ஒரு சில பக்கங்களில் முடிந்துவிடக்கூடிய ஒரு சிறுகதைதான். ஆனால் அதைப் பற்றி இதுவரை பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. பலவிதமான கோணங்களில் அக்கதையை ஆராய்ந்துவிட்டார்கள். கதையைக் கிழித்து உள்ளே குதித்து அடியாழத்தில் புதைந்துகிடக்கும் குறியீடுகளையெல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து விவாதித்துவிட்டார்கள். இருந்தும் கதையின் இதயப்பகுதி இன்றளவும் ஒரு பெரும் புதிராக நீடிக்கிறது. கடலின் அடியில் ஒரு கடலும் அதற்கும் கீழே இன்னொரு கடலும் பாய்ந்துகொண்டிருக்கிறது. ஜார்ஜ் பெண்டமென் அதற்குள்தான் இறுதியில் குதித்துக் காணாமல் போய்விட்டான். ஏன் அவனைத் தள்ளினாய் என்று கேட்டால், நானா கண்டேன் என்கிறார் காஃப்கா.
ஃபிரான்ஸ் காஃப்காவின் எழுத்துகளில் இயல்பும் இயல்பற்ற நிலையும் வெவ்வேறானவை அல்ல, ஒன்றுதான். சாதாரணமான ஒரு கதை ஏதோ ஒரு திருகலில் அசாதாரணமாக மாறிவிடுகிறது. பக்கங்களைப் பின்னால் புரட்டி, இதோ இங்கேதான் அந்தத் திருகல் நிகழ்ந்தது என்று அறுதியிட்டுச் சொல்வது கடினம். சின்னச் சின்னதாகக் கிளம்பி வந்து நம் கால்களை நனைத்துவிட்டுத் திரும்பிச்சென்றுகொண்டிருக்கும் அலை நாம் அசந்து நிற்கும் ஏதோ ஒரு தருணத்தில் முழுக் கடலாக மாறி நம்மை இழுத்துக்கொண்டுவிடுகிறது. என்ன, ஏது என்று விளங்கிக்கொள்வதற்குமுன்னால் கடல் நம்மை விழுங்கி முடித்திருக்கும். ஜார்ஜ் பெண்டமெனுக்கும் (The Judgement – Collected Stories, Franz Kafka, Translated by Willa and Edwin Muir, Everyman’s Library) அப்படித்தான் நடந்திருக்கும்.
கதை தொடங்கும்போது, ஜார்ஜ் பெண்டமென் தன் நண்பனுக்கு ஒரு கடிதத்தை எழுதி முடிக்கிறார். முடித்த பிறகும் அந்தக் கடிதத்திலிருந்தும் அது கிளப்பிய நினைவுகளிலிருந்தும் வெளிவரமுடியவில்லை ஜார்ஜால். வாழ்வில் ஒரு பிடி கிடைக்காத நிலையில் சில ஆண்டுகளுக்குமுன்பு ரஷ்யாவுக்குக் குடிபெயர்ந்து சென்றுவிடுகிறான் நண்பன். அதன்பிறகும் நண்பனின் வாழ்க்கை மாறிவிடவில்லை. வர்த்தகம் அவன் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை. உதறித் தள்ளிவிட்டு ஊர் திரும்ப அவனுடைய தன்மானம் நிச்சயம் இடம் கொடுக்கப்போவதில்லை. ஊர், பேர் தெரியாத ஓர் அந்நிய நிலத்தில், தனிமையில் கிடந்து வாடிக்கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட ஒருவனுக்கு என்ன எழுதிவிடமுடியும்? என் வணிகம் செழிப்பாக இருக்கிறது, நான் சுகமாக இருக்கிறேன், ஒரு பெண்ணை விரைவில் மணந்துகொள்ளவிருக்கிறேன், ஒரு புது வாழ்க்கை தொடங்கப்போகிறேன் என்றெல்லாம் சொல்வது அவனை மேலும் வதைப்பதாகாதா?
என் திருமணத்துக்கு வா என்று அழைக்க விரும்புகிறான் ஜார்ஜ். அவ்வாறு அழைப்பது அவனை இன்னலுக்கு உள்ளாக்கும் என்பதையும் உணர்கிறான். சொன்னாலும் தவறு, சொல்லாமல் இருந்தாலும் தவறு. அதெப்படி நண்பனை விட்டுவிடமுடியும், வரும்படி சொல் என்று ஜார்ஜ் மணந்துகொள்ளவிருந்த ஃப்ரீடாவும் சொல்ல, ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு, அதையும் இதையும் சொல்லிவிட்டு, கட்டக்கடைசியாகத் தன் திருமணச் செய்தியையும் தெரிவிக்கிறான் ஜார்ஜ். அப்போதும்கூட, உன் வசதியைப் பார்த்துக்கொண்டு வா என்றுதான் அவனால் சொல்லமுடிகிறது.
கடிதத்தை எழுதி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, பக்கத்து அறையில் இருக்கும் தந்தையைப் பார்க்கப் போகிறான் ஜார்ஜ். அப்பா நடத்திவந்த வணிகத்தைத்தான் இப்போது ஜார்ஜ் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர் போட்டுக்கொடுத்த பாதையில் இந்த நிமிடம்வரை அவன் நிறுவனம் சென்றுகொண்டிருக்கிறது. இப்போது அப்பாவுக்கு உடல் வலுவுமில்லை, மன வலுவுமில்லை. இருண்டு கிடக்கும் அறையில் படுத்துக்கிடக்கிறார். அப்பா, என் திருமணத்துக்கு வரச்சொல்லி என் நண்பனை அழைத்திருக்கிறேன். சரிதானே? என்கிறான் ஜார்ஜ். யார் என்கிறார் அப்பா. ரஷ்யா சென்றுவிட்ட என் நெருங்கி நண்பன் என்கிறான் ஜார்ஜ். ஏன் இப்படி இருக்கிறாய்? உனக்கு அப்படியொரு நண்பனே கிடையாதே என்கிறார் அப்பா.
அப்பாவின் உடல்நலனைக் கண்டு கவலை கொள்ளும் ஜார்ஜ், வெளிச்சமான மற்றொரு அறைக்கு அவரை மாற்றுவதாக உறுதியளிக்கிறான். என் நண்பனை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களே? ரஷ்யப் புரட்சி குறித்து அவன் சொன்னதெல்லாம் நினைவில்லையா? அவனை உங்களுக்கு அதிகம் பிடிக்காதே! என்கிறான் ஜார்ஜ். பிறகு அப்பாவைத் தூக்கி எடுத்துச்சென்று படுக்க வைக்கிறான். என்னை ஒழுங்காகப் போர்த்தியிருக்கிறாயா என்கிறார் அப்பா. ஆம் என்கிறான் ஜார்ஜ்.
இல்லை என்று அப்பா கத்துகிறார். தன் மேல் இருந்த போர்வையை, கம்பளியை உதறித் தள்ளுகிறார். இல்லை, நீ என்னைப் போர்த்தவில்லை. ஒழுங்காகக் கவனித்துக்கொள்வதில்லை. உன் நண்பனை எனக்குத் தெரியாது என்றா நினைத்தாய்? என் இதயத்துக்கு நெருக்கமானவன் உண்மையில் அவன்தான். அவன் துயரங்களை நான் அறிவேன். நீயல்ல, நானே அவன்மீது மெய்யாக இரக்கம் கொண்டிருக்கிறேன். நீ அவனுக்கு நல்ல நண்பனாக நடந்துகொள்ளவில்லை. அலுவலகத்தில் உன்னைப் போட்டுப் பூட்டிக்கொள்கிறாய். உனக்கு நானும் தேவைப்படவில்லை. உனக்கு நீ மட்டும்தான் முக்கியம். நீ உன் நண்பனை ஏமாற்றிவிட்டாய். அந்த மோசமான பெண்ணிடம் மயங்கிக்கிடக்கிறாய். உன் அம்மாவை மறந்துவிட்டாய். அவள் நினைவுகளுக்குத் துரோகம் செய்துவிட்டாய். உன் நண்பனுக்கு நான்தான் தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கே நடப்பதையெல்லாம் நான்தான் அவனிடம் நேர்மையாகப் பகிர்ந்துகொண்டு வருகிறேன். என்னை நீ எதுவும் செய்யமுடியாது. நீ அவளோடு கை சேர்ந்து நடந்து என் முன்னாள் வந்து பார். அவளை உன்னிடமிருந்து கவர்கிறேனா, இல்லையா என்று பார்ப்போம்.
ஜார்ஜ் நம்பமுடியாமல் அப்பாவைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். நீ வளரவேயில்லை என்று மீண்டும் குரலை உயர்த்துகிறார் அப்பா. உன் நண்பன் ரஷ்யாவில் உதிர்ந்துகொண்டிருக்கிறான். நான் எந்நிலையில் இருக்கிறேன் என்று உனக்கே தெரியும். நீ ஓர் அப்பாவி. நீ சாத்தானின் பிறவி. நான் சொல்வதைக் கேட்டுக்கொள். நான் உனக்கு வழங்கும் தீர்ப்பு இதுதான். நீ மூழ்கிச் சாகவேண்டும்! ஜார்ஜ் அறையைவிட்டு வெளியேறும்போது அப்பா படுக்கையிலிருந்து விழும் சத்தம் கேட்கிறது. ஜார்ஜ் திரும்பவில்லை. நீர்நிலையைக் காணும்வரை அவன் கவனம் வேறு எங்கும் இல்லை. அப்பா, அம்மா உங்கள் இருவரையும் எப்போதும் நேசிக்கிறேன். பாலத்தின் கைப்பிடியை இறுகப் பற்றுகிறான். பிறகு விடுவித்துக்கொண்டு கீழே பாய்கிறான். மேலே பாலத்தில் கடும் நெரிசலில் வாகனங்கள் பறக்கின்றன.
0
ஒரு தந்தை தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்ளும் மகனை இப்படிச் சபிப்பாரா? இப்படியொரு கொடூரமான தண்டனையை அளிப்பாரா? உனக்கு ரஷ்யாவில் நண்பனே கிடையாது என்று சொன்னவர் அவனே என் உண்மையான மகன் என்று ஏன் மாறவேண்டும்? அவர் நினைவாற்றல் இழந்தவரா அல்லது புத்தி பேதலித்தவரா? அவருக்கு ஜார்ஜோடு என்ன முரண்பாடு? என்ன மோதல்? தன் நிறுவனத்தை அவன் கவர்ந்துவிட்டான் என்று நினைக்கிறாரா? தன் மகன் செல்வாக்கோடு வளர்வதையும் தான் ஒன்றுமில்லாமல் போவதையும் கண்ட அதிர்ச்சியா? தன் மனைவியை இழந்த துயரால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? அதனால்தான் இனி எனக்கு எதுவுமில்லை என்று இருண்ட அறைக்குள் சுருண்டு கிடக்கிறாரா?
முழுக் கதையும் ஜார்ஜின் பார்வையிலிருந்துதான் நமக்குச் சொல்லப்படுகிறது. நண்பனுக்குக் கடிதம் எழுதுபவன் அவன். எழுதியபின் தவிப்பவன் அவன். அப்பாவை வந்து சந்திக்கிறான். அப்பாவின் நிலை கண்டு கவலை கொள்கிறான். சபிக்கப்படுகிறான். தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோகிறான். ஜார்ஜை எந்த அளவுக்கு நாம் நம்பலாம்? அவன் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா அல்லது சிலவற்றை மறைத்துவிட்டானா? யாரந்த ரஷ்ய நண்பன்? அவன் பெயர்கூட ஏன் நமக்குச் சொல்லப்படுவதில்லை? அப்பா சொல்வதுபோல் அவன் ஒரு கற்பனைப் பாத்திரமா? இல்லாத ஒருவனுக்குதான் ஜார்ஜ் கடிதம் எழுதுகிறானா? அந்த நண்பன் அவனுடைய ஆழ்மனதின் உற்பத்தியாக இருக்கமுடியுமா? உனக்கு அப்படியொரு நண்பனே கிடையாது என்று அப்பா சொன்னது உண்மையா?
நான் அவனுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றும் அப்பா சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது? அப்பா பார்க்கப் பூதாகரமாக இருப்பதாக ஜார்ஜ் ஓரிடத்தில் சொல்கிறான். ஆனால் அவரோ முதுமையில் வதங்கிக்கிடக்கிறார். எது உண்மை? அப்பா ஏதேதோ பிதற்றுகிறார் என்பது ஜார்ஜுக்குத் தெரிகிறது. ஆனாலும் அவர் சொற்களை ஏன் அவன் மறுக்கவில்லை அல்லது உதாசீனப்படுத்தவில்லை? நினைவிழந்த ஒருவரின் சொற்கள் ஏன் அவனைக் காயப்படுத்தவேண்டும்? அவர் தீர்ப்பை ஏன் அவன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும்? அதை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக ஏன் நம்பவேண்டும்? நட்பை, காதலை, வாழ்வை அவன் தியாகம் செய்தது எதற்காக? தியாகம் தானா அது? நோய்வாய்ப்பட்டிருப்பது உண்மையில் அப்பாவா, மகனா அல்லது இருவருமேவா? ஜார்ஜின் நண்பன் மட்டும்தான் கற்பனையா அல்லது அவன் மணக்கவிருந்த பெண்ணும் கற்பனையா?
ஜார்ஜின் இதயத்தை அவர் அப்பாதான் நொறுக்குகிறார். தன் அம்மாமீது அவன் கொண்டிருந்த அன்பை அவர் நிராகரிக்கிறார். நீ உன் நண்பனுக்கும் மெய்யாக இல்லை என்று அவனைக் குலைக்கிறார். அவன் மண வாழ்க்கைக்கும் குறுக்கே வந்து நிற்கிறார். அவனிடமிருந்த அனைத்தையும் அவர் பறித்துக்கொள்கிறார். அவனுடைய வெற்றி, சோகம், தவிப்பு, நட்பு, காதல், கனவு அனைத்தையும் அப்பா கொல்கிறார். ஜார்ஜ் அப்பாவோடு வாதம் செய்யவில்லை. அவர் இறந்துபோய்விடவேண்டும் என்று அவன் ஒரு கட்டத்தில் விரும்பினாலும் அவனால் அவரை நேசிக்காமல் இருக்கமுடியவில்லை. என்னதான் வெற்றிகரமான ஒரு நிறுவனத் தலைவனாக இருந்தாலும் தந்தையின் நிழலிலிருந்து அவனால் விடுபடமுடியவில்லை. தன் நேசத்தை வெளிக்காட்ட தன்னை மாய்த்துக்கொள்வதொன்றே வழி என்று அவனுக்குத் தோன்றிவிடுகிறது.
அப்பா ஏன் தன் மகனை வெறுக்கவேண்டும் என்பதற்கான காரணங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. நீ அந்தப் பெண்ணிடம் மயங்கிவிட்டாய் என்று கத்தும்போது அவர் ஃப்ரீடா போல் நடிப்பதாகப் பாவனை செய்துகொண்டு தன் ஆடையை ஆபாசமாக உயர்த்திக் காட்டுகிறார். போரில் அவர் பட்ட காயம் புலப்படுகிறது. தான் ஒர் ஆண் என்றும் வீரன் என்றும் தனக்கென்று ஒரு வளமான வரலாறு இருந்தது என்றும் அவர் தன் மகனுக்கு நினைவூட்ட விரும்பினாரா?
ஒருவேளை ஜார்ஜ் தனது ரஷ்ய நண்பன்மீது காதல் வயப்பட்டிருந்தானா என்னும் கேள்வியையும் சிலர் எழுப்பியிருக்கின்றனர். அவன் பெயரைக்கூட ஜார்ஜால் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் போனதற்கு இது ஒரு காரணமாக இருக்கக்கூடுமா? உனக்கு அப்படியொரு நண்பன் இருந்தால் நீ ஏன் அவனுக்குக் கடிதம் எழுதி நம் திருமணத்துக்கு வரவேற்கக்கூடாது என்று ஃபரீடா சொல்வது இந்த ஐயத்தின் பேரில்தானா?
கதையைப் படிக்கப் படிக்க கேள்விகளும் முரண்களும் குழப்பங்களும் வளர்கின்றவே தவிர, குறைவதாக இல்லை.
0
‘தீர்ப்பு’ கதை உருவான பின்னணியை காஃப்கா தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ரொனால்ட் ஹேமன் (K: A Biography of Kafka, Ronald Hayman, Phoenix) அதைத் தன் நூலில் விவாதிக்கிறார். 22 செப்டெம்பர் 1912 அன்று இரவு பத்து மணிக்கு எழுத அமர்ந்து காலை ஆறு மணிக்கு ஒரே மூச்சாக இக்கதையை முடித்திருக்கிறார் காஃப்கா. முடிக்கும்போது கால்கள் கனத்துப் போய்விட்டன. மேஜையிலிருந்து அவரால் நகரக்கூட முடியவில்லை. முன்னெப்போதையும்விடத் தனது திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்டதாக உணர்கிறார். இதயத்தைச் சுற்றிப் பரவியிருந்த வலி மறைந்துபோனது. கொழுத்த தீ பற்றி எரிகிறது. அனைத்தையும் பற்றிக்கொள்கிறது. அனைத்தையும் எரித்துத் தீர்க்கிறது. அனைத்தையும் உயிர்ப்பிக்கிறது. அழிவும் தோற்றமும் வெவ்வேறானவையல்ல. காஃப்கா தனது படைப்புகளை அவ்வப்போது தீயிலிட்டு அழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவசியமான படைப்புகள் உயிர்த்திருக்கவேண்டுமானால் அவசியமற்ற களைகளைப் பொசுக்கியாகவேண்டும் என்று காஃப்கா நம்பியிருக்கவேண்டும்.
தீர்ப்பை எழுதியபோது காஃப்காவுக்கு 29 வயது. உடலையும் ஆன்மாவையும் பிளக்கும் எழுத்து எப்படியிருக்கும் என்பதை அவர் முதல்முறையாக உணர்ந்தது அன்றுதான். பொதுவாக காஃப்கா தனது எழுத்துகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்ததில்லை. ஆனால் இக்கதை வழக்கமானது அல்ல என்று அவருக்குத் தோன்றியது. தன் மூன்று சகோதரிகளுக்கும் அவர் இதனை வாசித்துக் காட்டியிருக்கிறார். மறுநாள் பல நண்பர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். இரு வாரங்கள் கழித்து ஆண்டு மலரொன்றில் பதிப்பிப்பதற்காக அதனை அனுப்பி வைக்கிறார். இரு மாதங்களுக்குப் பிறகு ஒரு ஹோட்டலில் இதே கதையை அவர் பொதுமக்கள் முன்பு அமர்ந்து வாசித்துக் காட்டுகிறார். பிப்ரவரி மாதம் கதை அச்சிலிருக்கும்போது அது பற்றி எழுதுகிறார். ‘பிறப்புபோல் அழுக்கும் கொழகொழப்பான பிசுக்கும் போர்த்தியபடி என்னிடமிருந்து தோன்றியிருக்கிறது. அதைத் தீண்டிப் பார்க்க என் கரங்கள் நீள்கின்றன.’
இக்கதையை எழுதும்போது அவர் சிக்மண்ட் ஃபிராய்டை நினைத்துக்கொண்டிருந்தார் என்கிறார் ரொனால்ட் ஹேமன். காஃப்காவை உருவாக்கியதில் ஃபிராய்டின் பங்கு குறிப்பிடத்தக்கது. தன் கனவுகளை அவர் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தது ஃபிராய்டை வாசித்த பிறகுதான் என்கிறார் ஹேமன். கவனிக்க ஆரம்பித்த பிறகு கனவுகளிடம் மயங்கிபோனார் காஃப்கா. எந்தப் புள்ளிவரை உண்மை, எங்கிருந்து உண்மையற்றதன்மை ஆரம்பம் என்பதைக் கண்டறியமுடியாதவண்ணம் எல்லாமும் எல்லாவற்றையும் தழுவி நிற்கும் அந்த மாயத் தருணம் அவரை ஆட்கொண்டிருக்கவேண்டும். அதை எழுத்தில் கொண்டுவரமுடிந்தால் எப்படி இருக்கும்? ஒரு கனவை அதன் உண்மையான வடிவில், முழுவிழிப்பு நிலையில் தரிசிக்கமுடியுமா? அப்படியொரு தரிசனம் கிடைத்துவிட்டால் இழுத்துப் பிடித்து சொற்களில் பதிவு செய்யும்வரை அக்கனவு கலையாமல் காத்திருக்குமா?
ஃபிராய்டியத்தோடு இணைத்தும் தீர்ப்பு ஆராயப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் தன் அப்பாவை எதிர்த்துக் கலகம் புரிபவன். அம்மாவின் மறைவையொட்டி தன் அதிகாரத்தை அவன் வீட்டில் படரவிடுகிறான். அப்பாவைத் தன் கைப்பிடிக்குள் அவன் வைத்திருக்கிறான். அப்பாவின் நிறுவனம் அவனுடையது. அப்பாவின் செல்வம் அவனுடையது. அப்பாவின் வெற்றிகள் அவனுடையவை. அப்பா அதுவரை செலுத்திவந்த அதிகாரமும் இப்போது அவனிடம்தான். இனி அப்பா தேவைப்படமாட்டார், அவர் இறந்துவிடலாம் என்று எண்ணுகிறான். ஓய்வெடுக்கட்டும் என்று அவரை நன்றாகப் போர்த்திவிடுகிறான். நான் உங்களைப் போர்த்திவிட்டேன், இனி நீங்கள் உறங்கலாம் என்று சொல்லும்போது அவன் மனம் வேறொன்றையே நாடுகிறது. இல்லை, நீ என்னைப் போர்த்தவில்லை என்று அப்பா திமிறுகிறார். தன்னிடமிருந்து உருவியெடுக்கப்பட்ட அதிகாரங்களை அவர் திரும்பப்பெறத் துடிக்கிறார். தன் மகனைச் சாத்தானின் உருவாகக் காண்கிறார். அவனுடைய அதிகாரத்தை, சமூக அங்கீகாரத்தை, பொருளாதார வெற்றியை, திருமணத்தை அவர் உடைக்கத் துடிக்கிறார். சபிக்கிறார்.
இக்கதை உண்மையில் கதையல்ல. ஜார்ஜுக்குள் நடக்கும் உளவியல் போராட்டம். அதனால்தான் அதை அவனுடைய சொற்களில் மட்டுமே நாம் கேட்கிறோம். கடிதம் எழுதும்வரை புற உலகில் வாழும் ஜார்ஜ் அப்பாவின் இருண்ட அறைக்குள் நுழைந்ததும் அக உலகுக்குள் தாவிவிடுகிறார். அதன்பிறகு நடந்தவை உண்மையில் நடந்தவைதானா அல்லது இவ்வாறுதான் நடந்தது என்று நம்பி, ஜார்ஜ் நம்மிடம் சொல்கிறானா? அப்பாவுக்கும் மகனுக்குமிடையே உண்மையிலேயே உரையாடல் நிகழ்ந்ததா? என் நண்பனுக்குக் கடிதத்தை அனுப்பி வைக்கட்டுமா என்றொரு சாரமற்ற கேளவியைக் கேட்பதற்காகத்தான் ஜார்ஜ் அப்பாவை நாடினானா? அதன்பிறகு பேச்சு எங்கெங்கோ தாவி இறுதியில் அவனே தாவிக் குதித்துவிட்டடான் என்பதை எப்படி எடுத்துக்கொள்வதா? இதை மனதின் அலைக்கழிப்பாக மட்டுமே கொள்வதும் சாத்தியம்தானோ? நாம் ஜார்ஜின் கதையைப் படிக்கிறோமா அல்லது அவன் எண்ணவோட்டங்களின் கதையையா? ஜார்ஜ் தன் வாழ்வை நம்மோடு பகிர்ந்துகொண்டிருக்கிறானா அல்லது தன் ஆழ்மனதையா?
ஜார்ஜ் அப்பாவாகவும் அப்பா ஜார்ஜாகவும் மாறிய தருணமும் இங்கே முக்கியமானது. குழந்தையைப் போல் அப்பாவைச் சுமந்து செல்கிறான் ஜார்ஜ். அவர் ஒரே சமயத்தில் எடையற்றவராகவும் வலுவானவராகவும் தோன்றுகிறார். ஒரே சமயத்தில் நோயுற்றவராகவும் தெளிந்த சிந்தனை கொண்டவராகவும் இருக்கிறார். என் அறையை உங்களுக்குத் தருகிறேன், உங்கள் அறைக்கு நான் நகர்ந்துவிடுகிறேன் என்று ஜார்ஜ் சொல்லும்போது, அவன் அப்பா தனது பாத்திரத்தை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறானா? அப்பாவின் ஆடைகளைக் களைந்து, புது ஆடை அணிவித்து, அவரைப் படுக்க வைத்து, கால்களுக்குக் கீழே போர்வையைச் சுருட்டி மடக்கி, ஒரு குழந்தையைப் போல் அவரை உறங்க வைக்க முயல்கிறான். குழந்தை தூங்க மாட்டேன் என்கிறது. கத்துகிறது. நீ என்னைப் போல் மாறிக்கொண்டிருக்கிறாய். என் ஆன்மாவைக் கவர்ந்து உனதாக்கிக்கொள்கிறாய். இதை நான் அனுமதிக்கமாட்டேன் என்று கதறுகிறார் அப்பா. அவரால் வேறெதுவும் செய்யமுடியாது என்பதால் சபிக்கிறார்.
ஃபிராய்ட் எல்லாவற்றையும் பாலியல் கோணத்தில் அணுகக்கூடியவர் என்பதால் இக்கதையும் அவ்வாறே அணுகப்பட்டிருக்கிறது. தன் மனைவியை இழந்து தனித்திருக்கும் அப்பாவின் முன்னால் புதிய மணவாழ்வைத் தொடங்கும் குதூகலத்தோடு வந்து நிற்கிறான் மகன். அப்பாவிடம் ஒரு காலத்தில் இருந்த துடிதுடிப்பு இப்போது மகனிடம். உன் துணையை உன்னிடமிருந்து என்னால் கவரமுடியும் என்று தன்னை மறந்து கத்துகிறார் அப்பா.
கிரேக்கத் தொன்மக்கதைகளில் வரும் ஈடிபஸ் எனும் மன்னனுக்கு ஓர் ஆருடம் சொல்லப்படுகிறது. நீ உன் தந்தையைக் கொன்றுவிட்டு உன் தாயை மணந்துகொள்வாய் என்பதுதான் அந்த ஆருடம். இறுதியில் அது பலிக்கிறது. அம்மாவின்மீது மகன் கொள்ளும் மையல் என்றொரு கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்து அதற்கு ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ என்று பெயரிட்டார் ஃபிராய்ட். அம்மாவை விரும்பும், அப்பாவை வெறுக்கும் அல்லது அப்பாவிடமிருந்து அம்மாவைப் போரிட்டுக் கவரும் விழைவு இது. ஜார்ஜ் தன் அம்மாவின்மீதான நேசத்தை அவர் மறைவுக்குப் பிறகு ஃப்ரீடாவுக்கு மடை மாற்றுகிறான். அப்பாவை வெறுக்கிறான். அதே சமயம் அப்பாவின் இடத்தையும் எடுத்துக்கொள்கிறான். அவன் வெறுக்கும் அப்பாவாகவே மாறுகிறான். இந்த முரண்தான் அவன் சிக்கலா? அவனுக்குள் ஓர் ஈடிபஸ் இருந்திருப்பானா? அப்பாவின் தீர்ப்பை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு தன்னை மாய்த்துக்கொண்டதற்கு அவனுடைய குற்றவுணர்ச்சியே காரணமாக இருந்திருக்குமா?
ஜார்ஜின் பார்வை மட்டுமே நமக்குக் கிடைக்கிறது என்றாலும் இக்கதையைப் படர்க்கையில்தான் காஃப்கா எழுதியிருக்கிறார். அதனால் ஜார்ஜின் மனவோட்டம் நமக்கு முழுக்கப் புலப்படுவதில்லை. அவன் பலவற்றை மறைத்து வைக்கிறான் என்னும் உணர்வே தோன்றுகிறது. தன் நண்பனின் பெயரையே இறுதிவரை சொல்லாதவன் தன் முரண்பட்ட உணர்வுகளை முழுமையாக நம்மோடு பகிர்ந்துகொள்வான் என்று எதிர்பார்க்கமுடியாது. இல்லை, நீ சொல்வது பொய். நீ என்னைக் கவனித்துக்கொள்வதே இல்லை என்று அப்பா சொல்வது உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா?
இக்கதையில் நாம் ஈடிபஸை அல்ல, எதிர் ஈடிபஸைக் காண்கிறோம் என்கிறார் ஹேமன். மகன் அப்பாவைக் கொல்வதில்லை. அப்பா மகனைக் கொல்கிறார். ஜார்ஜையும் காஃப்காவையும் ஒப்பிடுவதற்கான புள்ளிகள் நிறையவே இருக்கின்றன என்கிறார் அவர். காஃப்கா தன் அப்பாவைக் கண்டு அஞ்சுபவராகவே இறுதிவரை இருந்தார். கனத்த, முரட்டுத் தோற்றம் கொண்டவராக, அதட்டுபவராக, ஆதிக்கம் செலுத்துபவராக காஃப்காவின் அப்பா இருந்திருக்கிறார். ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை அவர் நடத்திக்கொண்டிருந்தார். அபரிமிதமான தன்னம்பிக்கை கொண்டவராக, நொடியில் சீறி வெடிப்பவராக இருந்திருக்கிறார். எப்போது, எதற்காக அவர் கோபம் கொள்வார், கோபத்தில் என்ன செய்வார் என்பது யூகிக்கமுடியாததாக இருந்திருக்கிறது. 36 வயதானபோது தன் அப்பாவுக்கு எழுதிய ஒரு நீண்ட கடிதத்தில் அவர்மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் காஃப்கா. ‘நான் நானாக இருப்பதற்குக் காரணம் நீதான் என்று சொல்லமாட்டேன். இது மிகை போல் தோன்றுகிறது என்றால் அப்படிச் சொல்லவே விரும்புவேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அசலான காஃப்கா வாக்கியம் இப்படித்தான் இருக்கும் என்கிறார் ஹேமன். ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதிலொரு முரணை நுழைத்துவிடுவது அவர் பாணி. ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கும்போதே அதை அழிக்கவும் தொடங்கிவிடுவார்.
தன் குழந்தைகளைப் பொதுவெளியில் நிற்க வைத்து வசை பாடும் வழக்கம் காஃப்காவின் அப்பாவுக்கு இருந்திருக்கிறது. எதற்காக இந்தத் தாக்குதல் என்பது தெரியாமலேயே குழந்தைகள் பல சமயம் குழம்பி நின்றிருக்கின்றனர். குற்றம் எதுவும் இழைக்காமலேயே விசாரணை அறையில் அமர்ந்திருக்கும் உணர்வை (The Trial) காஃப்கா பலமுறை எதிர்கொண்டிருக்கவேண்டும். அப்பாவின் தீர்ப்பே இறுதியானது. இறுதிவரை அப்பாவின் அன்பை காஃப்காவால் வென்றெடுக்கமுடியவில்லை. இது அவரை வதைத்தது. அப்பாவின் மீதான அச்சமும் விலகுவதாக இல்லை. எழுதுவதன்மூலம் அந்த அச்சத்தை எதிர்கொள்ளமுடியுமா என்று பார்த்திருக்கிறார். அவருடைய பல கதைகளில் வலுவான, அச்சுறுத்தும் அப்பா ஒருவர் தோன்றிவிடுகிறார்.
நடமாடிக்கொண்டிருந்தவரை ஜார்ஜின் அப்பா தன் மகனின் வளர்ச்சியை எந்த வகையிலும் ஊக்குவித்ததில்லை. அவனுடைய கனவுகளை, ஏக்கங்களைப் புரிந்துகொள்ளக்கூட முயன்றதில்லை. ஜார்ஜ் தனியனாகவே வளர்கிறான். ரஷ்ய நண்பனும்கூட இறுதியில் அவனைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறான். அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அப்பா தளர்ந்து விழுந்த பிறகே அவனுக்குக் காதல் வாழ்க்கை கைகூடுகிறது. அந்த மகிழ்ச்சியைக்கூட அவன் தன் நண்பனிடமிருந்து மறைக்கவே விரும்புகிறான். அந்நிய நிலத்தில் தனியனாக வாழும் ஒருவனின் துயரத்தை அவனைவிட வேறு யாரால் உணரமுடியும்?
காஃப்கா செக்கோஸ்லாவாக்கியாவில் மத்தியதர யூதக் குடும்பத்தில் 1883இல் பிறந்தவர். ஒரு வழக்கறிஞராக மாறிய பிறகும் காஃப்காவின் வீட்டில் அவர் அப்பாவே தீர்ப்பெழுதுபவராக இருந்திருக்கிறார். அவர் பணியாற்றிய காப்பீட்டு நிறுவனம் அவருடைய முழுக் கவனத்தையும் உறிஞ்சிகொண்டது. எஞ்சிய நேரத்தில்தான் எழுதினார். அவர் உயிரோடு இருந்தபோது பதிப்பிக்கப்பட்டவை சொற்பமே. தன் படைப்புகளில் பெருமளவை அவரே எரித்துவிட்டார். எஞ்சியிருப்பதையும்கூட எரித்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். சில பெண்களோடு நிச்சயிக்கப்பட்டபோதும் இறுதிவரை திருமணம் நடைபெறவில்லை. தனது நாற்பதாவது வயதில் காசநோய்க்குப் பலியானார். காஃப்காவுக்குச் சில முறை தற்கொலை எண்ணங்கள் வந்திருக்கின்றன என்கிறார் ஹேமன். தற்கொலைக்கு மாற்றாக இலக்கியம் அவருக்கு தோன்றியிருக்கலாம். வாழ்க்கைக்கு மாற்றாகவும்.
எழுதியவரின் வாழ்வை நினைவில் தேக்கிக்கொண்டு வாசிக்கும்போது ஜார்ஜை நம்மால் இன்னும் கொஞ்சம் நெருங்கமுடிகிறது என்றாலும் முழுக்கப் புரிந்துகொண்டுவிட்டதாகச் சொல்லமுடியாது. காஃப்காவின் வாழ்க்கை அவர் எழுத்தைப் போலவே சிக்கலானது. எளிய புரிதலுக்கு அப்பாற்பட்டது. அந்த ரஷ்ய நண்பர் ஒருவேளை ஒளி பாய்ச்சக்கூடும். ஆனால் அவரே ஜார்ஜின் அப்பாவைப் போல் இருளில் அல்லவா கிடக்கிறார்?
0