலிருந்து எந்த நினைவுகளையும் மீட்டெடுக்கமுடியவில்லை. புழுதியெல்லாம் அடங்கிய பிறகு தேடினால் சொற்கள் மட்டுமே அகப்படுகின்றன. கடந்த காலம் என்றொன்று இருந்தது என்பதைச் சொற்களைக் கொண்டே உணரமுடிகிறது.
எல்லாச் சொற்களுமா என்றால் இல்லை, உண்மையைச் சுமந்து நிற்கும் சொற்கள் மட்டும்தான். எனில், எவை உண்மையான சொற்கள்? நடந்ததை நடந்தபடியே, உள்ளதை உள்ளபடியே பதிவு செய்யும் சொற்களே உண்மையான சொற்கள் என்று சொல்லமுடியும். ஆனால் விவாதம் இங்கே முற்றுப்பெற்றுவிடுவதில்லை. மாறாக இங்கிருந்துதான் தொடங்கவே செய்கிறது.
ஒரு வரலாற்றுப் பிரதியால் மட்டுமே கடந்த காலத்தைப் பதிவு செய்யமுடியும் என்பார் ஒரு வரலாற்றாசிரியர். தரவுகளின் அடிப்படையில், தகுந்த முறையியலைப் பின்பற்றி, கற்பனை கலக்காமல் தயாரிக்கப்பட்ட ஒரு பிரதியையே அவர் வரலாறு என்று ஒத்துக்கொள்வார். சல்மான் ருஷ்டியிடம் கேட்டால் கதையே உண்மைக்கு நெருக்கமானது என்பார். கற்பனையில் தோன்றிய ஒரு கதையால் உண்மையைச் சொல்லமுடியுமா என்று அவரைத் துருவினால், கற்பனையைத் தவிர வேறு எது உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கமுடியும் என்று திருப்பிக்கேட்பார் அவர்.
ருஷ்டியைப் பொருத்தவரை நாம் கதைகளால் ஆனவர்கள். உணவு அளவுக்குக் கதைகளும் உண்டுதான் குழந்தைகள் வளர்கின்றன. வளர்ந்த பிறகு, இவையெல்லாம் இனி எதற்கு என்று அட்டைப் பெட்டியில் போட்டு கதைகளைப் பரணில் ஏற்றிவிடுகிறார்கள். அவர்களைக் கண்டு பரிதாபம் கொள்கிறார் ருஷ்டி. கதைகளைத் துறந்த பிறகுதானே நாம் இப்படி மாறியிருக்கிறோம்? நாம் மாறியது மட்டுமில்லாமல் நம் உலகையும் இத்தனை சிக்கலானதாக மாற்றி வைத்திருக்கிறோம்?
தான் படித்து வளர்ந்த கதைகளைப் பரணில் ஏற்றாமல் தன்னோடே சுமந்து வாழ்ந்ததால் ஒரு கதை சொல்லியாக மாறியவர் ருஷ்டி. மும்பையில் வளர்ந்த ருஷ்டி மேற்கு, கிழக்கு என்று பேதமில்லாமல் (கதைகளுக்கு ஏது திசை? ஏது நிலம்? ஏது எல்லை?) ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன், ஹக்கள்பெரி ஃபின், டின் டிரம், இடாலோ கால்வினோ, மார்குவேஸ், 1001 இரவுகள், பஞ்ச தந்திரம், ஹம்ஸாநாமா, ராமாயணம், மகாபாரதம், கதாசரித சாகரம், கிரேக்க ரோம இதிகாசங்கள் என்று தீராப் பசியோடு படித்தார். நான் படித்த பல கதைகள் புனிதமானவையாகக் கருதப்பட்டவை. எனக்கு அவை அற்புதமான மாயக்கதைகள் மட்டுமே என்கிறார். மத நம்பிக்கையற்ற குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இப்படி அவருக்குத் தோன்றியிருக்கிறது. ஒரு கதையை ஒரு தூயக் கதையாக மட்டுமே எடுத்து வைத்துக்கொண்டு அதன் அழகை ஆராதிக்கவும் முடிந்திருக்கிறது.
கதையை எனது, உனது என்று பிரிக்கமுடியாமல் போனதாலோ என்னவோ மதத்தையும் அவரால் பாகுபடுத்திப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. ஒற்றைக் கடவுள் கதைகள் ஏற்படுத்திய அதே மயக்கத்தைப் பல கடவுளர்களின் கதைகளும் அவருக்குள் ஏற்படுத்தின. மும்பைக் கடலில் கரைப்பதற்காக மேளதாளத்தோடு சுமந்து செல்லப்பட்ட பிள்ளையாரைக் கண்ட சிறு வயது பரவசம் இன்னமும் ருஷ்டியிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவரை எப்படி என்னால் ஓர் இந்துக் கடவுளாகப் பார்க்கமுடியும்? வியாசர் முன்பு அமர்ந்து, அவர் சொல்லச் சொல்லக் கேட்டு பாரதத்தை எழுதியவர் என்பதை அறிந்துகொண்ட பிறகு, கதையோட்டம் தடைபடக்கூடாது என்பதற்காகத் தனது தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கியவர் என்பதை உணர்ந்த பிறகு, எப்படி அவரை என்னால் நேசிக்காமல் இருக்கமுடியும்? அவர் எனக்குமானவர் அல்லவா? சல்மான் ருஷ்டியின் மகத்தான படைப்பாகக் கொண்டாடப்படும் Midnight’s Children நாவலில் வரும் சலீம் பிள்ளையாரைப் போல் நீண்ட மூக்கு கொண்ட ஒரு சிறுவன்.
இதிகாசப் புராணங்களாக இருந்தாலும் மதத்தின் பிடியிலிருந்து விடுவித்து தனியே அணுகும்போது ஒவ்வொரு கதையின் அழகும் பன்மடங்கு கூடுவதை ருஷ்டி கண்டார். விடுவிக்கப்படும் ஒரு கதையை அங்கும் இங்குமாக இழுத்து மேலும் வளர்த்தெடுக்கமுடியும். இன்னொரு முறை, இன்னொரு முறை என்று மீண்டும் மீண்டும் அதே கதையை வெவ்வேறு முறையில் சொல்லிப்பார்க்கமுடியும். வெளிப்படும் ஒவ்வொரு கதையும் ஒரு புது கதையாக மாறும் அதிசயமும் அப்போது நிகழக்கூடும்.
எல்லாவிதமான மாயங்களையும் செய்துகொள்ளட்டும், ஆனால் புனையப்படும் சொற்களால் உண்மையைச் சொல்லமுடியுமா? முடியும் என்கிறார் ருஷ்டி. நான் படித்த மாயக் கதைகளிலிருந்து நான் கற்ற உண்மைகள் இரண்டு. கதை என்பது கற்பனையிலிருந்து உருவாவது என்பது முதல் உண்மை. ஒவ்வொரு கதையிலும் நுட்பமான உண்மை பொதிந்திருக்கிறது என்பது இரண்டாவது உண்மை. அதாவது, ஒரே சமயத்தில் ஒரு கதை உண்மையின்மையையும் நுட்பமான உண்மையையும் உணர்த்தமுடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன் என்கிறார் ருஷ்டி. இப்படியொரு மாயத்தை ஒரு கதை தவிர வேறு எதுவும் நிகழ்த்துவதில்லை. யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையில் நிற்கும் அத்தனைப் பெருஞ்சுவர்களையும் ஒரு கதையால் மிக எளிதாகக் கலைத்துப்போடமுடியும். ருஷ்டி இந்த மாயத்தையே தனது எழுத்துகளில் நிகழ்த்தத் தொடங்கினார்.
ருஷ்டியின் மாய யதார்த்தக் கதைகள் முழுக்க, முழுக்கக் கற்பனை என்றால் அதைப் படித்த (அல்லது படிக்காத) சிலர் ஏன் கோபம் கொள்ளவேண்டும்? சலீமின் கதை இந்திரா காந்தியைக் கோபப்படுத்தியது. சலீமின் கதையைச் சொல்லிமுடித்த பிறகு ருஷ்டி எழுதிய ‘ஷேம்’ ஜியா உல் ஹக்கின் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டது. The Satanic Verses நாவலை எழுதியதற்காக இரானின் அயதுல்லா கொமேனி 1988ஆம் ஆண்டு ருஷ்டிக்கு எதிரான ஃபத்வாவைப் பிறப்பித்தார். ருஷ்டியையும் அவர் நாவல் பதிப்புப் பணியோடு தொடர்புடையவர்களையும் எவரும் கொல்வதற்கான பிரகடனம் அது. அதைத் தொடர்ந்து பத்தாண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்த ருஷ்டி 2000ஆம் ஆண்டு நியூ யார்க்குக்குக் குடிபெயர்ந்தார்.
கொமேனியின் மரணத்துக்குப் பிறகு, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் சில இஸ்லாமியத் தலைவர்களை நாடிச் சென்று அவர்களோடு இணைந்து ஓர் அறிவிப்பை வெளியிட்டார் ருஷ்டி. அதில் மன்னிப்பின் சாயல் அழுத்தமாகப் படிந்திருந்தது. நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் அல்ல. இஸ்லாமியப் பண்பாடுமீது மதிப்பு வைத்திருப்பவன். இஸ்லாத்துக்கும் நபிகளுக்கும் எதிராக என் நாவலில் பேசும் எந்தக் கதாபாத்திரத்தின் கருத்தோடும் எனக்கு உடன்பாடில்லை என்று விளக்கமளித்தார். கோபமுற்றிருக்கும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றெடுத்துவிடமுடியும் என்னும் நம்பிக்கை அப்போது ருஷ்டிக்கு இருந்திருக்கிறது.
ருஷ்டியின் அறிவிப்பை இரானும் சரி; படிக்காமலேயே வெகுண்டிருந்த அடிப்படைவாதிகளும் சரி பொருட்படுத்தக்கூட இல்லை. தான் தவறு செய்துவிட்டோம் என்பதை ருஷ்டி உணர்ந்தார். என்னைப் பிடிக்காதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்ன செய்தும் அவர்களை மாற்றமுடியாது என்பதை உணர்ந்தேன் என்று தனது தலைமறைவு வாழ்க்கை குறித்த நூலில் (ஜோசப் ஆண்டன்) ருஷ்டி குறிப்பிட்டார்.
வசைகள் தொடர்ந்தன. மரணத்தின் அழுத்தமான நிழல் விலக மறுத்தது. என்ன இருந்தாலும் ருஷ்டி அப்படி எழுதியிருக்கக்கூடாது என்றும் தேவையின்றித் தன் அழிவை அவரே தேடிக்கொண்டுவிட்டார் என்றும் விளம்பரக்காரர் என்றும் படைப்புலகைச் சேர்ந்த சிலருமேகூட கடிந்துகொண்டனர். கவனத்தை ஈர்ப்பதற்காகவே சாத்தானை ருஷ்டி எழுதினார் என்றும் அதை அவர் எழுதாமல் போயிருந்தால் உலகுக்கு அவர் தெரியாமலேயே போயிருப்பார் என்றும்கூடப் பேசிக்கொண்டனர்.
இந்தப் பின்னணியில் ருஷ்டி மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்தாகச் சொல்கிறார் டேவிட் ரெம்னிக் (தி நியூ யார்க்கர்). ஃபத்வா தன் வாழ்வை, குறிப்பாக எழுத்தைத் தீர்மானிக்கக்கூடாது என்பதே ருஷ்டியின் முடிவு. இனியும் எழுதுவேன். ஆனால் என்னை வருத்தியவர்களை மேலும் சீண்டும் வகையில், பழிவாங்கும் உணர்வோடு எழுத மாட்டேன். இதன் பொருள், இளகியும் பணிந்தும் இருந்துவிடுவேன் என்பதல்ல. எந்த வசையும், எந்த மிரட்டலும், எந்தப் புறக்கணிப்பும் என்னைச் சாய்த்துவிடவில்லை என்பதுபோல்; என் பணியில் வாழ்வில் எந்த இடையறும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுபோல்; எனக்கு எதுவும் நேர்ந்துவிடவில்லை என்பதுபோல் எழுதிக்கொண்டிருக்கவேண்டும்.
தன் மகன் ஜஃபாருக்கு வாக்களித்தபடி 1990ஆம் ஆண்டு Haroun and the Sea of Stories எனும் குழந்தைகளுக்கான கதைக்கொத்தை வெளியிட்டார். தனது தந்தையின் கதைசொல்லும் ஆற்றலுக்கு உயிரூட்டத் துடிக்கும் 12 வயது குழந்தையின் கதை, சோகத்திலும் சிதைவிலும் தன்னைத் தொலைத்துவிட்டு தன் பெயரையே மறந்துவிட்டிருக்கும் ஒரு நகரத்தின் கதை என்று தொடங்கி ஏராளமான வெளிப்படையான, மறைவான குறியீடுகளைக் கொண்டிருக்கும் கதைகள் இவை. ஒரு தந்தையாக, ஒரு குடிமகனாக, ஒரு எழுத்தாளராக ருஷ்டியின் அற்புதமான வெளிப்பாடு என்று இந்நூலை அழைத்தார் எட்வர்ட் செய்ட்.
மேற்குக்குக் குடிபெயர்ந்து சென்ற பிறகும் தெற்காசியாவை சல்மான் ருஷ்டி மறந்துவிடவில்லை. The Enchantress of Florence (2008) நாவலில் அக்பரின் உலகைத் தனது மாயப் பிடிக்குள் கொண்டு வந்திருந்தார். சமீபத்தில் வெளிவந்திருக்கும் அவருடைய 21ஆவது நாவலான விக்டரி சிட்டி (Victory City) விஜயநகரத்தை ஒரு மாய உலகமாக நமக்கு மறு அறிமுகம் செய்கிறது.
0
இறுதியில் வரலாறும் ஒரு கற்பனைதான்.
‘மேற்குலகுக்கு வேண்டுமானால் The Midnight’s Children ஒரு மாய யதார்த்த நாவலாக இருக்கலாம். அப்போது இந்தியாவில் அதை வாசித்த பலர் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பாகவே அந்நாவலை எடுத்துக்கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு வரலாற்று நூல் போலவே அவர்களுக்கு என் நாவல் இருந்திருக்கிறது’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ருஷ்டி.
அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தொல்லியல், மரபணுவியல் போல் இலக்கியத்திலிருந்தும் வரலாறு தனக்கான தரவுகளைப் பெற்றுக்கொள்கிறது என்கிறார் ரொமிலா தாப்பர். வரலாறும் கற்பனையும் எதிரும் புதிருமானவையல்ல என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. பேரரசர் அசோகர் குறித்து சொற்பமான தரவுகள்தான் நம்மிடையே இருக்கின்றன. இலக்கியப் பதிவுகளிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அவர் வாழ்வைக் கட்டமைப்பது மிகவும் கடினமானது. எனவே எனது நூலில் பொருத்தமான இடங்களில் கற்பனையைக் கொண்டு அசோகரை நான் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன் என்கிறார் லாஹிரி. இங்கே அவர் குறிப்பிடும் கற்பனை என்பது ஒரு கதாசிரியரின் கட்டற்ற கற்பனையை அல்ல. யூகங்களின் அடிப்படையில் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட கற்பனையை.
சல்மான் ருஷ்டி வரலாற்றையும் அதன் எல்லைகளையும் அறிந்தவர். இந்திய வரலாறு, அமெரிக்க வரலாறு, இஸ்லாத்தின் வரலாறு உள்ளிட்டவற்றைப் பட்டப்படிப்பில் கற்றவர். தனது விஜயநகர நாவலின் முடிவில் நீலகண்ட சாஸ்திரி, ரிச்சர்ட் ஈட்டன், நொபொரு கராஷிமா, டொமிங்கோ பயஸ், ராபர்ட் சீவெல், இப்ன் பதூதா என்று பலரைக் குறிப்பிட்டுள்ளார். ஹம்பிக்குச் சென்று விஜயநகரப் பேரரசின் சிதிலங்களை நேரில் கண்டிருக்கிறார். வரலாறுக்கும் கற்பனைக்கும் இடையிலான கோடுகளை அவர் நாவல் மெல்ல, மெல்ல அழிக்க ஆரம்பித்தது.
வரலாற்றியலில் நடைபெற்ற எண்ணற்ற விவாதங்களுள் ஒன்று, ஒரு வரலாற்றாசிரியர் வரலாற்றை விவரிக்கவேண்டுமா அல்லது விளக்கவேண்டுமா என்பது. இதைப் பற்றிச் சுருக்கமாக அறிந்துகொள்ள பீட்டர் பர்க் தொகுத்த ஒரு நூலை வாசிக்கலாம். (History of Events and the Revival of Narrative, Peter Burke in New Perspectives on Historical Writing, Ed. Peter Burke). நிகழ்வுகளை மட்டுமே விவரித்துக்கொண்டு செல்வது மேலோட்டமான அணுகுமுறை. அடித்தளத்துக்கு ஊடுருவிச் சென்று கண்களுக்குப் புலப்படாத நுணுக்கமான வேர்களை ஆராயும் பணியைத்தான் ஒரு வரலாற்றாளர் மேற்கொள்ளவேண்டும் என்று ஒரு பிரிவினர் வாதிட்டனர். புகழ்பெற்ற பிரெஞ்சு ‘அனால்ஸ்’ பள்ளியைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள்.
நிகழ்வுகள் அல்ல, அமைப்புகளே இவர்களுக்குப் பிரதானம். பொதுவாசகர்களுக்கான வரலாற்றாசிரியர்கள் வேண்டுமானால் கடலின் மேல் பரப்பில் ஆர்வம் கொள்ளலாம். கல்விப்புலம் சார்ந்த வரலாற்றாசிரியர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் நிச்சயம் கடலுக்குள் பாய்ந்தாகவேண்டும். தரையைத் தொட்டாகவேண்டும். முத்துகளை அள்ளியாகவேண்டும். மத்தியத்தரைக்கடலின் வரலாற்றை எழுதிய பிராடெல் இவ்வகையைச் சேர்ந்தவர்.
ஆனால் இந்தக் கேள்வி விரைவிலேயே பொருளற்றதாக மாறிவிட்டது. அலசுவது மட்டுமல்ல, விவரிப்பதும் ஒரு வரலாற்றாசிரியரின் பணிதான் என்பதை அனால்ஸ் பள்ளியைச் சேர்ந்த சிலரே பின்னர் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
இங்கே இன்னொரு விவாதத்தைக் கிளப்பமுடியும். கடலின் ஆழத்துக்குச் செல்வதற்குக் கல்விப்புலன்சார் வரலாற்றாசிரியர்களால் மட்டுமே முடியுமா? ஒரு பேரரசு எப்படி உருவாகிறது என்பதையோ ஒரு கலகம் ஏன் வெடிக்கிறது என்பதையோ ஓர் அரசர் ஏன் குறிப்பிட்ட ஒரு முடிவை எடுக்கிறார் என்பதையோ வரலாற்றாசிரியர்களால் மட்டுமே விளக்கமுடியுமா? அப்படி அவர்கள் விளக்கித் தீர்த்துவிட்டார்களா என்றால் இல்லை என்பதே பதில்.
தரவுகள் எனும் அடித்தளத்தின்மீதுதான் வரலாறு கட்டியெழுப்பப்படுகிறது. மிகச் சமீபத்திய நிகழ்வுகளை விளக்குவதற்கே போதுமான தரவுகள் இல்லை எனும் நிலையில் காலத்தில் பின்னுக்குச் செல்லச் செல்ல ஒரு வரலாற்றாசிரியருக்குக் கிட்டத்தட்ட எதுவுமே கிடைப்பதில்லை. இந்த வெறுமையை வைத்துக்கொண்டு இப்படித்தான் நடந்திருக்கும் என்று அவர்கள் யூகிக்கிறார்கள் (நயன்ஜோத் லாஹிரி குறிப்பிடும் கற்பனை). அல்லது, எனக்குத் தெரியாது என்று அமைதியாக இருந்துவிடுகிறார்கள். எழுதப்பட்ட வரலாறுகளைக் காட்டிலும் எழுதப்படாதவையே மிகுதி.
வரலாற்றாசிரியர்கள் கடவுள்போல் வழிபடும் தரவுகளாவது முழு ஒளியைப் பாய்ச்சிவிடுகிறதா என்றால் அதுவும் இல்லை. தரவுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதால் அவை உண்மையைக் கூடியும் குறைத்தும்தான் சொல்கின்றன. விடுபடல்கள் இருக்கும். மிகை இருக்கும். பொய் இருக்கும். விருப்பு, வெறுப்புகள் இருக்கும். உள்நோக்கங்கள் இருக்கும். மயக்கங்களும் பிழைகளும் மலிந்திருக்கும். சிறந்த பயிற்சியும் திறந்த மனமும் நுணுக்கமான கண்களும் வாய்த்திருப்பவர்களால் மட்டுமே இந்தச் சிக்கல்களையெல்லாம் அடையாளம் கண்டு தாங்கள் தேடியதைக் கண்டடையமுடியும். எந்த வரலாற்றுப் பிரதியும் கடந்த காலத்தை முழுமையாகப் பிரதிபலித்துவிடுவதில்லை. எந்த வரலாற்றுப் பிரதியையும் முழுமையான உண்மையாகக் கொள்ளமுடியாது. அந்த வகையில் வரலாறும் ஒரு வகையான கற்பனைதான்.
மௌரியப் பேரரசு போலன்றி விஜயநகரப் பேரரசு பற்றி விரிவான தரவுகள் நம்மிடையே இருப்பது உண்மைதான். ‘தெற்கில் இஸ்லாத்தின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தி இந்து நாகரிகத்தையும் பண்பாட்டையும் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் தழைத்திருக்கச் செய்த பேரரசு’ என்று விஜயநகரத்தை அழைக்கிறார் நீலகண்ட சாஸ்திரி. பண்டைய மரபுகளும் அரசியல் அமைப்புகளும் அறிவுச் சேகரிப்புகளும் மீட்டெடுக்கப்பட்ட காலம் இது. விஜயநகரத்தின் அரசியலைப் பெருமளவு போர்தான் தீர்மானித்தது. அந்த வகையில், ‘இந்துக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு போர் நகரம்’ என்றும் ‘சுதந்திர இந்து தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இறுதி அத்தியாயம்’ என்றும் விஜயநகரத்தை அழைக்கமுடியும் என்கிறார் சாஸ்திரி.
சகோதரர்களான முதலாம் ஹரிஹரர், முதலாம் புக்கர் இருவரும் 1340 வாக்கில் ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு விஜயநகரப் பேரரசுக்கான விதைகளைத் தூவினார்கள். சங்கம மரபு, சாளுவ மரபு, துளுவ மரபு என்று பல பேரரசர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக மூன்றாம் ஸ்ரீரங்கன் 1646வரை ஆட்சி செய்தார். முன்பே சரியத் தொடங்கிவிட்ட பேரரசு அவருக்குப் பிறகு தகர்ந்துபோனது. இந்தப் பேரரசின் ஒளிவீசும் நட்சத்திரமாக கிருஷ்ணதேவராயர் (ஆட்சிக்காலம் 1509-29) திகழ்கிறார்.
பேரரசின் தோற்றம், மன்னர்கள், அவர்களுடைய ஆட்சிக்காலம், நிர்வாகம், கட்டடக்கலை, போர்கள், இலக்கியப்பதிவுகள், வீழ்ச்சி என்று ஒரு நேர்க்கோட்டில் விஜயநகரத்தின் கதையை ஒரு வரலாற்றாசிரியரால் விவரித்து முடித்துவிடமுடியும். ஆனால் போதுமான அளவுக்கு அந்தப் பேரரசை விளக்கிவிடமுடியாது. எனவே கதைகள் தோன்றுகின்றன. வளர்கின்றன.
0
இறுதியில் கதையும் வரலாறுதான்.
சகோதரர்களாகிய ஹரிஹரனும் புக்காவும் இணைந்து விஜயநகரப் பேரரசை உருவாக்கினார்கள் என்கிறது வரலாறு. இவர்கள் தங்களைச் சந்திர வம்சத்தினர் என்று அழைத்துக்கொண்டனர். ஏன் இப்படி அழைத்துக்கொண்டனர்? எப்படி இவ்வாறு அழைத்துக்கொள்ளமுடியும்? கடவுளின் வழித்தோன்றல்கள்தான் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனர் என்று மக்கள் அப்போது நம்பினார்களா? அந்த நம்பிக்கையோடுதான் வாழ்ந்தார்களா?
தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மன்னர்கள் இப்படிப்பட்ட கதைகளை உருவாக்கிக்கொண்டனர் என்று வரலாற்றாசிரியர்கள் விளக்கமளிக்கிறார்கள். ஓர் அரசர் கதை சொல்லலாம் என்றால் நானும் ஏன் சொல்லக்கூடாது என்கிறார் சல்மான் ருஷ்டி. ஓர் அரசர் தன்னுடைய கடந்த காலத்தைக் கதைகள் கொண்டு நிரப்பமுடியும் என்றால் ஒரு கதாசிரியரும் அதையே இன்னமும் அழகாக, இன்னமும் நேர்த்தியாகச் செய்யமுடியும் அல்லவா?
பம்பா கம்பண்ணா எனும் மாயப்பெண்ணை ருஷ்டி உருவாக்கியது இப்படித்தான். ஒன்பது வயது குழந்தையான பம்பா ஒரு நாள் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துபோகிறாள். தொலைவில் தீ பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அந்த ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் சமீபத்தில் நடந்து முடிந்த போரில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர்களுடைய மனைவிகள் அனைவரும் உடன்கட்டை ஏறிவிட்டனர். இப்போது அந்த ஊரில் ஆண்களும் இல்லை, பெண்களும் இல்லை. பம்பாவும் அம்மாவும்தான் எஞ்சியிருந்தனர். நடந்துகொண்டே இருந்த அம்மா ஒரு கணம் நின்று, தன் கையைக் குழந்தையிடமிருந்து பிரித்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்து தீக்குள் பாய்ந்தார். கண நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அச்சத்தில் உறைந்து நின்றுகொண்டிருந்த பம்பாவின் முன்பு ஒரு பெண் தெய்வம் (அவள் பெயரும் பம்பா) தோன்றுகிறது. கடவுள் பம்பா சிறுமி பம்பாவின் காதில் கிசுகிசுக்கிறது. மாயம் ஆரம்பமாகிறது.
அசாதாரண ஆற்றல் கொண்ட ஒரு பெண்ணாக பம்பா மாறுகிறார். ஒன்றுமே இல்லாத ஓர் இடத்திலிருந்து எல்லாவற்றையும் படைக்கவேண்டிய கடமை பம்பாவுக்கு வந்து சேர்கிறது. ஆனால் படைக்கவேண்டியது கடவுளின் பணியல்லவா? அப்படியானால் நானும் கடவுளா? கடவுள் என்னிடம் கிசுகிசுத்ததைத் தொடர்ந்து நானும் ஒரு குட்டிக் கடவுளாக மாறிவிட்டேனா?
ஏதுமற்று, அலைந்து திரிந்துகொண்டிருந்த சகோதரர்களான ஹக்கா, புக்கா இருவரும் ஒரு நாள் பம்பாவைச் சந்திக்க நேர்கிறது. உங்களிடமுள்ள தானியங்களை நான் சொல்லும் இடத்தில் சென்று விதையுங்கள். அங்கே மனிதர்கள் தோன்றுவார்கள். கட்டடங்களும் கோட்டைகளும் தோன்றும். அங்கே ஒரு நகரை நிர்மாணியுங்கள். அதை நீங்கள் ஆளுங்கள் என்கிறார் பம்பா. விதைகளிலிருந்து மனிதர்கள் தோன்றமுடியுமா? ஒரு நகரத்தை ஒரே இரவில் உருவாக்கிவிடமுடியுமா? அதை ஆள்வதும் சாத்தியமா? குழப்பத்தோடு தானியங்களை விதைக்கிறார்கள். பம்பா சொன்னபடியே ஒரு நகரம் உருப்பெற்று எழுகிறது.
நான்தான் இனி உங்கள் அரசன் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஹக்கர் உடனே ஒரு வரலாற்றை உருவாக்குகிறார். ‘ஆதியில் ஒரு சந்திரக் கடவுள் இருந்தார். அவர்தான் நமக்கெல்லாம் மூதாதையர். அவருக்கொரு மகன். அவன் பெயர் புதா. பல தலைமுறைகளுக்குப் பிறகு புரூரவன் உதயமானான். அவனுக்கு இரண்டு மகன்கள், யது, துர்வாசர். இவர்களுக்கு தலா ஐந்து குழந்தைகள் என்று சொல்வார்கள். இரண்டே அதிகம் என்று தோன்றுகிறது. நாம் யதுவின் மகன்களின் மகன்களின் மகன். மொத்தத்தில் நாம் புகழ்பெற்ற சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாபாரத அர்ஜூனன் போல. இல்லை, இல்லை, கிருஷ்ணர் போல!’
பம்பாவால் படைக்கப்பட்ட புதிய மக்களுக்கு நாம் எங்கே இருக்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை. காற்றில் கையையும் காலையும் உதைத்து அங்கிருந்து வெளியில் போக முயற்சி செய்துகொண்டிருந்தனர். அவர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியவில்லை. அவர்கள் யாருமே கிடையாது என்பதுதான் உண்மை. ஆனால் அதை அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது அல்லவா?
எனவே அவர்களுக்கென்று சில உண்மைகளை பம்பா உருவாக்கிக்கொடுக்கவேண்டியிருந்தது. வரலாறு அற்ற, எனவே எந்தவித அடையாளமும் அற்ற மனிதர்களைத் தூக்கி நிறுத்தும் பொருட்டு சில கதைகளைப் புனைந்து அவர்கள் காதுகளில் கிசுகிசுக்கிறார் பம்பா. கடவுள் பம்பா சிறுமி பம்பாவுக்குச் செய்தது போல். கடவுள் அளித்த பொறுப்பை பம்பா ஏற்று சுமப்பதுபோல் பம்பா அளித்த பொறுப்பை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு அது தெரியாவிட்டாலும் பம்பாதான் அவர்களை உருவாக்கிய கடவுள் அல்லவா?
பம்பா தனது மக்களுக்கு ஒரு கடந்த காலத்தை வடிவமைக்கிறார். அந்தப் பழங்காலம் வண்ணமயமானதாக இருந்தது. அதில் அவர்களுக்கென்று ஒரு சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களின் மூதாதையர்கள் வளமானவர்களாக, வீரதீரமிக்கவர்களாக, பண்பாளர்களாக இருந்தனர். நீ வாழும் இந்த இடம் எப்படிப்பட்டது தெரியுமா என்று அதன் மகத்துவத்தையும் பம்பா எடுத்துரைக்கிறார். எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில், எத்தனை மகத்தான ஒரு நிலத்தில், எந்த அளவுக்குப் பெருமிதத்துக்குரிய வரலாற்றுப் பின்புலத்தோடு நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரிந்ததும் மக்கள் உண்மையிலேயே நிறைவு கொள்கின்றனர்.
பம்பா முழுக்க முழுக்கக் கற்பனையைக் கொண்டுதான் இந்த வரலாற்றை உருவாக்கினார் என்று சொல்லமுடியாது. தன் நினைவுகளிலிருந்தும் காதில் விழுந்த ரசிக்கத்தக்க கதைகளிலிருந்தும் திரட்டியெடுத்து மக்களின் வரலாற்றை அவர் கட்டமைக்கிறார். ஏற்கெனவே சொல்லப்பட்டவையாக இருந்தாலும் இந்தக் கதைகளுக்கு கண், காது, மூக்கு, இதயம் எல்லாம் பொருத்தி புதியனவாக மாற்றுகிறார். அந்தக் கதைகள் ஒரே நேரத்தில் புதியனவாகவும் பழையனவாகவும் இருக்கின்றன.
மரபுகளை உருவாக்கமுடியும் என்று எரிக் ஹாப்ஸ்பாம் கூறியதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். தேசியவாதம், வரலாற்றுப் பெருமிதம், மூதாதையர்களின் அருமை பெருமைகள், கடந்த காலத்தில் நிலவிய பொற்காலம் போன்றவையெல்லாம் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதையும் அசை போடலாம்.
பம்பா தனது புதிய உலகைப் பழைய உலகின் சாயலில்தான் படைக்கிறார் என்றாலும் அதில் பல திருத்தங்களை மேற்கொள்கிறார். பம்பாவின் விஜயநகரத்தில் ஒரு பெண் அழகுப் பதுமையாக மட்டும் இருக்கவேண்டியதில்லை. ஆணின் நிழலாக அவள் சுருங்கவேண்டியதில்லை. அம்மாவைப் போல் கணவனின் சிதைக்குள் பாய்ந்து யாருக்கும் எதையும் அவள் நிரூபிக்கவேண்டியதில்லை. அவள் ஒரு தனித்த உயிர். சிந்திக்கும் உயிர். சுயமாக முடிவுகள் எடுக்கக்கூடிய, சுயமாகக் கனவுகள் காணக்கூடிய, சுயமாகப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் ஆற்றல் கொண்ட ஓர் உயிர். அவள் போரிடுவாள். அரசரைப் பாதுகாப்பாள். அரசரைத் தேர்ந்தெடுப்பாள். ஆளவும் செய்வாள். பம்பாவின் விஜயநகரத்தில் பெண் வழக்கறிஞர்கள், பெண் தொழிலாளர்கள், பெண் பல் மருத்துவர்கள், பெண் இசைக்கலைஞர்கள் அனைவரும் இருப்பார்கள்.
ஓர் அழகிய இளம் பெண்ணாக வளர்ந்த பிறகு மேலும் பம்பா வளர்வதை நிறுத்திக்கொள்கிறார். அவர் உருவாக்கிய நகரம் மறையும்வரை அவரால் மறையமுடியாது. அது கடவுளின் வரம். சாபமும்தான். பம்பாவுக்குக் காதல் கிடைக்கிறது. அரண்மனை கிடைக்கிறது. மகன்களும் மகள்களும் கிடைக்கிறார்கள். ஆனால் ஹக்காவும் புக்காவும் மறைந்த பிறகு எல்லாமே மாறிப்போகிறது. பம்பா வளர்வதை நிறுத்திக்கொண்டாலும் அவர் படைத்த உலகம் வளர்ந்து பெரிதாகிக்கொண்டே போகிறது. மன்னர்கள் அடுத்தடுத்து வந்து போகிறார்கள். எதிரிகள் அடுத்தடுத்து உருவாகிக்கொண்டே போகிறார்கள். மதவாதம் வளர்கிறது. பஞ்சமும் பட்டினியும் பெருகுகிறது. தானியங்களிலிருந்து உருவான மக்கள் விரோதம் கொள்கிறார்கள். சண்டையிடுகிறார்கள். மடிகிறார்கள். புதிய மக்கள் புதிய நினைவுகளோடு தோன்றுகிறார்கள். புதிய அரசர்களுக்கு பம்பா தேவைப்படவில்லை.
பம்பா தன் மகள்கள் கிழவிகளாக மாறுவதையும் மரிப்பதையும் காண்கிறார். அம்மா தீக்குள் பாய்வது வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றதைப் போல் தன் குழந்தைகள் இறப்பதையும் அவர் பார்த்துக்கொண்டு நிற்கவேண்டியிருந்தது.
பம்பாவை, பம்பாவின் கதைகளை (வரலாறுகளை) நம்பியவர்கள் மறைந்து புதிய தலைமுறை உருவாகி வந்தபோது அவர்கள் பம்பாவை யார் நீ என்றனர். அவர் சொல்வதை அவர்கள் நம்ப மறுத்ததோடு சந்தேகமும் கொண்டனர். கடவுள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சூனியக்காரியாக ஏன் இவள் இருக்கக்கூடாது?
எல்லாக் கடவுள்களையும்போல் பம்பாவும் தன் வாழ்விலிருந்து ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறார். உங்கள் ஆற்றலைக் கொண்டு நீங்கள் உயிர்களைப் படைத்துவிடமுடியும். ஆனால் ஒரு கட்டத்துக்குமேல் நீங்கள் விரும்பியபடியெல்லாம் அவர்களை மாற்றியமைக்கமுடியாது. உங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவர்களைத் திருத்தியமைக்கவும் முடியாது. உங்கள் குழந்தைகள்தான் என்றாலும் அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டிய அவசியமற்றவர்கள். நீங்கள் விரும்பும் முடிவுகளை அவர்கள் எடுக்கவேண்டியதில்லை. உங்கள் விருப்பங்கள் அவர்களுடைய விருப்பங்களாகவும் இருக்கவேண்டிய தேவையில்லை. மூச்சு கொடுப்பதோடு உங்கள் வேலை முடிந்துவிடுகிறது. நீங்களாகவே விலகிச் செல்ல மறுத்தால் விரட்டப்படுவீர்கள்.
கடந்த காலத்தை ஏன் நினைவில் வைத்திருக்கவேண்டும்? அதை ஏன் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்று யோசிக்கிறது விஜயநகரம். குழப்பங்களும் முரண்களும் கலந்திருக்கும் பழமை என்னும் பெரும்குப்பையை நாம் ஏன் வீசி எறிந்துவிடக்கூடாது? இன்றைய தினத்திலிருந்து வாழ்வைத் தொடங்கினால் போதாதா? அதையும் மீறி ஏதோவொரு தினத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டுமென்றால் அது ஏன் நாளைய தினமாக இருக்கக்கூடாது? இப்படியொரு முடிவுக்கு வந்ததும் விஜயநகரம் துடிதுடிப்பான இடமாக, எதிர்காலத்தை வரவேற்கும் ஆற்றல்மிக்க இடமாக மாறிப்போனது. அதே சமயம் வரலாற்றிலிருந்து விலகி வந்ததன்மூலம், முந்தைய குற்றங்களை மீண்டும், மீண்டும் இழைக்கும் ஒரு சுழற்சியில் அந்நகரம் சிக்கிக்கொண்டது. அந்தச் சூழற்சியில் சிக்கிக்கொள்ள மட்டுமே முடிந்தது பம்பாவால்.
நான் வளர்த்த குழந்தைகள் என்னை நீங்கியதுபோல் நான் வளர்த்த நகரமும் என்னை மறந்து, முன்னகர்கிறதா? நான் இல்லாத ஓர் உலகம் எனக்குமுன்பு இருந்ததுபோல் நான் இல்லாத ஓர் உலகம் எனக்குப் பிறகு இருக்கும் போலும். எனில், எனக்கான இடத்தை எனக்குப் பின் யார் தீர்மானிப்பார்கள்? என் வரலாற்றை யார் எழுதுவார்கள்? அதில் நான் எப்படி இருப்பேன்? என் கனவுகளும் செயல்களும் விழைவுகளும் அதில் எவ்வாறு அர்த்தப்படுத்தப்படும்? என்னை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள்? என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நிச்சயம் என்னை அவர்கள் ஒரு நல்ல அம்மா என்று அழைக்கப்போவதில்லை. ஒரு நல்ல மனிதராக ஒருவேளை நான் நினைவுகூரப்படுவேனா? அல்லது அதுவுமே இல்லையா?
பம்பா யார் என்பதை கிருஷ்ணதேவராயர் இறுதியாக உணர்கிறார். பம்பாவால் கிருஷ்ணதேவராயரை மணந்துகொள்ளமுடியாவிட்டாலும் அவருடைய ராணியாக இருக்க ஒப்புக்கொள்கிறார். கிருஷ்ணதேவராயர் போருக்குச் செல்லும்போது ஆட்சி பம்பாவின் கரங்களுக்கு வந்து சேர்கிறது. கிடைத்த வாய்ப்பில் பம்பா தன் கனவுகளில் சிலவற்றைச் செயல்படுத்த முயல்கிறார். ஆண் குழந்தைகளுக்கு இணையாகப் பெண் குழந்தைகளும் படிக்கும் வண்ணம் பள்ளிகளை அதிகப்படுத்துகிறார். கோவிலில் பக்தியையும் பள்ளியில் கல்வியையும் நிலைநிறுத்தி, இரண்டும் கலக்கவேண்டிய அவசியமில்லை என்று உத்தரவிடுகிறார். கல்வி கற்பிக்கும் அதிகாரத்தைப் பிராமணர்களிடமிருந்து எடுத்துப் பரவலாக்குகிறார். மத அடிப்படைவாதத்தை விலக்குகிறார். காதலைக் கொண்டாடுகிறார்.
நான் உருவாக்கிய உலகம் ஒரு நாள் வரலாற்றில் கலக்கும். உலக வரலாறு என்னும் கடலில் என் கதைகளும் ஒன்று சேரும் என்று பம்பா நம்புகிறார். இறுதியில் கிருஷ்ணதேவராயரும் பம்பாவைக் கைவிடவே செய்கிறார். பதிலுக்கு வரலாறு அவரையும் விஜயநகரத்தையும் சேர்த்து கைவிடுகிறது.
சல்மான் ருஷ்டியின் வயது 75. விக்டரி சிட்டி அவருடைய 21ஆவது நூல். 12 ஆகஸ்ட் 2022 அன்று நியூ யார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக மேடையில் அமர்ந்திருந்த சல்மான் ருஷ்டியை 24 வயது ஹதி மாத்தார் என்பவன் பலமுறை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றான். உயிர் பிழைத்து மீண்டாலும், மரணத்தின் நிழலில் இருந்து இன்னமும் முழுவதும் வெளியில் வந்துவிடவில்லை என்கிறார் ருஷ்டி. அவருடைய வலது கண் பார்வையிழந்து, இருள் படர்ந்து கிடக்கிறது. ஐபேட்டில் எழுத்துருக்களைப் பெரிதாக்கியும் வெளிச்சத்தைக் கூட்டிக்குறைத்தும் படிக்க முடிகிறது என்கிறார். நன்றாகவே பேசுகிறார் என்றாலும் கீழுதடு தன்னிச்சையாகக் கீழே தொங்கிவிடுகிறது என்கிறார் அவரைச் சந்தித்திருக்கும் டேவிட் ரெம்னிக். விரல் நுனிகள் உணர்வற்றுவிட்டாலும் மெல்ல, மெல்ல எழுத முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்கிறார் ருஷ்டி. உறங்கினால் கொடுங்கனவுகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன.
மரணத்திலிருந்து மீண்டு வந்தவர் எனும் அனுதாபத்தோடு தன் புதிய நாவலை ஒருவர் அணுகவேண்டியதில்லை என்கிறார் ருஷ்டி. நீங்கள் கதையால் ஈர்க்கப்படவேண்டும். கதையால் ஆக்கிரமிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறேன் என்கிறார். உங்களைக் கொல்ல முயன்றவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதபோது நினைப்பதற்கு என்ன இருக்கிறது என்கிறார் ருஷ்டி.
பம்பா தன் கதையைத் தானே எழுதத் தொடங்குகிறார். அவர் கதையை அவரைவிட வேறு யாரால் நன்றாகவும் உண்மையாகவும் சொல்லமுடியும்? பம்பா தன் வாழ்வில் தெரிந்துகொண்ட உண்மை ஒன்றுதான். இறுதியில் சொற்களே வெல்கின்றன. அந்தச் சொற்கள் என்னுடையவை. எனவே நான் வெல்கிறேன். எனக்கு மரணமில்லை.
0
மிகவும் அருமை பதிவு