Skip to content
Home » என்ன எழுதுவது? #13 – தொற்று

என்ன எழுதுவது? #13 – தொற்று

Orhan Pamuk

1. கற்பனை

பாமுக்கின் புதிய நாவல் (Nights of Plague, trans. Ekin Oklap, Penguin Hamish Hamilton. இனி, ‘இரவுகள்’) துருக்கியிலிருந்து மட்டுமல்ல முழு உலகிலிருந்தும் துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய தீவின் வரலாறாக விரிகிறது. உலக வரைபடத்தில் எங்கும் காணமுடியாத அந்த மத்தியத்தரைக்கடல் தீவுக்கு மிங்கேரியா என்று பெயர். ஒரு தேவதைக் கதை ஏற்படுத்தும் மயக்கத்தை ஒரு சிறிய தீவால் ஏற்படுத்தமுடியும் என்பதால் என் கதையை இங்கே வளர்த்தெடுத்தேன் என்கிறார் பாமுக்.

மீஸ் என்று துருக்கியர்களால் அழைக்கப்படும் கிரேக்கத் தீவுக்கு அவ்வப்போது சென்று தங்குவது பாமுக்கின் வழக்கம். ‘எழுத்து, எழுத்து, எழுத்து. நீச்சல், நீச்சல், நீச்சல்’. இந்த இரண்டையும்தான் மாற்றி மாற்றிச் செய்துகொண்டிருப்பாராம். அவரைக் கவர்ந்த இந்தத் தீவையே தன் நாவலுக்கு அவர் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் நடுவில் தெற்கில் அமைந்திருக்கும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிரேக்கத் தீவான கிரீட்டை மையப்படுத்தி அவர் எழுதியிருக்கலாம். கதை நிகழும் 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது கிரீட். அவருக்குத் தேவைப்பட்ட பின்னணி கிட்டத்தட்ட கச்சிதமாக கிரீட்டுக்குப் பொருந்திப் போகிறது. சைப்ரஸ்கூட அவர் நாவலுக்கு நெருக்கமான இடம்தான். ஆட்டோமான் பேரரசு உடைந்து நொறுங்க ஆரம்பித்ததும் அவர்களுடைய பிடியிலிருந்து விலகி வந்துவிட்டது சைப்ரஸ். நாவலுக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய இடம். இருந்தும், கற்பனையில் ஒரு தீவை உருவாக்கவேண்டிய அவசியம் ஏன் நேரவேண்டும்?

சிறியதோ, பெரியதோ எந்தவோர் இடமும் கால வரையறைக்கு உட்பட்டது. காலம் வரலாற்றோடு தொடர்புடையது. ஏற்கெனவே வரலாற்றில் அழுந்திக் கிடக்கும் ஓரிடத்தை நம் விருப்பத்துக்கு வளைக்கமுடியாது. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சம பங்கு வசித்த, கிரேக்கர்களும் நிறைந்த ஒரு தீவு பாமுக்குக்குத் தேவைப்பட்டிருக்கிறது. கிரீட்டில் இந்தக் கலவை சரியாக இல்லை. ஏற்கெனவே எழுதப்பட்ட நோட்டு புத்தகத்தில் வேறு மை கொண்டு மேலே, மேலே எழுதிச் செல்வதைவிடப் புத்தம் புதிய ஏடு உகந்தது அல்லவா?

மிங்கேரியா பாமுக்கின் கட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் அடங்கியிருக்கும் தீவு. எப்போது தேவைப்படுமோ அப்போது மட்டும்; எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்கு மட்டும் புறவுலகின் வரலாறு அதற்குள் ஊடுருவும். கற்பனை இடத்துக்கு இன்னொரு வசதியும் இருக்கிறது. உலக வரைபடத்தில் இல்லாத இடத்தை எழுதும்போது சர்ச்சைகளைத் தவிர்க்கலாம். எனவே கவனமாகத் திட்டமிட்டுத் தன் களத்தை அவர் அமைத்துக்கொண்டார்.

இந்த உத்தி பலனித்ததா என்றால் இல்லை. எப்போதெல்லாம் சர்ச்சைகளைத் தவிர்க்க விரும்புகிறாரோ அப்போதெல்லாம் சர்ச்சைகள் பாமுக்கைத் தேடி வந்துவிடுவது வழக்கம். இஸ்தான்புல்லில் நடக்காத ஒரு கதையை நான் எழுதினால்கூட அது எப்படியோ இஸ்தான்புல்லுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது என்று புன்னகை கலந்த வேதனையோடு அவர் குறிப்பிடுவது இதனால்தான். வரலாற்றுக் காற்றே படாத ‘இரவுகள்’ வரலாற்றோடு ஒப்பு நோக்கப்பட்டு விவாதிக்கப்படுவதை பாமுக்கால் தவிர்க்கமுடியவில்லை. இயன்றவரை யதார்த்தத்திலிருந்து விலகி அவர் சொல்லத் தொடங்கிய கதை, துல்லியமான யதார்த்தமாக முகிழ்ந்து வந்தபோது மற்றவர்களோடு சேர்ந்து பாமுக்கும் திகைத்து நிற்கத்தான் வேண்டியிருந்தது.

‘இது ஒரு வரலாற்று நாவல் மட்டுமல்ல; நாவல் வடிவில் எழுதப்பட்ட வரலாறும்தான்’ என்னும் தொடக்க வரியோடு ஆரம்பமாகிறது, ‘இரவுகள்.’ ஒரு நாள் ‘அஸிஸியே’ என்னும் ஆட்டோமான் போர்க்கப்பல் சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பயணிகளுள் முக்கியமானவர்கள் மூவர். துருக்கிய சுல்தானின் தலைமை வேதியியலாளர் போன்கோவ்ஸ்கி பாஷா, அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி பாக்கிஸே, அவருடைய கணவரும் நோய்த்தொற்று மருத்துவருமான நூரி. சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமித் மூவருக்கும் ஒரு பொறுப்பை அளித்திருந்தார். ஜப்பானுடனான போருக்குப் பிறகு (1895) அந்நியர்களின் நடமாட்டமும் செல்வாக்கும் அதிகரித்து வருவதை சீனர்கள் கவலையோடு கவனித்தனர். கிறிஸ்தவ மிஷனரிகள் பலமிக்கவர்களாக மாறினால் நம் மரபும் பண்பாடும் பாதிக்கப்படும் என்று அஞ்சிய அவர்கள் அந்நியர்களுக்கு எதிராகத் திரண்டனர். பாக்ஸர் கலகம் என்று அழைக்கப்பட்ட இந்த எழுச்சியில் வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். சீன இஸ்லாமியர்களோடு உரையாடி அவர்கள் அச்சத்தைப் போக்கி, கலகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கு நாடுகளோடு சேர்ந்து துருக்கிய சுல்தானும் மேற்கூறிய தன் பிரநிதிகளை அங்கே அனுப்பியிருந்தார்.

நடுக்கடலில் திட்டம் மாறுகிறது. மிங்கேரியாவில் கொள்ளை நோய் தொற்று வெடித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. உண்மைதானா என்று விசாரியுங்கள் என்று சுல்தானிடமிருந்து போன்கோவ்ஸ்கிக்கு உத்தரவு வருகிறது. ஆட்டோமானின் ஆட்சிக்கு உட்பட்ட கிழக்கு மத்தியத்தரைக்கடல் தீவான மிங்கேரியாவில் இறங்கிக்கொள்கிறார். அங்கே சிறைக் கோட்டையைக் காவல் காக்கும் பைராம் என்பவரின் சடலத்தை ஆராய்கிறார். கொள்ளை நோய்க்குப் பலியான முதல் மனிதரைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.

சாமி பாஷா என்னும் ஆளுநரின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது மிங்கேரியா. அவருக்குக் கொள்ளை நோயைவிடவும் தீவிலுள்ள கிரேக்கர்களைக் கண்டுதான் பயம். கொள்ளை நோய் நம் தீவுக்கு வந்திருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால் அந்தக் குழப்பத்தையும் பீதியையும் பயன்படுத்திக்கொண்டு கிரேக்கர்கள் ஆட்டோமான் சுல்தானுக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கிவிடுவார்கள் என்று சாமி கவலை கொள்கிறார். தொற்று என்பது மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல, அரசியல் பிரச்சினையும்கூட என்பதை அவர் அறிவார். போன்கோவ்ஸ்கி சொல்வதுபோல் கொள்ளை நோய் குறித்த அறிவிப்பை வெளியிடத்தான் வேண்டுமா? இதற்கிடையில், தொற்றை ஆராய்ந்துகொண்டிருக்கும்போதே போன்கோவ்ஸ்கி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கப்பல் மீண்டும் நிறுத்தப்படுகிறது. சீனா முக்கியமில்லை, உடனே மிங்கேரியா திரும்பவும் என்று நூரிக்குக் கட்டளையிடுகிறார் சுல்தான். போன்கோவ்ஸ்கியை யார் கொன்றது என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு நூரிக்கு வருகிறது. இளம் மனைவி பாக்கிஸேவுடன் மிங்கேரியா வந்து சேர்கிறார்.

அழகிய, சிறிய தீவாக அவர்கள் கற்பனையில் பதிந்து போயிருக்கும் மிங்கேரியா ஒரு கொடுங்கனவாக மாறி நிற்கிறது. பைராம் போல் பலருக்கும் உடலில் கொப்புளங்கள் வெடிக்கின்றன. வலியால் துடிக்கிறார்கள். கொத்துக் கொத்தாக இறக்கிறார்கள். அவர்களைக் காட்டிலும் அச்சமூட்டுபவர்கள், மீட்பர்கள் எனும் பெயரில் அதிகாரம் செலுத்திவரும் இஸ்லாமிய மதகுருமார்கள். அஞ்சாதீர், நாங்கள் மந்திரித்துத் தரும் பிரார்த்தனைத் தாளை கையில் வைத்திருங்கள், கொள்ளை நோய் தீண்டாது என்று இவர்கள் சொல்வதை நம்பி மேலும் பலர் இறக்கின்றனர். இறப்பதற்குமுன்பு மேலும் பலருக்குப் பரப்புகின்றனர். நூரி திகைத்து நிற்கிறார். தொற்றின் தீவிரத்தை இவர்களுக்கு உணர்த்துவது? மதத்தோடு கொஞ்சம் அறிவியலையும் சேர்த்து அணைத்துக்கொள்ளுங்கள் என்று எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது?

கொள்ளை நோயைத் தடுக்க மேற்கொள்ளப்படும் அத்தனை முயற்சிகளும் எதிர்க்கப்படுகின்றன. கடைகளை மூடினால் வருமானம் யார் தருவார்கள்? மசூதியை மூடும் அதிகாரத்தை யார் உங்களுக்குத் தந்தது? மசூதிகள் திறந்திருக்கலாம் என்றால் தேவாலயங்கள் ஏன் திறந்திருக்கக்கூடாது? இஸ்லாமியர்கள் கூட்டாகத் தொழுகை செய்தால் தொற்று வராது என்றால் கிறிஸ்தவர்கள் கூடிப் பிரார்த்தனை செய்தால் மட்டும் வந்துவிடுமா? இஸ்லாமியர்களும் கிரேக்கர்களும் மோதிக்கொள்கிறார்கள். அதிகாரிகளும் பிரஜைகளும் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அடிப்படைவாதம் அறிவியலைப் பிடித்துத் தள்ளுகிறது. மதபீடங்களின் முன்னால் அரசு மண்டியிடுகிறது. தர்க்கமும் நம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்து சமர் புரிகின்றன. இந்த மோதல்களிலிருந்தும் அவை ஏற்படுத்தும் எண்ணற்ற சிடுக்குகளிலிருந்தும் பல்கிப் பெருகுகிறது தொற்று.

இறையச்சத்தை உயிரச்சம் முழுக்க வென்ற பிறகே, அடிப்படைவாதிகளின் பிடி தளர்கிறது. தனிமைப்படுத்துதல்மூலம் மட்டுமே தொற்றைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதை மிங்கேரியா உணர ஆரம்பிக்கிறது. ஆளுநர் சாமியோடு இணைந்து கொள்ளை நோய்க்கு எதிரான மாபெரும் போரை மேற்கொள்கிறார் நூரி. கடைகள் சாத்தப்படுகின்றன. எவ்வளவு எலிகளைப் பிடித்து வந்து கொடுக்கிறார்களோ அதற்கேற்ப பணம் தருகிறார்கள் அதிகாரிகள். நோயில் இறந்தவர்களின் உடைமைகள் கொளுத்தப்படுகின்றன. சில சமயம், வீடுகளும். பேக்கரி முதல் மசூதிவரை எல்லா இடங்களிலும் லைஸால் பீய்ச்சியடிக்கப்படுகிறது. பணம் இருப்பவர்கள் கிடைத்த படகுகளில், கேட்ட தொகையைச் செலுத்தி தீவிலிருந்து தப்பியோட முயல்கிறார்கள்.

அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுதான் இஸ்தான்புல்லில் அமர்ந்திருக்கும் சுல்தானின் அச்சமும். மிங்கேரியாவைப் பீடித்துள்ள தொற்று அங்கேயே முடக்கப்படவேண்டும். வெளியில் பரவினால் பேரரசுக்கு ஆபத்தாகிவிடும். இஸ்தான்புல் வாழவேண்டுமானால் சில மிங்கேரியாக்கள் வரைபடத்திலிருந்து மறைந்துதான் தீரவேண்டும். பேரரசுகள் உலகெங்கும் இப்படித்தான் செழித்திருக்கின்றன. ‘ஐரோப்பாவின் நோயாளி’ என்று அழைக்கப்பட்டுவந்த துருக்கிக்கு பிரிட்டனிடமிருந்தும் அழுத்தம் கூடிக்கொண்டுபோனது. மிங்கேரியா கட்டுப்படுத்தப்படாவிட்டால் பாதிப்பு துருக்கிக்கு மட்டுமல்ல, முழு ஐரோப்பாவுக்கும்தான். தீவிலிருந்து மக்கள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாகத் தனது போர்க்கப்பலைக் கொண்டுவந்து நிறுத்துகிறது பிரிட்டன். சுல்தானும் தனது போர்க்கப்பலை நிறுத்தவேண்டிய அவசியத்துக்குத் தள்ளப்படுகிறார்.

தனிமைப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த மிங்கேரியாவே இப்போது தனிமைப்படுத்தப்பட்டுவிடுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழு தீவும் சிறையில் தள்ளப்படுகிறது. இந்தக் கொடூரமான சூழலை ஆளுநர் சாமி சமாளிக்கவேண்டும்; தட்டிப் பறிக்கத் துடிக்க நூறு கரங்களோடு போராடி தன் அதிகாரத்தைத் தக்க வைக்கவேண்டும். தொற்றிடமிருந்து மக்களை மீட்டு, ஆளுநரின் கரத்தை மருத்துவர் நூரி வலுப்படுத்தவேண்டும். வாழ்வா, சாவா போராட்டத்துக்கு மத்தியில் ஒரு கொலையையும் அவர் துப்புத் துலக்கவேண்டும்.

இந்தக் கலவையான பின்னணியில் முகிழ்ந்து கிளம்புகிறது மிங்கேரிய தேசியவாதம். நம்மீது அக்கறையில்லாத ஆட்டோமான் பேரரசுக்கு நாம் ஏன் இன்னமும் கட்டுப்படவேண்டும்? பிரஜைகள் என்று தெரிந்தும் கப்பலைக் கொண்டு வந்து நிறுத்தும் சுல்தானோடு நமக்கென்ன உறவு வேண்டிக்கிடக்கிறது? மிங்கேரியாவை ஏன் மிங்கேரியர்களாகிய நாமே ஆளக்கூடாது? அசாதாரண சூழல் அசாதாரண கேள்விகளைத் தோற்றுவிக்கிறது. மிங்கேரியாவின் வரலாற்றைப் புதிதாக எழுத ஒரு தலைவர் உருவாகி வருகிறார். மருத்துவர் நூரியின் மனைவியும் ஆட்டோமான் இளவரசியுமான பாக்கிஸேவைப் பாதுகாப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட மேஜர் கமில்தான் அவர். கிருமிகள் செழித்திருக்கும் மிங்கேரியா தனது முதல் புரட்சியைச் சந்திக்கிறது. ‘மிங்கேரியா நீடுழி வாழ்க! மிங்கேரியர்கள் நீடுழி வாழ்க! மிங்கேரிய தேசம் நீடுழி வாழ்க!’ எனும் முழக்கம் மரணத்தின் ஓலத்தைக் கிழித்துக்கொண்டு காற்றில் எதிரொலிக்கிறது. கதையே அதன்பிறகுதான் தொடங்குகிறது.

கற்பனைத் தீவு, கற்பனைத் தலைவர், கற்பனைப் புரட்சி. இருந்தும் உண்மைக்கு அணுக்கமானது, உண்மையைக் காட்டிலும் வெளிப்படையானது கற்பனை ஒன்றுதான் என்பதால் பாமுக்கின் புனைவு வழக்கம்போல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

2. வரலாறு

மிங்கேரியாவின் தேசியத் தந்தையான மேஜர் கமில், நவீன துருக்கியக் குடியரசின் தேசியத் தந்தையான கமால் அதாதுர்க்கை (1881 வாக்கில் -1938) நினைவுபடுத்துகிறார் என்பதுதான் அடிப்படையான சிக்கல். 20ஆம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர், அதாதுர்க். முதல் உலகப் போர் முடிவுற்றபோது ஆட்டோமான் பேரரசின் 600 ஆண்டுகாலச் செல்வாக்கு முடிவுக்கு வந்திருந்தது. எஞ்சியிருந்த சிதிலங்களிலிருந்து ஒரு புதிய துருக்கி குடியரசை உருவாக்கி, உயிரூட்டியவர் அதாதுர்க். அவர் வரவுக்குப் பிறகே சுதந்தர துருக்கியை உலகம் முதல்முறையாகக் கண்டது. தனது நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, அண்டை நாடுகளின் வரலாற்றிலும் தாக்கத்தைச் செலுத்தியவர்.

ஒருமுறை ஒரு சிறிய துருக்கிய கிராமத்தில் தன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இடையர் மலையடிவாரத்தில் விழுந்து கிடந்த நிழலைத் தற்செயலாகப் பார்வையிடுகிறார். அந்த நிழல் கமால் அதாதுர்க்கின் உருவம்போல் அவருக்குத் தோன்றுகிறது. இது நடந்தது 1954ஆம் ஆண்டில். ஆம், அது அதாதுர்க்தான் என்று மேலும் பலரும் பரவசமடைந்ததைத் தொடர்ந்து மலையடிவார நிழல் ஓர் அற்புதமாக உருமாறுகிறது. பெரும்திரளான மக்கள் அதாதுர்க்கைத் தரிசிக்க படையெடுத்து வந்து காத்திருக்கிறார்கள். சூரியன் மறைந்து, நிழல் பரவுவதையும், அந்நிழல் வளர்ந்து, வளர்ந்து அவர்களுடைய பெருந்தலைவராக மாறுவதையும் கண்டு திகைக்கிறார்கள். அதாதுர்க் மறையவில்லை, அவர் நம்மோடே இருக்கிறார் என்னும் நம்பிக்கையும் வளர்கிறது.

ஒரு நாள் மக்கள் வழக்கம்போல் அற்புதத்துக்காகக் காத்துக்கிடந்தபோது, ஓர் இடையர் எங்கிருந்தோ தோன்றி தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு நிதானமாக நடை போட்டுக்கொண்டிருக்கிறார். நிழல் தோன்ற ஆரம்பிக்கும்போதே இடையர் தன்னையறியாமல் அதைக் கலைத்துவிடுகிறார். அவ்வளவுதான், சுற்றியிருந்தவர்களெல்லாம் கொந்தளிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்தப் புனிதமான இடத்தில் எப்படி அசிரத்தையாக ஆடு, மாடுகள் மேய்க்க அனுமதிக்கலாம்? நம் தேசத்தந்தை தோன்றும் இடத்தைக் காப்பாற்றவேண்டியது அரசின் கடமையல்லவா? அதாதுர்க்கின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியுள்ள ஆண்ட்ரூ மாங்கோ குறிப்பிட்டுள்ள சம்பவம் இது. (Atarutk, Andrew Mango, John Murray).

அன்றுபோல் அதாதுர்க் கடவுளுக்கு நிகரானவராக இன்று கருதப்படுவதில்லை என்றாலும் இன்னமும் புனித ஒட்டடைகள் அவர்மீது படிந்து கிடக்கின்றன என்கிறார் மாங்கோ. அவற்றை அகற்ற முயல்பவர்கள் ஒருசாராரால் தீவிரமாக எதிர்க்கப்படுவது இன்றளவும் தொடரும் நடைமுறை. மிங்கேரியாவின் தேசத் தந்தை கமில் மீதும் இப்படித்தான் பல புனிதச் சாயங்கள் பின்னாள்களில் பூசப்படுகின்றன. அவர் வாழ்க்கையே ஓர் அற்புதக் கதையாக மாறுகிறது. அதாதுர்க்கின் பொன்மொழிகள் தேசிய முழக்கங்களாக இன்று மாறியிருக்கின்றன. அவற்றில் பல அவர் சொன்னவையே அல்ல என்றாலும் அவருடைய சொற்களாகவே இன்று அவரை போற்றப்படுகின்றன. பாமுக்கின் நாவலிலும் இதேபோல் கமிலின் சொற்கள் மரியாதைக்குரியவையாகக் கருதப்பட்டுத் திரட்டப்படுகின்றன. இறுதிக்கணங்களில் கமிலின் வாயிலிருந்து வருவதையெல்லாம் எழுதி வைப்பதற்கென்றே ஓர் எழுத்தர் நியமிக்கப்படுகிறார்.

அதாதுர்க் போலவே கமில் ஒரு பிரிவினருக்கு தேசத்தந்தையாகவும் இன்னொரு பிரிவினருக்குச் சர்வாதிகாரியாகவும் தோற்றமளிக்கிறார். அதாதுர்க் போலவே மிங்கேரியாவின் வரலாற்றில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்துகிறார் மேஜர் கமில். அந்நியர்களால் நாம் ஆளப்பட்டு வந்தது போதும், நம்மை நாமே ஆள்வோம் என்று கமில் முழங்கும்போது அதாதுர்க்கின் குரலையே நாம் கேட்கிறோம். நவீனத்துவம், மேற்கத்திய நாகரிகம் உள்ளிட்டவற்றை ஏற்கிறார் என்றாலும் மிங்கேரியா தனித்துவமான பண்புகளோடு முகிழ்ந்து வருவதே சிறந்தது என்கிறார் கமில். அதாதுர்க்கின் நிலைப்பாடும் இதுவே. துருக்கியை மேற்கத்திய நாடாக மாற்றுகிறார் என்று மரபார்ந்த இஸ்லாமியர்கள் அதாதுர்க்கை விமரிசிக்கின்றனர். கமிலுக்கும் அது நிகழ்கிறது.

அரபு, பாரசீகத் தாக்கங்களைக் களைந்து துருக்கியச் சொற்களைப் பயன்படுத்திப் பரவலாக்கும் மொழி சார்ந்த இயக்கமொன்றை அதாதுர்க் தன் காலத்தில் முன்னெடுத்தார். மிங்கேரியாவிலும் அப்படியொன்று நிகழ்கிறது. அரபு, கிரேக்கத் தாக்கங்களைக் களைந்து கலப்பற்ற மிங்கேரிய மொழியை உருவாக்கவேண்டும் என்று கமிலும் அவரை அடியொற்றி வருபவர்களும் துடிக்கிறார்கள். துருக்கியையும் மிங்கேரியாவையும் அருகருகில் நிறுத்தி அவற்றின் தலைவர்களை இப்படி ஒப்பிடத் தொடங்கினால் மேலும் பல பொதுப்பண்புகளை இருவருக்கும் இடையில் காணமுடியும் என்பது உண்மைதான்.

ஆனால் நான் அதாதுர்க் போன்ற ஒருவரை நுழைக்கவேண்டும் என்று நினைத்து என் நாவலை நான் எழுதவில்லை என்கிறார் பாமுக். அதாதுர்க்கை விமரிசிக்கவேண்டும் என்று நினைத்தால் ஒரு கட்டுரையாகவே எழுதிவிட்டுப் போய்விடுவேனே? நான் ஏன் புனைவு எழுதவேண்டும்? அதேபோல், மிங்கேரியாவின் ஆளுநர் சாமிதான் இன்றைய அதிபர் தையிப் எர்டோகனா என்றும் கேட்கிறார்கள். இல்லை என்பதே என் பதில். எனது ஆளுநர் எர்டோகனோ வேறொருவரோ அல்ல. எனது கமில் அதாதுர்க்கோ இன்னொருவரோ அல்ல. எனது மிங்கேரியா துருக்கியல்ல. நான் எழுதியிருப்பது புனைவு, வரலாறல்ல.

அதாதுர்க்கின் நினைவுகளைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவே சில சிறப்பு சட்ட விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘இரவுகள்’ அந்த விதிமுறைகளை மீறிவிட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. துருக்கியப் பதிப்பு 2021இல் வெளிவந்ததைத் தொடர்ந்து ஒரு வழக்கறிஞர் பாமுக்மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை ஆரம்பமானது. நாவல் எழுதியதன்மூலம் துருக்கியின் தேசத்தலைவரை நீ அவமதித்துவிட்டாய் என்று வழக்கறிஞர் முறையிட்டபோது, பாமுக் திருப்பிக் கேட்டார். புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் அவ்வாறு செய்தேன் என்று சொல்லமுடியுமா? அவருக்கான பதில் கிடைக்கவில்லை. வழக்கு நடு வானில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

முன்னதாக, 2005இல் பாமுக் நேரடியாகவே துருக்கிய அரசின் கோபத்துக்கு ஆளானார். இந்த முறை புனைவுக்காக அல்ல, அவர் அளித்த ஒரு பேட்டிக்காக. துருக்கியின் வரலாற்றின்மீது படிந்துகிடக்கும் இருள் என்று ஆர்மினிய இனவொழிப்பைக் குறிப்பிடலாம். 20ஆம் நூற்றாண்டின் முதல் இனவொழிப்பு என்று அழைக்கப்படும் இந்நிகழ்வில் லட்சக்கணக்கான ஆர்மியர்கள் ஆட்டோமான் துருக்கியர்களால் கொல்லப்பட்டனர். துருக்கியின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டின்படி, பல ஆர்மினியர்கள் கொல்லப்பட்டது உண்மை. ஆனால் இனவொழிப்பு என்று அதனை அழைக்கமுடியாது, அழைக்கவும் கூடாது. ஆட்டோமான் பேரரசு சரிந்துகொண்டிருக்கையில் மூண்ட உள்நாட்டு யுத்தம்தான் ஆர்மினியர்களின் மரணத்துக்குக் காரணம்.

2005இல் சுவிட்ஸர்லாந்து பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பத்து லட்சம் ஆர்மினியர்களும் 30,000 குர்துக்களும் துருக்கியில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்றும் ‘என் நாட்டில் இதைப் பேசுவதற்குத் தடை இருக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார் பாமுக். இனவொழிப்பு என்னும் பதத்தை அவர் பயன்படுத்தவில்லை என்றாலும் அவருடைய பேட்டி பரவலான கோப அலைகளை துருக்கியில் ஏற்படுத்தியது. அதன் விளைவாக, வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கைத் தனது கட்டுரைத் தொகுப்பொன்றில் (Other Colours, Orhan Pamuk, Faber & Faber) நினைவுகூர்ந்திருக்கிறார் பாமுக். துருக்கிய அடையாளத்தைப் பொதுவெளியில் இழிவுபடுத்திவிட்டேன் என்பதுதான் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஏற்கெனவே துருக்கிய ஆர்மினிய எழுத்தாளர் ஒருவர் இதே குற்றச்சாட்டில் (301ஆம் பிரிவின்படி) கைது செய்யப்பட்டு, தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அது எனக்கும் பொருந்துமானால் மூன்றாண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கலாம். இருந்தும் நான் நம்பிக்கையோடு இருந்தேன் என்கிறார். தனது வழக்குக்கு ஏனோ மிகுதியான வெளிச்சம் கிடைத்துவிட்டது என்றும் சற்றே நாணுகிறார். உண்மையில் என் நண்பர்களோடும் பிற எழுத்தாளர்களோடும் ஒப்பிடும்போது நான் பட்ட அவதியெல்லாம் ஒன்றுமே இல்லை. தாங்கள் உண்மை என்று நம்பியதை எழுதியதற்காகக் கொடுமையான விசாரணைமுறை, சிறை தண்டனை என்று வாழ்நாளில் பல ஆண்டுகளை அவர்கள் இழந்திருக்கிறார்கள். எனக்கு இதுவரை அப்படியெதுவும் நிகழவில்லை.

துருக்கியின் இயல்புகளில் ஒன்றாகச் சகிப்பின்மை மாறிவிட்டது குறித்து அவருக்கு நிறையவே வருத்தம். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பாஷாக்களையும் புனிதர்களையும் காவலர்களையும் கொண்டாடும் நாடு என்னுடையது. ஓர் எழுத்தாளருக்கும் அதே மரியாதை கிடைக்கவேண்டுமென்றால் அவர் பல ஆண்டுகளை நீதிமன்றத்திலும் சிறைச்சாலையிலும் செலவிடவேண்டியிருக்கும். என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்ததும், ஆகா, இப்போதுதான் நீ ஓர் அசல் துருக்கிய எழுத்தாளராக மாறியிருக்கிறாய் என்று என் நண்பர்கள் மகிழ்ந்தனர். ஆனால் நான் அப்படிப்பட்ட மரியாதையை எதிர்பார்த்து எதுவும் பேசவில்லை என்கிறார் பாமுக்.

அவர் விரும்புகிறாரோ இல்லையோ, உலகின் கண்களில் அவர் ஒரு படைப்பாளர் அல்ல, துருக்கியப் படைப்பாளர். இலக்கியப் பங்களிப்புகள் போலவே அவருடைய ‘துருக்கியத்தன்மையும்’ உலகுக்கு (குறிப்பாக மேற்குலகுக்கு) முக்கியமானதாக இருக்கிறது. என்னைச் சந்திக்கும் மேற்கத்திய நிருபர்கள் இலக்கியம் குறித்து மட்டுமல்ல, அரசியல் குறித்தும் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள். புத்தகங்கள் குறித்து மட்டும் பேசுங்கள் என்று கறாராகச் சொல்லவும் எனக்கு வரவில்லை என்று புன்னகைக்கிறார்.

அவருடைய நண்பர் ருஷ்டி அளவுக்கு இல்லாவிட்டாலும் பாமுக்கும் அவருடைய கருத்துகளுக்காக அச்சுறுத்தலுக்கு ஆளானவர்தான். மன உளைச்சலுக்கு ஆட்பட்டவர்தான். ஆர்மினியர்கள் குறித்துப் பேசியதற்காக 15 ஆண்டுகள் மெய்க்காப்பாளர்களோடு அவர் வாழவேண்டியிருந்தது. முன்பெல்லாம் எங்கு போனாலும் என்னோடு மூன்று பேர் வருவார்கள். இப்போது ஒருவர்தான் நிழல்போல் தொடர்கிறார். துருக்கி கொஞ்சம் முன்னேறியிருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கண்களைச் சிமிட்டுகிறார். ஆர்மினியா பற்றி நான் பேசியதை விரும்பாத பல பத்திரிகைகள் நான் ‘அமைதியாக்கப்படவேண்டும்’ என்று எழுதினார்கள். சில வலதுசாரி கட்டுரையாசிரியர்கள் (இஸ்லாமியர்கள்தான் என்றில்லை) எனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நான் ‘நம்பிக்கை துரோகம்’ இழைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்கள். தீவிர தேசியவாதிகள் எனக்கு எதிராகப் பேரணிகள் நடத்தினார்கள். பொதுமக்கள்முன்பு என் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மக்களிடமிருந்து என்னை மறைத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

ஒரு நாட்டின் மதிப்பு அதன் வரலாற்றின் கரும்புள்ளிகளை விவாதிப்பதால் குறைந்துவிடாது. மாறாக, விவாதங்களை அடக்குவதன்மூலமே குறையும் என்கிறார் பாமுக். எங்கே பேச்சு சுதந்தரம் இல்லையோ, அங்கே ஜனநாயகம் இல்லை. ஒரு எழுத்தாளர் அவருடைய கருத்துகளுக்காக வழக்குகளைச் சந்திக்கும் நிலை நீடிக்கும்போது, ‘துருக்கியர்கள் தனித்துவமானவர்கள். மேற்கத்தியர்களைப் போலன்றி அவர்கள் அமைதியானவர்கள், இனவொழிப்பிலெல்லாம் ஈடுபடமாட்டார்கள்’ என்று எந்த அடிப்படையில் நம்பமுடியும்? கொரியாவிலும் சீனாவிலும் ஜப்பான் நடத்திய அத்துமீறல்களை ஒரு ஜப்பானிய எழுத்தாளரால் அச்சமின்றி எழுதமுடியவேண்டும். ஆனால் முடிவதில்லை என்பதுதான் நிஜம்.

சகிப்புத்தன்மை மறைந்து வருவது குறித்து துருக்கி மட்டுமல்ல, முழு உலகும் கவலை கொள்ளவேண்டும் என்கிறார் பாமுக். செச்செனியர்களும் இன்னபிற சிறுபான்மையினரும் ரஷ்ய அரசால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் கருத்து சுதந்தரத்தை இந்து தேசியவாதிகள் ஒடுக்குகிறார்கள். சீனாவில் உய்குர் மக்கள் ரகசியமாக இனவொழிப்புச் செய்யப்படுகிறார்கள். இங்கெல்லாம் ஓர் எழுத்தாளர் தன் மனதுக்குப்பட்ட உண்மையை எழுதிவிடமுடியுமா? அமெரிக்கா குறித்து ஒரு மாய பிம்பம் இருக்கிறது. ஆனால் இராக் பற்றிய பொய்கள், ரகசிய சிஐஏ சிறைச்சாலைகள் போன்றவற்றை அறிய நேரும்போது அந்த மாய பிம்பம் உடைகிறது. அமெரிக்காவை மட்டுமல்ல, மேற்கத்திய ஜனநாயகம் என்பதையே என்னைப் போன்றோரால் நம்பமுடியாமல் போய்விட்டது என்று பாமுக் சொல்லும்போது அவர் குரல் தேச எல்லைகளற்ற ஓர் உலகக் குடிமகனின் குரலாகவே ஒலிக்கிறது.

துருக்கி ஓர் இறுக்கமான நாடாக இன்று மாறியிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒருவேளை தேசியவாதம் இதற்குக் காரணமா இருக்கமுடியுமா? வாஷிங்டன் போஸ்ட் எழுப்பிய கேள்விக்கு ஓரான் பாமுக் அளித்த விடை இது. ‘உண்மையில் வறுமைதான் துருக்கியில் அதிகரித்திருக்கிறது, தேசியவாதமல்ல. மக்கள் கோபமாக இருக்கிறார்கள். ஒருவேளை தங்கள் கோபத்தை அவர்கள் தேசியவாதமாக வெளிப்படுத்துகிறார்கள் போலிருக்கிறது. இன்றுள்ள நிலையில் அவர்கள் உள்ளுக்குள் ஒடுங்கியவர்களாகத் தோற்றமளிக்கலாம். பணம், வளர்ச்சி, சமத்துவம் ஆகியவை வளர்ந்து வரும்போது அவர்கள் நிச்சயம் வெளியில் வருவார்கள்.’

கருத்து சுதந்திரம் மறுக்கப்படும்போது படைப்பாளர்களும் கலைஞர்களும் என்ன செய்யவேண்டும் எனும் கேள்விக்கு பாமுக் அளிக்கும் விடை இது. ‘முதலில் உயிர்த்திருங்கள். சிறைக்குச் செல்லத் துடிக்காதீர்கள். அதன்பின் எழுதுங்கள்.’

3. தொற்று

பாமுக் வரலாற்றின்மீது ஆர்வம் கொண்ட ஒரு புனைவெழுத்தாளர். இரவுகளில் கடந்த காலமும் நிகழ்காலமும் பிணைந்திருக்கின்றன. உண்மை, புனைவைத் துணைக்கு அழைக்கிறது. ஒரு மலைப்பாம்புபோல் கற்பனை நீண்டு வந்து வரலாற்றைக் கவ்வி விழுங்குகிறது. ஆட்டோமான் பேரரசின் வரலாற்றோடும் நிகழ்கால துருக்கிய அரசியலோடும் இந்நாவலை இணைத்து வாசிக்கும்போது நம் புரிதல் பன்மடங்கு விரிவடைகிறது. வாசிப்பனுபவமும் கூர்மை பெறுகிறது.

முந்தைய சில நாவல்கள்போலவே ‘இரவுகள்’ அடிப்படையில் ஒரு துப்பறியும் கதையும்தான். ஆட்டோமான் பேரரசு சரியும்போது அதன் பேரரசராக இருந்த இரண்டாம் அப்துல் ஹமீத் (1842-1918) நாவலில் வருவதுபோலவே ஷெர்லாக் ஹோம்ஸை விரும்பி வாசிப்பவராக இருந்திருக்கிறார். ஆர்தர் கானன் டாயல் 1907ஆம் ஆண்டு இஸ்தான்புல் வந்தபோது விருதளித்து மரியாதை செலுத்தியிருக்கிறார். போன்கோவ்ஸ்கியின் கொலையை விசாரிப்பதற்காக நூரியை மிங்கேரியாவுக்கு அனுப்பி வைக்கும்போது சுல்தான் அவரிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் அறிவியல் கண்ணோட்டத்தோடு துப்புத் துலக்கி கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்!

சுல்தான் எப்படி நிஜமோ அதேபோல் தொற்றும் நிஜம். 1855ஆம் ஆண்டு சீனாவின் யூனான் மாகாணத்தில் கொள்ளை நோய் (அரையாப்பு நோய்) வெடித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் காண்டன், ஹாங் காங், பாம்பே என்று எந்தக் கண்டத்தையும், எந்தத் துறைமுகத்தையும் விட்டு வைக்காமல் பரவிப் படர்ந்தது. பாம்பேயில் 1896இல் வெடித்த கொள்ளை நோயை பாமுக் தன் நாவலில் குறிப்பிடுகிறார். தொற்று பரவுவதற்கான முக்கிய வாகனமாக எலிகள் இருந்திருக்கின்றன. அதனால்தான் கொல்லப்பட்ட எலிகளைக் கொண்டு வந்து கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து பணம் அளிக்கிறது மிங்கேரியா. 20ஆம் நூற்றாண்டில் பலம்பெற்ற தொற்று 1959ஆம் ஆண்டுதான் வலுவிழந்திருக்கிறது. அதற்குள் 15 மில்லியன் பேர் இறந்துபோயிருந்தனர். இவர்களுள் கணிசமானவர்கள் இந்தியர்கள்.

பாமுக் தனது படைப்புகளில் மீண்டும் மீண்டும் தொட்டுச் செல்லும் ஒரு கூறு, தொற்று. அது அவரைப் பற்றிக்கொண்டுவிட்டது போலும். ‘என்னுடைய ‘Silent House’ நாவலில் ஆட்டோமான் வரலாற்றாசிரியர் ஒருவர் கடந்தகாலக் கொள்ளை நோய்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்துகொண்டிருப்பார். ‘The White Castle’ நாவலில் கொள்ளை நோய் தொடர்பான காட்சிகள் இருக்கும்’. அவருடைய ‘பனி’ (Snow, 2004) கிழக்கு துருக்கியில், ஆர்மேனியாவை ஒட்டி அமைந்துள்ள கார்ஸ் எனும் நகரில் விரியும் நாவல். துருக்கிய மொழியில் ‘கார்’ என்றால் பனி. கதையின் மைய பாத்திரத்தின் பெயர், கா. பதின்வயது பெண்களிடையே தற்கொலை ஒரு தொற்று போல் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் அதை விசாரிப்பதற்காகப் பத்திரிகையாளரும் கவிஞருமான கா அனுப்பி வைக்கப்படுகிறார். ஜெர்மனியில் அரசியல் அகதியாக பல ஆண்டுகளைக் கழித்துவிட்டு துருக்கிக்குத் திரும்பும் கா தனது தேடலை மேலும் விரிவாக்கிக்கொள்கிறார். அதீத பனிப்பொழிவு காரணமாக கார்ஸ் துருக்கியின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு தீவாக மாறுகிறது. இச்சூழலைப் பயன்படுத்தி ஒரு ராணுவப் புரட்சி அரங்கேற்றப்படுகிறது. காதல், அரசியல், கனவு, இஸ்லாமிய அடிப்படைவாதம், கவிதை, மதச்சார்பின்மை, விடுதலை, பனி அனைத்தும் காவின் வாழ்வை நிரப்புகின்றன.

‘பனி’ போல் ‘இரவுகள்’ ஓர் அரசியல் நாவலும்கூட. தற்கொலைத் தொற்றை விசாரிக்க கா வருவதுபோல் கொள்ளை நோய் தொற்றை விசாரிக்க மிங்கேரியாவுக்குச் சிலர் வருகிறார்கள். கார்ஸ் போலவே மிங்கேரியாவும் துருக்கியிலிருந்தும் அதன் தாக்கங்களிலிருந்தும் விலகி நிற்கிறது. விளைவாக, கார்ஸ் ஒரு ராணுவப் புரட்சியைச் சந்திக்கிறது என்றால் மிங்கேரியா விடுதலையைக் கண்டடைகிறது. மிங்கேரியாவிலும் கார்ஸ்போலவே அடிப்படைவாதம் பலமாக வேர்கொண்டிருக்கிறது. இரு நாவல்களிலும் கனவு போல் பல காட்சிகள் விரிகின்றன. இரண்டிலும் மையம் என்றொன்று இருந்தாலும் கதை அதில் தேங்கி நிற்காமல் சாத்தியமான எல்லாத் திசைகளிலும் காற்றுபோல் பரவிக்கொண்டிருக்கிறது.

என்னுடைய படைப்புகளில் அரசியல் இருந்தாலும் எனக்கு அரசியலில் பெரிய அளவில் ஆர்வமில்லை என்கிறார் பாமுக். ‘நான் முறையான அரசியல் நம்பிக்கைகள் கொண்டவனில்லை. அரசியல் சிந்தனைகள் எனக்கு உத்வேகமூட்டுவதில்லை. இருந்தும் அரசியலை விடுத்து என்னால் எழுதமுடியாததற்குக் காரணம் ஒன்றுதான். என் கதாபாத்திரங்கள் சிக்கலான காலகட்டங்களில் வாழ்கின்றன. அரசியல் மாற்றங்களையும் பண்பாட்டு மாற்றங்களையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான பாதையை எவ்வாறு தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்பதை என் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்’ என்கிறார் பாமுக். அவரைப் பொருத்தவரை எல்லா நல்ல நாவல்களும் இயல்பில் அரசியல் நாவல்கள்தாம். ‘அரசியல் என்பது நம்மை மற்றவர்களோடு பொருத்திப் பார்க்க முடிவது. கலையின் இதயம் என்பது மற்றவர்களின் கண்களின் வழியாக உலகைக் காண்பது’.

எதிர்காலத்தை முன்னுணர்ந்து கூறும் படைப்பு என்று பனியை அழைக்கிறார் மார்கரெட் ஆட்வுட். செப்டெம்பர் 11 தாக்குதல்கள் நடைபெறுவதற்குமுன்பே அடிப்படைவாதத்தின் அபாயங்களை பாமுக் பனியில் விவாதித்திருப்பார். ‘இரவுகள்’ நாவலின் பெரும் பகுதியை அவர் எழுதி முடித்த பிறகே கோவிட் 19 வெடித்தது. கொள்ளை நோய் குறித்து எழுதவேண்டும் என்று சில பத்தாண்டுகளாகவே மனதில் அசைபோட்டு வந்திருக்கிறார். டானியல் டிஃபோ, ஆல்பர்ட் காம்யு ஆகியோரைப் போல் தொற்றை நேரடியாக உணராமலேயே அது குறித்து ஒரு நாவலையும் எழுத ஆரம்பித்திருக்கிறார். அவர் எழுதி முடிப்பதற்குள் வரலாறு திரும்பிவிட்டது. கடந்த காலங்களில் அவர் தேடிய அனைத்தும் நிகழ்காலத்தில் இன்னொருமுறை நிகழ ஆரம்பித்தன.

சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லான ‘குவாரண்டைன்’ (தனிமைப்படுத்தல்) 14ஆம் நூற்றாண்டில் கொள்ளை நோய்க்கு எதிராகத் தொடங்கிய ஒரு வழக்கம். Quarantena எனும் வெனீசிய சொல்லின் பொருள், நாற்பது நாள்கள். வெளியிலிருந்து வரும் கப்பல்களையும் அதில் வந்திறங்கும் பயணிகளையும் நாற்பது நாள்கள் தனிமைப்படுத்துவதன்மூலம் தொற்று பரவாமல் தடுக்கலாம் என்பது திட்டம். தனிமைப்படுத்துதல் ஒரு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றாலும் அது அமல்படுத்தும் இடங்களிளெல்லாம் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. ‘19ஆம் நூற்றாண்டில் போலந்திலும் ரஷ்யாவிலும் மக்கள் எழுச்சிகள் தோன்றியிருக்கின்றன. தனிமைப்படுத்துதலை மக்கள்மீது வலுக்கட்டாயமாகவே அன்றைய அரசுகள் அனைத்தும் திணித்தன. விதிவிலக்கில்லாமல் எல்லா நாடுகளிலும் அரசு எதேச்சதிகாரத்தோடுதான் இந்த விஷயத்தில் நடந்துகொண்டன.’ நிகழ்காலத்திலும் அவ்வாறே நிகழ்வதைக் கண்டு திகைப்பும் அச்சமும் கொண்டார் பாமுக்.

‘மார்ச், ஏப்ரல் 2020இல் கோவிட் ஒரு புதிராக இருந்தபோது, தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதபோது எல்லோரும் அச்சத்தின் பிடியில் சிக்கியிருந்தனர். நான் 65 வயதைக் கடந்திருந்தேன். அஞ்சிக்கொண்டிருந்தேன்’ என்று நினைவுகூர்கிறார் பாமுக். ஒரு தொற்று மனித இதயங்களின் அடியாழம் வரை எப்படியெல்லாம் ஊடுருவிச் செல்லும், நுண்ணுர்வுகளை எப்படியெல்லாம் திருத்தியமைக்கும் என்பதை பாமுக் நேரடியாகவே கண்டார். வாசிப்பில் மட்டும் அவருக்குப் பழக்கமாகியிருந்த தனிமைப்படுத்துதல் சமகால யதார்த்தமாக, பலருக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியதைக் கண்டார். தனித்துவிடப்பட்ட வீதிகளும் இழுத்துச் சாத்தப்பட்ட கடைகளும் இதயத்தை உருக்கும் மரணங்களும் இனியும் கற்பனைக் காட்சிகள் அல்ல. சடலங்கள் கேட்பாரற்று ஆங்காங்கே கண்டெடுக்கப்படும் நிகழ்வுகளை இனி ஆவணங்களில் தேடவேண்டாம். இப்படியெல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்குமா, மனிதனைக் கண்டு மனிதன் அஞ்சி ஓடியிருப்பானா என்றெல்லாம் இனி வியக்கவேண்டியதே இல்லை. நிலையானவை என்று நாம் கருதிய பல அடிப்படை விழுமியங்களைத் தொற்று வீழ்த்தியது. புதிய விழுமியங்களை உண்டாக்கியது. அமைப்புகள் உடைந்து நொறுங்கின. ஒழுங்கு பாதிக்கப்பட்டது. வணிகர்கள், தேசியவாதிகள், அடிப்படைவாதிகள், இறை நம்பிக்கையாளர்கள், கலகக்காரர்கள், குற்றவாளிகள் என்று ஒவ்வொருவரும் தொற்றை ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்திக்கொண்டனர். மிங்கேரியா இனியும் கற்பனைத் தீவல்ல என்பதை நாவலை எழுதி முடிப்பதற்குமுன்பே பாமுக் உணர்ந்திருப்பார்.

பாமுக்கின் படைப்புகளில் கதையைவிட அது சொல்லப்படும் முறை மேலோங்கியிருக்கும். இரவுகள் பாமுக்கின் நாவல் அல்ல. மினா மிங்கர் எனும் வரலாற்று ஆய்வாளர் தனது நீண்ட ஆய்வுத்தேடலின் முடிவில் இதனை எழுதுகிறார். வரலாறு, புனைவு இரண்டிலும் இவர் ஆர்வம் கொண்டவராக இருப்பது நூலை மேலும் சிக்கலானதாக மாற்றுகிறது. கடிதம், புகைப்படம், ஆவணம் என்று பலவற்றை மினா ஆதாரங்களாகக் கொண்டாலும் கற்பனையையும் அவர் ஆங்காங்கே கலக்கிறார். தன்னைப் போலவே வரலாறு, புனைவு இரண்டிலும் ஆர்வம் கொண்டிருக்கும் ஓரான் பாமுக்கைத் தனது ஆய்வின் ஒரு பகுதியாக அவர் சந்தித்து உரையாடுகிறார். பனியிலும் இதேபோன்ற ஓர் உத்தியை பாமுக் கையாண்டியருப்பார்.

தேசியவாதமும் அடிப்படைவாதமும் ஒன்றையொன்று தழுவி, பிரிக்கமுடியாதபடி ஒன்று கலக்கும் தருணத்தை இரவுகளில் படிப்படியாக விவரித்திருக்கிறார் பாமுக். தொற்றைக் காட்டிலும் அச்சமூட்டுவதாக இச்செயல்பாடு வெளிப்படுகிறது. மிங்கேரியாவின் தேசியவாதம் என்பது நம் காலத்தின் தேசியவாதம். தொற்றுக்குமுன்பிருந்த இயல்பு மறைந்து புதிய இயல்பு தோன்றி நிலைபெற்றதுபோல் புதிய, உருமாறிய தேசியவாதம் உலகை வந்தடைந்துள்ளது. அதைப் புரிந்துகொள்ளவும் பழகிக்கொள்ளவும் பாமுக்கின் நாவல் நமக்கு உதவக்கூடும்.

0

பகிர:
மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *