Skip to content
Home » காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி : ஒரு பார்வை – ஜார்ஜ் ஆர்வெல்

காந்தி - ஜார்ஜ் ஆர்வெல்

தன்னை அப்பாவி என்று நிரூபணம் செய்யும் வரை எல்லாத் துறவிகளும் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். நபருக்குத் தகுந்தாற்போல் அவர்கள் பரிசோதிக்கப்படும் முறைகள் மாறுபட்டாலும் நடைமுறை இதுதான். காந்தி விஷயத்தில், அவரைப் பற்றி, தெரிந்த ஒருவர் கீழ்க்காணும் கேள்விகளை கேட்க விரும்புவார்:

‘காந்தி எந்த அளவு தற்பெருமைக்கு ஆட்பட்டிருந்தார்? அரை நிர்வாண ஆடை அணிந்து, பவ்வியமாய் பிரார்த்தனை விரிப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவரால் எப்படித் தன் தெய்வீக சக்தியைக் கொண்டு பேரரசுகளைக் கட்டுப்படுத்த முடிகிறது? அரசியலில் நுழைவதற்காக எந்த அளவு தன் சொந்தக் கொள்கைகளை காந்தி சமரசம் செய்து கொண்டார்? அந்தக் கொள்கைகளில் வற்புறுத்தலுக்கும் மோசடிக்கும் இடைப்பட்ட குணங்கள் எவையெவை?’

காந்தியின் எழுத்துகளையும் சொந்த வாழ்வையும் ஊன்றி கவனித்த ஒரு சிலரால் மட்டுமே இதற்கான சரியான விடையைச் சொல்ல முடியும். அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் புனிதப் பயணம் போன்று அமைவதால், ஒவ்வொரு நிகழ்வும் அதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

தனது சுயசரிதையில் 1920கள் வரையிலான தன் வாழ்வை வெளிச்சமிட்டு காண்பிக்கிறார். காந்தி சொல்வதுபோல் அவர் வாழ்வின் இருண்ட பக்கங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இப்போது துறவுகோலம் பூண்டிருக்கும் காந்தி என்ற மனிதருக்குள் மிகப் புத்திக்கூர்மை வாய்ந்த ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை அந்நூலில் நினைவுகூர்கிறார். ஒருவேளை காந்தி நினைத்திருந்தால் வெற்றிகரமான வக்கீலாகவோ, ஆளுமை நிறைந்த நிர்வாகியாகவோ குறைந்தபட்சம் ஒரு தொழிலதிபராகவோ ஜொலித்திருக்க முடியும்.

எசகுபிசகாய் அச்சிடப்பட்ட இந்திய இதழ்களில் காந்தியின் சுயசரிதை வெளிவரத் தொடங்கிய காலமது. தொடக்கத்தில் அதன் சில அத்தியாயங்களை வாசித்த ஞாபகம் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு அப்போது காந்திக்கே தோன்றாத நல்ல அபிப்பிராயம் அதன்மேல் உருவாகியிருந்தது.

காந்தி என்றதும் நினைவுக்கு வருபவை: கைத்தறி நூற்பும் ஆன்ம சக்தியும் சைவ உணவுப் பழக்கமும்தான். ஆனால் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. காந்தியின் இடைப்பட்ட எண்ணவோட்டங்கள் பின்தங்கிய, பசியால் வாடும், மக்கள் திரள் மிகுந்த நாட்டில் நிச்சயமாய் சாத்தியப்படாது. பிரிட்டிஷார் அவரைப் பயன்படுத்திக் கொண்டார்கள் அல்லது பயன்படுத்திக் கொள்வதாய் நினைத்துக் கொண்டார்கள் என்பது வெளிப்படையாய் தெரிந்தது.

ஒவ்வொரு தேசாபிமானிக்கும் காந்தி எதிரியாகத் தெரிந்தார். எப்பேர்ப்பட்ட நெருக்கடி நிலையிலும் வன்முறையைத் தடுப்பதற்கு முடிந்தவரை போராடினார். செயலூக்கம் உடைய எல்லா முயற்சிகளையும் முறியடித்து, ‘இவர் நம்மவர்’ என்று பிரிட்டிஷார் யோசிக்கும்படி காந்தி நடந்துகொண்டார். இது ஒருவாறு கீழான முறையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்திய லட்சாதிபதிகளும் அப்படியே நடந்து கொண்டார்கள். மனந்திரும்பி வாருங்கள் என்று காந்தி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களும் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட்களை விட காந்திமேல் அதிக பிரியம் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு கிடைத்தால் தங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடவும் தயாராய் இருந்தார்கள். காந்தியின் கணக்கு எத்தனை நாளுக்கு நீடிக்கும் என்பது சந்தேகம். காந்தியே சொல்வதுபோல், ‘ஏமாற்றுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.’

என்ன நடந்தாலும் அவர் மென்மையாய் கையாளப்பட்டார். ஒருவேளை காந்தியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தியல் காரணமாய் பிரிட்டிஷார் காய் நகர்த்தியிருக்க வாய்ப்பு உண்டு. 1942ல் நடந்த அகிம்சைப் போராட்டத்தை வேறு வழியில் மடைமாற்றிய போதுதான் கன்சர்வேடிவ் கட்சியினர் காந்தி மேல் கோபப்பட்டனர்.

ஆனால் அவரைப் பற்றி எள்ளலாக மறுத்துப் பேசிய பிரிட்டிஷ் அதிகாரிகளும் ஒரு கட்டத்திற்கு பின் அவரை விரும்பி ரசித்ததை என்னால் பார்க்க முடிந்தது. அவர் விலை போனவர் என்றும், அற்ப விஷயங்களுக்குப் பேராசை கொண்டவர் என்றும் யாரும் சொன்னது கிடையாது. அவரது செயல்பாடுகள் பயத்தினாலோ தீமையினாலோ விளைந்தவை அல்ல.

காந்தியைப் போன்ற ஒரு மனிதரை எடைபோடுவதில், இயல்பாகவே நாம் உயர்தரக் கற்களை தராசில் ஏற்றுகிறோம். இதனால் அவரிடம் உள்ள நற்பண்புகள் நம் கண்பார்வையில் இருந்து மறைந்து விடுகின்றன.‌ அவரது இயற்கையான தைரியம் பொருந்திய உடலைப் பற்றி சுயசரிதையில் சில குறிப்புகள் கிடைக்கின்றன. பிற்காலத்தில் காந்தி இறந்த விதம் அதற்கு விளக்கமாய் இருந்தது. ஏனென்றால் அவரைப் போல் மதிப்புமிக்க மனிதரின் உடலுக்கு இன்னும் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

இ.எம்.‌ஃபார்ஸ்டர் தனது ‘A Passage to India’ எனும் நூலில் குறிப்பிடுவது போல் பிரிட்டிஷாரின் பாசாங்குத்தனத்தால் இந்தியாவை வீழ்த்துகிறார் என்ற சித்திரிப்பில் இருந்து காந்தி இப்போது மீண்டதாய் தெரிகிறது. நேர்மை கெட்ட மனிதர்களை பார்த்த மாத்திரத்திலேயே அவரால் அடையாளம் காணமுடிந்தது என்றாலும் நம்பிக்கையானவர்களை இனம் காண்பதிலும் சிரத்தையோடு இருந்தார் எனச் சொல்ல முடியும்.

ஏழைமையான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான். வாழ்க்கை அவர் விரும்பியபடி அமையவில்லை. வெளிப்புறத் தோற்றமும் சொல்லிக்கொள்ளும்படி ஈர்ப்புடன் இருக்காது. ஆனாலும் அவர் தாழ்வு மனப்பான்மையிலோ பொறாமையிலோ மனம் வெதும்பவில்லை. தென்னாப்பிரிக்காவில் நடந்த நிறத் துவேஷ சம்பவம், காந்தியின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

நிறத் துவேஷத்தை எதிர்த்து சண்டை செய்யும்போதுகூட, மக்களை இனம் அடிப்படையிலோ அந்தஸ்து அடிப்படையிலோ பாகுபடுத்தி பார்க்கவில்லை. மாகாண ஆளுநரும், பஞ்சு உற்பத்தி செய்யும் லட்சாதிபதியும், அரைப் பட்டினி கிடக்கும் திராவிடக் கூலித் தொழிலாளியும் அவருக்கு ஒன்றுதான். இங்கு அவரின் விசித்திரமான குணமொன்றைச் சொல்லியே தீர வேண்டும். தென்னாப்பிரிக்காவில் இந்திய சமூகத்தின் மீட்பராய் தன்னை அடையாளப்படுத்தினாலும், அவருக்கு பல ஐரோப்பிய நண்பர்கள் இருந்தார்கள்.

சின்னச் சின்ன பத்திகளில் தொடராக எழுதினாலும், அவரது சுயசரிதை சொல்லிக்கொள்ளும்படியான இலக்கியப் படைப்பு அல்ல. இருந்தும் அதன் பொதுவான தன்மை நம்மை ஈர்க்கிறது. இளமைத் ததும்பும் இந்திய மாணவனாக இருந்தபோது காந்தியின் லட்சியம் சராசரியாய் இருந்தது. ஏதோ ஒரு கட்டத்தில் பிடித்தோ பிடிக்காமலோ, சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் காந்தி தன்னை தீவிரமாய் வார்த்துக் கொண்டார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஐரோப்பிய கலாசாரத்தை உள்வாங்கிக் கொள்ளும் பொருட்டு உருண்டைத் தொப்பி அணிந்து, நடனம் ஆடக் கற்றுக்கொண்டு, பிரெஞ்சு லத்தீன் மொழிகளை ஆர்வமாய்ப் படித்து, ஈபிள் டவருக்கு சென்ற காலமெல்லாம் காந்தியின் வாழ்க்கையில் இருந்திருக்கிறது. பால்யத்திலேயே ஆன்மிகக் குறி கண்ட அதிசயத் துறவியாகவோ, பரபரப்பான உலகியல் வாழ்வில் இருந்து வெறுத்துப்போய் துறவறம் பூண்ட இடைநிலை சாமியாராகவோ காந்தியை நாம் அடையாளப்படுத்த முடியாது.

வாலிபத்தில் செய்த எல்லாக் குற்றங்களையும் காந்தி ஒப்புக்கொள்கிறார். உண்மையில் ஒப்புக்கொள்ளும்படி அவை அதிகம் இல்லை. காந்தி இறந்தபோது அவரது உடைமைகளை ஒன்றுதிரட்டி எடுத்த புகைப்படம்தான் புத்தகத்தின் அட்டைப்படமாய் இருக்கிறது. மொத்தப் பொருட்களையும் சேர்த்தால் ஐந்து யூரோக்களுக்கு வாங்கிவிடலாம். அவரது சதைப்பிண்டமான பாவங்களும் இதே அளவுள்ள ஒரு குவியலுக்குள் அடங்கிவிடும்.

சில சிகரெட்டுகள், உண்டுசெறித்த மாமிசத் துண்டுகள், சிறு வயதில் வேலைக்காரியிடம் இருந்து திருடிய சில்லறைக் காசுகள், பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு இரண்டு முறை சென்று வருதல் (இரண்டு முறையும் காந்தி நெறிதவறாமல் அப்படியே திரும்பிவிட்டார்), ஒருமுறை பிளைமவுத்தில் வீட்டு உரிமையாளரிடம் இருந்து தப்பி ஓடுதல், ஒரேயொரு முறை பொறுமை இழந்து வெடித்துப் பேசுதல் என அவர் செய்த பாவங்கள் மிகவும் சொற்பம்தான்.

குழந்தையில் இருந்தே ஆர்வமோடு சூட்டிப்பாக இருந்த காந்தி, மதத்தைத் தழுவி ஆச்சாரமாய் வளர்ந்தார் என்பதைக் காட்டிலும் தன்போக்கில் சீரான நெறிமுறையில் வளர்ந்தார் எனச் சொல்ல வேண்டும். முப்பது வயதை நெருங்கும்வரை தனக்கான பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. பெயர் சொல்லும்படியான பொது வாழ்வு பிரவேசம் ‘தீவிரமான சைவ’ உணவிலிருந்து தொடங்கியது. காந்தியின் அடிப்படையான குணாதிசயங்களுக்குள் ஊடுறுவி பார்த்தால், நடுத்தர வணிகரின் எண்ணவோட்டங்கள் எட்டிப்பார்க்கும். இது அவரின் மூதாதையார் மூச்சுக்காற்று.

தன் சொந்த விருப்பு வெறுப்புகளைத் துறந்தபோதும், வளப்பம் பொருந்திய வாய்த்திறம் வாய்த்த வக்கீலாகவும்; நெஞ்சுரம் வாய்ந்த அரசியல்வாதியாகவும்; வரவு செலவில் கஞ்சனாகவும்; கமிட்டிகளைக் கையாளும் திறன்படைத்தவராகவும்; வாடிக்கையாளரை தேடிச் சளைக்காத பத்திரிகையாளராகவும் அவர் மிளிர்வதை உணரமுடிகிறது.

காந்தி ஓர் அசாதாரண மனிதர். நீங்கள் விரல்விட்டுச் சொல்லிடும்படி எந்தவொரு குறையும் அகப்படாது. காந்தியை மிகத் தீவிரமாய் எதிர்ப்பவர்கள் கூட, வெறுமனே தன் இருப்பால் இந்த உலகத்தை மாற்றிவிட்ட ஆச்சரியமிக்க மனிதர் என்று ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

அவர் அன்பாக இருந்தாரா இல்லை மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் போதனை தந்தாரா என்பதெல்லாம் இப்போது வரை நான் முழுமையாய் உணரவில்லை. மேற்குலகின் இடதுசாரி அரசியலில் அனுதாபம் கொண்ட முகமாய் காந்தி வளர்ச்சி அடைந்தார். இரண்டறக் கலந்த காந்தியைப் பற்றி பேசுவது அங்கு தவிர்க்க முடியாத வழக்கமானது.

காந்தியின் நடுமைவாதத்தையும் வன்முறை குறித்த பார்வையையும் மனத்தில் வைத்துக் கொண்டு அராஜகவாதிகளும் சமாதானவாதிகளும் தனக்கு தனக்கு என்று போட்டிப் போட்டுக் கொண்டார்கள். அவரின் பிற உலகார்ந்த கொள்கைகளும், மனித விரோத போக்கையும் பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை.

ஆனால் காந்தியின் கொள்கைபடி, வாழத் தகுதியான இந்தப் பூமியில் தன் விருப்பப்படி வாழலாம் என்பதும், மனிதன் ஒருவனே‌ எல்லாச் செயல்களுக்கும் காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனை என்பதை ஒருவர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கண்ணுக்குத் தெரியாத கடவுள் இருக்கிறார் என்றும்; திடமான பொருட்களின் மீது வசீகரிப்படாமல் உலகியல் மாயையிலிருந்து உயிர் பிழைக்கவேண்டும் என்றும் அவர் போதித்தார். மனிதக் குலத்திற்கோ கடவுளுக்கோ சேவை செய்ய விரும்புபவன் இன்னின்ன ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று காந்தி விதித்திருந்தார். ஆனாலும் இதை அப்படியே அவர் சீடர்கள் பின்பற்ற வேண்டுமென்று காந்தி கட்டாயப்படுத்தவில்லை.

முதலில் மாமிசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. விலங்குகளிடம் இருந்து பெறப்படும் உணவை எந்தவகையிலும் உட்கொள்ளக் கூடாது. (ஆனால் பால் அருந்துவதில் காந்தி சமரசம் செய்ய வேண்டியிருந்தது. இதை அவர் பின்னடைவாகவே கருதினார்.) மது அருந்துவதும், புகையிலை பிடிப்பதும் கூடாது. மசாலா பொருட்களும் வாசனை வஸ்துக்களும் பயன்படுத்தக் கூடாது. பலத்தை பாதுகாக்க உணவு உண்ண வேண்டுமே தவிர, நாச் சுவை சுரப்பிகளை உசுப்பிவிடும்படி உண்ணக்கூடாது.

இரண்டாவதாய் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை நடந்தால், பிள்ளை பெறுவதற்காக மட்டுமே ஒன்றுகூட வேண்டும். அதுவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு. காந்தியே கூட முப்பதுகளின் மத்தியில் பிரம்மச்சரிய விரதத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மூலம் கற்பு நெறி தவறாமல் இருப்பதோடு, களவியல் எண்ணங்களையும் விட்டொழித்தார். இந்த நிலையை அடைவதற்கு பிரத்தியேக விரதத்தை, குறிப்பிட்ட நாள் கணக்கில் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்க வேண்டும். பால் அருந்தினால் பாலுணர்வு தூண்டப்படும் என்பது மிக மோசமான விளைவு. இறுதியில், நன்மையை நாடுபவருக்கு இந்த ஒழுக்கங்களே முக்கியமான அம்சமாகும்.

நெருங்கிய நட்பு அபாயகரமானது என்று காந்தி சொல்வார். ஏனென்றால் ‘நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர் வினையாற்றுவார்கள்’. விசுவாசமாய் இருப்பது தவறு செய்ய தூண்டும் என்பது எத்தனைக் கண்மூடித்தனமான உண்மை. மேலும் கடவுளை நேசிக்கும் ஒருவரோ, மனிதநேயத்தின்பால் அன்பு கொண்ட ஒருவரோ தனியொரு நபரைமட்டும் பிரத்தியேகமாய் விரும்பமுடியாது. மனிதநேயமும் மத அபிப்பிராயமும் ஒன்றிணைந்து சமரசம் அடையும் புள்ளியை இது குறிக்கிறது. மற்றவர்களைக் காட்டிலும் ஒருசிலரை மட்டும் அதிகமாய் நேசிப்பதுதான் இங்கு காதல் என பொருள்படுகிறது.

தன் மனைவியின் உணர்வுக்கும் குழந்தைகளின் உணர்வுக்கும் காந்தி மதிப்புக் கொடுத்து நடந்தாரா என்ற செய்தி, சுயசரிதையில் தெளிவாக இல்லை. ஆனால் மூன்று சந்தர்பங்களில், மருத்துவர் பரிந்துரைத்த மாமிச உணவு உண்பதைக் காட்டிலும் தன் மனைவியும் குழந்தையும் இறந்துபடுவதே மேல் என்று முடிவெடித்திருக்கிறார். நல்லவேளையாய் அந்தத் துர்பாக்கிய நிலை ஏற்படவில்லை.

பாவம் செய்யாமல் இருந்து உயர் வாழும் வழியை கவனமாய் வலியுறுத்தி, முடிவெடுக்கும் அதிகாரத்தை எதிர் முனையில் இருக்கும் நோயாளியிடம் விட்டுவிடுவார். ஆனால் அப்போதும்கூட முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர் கையில் ஒப்படைத்தால், என்ன நடந்தாலும் மாமிசம் உண்பதை தடுப்பதே சரியென வாதிடுவார். நாம் உயிர் வாழ்வதற்கு எந்த எல்லை வரை செல்லவேண்டும் என்று காந்தி அடிக்கடிச் சொல்வார். கோழிக் குழம்பு வரை செல்லக்கூடாது என்பது அவரின் தீர்க்கமான வாதம்.

என்னைப் பொறுத்தவரை இது ஒரு மகோன்னத மனநிலை. ஆனால் இதை மனிதநேயமற்ற செயல் என்று பெரும்பாலான மனிதர்கள் எண்ணக்கூடும். நேர்மையாக வாழ்வதில் அல்ல, விசுவாசத்தின் பொருட்டு பாவங்கள் செய்வதே மனித வாழ்வின் சாரமாய் இருக்கிறது. நட்புறவு நீடிக்காத எல்லைவரை அழகியலைக் கொண்டுசேர்த்து வாழ்க்கைக்கு எழில் சேர்க்க நினைப்பது நடக்காத காரியம். வாழ்வின் உன்னதத்தை உடைத்தெறிந்துதான், பிறர் மீது கொண்ட விசுவாசத்தை நிரூபிக்க முடியும்.

துறவிகள் மதுவையும் புகையிலையும் ஒதுக்கித் தள்ளவேண்டும் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் துறவற வாழ்க்கையையும் மனித வாழ்விலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். இதற்கொரு தெளிவான பதிலடி இருக்கிறது. அதை கவனமாய் சொல்ல வேண்டும். யோகிகள் மலிந்த காலத்தில், யாரோடும் ஒட்டாமல் இருப்பது முழுமையான உலக வாழ்விலிருந்து துறந்து போக நினைப்பதால் மட்டுமல்ல, சராசரி மனிதனால் உலக வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போவதால்தான். இதையே ஒவ்வொரு சராசரி மனிதனும், தோற்றுப்போன துறவி என்று வேறுமாதிரி சொல்லலாம்.

உண்மையாகவே பலருக்குத் துறவறம் போவதில் ஆசையில்லை. துறவியாக இருக்கும் சிலருக்கு மனித மனத்தின் எதார்த்தங்களைப் படிக்கும் உணர்வு பெரும்பாலும் வாய்க்கப் பெறுவதில்லை. உளவியல் காரணங்களை நுட்பமாக ஆராய்ந்தால், ‘யாரோடும் ஒட்டாமல்’ இருப்பதற்கு காரணம் என்ன என்பது தெளிவாகப் புலப்படும். வாழ்வை எதிர்கொள்ள நேரிடும் அச்சமும், காதலை எதிர்கொள்ள நேரிடும் உணர்வும், காமம் சார்ந்தும் சாராததுமான விஷயங்களும் வாழ்வைக் கடினப்படுத்துகின்றன.

இல்லற விஷயங்கள் பெரியவையா, மனிதநேய லட்சியம் பெரியதா என்று கேள்வி எழுப்பி விவாதம் செய்வதற்கான தருணம் இல்லை இது. விஷயம் என்னவென்றால், அவர்கள் போட்டியிடத் தகுதியற்றவர்கள். கடவுளா, மனிதனா? இருவருக்கும் இடையில் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தீவிரவாதிகள் முதல் முற்போக்குவாதிகள் வரை, தாராளாவாதி முதல் அராஜகவாதிவரை எல்லோரும் மனிதனையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இருப்பினும் காந்தியின் அகிம்சைக் கொள்கையை, அவரது பிற போதனைகளில் இருந்து பிரித்துப் பார்க்கலாம். அதன் சாரம் மதநம்பிக்கையில் புதைந்துகிடந்தாலும், அரசியல் ரீதியான ஆதாயங்களை தான் விரும்பியபடி அடைவதற்கு அதனைப் பயன்படுத்திக் கொண்டார். மேற்கத்திய அகிம்சைவாதிகளைப் போல் அல்லாமல், இந்த விஷயத்தில் காந்தி வேறுபட்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட ‘சத்தியாகிரக’ முறை அகிம்சை வழியில் எதிரியைத் தோற்கடிக்கும் உத்தியை பின்பற்றியது. இதனால் யாரும் துன்புறுவதில்லை, மனம் நோவதில்லை.

அரசுக்கு ஒத்துழைப்பு தராமல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, ரயில் மறியலில் கலந்துகொண்டு, போலீஸ் தாக்குதலுக்கு தப்பி ஓடாமல், திருப்பியடிக்காமல் காயங்களைச் சுமந்துகொண்டு நிற்பதுதான் சத்தியாகிரகப் போராட்டம். ‘செயலற்ற எதிர்ப்பு’தான் சத்தியாகிரகம். குஜராத்தி மொழியில் இதற்கு ‘உண்மையில் ஊறிய உறுதி’ என்று பொருள். தன் இளம் வயதில் நடந்த போயர் யுத்தத்தில் பிரிட்டன் சார்பாக டோலிகளைத் தூக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். முதல் உலகப்போர் நடந்த 1914-18 காலக்கட்டத்திலும் இதே பணியை மேற்கொண்டிருக்கிறார்.

அவர் வன்முறையை முற்றிலுமாய் கைவிட்டபிறகும், போரில் எதாவது ஒரு பக்கம் நிற்பது அவசியம் என்பதை உணரும் அளவில் நேர்மையாய் இருந்தார். ஆனால் அவரின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வட்டமடித்து வந்தபோதிலும், அவரால் நேர்மையான நிலைப்பாட்டை ஏற்கமுடியாமல் போனது. போர்க்களங்கள் சந்திக்கும் இரு அணியும் ஒன்றுபோலத்தான். அதில் வெற்றியும் தோல்வியும் பெரிய மாறுதல்களை ஏற்படுத்திவிடாது என்று அவரால் பாசாங்குபட நடக்கமுடியவில்லை.

மேற்குலக அகிம்சை விரும்பிகளைப் போல், மோசமான கேள்விகளை இவர் தவிர்ப்பதில்லை. இரண்டாம் உலகப் போர் பற்றி அகிம்சை விரும்பிகள் கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கேள்வி ஒன்று, ‘யூதர்களை என்ன செய்வது? அவர்கள் அழிந்துபோவதை நீங்கள் பார்க்கத் தயாரா? இல்லையென்றால், போர் செய்யாமல் அவர்களைக் காப்பதற்கான வழி என்ன?’

மேற்கத்திய அகிம்சை விரும்பிகளிடம் இருந்து இந்தக் கேள்விக்கான தகுந்த பதிலை இதுவரை கேட்கவில்லை. கேட்ட ஒன்றிரண்டும் அப்படித்தான், இப்படித்தான் என்று மழுப்பல்களாய் இருந்தன. ஆனால் 1938ல் இப்படியான ஒரு கேள்வி காந்தியிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இதனை ‘காந்தியும் ஸ்டாலினும்’ என்ற‌ நூலில் லூயி ஃபிஷர் பதிவு செய்திருக்கிறார். அதில் காந்தி சொல்கிறார், ‘ஜெர்மானிய யூதர்கள் கூட்டாகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அது ஹிட்லர் செய்த கொடுமையால் நிகழ்ந்தது என ஒட்டுமொத்த உலகமும் கொந்தளிக்கும்’. போர் முடிந்த பிறகு, ‘எப்படியோ யூதர்கள் எல்லாம் கணிசமான அளவில் இறந்துவிட்டார்கள்’ என்று ஹிட்லர் தன்னை நியாயப்படுத்திக் கொள்வான்.

இந்த அணுகுமுறை ஃபிஷர் போன்ற ஒருசில காந்திய ரசிகர்களை அரவணைத்தது என்றாலும், காந்தி மிக நேர்மையாய் இருந்ததை நாம் உணரவேண்டும். ஓர் உயிரைப் பறிக்க நீங்கள் தயாராய் இல்லையென்றால், வேறு வழியில் உங்களை உயிரை இழக்க எப்போதும் தயாராய் இருக்க வேண்டும் என்று காந்தி நினைக்கிறார். 1942ல் ஜப்பானியப் படையெடுப்புக்கு எதிராக அகிம்சை போராட்டத்தை அறிவித்தபோது லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும் என்பதை காந்தி அறிந்திருந்தார்.

1869ல் பிறந்த காந்தி சர்வாதிகாரத்தின் முழு தன்மையை உணர்ந்து கொள்ளாமல், அனைத்து விஷயங்களையும் தனது போராட்ட அணுகுமுறையிலேயே கணித்தார் என்று யூகிக்க இடமுண்டு. இங்கே கவனம் செலுத்த வேண்டிய விஷயம் என்னவென்றால், காந்தி பொதுமக்களுக்குக் கட்டளையிடும்‌ அதிகாரத்தை தன்பால் வைத்திருந்ததால், பிரிட்டன் அரசு அவரை சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொண்டது. மேற்சொன்ன விஷயத்தை மனதிலிறுத்தி, ‘உலகத்தைக் கட்டியெழுப்ப’ காந்தி கனவு கண்டார். ஆட்சியைப் பிடித்தவர்கள் நள்ளிரவில் காணாமல் போகும் நாட்டில் காந்தியின் வழிமுறைகளை பயன்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.‌

ஊடகச் சுதந்திரமும் ஒன்றுகூடும் உரிமையும் வாய்க்கப்பெறாமல், கருத்தை முறையிடுவது மட்டுமல்ல கூட்டத்தை கட்டியெழுப்புவதும் பெரிய பணிதான். இந்தக் கணத்தில் ரஷ்யாவில் ஒரு காந்தி இருக்கிறாரா என்ன? ஒருவேளை இருந்தால் என்ன சாதித்திருப்பார்? அவருக்கும் இதே எண்ணம் உதிந்திருந்தால், ரஷ்ய மக்களை ஒன்றுதிரட்டி மாபெரும் ஒத்துழையாமை போராட்டம் நடத்தியிருப்பார். உக்ரைன் பஞ்சபோராட்டத்திலும் இதே முடிவுதான் எட்டியிருக்கும்.

அகிம்சை கொள்கையை தனது சொந்த நாட்டின் ஆளும் அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவதில் நன்மையுண்டு. அந்நியர் ஆட்சிக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். ஆனால் எப்படி அதை சர்வதேச அளவில் பயன்படுத்துவது? இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில் காந்தியின் கருத்தில் முரண்பாடுகள் எழுகின்றன. இது அகிம்சை கொள்கையில் சிக்கல் இருப்பதை உணர்த்துகிறது.

அயல்நாட்டு அரசியலில் அகிம்சையைப் பின்பற்றினால் ஒன்று அமைதி உடன்படுக்கைக்கு ஒத்துவரலாம். இல்லை சண்டை சச்சரவுக்கு உடன்படலாம். மேலும், தனிநபர்களைக் கையாள்வதில் காந்திக்கு நிறையவே அனுபவம் இருக்கிறது. அனைத்து மனிதர்களும் தான் அணுகக்கூடிய வகையில் தாராளமான சைகைக்கு பதிலளிப்பார்கள் என்ற அனுமானம் தீவிரமாய் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

இது உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை நீங்கள் பைத்தியக்காரர்களை அணுகுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ‘யார் அறிவாளி? ஹிட்லர் அறிவாளியா? ஏதோ ஒரு நபரை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த நாடும் முட்டாள்கள் என்று சொல்லிவிடுவதா? ஒருவரால் ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வைகளை கட்டியெழுப்ப முடிந்தால், தார்மீகச் செயலுக்கும் பதிலுரைக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறதா? சர்வதேச அரசியலில் நன்றியுணர்வு என்ற காரணி இன்னும் இருக்கிறா?’

இதுமாதிரியான கேள்விகள் உடனடியாய் விவாதிக்கப்பட்டு, தக்க பதில்கள் விரைவில் வழங்கப்பட வேண்டும். நம்முன் இருக்கும் விண்வெளி களத்தின் பொத்தானை உடனடியாய் தட்டி ராக்கெட்டை பறக்கவிட வேண்டும். இன்னுமொரு பெரும் போரை இந்தத் கலாச்சாரம் தாங்குமா? அகிம்சை மூலம் தப்பிக்க முடியும் என்று சிந்திப்பதே ஒரே பலம் தானே.

நான்‌ மேலே எழுப்பிய கேள்விகளை காந்தி மிக நிதானமாய் உள்வாங்கிக்கொண்டு, பத்திரிகையில் பதில் எழுதுவார். காந்தி புரிந்துகொள்ளாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன‌ என்று சிலர் சொல்வார்கள். ஆனால் பயம்கொண்டு பேசாத, யோசிக்காத விஷயம் என்றும் எதுவும் கிடையாது. காந்தியை நான் ஒருபோதும் அதிகமாய் விரும்பியது கிடையாது. ஆனால் ஓர் அரசியல் சிந்தனையாளராக, நான் அவரை முக்கியமான மனிதராய் கருதுகின்றேன், அவருடைய வாழ்க்கை முழுதும் தோல்வியால் ஆனது என்று நான் நம்பவில்லை.

காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவரின் அணுக்கமான அபிமானிகள் சோகத்தில் விம்மினார்கள். தான் கட்டிவைத்த மாளிகை தன் கண் முன்னாலேயே அழிந்தபோவதைப் பார்த்து உயிர்ந்துறந்தார். அதிகார மாற்றம் நிகழும் இடத்தில் உள்நாட்டுக் கலவரங்கள் நடப்பது இயல்புதான்.

ஆனால் இது இந்து – முஸ்லிம் கலவரத்தை சாந்தப்படுத்தும் முயற்சி அல்ல, மாறாக காந்தியின் முக்கிய அரசியல் லட்சியமான ‘அமைதியான ஆட்சிமாற்றத்தை’ அடைந்த ஆசுவாசம். எப்போதும்போல சில தொடர்புடைய உண்மைகள் வெளிவருகின்றன.

மற்றொரு பக்கம், பிரிட்டிஷார் எந்தவொரு போரிலும் இந்தியர்களை எதிர்கொள்ளாமல் ஆட்சியதிகாரத்தை கையில் கொடுத்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார்கள். இதை ஒன்றிரண்டு பேர்தான் துல்லியமாய் கணித்திருந்தார்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், சுதந்திரம் தந்தது தொழிலாளர் கட்சி. சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் 1945ல் இருந்தே இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அனுதாப இயக்கம் பிரிட்டனில் செயல்படத் தொடங்கியது. எந்த அளவுக்கு இதில் காந்தியின் பங்கு இருக்கிறது?

ஒரு வேளை இந்தியாவும் பிரிட்டனும் கண்ணியமான நட்புறவு பூண்டால், அதற்கு காந்தி மேற்கொண்ட வெறுப்பில்லாத பிடிவாதம் பிடித்த அகிம்சை கொள்கையும் ஒரு காரணம் என்று கருதலாமா? அரசியல் காற்றில் நஞ்சு கலக்காமல் பாதுகாத்த பயிர் என்று சொல்லலாமா? இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பது கூட அவருடைய ஆகிருதியை காட்டுகிறது அல்லவா?

நான் நினைப்பதுபோல, வேறு சிலரும் காந்தியை அழகியல் பார்வையிலிருந்து விலக்கி, அவரின் புனிதத்துவத்தை கேள்வியெழுப்பலாம் (அவராகத் தன்னை புனிதர் என்று சொல்லிக்கொண்டதில்லை).‌ காந்தியின் புனிதத்துவ எண்ணங்களை மறுத்துரைத்து, வெறுமனே அவரை மனிதகுல விரோதி என்றும் பிற்போக்குவாதி என்றும் அடையாளப்படுத்த சிலர் முனையலாம். ஆனால் சாதாரண அரசியல்வாதியாய் நான் அவரை அடையாளம் காண்கிறேன். சமகாலத்தில் வாழ்ந்த ஏனைய தலைவர்களோடு ஒப்பிட்டு புளங்காகிதம் அடைகிறேன்.

எவ்வளவு வாசம் பொருந்திய நறுமணத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார்!

பார்ட்டிஸன் ரிவ்யூ, ஜனவரி 1949

0

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர். இதுவரை இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார். வரலாறும் இலக்கியமும் இவருடைய விருப்பத்துக்குரிய துறைகள்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *