மேற்பார்வையும் தேர்வுகளும்
அ. மேற்பார்வை
புதிய பள்ளிகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியருக்கும் மிகத் திறமையான பரிவு மிகுந்த மேற்பார்வைகள் மிகவும் அவசியம். மேற்பார்வை என்பது மிகவும் விசேஷமான கலை. வளர்ந்துகொண்டே செல்லும் கல்வி அமைப்பின் முடிவற்ற தேவைகளைப் பூர்த்திசெய்ய மேற்பார்வையாளர்களை உருவாக்கும் பணிகளுக்குப் போதிய நிதியை ஒதுக்கவேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த மேற்பார்வையாளர்கள் குறைந்தபட்சம் ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கான முழு பயிற்சி பெற்றிருக்கவேண்டும். கூடவே மேற்பார்வை மற்றும் நிர்வாகம் தொடர்பான இரண்டு ஆண்டு சிறப்புப் பயிற்சியும் பெற்றிருக்கவேண்டும். மேற்பார்வை என்றால் வெறுமனே கண்காணிப்பாக இருக்கக்கூடாது. கூட்டுறவாகவும் கூடுதல் விஷயம் தெரிந்தவர் குறைவாகத் தெரிந்த சக ஊழியருக்குச் செய்யும் உதவியாகவும் இருக்கவேண்டும்.
மேற்பார்வையாளர்கள், புதிய கல்விப் பரிசோதனைகளில் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்கவேண்டியவர்கள். இப்படியான மிகப் பெரிய கடமையை இவர்கள் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், தவிர்க்கமுடியாத நிர்வாக மற்றும் அன்றாடப் பணிகள் எல்லாம் முடிந்த அளவுக்கு இவர்களுக்கு லகுவாக இருக்கவேண்டும். எனவே கணிசமான எண்ணிக்கையில் மேற்பார்வையாளர்கள் இருந்தாகவேண்டும். ஒருவருடைய பொறுப்பில் விடப்படும் மாவட்டங்கள், பள்ளிகளின் எண்ணிக்கை அளவோடு இருக்கவேண்டும். இதனால் செலவு அதிகமாகலாம். ஆனால் இந்த இடத்தில் சிக்கனம் பார்ப்பதென்பது மிகவும் தவறான செயலாகவே இருக்கும்.
ஆ. தேர்வுகள்
நம் தேசத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் தேர்வு முறை என்பது நம் கல்வியின் மிகப் பெரிய சாபமாகவே இருக்கிறது. ஏற்கெனவே மோசமாக இருக்கும் நம் கல்வித் திட்டத்தில் பரீட்சைகளுக்கு மிக அதிக முக்கியத்துவம் தந்துவைத்திருப்பதால் அது மேலும் மோசமானதாகவே ஆகிவிட்டிருக்கிறது. தனிப்பட்ட மாணவர்களின் அல்லது பள்ளிகளின் திறமையை மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடுவதென்பது அவசியமே இல்லை. மேலும் இந்த மதிப்பீடுகள் முழுமையாகவும் இல்லை என்பதுதான் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
தேர்வுகள் முழுமையானவையாக இல்லை. நம்பத்தகுந்தவையாக இல்லை. குத்துதிப்பாகக் கணக்கிடப்படுவதாக தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டதாகவேஎ இருக்கிறது. நாம் வடிவமைக்கும் புதிய கல்வித்திட்டத்தை இந்தவகையான தேர்வுகளின் எதிர்மறை விளைவுகளில் இருந்து பாதுகாத்தாகவேண்டும்.
குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு பள்ளியில் என்னவிதமாக கல்வி தரப்பட்டிருக்கிறது என்பதைப் பரிசோதிக்க, கல்விக் குழுவின் ஆய்வாளர்கள் பள்ளியில் குறிப்பிட்ட சில விஷயங்களின் அடிப்படையில் பரிசோதித்துப் பார்த்து முடிவுக்கு வரலாம். பாடத்திட்டங்களை பரிசீலனை செய்து வடிவமைக்கும் நிபுணர்களுடன் கலந்து பேசி இந்தத் தேர்வுகளை நடத்தவேண்டும். ஒட்டு மொத்த பாடத்திட்டங்களையும் உள்ளடக்கியதாக இவை இருக்கவேண்டும். எந்தவித பாரபட்சம் இன்றியும் தனிப்பட்ட தீர்மானங்கள் சாராததாகவும் இருக்கவேண்டும்.
குறிப்பிட்ட சில விஷயங்களைப் பரிசோதிக்கும் இந்தத் தேர்வு முறையானது பள்ளிக் கல்வி அமைப்புக்கு மிகுந்த வலு சேர்க்கும். இறுதி வகுப்பின் கல்வி நாட்களை ஆறு வாரங்கள் அதிகரிக்கவும் வைக்கும். தேர்வுகள் என்ற நெருக்கடி காலத்துக்கு முன்பாக, இப்போது அந்தக் காலகட்டமானது வெறுமனே ஆசிரியர்கள் தரும் ’குறிப்புகளை’ மனப்பாடம் செய்வதிலும் ‘பாடங்களை மீள் பார்வையிடுவதிலும்’ வீணடிக்கப்பட்டு வருகிறது..
அடிப்படைத் தொழில்கல்வியில் ஒவ்வொரு மாணவரும் பெற்றிருக்கும் திறமையைப் பரிசோதிக்கும் காலகட்டமாக இதை மாற்றிக்கொள்ளவேண்டும். எந்த சமூகத்தின் அங்கமாக இந்தப் பள்ளிக்கூடம் இயங்குகிறதோ அந்த கிராம சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாணவருடைய பங்களிப்பை அதிகரிக்கவைப்பதாகவும் அமையும்.
மாணவர்களின் பாடம் மற்றும் கைத்தொழில் சார்ந்த திறமையைப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பதிவு செய்துவரவேண்டும். அதன் அடிப்படையில்தான் ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் தகுதி உயர்த்தப்படவேண்டும். குறிப்பிட்ட செய் நேர்த்தியை அனைவரும் பெற்றிருக்கவேண்டும் என்பதற்காக தேசியக் கல்விக் கழகமானது ஆண்டு தோறும் பல்வேறு பிரிவுகளில் தனிப்பட்ட தேர்வுகள் நடத்தவேண்டும். முடிந்தவரையில் ஏற்கெனவே ஏதேனும் வகுப்பில் செய்துமுடித்தவற்றை அல்லது அப்படியான எதையும் மீண்டும் செய்துகாட்டுதல் என்பதாக அது இருக்கக்கூடாது.
ஒரு வகுப்பில் அதிக மாணவர்கள் ‘தேர்ச்சி பெறவில்லை’யென்றால் ஆசிரியரின் செயல்பாடுகளை கூடுதல் அக்கறையுடன் கண்காணிக்கவேண்டும். ஏதேனும் பள்ளியில் அதிகம் பேர் தேர்ச்சி பெறவில்லையென்றால் அந்தப் பள்ளியின் நிர்வாக அமைப்பைக் கண்காணிக்கவேண்டும். ஒரு மாவட்டத்தின் பள்ளிகள் அனைத்திலும் இப்படியான பின்னடைவு இருந்தால் பாடத்திட்டத்தில் அல்லது ஒவ்வொரு வகுப்புக்கும் நிர்ணயித்திருக்கும் விதிமுறைகள், இலக்குகளில் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். இதை உடனே சரிசெய்தாகவேண்டும். ஒரே வகுப்பில் மாணவர்களை மீண்டும் படிக்கவைப்பதில் எந்தவொரு நியாயமும் இல்லை.
தேசிய கல்விக் கழகமானது குறிப்பிட்ட சில விஷயங்களில் தேர்வு நடத்தி பரிசோதிக்கவேண்டும் என்று முன்பே சொல்லியிருந்தோம். மாணவர்களுக்குக் குறிப்பிட்ட கைத்தொழிலில் கிடைத்திருக்கும் திறமை, பள்ளி அமைந்திருக்கும் சுற்றுப்புற சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஆற்றியிருக்கும் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் அமையவேண்டும். பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பான வருடாந்தர மாவட்டக் கண்காட்சிகள் நடத்திவந்தால், பள்ளிகளின் இந்த சாதனைகள் தொடர்ந்து நடக்க வழிவகுக்கும்.
0
நிர்வாகம்
1. புதிய தொழில் வழிக் கல்வித் திட்டம் வெற்றியடைய வேண்டுமென்றால் பள்ளியில் சேரும் மாணவர்கள் முழு ஏழு ஆண்டுகளும் கல்வி பெற்றாகவேண்டும். கட்டாயக் கல்வி என்பது ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்தாகவேண்டும் என்றும் நன்கு யோசித்துப் பரிந்துரைக்கிறோம். அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி முடிந்த அளவுக்கு ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்றும் முழுவதும் இலவசமாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறோம். ஏழு வயதில் இருந்து 14 வயதுக்குள் இருக்கும் ஆண், பெண் குழந்தைகள் அனைவருக்கும் இந்தக் கல்வி கட்டாயம் கிடைக்கவேண்டும். எனினும் பெண் குழந்தைகளின் பெற்றோர் 12 வயதுக்கு மேல் பள்ளியில் இருந்து தம் குழந்தைகளை விலக்கிக் கொள்ள விரும்பினால் அதற்கும் இடம் தரப்படும்.
2. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் இந்தக் கட்டாயக் கல்வியில் குழந்தைகள் சேர்க்கப்பட்டாக வேண்டும். இப்படிச் சொல்லியிருப்பதன் மூலம் ஏழை கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள் இதற்கு முந்தைய மிக முக்கியமான காலகட்டத்தில் பாதகமான சூழலில் வாழ நேரும் என்பதையும் கணக்கில் கொண்டிருக்கிறோம். எனவே மூன்று வயதிலிருந்து ஏழு வயது வரையிலும் அரசானது பள்ளிக்கு முந்தைய மழலையர் பள்ளிக் கல்விக்கு ஏதேனும் வழிவகை செய்தாகவேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் நெருக்கடிகளினால், குறிப்பாக நிதிப் பற்றாக்குறையினால், இந்த யோசனையை இப்போது நாங்கள் பரிந்துரைக்கவில்லை. எனினும் அரசானது இந்தப் பெரிய பொறுப்பை ஒருபோதும் கை கழுவிவிடக்கூடாது. நாங்கள் இங்கே பரிந்துரைத்திருக்கும் புதிய கல்வித் திட்டமானது அதன் உள்ளார்ந்த வலுவுடன் அமல்படுத்தப்படுமென்றால், இப்போது மழலைகளுக்குக் கிடைக்கும் வீட்டுப் பயிற்சியைவிட மேலான பயிற்சி கிடைக்க நிச்சயம் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. விரைவிலேயே நம் தேசத்தில் ஆரம்பித்தாக வேண்டியிருக்கும் முதியோர் கல்விக்கும் இந்தப் புதிய கல்வித் திட்டம் நிச்சயம் பெரிதும் உதவும்.
3. புதிய தொழில் வழிக் கல்வித் திட்டத்தின் பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொடுப்பதற்கான கால அவகாசம் பற்றி ஒரு தீர்மானத்தை எட்டியிருக்கிறோம். கீழ்க்கண்ட வழிகளில் அவை கற்றுத் தரப்படலாம்:
அடிப்படைத்தொழில் கல்வி 3 மணி நேரம் 20 நிமிடங்கள்
இசை, ஓவியம் 40 நிமிடங்கள்
தாய்மொழிக் கல்வி 40 நிமிடங்கள்
சமூகவியல், அறிவியல் 30 நிமிடங்கள்
உடற்பயிற்சி 10 நிமிடங்கள்
ஓய்வு நேரம் 10 நிமிடங்கள்
மொத்தம் 5 மணிநேரம் 30 நிமிடங்கள்
நூற்பு மற்றும் நேசவுத்தொழிலையே அடிப்படைக் கல்வியாக முன்வைத்திருக்கிறோம். வெவ்வேறு தொழில் வழிக் கல்விக்கு வேறு கால அவகாசம் தேவைப்படலாம். எனினும் இங்கு வரையறைக்கப்பட்டிருக்கும் கால அளவை நிச்சயம் தாண்டக்கூடாது. ஆண்டுக்கு 288 நாட்களும் மாதத்துக்கு 24 நாட்களும் இந்தக் கல்வியில் பள்ளிகள் நடக்கவேண்டும்.
4. ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் விருப்பம் இருக்கும். எனவே, முடிந்த அளவுக்கு பல்வேறு கைத் தொழில்கள் மூலமான கல்வி வழங்க வழிவகை செய்யவேண்டும். குறைந்தபட்சம் பள்ளிக்கல்வியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
5. அனைத்து பள்ளிகளுக்கும் மிகப் பெரிய விளையாட்டு மைதானமும் தோட்டமும் இருக்கவேண்டும்.
6. குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக் குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிராமத்துக் குழந்தைகள் பொதுவாகவே போதிய ஊட்டச் சத்து இல்லாமல் இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சிறிய அளவில் ஊட்டச் சத்து நிறைந்த உணவு கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இதைச் செய்வதற்கு ஆகும் நிதி உதவியை மக்களிடமிருந்து அரசு எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
7. ஆசிரியர்களுக்கான சம்பளம், மகாத்மா ஜி சொன்னதுபோல் முடியுமானால், ரூ 25 ஆக இருக்கவேண்டும். இல்லையென்றால் ரூ 20க்குக் குறையாமல் இருக்கவேண்டும் (அன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் ரூ 24. அதன் அடிப்படையில் பார்த்தால் அந்த ரூ 25 சம்பளம் என்பது இன்றைய மதிப்பில் ரூ 40,000க்கு சமம்). உயர் வகுப்பு ஆசிரியர்கள், கூடுதல் கல்வித் தகுதி உடையவர்களாக இருக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறோம். எனவே அவர்களுக்கு இதைவிடக் கூடுதல் சம்பளம் தரவேண்டும்.
8. இந்தப் புதிய கல்வித்திட்டத்தின் முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு சிறப்புப் பயிற்சியும் திறமையும் மிகுந்த ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவேண்டும். அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கவேண்டியதிருந்தாலும் கொடுத்துவிடவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிந்து, இந்தப் புதிய திட்டத்துக்குத் தேவையான பாடத்திட்டங்களையும் கல்வி முறைகளையும் வடிவமைக்கவேண்டும். இந்த முன்னேர் காலகட்டத்தை வெற்றிகரமாகக் கடந்ததும் நம்முடைய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மூன்றாண்டு பயிற்சி பெறும் சாதாரண ஆசிரியர்களுக்கும் இந்தப் புதிய கல்வி முறையை எளிதில் கற்றுத்தர வழி பிறந்துவிடும்.
9. ஒரு வகுப்பில் 30 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதைவிட அதிக எண்ணிக்கையில் இருந்தால் ஆசிரியர்களுக்கு, திறமையாக அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.
10. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பள்ளி அமையவிருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.
11. ஆசிரியைகள் அதிக அளவில் இந்தத் துறைக்கு வரவேண்டும். அதற்குத் தேவையான சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.
12. ஆசிரியப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாகவும் திறமையாகவும் செயல்படவேண்டும். நம்பகமான தேர்வு முறை ஒன்றை உடனே வடிவமைக்கவேண்டும். இந்தக் கடினமான பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லையென்றால், இந்தப் புதிய தொழில்வழிக்கல்வித்திட்டம் வெற்றி பெறவே முடியாது. ஆரம்பப் பள்ளிகளில் கற்றுக் கொடுப்பதற்கு விசேஷமான திறமையும் ஒழுக்கம் நிறைந்த மனநிலையும் குணங்களும் மிகவும் அவசியம். ஆசிரியராக விருப்பம் தெரிவிக்கும் அனைவரையும் ஆசிரியராக்கிவிடக்கூடாது. தேர்வு நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் முன்னெடுக்கவேண்டும். உளவியலாளர்கள் சொல்வதுபோல் ’சரியான சமூக வகையினரை’ தேர்வு செய்யவேண்டும்.
13. இந்தப் பயிற்சி மையங்கள் எல்லாம் உடனுறை மையங்களாக இருக்கவேண்டும். அனைத்து ஜாதி, மத, வர்க்கத்தினரை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். தீண்டாமை, சம பந்தி தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் இருக்கக்கூடாது.
14. இந்தப் பயிற்சி மையங்களில் கைவினைக் கலைஞர்களும் தொழிலாளர்களும் கூட தொழில் கல்வி தொடர்பான பயிற்சி தர நியமிக்கப்படலாம். ஆசிரியர்கள் தொழில் வழிக் கல்வியைக் கற்றுத் தருவதிலும் பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தையில் விற்றுத் தருவதிலும் உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் உதவியை நாடலாம்.
15. பயிற்சிக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புதிய நுட்பங்கள் மற்றும் மறு பரிசீலனை சார்ந்த புத்தாக்கக் கல்வி வகுப்புகளைப் பெரிய அளவில் நடத்தவேண்டும். ஆசிரியர்களின் திறமையைத் தொடர்ந்து மேம்படுத்த இது மிகவும் அவசியம். கலாசாரம், தொழில் நிபுணத்துவம், தொழில் துறை என பலதரப்பட்ட பாடங்கள் கற்றுத்தரப்படவேண்டும்.
16. ஒவ்வொரு பயிற்சி மையத்துடனும் ஒரு பரிசோதனைப் பள்ளி இணைக்கப்பட்டிருக்கவேண்டும். புதிய புதிய கல்விக் கொள்கைகள் மற்றும் கல்வி வழிமுறைகள் எல்லாம் இந்தப் பள்ளிகளில் பரிசோதனை செய்துபார்க்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படவேண்டும். சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட இந்தப் பள்ளிகள் அந்தப் பகுதிக்கே முன் மாதிரிக் கல்வி மையமாகத் திகழவேண்டும். பிற பள்ளி ஆசிரியர்கள் அங்கு போய் கல்வி கற்றுத்தரப்படும்விதம், கல்வி உபகரணங்கள், பாட புத்தகங்கள், அந்தக் கல்வி முறை செயல்படும் விதம் ஆகியவற்றைப் பார்த்து ஞானம் பெறவேண்டும்.
17. கைத் தொழிலின் அறிமுகம், பாடங்களை ஒருங்கிணைத்தும் தொடர்புபடுத்தியும் பார்த்தல், வாழ்க்கையுடன் கல்விக்கான நெருங்கிய தொடர்பைப் புரியவைத்தல், எதையும் கைகளால் செய்து பார்த்துப் புரிந்துகொள்ளுதல், மாணவர்களின் தனிப்பட்ட உத்வேகம், சமூகப் பொறுப்பு உணர்வு இவையெல்லாம் இந்தப் புதிய கல்வித்திட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான புத்தகங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் குறிப்பாக முதலில் ஆசிரியர்களுக்கும் கொடுத்துவிடவேண்டும். அது நடந்தாலே இந்தத் திட்டம் வெற்றி பெற முடியும். விளக்க நூல்கள், ஆசிரியர்களுக்கான கையேடுகள், பாடங்களை ஒருங்கிணைப்பது தொடர்பான செயல்திட்டங்கள் இவையெல்லாம் தயாரிக்கப்படவேண்டும். புது உத்வேகத்துடனான புதிய பாட புத்தகங்களும் உருவாக்கப்படவேண்டும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் கல்விக் கழகம் மற்றும் மத்திய தேசிய கல்விக் கழகம் ஆகியவை இது தொடர்பான உதவிகளைச் செய்து தரமுடியும். எந்தப் பிராந்தியங்களில் எல்லாம் புதிய தொழில் வழிக் கல்வி அடிப்படையிலான பள்ளிகளை அமைக்கவிருக்கிறார்களோ அங்கெல்லாம் தேவையான புத்தகங்கள், உபகரணங்கள், ஆவணங்கள் அனைத்தையும் வெகு சீக்கிரமே உருவாக்கிவிடவேண்டும்.
18. ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் கல்வி நிறுவனத்துக்கு அந்தப் பகுதியில் இருக்கும் பள்ளிகளின் செயல்பாடுகள் தொடர்பான முறையான மதிப்பீடுகள், கண்காணிப்புகள், மேற்பார்வைகள் செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் கல்விக் கழகமானது செயல் திறம் மிகுந்த கல்வியியலாளர்கள் உருவாக வழிவகை செய்யவேண்டும். இந்த நிபுணர்கள் உருவாக்கும் பள்ளிப் பாடத்திட்டமானது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையதாகவும் சாதனைகள் புரிவதற்கான புதிய மதிப்பீடுகள் விதிமுறைகளை முன்வைத்து ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கவேண்டும். கல்வி கற்றுத் தருவதில் முற்போக்கான வழிகளை முயற்சி செய்து பார்க்கவேண்டும். தேசத்தின் பிற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான பரிசோதனை முயற்சிகள் பற்றி ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியவைக்கவேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இதன் மூலம் வழிகாட்டவேண்டும்.
19. அதிகாரபூர்வ கல்விக் கழகங்கள் நீங்கலாக, தனியான, அரசு சாரா மத்திய இந்தியக் கல்விக் கழகம் ஒன்றையும் அமைக்கவேண்டும். கல்வி மற்றும் கலாசாரச் செயல்பாடுகள் சார்ந்த நிபுணர்கள் இந்தக் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கவேண்டும். இந்த மையங்களின் இலக்கு கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்:
அ. கல்விக் கொள்கை, நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கும் மையமாகச் செயல்படவேண்டும்.
ஆ) நம் தேசத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் கல்வி சார்ந்த முயற்சிகளின் நோக்கம், சிந்தனைகள் ஆகியவற்றைப் படித்து ஆராய வேண்டும். விருப்பம் உள்ள அனைவருக்கும் இந்த ஆய்வு முடிவுகள் கிடைக்கச் செய்யவேண்டும்.
இ) தேசத்தின் பல்வேறு பிராந்தியங்கள், மாநிலங்கள், உலக நாடுகள் ஆகியவற்றில் நடந்துவரும் கல்விச் செயல்பாடுகள் பற்றித் தரவுகளைச் சேகரித்து வைக்கவேண்டும்.
ஈ) கல்வி தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும்.
உ) கல்விப் பணியாளர்களுக்குத் தேவையான புத்தகங்கள் சஞ்சிகைகள் வெளியிடவேண்டும்.
20. எதிர்காலக் குடிமகன்களுக்கு நன்மை செய்யவேண்டிய பல்வேறு அரசுத்துறைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருக்கின்றன. இது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். அரோக்கியமான, மகிழ்ச்சியான, திறமையான பள்ளி-சமூகக் குழுமத்தை உருவக்கும் நோக்கில் சுகாதாரம், விவசாயம், பொதுப் பணித்துறை, கூட்டுறவு, கிராம சுய நிர்வாக அமைப்பு போன்ற துறைகளை ஒருங்கிணைக்கும் துறையாக கல்வித்துறையை வளர்த்தெடுக்கவேண்டும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.