Skip to content
Home » காந்தியக் கல்வி #10 – விரிவான பாடத்திட்டம்

காந்தியக் கல்வி #10 – விரிவான பாடத்திட்டம்

காந்தியக் கல்வி

கல்விக்கான அடிப்படைத் தொழிலாக விவசாயம்

இந்த பாடத்திட்டத்தில் இரண்டு முக்கியமான வகைகள் இருக்கின்றன. முதலாவதாக ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரையான பாடத்திட்டம். இந்த வகுப்புகளுக்கு, தொழில் வழிக் கல்விக்கான அடிப்படையாக விவசாயம் இருக்காது. அதேநேரம் இந்தக் காலகட்டத்து மாணவர்களுக்கு பயிர் வளர்ப்பு, மண் மேலாண்மை ஆகியவை பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் கற்றுத்தரப்படும். இவை பொது அறிவியல் பாடத்தின் அங்கமாக அமையும். மாணவர்கள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் காய், கனிகள், தோட்டப் பயிர்கள் ஆகியவற்றை வளர்ப்பார்கள்.

இரண்டாவதாக, ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு தொழில் வழிக் கல்வியின் அடிப்படைத் தொழிலாக விவசாயத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டுக்கான கோட்பாடு மற்றும் செய்முறைப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் ஒன்றைப் படிக்கும்போது இன்னொன்று எளிதில் விளக்க முடியும்படியாகவும் புரிந்துகொள்ளும்படியாகவும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

முதல் வகுப்பு

குறிப்பு : இந்த வகுப்பில் சேரும் குழந்தைகளின் வயது ஏழாக இருக்கும். சிறியதொரு நிலத்தில் பரீட்சார்த்தமான முறையில் சிறிய அளவில் தோட்ட வேலைகள் செய்துபார்ப்பார்கள். சின்ன நீர்க்கலங்கள், சின்ன மண் கொத்தி ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். முதல் ஆறு மாதங்களுக்கு அனைத்தையும் கண்ணால் பார்த்துக் கற்றுக் கொண்டால் போதும். கைகளால் எதையும் செய்யவேண்டாம். கீழே விவரிக்கப்பட்டிருக்கும் செய்முறைப் பயிற்சிகளை ஆறு மாதங்களுக்குப் பின் செய்ய ஆரம்பித்தால் போதும். கோட்பாட்டு வகுப்புகள் எல்லாம் மிகவும் ஆர்வத்தைத்தூண்டும்வகையில் கற்றுத்தரப்படவேண்டும். முதலில் அனைத்தையும் மேலோட்டமாகச் சொல்லிக் கொடுத்தால் போதும். நுட்பமான, ஆழமான விஷயங்களைப் பின்னர் சொல்லிக் கொடுக்கலாம்.

செய்முறைப் பயிற்சி வகுப்புகள்

  1. பாத்திகளில் விதை நடுதல்
  2. பாத்திகளுக்கு நீர் பாய்ச்சுதல்
  3. தோட்டச் செடிகள், விதைகளை அக்கறையுடன் பராமரித்தல்
    (அ) நீர் ஊற்றுதல்
    (ஆ) களை எடுத்தல்
    (இ) களைகளைக் கட்டுப்படுத்தவும் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் நிலத்தில் சருகுகளைப் பரப்பிவைத்தல். மூடாக்கு போடுதல்.
    (ஈ) பூச்சிகளை அகற்றுதல்
    (உ) உரமிடுதல், உரம் தயாரித்தல்
  4. பூத்தாவரங்களில் இருந்து விதைகள் சேகரித்தல், காய்கள் பறித்தல்.
  5.  விலங்குப் பண்ணை. வளர்ப்பு பறவைகள், விலங்குகளுக்கு உணவு தருதல். குட்டி விலங்குகளை அன்பாகப் பராமரித்தல்.

கோட்பாடு வகுப்புகள்

  1. பயிர்கள்/தாவரங்களை அடையாளம் காணக் கற்றுக் கொள்ளுதல், வேர்கள், தண்டுகள், இலைகள், பூக்கள், கனிகள் என அவற்றின் உறுப்புகளைக் கற்றுக் கொள்ளுதல்.
  2. விதையில் இருந்து வேர், தண்டு, இலைகள், பூக்கள், கனிகள் என ஒரு பயிர் எப்படி முளைகிறது.
  3. ஒரு பயிர் வளர என்னென்ன தேவை? மண், நீர், பச்சயம், சூரிய ஒளி, காற்று.
  4. பறவைகள், விலங்குகளின் பயன்கள், பண்புகள்

குறிப்பு: மேலே கூறப்பட்டிருப்பவற்றோடு நிறுத்தாமல் குழந்தைகளை கிராமப்புற வயல்வெளிகள், தோப்புகளுக்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் உயிர் வாழ்க்கை அனைத்தையும் நன்கு கவனிக்கக் கற்றுத்தரவேண்டும்.

இரண்டாம் வகுப்பு

செய்முறைப் பயிற்சி வகுப்பு

  1. விதைகள் நடுதல்
  2. சிறு அட்டை/மரப் பெட்டிகளில் பாத்திகள் அமைத்தல்
  3. சின்னஞ்சிறு பாத்திகளில் நடுவதற்கான இடங்களைத் தயார்படுத்துதல்
    (அ) தோண்டுதல்
    (ஆ) உரமிடுதல்
    (இ) மண், களைக் கொத்தி பயன்படுத்துதல்
  4. காய் மற்றும் பூச் செடிகளின் நாற்றுகளைப் பறித்து வேறு இடத்தில் நடுதல்
    (அ) போதிய இடைவெளி விடுதல்
    (ஆ) நடுதல்
    (இ) நீர் ஊற்றுதல்
    (ஈ) பராமரித்துப் பாதுகாத்தல்
  5. மூடாக்கு போடுதல் சிறிய களைக் கொத்தியால் களை எடுத்தல்
  6. உரமிடுதல்
    (அ) மண்ணைக் கிளறுதல் மற்றும் உரம்கலந்து பரப்புதல்
    (ஆ) உரங்களைத் தயாரித்தல்
  7. பூச்சிகளை அகற்றுதல், பூச்சி கொல்லி தெளித்தல்
  8. விதை சாரா பயிர் நடுதல். பதியனிடுதல். விளைவுகளை குறித்துக் கொள்ளுதல்.
  9. விலங்கு வளர்ப்பு. வளர்ப்பு மிருகங்களைப் பராமரித்து அவற்றின் குணங்களை ஆராய்தல்
  10. கலையும் கைத்தொழிலும்

சில அடிப்படை வடிவங்களில் தோட்டங்களில் உருவங்கள் தயாரித்தல். மலர் மாலைகள், மலர் கொத்துகள் தயாரித்தல். பூச்செடிகளுக்கான தொங்கும் மண் கலயங்கள், மூங்கில் கீற்றுகள் கொண்டு கொடிகள் படர வழி செய்தல்.

கோட்பாடு வகுப்புகள்

    1. பாத்திகளுக்கான நிலம் எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும், பாத்திகளை எப்படி உருவாக்குவது?
    2. என்னவகையான மண், என்ன வகையான உரம் தேவை?
    3. நல்ல விதை, மோசமான விதையை அடையாளம் காணுதல்
    4. பயிர் முளைக்க நல்ல விதை எந்த அளவுக்குத் தேவை?
    5. பயிரின் பல்வேறு அங்கங்களின் செயல்பாடுகள்
      (அ) வேர் – மண்ணில் ஊன்றுதல் – உணவை உறிஞ்சுதல்
      (ஆ) தண்டு – உணவைப் பயிர் முழுவதும் கொண்டு சென்று பயிரை வளர வைத்தல்
      குறிப்பு : உறிஞ்சப்படும் திரவம் எப்படி தண்டில் பயணம் செய்கிறது என்பதை சிவப்பு மை பரிசோதனை மூலம் வகுப்பில் செய்து பார்க்கலாம்.
    6. விதைகளை நடுவதற்கு மாலை நேரம் நல்லது. நீர் ஊற்ற அதிகாலையும் பின் மதியமும் நல்லது.
    7. விதைகள் சேகரிப்பு. எப்படி, எங்கே இருந்து சேகரிக்கவேண்டும்?

குறிப்பு : முக்கியமான விஷயங்கள் நடக்கும்போது பண்ணையைச் சுற்றி மாணவர்களை அழைத்துச் சென்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கக் கற்றுத் தரவேண்டும்.

மூன்றாம் வகுப்பு

செய்முறைப் பயிற்சி வகுப்பு

குறிப்பு : இந்த வகுப்பில் பூந் தோட்டம், காய்கறித்தோட்டம் ஆகியவற்றின் பணிகள் அனைத்தையும் மாணவர்களே செய்யவேண்டும். சிறிய மண்வெட்டிகள், முள் கரண்டிகள், களைக் கொத்திகள் மற்றும் பல கருவிகளைக் கொண்டு கைகளால் அனைத்தையும் செய்யவேண்டும்.

  1. முந்தைய வகுப்புகளில் செய்த அனைத்தையும் மீண்டும் செய்து பார்க்கவேண்டும்.
  2. தாவரங்களை மண் சட்டிகளில் வளர்க்கவேண்டும்.
  3. மண் சட்டிகளுக்கான இலைக் குவியல் உரம் மற்றும் பிற இயற்கை உரங்கள் தயாரிக்கவேண்டும்.
  4. பதி வைத்தல். நடப்பவற்றைக் குறித்துக் கொள்ளுதல்
  5. வண்ணத்துப் பூச்சி வளர்த்தல், அதன் நான்கு நிலைகளைத் தெரிந்துகொள்ளுதல்
  6. பூ மற்றும் காய்கறித் தோட்டத்தை இலை தழைகளால் மூடுதல் (வகுப்பு இடைவேளைகளின் போது)
  7. சில மண் சட்டிகளில் உரம் இட்டும் சிலவற்றில் உரமின்றியும் பயிர் வளர்த்து வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுதல்.
  8. விலங்கு வளர்ப்பு. வளர்ப்பு மிருகங்கள் பராமரிப்பு.

கோட்பாடு வகுப்பு

  1. முளைவிட்ட விதைகளை ஆராய்தல்
    (அ) விதைக் கரு
    (ஆ) முளை விதை, இலை,
    விதைக்கருவானது முளையாகவும் தளிராகவும், முதல்நிலை வேராகவும் வளர்தல். முளையின் பாகங்கள் முளை இலை மேல் நோக்கியும் முதல் நிலை வேர் கீழ் நோக்கியும் வளரும் விதம். முளை விதையானது பயிர் வளர்ந்ததும் என்ன ஆகிறது.
  2. வேர் ஆராய்ச்சி
    (அ) ஆணி வேர்
    (ஆ) சல்லி வேர்
  3. தண்டுகள் மரப்பட்டை, மரக்கணுக்கள், இடைக் கணுக்கள், மொட்டுகள், கிளைகள் இலைகள் பற்றித் தெரிந்துகொள்ளுதல். வேருக்கும் தண்டுக்கும் இடையிலான வித்தியாசம்
  4. வண்ணத்துப் பூச்சி, வெட்டுக் கிளியின் வாழ்க்கை
  5. பூச்சிகள். கட்டுப்படுத்தும் வழிகள்
  6. மண் சட்டி நிரப்புதல்
    (அ) மண் சட்டிகளை நிரப்பத் தேவையான பொருட்கள்
    (ஆ) நல்ல இலை/சருகு உரம், இயற்கை உரத் தயாரிப்பு
  7. உரங்களின் தேவை மற்றும் செயல்பாடுகள். செயற்கை உரங்களின் பயன்பாடு.
  8. விலங்கு மற்றும் மனிதக் கழிவுப் பொருட்கள் மேலாண்மை. அவற்றை உரமாகப் பயன்படுத்துதல்.
  9. பல்வேறு பால் பொருட்கள்பற்றித் தெரிந்துகொள்ளுதல்.

நான்காம் வகுப்பு

செய்முறைப் பயிற்சி வகுப்பு

  1. தோட்டப் பாத்திகளில் மழைக்கால காய்கறிகளை வளர்த்தல். இடத்துக்கு ஏற்றார்ப் போல் பீன்ஸ், கத்திரி, பூசணி வகைகள்.
  2. பாத்தியில் நட்ட நாற்றுகளைப் பறித்து எடுத்து வேறு இடங்களில் இடம் விட்டு நடுவதற்குத் தோதாக நிலத்தைத் தயார்ப்படுத்துதல்.
  3. நிலத்துக்கு உரமிடுதல்.
  4. நீர்ப்பாசன ஏற்பாடுகளைச் செய்தல். நாற்றுகளைப் பறித்து நட்டபின் நீர்பாய்ச்சுதல்.
  5. மண்ணின் மேலடுக்கைக் கிளறி, பல்வேறு வகையான உரங்களைச் சேர்த்தல். அமோனியம் சல்பேட், நைட்ரேட் முதலான உரங்கள்.
  6. மண், உரங்கள், சுண்ணாம்பு, சாம்பல் சேர்த்து அல்லது சேர்க்காமல் நீர் நிலத்தில் ஊடுருவி வடிகட்டப்படும் விதம், நுண் புழை ஏற்றம் போன்ற பரிசோதனைகளைச் செய்து பார்த்தல்.
  7. பல்வேறு ஏர் கலப்பைகள் பற்றிப் படித்தல்.
    (அ) மரக்கலப்பை
    (ஆ) இரும்பு கலப்பைகள். இவை நிலத்தில் பயன்படுத்தப்படுவதைத் தள்ளி நின்று கூர்ந்து கவனித்தல்.
  8. அருகில் இருக்கும் மலைகளுக்குச் சென்று மண், பாறைகள், மணல் துகள்கள் உருவாவதை விளக்குதல்.
  9. கோழிப் பண்ணை. கோழிகளுக்கு உணவு தருதல், பண்ணையைச் சுத்தம் செய்தல், முட்டைகள் சேகரித்தல், குஞ்சுகளை அக்கறையுடன் பராமரித்தல்.

கோட்பாட்டு வகுப்புகள்

  1. பயிர் வகைகளை அடையாளம் காணுதல். ரபி, கரிஃப் என விதைநடும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்துதல். நன் செய், புன் செய் பயிர்கள் போன்ற வகைப்பாடு.
  2. மண்ணியல்
    (அ) மண் உருவாகும் விதம் : பாறைகளை காலப்போக்கில் உடைத்து நொறுக்கும் இயற்கை சக்திகள். காற்று, மழை, வெய்யில்
  3. சுற்றுப்புறத்தில் இருக்கும் மண்ணின் தன்மை
  4. மணல் பாங்கான நிலம், களி மண் நிலம், கரிசல் மண், வண்டல் மண்
  5. அடையாளப்படுத்துதல்
    (அ) ஸ்பரிசம், நிறம், எடை, துகள்
    (ஆ) ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தல்
    (இ) ஒவ்வொன்றின் பெளதிக இயல்புகள்
    (ஈ) மண்ணின் தன்மைகள், கட்டமைப்புகளுக்கிடையிலான ஒப்பீட்டு ஆய்வு. நீர் ஊடாடும் தன்மை, நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கு உதவும் குணம், நீர் உறிஞ்சும் தன்மை, நுண் புழை ஏற்றம்
  6. நில ஈரப்பதத்தின் வகைகள்
  7. நில ஈரப்பதத்தை தக்கவைக்கும் வழிகள்
  8. உரங்களின் அவசியம் மற்றும் அவை செயல்படும் விதங்கள். எப்போது, எப்படி, எந்த அளவுக்கு செயற்கை உரங்கள் இடவேண்டும் என்ற படிப்பு.

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *