Skip to content
Home » காந்தியக் கல்வி #5 – ஆசிரியர் பயிற்சி

காந்தியக் கல்வி #5 – ஆசிரியர் பயிற்சி

ஆசிரியர் பயிற்சி

இந்த கிராமப்புறத் தொழில்வழிக் கல்வித் திட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான இன்னொரு விஷயம் ஆசிரியர் பயிற்சி. பொதுவாகவே எந்தவொரு கல்வித்திட்டமாக இருந்தாலும் ஆசிரியர்களின் தரமே அந்தக் கல்வியின் வெற்றியைத் தீர்மானிக்கும். அப்படியிருக்கும்போது புதுமையான, புரட்சிகரமான ஒரு கல்வித் திட்டம் என்றால் அந்த மாற்றங்களைத் திறம்பட அமல்படுத்துவதற்கு, அதன் ஆசிரியர்களின் முக்கியத்துவம் மேலும் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது.

எனவே, இந்தப் புதிய கல்வித்திட்டம்பற்றிய மிகத் தெளிவான புரிதல் ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டும். எந்த சமூக சிந்தனை இந்தத் திட்டத்தின் உந்து சக்தியாக இருக்கிறது என்பதையும் நன்கு புரிந்திருக்கவேண்டும். அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டும் பேரார்வமும் இருந்தாகவேண்டும்.

ஏனென்றால் இந்தக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆசிரியர்கள் வெறும் பாடங்களை மட்டும் நடத்தப் போவதில்லை. கைத்தொழில்களையும் கற்றுத் தரப்போகிறார்கள். எனவே சில அடிப்படைக் கைத்தொழில்களில் அவர்களுக்கு நல்ல பயிற்சியும் நிபுணத்துவமும் இருக்கவேண்டும்.

அவர்கள் பள்ளிக் கல்வியை அணுகும் முறையிலும் கற்றுத் தரும் விதத்திலும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தாகவேண்டும். பல்வேறு பாடங்களைத் தனித்தனியான அறிவுத் துறைகளாகக் கற்றுத் தரக்கூடாது. அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கற்றுத் தரவேண்டும். அதோடு இவை அனைத்தையும் தொடர்புபடுத்தும்வகையிலான தொழில் வழிக் கல்வியை வளர்த்தெடுக்கவும் வேண்டும். இதற்கு ஆசிரியர்களுக்கு பல்வேறு பாடத்திட்டங்களிடையேயான ஒத்திசைவு, தொடர்புகள் பற்றிய நல்ல பரிச்சயமும் அனுபவமும் இருக்கவேண்டும். வாழ்க்கை, கல்வி, தொழில் ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செல்லும் பயிற்சியும் இருக்கவேண்டும்.

ஆசிரியர்கள் வாழும் சமூகச் சூழலில் நடக்கும் செயல்பாடுகள், தொழில்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றில் அவர்களுக்கு அறிவார்ந்த ஆர்வம் இருக்கவேண்டும். பள்ளிக்கும் சமூகத்துக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பு அவர்களுக்கு முழுமையாகப் புரிந்திருக்கவேண்டும்.

இவை நீங்கலாக, இந்தப் புதிய கல்வித்திட்டம் என்ன உயரிய நோக்கங்களோடு முன்வைக்கப்படுகிறதோ அதன் படியே வெற்றிகரமான நடந்தேறவேண்டுமென்றால், ஆசிரியர் பயிற்சித் திட்டத்தில் அதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் இடம்பெறச் செய்தாகவேண்டும்.

தேசிய அல்லது அங்கீகாரம் பெற்ற அரசுக் கல்வி மையத்தில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பிராந்திய இறுதி வகுப்பை அல்லது அதற்கு இணையான கல்வியை முடித்தபின்னர் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டம் (மூன்றாண்டுகள்)

1. அ) பருத்தி விவசாயம், பருத்தி பறிப்பு, பஞ்சு எடுத்தல், கம்பளி நூல் சேகரிப்பு, நூல் நூற்றல் ஆகியவற்றில் பயிற்சி
ஆ) ராட்டை / நூற்பு சக்கரம் இயங்கும் தொழில் நுட்பம் (அல்லது எந்த அடிப்படைத்தொழில் கல்வியின் வாயிலாகப் பாடங்கள் கற்றுத்தரப்படவிருக்கிறதோ அதன் பின்னால் இருக்கும் அறிவியல் தொழில்நுட்பம்)
இ) கிராமப்புறத் தொழில்களின், குறிப்பாக எந்தத் தொழிலின் அடிப்படையில் கல்வி கற்றுத்தரப்படவிருக்கிறதோ அதன் பொருளாதாரம்.
ஈ) தேர்ந்தெடுக்கப்படும் தொழில் கல்வியின் அடிப்படை அம்சங்கள்.

2. கீழ்க்கண்ட அடிப்படைத் தொழில்களில் பயிற்சி

அ) நூற்பு மற்றும் நெசவு.
ஆ) விவசாயம்
இ) காய், கனித் தோட்டம்
ஈ) தச்சுவேலை
உ) பொம்மைகள் செய்தல்
எ) தோல் தொழில்கள்
ஏ) காகித உற்பத்தி அல்லது பள்ளி அமையவிருக்கும் பகுதியில் இருக்கும் ஏதேனும் ஒரு கைத்தொழில்

3. பயிற்சிக் கல்வியின் கொள்கைகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியிருக்கவேண்டும்

அ) ஆக்கபூர்வமான வேலைகளின் மூலம் அடிப்படைக் கல்வி
ஆ) சமூகத்துக்கும் பள்ளிக்கும் இடையிலான தொடர்பு
இ) குழந்தை உளவியல் (முடிந்த அளவுக்கு வலுவாக) மற்றும் தொழில் நுட்பக் கல்வியைப் பெறுவது தொடர்பான உளவியல்
ஈ) பல்வேறு பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்துக் கற்றுத் தரும் வழிமுறைகளை வடிவமைத்தல், வளர்த்தெடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு கல்வி வழிமுறைகள்
உ) மக்களின் சம கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வி

4. மருத்துவம், ஊட்டச் சத்து உணவு, சுகாதாரம், கழிவு மேலண்மை, கிராமப்புறங்களின் யதார்த்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள், வாழ்க்கையில் நேரடியாகப் பயன்படும் அம்சங்கள், நடைமுறைப் பயன்பாடு ஆகியவை சார்ந்த அடிப்படையான கல்வி

5. சமூகச் சூழலில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஆசிரியர்கள் தெளிவான சிந்தனை பெற உதவும் வகையிலான சமூகவியல் கல்விக்கான பயிற்சி

6.தாய் மொழிக் கல்வியில் நிபுணத்துவம், மிகச் சிறந்த இந்திய கலை, இயக்கியங்கள் தொடர்பான அறிமுகம், இதன் மூலமாக தேசத்தின் பொதுவான கலாசார பின்னணி பற்றிய புரிதல்

7. ஹிந்துஸ்தானி மொழி பேசப்படும் பகுதிகள் மற்றும் பிற மொழி பேசப்படும் இடங்களில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஹிந்துஸ்தானி மொழியறிவு; ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் எழுதவும் படிக்கவும் முடிதல். இந்தப் புதிய கல்வி தொடர்பான அடிப்படை கலாசார சமூக இலக்குகள் பற்றிப் புரிந்துகொள்ள அனைத்து அரசுப் பள்ளி மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் இது கட்டாயம்.

8. கரும் பலகையில் எழுதுதல், ஓவியங்கள் வரைதல்

9. உடற் பயிற்சி, சுதேசி விளையாட்டுகள்

10. ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணவர்களே வகுப்புகள் நடத்துதல்

இந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் எல்லாம் ஆசிரியர்களும் ஆசிரியப் பயிற்சி பெறுபவர்களும் உடனுறைப் பயிற்சி மையங்களாக இருக்கவேண்டும். அவர்களுக்கிடையே பல தரப்பட்ட சமூக, கலாசார அம்சங்களில் கூட்டுறவு வளரவேண்டும். ஆசிரியர்களுக்கு தமது விருப்பம் சார்ந்த விஷயங்களைப் பயிற்சி கொடுக்க முழு சுதந்தரமும் இருக்கவேண்டும். பயிற்சி பெறும் ஆசிரியர்களின் பலதரப்பட்ட பொழுதுபோக்கு மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு போதிய வாய்ப்பும் வசதியும் கிடைக்கும் வகையில் இந்தப் பயிற்சி மையங்கள் திட்டமிடப்படவேண்டும்.

இந்தப் பயிற்சி மையங்களின் வெற்றியானது இங்கு பயிற்சி பெறுபவர்கள் ஆர்வத்துடன் தன்னிச்சையாக முன்னெடுக்கும் சமூக நடவடிக்கைகள், கலை மற்றும் பொழுதுபோக்குச் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படும். அதோடு பள்ளிகள் மற்றும் சமூகத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம், எதிர்வினை ஆகியவற்றின் அடிப்படையிலும் மதிப்பிடப்படும்.

இங்கு சொல்லப்பட்டிருக்கும் கல்வித்திட்டமானது மிகவும் கனமானதாகவும் லட்சியவாத நோக்கம் மட்டுமே கொண்டதாகவும் தோன்றலாம். நடைமுறையில் இது சாத்தியமில்லை என்றும் தோன்றலாம். ஆனால், முறையான உத்வேகத்துடன் அமல்படுத்தினால், இது தொடர்பான நெருக்கடிகளை எளிதில் தீர்த்துவிடமுடியும்.

முதலாவதாக, இது தொடர்ச்சியான மூன்று வருட பயிற்சித்திட்டம். எனவே இன்றைய நிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் விரிவான தொலை நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, சில வருடங்கள் கழிந்த பின்னர் அதாவது இந்தத் திட்டம் அமல்படுத்த ஆரம்பித்த பின்னர், புதிய பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவரும் ஆசிரியர்கள், தொழிற் கல்விப் பயிற்சியிலும் சமூகவியல் படிப்புகளிலும் நல்ல பரிச்சயமும் அனுபவமும் பெற்றிருப்பார்கள். அந்தவகையில் இந்தக் கல்வித் திட்டமானது புதிதாக எதையும் கற்றுத்தருவதாக இருக்காது. ஏற்கெனவே படித்தவற்றுக்கு உயர் நிலை பயிற்சி தருவதாகவே இருக்கும்.

மூன்றாவதாக, இன்றைய காலகட்டத்தில் பல்வேறு படிப்புகள் தொடர்பான விஞ்ஞான பூர்வமான முறையான முழுமையான அணுகுமுறையை முன்வைக்கவில்லை. அது இன்றைய நிலையில் மிகவும் அதிகப்படியான எதிர்பார்ப்பாகவே அமைந்துவிடும். சுகாதாரம், குடிமையியல், முதலுதவி, குழந்தைகளின் நன்னடத்தை, வகுப்பறை மற்றும் சமூக விஷயங்களில் நடந்துகொள்ளவேண்டிய விதம் ஆகிய அடிப்படை விஷயங்களை மையமாகக் கொண்டே இந்தப் பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நிபுணத்துவப் பெருமிதம் வளர்த்தெடுக்கப்பட்டு அறிவார்ந்த ஆர்வம் தூண்டப்பட்டுவிட்டால் இந்தப் பயிற்சி பெறும் பல ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் தன்னார்வத்துடன் சில விஷயங்கள் குறித்து முழுமையான அறிவைத் தேடிச் செல்வார்கள். ஆனால், இந்த பயிற்சி காலத்தைப் பொறுத்தவரையில் துறைசார் நிபுணர்களை உருவாக்குவது அதன் இலக்கு அல்ல. சரியான சிந்தனைப் போக்கு கொண்ட திறமையான, அறிவார்ந்த, கைத் தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களை உருவாக்குவது; சமூகத்துக்கு சேவை செய்வதில் ஆர்வமும் வருங்காலத் தலைமுறையினர் கல்வித் திட்டத்தில் உள்ளுறைந்திருக்கும் உயரிய மதிப்பீடுகளைப் புரிந்துகொள்ள உதவும் ஆர்வமும் கொண்ட ஆசிரியர்களைஉருவாக்குவது ஆகியவையே இதன் இப்போதைய இலக்கு.

ஆசிரியர் பயிற்சிக்கான குறுகிய பாடத்திட்டம்

இந்தக் கல்வித் திட்டத்தை உடனே ஆரம்பிக்க வேண்டும் என்பதால், உடனடியான குறுகிய பயிற்சித் திட்டம் ஒன்றை பரிந்துரை செய்கிறோம். ஏற்கெனவே தேசிய கல்வி நிறுவனங்கள், ஆஸ்ரமங்கள் ஆகியவற்றில் ஆசிரியராக இருப்பவர்களுக்கு முதல் கட்டமாக ஒரு வருடப் பயிற்சியளிக்கப்படும்.

ஆசிரியத்துறையில் அல்லது ஏதேனும் ஒரு கைத் தொழிலில் அடிப்படை அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இந்தப் புதிய கல்வித் திட்டத்தை சரியான புரிதல் மற்றும் ஆர்வத்துடன் முன்னெடுக்கத் தயாரானவர்களாக இருக்கவேண்டும். ஒரு பிராந்தியத்துக்கு எத்தனை பள்ளிகள் ஆரம்பிக்கவிருக்கிறோம் என்ற அடிப்படையில் அதற்குத் தேவையான அளவு ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரவேண்டும்.

இந்த குறுகிய கால பயிற்சித் திட்டத்தின் பாடங்கள் கீழ்கண்டவாறு இருக்கவேண்டும்.

அ) தக்ளி நூற்பதில் பயிற்சி. பள்ளிக் கல்விக்கு எந்தவொரு கைத் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் இது கட்டாயப் பாடம்.

ஆ) முன்பு கூறியிருக்கும் அடிப்படைக் கைத் தொழில்களில் ஏதேனும் ஒன்றில், அதை மூன்று ஆண்டுகளுக்குப் பள்ளியில் கற்றுத் தரும் அளவுக்குத் தேவையான பயிற்சி.

இ) மருத்துவம், சுகாரம், ஊட்டச் சத்து, கழிவு மேலாண்மை ஆகியவற்றில் சிறிய ஆரம்பப் பயிற்சி

ஈ) கைத் தொழில் வழிக் கல்வி மற்றும் அதற்கும் சமூக வாழ்வுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய புரிதல்.

உ) ஒன்றுக்கொன்று தொடர்புடைய கல்வி மற்றும் படிப்பு தொடர்பான எளிய செயல் திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.

ஊ) இந்திய தேசிய மறுமலர்ச்சி மற்றும் இந்த நூற்றாண்டில் உலகளவில் நடந்துவரும் போராட்டங்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம்.

எ) முறையான மேற்பார்வையின் கீழ் இந்தப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறுபவர்கள் குறைந்த பட்சம் 25 பாடங்கள் கற்றுத் தருதல்.

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *