Skip to content
Home » தமிழ் – தமிழ்நாடு – காந்தியடிகள்

தமிழ் – தமிழ்நாடு – காந்தியடிகள்

தமிழ் – தமிழ்நாடு - காந்தியடிகள்

1896 தொடங்கி 1946 வரையிலான 50 ஆண்டுகளில் – 1896, 1915, 1916, 1917, 1919, 1920, 1921(4), 1925(2), 1927(3), 1929, 1933, 1934, 1936 (2), 1937(4), 1946 (2) எனக் காந்தியடிகள் தமிழகத்துக்கு 26 முறை வந்துள்ளார். தமிழகத்தில் அவரது கால் படாத இடமே இல்லை எனக் கூறும் வகையில் நகரம் தொடங்கி குக்கிராமம் வரை பயணித்துள்ளார். விடுதலைப் போராட்ட ‘அரசியல் பயணம்’ மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டவர்கள் மேம்பாட்டுக்கான ‘ஹரிஜன யாத்திரை’யும் மேற்கொண்டுள்ளார். இவற்றுடன் தமிழ் மொழி தொடர்பான உரைகளும் உண்டு.

காந்தியடிகளின் தமிழக விஜயத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இருப்பினும், சிலவற்றை மட்டும் பார்ப்போம். காந்தியடிகள் – அன்னி பெசண்ட் (காந்தியை ‘அரசியலில் குழந்தை’ என அன்னி பெசண்ட் வர்ணித்தல்); காந்தியடிகள் – ராஜாஜி; காந்தியடிகள் பெரியார்; காந்தியடிகள் – வ வே சு ஐயர் – பரத்வாஜ ஆஸிரமம்; காந்தியடிகள் – வ உ சிதம்பரம் பிள்ளை – ரூ 347.12 அணா); காந்தியடிகள் – மதுரை – வேட்டிக்கு மாறுதல்; காந்தியடிகள் – உ.வே. சாமிநாதய்யர்; காந்தியடிகள் – பாரதியார்.

முதல் வருகை

1896 அக்டோபரில் காந்தியடிகள் முதன் முதலாகத் தமிழகத்துக்கு விஜயம் செய்தார். தென் ஆப்பிரிக்காவில் வாழும் இஸ்லாமியர்கள், பார்சிக்கள், தமிழர்கள், குஜாராத்திகள், வங்காளிகள் ஆகியோர் படும் இன்னல்களுக்குக் குரல் கொடுக்கவும், பொதுநலனைப் பாதுகாக்கவும், ‘தென் ஆப்பிரிக்க நேட்டால் காங்கிரஸ் செயலாளர்’ பொறுப்பில் அப்போது தமிழகம் வந்திருந்தார்.

ஒரு மாத கப்பல் பயணத்தில் தமிழ் மற்றும் உருது மொழிகளைக் கற்பதில் ஆர்வம் செலுத்தினார் காந்தி. தென் ஆப்பிரிக்காவில் சுரங்கத் தொழிலாளர்களாகவும், கூலிகளாகவும், விவசாயிகளாகவும், ஏராளமான தமிழர்கள் இருந்ததால், அவரது பயணத்தில் ‘தமிழ்நாடு’ முக்கியம் பெறுகிறது. தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்த ஆயிரக் கணக்கில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்துத் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விநியோகித்தார். அதற்குப் பச்சை அட்டை போட்டிருந்ததால் ‘பச்சை அட்டை’ எனப் பெயர் பெற்றது.

1896 அக்டோபர் 26ஆம் தேதி சென்னை பாரிமுனையிலுள்ள பச்சையப்பன் மண்டபத்தில், நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். தென் ஆப்பிரிக்காவுக்குப் பிழைக்கப் போன தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும், இனவெறித் தாக்குதல்களும், காந்தியடிகள் மூலம்தான் அப்போது வெளிச்சத்துக்கு வந்தன. தமிழகத்தில் இதுவே காந்தியடிகளின் கன்னிப் பேச்சு; எனினும் கனிந்த பேச்சாகத் திகழ்ந்தது. சென்னையில் பதினோரு நாள்கள் தங்கியிருந்த காந்தியடிகள் பல்வேறு இடங்களில் உரையாற்றினார். தமிழ் படிக்கத் தெரியாவிட்டாலும் தென் ஆப்பிரிக்கத் தமிழ் நண்பர்களுக்காக ஐந்து தமிழ்ப் புத்தகங்கள் வாங்கினார். திருக்குறளைத் தமிழிலேயே படிக்க வேண்டும் என்பதற்காகக் கொஞ்சம் தமிழ் கற்றுக் கொண்டார்.

மீண்டும் 1915இல் இந்தியா திரும்பிய காந்தியடிகள் அதற்குப் பின் இங்கேயே தங்கிவிட்டார். அதே ஆண்டு அவர் சென்னைக்கும் வந்தார். 1915 ஏப்ரல் 27 அன்று காந்திஜிக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்துக்கு வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி தலைமை தாங்கினார். தனது நன்றி உரையில் தென் ஆப்பிரிக்கத் தமிழர்களான பாலசுந்தரம், தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகியோரின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.

இந்து மற்றும் சுதேசமித்திரன் பத்திரிக்கைகளைத் தொடங்கிய தேசபக்தர் ஜி. சுப்பிரமணிய ஐயர் வீட்டுக்கு ஜி.ஏ. நடேசன், வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி ஆகியோருடன் சென்று உடல்நலம் விசாரித்தார். பம்மல் சம்மந்த முதலியாரின் சுகுண விலாஸ் சபையில் ‘ஹரிச்சந்திரா’ நாடகம் பார்த்தார். தென் ஆப்பிரிக்காவில் காலமான வீராங்கனை வள்ளியம்மையின் சொந்த ஊரான தில்லையாடிக்குச் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தமிழர்கள் முதன் முதலில் தந்த ‘மகாத்மா’ பட்டம்

காந்தியடிகளுக்கு மகாத்மா என்னும் பட்டத்தை ரவீந்திரநாத் தாகூர் 1915 ஜனவரி 21இல் வழங்கினார் என்பதே பொதுவான கருத்து. ஆனால் அதற்கு முன்பே 1912 டிசம்பர் 24ஆம் தேதி ‘சுதேசமித்திரன்’ நாளிதழ், ‘மிஸ்டர் காந்தி ஒரு மகாத்மாவோ, ஈஸ்வர அவதாரமோ என உலகோர் நினைக்கும்படி தென் ஆப்பிரிக்க இந்தியரின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று தீக்ஷை செய்து கொண்டிருக்கிறார்’ என்று தலையங்கம் தீட்டியுள்ளது. எனவே காந்தியடிகளுக்கு ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை முதன் முதலில் அளித்துப் பெருமைப்படுத்தியது தமிழர்களே.

காந்தியடிகள் – பெரியார்

காந்தியடிகள் குறித்து பெரியார் குறிப்பிடுகையில் ‘1912இல் காந்தியடிகள் எங்கள் ஈரோடு வீட்டுக்கு வருகை தந்தார். அப்போதுதான் அவரை முதன் முதலில் சந்தித்தேன். எனக்கு இரு முறை கடிதம் எழுதியுள்ளார். காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கை வெற்றி பெற என்னுடைய தென்னந்தோப்பில் இருந்த தென்னைகளை வெட்டினேன். பின்னாளில், பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன், தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சட்ட மறுப்புப் போராட்டத்தை நிறுத்த வேண்டுமென நிபந்தனை விதித்தபோது ‘இதை நிறுத்துவது என் கையில் இல்லை. ஈரோட்டு ராமசாமியின் தங்கை, மனைவி ஆகியோர் கையில் இருக்கிறது’ என்று காந்தியடிகள் பதிலளித்து எங்கள் குடும்பத்தைப் பெருமைப்படுத்தினார்’ என்றார்.

காந்தியடிகளும் – வ.உ. சிதம்பரம் பிள்ளையும்

சிறைத் தண்டனைக் கொடுமைகளும், வழக்கறிஞர் தொழிலுக்கான சன்னது பறிமுதலும் வ.உ.சியைக் கடுமையாகப் பாதித்தன. வ.உ.சிக்கு உதவும் பொருட்டுத் தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் நேரடியாகவும், காந்தியடிகள் மூலமாகவும் பண உதவி செய்தனர். குறிப்பாக 347 ரூபாய் 12 அணா திரட்டி வ.உ.சியிடம் கொடுப்பதற்காக காந்தியடிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காந்தியடிகள் அப்பணத்தை வ.உ.சிக்குத் தாமதமாகவே அனுப்பி வைத்தார். 1915 ஏப்ரல் 20 அன்று ஜார்ஜ் டவுன், தம்பு செட்டித் தெருவிலுள்ள, ஜி.ஏ. நடேசன் வீட்டில் இருவரும் சந்தித்தனர். சில மாதங்கள் கழித்து வ.உ.சி. தனக்குக் காந்தியடிகள் பணத்தை அனுப்பியதை ‘ஸ்ரீமான் காந்தியவர்களிடமிருந்து ரூ 347-12-0 வந்தது’ எனத் தென் ஆப்பிரிக்க நண்பர் வேதியப் பிள்ளைக்குக் கடிதம் (4/2/1916) மூலம் உறுதிப்படுத்தினார்.

காந்தியடிகள் – அன்னி பெசண்ட்

அயர்லாந்தைச் சேர்ந்த அன்னி பெசண்ட் நாடறிந்த விடுதலைப் போராட்ட வீரர் என்றாலும், அவரது ‘ஹோம் ரூல்’ இயக்கம், ‘பிரம்ம ஞான சபை’ மற்றும் ‘காமன் வீல்’ மற்றும் ‘நியூ இந்தியா’ பத்திரிக்கைகள் சென்னையைத்தான் தலைமை இடமாகக் கொண்டு இயங்கின. இதனால் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட அன்னி பெசண்டுக்கு இங்குள்ள மக்களிடையே ஆதரவும், செல்வாக்கும் அதிகம். சென்னை அடையாறு அருகே அவரது நினைவாக அமைத்துள்ள ‘பெசண்ட் நகர்’ இதற்குச் சான்றாகும். காந்தியடிகள் பிரபலமாவதற்கு முன்பே 1917 காங்கிரஸ் மாநாட்டில் ‘தலைவராகத்’ தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்னி பெசண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 1916இல் காந்தியடிகள் காசி இந்து பல்கலைக்கழக விழாவில் ‘ஹிம்சை வழியை விடுத்து அஹிம்சை வழியில்’ நாட்டு விடுதலைக்குப் போராட்ட வேண்டும் என்று பேசினார். ஆனால் ‘வன்முறையைக்’ கையாள வேண்டுமென காந்தி பேசியதாகத் தவறாக அர்த்தம் புரிந்து கொண்ட அன்னி பெசண்ட் அவரது பேச்சைப் பாதியிலேயே நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. சென்னை அன்னி பெசண்டின் வசிப்பிடம் என்பதால், காசி கூட்டத்தில் காந்தியடிகள் – அன்னி பெசண்ட் கருத்து மோதலுக்குச் சென்னைப் பத்திரிக்கைகள் அதிக முக்கியத்துவம் அளித்தன.

அன்னி பெசண்ட் சென்னையிலிருந்து வெளியாகும் தனது ‘நியூ இந்தியா’ பத்திரிக்கையில் காசி கூட்டம் குறித்து விவரிக்கையில் கந்தியடிகளை ‘அரசியல் விவகாரங்களில் ஒரு குழந்தை’ என்றும் ‘அறியாத புரியாத உலகில் நடமாடும் கற்பனைவாதி’ என்றும் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காந்தியடிகளை விடவும் அன்னி பெசண்ட் இருபது ஆண்டுகள் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் என்பதுடன் காங்கிரஸின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். எனினும் அப்போதுதான் விடுதலைப் போராட்டத்தில் புதிதாகக் களமிறங்கிய காந்தியை ‘குழந்தை’ எனக் கூறியதைத் தமிழக மக்களின் ஒரு சாரார் ஏற்கவில்லை.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. கூட்டத்தில் காந்தி பேசியபோது ஒருவர் ‘காசி நிகழ்ச்சி பற்றி விளக்க வேண்டும்’ என்று சீட்டு அனுப்பினார். அதற்கு காந்தி ‘அந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. பாலத்துக்குக் கீழே தண்ணீரைப்போல் வரும், போகும்’ என்று சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். எந்த காந்திஜியை ‘அரசியலில் குழந்தை’ என அன்னி பெசண்ட் வர்ணித்தாரோ அதே காந்தியின் பதிலைக் கண்டு நெகிழ்ந்து அவரை ‘தீர்க்கதரிசியும் அரசியல்வாதியும்’ என்ற தலைப்பில் மகுடம் சூட்டிப் பாராட்டினார். ஆனால் இத்துடன் பிரச்னை தீராமல் தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொணடே இருந்தனர். இரு பெரும் தலைவருக்கு இடையே பத்திரிக்கைகள் வாயிலாக நடைபெற்ற கருத்து மோதல் தமிழகக் களத்தில் நடைபெற்றது கவனிக்கத் தக்கது.

காந்தியடிகள் – ராஜாஜி

அன்னி பெசண்ட் – காந்தியடிகளுக்குள் நிலவிய கருத்து மோதல் சூழல்தான் தமிழகத்தில் ராஜாஜி என்னும் அரசியல் கிளை நதி, காந்தியடிகள் என்னும் அரசியல் பெரு நதியுடன் கலக்கும் வாய்ப்பைத் தந்தது. காந்தியடிகளைக் ‘குழந்தை’ என வர்ணித்த அன்னி பெசண்டைக் கடுமையாகக் கண்டித்து ராஜாஜி எழுதிய கடிதம் ‘இந்து’ நாளிதழில் 1916 டிசம்பர் 12இல் வெளியானது. காசிக் கூட்டத்தில் மேடையிலிருந்த மதன் மோகன் மாளவியாவும், ‘காந்தியடிகள் தவறாக எதுவும் பேசவில்லை’ என அன்னி பெசண்டின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

சென்னையில் உதித்த சத்தியாக்கிரகப் போராட்ட யுக்தி

ரௌலத் சட்டத்தை எதிர்த்துச் ‘சத்தியாகிரக’ முறையில் போராடும் முடிவை எடுத்த காந்தியடிகள், நாடு முழுவதும் அதுபற்றி விளக்கவும், ஆதரவு திரட்டவும் பயணித்தார். அதன் ஒரு பகுதியாக 1919 மார்ச் 18இல் சென்னை வந்திறங்கிய காந்தியடிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று மாலை சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்டக் கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். அக்கூட்டத்தில் வ.உ. சிதம்பரம் பிள்ளை தமிழிலும், ஹரி சர்வோதம ராவ் தெலுங்கிலும், மதுரை ஜார்ஜ் ஜோசஃப் ஆங்கிலத்திலும் பேசினார்கள்.

ரௌலத் சட்டத்தை எதிர்க்கும் நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளச் சத்தியாகிரகச் சபைகள் நிறுவப்பட்டன. இது தொடர்பான அறிக்கை 1919 மார்ச் 23 அன்று சென்னையிலிருந்தே இந்தியா முழுமைக்கும் அனுப்பப்பட்டது. சென்னையில் காந்திஜியையே தலைவராகக் கொண்டு சத்தியாகிரக சபை அமைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் புது திருப்பத்தையும், உத்வேகத்தையும் இந்தச் சத்தியாகிரகப் போராட்ட யுக்தி ஏற்படுத்தியது.

காந்தியடிகள் தங்கியிருந்த பங்களா சென்னைக் கதீட்ரல் சாலையிலுள்ள இந்து பத்திரிக்கை ஆசிரியர் கஸ்தூரி ரங்க ஐயங்காருடைய ‘திலகர் பவன்’ இல்லமாகும். இராஜாஜியும் இங்கே குடியிருந்து கொண்டுதான் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இந்தப் பெருமைமிகு இல்லத்தில்தான் காந்தியடிகளுக்கு ஒரு நாள் விடியற்காலை சத்தியாகிரகப் போராட்டம் தெய்வீகக் கனவாகத் தோன்றியது.

தமிழக மண்ணில் காந்திஜி கண்ட இந்தச் சத்தியாகிரகக் கனவு பலித்ததுடன், இந்தியா முழுவதும் பரவி உலகின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இராஜாஜியுடனான பழக்கம் பின்னாளில் சம்மந்தியாகவும், ‘எனது மனசாட்சி’ என்று கூறும் அளவுக்கு நெருக்கமாகவும், வழிவகுத்தது. சென்னையிலுள்ள இந்த பங்களாதான், இப்போது ‘வெல்கம் ஹோட்டல் – சென்னை’ (பழைய பெயர் சோழா ஷெராடன்) என்னும் ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாறியுள்ளது.

காந்தியடிகள் – பாரதியார்

இந்த பங்களாவுக்கு இன்னொரு வரலாற்றுச் சிறப்புமிக்க விசேஷமும் உள்ளது. காந்தியடிகளுக்கும், பாரதியாருக்கும், எழுத்தால் ஏற்கெனவே பரஸ்பர அறிமுகம் இருந்தாலும், முதன் முதலில் இருவரும் சந்தித்துக் கொண்டது மேற்கூறிய பங்களாவில்தான். அப்போது, மகாதேவ் தேசாய், வ. ராமசாமி (வ.ரா), இராஜாஜி, சத்யமூர்த்தி, சுதேசமித்திரன் ஆசிரியர் ரங்கசாமி ஐயங்கார் ஆகியோர் உடனிருந்துள்ளனர். தேதி 1919 மார்ச் 21-23 இருக்கக் கூடும்.

பாரதியார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தான் பேசவிருந்த கூட்டத்துக்குக் காந்தியடிகள் தலைமை வகிக்க முடியுமா என்று கேட்டார். காந்தியடிகள் அன்று வேலை இருப்பதால் மறுநாள் ஒத்தி வைக்க முடியுமா எனக் கேட்டார். அதற்குப் பாரதி ஒத்தி வைக்க இயலாது எனக் கூறியதுடன், காந்தி தொடங்கவிருக்கும் இயக்கத்தை ஆசீர்வதிப்பதாகவும் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். வந்தவர் யாரென காந்தியடிகள் வினவ, ‘எங்கள் தமிழ்நாட்டுத் தேசியக் கவி’ என்று இராஜாஜி கூற, ‘இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’ எனக் காந்தி சொன்னதாக உடனிருந்த வ.ரா. விவரிக்கிறார்.

முழங்கால் வேட்டிக்கு மாற்றிய தமிழகம்

காந்திஜி எல்லா குஜராத்திகளைப் போலவும் தலைப்பாகை, கோட்டு, சூட் அணிவதுதான் வழக்கம். பின்னாளில் எட்டு முழ வேட்டியும், முழுச் சட்டையும், அங்கவஸ்திரமும் அணியத் தொடங்கினார். 1921 செப்டம்பர் 20-22 வரை மதுரையில் தங்கியிருந்தார். ரயில் அதிகாலை சோழவந்தானைக் கடந்து சென்ற போது, ஜன்னலுக்கு வெளியே விவசாயிகள் சட்டை இல்லாமல் இடுப்பு வேட்டியுடன் வேலைக்குச் செல்வதைப் பார்த்தார். வட நாட்டு விவசாயிகள் அணியும் மேல்சட்டையைக் கூடத் தமிழக விவசாயிகள் அணியாதது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்தியர்கள் அனைவரும் நன்கு ஆடை உடுத்தும் வரை தானும் மேல் சட்டை அணிவதில்லை என்ற முடிவுடன் முழங்கால் வரையில் வேட்டியைத் தார்ப்பாய்ச்சி முறையில் அணியத் தொடங்கினார். சாகும் வரை முழங்கால் வேட்டியுடனேயே பயணித்தார். இதே அரை ஆடையையுடன் 1931இல் இலண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்குச் சென்ற காந்தியடிகளை ‘அரை நிர்வாணப் பிச்சைக்காரன்’ என்று கிண்டலடித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

காந்தியடிகள் – வ.வே. சுப்பிரமணிய ஐயர்

சுதேசிக் கல்வியைப் பரப்பும் பொருட்டு சேரன்மாதேவியில் ‘பரத்வாஜ ஆசிரமம்’ என்ற பெயரில் வ.வே.சு. தொடங்கிய குருகுலத்தில் எல்லா சாதி மாணவர்களும் பயின்றார்கள். அவரும் சரி, அவரது சொந்த மகன் வ.வே.சு. கிருஷ்ணமூர்த்தியும் சரி, தனிப் பந்தியின்றிப் பிற மாணவர்களுடன் சமமாகவே அமர்ந்து உணவு உண்டனர். ஆனால் நிதி உதவி அளித்தவர்களின் நிர்பந்தம் காரணமாக வேறு இரு பிராமண மாணவர்களுக்குப் போடப்பட்ட தனிப்பந்தி சர்ச்சைக்குக் காரணமானது.

வரதராஜுலு நாயுடு, திரு வி. கல்யாணசுந்தர முத்லியார், ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆகியோர் வ.வே.சு. ஐயரின் தனிப்பந்திக்கு எதிராகக் களமிறங்கினார்கள். இராஜாஜி, டி.எஸ்.எஸ். ராஜன் உள்ளிட்ட பிராமணத் தலைவர்களும் தனிப் பந்தி விவகாரத்தை ஒப்புக் கொள்ளவில்லை. விவகாரம் காந்தியடிகள் வரை சென்றது. வைக்கத்திலிருந்து காந்தியடிகள் சென்னைக்கு வந்து 1925 பங்குனி 11 அன்று விவாதித்தார். ஆனாலும் சமரசம் ஏற்படவில்லை.

காந்தியடிகளே நேரடியாக விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் கேட்டும் வ.வே.சு. முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தனது நேர்மையையும், சாதிப் பாகுபாடு பார்ப்பதாகவும், சந்தேகிக்கிறார்களே என வ.வே.சு. வருந்தினார். இதற்கிடையே பாபநாசம் அருவியில் கால் இடறி விழுந்து வ.வே.சு. ஐயர் காலமானார். அவருடைய தன்னலமற்ற சேவையையும், தியாக உணர்வையும் பாராட்டி அவரது மறைவுக்குக் காந்தியடிகளும், ஈ.வே.ராவும் இரங்கல் செய்தி வெளியிட்டனர்.

காந்தியடிகள் – உ வே சாமிநாதய்யர்

1937 மார்ச் மாதம் சென்னை இந்திப் பிரச்சார சபையில் பாரதிய சாகித்ய பரிஷத்தின் இரண்டாவது மாநாடு காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் சொற்பொழிவாற்றினார். அவரது சொற்பொழிவைக் கேட்டுப் பூரித்த காந்தியடிகள் தனது உரையில் ‘சாமிநாதய்யர் காலடியின் கீழிருந்து தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வம் உண்டாகிறது’ என நெகிழ்ந்தார்.

கடைசி வருகை

1896இல் முதன் முதலாகத் தமிழகம் வந்த காந்திஜி கடைசியாக வந்தது 1946 ஜனவரி 21 அன்று. சென்னை இந்தி பிரசார சபை வெள்ளி விழா, ஹரிஜனங்கள் ஆலயப் பிரவேசம் செய்த மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில், பழநி ஸ்ரீ பழநியாண்டவர் கோயில் எனத் தமிழகத்திலுள்ள பல்வேறு ஊர்களுக்குச் சென்றார். 1946 பிப்ரவரி 4 அன்று சென்னையை விட்டுக் கிளம்பினார். இதுவே தமிழகத்தில் காந்தியடிகளின் கடைசிப் பயணமாக அமைந்தது.

0

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *