Skip to content
Home » என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

ரவீஷ்குமார்

இன்று தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் ஏன் நம்மால் செய்தியைக் காணமுடியவில்லை எனும் கேள்வியை ஒருவரும் எழுப்பியதுபோல் தெரியவில்லை என்கிறார் ரவீஷ் குமார். இது ஊடகத்துறை தொடர்பான பிரச்சினையல்ல, நம் ஜனநாயகம் பற்றிய மிகவும் அடிப்படையான பிரச்சினை என்கிறார் அவர்.

ஊடக அலுவலகங்கள் இனியும் செய்தியாளர்களை மையம் கொண்டு இயங்குவதில்லை. மூலை முடுக்குகளில் அலைந்தும் திரிந்தும் செய்திகள் இன்று சேகரிக்கப்படுவதில்லை. எடிட்டர்களும் மூத்த எடிட்டர்களும் குழு எடிட்டர்களும் நிர்வாக எடிட்டர்களும் தேசிய எடிட்டர்களும் அரசியல் எடிட்டர்களும் இணை எடிட்டர்களும் இன்றும் சில வகை எடிட்டர்களும்தான் ஊடகத்துறையின் இதயமாக மாறிப்போயிருக்கிறார்கள். இவர்களுடைய கவலை ஒன்றுதான். விவாதப்பொருளாக இன்று எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

மக்களும்கூட இதுதான் இதழியல் என்று நம்ப ஆரம்பித்துவிட்டனர். ‘எங்கள் குடியிருப்புக்கு அருகில் ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதைப் பற்றி விவாதிப்பீர்களா?’ என்று அவர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தச் சம்பவத்தை நீங்கள் வந்து ‘கவர்’ செய்வீர்களா என்றோ ‘ரிப்போர்ட்’ செய்வீர்களா என்றோ அவர்கள் கேட்பதில்லை. ரிப்போர்ட்டர்கள் காணாமல் போனது இப்படித்தான்.

‘ஒன்பதிலிருந்து ஐந்து வரை வேலையில் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் இதழியல் துறையில் வந்தேன்’ என்று சொல்லும் பலர் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றனர். இன்று இதழியல் அப்படியான ஒரு துறையாக மாறிவிட்டது. இல்லை, அதைவிடவும் மோசமடைந்துவிட்டது என்கிறார் ரவீஷ். பழைய பாணியிலான இதழியலில், பழைய பாணியிலான விழுமியங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை இன்று இத்துறையில் நீங்கள் காணமுடியாது. அவர்கள் வெளியேறிவிட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

2019 பொதுத்தேர்தல் முடிவுகளை ஊடக சுதந்திரம் எனும் கருத்தாக்கத்தின் தோல்வியாகவும் காணமுடியுமா என்னும் கேள்வியை ரவீஷ் எழுப்புகிறார். இதற்கான விடை தெரியவில்லை. ஆனால் என்ன தெரிகிறதென்றால், இந்திய மக்களில் பெரும் பகுதியினர் ஊடக சுதந்திரத்தை முக்கியமானதாக. கருதவில்லை. ஊடகத்துறை இன்று சந்தித்து வரும் சரிவை அவர்கள் கவனித்ததாகவோ கவலைகொண்டதாகவோ தெரியவில்லை.

அனுஷா எப்போதும் ரவீஷ் குமார் பற்றி வீட்டில் பேசிக்கொண்டே இருப்பார். பெரும்பாலும் உணர்ச்சிக்கொந்தளிப்போடு. எங்கள் தொலைக்காட்சிப் பெட்டி சேர்ந்தாற்போல் ஒரு மணி நேரம் ஓடிக்கொண்டிருக்கும் என்றால் அது என்டிடிவி ‘பிரைம் டைம்’ நேரத்தில்தான்.

கோட், சூட் அணிந்து, வெள்ளையும் கறுப்பும் கலந்த ஒருவிதமான பரட்டைத்தலையோடு, கரகரத்த குரலில் ரவீஷ் குமார் பேசுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இந்தி தெரியாது என்பதால் அவர் இன்ன பொருளில்தான் இன்று பேசுகிறார் என்பதைக் கடந்து அவர் சொற்களைப் புரிந்துகொண்டதில்லை. நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அல்லது விளம்பரங்கள் தோன்றும்போது ரவீஷ் அதுவரை சொன்னதைச் சுருக்கமாக அனுஷா எனக்கு விளக்குவதுண்டு. தேர்தல் முடிவுகள், செல்லாப் பணம் அறிவிப்பு, ஷாஹின்பாக், விவசாயிகள் போராட்டம், பல்கலைக்கழகப் போராட்டங்கள் போன்றவற்றை ரவீஷ் குமார் எவ்வாறு ‘கவர்‘ செய்தார் என்பதை அனுஷாமூலம் தெரிந்துகொண்டேன். முக்கியமான அரசியல் நிகழ்வுகளின்போதெல்லாம், ரவீஷ் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று அனுஷாவிடம் அவ்வப்போது கேட்பதுண்டு.

பிற செய்தி சேனல்கள்போல் அன்றைய பரபரப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதாக்கி, கூக்குரலிடும் வழக்கம் அவருக்கு இல்லை. அவர் முக்கியம் என்று நம்பும், மக்கள் பொருட்படுத்தவேண்டும் என்று கருதும் ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு, நிதானமான குரலில், உணர்ச்சிக் கொந்தளிப்பின்றி அலசுவார்.

வீதிகளில் இறங்கி மக்களோடு உரையாடி, அவர்களுடைய நாடித்துடிப்பு அறிந்து, தனது நிகழ்ச்சிகளை அவர் வடிவமைத்துக்கொள்வது வழக்கம். கல்வி, வேலை வாய்ப்பு இரண்டையும் ரவீஷ் அளவுக்குத் தொடர்ச்சியாக விவாதித்த இன்னொரு செய்தியாளர் இல்லை என்று படித்திருக்கிறேன். இன்று மாணவர்கள் எந்த நோக்கோடு ஒரு கல்லூரியில் இணைகின்றனர்? படித்து முடித்த பிறகு அவர்களுக்கு என்ன ஆகிறது? அவர்களில் எவ்வளவு பேருக்கு அரசுப் பணிகள் கிடைக்கின்றன? பணி நியமனம் சரியான முறையில் நடைபெறுகிறதா?

பிகாரிலுள்ள கிழக்கு சம்பரான் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1974ஆம் ஆண்டு பிறந்தவர் ரவீஷ் குமார். பள்ளிப்படிப்பை பாட்னாவிலும் பட்டப்படிப்பை டெல்லியிலும் பயின்றவர். இளங்கலை, முதுகலை இரண்டிலும் வரலாற்றைத் தேர்ந்தெடுத்தவர். முறையாக இதழியல் பயின்றார். அவர் மனைவி நொயோனா தாஸ்குப்தா வரலாறு கற்பித்து வருகிறார். 2019ஆம் ஆண்டு ரவீஷ்குமாருக்கு மகசாசே விருது அளிக்கப்பட்டது. முன்னதாக, ராம்நாத் கோயங்கா விருதை இருமுறை பெற்றுள்ளார்.

இந்தி பேசுபவர்கள் மத்தியில் ரவீஷ் குமார் ஒரு முக்கியமான நட்சத்திரம். துணிவோடு உண்மையை உரக்கப் பேசுபவராக, மக்களோடு நிற்பவராக, மக்களின் குரலில் பேசுபவராக, நேர்மையான இதழியலாளராக அவர் அங்கே அறியப்படுகிறார். அதனாலேயே தவிர்க்கவியலாதபடி இன்னொரு தரப்பினரால் வெறுக்கப்படும், தூற்றப்படும், இணைய வெளியில் தாக்கப்படும் ஓர் ஆளுமையாகவும் அவர் திகழ்கிறார்.

இந்தி மட்டுமே அறிந்து வைத்திருக்கும் ஒருவர், அவர் எவ்வளவு ஆற்றல்மிக்கவராக இருந்தாலும் ஒரு சிறிய வட்டத்துக்குள்தான் இயங்க வேண்டியிருக்கிறது என்பதை ரவீஷ் குமார் நன்கு அறிவார். அரிதாக அவருடைய கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதுண்டு. ஃபேஸ்புக்கில் அவர் இந்தியில் எழுதுவதை அங்கேயே கிடைக்கும் மொழிபெயர்ப்பு வசதியைக் கொண்டு சில சமயம் படிக்க முயல்வேன். உடைந்து, சிதைந்த ஒரு வடிவம்தான் கிடைக்கும்.

2019 தேர்தலில் நாம் ஏன் தோற்றுப்போனோம் என்பதை விவரித்து தனது வலைப்பதிவில் ரவீஷ் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என்னை வாசிக்கச் செய்தார் அனுஷா. அந்த மொழிபெயர்ப்பை ரவீஷோடு பகிர்ந்துகொள்ள விரும்பிய நான் அவர் மின்னஞ்சலைக் கண்டறிந்து, ‘இது சரியாக வந்திருக்கிறதா என்று பாருங்கள்’ என்று ஒரு குறிப்பெழுதி அனுப்பி வைத்தேன். ரவீஷிடமிருந்து உடனடியாக பதில் வந்தது. ‘சிரமம் எடுத்து மொழிபெயர்த்த அனுஷாவுக்கு நன்றி. நன்றாக இருக்கிறதா என்று பார்க்கும் அளவுக்கு எனக்கு ஆங்கிலம் தெரியாது. நீங்கள் அதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.’

ரவீஷின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இந்தியில் வெளிவந்தபோது (போல்னா ஹி ஹை. ஆங்கிலத்தில் The Free Voice) உடனே வாங்கிப் படித்துவிட்டு, இது கண்டிப்பாகத் தமிழில் வரவேண்டும் என்றார் அனுஷா.

டிசம்பர் 2022இல் ரொமிலா தாப்பரைப் பார்க்கச் சென்றிருந்தோம். ரவீஷ் குமார் என்டிடிவியிலிருந்து விலகியிருந்த மாதம் அது. எங்கள் உரையாடலுக்கு நடுவில் ரவீஷ் குமார் பற்றி அனுஷா கேட்டபோது, ‘தொடர்ந்து கவனித்து வருகிறேன். நல்ல செய்தியாளர். நல்ல மனிதர்’ என்றார் தாப்பர். பிறகு என்னிடம் திரும்பி, ‘நீ ஏன் ரவீஷின் ராஜினாமா உரையைத் தமிழில் மொழிபெயர்க்கக்கூடாது? இயன்றவரை பல இந்திய மொழிகளிலும் அவர் உரை வெளிவரவேண்டியது அவசியம்’ என்றார். வரலாற்றாசிரியர் உமா சக்கரவர்த்தியைச் சந்தித்தபோது அவரும் ரவீஷைக் கவனப்படுத்தினார். இன்று அவரைப் போல் அக்கறையோடு இதழியல் துறையில் செயல்படுவதற்கு யார் இருக்கிறார்கள் என்றார் கவலையோடு.

1 டிசம்பர் அன்று ரவீஷ் ஆற்றிய ராஜினாமா உரையை ஓரிரு வாரங்களில் அனுஷா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முடித்துவிட்டார். பல மணி நேரங்கள் திரும்பத் திரும்பக் கேட்டு, பல இடங்களில் கண்கலங்கியபடியே அவர் அடித்தும் திருத்தியும் எழுதிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். என் பணி ஒப்பீட்டளவில் எளிமையானது என்றாலும் தமிழாக்கம் செய்ய இவ்வளவு காலம் ஆகிவிட்டது!

இனி வருவது அவர் உரை.

0

வணக்கம், நான் ரவீஷ் குமார்!

நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இனி வருவதைத் தைரியமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்திய ஊடகத் துறையில் பொற்காலம் என்றொன்று எப்போதும் இருந்ததில்லை. அதாவது, நல்ல அம்சம் ஒவ்வொன்றும் கண்டறியப்பட்டு வேகவேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இது தவிர்க்கமுடியாதது.

நம் நாட்டில் பலவிதமான செய்தி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாமே அரசின் செல்லப் பிராணிகள். இதன் விளைவாக ஊடகத்துறை முழுமையான அழிவைச் சந்தித்துள்ளது.

எல்லோருமே இதழியலில் இயங்கி வருவதாகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகத்துறையை நசுக்கும் அரசோடு இணைந்து பணியாற்றுபவர்களாக அறியப்படுபவர்களும்கூட இவ்வாறுதான் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். சூழல் மோசமாக உள்ள இன்றைய நிலையில், ‘நாங்கள் உயர்ந்த இதழியல் சேவை புரிந்து வருகிறோம்’ என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது முதலில் சந்தேகம்தான் தோன்றுகிறது.

எனது நிறுவனம் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. உணர்வுப்பூர்வமான இத்தருணத்தில் பக்கச்சார்பின்றி என்னால் பேசமுடியும் என்று தோன்றவில்லை. நான் என்டிடிவியில் 26 முதல் 27 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். இந்த நீண்ட பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருக்கிறேன். பல இளைய, புதிய நண்பர்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவர்களில் ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது சத்தியமற்றது. முன்பு பணியாற்றியவர்களும் சரி, இப்போது பணிபுரிந்து கொண்டிருப்பவர்களும் சரி, பலரும் அவர்களில் ஒரு பகுதியாக என்னைப் பார்க்கிறார்கள்.

ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதோ ஒன்றை நான் பெற்றிருக்கிறேன். இதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் வாழ்வையும் அனுபவங்களையும் அவர்கள் பல வகைகளில் செழுமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய முகமும் என் மனக்கண்ணில் விரிகிறது.

மணப்பெண் தன் வீட்டைப் பிரிந்து செல்லும்போது தன் தாய் வீட்டை அவ்வப்போது திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே செல்வது வழக்கம். நான் இன்று அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறேன். ஒருமுறை நானும் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன்.

தொலைக்காட்சி என்பதற்கு ஒரு பொருள்தான் இருக்கிறது என்று என்டிடிவி எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த ஒரு பொருள், குழு. ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் நட்சத்திரமாக மாற்றப்படும்போது இந்தப் பொருள் வலுவிழக்கிறது. ஒரு குழு வலுவாக இருக்கும்போதுதான் செய்தி நிறுவனமும் வலுவாக இருக்கிறது.

2

ஆகஸ்ட் 1996இல் ஒரு மொழிபெயர்ப்பாளராக என்டிடிவியில் இணைந்தேன். அதற்கு முன்பு பல மாதங்கள் கடிதங்களைச் சீர்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். நேயர்கள் தங்கள் கருத்துகளைக் கடிதம் வாயிலாக அனுப்பிக் குவித்துக்கொண்டிருப்பார்கள். பல்வேறு நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வந்து சேர்ந்த கடிதங்கள் அவை. ஒரு சேனலுக்கு எவ்வாறு நேயர்கள் கூட்டம் உருவாகிறது என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்தக் கடிதங்களை எல்லாம் படித்து அதன் சாரத்தைச் சம்பந்தப்பட்ட தொகுப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வழங்குவதுதான் என் வேலை.

இன்றுவரை இது என் பணியின் ஒரு பகுதியாக நீடிக்கிறது. இன்றும் நூற்றுக்கணக்கான ஈமெயில்கள் வந்து கொண்டிருக்கின்றன. அழகிய கையெழுத்தில் கடிதங்களும் வருவதுண்டு. எல்லாவற்றையும் வாசிக்கிறேன். முடிந்தவரை அனைவருக்கும் பதிலளிக்கவும் முயல்கிறேன். சில சமயம் என் சோர்வுகளையும் நான் அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன். ஒளிவு மறைவின்றி என் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான நேயர்கள் என் கடிதங்களைப் பெற்றிருப்பார்கள். விரல்கள் வலிக்கத் தொடங்கியவுடன் தட்டச்சு செய்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வகையில் நான் ஆரம்பத்தில் என்டிடிவியில் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைத்தான் இன்றும் செய்து கொண்டிருக்கிறேன். எதிர்காலத்திலும் இதையேதான் செய்வேன்.

எதிர்பார்ப்புகள், விமர்சனங்கள், ஆலோசனைகள், எதிர்வினைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் நான் உறங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம் பணி நேரம் என்று அனைத்தையும் நேயர்களாகிய நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். உங்களோடு உரையாட ஆரம்பித்த பிறகு நான் தனியாக இருந்ததில்லை. உங்களில் ஒரு பகுதியாகவே என்னை உணர்கிறேன். இப்போது எனக்கான தனிமை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு குருவியால் தன் கூட்டை இனம் காண முடியவில்லை. கூடு கலைக்கப்பட்டுவிட்டது. ஆனால் பரந்து விரிந்திருக்கும் முடிவில்லாத ஆதாயத்தை அது காண்கிறது.

3

அதன்பின் நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக மாறினேன். செய்திக் குறிப்புகளை ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழிபெயர்த்தேன். அதன்பின் ஒரு ரிப்போர்ட்டராக மாறினேன். ரவீஷ் கா ரிப்போர்ட் (ரவீஷின் அறிக்கை) வாயிலாக நிறைய கற்றுக்கொண்டேன். கடிதப் பரிமாற்றங்களில் ஆரம்பித்து ஒரு குரூப் எடிட்டராக மாறுவதற்கான களத்தை என்டிடிவி எனக்கு அமைத்துக் கொடுத்தது. அந்த நபர் இன்று விடைபெற்றுச் செல்கிறார். இப்படி ஒரு சிக்கல் ஒருநாள் நேரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கும்போது எனக்குப் பிடிக்கவில்லை.

கடிதங்களைச் சீர்படுத்தும் எளிய பின்னணியில் இருந்து வந்தவன் என்பதாலேயே என்னை மதிப்பிடும்போது நீங்கள் கருணை காட்டத் தேவையில்லை. நான் அந்தப் பிரபலமான தேநீர் விற்பனையாளர் போன்றவன் இல்லை. விமானத்திலிருந்து இறங்கி வந்து திடீரென்று தேநீர் விற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்பவரல்ல நான். பரிதாபப்பட வேண்டும் என்பதற்காகவோ, எனது போராட்டம் உயர்ந்தது என்பதற்காகவோ நான் இதையெல்லாம் சொல்லவில்லை. நாட்டில் ஒவ்வொருவரின் போராட்டமும் சிகரத்தை அடைவதற்கு ஒப்பானதுதான். எய்ம்ஸ் மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் நோயாளிகளின் குடும்பத்தினரைச் சந்தியுங்கள். உங்கள் பிரச்சனை எவ்வளவு சிறியது, அவர்களுடையது எவ்வளவு பெரியது என்பது புரியும்.

இன்றைய சூழலில் முக்கியப் பதவியில் இருப்பவர்கள் தங்கள் பதவியைக் கைவிடவேண்டி இருக்கிறது. நிறுவனங்கள் நொறுங்குவதைப் பார்க்கிறோம். சூறாவளியில் மக்கள் சிக்கித் தவிப்பதையும் பார்க்கிறோம். இதே காலகட்டத்தில் ஒரு புதிய நிறுவனம் உருவாவதையும் நான் பார்த்தேன். அது மக்கள் என்னும் நிறுவனம். நேயர் என்னும் நிறுவனம். எண்ணிக்கையில் நீங்கள் குறைவாக இருந்தாலும் ஜனநாயகம் என்னும் தாவரம் காய்ந்து உலர்வதைத் தடுக்க நீங்கள் உதவுகிறீர்கள்.

என்டிடிவியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது அதை எனக்கான, தனிப்பட்ட ஒரு வாய்ப்பாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. உங்கள் பிரதிநிதியாக இயங்குவதற்கான வாய்ப்பாகவே அதை எடுத்துக்கொண்டேன். எனவே எனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளிலும் நான் உங்கள் கதைகளையே பேசினேன். நான் உங்களுடையவனாகவே மாறத் தொடங்கினேன். என்மீது நீங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களைப் போன்ற நேயர்களால்தான் ஒரு ‘பப்ளிக் நியூஸ் ரூம்’ உருவானது. ஏதோ ஓர் அலுவலகத்தில் அல்ல, உங்கள் அறைக்குள் அந்த நியூஸ் ரூம் அமைந்திருந்தது.

உலகம் முழுவதிலும் இருந்து பலவிதமான நேயர்கள் எனக்கு உதவ முன் வந்தனர். அதற்காக நீங்கள் எந்தப் பலனும் எதிர்பார்த்தது கிடையாது. ஓர் உதவியாகவும்கூட நீங்கள் அதை நினைத்தது கிடையாது. எனக்காக வெளிநாடுகளில் இருந்து நீங்கள் காணொளிக் காட்சிகளை அனுப்பி வைத்தீர்கள். எனக்காக நீங்கள் ஆய்வுகள் மேற்கொண்டீர்கள். எனது ஒவ்வொரு நிகழ்ச்சியும் நேயர்களான உங்கள் கூட்டு முயற்சிகளால் சாத்தியமானது. நான் கண்டறிந்து வெளிப்படுத்தியதை நீங்கள் ஏற்று, ஊக்கமூட்டினீர்கள். நான் தவறு செய்யும்போது நீங்கள் திட்டவும் தயங்கியதில்லை. என்னை நீங்கள் செழுமைப்படுத்தியிருக்கிறீர்கள்.

மாணவர்கள், நிபுணர்கள், இங்கிருப்பவர்கள், அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் என்ற நீங்கள் அனைவரும் குடிமக்களாக மட்டுமில்லாமல் என்னை ஆதரிப்பதன்மூலம் பத்திரிக்கையாளர்களாகவும் மாறினீர்கள். ஊடகம் என்னும் சிறிய தீவைப் பாதுகாப்பதற்கு நீங்கள் அனைவரும் உதவினீர்கள்.

நேயர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதையும் ஒரு கட்டத்தில் அதிகரித்ததையும் கண்டது எனக்கு மகத்தான அனுபவமாக இருந்தது. உங்களில் பலர் பல்வேறு மொழிகளில் இருந்து பலவற்றை மொழிபெயர்த்து அளித்தீர்கள். தக்க முறையில் எனது போதாமைகளை, இடைவெளிகளை நிரப்பி உதவியதோடு, ‘பிரைம் டைம்’ துல்லியமாக அமைவதற்கும் உதவினீர்கள். அதனால்தான் சொல்கிறேன், அது எனது ‘பிரைம் டைம்’ அல்ல, உங்களுடையதும்தான்.

நிகழ்ச்சி உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாதபோது உங்கள் அதிருப்தியை நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் உண்மையிலேயே மகத்தானவர். உங்களை எனது எடிட்டர்களாகவே நான் கருதுகிறேன்.

ஒரு மரம் பரந்து விரிந்து, தனக்கான நீரைச் சேகரித்துக் கொள்கிறது. உங்களைப் போன்ற நேயர்கள் காரணமாகவே ரவீஷ் குமார் போன்ற ஒருவன் உருவாகமுடிகிறது. மரம் எப்போதெல்லாம் வறட்சியைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் நீர் பாய்ச்சி, மெருகேற்றுகிறீர்கள்.

உங்களைப் போன்ற நேயர்களால்தான் இன்று பல ஊடகவியலாளர்கள் யூட்யூபிலும் ட்விட்டரிலும் உருவாகிறார்கள். இவர்கள் அனைவருடைய பின்னாலும் நீங்கள்தான் இருக்கிறீர்கள். சந்தா செலுத்துவதன்மூலம் பலருடைய தளங்களை நீங்கள் வாழ வைக்கிறீர்கள்.

ஜனநாயகத்தில் எந்த ஒரு நிறுவனமும் கண்ணில் தென்படாதபோது, நீதிமன்றம் பலமிழந்து கிடக்கும்போது, உயிர்ப்போடு இருப்பவர்கள் நீங்கள்தான். இன்று நீங்கள்தான் மிகப்பெரிய ஊடக நிறுவனம். இதழியலை எந்த நிறுவனத்திலும் இன்று தேடமுடியாது. உங்களைப் போன்ற நேயர்களிடம்தான் அது வாழ்கிறது. உங்கள் ஆதரவில்தான் ஊடகவியலாளர்களால் கேள்விகளை எழுப்பமுடிகிறது. இதுதான் உங்களுடைய மிகப்பெரிய பங்களிப்பு.

நாங்கள் நினைத்தால் மக்களின் குரலை முழுமையாக நசுக்கிவிட முடியும் என்று சிலர் நினைக்கின்றனர். மக்களைத் திசை திருப்பி, வெறுப்பு என்னும் நஞ்சைக் கலந்து, வகுப்புவாத உணர்ச்சிகளுக்கு இடம் அளிக்கமுடியும் என்றும் மக்களின் வாயை அடைத்து, ஜனநாயகத்தை முழுமையாக நீக்கிவிட முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் விரும்புவதுபோல் ஒருவேளை ஜனநாயகம் இல்லாமல் போகலாம். ஆனால் ஜனநாயகத்தின் மீதான பெரும் விருப்பம் ஒருபோதும் மறையாது.

4

சில தாய்மார்கள் என் தலையை வருடிக் கொடுத்திருக்கிறார்கள். சிலர் உரிமையோடு என் கன்னத்தில் தட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் என் பூச்சாடியில் ரோஜாவை மலரை வைக்கிறார். என் உடல் நலன் மீது அக்கறை கொண்டு ஒருவர் சனே கா சத்து (ஒரு வகை சத்து மாவு) அனுப்பி வைக்கிறார். ஒருவர் தேன் அனுப்புகிறார். சுட்டெரிக்கும் வெய்யிலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு கரம் எனக்குக் குடையை நீட்டுகிறது. என் தலையை இன்னொரு கரம் துணி கொண்டு போர்த்துகிறது. விலை மதிப்புமிக்க பேனாவை ஒருவர் என் சட்டைப் பையில் சொருகுகிறார்.

என்டிடிவியை விட உங்களைப் போன்ற நேயர்களைத்தான் நான் அதிகம் நினைவில் வைத்திருக்கிறேன். நீங்கள் இல்லாமல் போனால் என்னால் எதுவுமே செய்திருக்கமுடியாது.

நான் பணியாற்றுவதற்கான கட்டற்ற சுதந்திரத்தை என் நிறுவனம் எனக்கு வழங்கியது. அந்தச் சுதந்திரத்தை நான் எப்போதும் கவனமாகப் பாதுகாத்து வந்திருக்கிறேன். உங்கள் கூர்மையான பார்வை என்மீது எப்போதும் படிந்திருப்பதை நான் அறிவேன். எதையும் தவறவிடாமல், எங்கும் தவறு நேராமல் நான் கவனமாக இருந்திருக்கிறேன். சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கும் வகையில் தவறாகவோ அகந்தையாகவோ நடந்துகொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

என் முன்னுள்ள உலகம் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் டெஸ்ட் ஆட்ட வீரர் போல் நான் விளையாட்டுக் களத்தில் நிலையாக நின்று கொண்டிருக்கிறேன். இப்போது அந்த விளையாட்டை யாரோ நிறுத்திவிட்டார்கள். டெஸ்ட் மேட்ச் டி20 ஆக மாறிவிட்டது.

மக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று உலகம் முழுவதிலும் உள்ள சில பண முதலைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பத்திரிக்கையாளர் கசப்பாக ஏதேனும் எழுதிவிட்டால் இந்தப் பண முதலாளி உடனே அவர்மீது வழக்கு தொடுத்துவிடுவார். அதையும் செய்துவிட்டு, இன்னொரு பக்கம் இதழியலுக்கு நன்மை செய்யப்போவதாகவும் அவர் பீற்றிக்கொள்வார். நன்மை என்று அந்த முதலாளி சொல்வதன் பொருள் உங்களுக்கே தெரியும். அதனால்தான் எந்த நிறுவனத்தைக் காட்டிலும் இன்று உங்களை நான் நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன்.

ஓர் இந்தி பத்திரிக்கையாளர் ஏன் சிறிய வட்டத்துக்குள் இயங்க வேண்டியிருக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் கவனித்து வரும் சில இந்தி பத்திரிகையாளர்களும் ஆசிரியர்களும் தங்கள் ஆழமான படைப்புகளால் தொடர்ந்து என்னை ஈர்த்து வருகின்றனர். இருந்தும் அவர்களுடைய படைப்புகள் பரவலாகப் பலரைச் சென்றடையவில்லை. அவர்களுக்குரிய இடம் இங்கே வழங்கப்படுவதில்லை. இதழியல் என்றால் அது ஆங்கில இதழியல்தான் என்று இங்கே அர்த்தமாகிவிட்டது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. விவரிப்பதற்கு அவகாசமில்லை. ஒரு கேள்விக்கு மட்டும் என்னால் விடை காணவே முடியவில்லை. துணிச்சல்மிக்க ஓர் இந்தியப் பத்திரிக்கையாளரால் ஏன் தான் நினைத்ததைச் சாதிக்க முடிவதில்லை?

நான் என் மொழியைச் சீராக்கினேன். மரியாதைக்குரியதாக அதை மாற்றிக்கொண்டேன். எனது இந்தியை இந்தியாவில் எந்தப் பகுதியிலுள்ளவரும் விரும்பும்படி, கவனமாகக் கையாண்டேன். எனது தாய்மொழி இந்தி அல்ல, போஜ்புரி. அதுதான் என் கிராமமும்கூட. கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்ற எனக்கு இந்திதான் முதல் நகர மொழி.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த நேயர்களை நேசிக்கத் தொடங்கினேன். இந்திய மாநிலங்களில் நிலவும் வருந்தத்தக்க அரசியல் காரணமாக இந்தி ஓர் ஆயுதமாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த அரசியல்மூலம் இந்தி மீதான அவநம்பிக்கைதான் அதிகரித்ததே தவிர வேறொன்றும் நடக்கவில்லை. யாருக்கும், எந்தப் பலனையும் அது கொடுக்கவில்லை.

இந்தியா, ஆங்கிலமா என்னும் சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு இட்டுச் செல்வது என் நோக்கம் அல்ல. ஆங்கிலப் பத்திரிக்கையாளர்கள், சமூகப் பணியாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் என்னை வெளிப்படையாக ஆதரித்தனர். அவர்களுக்குச் சமமானவர்களாக என்னைப் பாவித்தனர். சிலரால் இவ்வாறு செய்ய முடியவில்லை. ஆனால் அதைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? வெளிப்படையாகச் சமத்துவத்தைப் பேணுபவர்களுக்கு நாம் நன்றிக்கடன் செலுத்துவது அவசியம். புத்தகங்கள், வாய்ப்புகள் என்று சிறந்தவற்றை அவர்கள் என்னோடு பகிர்ந்துகொண்டனர். என் படைப்புகளை அவர்கள் மொழிபெயர்த்துப் பரவலாகப் பலருக்கும் கொண்டு சென்றனர்.

பலவிதமான சின்னச் சின்ன அட்டைப் பெட்டிகளை இணைத்து ஒரு ரயிலை உருவாக்கியதுபோல் இருக்கிறது. உருது, மலையாளம், தமிழ், கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, வங்காளம், மராட்டி பேசும் பத்திரிகையாளர்கள் பல விஷயங்களை இப்படித்தான் ஒன்றிணைத்திருக்கிறார்கள்.

எந்த எதிர்பார்ப்புமின்றி என் படைப்புகளை இந்தி அல்லாத பிற மொழிகளுக்கும் பிற மொழிகளிலிருந்து என் மொழிக்கும் மொழிபெயர்த்த அனைத்துப் பத்திரிகையாளர்களையும், அனைத்துச் சமூகப் பணியாளர்களையும், அனைத்து நிபுணர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

என் வரலாற்று ஆசிரியர்கள் என் வாழ்க்கைக்கு மிகுந்த பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றனர். அவர்கள்தான் என் வாழ்க்கை. அதேபோல் என்னைத் தாங்கிப் பிடித்த எண்ணற்றேரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் இனிமையானவர்கள். எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் அவர்களை நான் கண்டறிந்திருக்கிறேன்.

பல போராட்டங்களை நான் முழுமையாக ஒளிபரப்பியிருக்கிறேன். ஒரு நாடு எதைக் கவனம் கொடுத்துக் கேட்க வேண்டுமோ அதை நான் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் ஓர் அரசை எந்தக் கோணத்திலிருந்து அணுகுவீர்களோ, அந்தக் கோணத்தில்தான் நானும் பார்க்கத் தொடங்கினேன்.

உங்களுடைய துடிப்பான பங்கேற்பில்தான் ஜனநாயகத்துக்கான இதயத்துடிப்பு அடங்கியிருக்கிறது. ஷாஹின் பாக் போராட்டமும் விவசாயிகள் போராட்டமும் நம்பிக்கை என்றால் என்னவென்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது. நீங்கள் குடிமக்களாக மாறுவதைப் பார்க்கும்பொழுது என் நம்பிக்கை அதிகரிக்கிறது. இயந்திரங்கள் வலுவிழக்கும்போது மக்களின் போராட்டவுணர்வு வெளிப்படுகிறது. இந்த உணர்வுதான் எதிர்காலத்தை இன்றிருப்பதைவிட வளமானதாக மாற்றுகிறது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இன்று சிலர் எல்லா இயந்திரங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன என்றும் மக்களுக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் நினைக்கின்றனர். எதிர்க்கட்சியையும் ஊடகத்தையும் அகற்றுவதன்மூலம் ஜனநாயகத்தையும் அகற்றிவிடலாம் என்று அவர்கள் கனவு காண்கின்றனர். இது நடக்கவும் செய்யலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. மக்கள் தங்களுக்குள் மண்டிக்கிடக்கும் வெறுப்பைக் கண்டு ஒரு நாள் நிச்சயம் சோர்வு கொள்வார்கள். அவர்கள் உடலிலிருந்து வெளியேறும் நிலைக்கு வெறுப்பு தள்ளப்படும். ஆம், நீங்கள் வெறுப்புச் சூழலிலிருந்து வெளியேறியே தீரவேண்டும். வெளியேறுவீர்கள்!

5

எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நன்றாக உடுத்திக்கொள்வதற்கும் டை கட்டுவதற்கும் என்டிடிவியில் கற்றுக்கொண்டேன். வெளியில் செல்ல நேரமில்லாததால் நடனமாடக் கற்றுக் கொள்ளவில்லை.

நான் என்னுடன் பணியாற்றும் பெண்களை நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன். நேர்மை, ஒழுக்கம், தொழில் அறம் ஆகியவற்றை நான் அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். இந்தப் பண்புகளையெல்லாம் அவர்களிடமிருந்து கவர்ந்துகொண்டேன் என்றும் சொல்லலாம். எனது சமூகப் புரிதலையும் அறம் சார்ந்த புரிதலையும் செழுமைப்படுத்திக்கொள்ள அவர்கள் உதவினார்கள். என் பயணத்தில் இத்தகைய பல பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.

என் மனைவி, என் மகள்கள், மாமியார், மாமனார் அனைவரும் எனக்குப் பெருத்த ஆதரவை வழங்கினர். நான் வெளியில் சென்று ரிப்போர்ட்டிங் செய்வதற்கு அவர்கள் ஆதரவே காரணம். அம்மா, கொழுந்தியாள், பிற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்னை உருக்கி, வார்த்தெடுத்திருக்கின்றனர்.

நான் இதை அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பத்திரிக்கைத் துறையில் ஆண்களும் ஆணாதிக்கம் கொண்டவர்களும்தான் மேலோங்கி இருக்கின்றனர். அவர்களுடைய ஆவேசத்தைக் கண்டு சில சமயம் என் மூச்சு திணறியிருக்கிறது. இவ்வளவு ஆவேசம் இருக்கும் இடத்தில் படைப்பூக்கத்தோடு செயல்பட முடியாது. இப்படியொரு இடத்தில் கருணையை ஒருபோதும் வளர்த்துக் கொள்ள முடியாது. ஆணாதிக்க உணர்விலிருந்தும் ஆவேசத்திலிருந்தும்

என்னோடு பணியாற்றும் பெண்கள் என்னைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

நீங்கள் இத்துறையில் இணைந்து பணியாற்ற விரும்பினால் அல்லது ஒரு மாணவராக இருந்தால் உங்களோடு பணியாற்றும் பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய திறன்களை ஏற்றுக்கொள்ளுங்கள். மனம் திறந்து பாராட்டுங்கள்.

இரவு 9:00 மணிக்கு ஒவ்வொரு நாளும் ஆரம்பமாகிறது. என் மனதிலோ விடியற்காலையிலேயே 9:00 மணி அடித்துவிடும். உடனே தட்டச்சு செய்ய ஆரம்பித்துவிடுவேன். தினமும் ஐந்தாயிரம், ஆராயிரம் அல்லது ஏழாயிரம் சொற்களைத் தட்டச்சு செய்வேன். இனி அந்த 9.00 மணி திரும்ப வராது. பிரைம் டைம் இனி இல்லை. இனி ஒன்பது மணிக்கு நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது.

எனக்குத் தொலைக்காட்சி மிகவும் பிடிக்கும். அது என் இதயத்தைக் கவர்ந்துவிட்டது. அதனாலோ என்னவோ, என் இதயம் உடைந்திருக்கிறது. ‘சிவப்பு மைக்கை’ நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.

என்னைத் தினமும் காண்பதென்பது ஒரு வழக்கமாகவே உங்களுக்கு இந்நேரம் ஆகியிருக்கும். நான் இனி என்ன செய்வேன் என்றும் எனக்கு இனி என்னவாகும் என்றும் நான் ஏன் திரையில் தோன்றவில்லை என்றும் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் இல்லாத தொலைக்காட்சிக்கு நீங்கள் உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மெல்ல, மெல்ல ஓர் ஓரமாக நகர்ந்து சென்றுவிடவேண்டும் என்றும் திட்டமிட்டேன். நீங்களா கேட்பீர்கள்? ஒவ்வொரு நாளும் ஒன்பது மணிக்கு எனக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பி, விசாரிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். எங்கே இருக்கிறாய்? நன்றாக இருக்கிறாயா? என்டிடிவிக்கு என்ன ஆனது? எல்லாம் சரியாக இருக்கிறதுதானே?

6

ஊடகத்தின் முகம் இன்று மாறிவிட்டது. இதழியல் துறையில் இணைவதற்காகப் படித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை நினைத்துப் பாருங்கள். லட்சக்கணக்கணக்கில் அவர்கள் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். இருந்தும் இறுதியில் ஒரு தரகராக மட்டுமே அவர்களால் செயல்பட முடிகிறது. ஏனென்றால் பத்திரிகையாளராகச் செயல்படுவதற்கான இடம் இன்று இங்கு இல்லை.

இதழியல் துறையில் இணையவேண்டும் என்று வருபவர்கள் மட்டுமல்ல; ஏற்கெனவே இங்கிருக்கும் எல்லோருமே பிரச்சனைகளில்தான் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். பலருக்கு மூச்சுத் திணறுகிறது. சிலர் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். பிழைப்பு தவிர இதில் வேறு எதுவும் இல்லை என்று சிலர் சொல்கின்றனர்.

ஜாமீன் கொடுத்தபிறகு நீதிபதிகளுக்கு என்ன ஆகுமோ, அவர்கள் தாக்கப்பட்டால் என்னவாகும் என்று நீதிபதிகளே அஞ்சும் நிலை இருப்பதாக ஜஸ்டிஸ் சொல்கிறார். நீதிபதிகளே அஞ்சும்போது,

‘நான் பயப்படவில்லை’ என்று சொல்வது குற்றமாகும். புரிகிறது. அதே சமயம், அஞ்சி நடுங்கும் ஒரு பத்திரிக்கையாளர் உயிரற்ற குடிமக்களைத்தான் உருவாக்குகிறார். எனவே பயத்தைக் கடந்தாகவேண்டும். நான் அஞ்ச மாட்டேன் என்று தயவு செய்து கூறுங்கள். பிரிட்டிஷ் பேரரசை மண்டியிட வைத்த ஒரு நாட்டின் குடிமகனாகச் சொல்லுங்கள். நான் அஞ்ச மாட்டேன்!

அடிமை மீடியா ஆதிக்கத்திலிருந்து நீங்கள் ஒரு நாள் நிச்சயம் விடுபடுவீர்கள். இந்த ஆதிக்கம் நிரந்தரமானதல்ல. அதை எதிர்த்து நீங்கள் போராட வேண்டும். இது அனைவருடைய யுத்தம். இந்த யுத்தத்தில் பங்கேற்காமல் நீங்கள் தலைநிமிர்ந்து நடக்க இயலாது. அடிமை மீடியாவால் ஆளப்படும் பிரஜை எனும் அபாயகரமான அடையாளத்திலிருந்து நீங்கள் விடுபடவேண்டும். இந்த அபாயத்தின் உண்மைத்தன்மையை உணருங்கள். சட்டத்தின் பெயரால் இன்று உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கருத்து சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பான அனைத்தும் சட்டப்பூர்வமானதாக மாறுகிறது.

எனது பாதை எப்படி இருக்கும் என்று உறுதியாக இன்று சொல்லமுடியவில்லை. ஆனால் நான் திடமாகவும் உறுதியோடும் இருக்கிறேன். சில சமயம் எனது பாதை வானில் இருப்பதுபோலவும் இன்னும் சில சமயம் தரையில் இருப்பதுபோலவும் காட்சியளிக்கிறது. நான் ஒரு யூட்யூப் சேனல் (Ravish Kumar Official) தொடங்கியிருக்கிறேன். ஒரு ஃபேஸ்புக் பக்கமும் ஆரம்பித்திருக்கிறேன். என்னோடு இணைந்திருங்கள். இனி நான் யூடியூபில் மட்டுமே தோன்றுவேன்.

எனது குடும்பத்துடன் சிறிது காலம் செலவிட விரும்புகிறேன். எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டேன்.

நமஸ்கார், மே ரவிஷ்குமார்! இந்தக் குரலை நீங்கள் இனி அங்கே கேட்கமுடியாது.

0

பகிர:
மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

2 thoughts on “என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!”

  1. தமிழ்நாட்டிலும் இதே நிலைதான் நிலவுகிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ஆளுங்கட்சியின் அடக்குமுறைக்குப் பலியான பத்திரிகையாளர் யாரைப்பற்றொயாவது உங்களுக்குத் தெரியுமா? புதிய தலைமுறையின் சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள், உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

  2. மாலதி சந்திரசேகரன்.

    நான் ரவீஷ் குமார். அருமையான
    பதிவு. அவரின் வெளிப்படையான எழுத்துகள் மேலும் அவர் மேல் மதிப்பைக் கூட்டிவிட்டது. நன்றி, மருதன் கங்காதரன் சார்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *