Skip to content
Home » காந்தியக் கல்வி #8 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 2

காந்தியக் கல்வி #8 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 2

சமூகவியல் பாடத்திட்டத்தில், பள்ளிக் குழந்தைகள் தாம் வாழும் சமூகச் சூழலின் நிலவியல் சார்ந்த அம்சங்கள், வரலாற்றுகாலம் சார்ந்த அம்சங்கள் ஆகியவற்றை அனுசரித்து நடந்துகொள்ளக் கற்றுத் தரப்படும். இன்றைய பிரச்னைகளை அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ளவும் சரியான சமூக, அறிவார்ந்த மனநிலையை வளர்த்தெடுக்கவும் இந்தப் பாடத்திட்டம் விரும்புகிறது. எனவே அதுதொடர்பான விஷயங்கள் இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கைச் சூழல், அவற்றின் முக்கிய அம்சங்கள், பள்ளியில் சுய நிர்வாக அமைப்புகளை வளர்த்தெடுத்தல், கடமைகளையும் பொறுப்புகளையும் பரஸ்பரம் புரிந்துகொண்டு ஒவ்வொருக்கும் ஒரு வேலையைப் பிரித்துக் கொடுத்துச் செயல்படும் சமூகக் கூட்டுறவு மனநிலையை உருவாக்குதல் ஆகியவை தொடர்பான அறிவார்ந்த புரிதல் இதற்கு மிகவும் அவசியம்.

இந்தப் பாடங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று நெருக்கமான ஒருங்கிணைப்பு பெற்றதாக இருந்தால் மட்டும் போதாது. அவை குழந்தைகளின் வீடு, கிராமம், அங்கு நடக்கும் தொழில்கள், கைவினைக் கலைகள் முதலான சமூகச் சூழலை மையமாகக் கொண்டு அந்தப் பாடங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். பழங்குடி வாழ்க்கை, பழங்கால நாகரிகங்கள் தொடர்பான கதைகள், பல்வேறு சமூக பூகோளச் சூழலில் மனித வாழ்க்கையும் தொழில்களும் எப்படியெல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன என்பவையும் கற்றுத் தரப்படவேண்டும்.

ஆரம்ப நிலை வகுப்புகளில் பூகோளம், இயற்கை தொடர்பான பாடங்கள் கற்றுத் தரும்போது, பள்ளி அமைந்திருக்கும் பகுதியின் பல்வேறுவிதமான பருவ நிலை பற்றிய பாடங்களில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். அறிவுக்கூர்மை மிகுந்த ஆசிரியர் இந்தப் பருவ நிலை சார்ந்த விஷயங்களுடன் பள்ளிக் குழந்தைகள் நேரடிஅனுபவம் பெற்றுப் புரிந்துகொள்ளும் வகையில் வகுப்புகளை முன்னெடுப்பார். பல்வேறு இயற்கை அழகு மிகுந்த இடங்களுக்கு இன்பச் சுற்றுலா, தோட்டப் பணிகள், வளர்ப்பு மிருகங்களின் அன்பான வளர்ப்பு, சுற்றுப்புறங்கள் தொடர்பான விரிவான ஆய்வுகள் என்பதாக அந்தக் கல்வியை நேரடி அனுபவமாக, பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவார். குழந்தைகள் இப்படி ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் சுற்றுப் புறச் சூழல் மீதான நல்ல புரிதல் மற்றும் கட்டுப்பாட்டை அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். சமூக வாழ்க்கையைப் பள்ளிச் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைக்கவேண்டும் என்பது இந்த ஆய்வறிக்கையின் முக்கியமான அம்சம் அல்லவா.

கணிதக் கல்வியை எடுத்துக்கொண்டால், அதன் அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் பல்வேறு கைத்தொழில் செயல்பாடுகளுடன் இணைத்துக் கற்றுத் தரவேண்டும். அதேபோல் சமூகவியல் பாடம், இயற்கை பாடம் ஆகியவற்றில் கற்றுக் கொண்டவற்றுடனும் ஒருங்கிணைத்துக் கற்றுத் தரவேண்டும். அடிப்படைத்தொழில் கல்வி, தோட்டக் கல்வி ஆகியவற்றில் வரும் கணக்கு சார்ந்த விஷயங்களை கணிதத்தின் அடிப்படை கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் விஷயங்களுடன் இணைத்துக் கற்றுக் கொடுக்கவேண்டும். அதுவே கிராமம் அல்லது சிறு நகரம் அல்லது ஊரின் பொருளாதார சமூக அம்சங்கள் மீதான புரிதலையும் உருவாக்கித் தரும். செய்முறைப் பயிற்சி சார்ந்த களப்பணிக் கல்வி மற்றும் கிராமங்கள் தேச பொருளாதார வளர்ச்சியில் ஆற்றும் பங்கு ஆகியவற்றையும் கற்றுக்கொள்ளும்போது கணிதப் பாடம் என்பது வெறுமனே கணித விதிகளைக் கற்றுக் கொள்வதோடு நில்லாமல் சமூகம் சார்ந்த புரிதலையும் அதிகரிக்க வழிவகுக்கும்.

ஒருங்கிணைந்த கல்வி தொடர்பாக உடற் பயிற்சிக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தர விரும்புகிறோம். உடற்பயிற்சிக் கல்வி தொடர்பான கோட்பாட்டு வகுப்புகள் சார்ந்து உடல் கூறியல், சுகாதாரம், சமச்சீர் உணவு தொடர்பான விஷயங்களைப் பொதுவான அறிவியல் பாடங்களின் மூலம் கற்றுக்கொண்டுவிடலாம். உடற்பயிற்சிக் கல்வியின் செய்முறைப் பயிற்சி சார்ந்து கைத்தொழில் பயிற்சி, விளையாட்டுகள், தோட்டப் பணிகள், பிற வகை களப்பணிப் பயிற்சிகள் ஆகியவை குழந்தைகளின் உடல் வலிமை, ஆரோக்கியம் மேம்படும் வகையில் வடிவமைக்கப்படவேண்டும்.

இந்தப் புதிய கல்வித் திட்டத்தில் நாங்கள் இசை வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை வரையறுக்கவில்லை. ஏனென்றால் அனைத்து குழந்தைகளுக்கும் இசை தொடர்பான அறிவியல்பூர்வமான பயிற்சி தருவது சாத்தியமில்லை. எனவே வகுப்புகளில் இந்தியாவின் பாரம்பரிய இசை மரபுகளுடன் அடிப்படை பரிச்சயம் ஏற்படும் வகையில் வரையறுக்கப்பட்ட ஸ்வர, ராக, தாளங்களிலான கூட்டிசை, கூட்டுப் பாடல் கற்றுத் தரப்படலாம். இசைக்கான மனநிலை இயல்பிலேயே பெற்றிருக்காத, இசை கற்றுக்கொள்ள விரும்பாத மாணவர்களுக்கு இந்த வகுப்புகளில் இருந்து விலக்கு தந்துவிடலாம். இது கட்டாயப் பாடம் அல்ல.

ஏழு வயதிலிருந்து பதிநான்கு வயது வரையிலான குழந்தைகள் கற்றுக்கொள்ளத்தகுந்த பாடல்கள் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். தேச பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாடல்கள், விழாக்காலப் பாடல்கள் ஆகியவை கற்றுத்தரப்படவேண்டும். கூட்டாகப் பாட உகந்ததாக எளிய தாள கதியில் இவை அமைந்திருக்கவேண்டும். பள்ளியில் கற்றுக் கொள்ளும் தொழில் கல்வி, உடல் பயிற்சிக் கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகவும் இருக்கவேண்டும். வெவ்வேறு மொழிகளில் என்னென்ன பாடல்கள் தேர்ந்தெடுகலாம் என்பது தொடர்பாக அவ்வப்போது அறிவுருத்தப்படும். ஆசிரியர்கள் அதில் இருந்து தமக்கு உகந்தவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்றுத் தரலாம்.

ஒவ்வொரு வகைப் பாடம் சார்ந்தும் இதுபோல் பல உதாரணங்கள், வழிகாட்டுதல்கள் தந்துகொண்டேயிருக்கமுடியும். ஆனால், அப்படிச் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இந்த சில உதாரணங்களே போதும். அடிப்படையாக பாடத்திட்டம் எதையெல்லாம் உள்ளடக்கியிருக்கவேண்டும்; என்னவிதமாக கற்றுத்தரப்படவேண்டும் என்பது தொடர்பாக இங்கு கோடி காட்டியிருப்பதே போதுமானது. இந்தப் பாடத்திட்டத்தை இந்த ஆய்வறிக்கை முன்வைக்கும் உத்வேகம் மற்றும் லட்சிய உணர்வோடு கற்றுத்தரப்படும்போது அறிவார்ந்த, நடைமுறை ஞானம் மிகுந்த, கூட்டுறவு மனோபாவம் கொண்ட குடிமகன்கள் உருவாவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தப் புதிய தொழில் வழிக் கல்வித்திட்டம் தொடர்பாக எங்களுக்கு அனுப்பப்பட்ட மற்றும் பத்திரிகைகளில் வெளியான விமர்சனங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆசிரியர்களும் பொது மக்களும் இந்தக் கல்வித் திட்டத்தைப் பொருட்படுத்தி சிந்தித்திருக்கிறார்கள் என்பதை அது எடுத்துக் காட்டுகிறது. அதேநேரம், பலர் முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் எல்லாம் இந்த திட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் கருதுகிறோம். எனவே மஹாத்மா ஜி, உங்கள் அனுமதியுடன், முக்கிய விமர்சனங்களுக்கான பதிலாக சில விளக்கங்களை முன்வைக்க விரும்புகிறோம்.

1. தொழில் கல்விக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் கால அளவைக் குறித்தே அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு அதிக நேரத்தை தொழில் கல்விக்கு ஒதுக்கினால் பொதுவான பாடங்களுக்குப் போதிய நேரம் கிடைக்காமல் போய்விடும் என்று விமர்சிக்கிறார்கள். செய்முறைக் கல்வி, பாடக் கல்வி என்று பிரித்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை. தொழில் வழிக்கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் என்பது வெறுமனே அடிப்படைத் தொழிலில் தரவேண்டிய பயிற்சிக்கானது மட்டுமேயானது அல்ல. அந்த அடிப்படைத்தொழில் தொடர்பான கோட்பாடுகள், அது தொடர்பான ஓவியங்கள், அந்தத் தொழில் எதனால் செய்யப்படுகிறது, என்னென்ன கோட்பாட்டு அடிப்படையில் செய்யப்படுகிறது, என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பது தொடர்பான விஞ்ஞானபூர்வ புரிதலையும் கற்றுத்தரவேண்டும். தொழில் கல்வியின் மிக முக்கியமான அம்சமாக அதுவும் இருக்கும். தொழில் கல்விக்கான நேரத்தில் அதையும் கற்றுத் தரத்தான் போகிறார்கள். மூன்று அம்சங்களை ஒருங்கிணைத்துக் கற்றுத்தருதல் என்ற தலைப்பின் கீழ் இதைத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறோம்.

மேலும் பல்வேறு கைத்தொழில்களை எந்திரகதியில் செய்யும் நபர்களை உருவாக்குவது இந்தத் தொழில் கல்வித்திட்டத்தின் நோக்கம் அல்ல; ஒவ்வொரு கைத்தொழிலிலும் உள்ளுறையாக இருக்கும் கல்வி/கற்றுக்கொடுத்தல் சார்ந்த அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் இலக்கு. எந்தவகைக் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கிறோமோ அது இந்த இலக்கைப் பூர்த்தி செய்வதாக இருக்கவேண்டும். கைத் தொழிலைக் கற்றுக் கொள்வது அல்ல; பள்ளிக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் வழிமுறையாகவும் கருவியாகவும் கைத்தொழிலைப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் இலக்கு.

2. இந்தப் புதிய கல்வித் திட்டத்தில் உயர் கல்வி மற்றும் மேல் நிலைக் கல்வி பற்றி எந்தப் பரிந்துரையும் இல்லையே என்று சிலர் விமர்சித்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார்கள். இந்தப் புதிய கல்வித் திட்டமானது ஆரம்ப நிலைக் கல்வியின் ஏழு ஆண்டுகளுக்கானது மட்டுமே. இந்தக் கல்வி, தேசம் முழுவதிலும் இருக்கும் குழந்தைகளுக்குக் கட்டாய அடிப்படைக் கல்வியாகக் கிடைத்தாகவேண்டும் என்ற இலக்குடன் தான் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்று வருபவர்களுக்கு உயர் கல்வி பாடத்திட்டம், வகுப்புகள் விரைவிலேயே வடிவமைத்துத் தரப்படும். அது தயாரானதும் அடிப்படைக் கல்வியுடன் ஒருங்கிணைத்ததாக கல்வியில் தொடர்ச்சி அறுபடாமல் இருக்கும் வகையில் செழுமைப்படுத்தித் தரப்படும்.

3. இந்தப் புதிய கல்வித் திட்டமானது ஏழு வயதான குழந்தைகளிடமிருந்து ஆரம்பிக்கிறது. அது மிகவும் தாமதமானது என்று பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வயதுக்கு முந்தைய குழந்தைகளுக்கான மழலையர் கல்வி தொடர்பாக எங்கள் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். அரசின் உதவியுடனும் முடிந்த அளவுக்குத் தனியார் பங்களிப்புகளுடன் அப்படியான மழலையர் பள்ளிக் கல்வி ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறோம். இன்றைய நிதிநிலைமை மற்றும் நாட்டின் பிற விஷயங்களைப் பொறுத்தவரையில் அந்த மழலையர் கல்வியைக் கட்டாய அடிப்படைக் கல்வியாக முன்வைக்க நாங்கள் விரும்பியிருக்கவில்லை. 7-14 வயதான குழந்தைகளை அடிப்படையாக வைத்து எங்கள் கல்வித் திட்டத்தை வடிவமைத்திருப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் குழந்தைகள் கட்டாயம் 14 வயது வரை படித்தாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

அ) இந்த அடிப்படைக் கல்வித் திட்டத்தில் சமூக, குடிமையியல் சார்ந்த பயிற்சியையும் பரிச்சயத்தையும் தரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். ஏழு வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு அது சாத்தியமில்லை.

ஆ) ஒரு நல்ல குடிமகனாக ஆக்கவேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறோம்.

இ) இந்தக் கல்வித் திட்டத்தில் பெறும் கல்வி முழுமையானதாக இருக்கவேண்டும். அறிவின்மை என்ற நிலை இந்தக் கல்வியைப் பெறும் யாருக்கும் இருக்கக்கூடாது என்று தீர்மானித்திருக்கிறோம்.

ஈ) இந்தப் புதிய கல்வித் திட்டத்தில் ஒருவர் கற்றுக் கொள்ளும் தொழில் கல்வியை வைத்து அந்த மாணவர் அந்த கைவினைத்தொழிலையே செய்து தன் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்யமுடியும். இளமைப்பருவமே ஒருவர் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள உகந்த பருவம் என்று உறுதியாக நம்புகிறோம். முடிந்தால் நல்லொழுக்கம், சமூக அக்கறை, குடிமைப் பண்பு மிகுந்த குடிமகனை உருவாக்க இந்த அடிப்படைக் கல்விக் கால அளவை 16 வயது வரை என்று நீட்டிக்கக்கூட விரும்புகிறோம்; ஆனால், ஏழு வயதுக்கு முன்பாக ஆரம்பிக்க விரும்பவில்லை.

4. எந்தவொரு விளையாட்டு அல்லது விளையாட்டுகளுக்கு இந்தப் புதிய கல்வித் திட்டத்தில் தனியான சிறப்பு கவனம் எதுவும் தந்திருக்கவில்லை. ஏனென்றால் அது ஒருவகையில் தன்னார்வத் திறமை சார்ந்த விஷயம். அதை அடிப்படைக் கல்வியின் அங்கமாக ஆக்கினால், அதன் இயல்பான தன்மை அடிபட்டுப் போய்விடும். எனினும் எங்கள் பாடத்திட்டத்தில் தனி நபர் விளையாட்டு, கூட்டு விளையாட்டு ஆகியவற்றுக்கு இடம் தந்திருக்கிறோம். அனைத்து பள்ளிகளில் வெவ்வேறு விளையாட்டுகளுக்கு ஊக்கம் தரவேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறோம். பள்ளிகளில் உடற் பயிற்சி-விளையாட்டு வகுப்பு என்பது பாடங்களில் இருந்து தப்பிக்கும் வழியாக இருக்கக்கூடாது. விளையாட்டும் கூட்டுறவை வளர்க்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்றே பரிந்துரைத்திருக்கிறோம்.

5. ஏற்கெனவே எங்கள் அறிக்கையில் தெளிவாகச் சொன்ன விஷயம் தான். இருந்தும் மீண்டும் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பள்ளிக் குழந்தைகள் கைத்தொழில் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களின் மூலமான வருமானத்துக்கும் ஆசிரியர்களின் சம்பளத்துக்கும் இடையில் எந்தவொரு நேரடித் தொடர்பும் கிடையாது. இப்போது இருப்பது போலவே அரசுக் கருவூலத்திலிருந்து நேரடியாக ஆசிரியர்களுக்கு சம்பளம் தரப்படும். பள்ளியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பதால் கிடைக்கும் நிலையற்ற வருமானத்தைக் கொண்டு அல்லது அதன் அடிப்படையில் அல்ல. பள்ளிக்குக் கிடைக்கும் அத்தகைய வருமானம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுவிடும். பள்ளியில் கைத்தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே ஆசிரியர்களின் சம்பளத்தை ஈடுகட்டிவிடமுடியவேண்டும் (உடனடி இலக்கு அல்ல). பள்ளிக்குத் தேவையான பிற கருவிகள், கட்டுமானங்களுக்கு தனியார் மற்றும் அரசு உதவிகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றுதான் வார்தா கல்வி மாநாட்டில் மிகத் தெளிவாகவே தீர்மானம் வெளியிட்டிருக்கிறது.

6. பள்ளியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்றுக் கொடுக்க ஒரு விற்பனை மையத்தை அமைப்பது தொடர்பாக நாங்கள் எதுவும் பரிந்துரைத்திருக்கவில்லை. ஏனென்றால், புதிய தொழில் வழிக் கல்வித் திட்டம் ஒன்றைத்தான் உருவாக்கியிருக்கிறோம். அதன் அரசியல் மற்றும் நிர்வாக நடைமுறைகள் பற்றி அதிகம் சொல்லவிரும்பவில்லை. மேலும் மஹாத்மாஜி நீங்கள், பள்ளிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அரசாங்கமே நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ளவேண்டும் என்று வார்தா மாநாட்டில் சொன்னதையும் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம்.

7. எங்கள் புதிய கைத்தொழில் கல்வித் திட்டமானது தொழில் மயமாக்கத்துக்கு எதிரானது; நாங்கள் சமூகத்தை நவீன காலத் தேவைகளுக்கு சிறிதும் உதவாதவகையில் பழங்காலத்துக்கு இழுத்துச் செல்ல விரும்புகிறோம் என்று ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. கிராமப்புறப் பொருளாதாரம். தொழில்மயமாக்கம் ஆகிய இரண்டின் நன்மை தீமைகள் பற்றி எதுவும் இங்கு நாங்கள் பேசவிரும்பவில்லை. அடிப்படைக் கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரையில் பெருந் தொழில் மயமாக்கத்துக்கும் சிறு கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நாங்கள் கைத்தொழில் மூலமான கல்வியைப் பரிந்துரைத்திருப்பதன் முக்கிய காரணம் என்னவென்றால் அது உளவியல் ரீதியாக மிகவும் வலுவான திறமையான கல்வி முறை என்பதால் மட்டுமே. கைக்கும் கண்ணுக்குமான ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி, செய்முறைப் பயிற்சி, கூர்ந்து கவனிக்கும் திறன், உடல் உழைப்பு இவையெல்லாம் தொழில்மயமாக்கலுக்கு பயன்படாது என்று எதனால் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. அதிலும் இன்றைய கல்வி என்பது பெரிதும் புத்தகப் படிப்பையு கோட்பாடுகளையும் மட்டுமே சார்ந்ததாக இருக்கிறது. மனனம், தேர்வு, மதிப்பெண் மூலம் செயல் ஊக்கமற்ற தலைமுறையையே உருவாக்கிவருகிறது. நமது மாணவச் செல்வங்களின் அனைத்துவகையான செய்முறை மற்றும் தொழில் சார் திறமைகளை முன் அனுமானத்துடன் முடக்குவதாக இருக்கிறது. நாங்கள் முன்வைக்கும் புதிய கைத்தொழில் வழிக் கல்வி அதற்கு முற்றிலும் மாறானது.

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *