மஹாத்மாஜி,
அடிப்படைக் கல்வித் திட்டத்துக்கான வகுப்புகள் வாரியான பாடத்திட்டத்தை நீங்கள் கேட்டுக்கொண்டதன்படி தயாரித்திருக்கிறோம். அதை உங்கள் பார்வைக்குத் தருவதற்கு முன் இந்தப் பாடத்திட்டத்தின் பின்னால் இருக்கும் கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் எழுப்பும் சில முக்கிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
முதலில், இந்தத் திட்டத்தை வடிவமைப்பதில் எங்களுக்கு இருக்கும் போதாமைகளைச் சுட்டிக்காட்டிவிட விரும்புகிறோம். இப்போது தேசத்தில் நடைமுறையில் இருக்கும் கல்வி வழிமுறைகளை முழுமையாக மறு கட்டமைப்பும் செய்யும் இலக்குடன் இந்த புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறோம். இந்த ஆய்வறிக்கை முன்வைத்திருக்கும் வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கு மிக விரிவான பரிசோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியான அனுபவ அறிவின் அடிப்படையில்தான் தேவையான அனைத்துத் திருத்தங்கள், செழுமைப்படுத்தல்களை நம்பிக்கையுடன் செய்ய முடியும்.
இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் ஆசிரியத்துறையில் எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் அனுபவ அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நண்பர்களிடமிருந்து கிடைத்த ஆலோசனைகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தத் திட்டம் ஒருவகையில் உத்தேச வடிவிலானதுதான்.
இந்த ஆய்வறிக்கையில் நாங்கள் முன்வைத்திருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட கற்பித்தல் முறைகளை நடைமுறைப்படுத்தி, அதன் அடிப்படையிலான தீர்மானங்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பாடத்திட்டத்தை இறுதி செய்துகொள்ளலாம்.
இந்தப் புதிய தொழில் வழிக் கல்வித் திட்டத்தை விஞ்ஞானபூர்வமாக நமது பயிற்சி மையங்கள், கல்லூரிகள், புதிய பள்ளிகள் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தவிருக்கும் ஆசிரியர்கள் தமது அனுபவங்கள் மற்றும் புரிதல்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்திவரவேண்டும். அதுதான் இந்தப் பாடத்திட்டத்தை மேலும் வளர்த்தெடுக்கப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஆசிரியர்கள் தரப்பில் இப்படியான பரீட்சார்த்த விஷயங்களை ஆர்வத்துடன் முன்னெடுக்கும் அணுகுமுறையே இந்தப் புதிய கல்வித்திட்டத்தை வெற்றி பெறச் செய்யும்.
நெசவு மற்றும் நூற்பை அடிப்படைத் தொழில் கல்வியாக வைத்து (எடுத்துக்காட்டான தொழிலாக வைத்து) ஏழு ஆண்டுகளுக்கான அடிப்படைக் கல்வியின் விரிவான பாடத்திட்டங்களை வகுப்பு வாரியாக வரையறுத்திருக்கிறோம். மொழிப் பாடம், கணிதம், சமூகவியல் பாடம், பொது விஞ்ஞானம், ஓவியம் முதலான முக்கிய பாடங்களை அந்தந்த வகுப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட கால அளவுக்குள் முடிந்த அளவுக்கு அடிப்படைத் தொழில்வழிக் கல்வியுடன் ஒருங்கிணைத்துக் கற்றுக் கொடுத்துவிடமுடியும்.
வரையறுக்கப்பட்டுள்ள பாடங்கள் மிகவும் அதிகம் என்று சில விமர்சகர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பாடத்திட்டம் ஒருபக்கம் அந்தக் குற்றச்சாட்டு சரியல்ல என்பதையும் இன்னொரு பக்கம் எந்தவொரு முக்கியமான கலாசார அம்சமும் பாடத்திட்டத்தில் விடுபட்டுவிடவில்லை என்பதையும் நிரூபித்துக் காட்டும்.
நெசவு, தச்சு என எங்கள் ஆய்வறிக்கையில் இரண்டு தொழில் கல்விகளை மிக முக்கியமானவையாகப் பரிந்துரைத்திருக்கிறோம். இந்தத் தொழில்கள் சார்ந்து எங்களுக்கு எந்தவொரு அனுபவமும் போதிய நிபுணத்துவமும் இல்லை. எனவே இது தொடர்பாக நாங்கள் எங்கள் குழுவுக்கு வெளியில் இருக்கும் நிபுணர்களிடம் அது சார்ந்த பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தோம். இந்தத் தொழில்வழிக் கல்வி தொடர்பான பாடங்கள் நீங்கலாக, பிற பொதுவான துறைகள் சார்ந்த பாடத்திட்டமானது இந்த இரண்டு தொழில்களின் அடிப்படையில் கற்றுத்தரவும் அனைத்துப் பாடங்களை ஒருங்கிணைத்துக் கற்றுத்தரவும் முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
பல்வேறு பாடங்களுக்கு இடையிலான திறமையான, இயல்பான ஒத்திசைவை உருவாக்கவும் குழந்தைகளின் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்பவும் பள்ளிச் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கவும் விரும்பினோம். அதற்கு பள்ளியின் சுற்றுச் சூழல், சமூகச் சுற்றுச் சூழல், தொழில் கல்வி ஆகிய மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடைய முக்கிய அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அடிப்படைத் தொழில்தான் இவை அனைத்தும் ஒருங்கிணையும் மையப் புள்ளி. அதுதான் பள்ளியின் சுற்றுச் சூழலில் இருக்கும் வளங்களைச் சமூக நலன் சார்ந்து பயன்படுத்த வழிவகுக்கும்.
தேர்ந்தெடுக்கப்படும் பாடங்களானது இந்த மூன்று அம்சங்களுடன் எப்படி ஒருங்கிணைக்கப்படப் போகிறது என்பது தொடர்பாக நாங்கள் அடிப்படைக் கல்வியான நூற்பு மற்றும் நெசவுத் தொழில் சார்ந்து பல்வேறு பாடங்களை ஒருங்கிணைத்து ஒரு முன்னுதாரணத்தை வடிவமைத்துக் காட்டியிருக்கிறோம். இந்தக் கல்வித் திட்டம் மாணவர்களை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்வதாகவும் அது இருக்கும்.
எங்கள் ஆய்வறிக்கையில் நாங்கள் அழுத்தமாக முன்வைத்திருக்கும் நிபந்தனைகள், சிந்தனைகள் ஆகியவைபற்றி,போதிய புரிதல் இல்லாமல்தான் இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது. எங்கள் அறிக்கையின் பின்னிணைப்பில் இந்தப் புதிய தொழில் வழிக் கல்வித் திட்டமானது எந்த அளவுக்குக் குழந்தைகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எங்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் மிக அற்புதமாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறார்.
செயல்முறையை அடிப்படையாகக் கொண்டும் குழந்தைகளின் சமூக, பள்ளிச் சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டும் இந்தக் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, எதனால் குழந்தைகளை மையமாகக் கொள்ளாமல் இன்றைய கல்வியைப் போல் வெறும் புத்தகப் பாடப் படிப்பை மட்டுமே மையமாகக் கொண்டதாகவே இருக்கும் என்று எங்களுக்குப் புரியவே இல்லை.
ஆசிரியர்களும் பள்ளி சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்களும் இந்தக் கல்வித்திட்டமானது செயல் துடிப்பான பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டாயம் புரிந்துகொண்டாகவேண்டும். இந்தப் புதிய கல்வித் திட்டமானது பள்ளிக்கூடங்களைத் துடிப்புடன் செயல்படும் மையங்களாக, பரிசோதனைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் மையங்களாகச் செயல்படவேண்டும். வெறுமனே பிறருடைய அனுபவங்களில் இருந்து சொல்லப்பட்டவற்றை அப்படியே நகலெடுத்துப் பின்பற்றும் மையமாக இருக்கக்கூடாது.
பாடத்திட்டங்களைப் பொறுத்தவரையில், கற்றுக் கொடுப்பவை எல்லாமே வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாக, அடிப்படைத் தொழில் மற்றும் சமூகம், சுற்றுச் சூழல் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்தவையாக இருக்கவேண்டும். ஒரு குழந்தை கற்றுக் கொள்ளும் பாடமானது செயல்வடிவம் பெற்று அன்றாட வாழ்க்கையில் பயன் தருவதாக இருக்கவேண்டும். குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் அது பின்னிப் பிணைந்ததாக இருக்கவேண்டும்.
இந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் பாடங்களை எல்லாம் அனுபவ பூர்வமாகப் புரிந்து, உணர்ந்து கொள்ளத் தகுந்த வகையில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறோம். இந்தப் பாடங்களில் ஒரு மாணவர் தேர்ச்சிபெறும்போது, தனது சுற்றுச் சூழலை அவர் நன்கு புரிந்துகொண்டவராகப் பரிணமித்திருப்பார். அறிவுக் கூர்மையுடன் எதிர்வினை புரிபவராக இருப்பார். ஏனென்றால் வாழ்க்கைச் சூழலில் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், நெருக்கடிகள் ஆகியவற்றின் மீது கவனத்தைக் குவிக்கும்படி இந்தக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கல்வித் திட்டத்தில் நிறைய விஷயங்களை மேம்படுத்த நிச்சயம் இடம் உண்டு. ஆனால், பாடங்களுக்கு இடையே எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல், குழந்தைகளின் நேரடிச் செயல்முறை அனுபவங்களாக ஆகாமல், சமூக வாழ்க்கை மீதான எந்தவொரு தாக்கமும் செலுத்தாமல் இருக்கும் இன்றைய கல்வி முறையைவிட இந்தப் புதிய தொழில் வழிக் கல்வியானது மிகவும் சரியான அணுகுமுறை என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
சமூகவியல் பாடம் அல்லது பொது அறிவியல் பாடம் ஆகியவை நாங்கள் சொல்லும் விஷயத்தை நன்கு புரியவைக்கும். இந்தப் பாடங்கள் ஓவியத்துடன் தொடர்புடையதாக இருக்கும். வரலாறு, புவியியல் பாடங்கள் அடிப்படைத்தொழில் கல்வி தொடர்பான குழந்தையின் புரிதல் மற்றும் திறமையை வளர்த்தெடுக்கும். தோட்டக் கல்வியும் விவசாயக் கல்வியும் பள்ளிக் கல்வியின் ஓர் அங்கமாக இருக்கும்போது, பள்ளியானது சமூகம் மற்றும் மாணவருடைய வாழ்க்கையின் செயல் துடிப்பு மிகுந்த அனுபவ மையமாகத் திகழும்.
இந்த கல்வித் திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் ஆசிரியர்கள் மிகவும் அறிவுக் கூர்மை மிகுந்தவர்களாகவும் துடிப்பானவர்களாகவும் சூழலுக்கும் நிகழ்வுகளுக்கும் மிகச் சிறப்பாக எதிர்வினை புரிபவர்களாகவும் இருந்தாகவேண்டும். கற்றுக் கொடுக்கும் முறையில் துடிப்பும் செயல் முறைக்கான உத்வேகமும் இல்லையென்றால் மிகச் சிறந்த பாடத்திட்டமும் கூட வீணாகிப் போய்விடும். இந்தக் கல்வித் திட்டம் முழு வெற்றியடையவேண்டுமென்றால் என்ன விதமான முறையில் இந்தப் பாடங்களைக் கற்றுத்தரவேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கியிருக்கிறோம்.
சமூகவியல் பாடங்கள், பொது விஞ்ஞானம் ஆகியவற்றை ஆசிரியர்கள் எந்திரத்தனமாகத் துண்டறிக்கைகளைப் பார்த்து கற்றுத் தருவதுபோல் கற்றுத் தந்தாலோ மாணவர்கள் அர்த்தம் புரியாமல் வெறுமனே அவற்றை மனப்பாடம் செய்துவிட்டுப் போனாலோ பல்வேறு பாடங்களுக்கு இடையிலான தொடர்பை அவர்கள் புரிந்துகொள்ளமுடியாமல் போனாலோ இந்தப் பாடத்திட்டம் தோற்றுப் போய்விடும். குழந்தைகள் அனைத்தையும் சுயமாகச் செய்து பார்த்து, வாழ்க்கை மற்றும் சமூகத்தோடு இணைந்த உண்மையான கற்றல் சூழலில் புரிந்துகொண்டால்தான் இந்தத் தொழில் வழிக் கல்வித்திட்டம் வெற்றியடையமுடியும்.
தாய்மொழிப் பாடத்தில் மொழி மற்றும் இலக்கியத்தின் படைப்பூக்கம் மற்றும் பயன்பாட்டு அம்சங்கள் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயன்றிருக்கிறோம். வாய் மொழியாகக் கற்றுத்தரும் பாடம் மற்றும் பாடக் கருவிகள், வழிமுறைகள் ஆகியவற்றைக் குழந்தைகளின் விருப்பங்கள், வாழ்க்கை முதலியவற்றை மையமாகக் கொண்டு அமைத்திருக்கிறோம். குழந்தைகள் காலப்போக்கில் கீழ்க்கண்ட விஷயங்களில் திறமை பெற்றிருக்கவேண்டும்:
அ) சுற்றியிருக்கும் இயற்கையில் இருக்கும் அதிசயங்களை ரசித்துப் புரிந்துகொள்ளும் திறமை வளரவேண்டும்.
ஆ) பள்ளியில் கற்றுத் தரும் தொழில் கல்வி, வீட்டு வாழ்க்கை, கிராம வாழ்க்கை, பள்ளிச் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து அவற்றை விளக்கமாகச் சொல்லும் திறன் பெற்றிருக்கவேண்டும்.
இ) அன்றாடச் சமூகத்தொடர்புகள் சார்ந்து எளிய வணிக, அரசு அலுவலகங்களுக்கான கடிதங்கள், உறவினர், நண்பர்களுக்கான கடிதங்கள் எழுதத் தெரிந்திருக்கவேண்டும்.
ஈ) அடிப்படைக் கைத் தொழில்களில் கற்றுத் தேர்ந்திருப்பவை தொடர்பான மதிப்பீட்டுப் பட்டியல் உருவாக்க வேண்டும்.
உ) பள்ளி இதழ்களின் ஆசிரியராக இருந்து செழுமைப்படுத்துதல், அன்றாடச் செய்தித்தாள் உருவாக்கம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
ஊ) பொதுவான விஷயங்கள் தொடர்பாகக் கணிசமான நேரம் தடையின்றி, தெளிவாக, அறிவார்ந்த மேடைப் பேச்சுத்திறமையை வளர்க்கவேண்டும்.
எ) இலக்கியங்களுடன் பரிச்சயம் ஏற்பட்டிருக்கவேண்டும்.
இந்த பாடத்திட்டங்கள் கைத்தொழில், சமூகவியல், கிராம வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றுடன் தாய் மொழி வழிக் கல்வி நெருங்கிய பந்தம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். தாய் மொழியில் ஆளுமை என்பது வெறும் கல்வி சார்ந்ததாக மட்டும் நின்றுவிடாமல் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவற்றைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுவதாக இருக்கும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.