Skip to content
Home » என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

சந்திராவதி ராமாயணம்

மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும்வரை மக்களிடையே ராமாயணம் உயிர்த்திருக்கும் என்றாராம் வால்மீகி. எப்படி ஒரு மலை இல்லையோ, ஒரு நதி இல்லையோ அப்படியே ஒரு ராமாயணமும் இருக்கமுடியாது என்பதால் மலைகள் போல் நதிகள்போல் ராமாயணங்களும் ஆயிரம் கரங்களால் நம்மைச் சூழ்ந்துகொண்டன. வால்மீகிக்கு முன்பே ராமாயணம் தோன்றிவிட்டது. அவருக்குப் பிறகும் ராமாயணங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் ராமாயணத்தையோ மகாபாரதத்தையோ முதல் முறையாக வாசிப்பவர் என்று எவரும் இருக்கமுடியாது என்கிறார் ஏ.கே. ராமானுஜன். இவை எல்லோருக்கும் முன்பே தோன்றியவை, எப்போதும் இருந்து வருபவை.

எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று, ஏ.கே.ராமானுஜத்தின் ‘முந்நூறு ராமாயணங்கள்’ கட்டுரையிலுள்ள தொடக்கக்கதை. ஒரு நாள் ராமர் தன் அரியணையில் வீற்றிருந்தபோது அவர் விரலிலிருந்து மோதிரம் நழுவி கீழே விழுந்துவிடுகிறது. நிலத்தில் பட்டதும் துளையொன்று உண்டாகி, கீழே கீழே சென்று காணாமல் போய்விட்டது மோதிரம். எவ்வளவு சிறிய துளையாக இருந்தாலும் குறுக்கிக்கொண்டு உள்ளே செல்லும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு என்பதால் தன் மோதிரத்தை எடுத்து வருமாறு ராமர் அனுமனைப் பணிக்கிறார்.

சிறிய உருவமெடுத்து அனுமன் கீழே பாய்ந்து பாதாள உலகை அடைகிறார். அங்கே ஓர் அரசர், அவருக்கொரு மாளிகை, அங்கே பல பணிப்பெண்கள். இதென்ன இவ்வளவு சிறிய குரங்கு என்று வியப்போடு அனுமனைப் பிடித்து அரசருக்குக் கொண்டு செல்லும் உணவுத் தட்டில் அவரையும் போட்டு எடுத்துச் செல்கிறார்கள். மேலிருந்து விழுந்த அதிசயப் பொருளை அரசர் உண்பதுதானே நியாயம்?

ராமா, ராமா, ராமா என்று முணுமுணுக்கும் அனுமனைத் தட்டில் கண்டதும் நீ யார், எதற்கு இங்கே வந்தாய் என்று கேட்கிறார் பாதாள அரசர். ராமனின் மோதிரம் விழுந்துவிட்டது. அதை எடுத்துச் செல்லவே வந்தேன் என்கிறார் அனுமன். அருகிலுள்ள ஒரு பெரிய தாம்பாளத்தை அனுமனிடம் நீட்டி, இதில் உன் ராமரின் மோதிரம் இருந்தால் எடுத்துச் செல் என்கிறார் அரசர். ஒன்றுபோல் இருக்கும் ஓராயிரம் மோதிரங்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி விழிக்கிறார் அனுமன். இதில் எது ராமரின் மோதிரம் என்பதை அனுமனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அனுமனின் குழப்பத்தைக் கண்டதும் அரசர் சொல்கிறார். ‘இங்கே எவ்வளவு மோதிரங்கள் உள்ளனவோ அத்தனை ராமர்கள் மேலே இருக்கிறார்கள்.’

சந்திராவதியின் ராமர் அவர்களுள் ஒருவர். வங்க மொழியின் முதல் பெண் கவியான சந்திராவதி (வங்க உச்சரிப்பின்படி சந்திராபதி) குறித்து நமக்கு அதிகம் தெரியாது. இன்றைய வங்கதேசத்தில் கிஷார்கஞ்ச் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1550ஆம் ஆண்டு பிறந்தார். எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தார் என்று தெரியவில்லை. அவர் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நயன்சந்த் கோஷா என்பவர் பாடல் வடிவில் சந்திராவதியின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து ஒரு மேலோட்டமான சித்திரத்தை ஆய்வாளர்கள் திரட்டியிருக்கிறார்கள்.

சந்திராவதியின் காலத்தில் வால்மீகியின் ராமாயணமும் கீர்த்திவாசர் எழுதிய வங்க வடிவமும் புகழ்பெற்றிருந்தன. சந்திராவதி இந்த இரு பிரதிகளின் தாக்கத்துக்கும் உள்ளாகியிருக்கலாம் என்றாலும் அவர் இயற்றிய ராமாயணம் இரண்டிலிருந்தும் மாறுபடுகிறது. தலைப்பில் ராமர் இருந்தாலும் சந்திராவதி இயற்றிய கதையின் மையம் ராமரல்ல, சீதை. ராமரின் வீரமோ மாண்போ கடவுள் தன்மையோ அல்ல, சீதையின் குணநலன்களும் சிந்தனையோட்டமும்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. சீதையின் பார்வையிலிருந்தே சம்பவங்கள் நகர்கின்றன. ராமரையும் ராவணனையும் இன்னபிற பாத்திரங்களையும் சீதையின் கண்கள் வழியாகவே நாம் இதில் பார்க்கிறோம். தவிரவும், ஒப்பீட்டளவில் ராமர் அல்ல, ராவணனுக்கு அதிக இடம் கொடுக்கிறார் சந்திராவதி.

புதிய கோணங்களோடும் விமரிசனப் போக்கோடும் ராமாயணத்தை மறுவாசிப்பு செய்யும் வழக்கம் கீர்த்திவாசருக்குப் பிறகு அதிகரித்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள் (A Woman’s Ramayana, Mandakranta Bose and Sarika Priyadarshini Bose, Routledge). காவிய நாயகனான ராமனின் புகழைப் பலவாறாக எடுத்துச் சொல்லி நிலைநாட்டும் மரபிலிருந்து பிரிந்து மற்ற கதாபாத்திரங்கள்மீதும் கவனத்தைக் குவித்து அவர்கள் வாயிலாக ராமரை அணுகும் வழக்கத்தைப் பலர் முன்னெடுக்கத் தொடங்கினார்கள். இந்தியா நெடுகிலும் பெண்களும் கிராமப்புற மக்களும்தான் பெருமளவில் இந்தப் புதிய மரபை முன்னெடுத்திருக்கின்றனர். வாய்வழிக் கதை, பாடல், இசை, நாடகம் உள்ளிட்ட வடிவங்களில் வெளிப்பட்ட இந்த ராமர்கள் குறைகள் கொண்டவர்களாக, தீங்குகள் செய்பவர்களாக, நம் எல்லோரையும்போல் விதியின் இழுப்புகளுக்கெல்லாம் ஆட்படுபவர்களாக இருந்தனர். இந்தப் புதிய மரபை உருவாக்கியவர்களுள் ஒருவர், சந்திராவதி.

இவர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சந்திரவாதியின் தந்தை வம்சிதாசர் ‘மானசா மங்களம்’ எனும் காவியத்தின் ஒரு வடிவத்தை (பத்மபுராணம்) இயற்றியதன்மூலம் புகழ்பெற்றவர். கிழக்கு வங்கத்தில் வழிபடப்பட்ட மானசா எனும் பாம்புக் கடவுளை சந்திராவதிக்கும் பிடிக்கும். அவர் இயற்றிய ராமாயணத்தின் தொடக்கத்தில் பிற கடவுள்களைவிட மானசா பிரதானமான இடத்தைப் பிடித்திருப்பார். அப்பா பத்மபுராணத்தை வடிவமைத்தபோது மகளும் உடனிருந்து உதவியதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது நமக்கு வாசிக்கக் கிடைக்கும் சந்திராவதியின் ராமாயணம் வாய்மொழிப் பாடலாகத் திரட்டப்பட்டது. முழு ராமாயணத்தையும் அல்ல, சில பகுதிகளையே சந்திராவதி எடுத்துக்கொண்டு தன் பாணியில் மறுவாசிப்பு செய்திருக்கிறார். ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புபவர்களுக்கு நவனீத தேவ் சென்னின் மொழிபெயர்ப்பு (Chandrabati’s Ramayan, Nabaneeta Dev Sen, Zubaan) உதவும். வங்கத்திலிருந்து பாடல் வடிவிலேயே ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார். சந்திராவதி வாழ்ந்த காலத்திலேயே அவர் படைப்பு கவனம் பெற்றுவிட்டது என்றாலும் இடையில் நம் நினைவுகளிலிருந்து விலகி, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய்வுலகால் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டது. சந்திராவதியை மறந்துவிட்டாலும் அவர் சொற்கள் மக்களிடையே வாழ்ந்து வந்திருக்கின்றன. யார் எழுதியவை என்று தெரியாமலேயே மேடைக் கலைஞர்கள் அவர் வரிகளைத் தொடர்ந்து பாடியிருக்கின்றனர்; மக்களும் தொடர்ந்து கேட்டு ரசித்திருக்கின்றனர்.

0

ராவணனிடமிருந்து தன் கதையைத் தொடங்குகிறார் சந்திராவதி. ராவணன் ஆளும் லங்காபுரி விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகோடு மிளிர்கிறது. ஒரு பூ மலர்ந்தால் மூவுலகும் அதன் வாசத்தால் மகிழ்கின்றன. அதிகாலை மலர்ந்து மாலை வாடிவிடும் இயல்பு எந்த மலருக்கும் கிடையாது. ஒவ்வொன்றும் குறைந்தது ஓராண்டு மணம் வீசும். கொத்துக் கொத்தாகத் தொங்கிக்கொண்டிருக்கும் மாம்பழங்களின் எடை தாங்காமல் எல்லாக் கிளைகளும் வளைந்து வருந்துகின்றன. இசையிலும் இன்பத்திலும் மக்கள் திளைத்திருக்கிறார்கள். சூரியனும் சந்திரனும் தொலைவிலிருந்து லங்காபுரியை வாழ்த்துகின்றன. தங்க நகரத்துக்கு நடுவில் வைரக்கல் போல் அமைந்திருக்கிறது ராவணணின் மாளிகை. மூவுலகையும் வென்று, எங்குமுள்ள செல்வங்களைக் கவர்ந்து வந்து தன் மாளிகையை ராவணன் அழகுபடுத்தியிருந்தான்.

ஒரு நாள் ராவணன் தனது படைகளோடு மேலுலகம் சென்று சொர்க்கத்தை ஆக்கிரமிக்கிறான். வந்திருப்பது யார் என்று தெரிந்ததும் கடவுள்கள் மூலைக்கொருவராகச் சிதறியோடுகின்றனர். அகப்பட்ட இந்திரனையும் எமனையும் கைது செய்து, செல்வங்களையெல்லாம் கொள்ளையடிக்கிறான் ராவணன். கையையும் காலையும் அசைக்காமலேயே எளிதாகப் பூமியும் அவன் வசம் வந்துவிடுகிறது. பாதாளமும் அவ்வாறே. அடுத்து அடர்ந்த காட்டுக்குச் சென்று அங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களை வதைக்கத் தொடங்குகிறான். ராவணனுக்குக் கப்பம் கட்ட ஏதுமற்ற நிலையில் முனிவர்கள் தங்கள் இதயத்தைக் கிழித்து ரத்தத் துளிகளை அளிக்கிறார்கள்.

ஒரு பானை முழுக்க ரத்தம். அமிர்தம் பருகிய கடவுள்களைக் கொல்லும் நஞ்சாக இது இருக்கும் என்று கருதும் ராவணன் தன் மனைவி மண்டோதரியிடம் அதை ஒப்படைத்து, பத்திரமாக வைக்குமாறு உத்தரவிடுகிறான். தன்னை மறந்துவிட்டு தேவலோகக் குமாரிகளோடு ராவணன் மகிழ்ந்திருப்பதைக் கண்டு ஏற்கெனவே மனம் வெதும்பியிருந்த மண்டோதரி, கடவுளையே கொல்லும் நஞ்சு என்னைக் கொல்லட்டும் என்று சொல்லி பானையிலிருந்து கொஞ்சம் எடுத்து உண்கிறார். அவள் வயிற்றில் ஒரு முட்டை தோன்றுகிறது.

ராவணனுக்குச் செய்தி சென்று சேர்கிறது. என்ன செய்வது என்று சோதிடர்களிடம் கேட்கும்போது, உங்களை அழிப்பதற்கான வித்துதான் இந்த முட்டை என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படியானால் அதை உடனே அழிப்போம் என்று உடனிருந்தவர்கள் வீறுகொண்டு எழ, மண்டோதரி கண்ணீரோடு அவர்களைத் தடுக்கிறார். என்ன இருந்தாலும் என் வயிற்றில் தோன்றியது என்பதால் என் கண்முன்னால் அழிப்பதற்குப் பதில் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுங்கள் என்று மன்றாடுகிறார். ராவணன் அவள் கோரிக்கையை ஏற்கிறான்.

தங்கப் பேழை மிதந்து, மிதந்து மிதிலையை நெருங்குகிறது. அங்கே வசிக்கும் மாதவ் எனும் ஏழை மீனவன் அதைக் கண்டு வியந்து, இது ஏதோ விலைமதிப்பற்ற பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணி, தன் மனைவி சாதாவிடம் அளிக்கிறான். பேழை வந்த தினத்திலிருந்து அந்த வீடு ஒளி மிக்கதாக மாறுகிறது. செல்வம் குவிகிறது. ஒருநாள் சாதாவின் கனவில் ஓர் அழகிய பெண் குழந்தை தோன்றி, ‘அம்மா, அம்மா என்னை ஜனகரின் மாளிகைக்குக் கொண்டு செல்’ என்கிறது. பேழையை வாங்கிக்கொண்ட ராணி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க சாதா சொல்கிறார் : ‘என் கனவு நனவானால் இந்தக் குழந்தைக்கு என்னை நினைவூட்டும் வகையில் சீதா என்று வைத்துவிடுங்கள்.’ சாதாவின் கனவு நனவாகிறது. ராவணனுக்குச் சொல்லப்பட்ட ஆரூடமும் பலிக்கிறது.

ராவணன் இருளென்றால் அவனை வெல்லும் ஒளி அவன் இல்லத்தில், அவன் கண் பார்வையில், அவன் கரம் பட்டு உதிக்கிறது. வளர்ந்து நிற்கும் தீமையின் நிழலில் நல்விதையொன்று முளைக்கிறது. சந்திராவதியின் தனித்துவமான கற்பனை இது. கடவுள்களாலும் வெல்லமுடியாத ஒருவரை எதிர்கொள்ளும் ஆற்றலை ஒரு பெண் குழந்தைக்கு மகிழ்ச்சியோடு அளித்துவிடுகிறார் சந்திராவதி. ராமாயணப் போரின் எல்லைகள் மறுவரையறை செய்யப்படுகின்றன. மாபெரும் லங்காபுரியின் பேரரசன் ஒரு பக்கம் தன் பெரும்படைகளோடு நிற்கிறான். முட்டையை உடைத்துக்கொண்டு பறவை போல் ஒரு பெண் குழந்தை தத்தி, தத்தி மற்றொரு பக்கம் வந்து நிற்கிறது. போர் இந்த இருவருக்கும் இடையில்தான். மூன்று உலகங்களையும் தன் கைப்பிடிக்கும் வைத்திருக்கும் ஒருவனை மெல்லிய ஓட்டை உடைத்துக்கொண்டு வரும் ஒரு குழந்தை எதிர்கொள்கிறது. வெல்கிறது.

ராவணனுக்கு எதிராக சீதையைக் கொண்டு வந்து நிறுத்தியதில் மட்டுமல்ல, ராமனை இந்தப் புள்ளிவரை விலக்கி வைத்ததன்மூலம் ஒரு புதிய ராமாயணத்தை உலகுக்கு அறிமுகம் செய்கிறார் சந்திராவதி. ராமர் ஒரு குழந்தையாக வந்து பிறப்பதற்கு முன்பே ராமாயணத்தின் மைய முடிச்சு போடப்பட்டுவிடுகிறது. எது தீமை, எது நன்மை என்பது ராமரின் வருகைக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. விஷ்ணுவின் அவதாரம் பூவுலகில் கால் பதிப்பதற்குமுன்பே பாவம் இழைக்கப்படுகிறது.  அதற்கான விமோசனமும் பிறந்துவிடுகிறது.

எல்லோரும் காவிய நாயகனின் ஒளியில் மயங்கிக்கிடக்கும் வேளையில் ஒரு காவிய நாயகியைச் சத்தமின்றிப் படைத்து விடுகிறார் சந்திராவதி. அந்த நாயகியின் பின்னணி எத்தகையதாக இருக்கிறது? ஊரும் பேருமற்ற ஓர் ஏழை, மீனவப் பெண்ணிடமிருந்து தன் பெயரைப் பெற்றுக்கொள்கிறார் சீதை. அம்மா என்று அவர் முதலில் அழைப்பது அவரைத்தான்.

சீதையின் தோற்றக்கதையை அழகாகக் கற்பனை செய்த சந்திராவதி ராமனின் பிறப்பை ஏற்கெனவே சொல்லப்பட்ட முறையில்தான் சொல்கிறார். குழந்தைப் பேறில்லாமல் தவிக்கும் தசரதருக்கு ஒரு மாங்கனியை அளிக்கிறார் துறவி. இந்தா, இதை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கௌசல்யாவிடம் கனியை அளிக்கிறார் தசரதர். தானே உண்ணாமல் பழத்தை மூன்று துண்டுகளாக்கி, கைகேயி, சுமத்திரா இருவரோடும் பகிர்ந்துகொள்கிறார் கௌசல்யா. சூழ்ச்சியின் உருவான மந்தரை கைகேயியிடம் காதில் சென்று கிசுகிசுக்கிறார். உடனே கைகேயி தசரதரிடம் முறையிட்டு, மாங்கொட்டையைத் தருவித்து அதையும் உண்கிறார். ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோரோடு மாங்கொட்டையை உண்டதால் கைகேயிக்கு குக்குயா எனும் பெண் குழந்தை பிறக்கிறது. சீதைக்கு நேர் எதிரான குணம் கொண்டவளாக குக்குயா வளர்கிறாள்.

அதன்பின் நடப்பதை சீதையே விவரிப்பதுபோல் அமைத்திருக்கிறார் சந்திராவதி. என்னைப் பற்றி என்னதான் சொல்வது? அவதிப்படுவதற்காகவே தோன்றியது இந்தப் பிழைப்பு. ஒவ்வொருமுறை என் கதையைச் சொல்லும்போதும் எங்காவது ஓரிடத்தில் நெருப்பு பற்றி எரியத் தொடங்கிவிடுகிறது. என் பெற்றோர் யார் என்று எனக்குத் தெரியாது. எங்கு பிறந்தேன் என்று தெரியாது. அந்த ராமரையே மணந்துகொண்ட பிறகும் என்னைப் பிடித்த துக்கம் அகலவில்லை. மாறாக, அதிகரித்தது.

வன வாசம் சென்றபோதுகூட நான் கலங்கவில்லை. என் இறைவனின் பொற்பாதங்களில் விழுந்துகிடப்பதைவிட வேறு சுகம் தேவையில்லை என்றே நினைத்தேன். ஒவ்வொருநாளும் காட்டுப்பூக்களை மாலையாக்கி, என் ராமரின் கழுத்தில் அணிவிப்பேன். அப்போது பார்த்துதானா ஒரு பொன் மான் என் முன்பு தோன்றவேண்டும்? அது என் வாழ்வை எப்படியெல்லாம் அலைகழிக்கப்போகிறது என்பது மட்டும் முன்பே தெரிந்திருந்தால், நானும் வருகிறேன் என்று சொல்லி காட்டுக்கு வந்ததுபோல், மான் பிடிக்கும்போதும் என் ராமரோடு சேர்ந்து சென்றிருப்பேன் அல்லவா? ஆனால் விதியை யாரால் வெல்லமுடியும்? ராவணனின் சதி வென்றது. நான் அவன் கைதியானேன்.

அதன்பின் அனுமன் வந்தான். வானரங்களோடு இணைந்து என் ராமரும் வந்தார். லங்காபுரி அழிக்கப்பட்டது. நான் மீட்கப்பட்டேன். என்னைப் பிடித்த இருள் அகன்றது என்று பூரித்தேன். என் ராமனிடமிருந்து இனி யாரும் என்னைப் பிரிக்கமுடியாது என்று மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள் சீதா என்று ஒரு நாள் ராமர் கேட்டார். நாம் வசித்த வனத்தை இன்னொருமுறை சென்று பார்க்கவேண்டும் என்றேன். ஓ, அதற்கென்ன என்றார் ராமர்.

விதி இந்தமுறை குக்குயா வடிவில் என் கதவைத் தட்டியது. அன்பே, ராவணனின் அரண்மனையில் நீ எப்படிதான் காலத்தைக் கழித்தாயோ? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லேன் என்றாள் குக்குயா. ராவணன் எப்படி இருந்தான்? அவனுக்கு நிஜமாகவே பத்துத் தலைகள் இருந்தனவா? எனக்காக அவனைக் கொஞ்சம் வரைந்தாவது காட்டேன்! என்று கெஞ்சினாள் அவள். பணிப்பெண்கள் என்னை அணைத்துக்கொண்டார்கள். குக்குயா, நீ ஏன் சீதையை இப்படி வதைக்கிறாய்? அந்தப் பெயரைக் கேட்டாலே அவள் மயங்கிச் சரிந்துவிடுவாள் என்பது உனக்குத் தெரியாதா?

ஆனால் குக்குயா விடுவதாக இல்லை. நான் அவனை என் கண்களால் காணக்கூட இல்லை என்று மன்றாடியும் பார்த்துவிட்டேன். குறைந்தது, அவன் நிழலையாவது பார்த்திருப்பாயல்லவா? அதையாவது வரைந்து காட்டு. அதுவரை இங்கிருந்து நகரமாட்டேன் என்று சொல்லி உட்கார்ந்துவிட்டாள். நச்சரிப்பு தாளாமல் எனது கை விசிறியில் நான் தீவிரமாக வெறுத்த அந்தத் தீமையின் நிழலைத் தீட்டினேன். சோர்வு தாளாமல் அப்படியே தூங்கிவிட்டேன்.

குக்குயா போட்டிருந்த திட்டம் நிறைவேறியது. என் சீதையா? என் தர்ம பத்தினியா என்று அலறித் துடித்த ராமர் விரைந்து என்னிடம் வந்தார். உறங்கிக்கொண்டிருந்த என்மீது கிடந்த விசிறியில் ராவணனின் உருவம் இருந்ததைக் கண்டு வெகுண்டார். அப்படியானால் குக்குயா சொன்னது உண்மையா? என் சீதை ராவணன்மீது இன்னமும் ஏக்கம் கொண்டிருக்கிறாளா? அதனால்தான் காட்டுக்கு ஒருமுறை சென்று பார்க்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாளா? என் குலத்துக்கு இப்படியொரு குந்தகமா? கடவுளே!

நிரந்தரமாக என்னைக் காட்டுக்குத் துரத்திவிட முடிவெடுத்தார் என் ராமர். பாவம், லட்சுமணன் துடித்துப்போய்விட்டான். ராமா, சீதையை மெய்யாகவே காட்டில் தொலைக்கச் சொல்கிறாயா? இதற்காகத்தான் அவ்வளவு பெரிய போர் தொடுத்து, சீதையை மீட்டு வந்தோமா? நாம் மீட்டெடுத்த லட்சுமியை நாமே விரட்டவேண்டுமா? இதுதான் எனக்கான பணியா? ஐயோ!

ராமரின் சொற்களை லட்சுமணனும் சரி, நானும் சரி மீறவில்லை. காட்டுக்கு நடுவில் தன்னந்தனியாக நின்றேன். நான் பார்க்கவேண்டும் என்று சொன்ன காடு என்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. என் விழிகளில் கண்ணீரில்லை. என் உதடுகளில் சொற்களில்லை. பொன் மான் போல் ஒரு பொன் மகள். நானும் மறையத்தான் போகிறேன்.

அப்போதும் எனக்கு ராமர்மீது கோபமில்லை. யார்மீதும் கோபமில்லை. இது என் விதி. இந்தக் கொடுங்காட்டில் ஒரு கர்ப்பிணியாக வந்து சிக்கிக்கொள்ளவேண்டும் என்பது என் விதி. இது எனக்கான தண்டனையும்தான். அன்பும் பண்பும் குழந்தையுள்ளமும் கொண்ட சீதை அப்படி என்ன பெரும்பாவம் இழைத்துவிட்டாள், இப்படியொரு கொடூரத் தண்டனையை அனுபவிக்க என்று திகைக்கிறீர்களா? ஆம், பெரும்பாவம்தான் இழைத்துவிட்டேன். என் ஒருத்தியின் துயருக்காக லங்காபுரி பற்றியெறிந்ததே, அது பாவமில்லையா? ஒரு பெண்ணுக்காக ஓராயிரம் பெண்கள் அபலையாக மாறி நின்றனரே, அது பாவமில்லையா? நான் ஒருத்தி வாழவேண்டும் என்பதற்காக எத்தனை உயிர்கள் லங்காபுரியில் கொன்றொழிக்கப்பட்டனவோ! எவ்வளவு குழந்தைகள், எவ்வளவு பெண்கள் மாண்டனரோ! எத்தனையெத்தனை சாபங்கள் என்னை நோக்கிச் சீறிப் பாய்ந்து வந்தனவோ! என் விடுதலையை ஏற்றதுபோல் என் தண்டனையையும் நான் ஏற்றுத்தானே தீரவேண்டும்? என் விதிப்பலனை அனுபவிக்கத்தானே வேண்டும்?

மற்றொருபக்கம், ராமரும் தனித்துதான் விடப்பட்டிருந்தார். லங்காபுரி எப்படி உதிர்ந்து அழிந்ததோ அதேபோல் சீதை இல்லாத அயோத்தியும் மெல்ல, மெல்ல உதிர்ந்து அழிந்துகொண்டிருந்தது. பிணியும் பிணக்கும் போட்டிப்போட்டுக்கொண்டு வளர்ந்தது. பசியும் வறட்சியும் வாட்டியதைத் தொடர்ந்து மக்கள் அயோத்தியைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். சீதையோடு இணைந்து அசுவமேத யாகம் செய்யாதவரை தர்மம் இங்கே தழைக்காது என்று ராமரை எச்சரிக்கிறார் வசிஷ்டர். தன் வைராக்கியத்தைத் தளர்த்திக்கொண்டு சீதையை அழைத்துவர மீண்டும் லட்சுமணனை அனுப்புகிறார் ராமர்.

என் தண்டனைக்காலம் முடிந்துவிட்டதுபோலும் என்று நினைத்து நானும் கிளம்பத் தயாரானேன். தனியாக வந்த நான் லவன், குசன் இருவரோடு மீண்டும் அயோத்தியாவுக்குத் திரும்பினேன். ஆனால் என்னை வரவேற்கக் காத்திருந்த ராமர் என் ராமரைப் போலவே இல்லை. இதோ பார் சீதை, லங்காபுரியில் நீ கழித்த ஓராண்டு காலம் கற்போடுதான் இருந்தாயா என்று அயோத்தி மக்களுக்குக் குழப்பம் நேர்ந்துள்ளது. அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பது ஒரு மன்னனாக என் கடமை. நீ பரிசுத்தமானவள் என்பதை நெருப்பில் குதித்து அறிவிக்கவேண்டிய கடப்பாடு உனக்கு இருக்கிறது. செய்வாயா?

நான் அமைதியான குரலில் சொன்னேன். தீக்குள் நுழைவதில் தடையேதுமில்லை எனக்கு. உங்கள் அன்பு முகத்தை நீண்ட காலம் கழித்துக் காணப்போகிறோம் என்று ஆசையோடும் கனவுகளோடும் ஓடிவந்தேன். என்னுடைய துக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்று எதிர்பார்த்தேன். உங்கள் சொற்கள் என்னை ஆழமாகக் காயப்படுத்திவிட்டன. ஆனால் கலங்கவேண்டாம். சீதை தீக்குள் பாய்ந்தால் உங்கள் பிரச்சினை தீரும் என்றால் மகிழ்ச்சியோடு அதைச் செய்வேன். நெருப்பு என்னை நெருங்காது. என்னை எதுவும் செய்யாது. ஆனால் திரும்பி வருவதில் எனக்கு ஆர்வமில்லை. என் குழந்தைகள் இன்று தங்கள் தாயை இழப்பார்கள். குருவே வசிஷ்டா, என் இரு குழந்தைகளையும் உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறேன்!

இவ்வாறு அறிவித்துவிட்டு சீதை அமைதியாகிவிடுகிறாள் என்கிறார் சந்திராவதி.  சீதைக்கு தீ மூட்ட ஒருவரும் முன்வராத நிலையில், நான், நான் என்று குக்குயா பாய்ந்து வருகிறாள். எனக்கு இவளிடம் பயமில்லை. அவள் வெந்து சாகட்டும் என்று சொல்லியபடியே நெருப்பைப் பற்ற வைக்கிறாள். ஆனால் காற்று தன் திசையை மாற்றிக்கொண்டு குக்குயாமீதே நெருப்பைச் செலுத்துகிறது. ஆ, ஓ என்று அலறுகிறாள் குக்குயா. சீதை தன் குளிர்ந்த கரங்களால் குக்குயாவைப் பற்றி அவள் உடலில் பரவத் தொடங்கியிருந்த நெருப்பைத் தணிக்கிறார்.

இனி யாரும் சீதைக்குத் தீ வைக்கவேண்டாம். சீதை இனியும் தன் புனிதத்தை ஒருவருக்கும் நிரூபிக்கவேண்டியதில்லை என்று மக்கள் குரலெழுப்புகிறார்கள். ஆனால் ராமர் சமாதானம் அடையவில்லை. சீதை தீக்குளிக்கவேண்டியது காலத்தின் தேவை. குக்குயா விலகிச்சென்றுவிட்ட பிறகு வேறு யாரும் முன்வராத நிலையில், ரகுவம்சத்தின் ரத்தினக் கல்லான ராமரே தீப்பந்தத்தைத் தன் கையில் ஏந்துகிறார். நெருப்பைப் பற்ற வைக்கிறான். நெருப்பு எரியத் தொடங்குகிறது. சீதை தன் இரு குழந்தைகளையும் ஒருமுறை பார்க்கிறார். தன் கணவனை ஒருமுறை பார்க்கிறார். கைகளைக் குவித்து வணங்கியபடி நெருப்புக்குள் செல்கிறார்.

நிலத்தைப் பிளந்துகொண்டு பூமாதேவி தோன்றுகிறார். போதும், என் மகளை நானே திரும்ப அழைத்துக்கொள்கிறேன் என்று சீதையை அணைத்துக்கொள்கிறார். வானில் பறந்து செல்லும் தூய சீதையைக் கண்டு ஐயோ, ஐயோ என்று ராமனும் லட்சுமணனும் அரற்றுகிறார்கள். குழந்தைகள் அழுகிறார்கள். ரகுபதி ராமா என்ன காரியம் செய்துவிட்டாய் என்று அனுமன் அழுகிறான். அழுது பலனில்லை. எல்லாமே விதிப்படிதான் நடக்கும். எனவே விதிப்படிதான் எல்லாமே நடந்திருக்கிறது என்று சொல்லி முடித்துக்கொள்கிறார் சந்திராவதி.

0

உங்களிடம் கோபமில்லை என்று சொன்னாலும் சீதை ஆறாத கோபத்தோடுதான் வானில் பறந்து சென்றிருக்கவேண்டும். இல்லாவிட்டால் தன் குழந்தைகளை அவர் ஏன் ராமரிடம் விட்டுச்செல்லவில்லை? தன் குருவிடம் ஏன் அவர்களை ஒப்படைக்கவேண்டும்? ராமரின் நிழலில் அவர்கள் வளரக்கூடாது என்று சீதை நினைத்தாரா? அது குழந்தைகளைப் பாதிக்கும் என்று அவர் அஞ்சினாரா? தன் குழந்தைகள் ராமரைப் போல் வளரக்கூடாது என்று அவர் தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டிருப்பாரா?

சீதை இறுதிவரை ராமர் இருக்கும் இடமே அயோத்தி என்று நம்பிக்கொண்டிருந்தார். ராமரோ அயோத்தியிலிருந்து சீதையைக் காட்டுக்குள் விரட்டுகிறார். மனம் மாறி அவர் சீதையைத் திரும்ப அழைத்ததும்கூட யாகத்துக்காகத்தான். அயோத்திக்காகத்தான். மக்களுக்காகத்தான். சீதை நெருப்பிலிருந்து வெளியில் வந்து மின்னினால் அயோத்தியும் பழையபடி மின்னும் என்று ராமர் நம்பியிருக்கிறார். தன் கணவன்தான் அழைக்கிறான் என்று நம்பி சீதை காட்டிலிருந்து விரைந்து வருகிறார். அங்கே அவர் கண்ட ராமர் வேறொருவராக இருக்கிறார். சீதையின் கணவரல்ல அவர். அயோத்தியின் மன்னர். தன் பொறுப்புகள் குறித்து மட்டும் கவலைப்படும் ஒரு மன்னனைத்தான் சீதா எதிர்கொள்கிறார். அந்த மன்னனும் தன் மனைவியை அல்ல, சந்தேகத்துக்குரிய ஒரு குற்றவாளியை, தனக்குக் கட்டுப்பட்ட ஒரு பிரஜையை எதிர்கொள்கிறார். அவனும் நோக்கினாள். அவளும் நோக்கினாள். அவன் ராமனல்ல. அவள் சீதையும் அல்ல.

சந்திராவதி ஜெயாநந்தர் என்பவரைக் காதலித்திருக்கிறார். ஆனால் அவரோ சந்திராவதியைத் துறந்து ஓர் இஸ்லாமியப் பெண்ணின்மீது காதல் வயப்பட்டிருக்கிறார். தனது திருமண நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தபோது ஜெயாநந்தர் இனி வரப்போவதில்லை என்னும் செய்தி சந்திராவதியை அடைகிறது. வாழ்க்கை கசந்து போகிறது சந்திராவதிக்கு. உலகிடமிருந்து துண்டித்துக்கொண்டு பக்தியில் தன்னைக் கரைத்துக்கொள்ளத் தொடங்குகிறார் சந்திராவதி. பிறகு தந்தையின் அறிவுரையின்படி ராமாயணத்தை இயற்றத் தொடங்குகிறார்.

சந்திராவதியைக் கைவிட்டதன்மூலம் மிகப் பெரும் பாவத்தை இழைத்துவிட்டோம் என்பதை ஜெயாநந்தர் உணர்கிறார். என்னுடைய மெய்யான காதல் அவளல்லவா? அவளல்லவா என் உயிர்? ஓர் இஸ்லாமியப் பெண்ணோடு பழகியதன்மூலம் நானும் அல்லவா தீண்டப்படாதவனாக மாறிவிட்டேன்? இனி என்ன செய்வது? தவியாய் தவிக்கும் ஜெயாநந்தர், தன்னை மன்னித்துவிடுமாறும் கடைசியாக ஒருமுறை சந்திப்பதற்கு அனுமதி கொடுக்குமாறும் விண்ணப்பித்து சந்திராவதிக்கு எழுதுகிறார். அந்தக் கடிதத்தை சந்திராவதி பொருட்படுத்தக்கூடவில்லை என்கிறார் நயன்சந்த் கோஷா.

சந்திராவதி எங்கிருக்கிறார் என்பதை அறிந்து, கோவிலின் கதவை வந்து தட்டுகிறார் ஜெயாநந்தர். வெளியில் நிற்பவர் யார் என்பது தெரிந்ததும் கதவைத் திறக்க மறுத்துவிடுகிறார் சந்திராவதி. பல மணி நேரங்களுக்குப் பிறகு கதவு தட்டப்படுவது நின்றுவிடுகிறது. தன்னை ஏமாற்றியதோடு, கதவைத் தட்டியதன்மூலம் சிவன் கோவிலையும் அசுத்தப்படுத்திவிட்டதாக நம்பும் சந்திராவதி ஆற்றிலிருந்து நீர் எடுத்து வந்து கோவிலைச் சுத்தப்படுத்த நினைக்கிறார். கதவைத் திறக்கிறார். வெளியில் யாருமில்லை. ஆற்றை நெருங்குகிறார். ஜெயாநந்தரின் உடல் ஆற்றில் மிதந்துகொண்டிருக்கிறது. சந்திராவதி உணர்வுகளற்று வெறித்து நின்றுவிடுகிறார்.

சீதை பறந்து சென்றுவிடுகிறார். சந்திராவதிக்கு என்னானது என்று தெரியவில்லை. ஒரு நதிபோல், ஒரு மலைபோல் சந்திராவதியின் ராமாயணம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

0

பகிர:
மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *