‘உங்கள் புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது, மன்னிக்கவும் இதை என்னுடைய சாதனையாகவோ வெற்றியாகவோ பார்க்கமுடியவில்லை என்றார் விக்டர் பிராங்கல். மாறாக, நம் காலத்தின் பெருந்துயராகவே இதைப் புரிந்துகெள்கிறேன் என்றார். லட்சக்கணக்கான மக்கள் ஒரு புத்தகத்தை நாடுகிறார்கள் என்றால், தங்கள் வாழ்வின் பொருளை அறிந்துகொள்ள இந்நூல் உதவும் என்று அதன் தலைப்பை வைத்து அவர்கள் நம்புகிறார்கள் என்றால் அவர்கள் அந்த அளவுக்குத் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா பொருள்? எனது வெற்றியா இங்கே பேசுபொருள், அவர்களுடைய தவிப்பு அல்லவா?
விக்டர் பிராங்கலின் நூல் (Man’s Search for Meaning, Viktor Frankel, Rider) ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடக்கூடிய அளவுக்கு மிகச் சிறியது. வதைமுகாமில் என்னவெல்லாம் நடந்தது என்பதை வரிசைப்படுத்தி விவரிக்கும் நூல் அல்ல. என் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து சிலவற்றை அளித்திருக்கிறேன். லட்சக்கணக்கானவர்கள் மீண்டும், மீண்டும் சந்தித்த துயரங்களைத்தான் நானும் எதிர்கொண்டேன். அவர்களுடைய அனுபவம்தான் என்னுடையதும் என்று தனது நூலின் முன்னுரையில் அறிவித்துவிடுகிறார் பிராங்கல். முகாமில் சிக்கியவர்களின் துயரம் ஒன்றுபோல் தோற்றமளிக்கலாம். ஆனால் அத்துயரை அனைவரும் ஒன்றுபோல் எதிர்கொண்டனர் என்று சொல்லமுடியாது. ஒரே தாக்கத்தையே அது அவர்களுக்கு ஏற்படுத்தியது என்றோ ஒன்றுபோலவே அதை அவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்றோ நிச்சயம் சொல்வதற்கில்லை. பிரைமோ லெவி, எலி வீசல், ஆன் ஃபிராங்க், விக்டர் பிராங்கல் என்று ஒவ்வொருவரும் தனித்துவமான முறையில் முகாமை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் முகாம் பாதித்திருக்கிறது. அதை அவர்கள் வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு முறைகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒன்பது தினங்களில் எனது நூலை எழுதி முடித்தேன் என்கிறார் பிராங்கல். இது நடந்தது போர் நிறைவடைந்த 1945ஆம் ஆண்டு. முதல் பிரதி ஜெர்மன் மொழியில் வெளிவந்தபோது அட்டையில் நூலாசிரியரின் பெயர் இடம்பெறவில்லை. நான் பகிர்ந்துகொள்ள விரும்பிய செய்தியல்லவா முக்கியம் என்று அப்போது வாதிட்டிருக்கிறார். பெயரின்றி வருவது நம்பகத்தன்மையை அளிக்காது என்று சொல்லிப் புரிய வைத்து பிராங்கலின் பெயரைச் சேர்த்திருக்கிறார்கள். பற்பல நூல்களை எழுதியிருக்கிறேன் என்றாலும் பெயரின்றி வெளிவந்த அந்தச் சிறிய நூல்தான் இன்றுவரை அதிகம் அறியப்பட்ட படைப்பாகத் திகழ்கிறது. இது உள்ளபடியே வியப்பளிக்கிறது என்கிறார் பிராங்கல்.
0
விக்டர் பிராங்கல் 1905ஆம் ஆண்டு வியன்னாவில் பிறந்தார். அவர் தந்தை ஓர் அரசு அதிகாரி. இளம் வயதிலேயே ஏற்பட்டுவிட்ட உளவியல் நாட்டம் இறுதிவரை வலுவோடு இருந்தது. உளவியலோடு தத்துவமும் பயின்றார். 1920களின் தொடக்கத்தில் சிக்மண்ட் பிராய்டால் கவரப்பட்டு அவருடைய உளப்பகுப்பாய்வுமுறையின் தாக்கத்துக்கு உட்பட்டபோது பிராங்கல் பதின்வயதில் இருந்தார். பிராய்டுக்குக் கடிதங்களெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டார். நீ எழுதியதை என்னுடைய ஆய்விதழில் வெளியிடவா என்று பிராங்கலிடம் ஒப்புதல் வாங்கி அதை வெளியிடவும் செய்தார் பிராய்ட்.
வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றபோது மற்றொரு முக்கிய உளவியலாளரான ஆல்ஃபிரெட் ஆட்லருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய ஆய்விதழிலும் பிராங்கலின் கட்டுரைகள் வெளிவந்தன. பிராய்ட், ஆட்லர் இருவரின் தாக்கமும் அவரிடம் இருந்தது என்றாலும் ஒரு கட்டத்தில் இருவரிடமிருந்தும் விலகி நின்று, தனித்துவமான சிந்தனைப் பயணத்தைத் தொடங்கினார். மன நோய்கள் பலவிதம். எல்லாவற்றையும் பிராய்ட் அல்லது ஆட்லரின் முறையியலைக்கொண்டு புரிந்துகொண்டுவிடமுடியாது; மனித மனதின் சிடுக்குகளைப் புதிய கோணத்தில் ஆராயவேண்டும் என்று கருதினார்.
வியன்னா பல்கலைக்கழகத்தின் மனநோய் சிகிச்சைப் பிரிவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஓட்டோ போட்ஸல் (Otto Potzl) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மருத்துவப் படிப்பு முடித்த கையோடு தனது தனித்துவமான உளவியல் கோட்பாட்டை (லோகோதெரபி) வளர்த்தெடுக்கத் தொடங்கினார். மன அழுத்தம், தற்கொலை உணர்வுகள் தோன்றும் வழிகளை ஆராயத் தொடங்கினார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் 1933 முதல் 1937 வரை பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தபோது அந்த அனுபவங்களைத் தனது ஆய்வுத்தேடலின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டார். ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து உரைகள் நிகழ்த்தினார்.
மார்ச் 1938இல் ஜெர்மனி ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தபோது யூதர்கள் அச்சத்தில் சிதறியோடத் தொடங்கினார்கள். பிராய்ட், ஆட்லர் இருவரும் ஆஸ்திரியாவிலிருந்து தப்பி லண்டனிலும் நியூ யார்க்கிலும் அடைக்கலம் புகுந்தனர். அமெரிக்கா செல்வதற்கான விசா 1941இல் பிராங்கலை நாடி வந்தது. அப்போதே அவர் தப்பியிருக்கலாம். வயதான பெற்றோரை விட்டுவிட்டு தான் மட்டும் தப்பியோடுவது கொடுஞ்செயல் என்று நம்பினார். அப்போதே தப்பியிருக்கலாமோ என்று பின்னாள்களில்கூட அவர் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
நாஜிகளின் வியன்னாவில் பிராங்கல் வண்ணமிழந்துபோனார். ஒரு நல்ல மருத்துவராக இருக்க விரும்பிய பிராங்கலை ஒரு யூத மருத்துவராகவே அவருடைய சூழல் பார்த்தது. குப்பிக்குள் சிறைப்பட்டதுபோல் உணர்ந்தார். யூதர்களுக்கான ஒரு மருத்துவமனையில் நரம்பியல் பிரிவின் தலைவராக பிராங்கல் நியமிக்கப்பட்டார். உடல், மனக் குறைபாடு கொண்டவர்கள் தேவையற்றவர்கள்; அவர்களைக் களைவது தவறல்ல என்னும் நிலைப்பாட்டை ஜெர்மனியிலும் தாங்கள் கைப்பற்றிய பிரதேசங்களிலும் நாஜிகள் கடைப்பிடித்து வந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கிட்டத்தட்ட 2,50,000 பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர். தன்னுடைய நோயாளிகள் இதேபோல் கொல்லப்படுவதிலிருந்து பிராங்கல் தடுத்து நிறுத்தினார். அவருடைய நம்பிக்கையை இச்செயல் மேலும் வலுப்படுத்தியிருக்கவேண்டும். எல்லாம் முடிந்துவிட்டது, யூதர்களின் அழிவை இனி யாராலும் தடுக்கமுடியாது என்று எல்லோரையும்போல் தன் மரணத்துக்காக வெறுமனே காத்திராமல் அர்த்தமுள்ள முறையில் ஓர் இடையீட்டை அவரால் செய்யமுடிந்தது. அந்தக் கணத்தில் வாழ்க்கைக்கான பொருள் என்பது அதுவாகத்தானே இருக்கமுடியும்?
0
1942ஆம் ஆண்டு அப்பா, அம்மா, மனைவி ஆகியோரோடு தெரேஷியன்ஸ்டாட் கெட்டோவுக்கு (செக் குடியரசு) அனுப்பி வைக்கப்பட்டார். நவம்பர் 1941 முதல் மே 1945 வரை இயங்கி வந்த முகாம் இது. இடைநிலை முகாம் என்று சொல்வார்கள். போலந்து, பெலோரஷ்யா, பால்டிக் பிரதேசங்கள் போன்ற இடங்களில் கைதிகளைப் பெரிய எண்ணிக்கையில் கொல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அங்கே அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு இடைநிலை முகாமில் கைதிகள் அடைக்கப்படுவார்கள். உடல் வலுகொண்டவர்களுக்கு அங்கே பல வேலைகள் காத்திருக்கும்.
கவலைப்படாதே, சிகிச்சைக்கான தேவை இங்கே எப்போதும் இருந்துகொண்டிருக்கும் என்பதால் உன்னை எல்லோரையும்போல் இங்கே நடத்த மாட்டார்கள் என்று சிலர் பிராங்கலுக்கு ஆறுதல் வழங்கியிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. முகாம் வாழ்வின் பெரும்பகுதியைக் குழி தோண்டுவதிலும் ரயில் பாதை அமைப்பதிலும்தான் அவர் செலவிடவேண்டியிருந்தது. கட்டக்கடைசியாகச் சில வாரங்களுக்கு மட்டுமே அவரால் மருத்துவராகவும் பணிபுரிய முடிந்தது.
முகாமுக்குள் நுழைந்தவுடன் விரியும் கணங்கள் விவரிப்புக்கு அடங்காத அளவுக்குக் கொடூரமானவை. பீதியும் பிரிவுத்துயரும் உங்களைப் பிடித்து உலுக்க ஆரம்பிக்கும். இங்கு உயிர் வாழ்வது சாத்தியமா, உயிர் வாழத்தான் வேண்டுமா என்று கலங்கிப்போவீர்கள். தவிப்பு அடங்குவதற்குச் சிறிது காலம் பிடிக்கும், அதுவரை பொறுமையோடு காத்திருங்கள். மெல்ல, மெல்ல முகாம் உங்களுக்குள் இறங்கி ஆட்கொள்ள ஆரம்பிக்கும். அடுத்தகட்டத்தில் நீங்கள் உங்கள் சூழலோடு கரைய ஆரம்பிப்பீர்கள். அதன் ஒழுங்கையும் ஒழுங்கின்மையையும் ஏற்றுக்கொள்வீர்கள். முகாமின் முடிவில்லாச் சட்டத்திட்டங்களுக்குப் பழகிக்கொள்வீர்கள். இனி இதுதான் இயல்பு, இங்குதான் வாழ்ந்து தீர்ந்தாகவேண்டும் என்பதை உங்கள் மனம் ஏற்றுக்கொண்டுவிடும். முதல் பார்வையில் அந்நியமாகத் தெரிந்த அனைத்தும் இப்போது பழக்கப்பட்டுவிடும். அன்றாடங்களுக்குள் உங்களைத் தொலைத்துக்கொள்வீர்கள். இருளுக்குப் பழகிக்கொள்ளும் விழிகள்போல் உங்கள் முழு உடலும் பழகிக்கொள்ளும். உங்கள் அறிதிறனை முகாம் அதற்கேற்றாற்போல் வளர்த்தெடுப்பதை நீங்கள் தள்ளி நின்று அவதானிக்கலாம்.
முதல்முதலில் ஆஷ்விட்ஸ் முகாமுக்குள் நுழையும்போது அங்கே தென்பட்ட கைதிகளைக் கண்டதும், ‘பரவாயில்லையே, இவர்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்களே, இவர்களில் சிலரால் புன்னகைக்கவும் முடிகிறதே! என்னாலும் இங்கே வாழ்ந்துவிடமுடியும் போலிருக்கிறதே’ எனும் நம்பிக்கைதான் துளிர்த்திருக்கிறது பிராங்கலுக்கு. இந்த இடத்தை ஏன் என் மரணத்தோடும் அழிவோடும் தொடர்புப்படுத்திப் பார்க்கவேண்டும் நான்? இங்கும் ஏதோ ஒரு வகை வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டுதானே இருக்கிறது? மோசமான அனுபவங்களே கிடைக்கும் என்று ஏன் நினைக்கவேண்டும் நான்? ஒருவேளை கிழியாத, நல்ல ஆடை கிடைக்கலாம். இங்குள்ள ரொட்டி சுவையானதாக இருக்கலாம். சூடான சூப் கிடைக்கலாம். அதைக் கொடுப்பவர் என்மீது கனிவு கொண்டவராக இருக்கலாம். எனக்கான முறை வரும்போது, கரண்டியை அடியாழம்வரை செலுத்தி, சில பட்டாணிகளை மாயம்போல் அள்ளிவந்து என் கிண்ணத்தில் அவர் கொட்டலாம். குறைவான ஓட்டைகள் கொண்ட காலணிகளை நான் பெறலாம். குரூரமற்ற காவலர்கள் வாய்க்கலாம். வதைகளை, மரணங்களைப் பார்வையிடவேண்டிய அவசியம் நேராமலேகூட இருக்கலாம்.
எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போனபோதும்கூட அவர் கனவுகளைக் கைவிடத் தயாராக இல்லை. இன்று கிடைக்காவிட்டால் என்ன? நாளை கிடைக்கலாம் அல்லவா? நாளை இல்லாவிட்டால் இன்னொரு நாள். நம்பிக்கையின் இதமான கதகதப்பைத் தன் இதயத்திலிருந்து அகற்ற இறுதிவரை பிராங்கல் தயாராக இல்லை. மரணத்தின் தருவாயை நெருங்கும்போது, இறுதிக்கணங்களில் கைதிகளுக்கு ஒருவிதமான அசட்டு நம்பிக்கை பிறக்கும் என்கிறார் பிராங்கல். சித்திரம் போல் ஒரு கற்பனைக் காட்சி அவர்கள் கண்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக விரியும். அந்தக் காட்சி இப்படி இருக்கும். இதோ, அடுத்த நொடி ஏதோவொன்று நடக்கப்போகிறது. என் கழுத்தில் கயிற்றை மாட்டும்போது ஓர் அதிசயம் நிகழும். உத்தரவில் தவறு நேர்ந்துவிட்டது, நிறுத்து என்ற யாராவது கத்துவார்கள். விரைந்து வந்து கயிற்றை அகற்றுவார்கள். அமர வைத்து நீர் பருகத் தருவார்கள். துள்ளலோடு நான் மீண்டும் பங்கருக்குத் திரும்பிச் செல்வேன். எனது பழைய அழுக்குப் போர்வை இப்போது வாசமிக்கதாக மாறியிருக்கும். என்னுடைய பிய்ந்துபோன காலணிகளை ஆசையோடு அணைத்துக்கொள்வேன். மீண்டும் கல்லுடைக்கத்தான் போவேன் என்றாலும் என் உதடுகளில் புன்னகை பூத்திருக்கும். என் கரண்டி, என் கிண்ணம், என் சூப், என் ரொட்டி, என் கேக், என் விருந்து மேஜை, என் மனைவி, என் குழந்தைகள், என் ஊஞ்சல், என் வானம், என் நட்சத்திரம்…ஏதோ ஒரு கட்டத்தில் காட்சி நின்றுபோகும்போது அவருடைய உடல் துவண்டு தொங்கிக்கொண்டிருக்கும்.
நான் இருக்கும்வரை என் கனவுகள் இருக்கும். என் கனவுகளில் வண்ணம் உள்ளவரை நான் வாழ்வேன். இன்னல்கள் என்னை ஒன்றும் செய்யாது. சரியான தூக்கம் இருக்காது. ஓய்வு இருக்காது. ஒரு சட்டையை ஆறு மாதங்களாவது மாற்றாமல் அணிந்துகொள்வோம். எங்களைவிட சோளக்கொல்லை பொம்மை நன்றாக ஆடை உடுத்தியிருக்கும். பல் தேய்ப்பதையே நிறுத்திக்கொண்டுவிட்டோம். இருந்தும் முன்பைவிட என் பற்களும் ஈறுகளும் உறுதியாகவே இருக்கின்றன. மருத்துவர்கள் சொல்வதையெல்லாம் நம்பக்கூடாது போலிருக்கிறது. எத்தகைய மோசமான இடத்திலும் மனிதர்கள் எப்படியாவது வாழத்தான் செய்கிறார்கள். அவர்களை எது முறியவிடாமல் காக்கிறது?
தத்துவார்த்த விவாதங்களும் அவ்வப்போது அங்கே நடைபெறுவதுண்டு. வெளியில் நடைபெறுவதுபோல் வறட்டுத்தனமாக அல்ல, நடைமுறை சார்ந்த விவாதங்களாக அவை இருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒன்றை அளிக்கிறார் பிராங்கல். நமக்குத் தரப்படும் ரொட்டியை உடனே முழுக்கத் தின்றுவிடவேண்டுமா அல்லது சட்டைப் பையில் போட்டுக்கொண்டு அவ்வப்போது பிய்த்துச் சுவைக்கவேண்டுமா? அந்தத் தருணத்தில் உண்டு வாழ்ந்துவிடவேண்டும் என்றொரு குழு வாதிடும். முழுக்க உண்டால்தான் வயிறு ஓரளவாவது நிறையும். அப்படி நிறையும்போது ஏற்படும் உணர்வை தினமும் ஒருமுறை அனுபவித்தால்கூடப் போதும். கொஞ்சம் கொஞ்சமாக உண்டால் எப்போதும் பசி இருந்துகொண்டே இருக்கும். முழு மகிழ்ச்சியான ஒரு முழுமையான கணமா அல்லது சின்னச் சின்ன மகிழ்ச்சிகளின் தொகுப்பா? எது மேலானது? பிராங்கல் வழி ஒரு மகிழ்ச்சியை இயன்றவரை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி தொகுத்துக்கொள்வது. ஒரே பெரும் மகிழ்ச்சி வெளியுலக இயல்பு வாழ்வுக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம். உள்ளே நம்மைத் துவளச் செய்ய ஏராளமான கணங்கள் இருக்கும். நம்மைப் போட்டு அழுத்த பலர் காத்திருப்பார்கள். இமைகளை மூடினால் கொடுங்கனவுகள் அணிவகுக்கத் தொடங்கும். வீறிட்டு அலறி எழும்போது கையைச் சட்டைப்பைக்குள் விட்டு ஒரு துண்டு ரொட்டியை எடுத்து வாயில் போட்டு மெல்லும்போது விட்டுப் பிரிந்த உயிர் உங்களை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பிக்கும்.
கைதிகள் அதிகம் யோசித்தது, பேசியது, கற்பனை செய்தது, சண்டையிட்டுக்கொண்டது உணவு குறித்துதான். வெளியில் வந்தவுடன் நானொரு விருந்து கொடுப்பேன் என்பார் ஒருவர். அந்த மேஜை இன்னின்ன மாதிரி அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேஜைத்துணி இந்த வண்ணத்தில் இருக்கும். ஒரு ஜாடி முழுக்க அழகிய, வண்ண மலர்களை வைப்பேன். நல்ல, கனமான பீங்கான் தட்டும் உடையாத புதிய முள்கரண்டியும் வேலைப்பாடு மிக்க கிண்ணமும் ஒவ்வொருவர் முன்பும் வைக்கப்பட்டிருக்கும். முதலில் சூப். அது எப்படி இருக்கும் தெரியுமா? நல்ல வாசத்தோடு, திடமாக, நிறையக் காய்கறிகளும் இறைச்சித் துண்டுகளும் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். கிண்ணத்தோடு எடுத்துத் தரையில் கவிழ்த்தால்கூட அங்கேயே நிற்கும் அளவுக்குத் திடம் இருக்கும். அடுத்து என்ன தெரியுமா? நன்றாக வாட்டப்பட்ட இறைச்சி… அது எப்படி இருக்குமென்றால்….இல்லை, அடுத்து ரொட்டி என்பார் இன்னொருவர். மேஜையில் நான் எங்கே அமர்வதாம் என்று கோபித்துக்கொள்வார் இன்னொருவர்.
இந்த வகை பேச்சுகள் என்னை என்னவோ செய்யும் என்பார் பிராங்கல். கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு மலர்ந்த முகத்தோடு இவர்கள் காணும் கனவு முடிவுக்கு வரும்போது இவர்களுடைய வேதனை பல மடங்கு அதிகரித்திருக்கும். இதை அவர்கள் உணர்வதாகவே இல்லை. நாவையும் வயிற்றையும் சுரப்பிகளையும் இவர்கள் ஏன் தேவையின்றி இப்படித் தூண்டிவிட்டுக்கொள்கிறார்கள்? கிளர்த்தப்பட்ட உணர்வுகளை எப்படி, எங்கே தணித்துக்கொள்ளப்போகிறார்கள்?
கனமான போர்வைபோல் சோகம் படரும்போது நாங்கள் சில சமயம் சிரிக்கத் தொடங்குவோம் என்கிறார் பிராங்கல். ஏதேனும் இட்டுக்கட்டிச் சொல்லிச் சிரிப்போம். வேடிக்கைக் கதைகள் பேசிக்கொள்வோம். ஆடைகளைக் களைந்துவிட்டு கும்பலாக நின்று குளிக்கும்போது, நல்ல வேளை இதில் நச்சுப் புகை வராமல் தண்ணீர் வருகிறதே என்று கேலி செய்துகொள்வோம். இரவு நெருங்கினால், இன்னொரு நாள் முடிந்துவிட்டது என்று ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்டதுபோல் மகிழ்வோம்.
மரணத்தை முகாம் இயல்பானதொன்றாக மாற்றிவிட்டது. நேற்று நடமாடிக்கொண்டிருந்தவர் இன்று தரையில் கிடத்தப்பட்டால் சலனமில்லாமல் நகர்ந்து செல்வோம். அல்லது அவரை நகர்த்திவிட்டு, அருகில் அமர்ந்து சூப் பருகுவோம். தன் சட்டையைவிட, தன் காலணியைவிடச் சடலத்தின் சட்டையும் காலணியும் நன்றாக இருப்பதுபோல் ஒருவருக்குத் தோன்றினால் எது குறித்தும் சிந்திக்காமல் அவர் எடுத்து அணிந்துகொள்வார். நாளை அவரிடமிருந்து உடைமைகள் வேறொருவருக்குச் செல்லும்.
ஒருமுறை பிராங்கல் ரயில்வே பாதையில் இடைவெளியின்றிப் பணியாற்றிக்கொண்டிருந்தார். பனி பொழிந்து கொன்றுகொண்டிருந்தது. ஒரு கணம் நிமிர்ந்து நின்று, மண்வெட்டியின்மீது சாய்ந்துகொண்டார். அந்த நேரம் பார்த்து அவர் பக்கம் திரும்பிய ஒரு பாதுகாவலர், பிராங்கல் வெட்டியாக நேரத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து கீழிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்து அவர்மீது வீசினார். இது அவரை ஆழமாகப் பாதித்துவிட்டது. கடுமையாகத் திட்டியிருந்தாலோ அடித்திருந்தாலோகூட இந்த அளவுக்கு வலித்திருக்காது. ஒரு விலங்குபோல் நினைத்து என்மீது அவர் விட்டெறிந்த கல் என்னை உடைத்தெறிந்துவிட்டது என்கிறார் அவர்.
மூலையில் பிடித்துத் தள்ளப்படும் ஒவ்வொருமுறையும் கைக்குக் கிடைத்த எதையேனும் பற்றிக்கொண்டு வெளியில் வந்து விடுவார். ஒருமுறை சாலைக்குக் கீழே நீர்ப் பாதைக்காகத் தன்னந்தனியே ஒரு சுரங்கப்பாதையை வெட்டி உருவாக்கியிருக்கிறார் பிராங்கல். பரிசாக அவருக்குச் சில ‘பிரீமியம் கூப்பன்கள்’ கிடைத்தன. அவற்றைக் கொண்டு ஆறு சிகரெட்டுகள் வாங்கமுடியும். புகைக்கத்தான் வேண்டுமென்றில்லை. சிகரெட்டுகளைக் கொடுத்தால் 12 கிண்ணங்களில் சூப் வாங்கிக்கொள்ளமுடியும். ஒரேயொரு கிண்ணம் கையில் இருந்தாலே வானில் மிதக்கும் உணர்வு தோன்றிவிடும். இவ்வளவு கிண்ணங்கள் எனக்காகக் காத்திருக்கும் என்றால் இன்னும் எவ்வளவு துயரங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம்.
ஆஷ்விட்ஸில் ஒரு நண்பர் பிராங்கலுக்கு வழங்கிய அறிவுரை இது. என்ன ஆனாலும் தினமும் சவரம் செய்துகொள். உன் கடைசி துண்டு ரொட்டியைக் கொடுத்துக்கூட ஒரு கண்ணாடித் துண்டை வாங்கி முடியை மழித்துக்கொண்டுவிடு. நான் இளமையாக இருக்கிறேன் என்னும் உணர்வு எப்போதும் உன்னிடம் இருக்கவேண்டும். உன் உடல் தளர்ந்தால் உன்னைக் கொன்றுவிடுவார்கள்! தளர்வாக இருப்பதாக நீ உணரும்போது உன் மரணம் உன்னை நெருங்க ஆரம்பிக்கும்.
பிராங்கலின் தந்தை தெரேஷியன்ஸ்டாட் முகாமில் உயிரிழந்தார். அநேகமாக, பசிதான் அவரைக் கொன்றிருக்கும். அப்பா உயிரோடு இருந்தபோது ஒருமுறை ரகசியமாக மார்ஃபின் கொண்டுசென்று அளித்ததைத் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் பிராங்கல். அது ஓர் அற்புதமான அனுபவம் என்கிறார் அவர். மரணத்தையல்ல, எப்போதும் வாழ்வையே அவர் பற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.
அடைக்கப்பட்ட பெட்டிகளில் கால்நடைகள்போல் ஆயிரக்கணக்கானவர்களோடு ஆஷ்விட்ஸுக்கு 1944இல் அனுப்பி வைக்கப்படுகிறார் பிராங்கல். பெட்டிப் படுக்கைகளை வண்டியிலேயே விட்டுவிட்டு எல்லோரும் இறங்குங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆண், பெண் என்று பிரிந்து நீண்டிருக்கும் வரிசைகளில் தன்னைப் பொருத்திக்கொள்கிறார் பிராங்கல். உயரமான, ஒல்லியான ஒரு நாஜி அதிகாரி சற்றும் கசங்காத, கச்சிதமான சீருடையில் விரைப்பாக நின்றுகொண்டு ஒவ்வொருவரையும் உற்றுப் பார்க்கிறார். அவருடைய மெலிந்த ஆட்காட்டி விரலை வெறித்துப் பார்க்கிறார் பிராங்கல். அந்த விரல் வலது பக்கம் நகருமா அல்லது இடது பக்கமா? இந்தப் பக்கம் சாய்ந்தால் நான் வாழலாம். அந்தப் பக்கம் சாய்ந்தால் நானும் சாய்ந்துவிடுவேன்.
அதிகாரியின் பார்வை என்மீது படர்கிறது. நான் நிமிர்ந்து, நேராக நிற்க முயற்சி செய்கிறேன். என் உடலின் எந்தப் பகுதியிலும் சோர்வின் சுவடுகூட வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியோடு இருக்கிறேன். இதோ பாருங்கள், என் கரங்கள் உறுதியானவை. ஒரு மருத்துவரின் மென் கரங்களில்லை இவை. எதையும் புரட்டிப்போடும் ஒரு தொழிலாளியின் காப்பேறிய கரங்களை நான் பெற்றிருக்கிறேன். என் கால்கள் வலுவானவை. காலணிகள் இல்லாமலேயே என்னால் பனி மலையில் ஏறமுடியும். என் முதுகு உறுதியானது. பற்றுறுதியோடு நிமிர்ந்து நிற்கும் கலையை அது கற்றுத் தேர்ந்திருக்கிறது. என் விழிகளில் இன்னமும் உயிர் இருக்கிறது. நான் வாழ்க்கையை நேசிக்கிறேன். வாழ விரும்புகிறேன். என் உயிரின் அதிர்வை உங்கள் விரல் கேட்கட்டும். பிராங்கல் விரும்பியதுபோலவே அதிகாரியின் விரல் அசைந்து கொடுத்தது. அந்த மாயத்தை நம்பிக்கையின் வெற்றியாகக் கண்டார் பிராங்கல்.
தளர்ந்திருந்த உடல்கள் தனியே பிரித்தெடுக்கப்பட்டு நச்சு வாயு செலுத்தி அழிக்கப்பட்டன. பிராங்கலின் அம்மாவுக்கு நேர்ந்தது இதுதான். ஆஷ்விட்ஸில் அடைக்கப்படும்போது பிராங்கல் டில்லி குரோசரை மணந்து மூன்றாண்டுகள்தான் ஆகியிருந்தன. டில்லியும் அதே முகாமில் வேறு பகுதியில் சிறைப்பட்டிருந்தார். 23 அக்டோபர் 1944 அன்று பிராங்கல் எழுதுகிறார். இங்கே வந்த இரண்டாவது தினம், எதிர்பாராத ஒரு தருணத்தில் எங்கிருந்தோ மெல்லிசை கசிந்து வந்து என்னை உலுக்கியெடுக்கிறது. ஒரு மூத்த சிறைக் காவலர் ஏதோ கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவருடைய அறையிலிருந்துதான் கசிந்து வருகிறது இசை. ஒரு விநாடி அமைதிக்குப் பிறகு வயலினொன்று மீட்கப்படுகிறது. அழுத்தமான சோகம் என்னைத் தாக்குகிறது. வயலின் தனது சோகத்தை வாய் திறந்து பாடுவதுபோல் இருக்கிறது. நான் வதைக்கப்படுகிறேன். என்னில் ஒரு பகுதி கரைந்து அழத் தொடங்குகிறது. இன்று டில்லியின் 24ஆவது பிறந்தநாள். இதே முகாமில் சில நூறு அல்லது சில ஆயிரம் அடிகள் தள்ளி அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.
வாழ்ந்துகொண்டுதான் இருப்பாரா? தெரியாது. தெரியவேண்டிய தேவையும் இல்லை என்கிறார் பிராங்கல். அவள் இந்த நிமிடம், இப்போது என்னோடு இருக்கிறாள். நான் அவளை என் கரங்களுக்குள் வைத்திருக்கிறேன். இந்தத் தருணம் மெய்யானது. என் உணர்வு மெய்யானது. அது போதும் எனக்கு. அவள் இப்போது எங்கிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியவேண்டியதில்லை. நான் அவளைப் பார்க்கிறேன். அவளைக் காதலிக்கிறேன். அவள் எங்கிருந்தாலும் அவளை என்னால் தழுவிக்கொள்ளமுடியும். அவள் எங்கிருக்கிறாள் என்பது தெரியாவிட்டாலும் அவளை என்னால் காதலிக்கமுடியும். அவளோடு என்னால் பேசமுடியும். அவள் கண்களைப் பார்த்துச் சிரிக்கமுடியும். அவளைத் தீண்டமுடியும். அவள் என்னோடுதான் இருக்கிறாள். அவளால் என்னைப் பிரிந்துசெல்லமுடியாது. தன் மனைவி பெர்கென் பெல்சனில் இறந்துவிட்ட செய்தியை பிராங்கல் பின்னர் அறிந்துகொள்ள நேர்ந்தது. நான் அந்த இசைத் துணுக்கைக் கேட்கும்போது என் மனைவி இறந்துவிட்டது தெரிய வந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? அப்போதும் காதலித்திருப்பேன் என்கிறார் பிராங்கல். ஒருவரைக் காதலிக்க அவர் உயிரோடு இருந்தாகவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
0
ஆஷ்விட்ஸில் ஒரு சில தினங்கள்தான் கழித்திருப்பார் என்றாலும் அங்கே அவர் இழந்தவை அதிகம். மருத்துவ ஆய்வு தொடர்பான கையெழுத்துப் பிரதியை அவர் தவறவிட்டது அங்கேதான். ஆஷ்விட்ஸிலிருந்து பவேரியாவுக்கு மாற்றப்பட்டார். அங்கே ஏழு மாதங்களைக் கழித்தார். நாளையே வெளியில் வந்து உலகின் எல்லா இன்பங்களையும் மொத்தமாகத் துய்க்கும் வாய்ப்பு அமைந்தாலும் உள்ளுக்குள் உறைந்து நின்றுவிட்ட முகாம் மறையப்போவதில்லை என்பதை பிராங்கல் அறிந்திருந்தார். எனவே பிற கைதிகள்போல் வெளியில் வரப்போகும் நாள் குறித்து அவர் அதிகக் கனவுகளை வளர்த்துக்கொள்ளவில்லை. மாறாக, உள்ளே வாழ்ந்த தருணங்கள் இயன்றவரை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்றே விரும்பினார்.
செப்டெம்பர் 1942இல் பிராங்கலின் முகாம் வாழ்க்கை தொடங்கியது. ஏப்ரல் 1945இல் விடுவிக்கப்பட்டார். மூன்று வதைமுகாம்களில் தோராயமாக 945 தினங்களை அவர் கழித்திருந்தார். என் வாழ்வின் பொருள் என்னவெனும் தேடலே என்னை உயிரோடு வைத்திருந்தது என்கிறார் பிராங்கல். வாழ்வின் பொருளைத் தேடுவது என்பது தத்துவார்த்த விவாதங்களில் மூழ்கிப்போவது அல்ல. நடைமுறையால் உந்தப்பட்ட தேடலாக அது இருக்கவேண்டும் என்கிறார் பிராங்கல். நம் காயங்களை ஆற்றும் வல்லமை அத்தகைய தேடலுக்கு இருக்கிறது என்று அவர் நம்பினார்.
மன அழுத்தத்தால் சிக்கித் தவிப்பவர்களுக்குத் தேவை சிகிச்சையல்ல, அவர்களுக்குத் தேவை வாழ்க்கைக்கான பொருள். வதைமுகாமுக்கு முன்பே தனது கோட்பாட்டை பிராங்கல் உருவாக்கிவிட்டார் என்றாலும் அதைச் சோதித்துப் பார்ப்பதற்கான களமாக முகாம் அவருக்கு அமைந்தது. தற்கொலையின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த சக கைதிகளோடு உரையாடி அவர்களை மீட்டெடுத்திருக்கிறார்.
வாழ்வின்மீதான பிடிப்பை, நம்பிக்கையை, காதலை ஒருபோதும் கைவிடாதீர்கள். எதிர்காலத்திடமிருந்து மட்டுமல்ல இறந்த காலத்திடமிருந்தும் நாம் நமக்கான பலத்தைத் திரட்டிக்கொள்ளமுடியும் என்று சக கைதிகள் மத்தியில் ஒரு நாள் உரையாற்றியபோது குறிப்பிட்டிருக்கிறார் பிராங்கல். நாம் இப்போது எதிர்கொண்டிருக்கும் துயரம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை நம் கடந்த கால வாழ்க்கையும். நாம் மகிழ்ச்சியோடு இருந்த தருணங்கள் நம்மைவிட்டு முழுக்கக் கடந்து சென்றுவிடவில்லை; அவை நம்முடையவை. என் மனைவியை மட்டுமே என்னிடமிருந்து பிரிக்கமுடியும், அவள்மீதான என் காதலை என்னிடமிருந்து ஒருவராலும் தட்டிப் பறிக்கமுடியாது. என் அம்மாவையும் அப்பாவையும் கொன்றுவிட்டார்கள், உண்மை. அவர்களோடு நான் கழித்த நினைவுகளை எந்தவொரு சக்தியாலும் அழிக்கமுடியாது. அவை நம்மோடு கலந்திருப்பவை. இருள் நிறைந்திருக்கும் இந்த முகாமில் அமர்ந்துகொண்டு அந்த நினைவுகளுக்கு நம்மால் உயிரூட்டமுடியும். இன்னொருமுறை, இன்னொருமுறை, இன்னொருமுறை என்று முடிவின்றி அந்த நினைவுகளில் நம்மைப் பொருத்திக்கொண்டு வாழ்ந்துகொண்டே இருக்கமுடியும்.
நம்பிக்கையை இழந்ததால் வாழ்கை இழந்த பலரை பிராங்கல் முகாமில் சந்தித்திருக்கிறார். முகாமில் இறப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அங்கே ஒருவர் எப்படி இறந்தார் எனும் கேள்வியையே நாம் எழுப்பவேண்டியதில்லை. மாறாக, ஒருவர் எப்படி உயிர் வாழ்ந்தார் எனும் கேள்வி முக்கியமானது. எது அவர்களை உயிரோடு வைத்திருந்தது? இருளில் எதனைப் பற்றிக்கொண்டு அவர்கள் உறுதியோடு நின்றார்கள்? போராடும் உத்வேகத்தை எது அவர்களுக்கு அளித்தது?
வாழ்க்கை என்பது மகிழ்ச்சியை நாடிச் செல்வது என்பார் பிராய்ட். இல்லை, அதிகாரத்தை நாடிச் செல்வது என்பார் ஆட்லர். வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேடுவதுதான் முதன்மையானது என்பார் பிராங்கல். அர்த்தத்தை எங்கே தேடுவது? மூன்று இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார் பிராங்கல். உங்கள் பணி. உங்கள் காதல். உங்கள் துணிவு. முகாமிலும் தனது மூளைக்குள் ஓர் உலகை உருவாக்கி, அங்கே தனது பணியைத் தொடர்ந்துகொண்டிருந்தார் பிராங்கல். உயிரோடு இல்லாவிட்டால் பரவாயில்லை என்று தொடர்ந்து தன் மனைவியைக் காதலித்து வந்தார். அப்பா, அம்மா, சகோதரன், நண்பர்கள் அனைவரையும் இழந்த பிறகும் அவர்களை உயிருள்ளவர்களாகவே கருதித் தொடர்ந்து நேசித்துக்கொண்டிருந்தார். என்னை உடைத்து நொறுக்கும் பலத்தை யாருக்கும் அளிக்கமாட்டேன் என்று நிமிர்ந்து நின்றார்.
முகாமைக்கூடக் கறுப்பு வெள்ளையாக அணுகக்கூடாது என்பது பிராங்கலின் வாதம். கைதி நல்லவர், நாஜி கெட்டவர் என்னும் இருமையை அவர் ஏற்க மறுத்தார். யூதர்களைச் சற்றே கனிவோடு அணுகும் ஒரு நாஜியை அவரால் தீமையின் முழு உருவாகப் பார்க்கமுடியவில்லை. சூழலைப் பயன்படுத்தி சக கைதிகளைச் சுரண்டும் ஒரு யூதரை அவரால் முழுமையாக ஏற்கமுடியவில்லை. ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று இறைஞ்சுவதால் மார்டின் லூதர் கிங்கோடு பிராங்கலை ஒப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். ஹிட்லரின் குற்றத்தை, நாஜிகளின் குற்றத்தை ஒட்டுமொத்த ஜெர்மனியின், ஜெர்மானியர்களின் குற்றமாகப் பார்க்கக்கூடாது என்பார் பிராங்கல். அவருடைய இக்கருத்துகள் விமரிசிக்கப்படுகின்றன. யூதர்களின் துயரைச் சிறுமைப்படுத்துகிறார்; நாஜிகளை இயல்பானவர்களாகக் காட்ட முயல்கிறார்; முகாமை ஏதோ பரிசோதனைக்கூடம் போல் பாவிக்கிறார் எனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
நாஜிகளின் குழந்தைகளும் நாஜிகள்தாம் என்பதை அவர் ஏற்கத் தயாராக இல்லை. தன்னைத் துன்புறுத்தியவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் என்று எவர்மீதும் பிராங்கலுக்கு எந்த விரோதமும் இல்லை. வதைமுகாமிலிருந்து திரும்பியதும் வியன்னாவுக்குச் சென்று அதே வீட்டில் அதே அண்டை மனிதர்களோடு சேர்ந்து வசிக்கத் தொடங்கினார் பிராங்கல். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காட்டிக்கொடுத்தவர்களோடு, நீங்கள் இழுத்துச் செல்லப்படுவதை வேடிக்கை பார்த்து நின்றவர்களோடு உங்களால் எப்படிச் சேர்ந்து வாழமுடியும் எனும் கேள்விக்கு அவர் அளித்த விடை இது. நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அவர்கள் அன்று கதாநாயகர்களாக மாறி என்னைக் காப்பாற்றியிருக்கவேண்டும் என்று எப்படி என்னால் சொல்லமுடியும்?
இதன் பொருள் அவர் முகாமைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதல்ல. வதைமுகாமை நான் மறக்காத நாளே இல்லை. எப்போதெல்லாம் துயர் நேர்கிறதோ அப்போதெல்லாம் தன்னிச்சையாக முகாமை நினைத்துக்கொண்டு, பரவாயில்லை இப்போது நான் அனுபவிப்பது அத்தனை பெரிய துயரல்ல என்று சமாதானம் செய்துகொள்வேன் என்கிறார் பிராங்கல். முகாமையோ போரையோ அறிந்திராத இளம் தலைமுறையினரை நினைக்கும்போது ஒரு வகையில் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் அல்லப்படும்போது எதை நினைத்துக்கொள்வார்கள்? ஒப்பிட்டுப் பெருமூச்சு விட்டுக்கொள்வதற்கு அவர்களுக்கு எத்தகைய கடந்த காலம் இருக்கிறது? என்கிறார் பிராங்கல்.
வியன்னா பல்கலைக்கழகத்தில் சிலகாலம் பணியாற்றிய பின்னர் அமெரிக்காவில் பெர்கெலி பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக இருந்தார். 25 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். உரை, தொலைக்காட்சிப் பேட்டி, சந்திப்பு என்று தொடர்ச்சியாகவும் விரிவாகவும் அமெரிக்கர்களோடு உரையாடினார். சுதந்திரத்தைக் கொண்டாட ஒரு சிலை இருப்பதுபோல் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மேற்குக் கரையில் இன்னொரு சிலை எழுப்பப்படவேண்டும் என்று அவர் சொன்னதை அமெரிக்கர்கள் விமரிசித்தனர்.
விலகிவந்துவிட்ட பிறகும் நீடித்த மதிப்பின் அடையாளமாகத் தனது அறையில் பிராய்டின் மார்பளவுச் சிலையை வைத்திருந்தார் பிராங்கல். போர் முடிந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு இன்னொரு திருமணம் செய்துகொண்டார். ஒரே மகளான காப்ரியல் பின்னாள்களில் குழந்தை உளவியல் மருத்துவராக மாறினார். 2 செப்டெம்பர் 1997 அன்று விக்டர் பிராங்கல் வியன்னாவில் மறைந்தார்.
மற்றொரு வதைமுகாம் எழுத்தாளராகத் தான் நினைவுகூரப்படுவதை பிராங்கல் விரும்பவில்லை. தனது உளவியல் கோட்பாடுகள் விவாதிக்கப்படவேண்டும், அத்திசையில் ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த விருப்பம் நிறைவேறியதாகச் சொல்லமுடியாது. பிராய்ட், ஆட்லர், கார்ல் யுங் அளவுக்கு பிராங்கல் இன்று உளவியலாளர்களால் விவாதிக்கப்படுவதாகச் சொல்லமுடியாது. உளவியல் துறை சார்ந்த பல நூல்கள் எழுதியிருந்தாலும் அந்தச் சிறிய, வதைமுகாம் நூல்தான் இன்று அவருடைய அடையாளமாக மாறி நிற்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், ஒன்றரை கோடி பிரதிகளைக் கடந்து இந்நூல் இன்றும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
ஒரே சிக்கல், மிகப் பெரும்பாலானோர் பிராங்கலின் நூலை ஒரு சுயமுன்னேற்றப் பிரதியாக சுருக்கிப் புரிந்து வைத்திருப்பதுதான். அங்குமிங்குமாகச் சில மேற்கோள்களை எடுத்துப் போடும்போது (நீ வாழ்க்கையிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய் என்பதைவிட, வாழ்க்கை உன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பது முக்கியம்) மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிகளைக் கற்றுக்கொடுக்கும் வாழ்வியல் கையேடாகவே பலருக்கும் அந்நூல் காட்சியளித்திருக்கவேண்டும். வதைமுகாமை வென்றவரின் வெற்றிக்கதையாகவே அவருடைய நூல் இன்று விளம்பரப்படுத்தப்படுகிறது. எப்படியோ எனது நோக்கம் நிறைவேறினால் சரி என்று பிராங்கல் இதனை விரும்பவும் செய்யலாம். ஆனால் இப்படிச் சுருக்கிப் பார்ப்பது அந்நூலின் முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைப்பதில்தான் சென்று முடியும். பிராங்கல் ஆன்மிக நம்பிக்கை கொண்டவர் என்பதால் அவருடைய வாக்குமூலத்தை இறையியல் பிரதியாகவும் சிலர் காண விரும்புகின்றனர். இதையும் பிராங்கல் மறுக்கப்போவதில்லை என்றாலும் அவருடைய நூல் ஆன்மிகத் தளத்தையும் கடந்து நிற்கிறது.
உளவியல், தத்துவம் இரண்டையும் பிராங்கல் தனது சிறிய நூலில் ஒன்றிணைக்கிறார். ஸ்பினோசா, ஷோபென்ஹார், நீட்ஷே, டால்ஸ்டாய், தாஸ்தோயெவ்ஸ்கி போன்றவர்களை மேற்கோள் காட்டி விவாதங்களை வளர்க்கிறார். அவருடைய அனுபவங்களை அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாது. அந்த வரலாற்றை நீக்கிவிட்டு அவருடைய எந்த வரியைத் தனியே எடுத்துப் போட்டாலும் அது எளிமைப்படுத்தப்பட்ட சித்திரத்தையே அளிக்கும். பிராங்கல் மட்டுமல்ல, வதைமுகாமிலிருந்து வெளியில் வந்து வாக்குமூலம் அளித்த எவருடைய குரலையும் தனிப்பட்ட துயரக்குரலாக எடுத்துக்கொள்ளமுடியாது. அவை வரலாற்றின் குரல்கள்.
0
அற்புதமான பதிவு, மருதன். நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை…