Skip to content
Home » காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

காந்தியக் கல்வி #2 – அடிப்படைக் கோட்பாடுகள்

கல்வி

இப்போதைய கல்வி அமைப்பு

நம் தேசத்தில் இப்போது நிலவிவரும் கல்வி அமைப்பைக் கண்டிப்பதில் இந்திய அளவில் ஒருமனதான கருத்தே நிலவி வருகிறது. கடந்த காலத்தில் தேசிய வாழ்க்கையின் உடனடியானதும் அழுத்தமானதுமான தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் போய்விட்டிருக்கிறது. தேசத்தின் வலிமையையும் எண்ணவோட்டத்தையும் முறையான திசையில் செலுத்தவும் முடியாமல் போய்விட்டிருக்கிறது. இன்று தேசிய மற்றும் சர்வ தேசிய வாழ்க்கையை வேகமான, விரிவான மாற்றங்கள் மாற்றியமைத்துவருகின்றன. அவை மக்களிடம் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கிவருகின்றன. இந்த நிலையில் நமது கல்வி அமைப்பு மந்தமாகச் செயல்பட்டுவருகிறது. மாறிவரும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது. இன்றைய சூழலின் யதார்த்த அம்சங்களுக்கு எதிர்வினையாற்றுவதாக இல்லை; படைப்பூக்கம் மிகுந்த லட்சியவாதம் மற்றும் ஜீவாதாரமான அம்சங்களால் உந்தப்பட்டதாகவும் இருக்கவில்லை.

தனி நபர்களை சமூகத்துக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பவர்களாக வளர்த்தெடுப்பதில்லை. அவர்களை சொந்தக் காலில் நின்று, சமூகப் பணிகளில் செய் நேர்த்தியுடன் ஈடுபடுபவர்களாக ஆக்கமுடியவில்லை. கல்வி உருவாக்க வேண்டிய புதிய, கூட்டுறவு மிகுந்த சமூக அமைப்பு தொடர்பான கோட்பாடு எதுவும் அதனிடம் இல்லை. இன்றைய போட்டிகள் மலிந்த, ஏய்ப்பும் வன்முறையும் நிறைந்த, மனிதத் தன்மையற்ற அரசாங்கத்தை அகற்றுவது தொடர்பான கொள்கையும் அதனிடத்தில் இல்லை.

இதனால் இன்றைய கல்வி அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற குரல் எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஓங்கி ஒலிக்கின்றன. தேசிய வாழ்க்கையின் லட்சியங்களையும் அதன் அழுத்தமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான ஆக்கபூர்வமான, மனித அம்சம் மிகுந்த கல்வி அவசியம்.

இந்தியச் சிறுவர்களுக்கு வடிவமைக்கப்படும் கல்வி, மேற்குலகில் பின்பற்றப்படும் கல்வியிலிருந்து சில அம்சங்களில் நிச்சயம் முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். ஏனென்றால், மேற்கைப் போலல்லாமல், இந்தியா அமைதியைக் கொண்டுவர, முழுமையான சுதந்தரத்தை அடைய அஹிம்சையை ஆறத் தழுவியிருக்கும் தேசம். எனவே, நம் குழந்தைகளுக்கு அஹிம்சையின் மேன்மைகளைப் பற்றியே கற்றுத் தரவேண்டும்.

மஹாத்மா காந்தியின் தலைமை

பிற துறைகளைப் போலவே இந்தத் துறையிலும் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையுடனான வழிகாட்டுதல் முக்கியமான தருணத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியர்களுக்கு என்னவிதமான கல்வித் திட்டத்தை நாம் உருவாக்கவேண்டும் என்பது தொடர்பாக அவர் முழு மனதுடனும் அர்ப்பண உணர்வுடனும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். இந்தியர்களின் மேதமைத் திறமைகளுக்கு ஒத்திசைவுடன் இருக்கவேண்டும்; இந்தியர்கள் அனைவருக்குமான கல்வி என்ற இலக்கை நடைமுறையில் அடைய உதவுவதாக இருக்கவேண்டும்; குறைவான காலகட்டத்துக்குள் அமல்படுத்த முடிவதாக இருக்கவேண்டும் என்ற அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்யும்படியான கல்வித் திட்டத்தை உருவாக்க அவர் முழு ஆர்வம் காட்டுகிறார்.

ஹரிஜன் இதழ்களிலும் வார்தா கல்வி மாநாட்டிலும் மகாத்மா முன்வைத்த கல்வித் திட்டத்தின் அடிப்படை அம்சம் என்னவென்றால், ‘கல்வியானது கைவினைத்தொழில்கள், கலைகள் அல்லது உற்பத்தி சார்ந்த அணுகுமுறை மூலமே கற்றுத் தரப்படவேண்டும். பள்ளியில் கற்றுத் தரப்படும் அனைத்து விஷயங்களின் மையக் கருவாக தொழில்கள் மூலமான அணுகுமுறையே இருக்கவேண்டும்’.

பள்ளியில் கற்றுத் தரப்படும் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயானது ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஈட்டிக் கொடுப்பதாக இருக்கவேண்டும். இப்படி இருந்தால்தான் அனைவருக்கும் இலவச, கட்டாய, அடிப்படைக் கல்வியை நாடு முழுவதும் உடனே கொடுக்க அரசுக்கு வழிபிறக்கும் என்று மகாத்மா கருதுகிறார். இல்லையென்றால், இன்றைய அரசியல் மற்றும் நிதி நிலைமையைப் பொறுத்தவரையில் இப்படியான அனைவருக்குமான கல்விக்கு ஆகும் செலவை நம்மால் சமாளிக்கவே முடியாது.

பள்ளிகளில் கைவினைத் தொழில்

ஏதாவது ஒரு கைத்தொழிலினூடாகக் கல்வி கற்றுத் தரவேண்டும் என்பதில் நவீன கல்விச் சிந்தனைகள் எல்லாம் ஒருமனதாக, ஆதரவாகவே இருக்கின்றன. மாணவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான வளர்ச்சியைக் கொடுக்கும் கல்வியைத் தர இதுவே மிகவும் சிறந்த வழி என்று கருதப்படுகிறது.

உளவியல்ரீதியாக, இளம் பருவம் என்பது இயல்பாகவே ஏட்டுப் படிப்பு மற்றும் கோட்பாட்டு வழியிலான கல்வியை ஆரோக்கியமான முறையில் எதிர்ப்பதாகவே இருக்கும். அந்தவகை ஏட்டுக் கல்வியின் கழுத்தை நெரிக்கும் ஆதிக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிக்க, தொழில்கள் மூலமான கல்வி பெரிதும் உதவும். தொழில் வழிக் கல்வியானது மாணவர்களின் புத்தக அறிவு மற்றும் செய்முறை தொடர்பான அனுபவங்களை சம அளவில் வளர்த்தெடுக்க உதவும். உடம்பையும் மனதையும் ஒருங்கே ஒத்திசைவுடன் பயிற்றுவிப்பதாகவும் இருக்கும்.

இந்தத் தொழில் வழிக் கல்வி மூலமாக ஒரு குழந்தைக்கு கைகளையும் அறிவையும் ஆக்கபூர்வமாக, உற்பத்தி சார்ந்து பயன்படுத்தும் வாய்ப்பு பெருகும். இல்லையென்றால் வெறுமனே புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பதை, வெறுமனே படிக்கும் மேலோட்டமான திறமை மட்டுமே வந்திருக்கும். பெரும்பாலும் அர்த்தம் புரியாமல் மனப்பாடம்தான் செய்துமிருப்பார்கள். எனவே, தொழில் வழிக் கல்வியையே “ஒரு மாணவரின் முழு ஆளுமையை வளர்த்தெடுக்கும் கல்வி’ என்று அழைக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் மூளை உழைப்பாளர்களையும் உடல் உழைப்பாளர்களையும் நம் சமூகம் முன்தீர்மானங்களுடன் ஏற்ற இறக்கத்துடன் பார்க்கிறது. தொழில் வழியிலான உற்பத்தி சார்ந்த கல்வியில் தேசத்தில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளும் ஈடுபடுவதன் மூலம் இந்த ஏற்றத்தாழ்வு சார்ந்த பார்வை மறைந்துபோகும். உடலுழைப்பு மீதான மரியாதை, சமூக ஒற்றுமை இவையெல்லாம் உருவாகும். அளவிடமுடியாத அளவுக்கான தார்மிக நன்மைகளை அது தரும்.

பொருளாதாரரீதியாகப் பார்த்தால், சிறப்பாக, நேர்த்தியாக அமல்படுத்தினால் இந்தத் தொழில் வழிக் கல்வி நமது உழைப்பாளர்களின் உற்பத்தியைப் பெருக்கும். தமது ஓய்வுநேரங்களை ஆக்கபூர்வமாகச் செலவிட வழிவகுக்கும்.

கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தொழில் வழியிலான அணுகுமுறையைப் பின்பற்றுவதால் மாணவர்கள் ஏட்டளவில் கற்றுக்கொள்பவற்றுக்கு வலுவான அடித்தளமும் நடைமுறைப் பயன்பாட்டு வாய்ப்பும் மிகுதியாகக் கிடைக்கும். கற்றுக் கொள்ளும் எந்தவொரு ஒரு விஷயத்தையும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கொள்ள உதவும். அவற்றின் ஒவ்வொரு அம்சமும் இன்னொன்றுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளவும் உதவும்.

இரண்டு முக்கியமான நிபந்தனைகள்

இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கவேண்டுமென்றால், இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகியாக வேண்டும். முதலாவதாக, ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கும் கைத்தொழில் அல்லது உற்பத்தியானது மிக அதிக விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வழிசெய்வதாக இருக்கவேண்டும்.முக்கியமான மனிதச் செயல்பாடுகள், விருப்பங்கள் ஆகியவற்றுடன் ஒத்திசைவுடன் இருக்கவேண்டும். அடுத்ததாக, ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியின் ஓர் அங்கமாகவும் அது இருக்கவேண்டும்.

இந்த அறிக்கையின் பின் பகுதியில் பள்ளிகள் எந்தத் தொழில் மூலமான கல்வியைக் கொடுக்கலாம் என்ற ஆலோசனையில் இந்த அம்சங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துடன் எந்த்வொருவகையிலாவது தொடர்பிலிருக்கும் அனைவரும் இந்த விஷயத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

ஏதாவது ஒரு தொழிலை எந்திரகதியில் செய்யும் தொழிலாளரை உருவாக்குவது இந்தக் கல்வித்திட்டத்தின் நோக்கமல்ல; மாறாக, கல்வி நோக்கங்களைப் பூர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் எந்தெந்தத் தொழில் கல்விகளில் உள்ளுறைந்து இருக்கிறது என்பதைக் கண்டு சொல்வதே இந்த அறிக்கையின் நோக்கம். இந்தத் தொழிலைக் கற்றுக் கொடுக்கும் வழிமுறையானது பள்ளிக் கல்வியின் ஓர் அங்கமாக இருப்பதோடு, பிற அனைத்துப் பாடங்களைக் கற்றுத் தரக்கூடிய வழிமுறைகளையும் ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டும். கூட்டுறவுச் செயல்பாடுகள், திட்டமிடல், துல்லியத்தன்மை, தன் விருப்பத்துடனான முன் முயற்சிகள், தனிநபர் பொறுப்புணர்வுகள் ஆகியவற்றுக்கும் இந்தக் கல்வி முறையில் முக்கியத்துவம் தரப்படவேண்டும்.

இதைத்தான் மகாத்மா, ‘ஒவ்வொரு கைத் தொழிலும் வெறுமனே இன்று செய்யப்படுவதுபோல் எந்திரகதியில் கற்றுத் தரப்படக்கூடாது. விஞ்ஞானபூர்வமாகக் கற்றுத் தரப்படவேண்டும்.ஏன், எதற்காக ஒவ்வொன்றும் செய்யப்படுகின்றன என்பதை மாணவர்கள் தமது சொந்த அனுபவம் மற்றும் அவதானிப்புகள் மூலம் கற்றுக்கொள்ளும்படியாக இருக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நெசவு, நூல் நூற்றல், தச்சு வேலை என ஏதேனும் ஒன்றை இன்று கற்றுத் தரப்படும் பிற பாடங்களுடன் வெறுமனே இன்னொரு பாடம் என்பதாகச் சேர்க்கக்கூடாது. அப்படிச் செய்தால், பாடங்கள் எல்லாம் காற்றுப் புகாத தனித் தனி அறைகளாகப் பிரிக்கப்பட்டு, முறையான புரிதல் எதுவும் இல்லாமல் போய்விடும் என்று உறுதியாக நம்புகிறோம்.

அடிப்படைக் கல்வித் திட்டம் உருவாக்கும் லட்சியக் குடிமகன்

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வரும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் இந்தத் திட்டத்தில் லட்சியக் குடிமகன்களை உருவாக்கும் வழிமுறைகள் இருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நவீன இந்தியாவில் குடிமகன் உரிமை என்பது சமூக, அரசியல், பொருளாதார, கலாசாரத் தளங்களில் மிகுதியான ஜனநாயகத் தன்மை கொண்டதாக மலரவிருக்கிறது. புதிய தலைமுறை தனது பிரச்னைகள், உரிமைகள், கடமைகள் பற்றிக் கட்டாயம் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

குடிமகன்கள் தமது உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி அறிவார்ந்த புரிதலுடன் இருக்கவேண்டுமென்றால் குறைந்த பட்சக் கல்வியறிவு அவர்களுக்குக் கிடைத்தாகவேண்டும். முற்றிலும் புதியதொரு கல்வித் திட்டம் அதற்கு மிகவும் அவசியம்.

இரண்டாவதாக, நவீன காலகட்டத்தில் அறிவார்ந்த குடிமகன்கள் துடிப்பான சமூகத்தின் உறுப்பினராக இருக்கவேண்டும். நாகரிகமான சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையில் அவரிடம் எதிர்பார்க்கப்படும் கடமைகளை அவர் பூர்த்திசெய்தாகவேண்டும். ஒரு கல்வித் திட்டம் ஏழையோ பணக்காரரோ சுரண்டல் வாதிகளையும் ஒட்டுண்ணிகளையும் உருவாக்குமென்றால் அந்தச் சமூகம் அழிவைச் சந்திக்கும்; சமூகத்தின் உற்பத்தித் திறனையும் செய்நேர்த்தியையும் சீர்குலைப்பதோடு அபாயகரமான ஒழுக்கக் கேடான மனநிலையையும் பெருகச் செய்யும்.

இந்த அடிப்படைக் கல்வித்திட்டமானது, கழிவு அகற்றும் தொழில் உட்பட அனைத்துவகையான உடல் உழைப்பையும் கௌரவமாக மதிக்கும் தொழிலாளர்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமது சொந்தக் காலில் நிற்க விரும்புபவர்களாகவும் நிற்க முடிபவர்களாகவும் அவர்களை இது வளர்த்தெடுக்கும்.

சமூகத்துக்குத் தேவையான வேலைகளோடு தொடர்புடைய பயிற்சிகள் பள்ளியில் கிடைக்கும். இதனால், பள்ளியை முடித்துவிட்டு வெளியேறும்போது வெளி உலகை எதிர்கொள்வதற்கான மனோபாவம் மற்றும் விரிவான பார்வை ஆகியவற்றை மாணவர்கள் பெற்றுக்கொண்டுவிடமுடியும்.

இப்படியாக, நாங்கள் முன்வைக்கும் திட்டமானது, தமது முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட, பெருமிதமும் செயல் திறமும் மிகுந்த குடிமகன்களை உருவாக்கும். அவர்கள் கூட்டுறவு மனப்பான்மையுடன் சமூகத்தில் செயல்படவும் சுய முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டவும் வழிவகுக்கும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்தப் புதிய கல்வித் திட்டமானது, எளிதில் வளைக்க முடிந்த இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்கள் மனதில் சமூக சேவை மனப்பான்மையை விதைத்து, கூட்டுறவு மனப்பான்மை மிகுந்த சமூகத்தை உருவாக்குவதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறது. பள்ளியில் கல்வி பெறும் காலகட்டத்திலேயே கூட அவர்கள் தேசிய கல்வித் திட்டம் எனும் மாபெரும் சத்திய சோதனையில் நேரடியாகவும் அனுபவபூர்வமாகவும் பங்குபெற முடிவதை மனமார உணர்ந்துகொள்ளவும் வழிபிறக்கும்.

தன்னிறைவான செயல் திட்டம்

இந்த தேசியக் கல்வித் திட்டத்தின் தன்னிறைவான தற்சார்பு அம்சங்கள் பற்றிக் கொஞ்சம் சொல்ல விரும்புகிறோம். இதுதொடர்பாக பலருக்கும் தவறான புரிதலே இப்போது இருக்கிறது.

வார்தா கல்வி மாநாட்டிலும் இந்த அறிக்கையிலும் விவரிக்கப்பட்டிருக்கும் அடிப்படைக் கல்வித் திட்டமானது தற்சார்பு மிகுந்ததாக இருந்தாகவேண்டும் என்பதை இங்கு தெளிவாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒருவேளை நடைமுறையில் ஏதேனும் ஒரு விஷயத்தில் அப்படி தற்சார்புடன் இந்தத் திட்டம் இருக்காமல் போனாலும் மிகச் சிறந்த கல்வித்திட்டம் என்ற வகையிலும் தேசிய மறு கட்டமைப்புக்கு மிகவும் அவசியமான அவசரத் தேவை என்ற வகையிலும் இந்தக் கல்வித் திட்டத்தை நாம் ஆதரித்தாகவேண்டும்.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த அடிப்படைக் கல்வித் திட்டமானது தன்னளவில் தற்சார்ப்பு மிகுந்ததாக, தனது செலவினங்களில் பெரும்பான்மையை தானே ஈட்டிக் கொள்வதாகவே இருக்கப் போகிறது. வார்தா மாநாடு பரிந்துரைத்திருக்கும் விஷயங்களை வைத்தேகூட இதை நிரூபித்துக் காட்டிவிடமுடியும் (நெசவு, நூற்பு தொடர்பான விரிவான பாடத்திட்டம் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கப் போகிறோம்). ஒரு பள்ளியில் அறிமுகமாகவிருக்கும் நூற்பு மற்றும் நெசவுத்தொழில் தொடர்பாக ஏற்படவிருக்கும் செலவினங்கள் பற்றி இந்தச் செயல்திட்டம் தெளிவான புள்ளிவிவரங்களைத் தரவிருக்கிறது.

மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் கடந்த 17 வருடங்களாக இந்தக் கைவினைத்தொழில் பிரிவில் மிக அற்புதமான நிபுணத்துவம் மிகுந்த பணிகள் நடைபெற்றுவந்திருக்கின்றன. எனவே இது தொடர்பான செலவினக் கணக்குகளைத் தயாரிப்பது எங்களுக்கு மிக மிக எளிதாகவே இருந்தது. மஹாராஷ்டிராவில் இருக்கும் அனைத்திந்திய நூற்பாளர்கள் அமைப்பு முன்வைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த சம்பளம், வருமானம் எல்லாம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.

வேறு கைவினைத் தொழில்களின் அடிப்படையில் கல்வித்திட்டம் வடிவமைக்கப்படும்போது அந்தத் தொழில்களின் சந்தை வருமானம், செலவினங்கள் அடிப்படையில் இந்தக் கணக்கு வழக்குகள் தயாரித்துத் தரப்படும். எதிர்கால குடிமகன்களான மாணவச் செல்வங்கள் உற்பத்தி செய்து தரும் பொருட்களை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் விலையில் அரசங்கம் கொள்முதல் செய்து ஆதரிக்கவேண்டும் என்று மகாத்மா காந்தி ஆலோசனை வழங்கியிருக்கிறார். இதை எங்கள் குழுவினர் மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம்.

‘ஒவ்வொரு பள்ளியில் இருந்து உற்பத்தியாகிறவற்றை அரசாங்கம் கொள்முதல் செய்ய முன்வந்தால், ஒவ்வொரு பள்ளியும் தற்சார்புடன் தன்னிறைவாக இயங்க வழி பிறக்கும்’ என்று ஹரிஜன் 31, ஜுலை, 1937 இதழில் மகாத்மா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிதி சார்ந்த கணிப்புகள் தாண்டி, முழுமையான, செய்நேர்த்தி மிகுந்த கல்வி வழங்கப்படுவதையும் மாணவர்களின் தொழில் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறோம். இப்படியான தொடர் கண்காணிப்புகள் இல்லையென்றால், தொழில்கள் மந்தகதியை அடைந்து கல்வி சார்ந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. பல கல்வியாளர்கள், உடல் சார்ந்த பயிற்சி, செய்முறைப் பயிற்சிகள் போன்றவற்றைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியபோது கிடைத்த அனுபவங்களில் இருந்து இந்த அபாயம் நன்கு புரியவந்திருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். பொருளாதாரக் கணக்குகளுக்கு அதிக கவனம் கொடுப்பதால் கலாசார, கல்வி சார்ந்த இலக்குகளைக் கோட்டைவிட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

மாணவர்களிடமிருந்து அதிக உற்பத்தியைப் பெறவேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர்கள் இந்தக் கைவினைத்தொழில் மூலமாகக் கற்றுத் தந்தாகவேண்டிய அறிவார்ந்த, சமூக, ஒழுங்குகள் சார்ந்த பயிற்சிகளைப் புறக்கணித்துவிடக்கூடும். ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரும்போதும் மேற்பார்வை செய்யும் பணியாளர்களுக்கான வழிகாட்டுதலிலும் இந்தத் தவறு நடந்துவிடாமலிருக்க மிகுந்த முக்கியத்துவம் தரவேண்டும். அனைத்து கல்விச் செயல்பாடுகளையும் இந்த எச்சரிக்கையை மனதில் கொண்டே வடிவமைக்கவேண்டும்.

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *