‘கைவினைத் தொழில்கள் மூலமான தேசிய கிராமப்புறக் கல்வித் திட்டம்’ என்ற இலக்குடன் மகாத்மா காந்தி முன்வைத்த கல்வித் திட்டம். நயீ தாலீம் (Nayi Thaleem) என்று அறியப்பட்ட கல்வித் திட்டம். பிரபல கல்வியாளரும் பின்னாளில் தேசத்தின் ஜனாதிபதியுமான ஜாஹிர் ஹுசேன் தலைமையில் வினோபா பாவே, ஜே.சி.குமரப்பா முதலான பலர் கூடி 1937 வாக்கில் உருவாக்கிய கல்வித் திட்டம். தமிழகத்தில் ராஜாஜி அறிமுகப்படுத்த விரும்பிய புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் முன்னோடி.
கல்வி குறித்த விவாதங்கள் உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்தத் தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் கருதி இத்திட்டம் தமிழில் வெளி வருகிறது.
0
தேசிய அடிப்படைக் கல்வி
ஜாகிர் ஹுசைன் குழுவின் அறிக்கை
தலைவர்: ஜாகிர் ஹுசைன்
உறுப்பினர்கள்: கே.குலாம் சையதீன், கே.டி.ஷா, வினோபா பாவே, காகா கலேல்கர், கிஷோர்லால் மஷ்ருவாலா, ஜே.சி.குமரப்பா, ஸ்ரீ கிருஷ்ணதாஸ் ஜாஜு
ஸ்ரீமதி ஆஷா தேவி
ஒருங்கிணைப்பாளர்: ஏ.டபிள்யூ.ஆர்யநாயகம்
0
முன்னுரை
டாக்டர் ஜாகிர் ஹுசைனும் அவருடைய குழுவினரும் தேசிய அடிப்படைக் கல்வி என்ற பெயரில் உருவாக்கிய துண்டுப் பிரசுரம் ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டது என்ற தகவலானது, இந்த விஷயம் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் கணிசமான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துகிறது. அவர்கள் உருவாக்கிய கல்வித் திட்டத்துக்கு ‘கைவினைத் தொழில்கள் மூலமான தேசிய கிராமப்புறக் கல்வித் திட்டம்’ என்ற பெயர் கொஞ்சம் வசீகரமற்றது என்ற போதிலும் அதுவே மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.
‘கிராமப்புறம்’ என்பது உயர் கல்வி அல்லது ஆங்கிலக் கல்வி என்றழைக்கப்படும் கல்வி சாராத வேறு கல்வித் திட்டத்தைக் குறிக்கிறது. ‘தேசிய’ என்றால் இன்றைய நிலையில் அஹிம்சை மற்றும் சத்தியத்தையே குறிக்கிறது. ‘கிராமப்புற கைவினைக் கலைகள் மூலமாக’ என்றால், ஒவ்வொரு கிராமப்புற ஆசிரியரும் எந்தவித புற அல்லது மேலிருந்து திணிக்கப்படும் கெடுபிடிகள், குறுக்கீடுகள் இல்லாமல் தமது சூழல் சார்ந்து ஏதேனும் கைவினைக் கலை அல்லது தொழிலை அடிப்படையாகக் கொண்டு தமது கல்வித் திட்டத்தை வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதைக் குறிக்கிறது. இந்தக் கோணத்தில் இந்தக் கல்வித்திட்டம், கிராமப்புற சிறுவர்களின் கல்வியில் மாபெரும் புரட்சியை உருவாக்கப் போகிறது.
மிகச் சிறந்த கல்வியாளர்கள் தீவிர ஆய்வுகளுக்குப் பின் இந்தக் கல்வித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன் நான் சொன்ன இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அது, இந்தத் திட்டத்தைப் படித்து உள்வாங்கிக்கொள்ளப் பெரிதும் உதவியாக இருக்கும்.
எம்.கே.காந்தி
வார்தா,
28, மே, 1938
0
வார்தா தேசியக் கல்வி மாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – 22-23 டிசம்பர் 1937
1.தேசம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி ஏழு ஆண்டுகள் கிடைக்க வழி செய்யவேண்டும்.
2. தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்கவேண்டும்.
3. ஆரம்பப் பள்ளிக் கல்வி உடல் உழைப்பு மற்றும் ஆக்கபூர்வ கைவினைத் தொழில் சார்ந்ததாக இருக்கவேண்டும். மாணவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற கைவினைத் தொழிலைத் தேர்ந்தெடுத்து அதை மையமாகக் கொண்டு பிற கலைகள், அறிவுகள் எல்லாம் கற்றுத் தரப்படவேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னதை இந்தத் தீர்மானம் ஆதரிக்கிறது.
4. இந்தக் கைவினைத் தொழில் மூலமான வருமானமானது காலப்போக்கில் ஆசிரியர்களின் சம்பளத்தை ஈடுகட்டும் அளவில் பெருகிவிடும் என்று இந்த மாநாடு எதிர்பார்க்கிறது.
0
முகவுரை
மகாத்மாஜி,
23, அக், 937ல் நடைபெற்ற வார்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆரம்ப அடிப்படைக் கல்விக்கான செயல்திட்டத்தை வடிவமைக்க நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் மிகுந்த பெருமையடைகிறேன். அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் அனைவரும் 24 அக்டோபர் அன்று உங்களைச் சந்தித்து ஆரம்ப கட்ட விஷயங்களைக் கலந்து பேசியிருந்தார்கள்.
நவம்பர் 2, 3 தேதிகளில் அந்தக் குழு வார்தாவில் கூடிப் பேசியது. திரு கே.டி.ஷா முக்கிய பணி இருந்தால் அன்று வரமுடியவில்லை. நவம்பர் 22,23,24 தேதிகளில் மீண்டும் கலந்தாலோசித்தது. அந்தக் கூட்டத்துக்கு பேராசிரியர் சையதீன் வரமுடியாமல் போயிருந்தது. பேரா.கே.டி.ஷா கருத்தாய்வுக் கூட்டத்தின் முதல் நாள் மட்டும் கலந்துகொண்டிருந்தார். கலந்துரையாடல் மிகவும் இதமாக, பண்புடன் நடைபெற்றது. அனைத்து உறுப்பினரும் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தனர்.
நாங்கள் அந்த ஆலோசனைக்கூட்ட விவரங்கள் குறித்து எந்த ஆவணமும் பதிவு செய்திருக்கவில்லை. ஆனால், பல நண்பர்கள் கல்வி தொடர்பான பல கருத்துகளை எங்களுக்கு அனுப்பியிருந்தனர்.
நாங்கள் இங்கு சமர்ப்பிக்கும் இந்த அறிக்கையில் இருக்கும் குறைகள் எங்களுக்கு நன்கு தெரிந்துதான் இருக்கிறது. எங்களுடைய செயல் எல்லைகள், போதிய கால அளவு இல்லாத நிலை இவற்றால், நாங்கள் நினைத்த அளவுக்குச் செயல்படமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக, நூற்பு மற்றும் நெசவு தொடர்பான பாடத் திட்டத்தை மட்டுமே தயாரிக்க முடிந்திருக்கிறது. இதுபோன்ற வேறு பல கைவினைத்தொழிலை மையமாகக் கொண்ட பாடத்திட்டத்தையும் கால அவகாசம் கூடுதலாக இருந்திருந்தால் எங்களால் உருவாக்கியிருக்கமுடியும்.
இந்தக் கைவினைத் தொழில் போலவே அல்லது இவற்றைவிட அதிக கல்வி வாய்ப்புகள் கொண்ட பிறவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் தரவில்லை என்ற பழிச்சொல்லைத் தவிர்க்கவேண்டும் என்று விரும்புகிறோம். விரைவிலேயே விவசாயம் மற்றும் தோட்டக்கலையை மையமாக வைத்தும் ஒரு பாடத்திட்டத்தை வடிவமைத்து உங்களிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
பல பிராந்திய அரசுகள் இவற்றுக்குத் தேவையான நூல்கள், ஆவணங்கள் ஆகியவற்றைத் தந்து உதவியிருக்கின்றன. அவர்களுக்கு எங்களுடைய நன்றிகள். குறிப்பாக, மத்திய பிராவின்ஸ் அரசாங்கமானது கல்வித்துறை அதிகாரி, விவசாயத்துறை அதிகாரி ஆகியோரை எங்களுடைய முயற்சிகளுக்கு உதவும்படிக் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களுக்குத் தனி நன்றிகள்.
ஆர்யநாயகம், ஸ்ரீமதி ஆஷா தேவி ஆகிய இருவரும் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் என்ற போதிலும் அவர்களுக்கும் நன்றி சொல்லியாகவேண்டும். இந்தக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகள், கலந்தாய்வுக் கூட்ட ஏற்பாடுகள், ஆவணப்படுத்தல் என அனைத்திலும் இவர்கள் செய்த பணி மிகவும் நன்றிக்குரியது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக ஆசிரியர் பெருமக்களுக்கு மிகுந்த நன்றி. அவர்களுடைய மனப்பூர்வமான ஒத்துழைப்புக்கும் அவர்களுடைய நிபுணத்துவம் சார்ந்த அறிவையும் நேரத்தையும் தேவைப்பட்ட போதெல்லாம் பயன்படுத்த அனுமதித்த பெருந்தன்மைக்கும் நன்றிகள்.
இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் திட்டமானது உங்கள் வழிகாட்டுதலின் மூலம் நம் தேசத்தில் மிக வலுவான கல்வி அமைப்பு உருவாக வழிகோலும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
மரியாதையுடன்
ஜாகிர் ஹுசைன்
தலைவர்.
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.