Skip to content
Home » என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

எட்வர்ட் செய்த்

தனது சுயசரிதையை எழுதி முடித்த கையோடு ஜெருசலேம், கெய்ரோ என்று தொடங்கி சிறு வயதில் தான் சுற்றித் திரிந்த பகுதிகளையெல்லாம் மீண்டுமொருமுறை நேரில் சென்று கண்டார் எட்வர்ட் செய்த். இது நடந்தது நவம்பர் 1998இல். பாலஸ்தீனக் கிராமங்களாகவும் நகரங்களாகவும் அவர் நினைவில் பதிந்து போயிருந்த இடங்கள், ஒரு காலத்தில் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் வாழ்ந்த இடங்கள் இப்போது இஸ்ரேலின் பிடிக்குள் வந்து சேர்ந்திருந்தன. ராணுவ வீரர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். சோதனைச் சாவடிகளின் அனுமதியின்றி எங்கும் யாரும் செல்லமுடியாது. ஒவ்வோரிடத்திலும் தடுக்கப்பட்டு செய்தின் கடவுச்சீட்டு பரிசோதிக்கப்பட்டது. ஜெருசலேத்தில் பிறந்தவர், அமெரிக்கர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் மீண்டும், மீண்டும் அதிகாரிகள் அவரிடம் ஒரே கேள்வியை எழுப்பினர். இஸ்ரேலைவிட்டு எப்போது வெளியேறினீர்கள்? எப்போது அமெரிக்கா சென்றீர்கள்? ஒரே பதிலைத்தான் அனைவருக்கும் அளித்தேன் என்கிறார் செய்த். ‘டிசம்பர் 1947இல் வெளியேறினேன். இஸ்ரேலில் இருந்து அல்ல, பாலஸ்தீனத்திலிருந்து.’ (Out of Place: A Memoir, 1999).

இந்தப் பயணத்தின்போது மரணத்தின் நிழல் செய்த்மீது உறுதியாகப் படரத் தொடங்கியிருந்தது. ‘என் அம்மா 1990இல் இறந்துபோனார். என் நோய் உறுதியானது 1991இல். நான் அம்மாவுக்கு மிக, மிக நெருக்கானவன்… அம்மா என் கண்முன்னால் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருந்தபோது என் கடந்த காலத்துடனான முக்கியமான பிணைப்பொன்று மறைந்துபோவது போலிருந்தது. நெருக்கமான உறவு என்று சொல்லிக்கொள்ள அம்மா மட்டுமே இருந்தார். நான் வளர்ந்து, பழகிய உலகங்களோடு என்னை இணைத்து வைத்திருந்த அப்பா 1971இல் மரணமடைந்துவிட்டார். அம்மாவும் மறைந்துவிட்ட நிலையில் என் நினைவுகளைப் பதிவு செய்யவேண்டுமென்று தோன்றியது. எனது நோய் என் பணியை விரைவுபடுத்தியது.’ புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த செய்த் அமெரிக்கா திரும்பிய ஐந்தாண்டுகளில் மரணமடைந்தார்.

பாலஸ்தீனத் தந்தைக்கும் லெபனிய தாய்க்கும் பிறந்து, எகிப்தில் கல்வி கற்கத் தொடங்கி, அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, அத்தேசத்தின் குடிமகனாக வாழ்ந்து மறைந்த எட்வர்ட் செய்த் (1935-2003) இறுதிவரை ஓர் அந்நியராகவே எங்கும், எல்லோராலும் பார்க்கப்பட்டார். அவராலுமேகூடத் தன்னை எங்கும் முழுமையாகப் பொருத்திக்கொள்ள இயலவில்லை. பெயரிலிருந்தே முரண் தொடங்கிவிடுகிறது. எட்வர்ட் என்பது பிரிட்டிஷ் பெயர் என்றால் செய்த் ஒர் அராபியப் பெயர். வீட்டில், அரபு மொழி; பள்ளியில் ஆங்கிலம். ‘எது எனது தாய்மொழி என்றே ஒரு கட்டத்தில் தெரியாமல் போய்விட்டது. அரபு, ஆங்கிலம் இரண்டும் என் மொழிபோலவே இல்லை. ஆனால் இந்த இரு மொழிகளில்தான் கனவு காண்கிறேன். நான் ஒவ்வொருமுறை ஆங்கிலத்தில் பேசும்போதும் எனக்குள் அரபி எதிரொலிக்கிறது. அரபியில் பேசினால் ஆங்கிலம் எதிரொலிக்கிறது.’ எல்லோருக்கும் இயல்பாக அமைந்துவிடும் தாய்மொழி செய்துக்கு மிகப் பெரும் முரணைத் தோற்றுவித்தது. இரு மாறுபட்ட உலகங்களில் ஊசலாடிக்கொண்டே ஓர் எழுத்தாளராக, இலக்கிய விமரிசகராக, பேராசிரியராக, அறிவுஜீவியாக செய்த் சிந்திக்கவும் இயங்கவும் வேண்டியிருந்தது.

0

இஸ்ரேலின் அதிகாரபூர்வ வரலாறும் பாலஸ்தீனத்தின் அதிகாரபூர்வ வரலாறும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒரே நிகழ்வை இஸ்ரேல் ஒரு கோணத்திலிருந்தும் பாலஸ்தீனம் வேறொரு கோணத்திலிருந்தும் விவரித்திருக்கும். இஸ்ரேலின் தேசியவாதம் பாலஸ்தீனத்துக்கு ஆக்கிரமிப்பாகவும் பாலஸ்தீனத்தின் போராட்டம் இஸ்ரேலுக்குப் பயங்கரவாதமாகவும் காட்சியளிப்பது வழக்கம். இந்த வேறுபாட்டை மனத்தில் கொண்டே இரு நாடுகளின் அரசியல் வரலாற்றை, இரு தரப்பு நியாயங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை வேறெவரையும்விட நன்கு அறிந்தவர் செய்த்.

‘நாங்கள் எங்கள் நிலத்தை விட்டுக்கொடுத்துவிடுகிறோம். இன்னொரு மக்கள்கூட்டம் இங்கே வந்து குடியமர்ந்துகொள்ளட்டும் என்று வரலாற்றில் இதற்குமுன்பு யாரும் சொன்னதில்லை’ என்று டேவிட் பென் குரியன் 1944இல் குறிப்பிட்டதை செய்த் நினைவுபடுத்துகிறார். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொன்று, லட்சக்கணக்கானவர்களை விரட்டியடித்துவிட்டு, இஸ்ரேல் என்னும் புதிய தேசத்தை 15 மே 1948 அன்று யூதர்கள் உருவாக்கினார்கள். ‘அல் நக்பா’ (பேரழிவு) என்று உலகெங்குமுள்ள பாலஸ்தீனர்கள் இந்நிகழ்வை அழைக்கின்றனர். உருவான மறுநாளே முதல் அரபு இஸ்ரேல் போர் தொடங்கிவிட்டது. ஜனவரி 1949இல் எகிப்து, லெபனான், ஜோர்டன், சிரியா ஆகிய நாடுகளோடு இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. ஆனால் அமைதி திரும்பியதாகச் சொல்லமுடியாது. நம்பிக்கையின்மையும் பகையும் மோதலும் தொடர்ந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் எகிப்து காசா முனையைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. 1950 வாக்கில் மேற்குக் கரையை ஜோர்டன் நிர்வகிக்கத் தொடங்கியது. ஜெருசலேம் மேற்கில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலும் கிழக்கில் ஜோர்டனின் கட்டுப்பாட்டிலும் வந்து சேர்ந்தது.

மத்தியக் கிழக்கின் வரைபடத்தை 1967 முற்றிலுமாக மாற்றியமைத்தது. ஜூன் 5 முதல் 10 வரை ஆறு தினங்கள் இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற போரில் சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்ஸ், ஜோர்டனிலிருந்து மேற்கு கரை (கிழக்கு ஜெருசலேம் பகுதிகளும்), எகிப்திடமிருந்து காசா முனை, சினாய் தீபகற்பம் என்று அனைத்தையும் இஸ்ரேல் வென்றெடுத்தது. மீண்டும் இருளில் தள்ளப்பட்டதுபோல் ஆகிவிட்டது பாலஸ்தீனர்களுக்கு. ‘நக்ஸா’ (பின்னடைவு) என்று பாலஸ்தீனர்கள் அழைக்கும் இந்நிகழ்வு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த எட்வர்ட் செய்தை ஆழமாகப் பாதித்தது. ஓர் அராபியனாகவும் பாலஸ்தீனியனாகவும் நான் என்னை உணர ஆரம்பித்தது அதன்பிறகுதான் என்கிறார் செய்த். 1967க்குப் பிறகு நிலைமை மென்மேலும் மோசமடைந்தது. ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் நிரந்தரமாக வாழுமாறு பாலஸ்தீனியர்கள் தள்ளப்பட்டதை செய்த் கண்டார். அவருடைய சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் பாலஸ்தீனம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டது.

1967 போரைத் தொடர்ந்து எழுதிய முதல் கட்டுரையிலேயே (The Arab Portrayed) அமெரிக்க ஊடகம் எவ்வாறு அராபியர்களையும் இஸ்ரேலியர்களையும் மனச்சாய்வோடு காட்சிப்படுத்துகிறது என்பதை விவாதித்திருப்பார் செய்த். செய்தித்தாள், இதழ் என்று எதிலும் தனித்த ஓர் அராபியரின் படத்தை நீங்கள் காணமுடியாது. கொந்தளிப்போடு, கூட்டமாகத் திரண்டு நிற்கும் அராபியர்களின் படம் மட்டுமே வெளியிடப்படும். அதேபோல், யூத மக்கள் கும்பலாகத் திரண்டு நிற்கும் படங்களை யாரும் வெளியிடுவதில்லை. இஸ்ரேலை விவாதிக்கும் இடங்களிலெல்லாம் புகழ்பெற்ற ஆளுமைகளே புன்னகையோடு இடம்பெறுவார்கள். வெறும் படங்கள்மூலம் இஸ்ரேலியர்கள் மென்மையானவர்கள், அராபியர்கள் சண்டையிடத் துடிப்பவர்கள் எனும் பிம்பம் வாசகர்களுக்கு வெற்றிகரமாகக் கடத்தப்பட்டுவிடுகிறது என்கிறார் செய்த்.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் அரபுலகம் குறித்து எழுதி வைத்திருந்ததை மறுவாசிப்பு செய்தபோது, அவர் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருந்த அரபுலகும் மேற்குலகம் பதிவு செய்து வைத்திருந்த அரபுலகும் வெவ்வாறாக மட்டுமல்லாமல் எதிரெதிராகவும் இருந்ததை செய்த் கண்டார். போதுமான தரவுகள் கிடைக்காததால் அல்லது சரியான புரிதல் இல்லாததால் நேர்ந்த பிழையல்ல இது. ஒரு தொழிற்சாலைபோல் அரபுலகுக்கு எதிரான திரிபுவேலை வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைக் கண்டறிந்தார்.

எட்மண்ட் வில்சன், ஐசயா பெர்லின் என்று அவருடைய விருப்பத்துக்குரிய எழுத்தாளர்கள் பலர் சியோனிசக் கண்ணோட்டம் கொண்டிருந்ததையும் அராபியர்கள் குறித்து மோசமாக எழுதியிருந்ததையும் கண்டார். ‘நானறிந்த உலகம் தகர்ந்து புதிதாக ஒன்று உருவாகிவிட்டதுபோல் உணர்ந்தேன். அமெரிக்கா வந்து 15, 16 ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கும் என்றாலும் முதல் முறையாக மற்ற அராபியர்களோடு தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். அதுவரை மேல்தட்டு அமெரிக்க வாழ்க்கைமுறையைத்தான் பின்பற்றி வந்தேன். பிரின்ஸ்டன், ஹாவர்ட் என்று நான் ஆங்கில இலக்கியம் படித்த கல்விக்கூடங்களில் எங்கும் அராபியரைக் கண்டதில்லை. எல்லாமே மாறியது. 1970ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்துக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்’ என்கிறார் செய்த்.

இஸ்லாம் ஒற்றைத்தன்மை கொண்ட ஒரு மதமல்ல. உலகம் முழுக்க 100 கோடி மக்களால் பின்பற்றப்படும் ஒரு பெருமதத்தை அது இப்படித்தான் என்று எளிமைப்படுத்திச் சுருக்குவது அறிவீனமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட என்கிறார் செய்த். இஸ்லாம் குறித்த பிம்பங்களை ஒரு குறிப்பிட்ட வடிவில் பொட்டலம் கட்டி உலகுக்கு வழங்கியதில் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. வலதுசாரிகளுக்கு இஸ்லாம் காட்டுமிராண்டித்தனம் என்றால் இடதுசாரிகளுக்கு மத்தியகாலத்து மதவாதம். மையத்திலிருப்போர் இஸ்லாத்தை முகச்சுளிப்போடு கடந்து சென்றுவிடுகின்றனர். இந்தக் கூட்டு அறியாமை வேறு எவரையும்விட இஸ்லாமியர்களையே அதிகம் பாதிக்கிறது என்கிறார் செய்த்.

எட்வர்ட் செய்த் தனது அரசியல் பணிகளைத் தொடங்கியபோது பாலஸ்தீனத்துக்கென்று ஒரு வரலாறு எழுதப்படாமலேயே இருந்தது. செய்த் அப்பணியைத் தொடங்குவதற்கு முன்பு, ஏற்கெனவே அழுத்தமாகக் கால்கொண்டுவிட்ட கற்பிதங்களையும் கற்பனைகளையும் அகற்றவேண்டியிருந்தது. இஸ்ரேல் தரப்பு நியாயம் மலைபோல் குவிந்துகிடந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கொரு தரப்பை உருவாக்குவதென்பது கோலியாத்துக்கு எதிராக ஓர் இளம் டேவிட்டை வளர்த்து முன்னிறுத்துவதற்கு ஒப்பான சவாலாக இருந்தது. இதுதான் எங்கள் குரல், இதுதான் எங்கள் துயர், இதுதான் எங்கள் கனவு என்று உயர்த்திப் பிடிக்க ஏதுவாக பாலஸ்தீனர்களுக்கு ஓர் அடிப்படைப் பிரதியை (The Question of Palestine, 1979) செய்த் உருவாக்கி அளித்தார். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் அறிவார்ந்த அரசியல் தரப்பாக இன்றுவரை இந்நூல் திகழ்கிறது. முன்னதாக, கீழைத்தேயவியல் குறித்து செய்த் மேற்கொண்ட ஆய்வு (Orientalism, 1978) இலக்கியம், வரலாறு, பண்பாடு, காலனியாதிக்கம் என்று தொடங்கி பல துறைகளில் புதிய திறப்புகளைச் சாத்தியமாக்கியது. அடுத்தாக, மேற்குலக ஊடகம் இஸ்லாத்தை எப்படி அணுகுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கிய நூலை செய்த் எழுதினார் (Covering Islam, 1981). செய்தின் ஆய்வுமுறையியலை, குறிப்பாக அரபுலகம் குறித்த அவர் பார்வையைப் புரிந்துகொள்ள இந்த முத்தொகுப்பு உதவுகிறது.

செய்த் ஒரு வரலாற்றாசிரியர் அல்லர். இலக்கியம்தான் அவருடைய அடித்தளம். இலக்கியத்திலிருந்தே தனது அரசியல் நிலைப்பாட்டையும் கோட்பாட்டுப் பார்வையையும் அறத்தையும் அவர் உருவாக்கிக்கொண்டார். 1967 போருக்குப் பிறகு ‘அதுவரை படித்துக்கொண்டிருந்த, கற்பித்துக்கொண்டிருந்த அதே இலக்கியத்தை வரலாற்றுக் கோணத்திலிருந்து அணுகத் தொடங்கினேன்‘ என்கிறார் செய்த். இலக்கியம் உன்னதமானது; அனைத்தையும் கடந்தது; இலக்கியம், இலக்கியத்துக்காகவே; ஒரு கதையைக் கதையாக மட்டுமே காணவேண்டும் போன்றவற்றைக் கடந்து அவற்றை அரசியல் பிரதிகளாக அடையாளம் கண்டார் செய்த்.

0

பாலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கான முதல் நிபந்தனை இஸ்ரேலைப் புரிந்துகொள்வது. ‘முதல் சியோனிச காலனிய அலை 1880களில் பாலஸ்தீனத்தின் கரையைத் தீண்டியபின் பாலஸ்தீனத்தின் வரலாறு வழக்கத்துக்கு மாறானதாக மாறிவிட்டது’ என்கிறார் செய்த். பாலஸ்தீன வரலாறுக்கும் அராபிய வரலாறுக்கும் இடையில் நிறைய பொதுத்தன்மைகள் இருந்தபோதும் சியோனிசத்தோடு ஏற்பட்ட சந்திப்பு பாலஸ்தீனத்தைத் தனித்துவமான ஒரு நிலமாக மாற்றிவிட்டது என்பது செய்தின் பார்வை.

கிறிஸ்தவ ஐரோப்பாவால் வேட்டையாடப்பட்ட யூதர்கள் தங்கள்மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு தொடங்கிய இயக்கமே சியோனிசம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பாலஸ்தீனத்தில் சியோனிசம் இழைத்தது அதே குற்றத்தைத்தான் என்கிறார் எட்வர்ட் செய்த். சியோனிசத்தைக் காலனியாதிக்கத்தின் நீட்சியாகவே அவர் கண்டார். இஸ்ரேலின் காலனியாதிக்கம் வெற்றியடைந்துவிட்டதால் அதன் குறைகள் உலகின் கண்களுக்குப் புலப்படவில்லை. இஸ்ரேலின் வெற்றியை மட்டும் காண்பவர்கள் அந்த வெற்றி பாலஸ்தீனர்களுக்கு ஏற்படுத்திய அழிவையும் சேர்த்துக் காணவேண்டும் என்கிறார் செய்த். ‘ஒருபோதும் தீர்க்கப்படமுடியாதது என்று கருதப்பட்ட இஸ்ரேல் பிரச்சினை இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து காலனிமயமாக்கல் மூலமும் ஆக்கிரமிப்பின் மூலமும் தீர்க்கப்பட்டிருக்கிறது’ எனும் ஹன்னா அரெண்டின் வரிகளை செய்த் மேற்கோள் காட்டுகிறார்.

மேற்குலகின் கற்பனையில் சியோனிசம் செலுத்தும் தாக்கத்தை ஜார்ஜ் எலியட்டின் டேனியல் டெரோண்டா (Daniel Deronda, 1876) நாவலைக் கொண்டு விவாதிக்கிறார் செய்த். யூதர்களின் கூட்டுத் துயரைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கென்று ஒரு தாய்நாட்டை உருவாக்கி அளிப்பது நம் கடமை. நிலையற்றுத் தவிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு நிலம் பெறவேண்டும். அதில் அவர்கள் வேர் பிடித்து வளர்ந்து செழிக்கவேண்டும் எனும் கருத்தை இந்நாவலில் ஆழமாக முன்வைத்திருப்பார் எலியட். தனிநாடு என்பது யூதர்களின் தேவை மட்டுமல்ல அது 19ஆம் நூற்றாண்டு உலகின் தேவையும்கூட என்னும் உணர்வை இந்நாவல் வெற்றிகரமாக ஏற்படுத்துகிறது. இறைவன் நமக்காக அருளிய நிலம் கிழக்கில், பாலஸ்தீனம் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. அங்கே நாம் நம் குடியிருப்புகளை அமைத்துக்கொள்வோம் என்று இந்நாவலின் முக்கியக் கதாபாத்திரம் முழங்குகிறது. பாலஸ்தீனம் யூதர்களுக்காக அருளப்பட்ட நிலம் என்றால் ஏற்கெனவே அந்நிலத்தில் வசிப்பவர்களை என்ன செய்வது? அவர்களை அப்புறப்படுத்திவிடலாமா? விரட்டிவிடலாமா? அவர்கள் நிலமற்றவர்களாக, வேரற்றவர்களாக மாறினால் பரவாயில்லையா?

யதார்த்தவாதி, தாராளவாதக் கண்ணோட்டம் கொண்டவர், நல்ல குறிக்கோளோடு இயங்கியவர் என்றாலும் இனவாதம் தன்னை ஆக்கிரமிப்பதை ஜார்ஜ் எலியட் உணரவில்லை. யூதர்களின் நியாயம் மட்டுமே அவருடைய கண்களுக்குப் புலப்பட்டிருக்கிறது. அது மட்டுமே அவர் இதயத்தை அசைத்திருக்கிறது. அவருடைய கற்பனையில் அராபியர்களுக்கு இடமில்லை என்கிறார் செய்த். கீழைநாடுகளை ஆக்கிரமிப்பதோ, அங்குள்ளவர்களை அடிமைப்படுத்துவதோ தவறில்லை எனும் கருத்து விக்டோரியா காலத்து இங்கிலாந்தில் பலம் பெறுவதற்கு இதுபோன்ற படைப்புகள் பெருமளவு உதவியிருக்கின்றன. நாகரிகமற்றவர்களின் நிலத்தை நாகரிகமானவர்கள் கைப்பற்றலாம் எனும் கருத்தாக்கம் காலனியாதிக்க நாடுகளுக்கு அளவற்ற நிலத்தையும் செல்வத்தையும் ஈட்டித்தந்தது. நாவலாசிரியர்கள், அறிஞர்கள், அதிகாரிகள், பயணிகள் என்று பலரும் இணைந்துதான் கீழைத்தேயவியல் கருத்தாக்கத்தை வலுப்படுத்தினார்கள் என்கிறார் செய்த். ‘மக்களற்று கிடந்த நிலத்தை நிலமற்ற மக்கள் தமதாக்கிக்கொண்டனர்’ எனும் இஸ்ரேலின் புகழ்பெற்ற கதையாடல் பிறந்தது இப்படித்தான்.

0

1948 தொடங்கி இன்றுவரை தாம் இழைக்கும் அனைத்துக் குற்றங்களையும் தற்காப்பு எனும் ஒற்றைச்சொல் நியாயத்தைக் கொண்டு இஸ்ரேல் கடந்து செல்வதை செய்த் மீண்டும், மீண்டும் கண்டிக்கிறார். சுற்றிலும் அரபு நாடுகள் அமைந்துள்ள நிலையில் விழிப்போடு இல்லாவிட்டால் எங்கள் நாடு அழிந்துவிடும் என்கிறது இஸ்ரேல். தற்காப்பு என்று சொல்லி குடியிருப்புகளை, அலுவலகக் கட்டடங்களை, மருத்துவமனைகளைக் குண்டு போட்டு அழிக்கிறது. நினைத்த நேரத்தில் புகுந்து பாலஸ்தீனர்களைச் சிறை பிடிக்கிறது, தாக்குகிறது, கொல்கிறது. பாலஸ்தீனர்களின் வீடுகள் எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றப்படலாம். அவர்களுக்குரிய நிலம் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம். அவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் கிடையாது. இஸ்ரேல் என்ன செய்தாலும் அமெரிக்காவும் மேற்குலகும் அமைதியாக வாய்மூடிக் கிடக்கும். இப்படியொரு தனிச்சிறப்பான வாய்ப்பு வரலாற்றில் வேறெந்த தேசத்துக்காவது இதற்குமுன்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

தனது நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்ள அதிநவீன உளவு அமைப்பு, ராணுவம், ஆயுதம், தொழில்நுட்பம், பிற நாடுகளின் ஆதரவு என்று அனைத்தையும் குவித்து வைத்திருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்க்க, இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள பாலஸ்தீனத்திடம் என்ன இருக்கிறது? இஸ்ரேலிய புல்டோசர்களால் மிதிபட்டு மண்ணில் புதைவதைத் தவிர, இஸ்ரேலியக் குண்டுகளால் நாலாபுறமும் சிதைத்துத் தெறித்து விழுவதைத் தவிர, இஸ்ரேலிய ஏவுகணைகளால் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுவதைத் தவிர, எலிகள்போல் கரப்பான்பூச்சிகள்போல் குழந்தைகள் செத்து விழுவதைத் தவிர வேறென்ன மார்க்கம் இருக்கிறது அவர்களிடம்? இதை உலகம் ஏன் சிந்திப்பதேயில்லை என்று கேள்வி எழுப்புகிறார் செய்த்.

இஸ்ரேல் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் பாலஸ்தீன மக்களுக்கான மின்சாரத்தை, குடிநீரைத் தடுத்து நிறுத்தலாம் எனும் அவல நிலை ஏன் தோன்றவேண்டும்? இஸ்ரேல் அனுமதித்தால்தான் பாலஸ்தீன மக்களுக்கு மருந்தோ உணவோ கிடைக்கும் என்றால் பாலஸ்தீன மக்கள் மாபெரும் சிறைச்சாலையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்றுதானே பொருள்? ஆதரவின்றித் தவிக்கும் பாலஸ்தீனர்களின் விடுதலையைவிட இஸ்ரேலின் தற்காப்பு ஏன் முக்கியமானதாக இருக்கவேண்டும்? இஸ்ரேல் என்றதும் யூத இனவொழிப்பின் வலி நினைவுக்கு வருவதுபோல், பாலஸ்தீனம் என்றதும் ஏன் 1948 இழப்புகளையோ 1967 இழப்புகளையோ 1982 இழப்புகளையோ நாம் நினைத்துப் பார்ப்பதில்லை? இரண்டு வலிகளில் ஒன்று மட்டுமே நம்மை அசைக்கும் என்றால் நம் அறம் எப்படிப்பட்டது? வலிமிகுந்த இந்தக் கேள்விகளை செய்த் தனது எழுத்துகளிலும் பேச்சுகளிலும் மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொண்டே இருந்தார்.

இதன் பொருள் யூதர்களின் நியாயத்தை செய்த் புரிந்துகொள்ள மறுத்தார் என்பதல்ல. 19, 20ஆம் நூற்றாண்டு யூத இனவெறுப்பின் வரலாற்றை நன்கறிந்தவர். யூத வெறுப்பு குரூரமான இனவொழிப்பாக நீண்டு வளர்ந்த வரலாற்றை ஒருபோதும் மறக்காதவர். மனித மனத்தின் ஆழத்திலிருந்து யூத வெறுப்பு நிரந்தரமாகக் களையப்படவேண்டும் என்பதுதான் அவருடைய விழைவும். அதே நேரம் வஞ்சிக்கப்பட்டோர் என்பதையே நிரந்தர அடையாளமாகப் பூண்டு வரலாற்றில் தாம் சந்தித்த அதே வெறுப்பை இன்னொரு தரப்பின்மீது திருப்பிவிடுவார்களெனில், சியோனிசம் எனும் பெயரில் அதை நியாயப்படுத்தவும் செய்வார்கள் எனில், அதை எதிர்ப்பேன் என்பதே செய்தின் தரப்பு.

பாலஸ்தீனர்களின் வலியை, ஏக்கத்தை, கனவை உலகால் புரிந்துகொள்ளமுடியாமல் போவதற்கு ஹிட்லரின் யூத இனவொழிப்பு நம் அனைவரின் மனதிலும் ஒரு பெருஞ்சுமைபோல் ஏறி அமர்ந்திருப்பதுதான் காரணம் என்று வாதிடுகிறார் செய்த். நம் உளவியலை யூத இனவொழிப்பு ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதால் அவர்கள் இழைக்கும் நிகழ்காலக் குற்றங்கள் நம்மைத் துளைக்கத் தவறிவிடுகின்றன.

யூதர்களை அவர்களுடைய வரலாற்று வலி ஒன்றிணைக்கிறது. அவர்களுடைய அச்சம் உண்மையானது. அவக்கேடாக, சில அரபுலக அறிவுஜீவிகளும் வலதுசாரிகளும் யூதர்களின் வலியையும் அச்சத்தையும் புறக்கணிக்கிறார்கள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்கவேண்டும், எதிர்க்கவேண்டும். அதற்காக அவர்களுடைய துயரை மறுக்கவோ இகழவோ கூடாது என்கிறார் செய்த். பாலஸ்தீனம் சிக்கலான ஒரு பிரச்சினையாக நீடிப்பதற்கு யூதர்களின் வரலாறு ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை செய்த் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். யூதர்களின் துயரை பாலஸ்தீனர்களின் துயரோடு மட்டுமல்ல வேறெந்த மக்களின் துயரோடும் செய்த் ஒப்பிடமாட்டார். அதுவும் இதுவும் ஒன்றே என்று சுருக்கமாட்டார். அராபியர்கள் மட்டுமல்ல யூதர்களுமேகூடத் தங்களுடைய கடந்த காலத் துயரை அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்பார் செய்த்.

தாய்நாடு என்னும் கற்பனையை யூதர்கள் எவ்வளவு உணர்வுபூர்வமாகவும் தீவிரமாகவும் தழுவி நிற்கின்றனர் என்பதையும் செய்த் கவனப்படுத்துகிறார். இறைவன் அருளியது, வாக்களிக்கப்பட்ட நிலம் போன்ற புனிதமான கட்டமைப்புகள் யூதர்களின் கற்பனைக்கு உரம் சேர்க்கின்றன. பாலஸ்தீனத்தின் நியாயத்தைக் காட்டிலும் இஸ்ரேலின் நியாயமே ஏற்கத்தக்கது என்னும் நம்பிக்கையைப் புனிதக் கதையாடல்கள் உண்டாக்கிவிடுகின்றன என்கிறார் செய்த்.

இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் குற்றங்களை செய்த் மறைக்க முயன்றதில்லை. இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் தனிமனிதச் சுதந்திரம் பாதிக்கப்படுவதையும் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதையும் நினைவுபடுத்த அவர் தவறியதில்லை. இஸ்லாமிய மக்களுக்காகக் குரல் கொடுப்பதும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிப்பதும் ஒன்றல்ல என்பதில் அவர் தெளிவோடு இருந்தார். சல்மான் ருஷ்டியின் நாவல் (The Satanic Verses, 1988) கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டபோது, உறுதியாக ருஷ்டியின் பக்கம் நின்றவர் செய்த். அழகிய நாவலொன்றைக் கண்டு வெகுண்டெழுவதும் அதீதம் என்றார்.

0

எட்வர்ட் செய்த் கல்லெறியும் காட்சியை ஒரு பிரெஞ்சு ஒளிப்பட நிருபர் ஜூலை 2000 அன்று லெபனான் இஸ்ரேல் எல்லையில் பதிவு செய்தார். இந்த ஒளிப்படம் மத்தியக் கிழக்கில் மட்டுமின்றி மேற்குலகிலும் பரவலாகப் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டது. உலகறிந்த அறிவுஜீவியான ஒருவர் இவ்வாறு செய்யலாமா? கல்லெறிதல் என்பது பாலஸ்தீனர்களின் போராட்ட வழிமுறையல்லவா? ஒரு சிந்தனையாளரான செய்த் வன்முறையை ஆதரிக்கலாமா? ஒரு பகுதியினரிடையே கண்டனங்கள் குவிந்தன என்றால் (செய்த் பணியாற்றிய கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் இதழும் இதில் அடக்கம்) இன்னொரு பிரிவினர் அவரை ஓர் ஆயுதப் பேராளியாக உயர்த்தி, உற்சாகமடைந்தனர்.

1982ஆம் ஆண்டு இஸ்ரேல் லெபனானோடு போரிட்டு அந்நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படைகளை இஸ்ரேல் திரும்பப்பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வைச் சில பாலஸ்தீனர்கள் கொண்டாட்டத்தோடும் இன்னொரு பிரிவினர் உணர்ச்சிக் கொந்தளிப்போடும் அணுகினர். இஸ்ரேலின்கீழ் இருந்தவரை செல்லாதிருந்த செய்த், படைகள் வெளியேறிய பிறகு முதல் முறையாக அப்பகுதிக்குச் சென்றார். கூடியிருந்த மக்களின் உள எழுச்சி அவரையும் தொற்றிக்கொள்ள, குனிந்து ஒரு கல்லெடுத்து வீசினார். பின்னர் அவரே இதனைத் தெளிவுபடுத்தினார். நான் கல்லெறிந்தது எந்தவொரு ராணுவ வீரரின்மீதுமல்ல, ஒரு கண்காணிப்புக் கோபுரத்தின்மீதுதான். எனது செயல் ஒருவரையும் ‘காயப்படுத்தாத மகிழ்ச்சியின் வெளிப்பாடு’ என்று விளக்கமளித்தார் செய்த்.

எட்வர்ட் செய்த எழுதிக்குவித்த கட்டுரைகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கக்கூடியவை. அமெரிக்காவிலும் சரி, பிற இடங்களிலும் அவர் அவர்மீது எப்போதும் நல்ல ஊடக வெளிச்சம் குவிந்திருந்தது. அதை அவர் விரும்பவும் செய்தார். பல தொலைக்காட்சி பேட்டிகள் கொடுத்திருக்கிறார். மரணத்தின் விளிம்பிலிருந்தபோதுகூடப் பல மணி நேரம் தொடர்ச்சியாக உரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அச்சிலும் இணையத்திலும் வெளிவந்த அவருடைய நேர்காணல்கள் மலைப்பை ஏற்படுத்துபவை. பாலஸ்தீனம் மட்டுமல்ல, எதுவொன்றைக் குறித்தும் தனது பார்வையைத் துணிவோடு, வெளிப்படையாக முன்வைக்கக்கூடியவர். செய்த் வன்முறையை ஆதரித்தவரா எனும் கேள்வியை எழுப்பிக்கொண்டு அவர் படைப்புகளை ஆராய்ந்தால் ‘இல்லை’ எனும் விடையையே ஒருவர் மீண்டும், மீண்டும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

‘எங்களுக்கும் சரி, அவர்களுக்கும் (இஸ்ரேல்) சரி ராணுவம் தீர்வல்ல என்று 1970களிலேயே சொல்லியிருக்கிறேன். பாலஸ்தீனத் தரப்பிலிருந்து இவ்வாறு அறிவித்த முதல் நபர் நான்’ என்கிறார் செய்த். இரண்டாம் இந்திஃபதா காலத்தில் ஹமாஸ், ஃபதா உள்ளிட்ட இயக்கங்கள் மனித வெடிகுண்டுகளை இயக்கச் செய்து இஸ்ரேலியர்களைத் தாக்கும் வழிமுறையைக் கையாண்டபோது செய்த் அதனைக் கண்டித்தார். வன்முறை பாலஸ்தீன விடுதலையைத் துரிதப்படுத்தாது; தேக்கத்தையும் இழப்பையுமே ஏற்படுத்தும் என்று செய்த் அறிவுறுத்தினார்.

செப்டெம்பர் 11 தாக்குதல் அவரை நிலைகுலையவைத்தது. ‘ஒரு நியூ யார்க்கராக, அதிர்ச்சியூட்டும் நிகழ்வாகவே அது இருந்தது. குறிப்பாக, இழப்பு எண்ணிக்கை அச்சுறுத்தக்கூடியது. அப்பாவிகளைக் கொல்லவேண்டும் என்பதைக் கடந்து இதில் எந்தச் செய்தியும் இல்லை… ரத்த வேட்கையோடு மேற்கொள்ளப்பட்ட அழிவு. அமைதியான, பயங்கரவாதச் செயல்… இஸ்லாத்தைத் தங்கள் நோக்கங்களுக்காகக் கையகப்படுத்திக்கொண்டவர்களின் செயல்’ என்று ஒரு நேர்காணலின்போது குறிப்பிட்டார் செய்த்.

செப்டெம்பர் 11 வன்முறையை பாலஸ்தீனர்களின் வன்முறையோடு பொருத்திப் பார்க்கிறார் செய்த். காசாவில் ஓர் இளைஞன் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு இஸ்ரேலியர் மத்தியில் தோன்றி தானும் வெடித்து மற்றவர்களையும் வெடிக்கச் செய்யும்போது அவன் மனநிலையை என்னால் படிக்கமுடிகிறது. யதார்த்தம் கழுத்தை நெறிக்கும்போது, சுற்றமும் சூழலும் உதிர்ந்து சிதறும்போது என்ன செய்வதென்று தெரியாமல் வன்முறையை அவன் கையிலெடுக்கிறான். ‘இதை என்னால் ஏற்கமுடியது என்றாலும் அவன் ஏன் அவ்வாறு செய்கிறான் என்பதைப் புரிந்துகெள்ளவாவது முடிகிறது.’ செப்டெம்பர் 11 தாக்குதல் நடத்தியவர்கள் பாலஸ்தீனர்களைப் போல் ஏதுமற்றவர்களோ ஏழை அகதிகளோ அல்ல. நடுத்தர வகுப்பைச் சேர்ந்த, ஆங்கிலம் கற்ற, அமெரிக்கா வந்து புளோரிடாவில் தங்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள். அவர்களுடைய வன்முறையில் பொருள் எதுவுமில்லை என்பதால் கூடுதல் அச்சமூட்டக்கூடியது என்கிறார் செய்த். (Interview with Edward Said, David Barsamian, The Progressive Magazine, 16 November 2001).

இஸ்ரேல் யூத மதத்தை முன்னிறுத்துகிறது என்றால் பாலஸ்தீனம் இஸ்லாத்தை. மதத்தை முதன்மை அடையாளமாகக் கொண்டு ஓர் அரசு இயங்குவதென்பது அடிப்படை ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. அரசு மட்டுமல்ல, மதத்தின் பெயரால் மக்களைத் திரட்டும் இயக்கங்களும் ஜனநாயகத்தன்மையற்றவைதாம். மதவாதம் எந்த வடிவில் வந்தாலும் அது புறக்கணிக்கப்படவேண்டும். என்கிறார் செய்த். இஸ்லாமிய ஜிகாத், ஹமாஸ், அல் காயிதா போன்ற இயக்கங்கள் கையாளும் வழிமுறைகள் பழங்காலத்தவை. அவர்களுடைய எதிர்ப்பு அரசியல் கற்பனை வளமற்றது என்கிறார் செய்த். ஹமாஸைச் சிலர் இடதுசாரி இயக்கமாக அடையாளப்படுத்த முயன்றபோது செய்த் அவர்களை நிராகரித்தார். ஹமாஸ் ஓர் இஸ்லாமிய மதவாத அமைப்பு என்பதே அவருடைய இறுதி நிலைப்பாடு.

0

வன்முறைப் பாதையை மட்டுமல்ல அரசியல் பாதையையும் தொடர்ந்து கவனித்து, விமரிசித்து வந்தார் செய்த். தொடக்கத்தில், யாசர் அராஃபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பின்மீது (பிஎல்ஓ) மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் செய்த். அராஃபத் அப்போது ஒரு பயங்கரவாதியாக மேற்குலகால் கருதப்பட்டதால் அவருக்கு நெருக்கமானவரான செய்துக்கு ‘பயங்கரவாதப் பேராசிரியர்’ எனும் பட்டப்பெயர் கிடைத்தது. மேற்குலகம் யாரை, எவ்வாறு மதிப்பிடும் என்பது செய்துக்குத் தெரியும் என்பதால் அவதூறுகளை அவர் பொருட்படுத்தியதில்லை. பாலஸ்தீன விடுதலைக் கோரிக்கையை பிஎல்ஓ உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றும் நெல்சன் மண்டேலா எவ்வாறு தென்னாப்பிரிக்க விடுதலையின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தாரோ அவ்வாறே அராஃபத்தும் திகழ்வார் என்றும் செய்த் உறுதியாக நம்பினார்.

மேற்குக் கரை, காசா முனை இரண்டையும் இழந்து இருபதாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இனியும் பொறுக்கமுடியாது என்று பாலஸ்தீனர்கள் வெகுண்டெழுந்து கல்லெறியும் போராட்டத்தை (இந்திஃபதா) 1987ஆம் ஆண்டு தொடங்கியபோது, நவீனக் காலத்தில் நிகழும் முக்கியமான காலனி எதிர்ப்புப் போர் என்று அதனை அழைத்தார் செய்த். 1993ஆம் ஆண்டுவரை இந்தப் போராட்டம் நீடித்தது. சில புள்ளிவிவரங்களின்படி கிட்டத்தட்ட 1,200 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். மேற்குலகின் கவனம் பாலஸ்தீனத்தின்மீது அதிகம் படர்ந்திருந்த காலம் அது. இஸ்ரேலிய வீரர்கள் பாலஸ்தீனர்களைக் கடுமையாகத் தாக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பரவலாக விவாதிக்கப்பட்டன. செய்த் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். பாலஸ்தீனர்களிடையே தோன்றிய அபாரமான உணர்வெழுச்சியை அராஃபத் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுத்துச் செல்வார் என்று அவர் எதிர்பார்த்தார். அவ்வாறு நடக்காததால் வருத்தமடைந்தார்.

சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்ததன்மூலம் வளைகுடாப் போரைத் தொடங்கி வைத்தபோது (ஆகஸ்ட் 1990) அராஃபத் சதாமுக்குத் தன் ஆதரவை வழங்கினார். அராஃபத்தின் நிலைப்பாடு தவறானது மட்டுமல்ல அது கடும் குற்றமும்கூட என்று விமரிசித்தார் செய்த்.

மற்றொரு பக்கம், இஸ்ரேலியப் பிரதமர் இசாக் ராபினோடு அராஃபத் பலகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடங்கினார். பேச்சுவார்த்தையின் முடிவில் 30 ஆகஸ்ட் 1993 அன்று வெள்ளை மாளிகையில் பிஎல்ஓவும் இஸ்ரேலும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. முதல் ஆஸ்லோ உடன்படிக்கை என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்றும் மத்தியக் கிழக்கில் நீடித்த அமைதியைக் கொண்டுவரும் என்றும் மேற்குலகம் ஆரவாரித்ததை செய்த் கண்டார். பயங்கரவாதி என்று அழைக்கப்பட்ட அராஃபத் ஒரே இரவில் பாலஸ்தீனத்தின் மதிக்கத்தக்க பிரதிநிதியாக மாறிய விந்தையை அவர் கவனிக்கத் தவறவில்லை. மேற்குக் கரையிலும் காசாவிலும் நமக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று அராஃபத் அறிவித்தபோது செய்த் நொறுங்கிப்போனார்.

1993ஆம் ஆண்டிலும் அதன்பிறகும் கையெழுத்தான ஆஸ்லோ உடன்படிக்கைகளைத் தொடர்ந்து விமரிசித்து வந்தார் செய்தார். இந்த உடன்படிக்கைகள் பாலஸ்தீனத்துக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தைகளை அராஃபத் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அமெரிக்க மக்களுக்கு பாலஸ்தீனத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதை விட்டுவிட்டு தரகர்களைக் கொண்டு மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவைப் பெற முயல்வது பிஎல்ஓவுக்கு மட்டுமல்ல, பாலஸ்தீனத்துக்கும் தேக்க நிலையையே ஏற்படுத்தும் என்றார் செய்த். இரு தரப்பினரும் சம தளத்தில் நின்று உரையாடும்போதுதான் பேச்சுவார்த்தைக்கு ஒரு பொருள் இருக்கும். இங்கே இஸ்ரேல் மேல்நிலையிலும் பிஎல்ஓ பலவீனமான இடத்திலும் இருந்துகொண்டு உரையாடிக்கொண்டிருக்கிறது. பாலஸ்தீன விடுதலையை ஒரு நிபந்தனையாக முன்நிறுத்த அராஃபத் தவறிவிட்டார். ‘தன்னைக் காப்பாற்றிக்கொள்வதே அராஃபதுக்கு முக்கியமானதாக இருந்தது’ என்று காட்டமாக எழுதினார் செய்த். போதுமான ஆங்கில அறிவு, அரசியல் புரிதல், திட்டமிடல் எதுவுமின்றி ஆஸ்லோ உடன்படிக்கையை அராஃபத் கையெழுத்திட்டிருக்கிறார்.

குறைந்தபட்ச நேர்மைகூட அராஃபத்திடம் இல்லை என்றார் செய்த். ‘இது ஓர் ஆரம்பப்புள்ளி மட்டுமே. என்னால் இப்போதைக்கு இதைத்தான் சாதிக்கமுடிந்தது. எனக்கு உங்கள் எல்லோரின் உதவியும் தேவை என்றாவது அராஃபத் பாலஸ்தீனர்களிடம் விண்ணப்பித்திருக்கலாம். அவர் செய்யவில்லை என்பதோடு பொய்யும் சொன்னார். நமக்கு இறையாண்மை கிடைத்துவிட்டது என்றார். நமக்கு நாடு கிடைத்துவிட்டது என்றார். எதுவுமே கிடைக்கவில்லை.’ பாலஸ்தீனம் தொடர்ந்து இஸ்ரேலை அண்டியிருக்கப்போகிறது; இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விலக்கிக்கொள்ளப்போவதில்லை எனும் நிலையில் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக்கிடக்கிறது? எந்த அடிப்படைகளையும் மாற்றாத ஓர் ஓப்பந்தத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால் யாருக்கு என்ன லாபம்?

ஆஸ்லோ ஒப்பந்தங்களின் முடிவில் பாலஸ்தீன தேசிய ஆணையம் தோற்றுவிக்கப்பட்டு, மேற்குக் கரையிலும் காசா முனையிலும் நிபந்தனைக்கு உட்பட்ட சுயாட்சி உரிமை வழங்கப்பட்டது. முதல் தலைவராக யாசர் அராஃபத் 1994ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இது அராஃபத்துக்கு வேண்டுமானால் சாதகமானதாக இருக்கலாம், பாலஸ்தீனர்களுக்கு நீண்டநாள் நோக்கில் எந்தப் பலனையும் அளிக்காது என்றார் செய்த். பாலஸ்தீனத்துக்கு முழுமையான விடுதலை கிடைக்கவேண்டும் எனும் அடிப்படையான நோக்கத்திலிருந்து விலகி, ஓரளவுக்குச் சுதந்திரம் கொடுத்தால்கூடப் போதும் எனும் நிலைப்பாட்டுக்கு அராஃபத் சுருங்கியிருக்கக்கூடாது என்று வருந்தினார்.

அராஃபத் ஆட்சியின் தவறுகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார் செய்த். அதிகாரம் கைக்கு வந்ததும் ஊழல் மலிந்ததைச் சுட்டிக்காட்டினார். எந்தவிதத் தொலைநோக்குப் பார்வையும் அராஃபத்திடம் இல்லை என்றார். பாலஸ்தீனத்தின் பிரதிநிதியாகத் திகழும் அரிய வாய்ப்பை அராஃபத் தவறவிட்டுவிட்டார். விமரிசனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லை. முரண்பட்டவர்களைச் சிறையில் தள்ளுகிறார். செய்தித்தாள்களை, புத்தகங்களைத் தடை செய்கிறார். நாங்கள் கனவு கண்ட பாலஸ்தீனம் இதுவல்ல என்றார். அராஃபத் தடை செய்தவற்றுள் செய்தின் நூல்களும் இடம்பிடித்திருந்தன.

0

காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்ற நாடுகள் உலகெங்கும் உள்ளன. பாலஸ்தீனை அந்நாடுகளோடு ஒப்பிடமுடியாது. வழக்கமான காலனி எதிர்ப்புக் கருத்தாக்கங்களை பாலஸ்தீனத்துக்குப் பொருத்தவும் முடியாது. யூதர்களோடு பாலஸ்தீனர்கள் கொண்டிருக்கும் முரண் தனித்துவமானது. அதனால்தான் நான் யூதர்கள் குறித்தும் அதிகம் சிந்திக்கிறேன். அவர்களுடைய பிரச்சினை கூட்டுப் பிரச்சினை என்பதால் தீர்வும் அவ்வாறே இருப்பதுதான் நல்லது என்கிறார் செய்த்.

இஸ்ரேலிய மானுடவியல் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று 1998ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்று ‘1948இன் விளைவுகள்’ எனும் தலைப்பில் தலைமையுரை ஆற்றும்போது இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் இணைத்தே தனது வாதங்களை முன்வைத்தார் எட்வர்ட் செய்த். அவருடைய பார்வையை எளிதாக இப்படித் தொகுத்துக்கொள்ளலாம். இஸ்ரேலியர்களை முற்றாக வெளியேற்றுவதே பாலஸ்தீன தேசியவாதத்தின் முழக்கமாக இருக்கிறது. பத்து சதுர கிலோ மீட்டராக இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு தேசம் வேண்டும், எங்களுக்கென்று ஒரு கொடி வேண்டும் என்கிறார்கள் பெரும்பாலான பாலஸ்தீனர்கள். என்னால் அவர்களை ஏற்கமுடியவில்லை. அதேபோல் பாலஸ்தீனர்களை முற்றாக வெளியேற்றவேண்டும் எனும் சியோனிச ஆதரவாளர்களையும் என்னால் ஏற்க இயலவில்லை. இஸ்ரேலைத் தவிர்த்துவிட்டு பாலஸ்தீனத்தின் வரலாற்றையோ பாலஸ்தீனத்தைத் தவிர்த்துவிட்டு இஸ்ரேலின் வரலாற்றையோ எழுத முடியாது. இரு தேசங்களும் இரு தேச மக்களும் பிரிக்கமுடியாதபடிக்கு ஒன்று கலந்திருக்கின்றனர். அவர்களுடைய கடந்த காலமும் நிகழ்காலமும் மட்டுமல்ல எதிர்காலமும் பிணைக்கப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீனம் முழுக்க, முழுக்க அராபியர்களின் நிலம் என்று சொல்லப்படுவதைத் தேசியவாதக் கற்பனை என்று அழைத்தார் செய்த். இஸ்லாமியப் பண்பாடு மட்டும் தழைக்கும் நிலமல்ல பாலஸ்தீனம். வெவ்வேறு பண்பாடுகள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு வாழ்க்கைமுறைகள், வெவ்வேறு அனுபவங்கள் தழைக்கும் நிலம் அது. அந்நிலத்துக்கு ஒற்றைத்தன்மையை வழங்குபவர்கள் பாலஸ்தீனர்களாகவே இருந்தாலும் அவர்களும் செய்தைப் பொருத்தவரை சியோனிசச் சிந்தனையைப் பிரதிபலிப்பவர்கள்தாம்.

எட்வர்ட் செய்த் ஆரம்பத்தில் இரு தேசக் கோட்பாட்டை முன்வைத்தவர்தான். இஸ்ரேல்போல் பாலஸ்தீனமும் தனி நாடாக அங்கீகரிக்கப்படவேண்டும்; இரு தேசங்களும் அருகருகில் நிலைத்திருக்கவேண்டும் என்பதுதான் செய்தின் விருப்பமாக இருந்தது. சூழல் மாறிவிட்டதால், யதார்த்தம் மாறிவிட்டதால் நானும் பின்னர் ஒரு தேசக் கோட்பாட்டுக்கு மாறிவிட்டேன் என்கிறார் அவர். ‘பத்து லட்சம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியக் குடிமக்களாக இருக்கிறார்கள். இஸ்ரேலின் மக்கள் தொகையில் இது இருபது சதவீதம். பாலஸ்தீனத்துக்குக் குடிபெயர அவர்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. நஸரத், ஹைஃபா ஆகியவற்றைத்தான் அவர்கள் தங்கள் இடமாகக் கருதுகின்றனர். அவர்கள் எதற்காக மேற்குக் கரைக்குக் குடிபெயரவேண்டும்? பாலஸ்தீனம் என்னும் சின்னஞ்சிறு தேசத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் யூதர்களும் அராபியர்களும் அருகருகில், பிரிக்கமுடியாதபடி வசிக்கின்றனர்.’ இரு நாடுகளும் இரு துண்டுகளாகப் பிளவுண்டு கிடப்பதைக் காட்டிலும் யூதர்களும் அராபியர்களும் இரு இடங்களிலும் ஒருங்கிணைந்து வாழ்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

பிரிந்திருப்பதன்மூலம் அதிகம் இழந்தது பாலஸ்தீனம். அதிகம் பெற்றது இஸ்ரேல் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்துகிறார் செய்த். இரு தரப்பிலும் ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது என்றாலும் ஒப்பிடமுடியாத அளவுக்கு அதிக ரத்தத்தை பாலஸ்தீனர்களே சிந்தியிருக்கிறார்கள். இரு தரப்பினரும் கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள் என்றாலும் அதிகக் கண்ணீர் பாலஸ்தீனர்களிடமிருந்தே வழிந்து ஓடியிருக்கிறது. அதிக வலியை, அதிகக் காயத்தை, அதிக ஏமாற்றத்தைச் சந்தித்தவர்கள் பாலஸ்தீனர்களே.

நாம், மற்றவர் எனும் பாகுபாட்டை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் கைவிடும்போது மாற்றம் நிகழ ஆரம்பிக்கும். ஆக்கிரமிப்பும் பகையும் அவநம்பிக்கையும் மோதலும் விடைபெறும்போது அமைதியும் நல்லிணக்கமும் தோன்றும் என்பது செய்தின் நம்பிக்கை. பாலஸ்தீனம் ஒரு நவீன நாடாக மலரவேண்டும். எல்லா நவீன நாடுகளும் கடைப்பிடிக்கும் குடியுரிமைக் கொள்கையை பாலஸ்தீனமும் கடைப்பிடிக்கவேண்டும். விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் குடியுரிமை வழங்கவேண்டும். அனைத்து உரிமைகளும், அனைத்துப் பொறுப்புகளும் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். மதம், மொழி, இனம் பாகுபாடின்றி அனைவரையும் சட்டம் ஒன்றுபோல் பாவிக்கவேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் ஒன்றுபோல் கிடைக்கும்போது குறுகிய தேசியவாதக் கண்ணோட்டம் மறையும். வெறுப்பு மறையும். குடிமக்களை முதன்மைப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டமொன்றை பாலஸ்தீனம் உருவாக்கவேண்டும்.

நாங்கள் இதுவரை இழந்த அனைத்தையும் திருப்பிக்கொடு என்றுகூட இஸ்ரேலிடம் கேட்கவில்லை. நாங்கள் உங்களிடம் நிறைய இழந்திருக்கிறோம் என்பதையேனும் நேர்மையாக ஒப்புக்கொள்ளுங்கள் என்கிறார் செய்த். பாலஸ்தீனப் பகுதிகளுக்குள் அத்துமீறிய யூதக் குடியேற்றங்களை ஊக்குவிப்பதை செய்த் கண்டிக்கிறார். பாலஸ்தீனர்களின் நடமாட்டத்தை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. நாம் இதுவரை செய்துகொண்டிருப்பது அநீதியான ஆக்கிரமிப்பு என்பதை உணர்வதிலிருந்து இஸ்ரேல் தொடங்கவேண்டும். பாலஸ்தீனர்களை மனிதர்களாகக் காண இஸ்ரேல் கற்றுக்கொள்ளவேண்டும். நினைத்த நேரத்தில் பாலஸ்தீனர்களைச் சிறை பிடிப்பதையும் வாய்ப்பு அமையும்போதெல்லாம் அவர்கள் இருப்பிடங்களைக் குண்டு வீசி அழிப்பதையும் திறந்தவெளிச் சிறைச்சாலைபோல் அவர்கள் உலகை மாற்றி வைத்திருப்பதையும் இஸ்ரேல் கைவிடவேண்டும். இஸ்ரேல் யூதர்களின் நிலம் என்னும் மயக்கத்திலிருந்து அந்நாடு வெளிவரவேண்டும். இஸ்ரேலியக் குடிமக்களாக இருக்கும் அனைத்துப் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கு அளிக்கப்படும் அத்தனை உரிமைகளும் அளிக்கப்படவேண்டும்.

பாலஸ்தீனத்தைப்போல் இஸ்ரேலுக்கும் ஓர் அரசியலமைப்புச் சட்டம் இல்லை. ஜனநாயகப் பண்புகள் கொண்ட ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை இஸ்ரேல் உருவாக்கிக்கொள்ளவேண்டும். தீவிர சியோனிய ஆதரவாளர்களைத் தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதைத் தவிர்க்கவேண்டும். சியோனிய ஆதரவாளர்கள் பிளவுகளை அதிகரிப்பவர்கள், அதன்மூலம் அரசியல் லாபம் ஈட்டுபவர்கள். போர் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழிமுறை, ஒரே தீர்வு. பாலஸ்தீனர்களை ஒருபோதும் முழுக்க அழித்தொழிக்க முடியாது என்பதை அவர்கள் உணரப்போவதில்லை. சியோனிசத்தைக் கைவிட்டாலொழிய ஒரு நவீன தேசமாக இஸ்ரேலால் உருமாறமுடியாது.

இவ்வளவு போர்கள் மூண்டபிறகு, இவ்வளவு ரத்தம் சிந்தப்பட்ட பிறகு அமைதி சாத்தியமா? ஆழமான காயங்களையும் அழுத்தமான பிளவுகளையும் கடந்து முன்னோக்கி நகர்வது சாத்தியமா? குறிப்பாக, பாலஸ்தீனர்களால் இஸ்ரேலியர்களின் குற்றங்களை மறக்கமுடியுமா? முடியும், கண்முன் உதாரணம் தென் ஆப்பிரிக்கா என்கிறார் செய்த். வெள்ளையர்களின் நிறவெறியை, இனஒதுக்கலை தென் ஆப்பிரிக்க மக்கள் மறந்துவிடவில்லை. அதே நேரம் அக்குற்றங்களைக் காரணம் காட்டி வெள்ளையர்கள் முற்றாக நம் நிலத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்றும் கோரவில்லை. கடந்த காலத்தை மாற்ற முடியாது, ஆனால் எதிர்காலத்தை நாம் விரும்பியபடி மாற்றியமைக்கமுடியும் என்று நம்பினார்கள். ஓர் ஆணையத்தை உருவாக்கி (உண்மை, நல்லிணக்க ஆணையம்-டிஆர்சி) தங்கள் பாரத்தைக் களைந்து முன்நகர்ந்தனர். கறுப்பினத்தவர், வெள்ளையர் என்று பாகுபாடு காட்டாமல் ஒரு நபர், ஓர் ஓட்டு என்று ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்கினார்கள். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்களுடைய கடந்த காலக் குற்றங்களை, தவறுகளை ஏற்றுக்கொண்டு புதிய கற்பனையைக் கைகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார் செய்த். (Truth and Reconciliation, Al-Ahram Weekly, 14 ஜனவரி 1999).

இறுதியில், சியோனிசம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. முழுக்க, முழுக்க யூதர்களை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு நிலத்தை இஸ்ரேலால் உருவாக்கமுடியவில்லை. இன்னும் பல போர்கள் நடத்தினாலும் பாலஸ்தீனர்களை முற்றாக அவர்களால் அகற்றமுடியாது என்பதுதான் யதார்த்தம். சியோனிசத்தின் பெயரால் தாங்கள் ஏமாற்றப்படுவதைப் பல யூதர்கள் உணரத் தொடங்கிவிட்டதும் சியோனிசத்தை அவர்கள் நிராகரிக்கத் தொடங்கிவிட்டதும் நம்பிக்கையூட்டுகிறது என்கிறார் செய்த்.

பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய கற்பனை தேவைப்படுகிறது என்பதுதான் ஐரோப்பாவை விரிவாக ஆராய்ந்திருக்கும் டோனி ஜட் என்னும் வரலாற்றாசிரியரின் கருத்தும். இஸ்ரேல், மேற்குக் கரை, காசா முனை மூன்றும் சேர்ந்த ஒரு பெரிய நாட்டை செய்த் போன்ற சிலர் கற்பனை செய்திருக்கின்றனர். அந்த ஒரே பெரும் நாடு இஸ்ரேலா பாலஸ்தீனமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயமாக அராபியர்களற்ற இஸ்ரேலாகவோ யூதர்களற்ற பாலஸ்தீனமாகவோ இருக்காது. ஜனநாயகம் உயிர் துடிப்போடு மலர்ந்திருக்கும் நிலமாக அது இருக்கும். ஒருவேளை அது பாலஸ்தீனமாக இருந்தால் எண்ணிக்கையளவில் பெரும்பான்மையினரான அராபியர்கள் சிறுபான்மை யூதர்களைத் தங்களில் ஒருவராகக் கருதி ஏற்றுக்கொள்வர் என்பது செய்தின் நம்பிக்கை.

பாலஸ்தீனமே ஒரு கனவாகத்தான் இன்னமும் நீடிக்கிறது என்றாலும் செய்த் தனது கனவைக் கைவிடுவதற்குத் தயாராக இல்லை. ‘ஒரு பாலஸ்தீனனாக என் மக்களின் பலவீனங்களையும் வீழ்ச்சிகளையும் எப்போதும் நினைவில் வைத்திருக்க முயல்கிறேன்…நீதிக்கான எங்கள் போராட்டத்தின்மீது மேற்குக்கு ஆர்வமூட்டத் தவறிவிட்டோம். ஆனால் எங்களுடைய அரசியல் அடையாளத்தையும் மன உறுதிப்பாட்டையும் கட்டமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன். குறிப்பிடத்தக்க வகையில் மீண்டெழுந்து கொண்டிருக்கிறோம். அதைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க வகையில் தேசிய மறுமலர்ச்சி உணர்வு கொண்டிருக்கிறோம். மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, புவியியல்ரீதியில் நாங்கள் கலைந்தும் சிதறியும் இருந்தாலும், எங்களுடையது என்று சொல்லிக்கொள்ள நிலமென்று ஒன்று இல்லாவிட்டாலும், பாலஸ்தீனம் எனும் உணர்வு எங்களை ஒன்றிணைக்கிறது. ஒதுக்கலும் ஒடுக்குமுறையும் அவை அளிக்கும் அனுபவங்களும் எங்களை ஒன்றிணைக்கின்றன.’

0

எட்வர்ட் செய்தின் படைப்புகள் உலகெங்கும் 30 மொழிகளில் வாசிக்கப்படுகின்றன. அவர் குறித்துக் கிட்டத்தட்ட 50 நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் அவருடைய படைப்புகள் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இறந்தபிறகும் கொண்டாடப்படுகிறார், தாக்கப்படுகிறார், விவாதிக்கப்படுகிறார். பாலஸ்தீனச் சுவர்களில் அவருடைய உருவப்படம் தீட்டப்பட்டிருக்கிறது.

ஒரு நாவலைப் போல் விரியும் செய்தின் வாழ்வில் சுவையான முரண்கள் மிகுந்திருக்கின்றன. அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பிரின்ஸ்டன், ஹார்வர்ட், கொலம்பியா என்று முழுக்க, முழுக்க மேல்தட்டு பல்கலைக்கழகங்களில் பயின்றவர். ஆங்கிலிக்கன் கிறிஸ்தவக் குடும்பத்தால் வளர்க்கப்பட்டவர். ஆனால், வாழ்நாள் முழுக்க பாலஸ்தீனம், இஸ்லாம், அரபுலகம் என்றே எழுதி வந்தததால் அவரை இஸ்லாமியர் என்றே இன்றும் பலர் நம்புகின்றனர். அமெரிக்க, மேற்குலக ஊடக நிறுவனங்களைக் கடுமையாகத் தாக்கியவர். எழுதவும் உரையாற்றவும் வருமாறு அவரை அதிகம் வரவேற்றவர்கள் அதே அமெரிக்க, மேற்குலக ஊடக நிறுவனங்கள்தாம். யூத எதிர்ப்பாளர், இஸ்லாமிய ஆதரவாளர் என்று ஒரு சாராராலும் இஸ்லாமிய எதிர்ப்பாளர், யூத ஆதரவாளர் என்று இன்னொரு சாராராலும் விமரிசிக்கப்பட்டிருக்கிறார்.

அரபுலகைச் சேர்ந்தவர்கள் அவரைத் தங்களில் ஒருவராகக் காண்கின்றனர். ஆனால், செய்துக்கு மிகப் பிடித்த இடம் நியூ யார்க். கொலம்பியப் பல்கலைக்கழகம் என்னை ஈர்த்ததற்கு ஒரு முக்கியக் காரணம் அது நியூ யார்க்கில் அமைந்திருந்ததுதான் என்று சொல்லியிருக்கிறார். அதே இடத்திலிருந்து பணிக்கு அழைப்பு வந்தபோது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். 1963இல் நியூ யார்க்குக்கு வந்தேன். அதன்பிறகு வெளியேறவேயில்லை என்கிறார் செய்த். அமெரிக்காவையும் மேற்குலகையும் வெறுக்க மறுத்ததால் மேற்கத்திய அடிவருடி என்று அழைக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்கா அவரை விரும்பியிருக்கிறது. அமெரிக்க எஃப்பிஐ அவரைச் சிறிது காலம் கண்காணித்திருக்கிறது.

இடதுசாரி என்று அவர் அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் மார்க்சிஸ்ட் அமைப்பு தொடங்கி எதிலும் செய்த் தன்னை இணைத்துக்கொண்டதில்லை. ஓர் அறிவுஜீவி சுதந்தரமாகச் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும் என்பதே அவர் நிலைப்பாடு. அராஃபத்தின் பிஎல்ஓவில் சிறிது காலம் உறுப்பினராக இருந்து பார்த்துவிட்டு வெளியேறிவிட்டார். விலையுயர்ந்த நல்ல ஆடை, நல்ல காலணி என்று மிடுக்கோடு தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். ஒரு மேல்தட்டு மனிதனாக வாழ்வதும் உணர்வதும் அவரைப் பொருத்தவரை தவறில்லை.

வகுப்பறையைப் பொருத்தவரை செய்த் ஒரு பழமைவாதியாகவே இருந்தார் என்கிறார் அவருடைய மாணவரும் நண்பருமான திமோத்தி பிரெனன் (Places of Mind: A Life of Edward Said, 2021). பாடம் மட்டும்தான் எடுக்கவேண்டும், அரசியல் பேசக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். மத்தியக் கிழக்கை அவர் என்றுமே வகுப்பறைக்குக் கொண்டு வந்ததில்லை. வகுப்பறையைப் போராட்டக்களமாக மாற்றுவதிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை. அரசியல் முக்கியம். ஆனால் அதை விவாதிக்கும் இடம் வேறு என்பதுதான் அவர் நிலைப்பாடு.

வியட்நாம் போரின்போது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பரபரப்பான அரசியல் களங்களாக மாறியிருந்தன. எட்வர்ட் செய்த் போர் எதிர்ப்புப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். ஆனால் அவருடைய முதன்மையான கவனம் பாலஸ்தீனமாகவே இருந்தது. வியட்நாமுக்காக அமைக்கப்பட்ட மேடைகளிலெல்லாம் பாலஸ்தீனத்தையும் அவர் நினைவுபடுத்தினார். வியட்நாம் ஒரு காலனி, அமெரிக்காவுக்கு அங்கே வேலையில்லை, அங்கிருந்து விலகவேண்டும் என்றால் பாலஸ்தீனமும் ஒரு காலனிதான். அங்கிருந்தும் இஸ்ரேல் விலகவேண்டும் என்றார்.

அறிவுஜீவிகள் சமரசமற்று இயங்கவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் செய்த். காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருந்த அல்ஜீரியாவையும் வியட்நாமையும் துணிவோடு ஆதரித்துக் குரல் கொடுக்கமுடிந்த சார்தரால் ஏன் பாலஸ்தீனத்துக்காக எழுந்து நிற்கமுடியவில்லை? எது அவரைத் தடுத்தது என்று கேள்வி எழுப்பினார் செய்த். இந்தக் கேள்விக்குப் பின்னாலிருந்தது சார்தர்மீதான கோபமல்ல; உலகையே அறிந்துகொள்ளமுடிந்த ஓர் அறிவுஜீவியால் ஏன் பாலஸ்தீனத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்னும் ஆற்றாமைதான். அரபு நாடுகள் பாலஸ்தீனத்தோடு அணிசேராமல் நின்றபோதும்கூட இதே கேள்வியைத்தான் செய்த் எழுப்பினார். மிக அருகிலிருந்து எல்லாவற்றையும் பார்த்த பிறகும் ஏன் கூச்சப்பட்டு வாய் மூடிக் கிடக்கிறீர்கள்? இது உங்களுடைய போராட்டமும்தான், இல்லையா?

சியோனிசத்துக்கு உலகெங்கும் ஆதரவும் அனுதாபமும் திரண்டிருந்த காலத்தில் அதன்மீது படிந்து கிடந்த புனிதத்தன்மையை ஒற்றை ஆளாகக் கிழித்தெறிந்தார் செய்த். சியோனிசத்தை விமரிசிப்பது குற்றமல்ல என்னும் நம்பிக்கையை அமெரிக்காவில் தோற்றுவித்தார். ஒரு கட்டத்தில், சியோனிசத்தை விமரிசிப்பதுதான் நவீனத்துவம் என்னும் நிலை ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தார் என்கிறார் பிரெனன். மதிப்போடும் மரியாதையோடும் கொண்டாடப்பட்ட பல இலக்கியப் பிரதிகளை அச்சமற்று அணுகவும் கறாராக விமரிசிக்கவும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பண்பாடு, இலக்கிய விமரிசனம், பின்காலனித்துவம் உள்ளிட்ட துறைகளின்மீது பல மாணவர்களின் ஆர்வம் திரும்பியதற்கு செய்த் ஒரு முக்கியக் காரணம். அரபுலகம் குறித்து அவரிடமிருந்து கற்றுக்கொண்டவர்கள் வெறுப்பற்றவர்களாக வளர்ந்தனர். பாலஸ்தீனத்தின் குரலாக மட்டுமே அவரை அடையாளம் காணும் பலருக்கு மொழியியல், தத்துவம், சமூகக் கோட்பாடு உள்ளிட்ட துறைகள் சார்ந்து மூன்று மொழிகளில் செய்த் எழுதியிருக்கிறார் என்பது தெரியாது.

மேற்குலகுக்கு பாலஸ்தீனத்தை அறிமுகப்படுத்தும் பணியை நீண்டகாலம் மேற்கொண்டதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்களோடும் அராபியர்களோடும் நேரடி உரையாடலைத் தொடங்கினார் செய்த். முழுக்க, முழுக்க அரபு வாசகர்களை மனதில் கொண்டு அரபு மொழியில் அவர் எழுதிய பல கட்டுரைகள் பின்னர் ஆங்கிலத்திலும் வெளிவந்தன (Peace and its Discontents, 1995). தி கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ், டான் (பாகிஸ்தான்), கல்ஃப் டைம்ஸ், கெய்ரோ அல்-அஹ்ரம் வீக்லி, அல்-ஹயாத் என்று தொடங்கி உலகெங்கிலுமுள்ள இதழ்களிலும் செய்தித்தாள்களிலும் பாலஸ்தீனம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் நூலாக்கம் பெற்றன (The Politics of Dispossession, 1995; The End of the Peace Process, 2000; From Oslo to Iraq and the Road Map, 2007).

எட்வர்ட் செய்த் இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் எனும் கேள்வியைச் சிலர் இணையத்தில் எழுப்பி விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். 7 அக்டோபர் 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலையும் பதிலடி எனும் பெயரில் இஸ்ரேல் மூர்க்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் பெரும் அழிப்பையும் அவர் எவ்வாறு கண்டிருப்பார்? அமெரிக்காவும் மேற்குலகும் மீண்டும், மீண்டும் இஸ்ரேலின் பக்கம் திரண்டு நிற்பதையும் ஐ.நா தொடங்கி எந்த சர்வதேச அமைப்பாலும் இஸ்ரேலைத் தடுத்து நிறுத்தமுடியாதது குறித்தும் அவருடைய கருத்து என்னவாக இருக்கும்? நடப்பதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அரபுலக நாடுகளை அவர் எவ்வாறு கையாண்டிருப்பார்? ஒற்றை நாட்டில் யூதர்களும் அராபியர்களும் இன்னபிறரும் சேர்ந்து வாழவேண்டும் எனும் கனவை அவர் கைவிட்டிருப்பாரா? தற்போதைய சூழலைக் கணக்கில் கொண்டு தன் பார்வையை அவர் மாற்றிக்கொண்டிருப்பாரா? அவருடைய படைப்புகள் நெடுகிலும் இக்கேள்விகளுக்கான விடைகள் விரவிக்கிடக்கின்றன.

அநேகமாக ஒரு கேள்விக்கு மட்டும் நாம் விடை தேடவேண்டிய தேவையே இருக்காது. இன்று யாருக்காக ஒலித்திருக்கும் அவருடைய குரல்?

0

(இந்து தமிழ் திசையில் ‘என்று தீரும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பகை?’ எனும் தலைப்பில் 18 அக்டோபர் 2023 அன்று வெளிவந்த கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்).

பகிர:
மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *