Skip to content
Home » காந்தியக் கல்வி #23 – விரிவான பாடத்திட்டம் – 14

காந்தியக் கல்வி #23 – விரிவான பாடத்திட்டம் – 14

பொது அறிவியல்

பொது அறிவியல்

வகுப்பு – 1

1. அண்மைப் பகுதிகளின் பிரதான பயிர்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் இவற்றின் பெயர்கள், அடையாளம் காணுதல்.
2. சூரியனை அடிப்படையாக வைத்து திசைகளைக் கண்டறிதல்; பருவ காலங்கள்; பருவ கால மாற்றங்களின் விளைவுகள்; மரங்கள், செடிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன, மனிதர்கள் மீதான சூரியனின் தாக்கம்.
(அ) ஆண்டின் பல்வேறு காலகட்டங்களில் மரங்களின் நிறங்கள்; இலை உதிர் காலம்; தாவரத்தின் முக்கிய பாகங்கள்; இலை, தண்டு, வேர் இவற்றின் பயன்கள், வேறுபாடுகள்; தாவரச் சத்துகள் சேரும் விதம்; சேரும் இடம்; உருளைக்கிழங்கு, வெங்காயம்.
(ஆ) வசந்தகாலம், மழைக்காலம் ஆகியவற்றைவிட, பூச்சிகள் குளிர் காலத்தில் குறைவாக இருப்பது ஏன்? மழைக்காலங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பது ஏன்? குளிர் காலத்தில் அவை எங்கு செல்கின்றன?
(இ) மனிதர்களுடைய ஆடைகளில் ஏற்பட்டுவந்திருக்கும் மாற்றங்கள். உடைகள் மனிதர்களைக் குளிரில் இருந்து எப்படிப் பாதுகாக்கிறது?
3. காற்று எப்போதும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறது. மனிதர்கள் சுவாசிக்க காற்று அவசியம். காற்று இருந்தால்தான் உயிர் வாழமுடியும். வெளியிலும் வகுப்பறையிலும் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
4. நீர் நிலைகள்-மூலங்கள் (ஆறு, ஊற்று, குளம், கிணறு); நீரோட்டம்; நீர் ஆவியாதல், சூரிய ஒளி, மேகங்கள், பனித்துளி, மழை. ஆவியாதல் மூலம் ஏற்படும் நீரிழப்பு.
5. நெருப்பு எரிய காற்று தேவை. நெருப்பிடம் எச்சரிக்கை தேவை; உடைகளில் நெருப்பு பற்றினால் ஓடாதீர்கள்.
6. தூய்மை பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதன் அவசியம். உடம்பைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். முகம், கைகள், நகங்கள், பல் இவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். வேப்பங்குச்சியின் பயன்பாடு; உடைகளைத் தூய்மை செய்தல்; கிராமங்களில் கிடைக்கும் பல்வேறு பொருட்கள் கொண்டு துவைத்தல்.
7. ஆதி காலம் தொட்டு, உலகம் முழுவதுமான மனிதர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றை எப்படியெல்லாம் அவதானித்துவருகிறார்கள்; காலம், திசை இவற்றை எப்படிக் கணிக்கிறார்கள்?
விவசாயிகள், பயணிகள், கடல் பயணிகள், மாலுமிகள், படைத் தளபதிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு. வான சாஸ்திரத்தின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த நன்மைகள்.
சூரிய, சந்திர உதயங்கள், அஸ்தமனங்கள். சூரிய உதயத்தின்போது காலையில் மறையும் நட்சத்திரங்கள் மாலையில் சூரியன் மறைந்ததும் முளைத்து வருவதை மாணவர்கள் கவனிக்கும்படிச் செய்யவேண்டும்.
சந்திரனின் பல்வேறு நிலைகள். பெளர்ணமி, அமாவாசை; இந்நாட்களில் என்ன நடக்கிறது?
மறு நாள் சூரியன் எந்தப் புள்ளியில் உதிக்கும்; மறையும்; ஜன்னல் கம்பிகளின் நிழல் எதிரெதிர் திசைகளில் விழும் விதம். கோடைக்கால சம பகலிரவு நாள் (ஜூன் 22), குளிர் கால சம பகலிரவு நாள் (22 டிசம்பர்).
துருவ நட்சத்திரம், சப்த ரிஷி மண்டலம் (உர்ஸா மேஜர்) இவற்றைக் கண்டுபிடித்து வட கோடி முனையைக் கண்டறிதல்.
சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் இவற்றை அவதானித்தல்.
மாணவர்கள் இந்த ஆய்வுகளைச் செய்ய வைக்கவேண்டும். அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். வானவியல் சார்ந்த நிகழ்வுகளைப் பார்க்க முன்கூட்டியே மாணவர்களைத் தயார்படுத்தவேண்டும்.

வகுப்பு – 2

1. அடையாளம் காணுதல்
(அ) மரம் செடிகளின் பொதுவான வடிவம், அளவுகள்
(ஆ) தண்டு, மரப்பட்டை வகைகள்
(இ) இலைகளின் பொதுவான வடிவம்
(ஈ) பூக்களின் வடிவம், அளவு, நிறம்
(உ) அருகில் இருக்கும் ஐந்து மரங்களின் கனிகள், விதைகள் ஆகியவற்றின் பொதுவான வடிவம், அளவு.
2. மேலே உள்ளவற்றில் அ-இ வரையானவற்றில் 10 காய்கள், தானியங்களை அடையாளம் காணவேண்டும். எப்போது பயிரிடுவார்கள், அறுவடை செய்வார்கள், பயிர் முளைக்க ஆகும் காலம் இவை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.
3. குறைந்தது நான்கு வளர்ப்பு மிருகங்கள், மூன்று காட்டு விலங்குகளின் பொதுவான தோற்றம், இடம் பெயரும் விதம், உணவு, குரல் எழுப்பும் விதம். குட்டையில் வாழும் உயிர்கள்: தவளை, மீன்; அவை எப்படி சுவாசிக்கின்றன. தலைப்பிரட்டையில் இருந்து தவளை உருவாகும் விதம்.
4. பறவைகள்: பொதுவான வடிவங்கள், அளவு, நிறம்; பறக்கும் விதம். கூடு கட்டுதல், உணவு கொடுத்தல். முட்டையிடும் பருவம். அருகமைப் பகுதிகளில் தென்படும் ஐந்து முட்டைகளின் அளவு, வடிவம், நிறம். பள்ளியில் பறவைகளுக்கான தானியங்கள், தாக நீர்க் கலயங்கள் வைத்தல்.
5. காற்றில் தூசிகள் இருப்பதைத் தெரிந்துகொள்ளுதல்.. சூரிய ஒளி மிகுந்த நாளில் தூசி மிகுந்திருக்கும் காற்று; மணல் புயல்; பாதி வெளிச்சம் இருக்கும் அறையில் சூரிய ஒளித் தூண் உருவாக்குதல், தூசியினால் வரும் சுவாசப் பிரச்னைகள், தூசியின் அபாயங்களைக் குறைப்பது.
6. தண்ணீர் : தாவரங்கள், விலங்குகள், மனிதர்களுக்கு இதன் அவசியம். தூய்மையான அசுத்தமான தண்ணீரின் குணங்கள்; விளைவுகள். நீரால் பரவும் நோய்கள். கிராமத்துக் கிணறு.
(1-6 இவையெல்லாம் நேரடியாகச் செய்து பார்க்கப்படவேண்டும். எதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் வழிகாட்டவேண்டும்)
7. சுவாசப் பயிற்சி, தூய காற்றின் அவசியம்; நல்ல தூக்கத்தின் அவசியம்.
8. நாள், மாதம், வருடம் எல்லாம் ஒரே மாதிரியான அளவு கொண்டவை அல்ல; வானியல் நிகழ்வுகள் சார்ந்து மாறக்கூடியவை.
பூமி தன் அச்சில் ஒரு முறை சுழல்வதால் பகலும் இரவும் கொண்ட ஒரு நாள் உருவாகிறது. ஒரு நாளானது 24 மணித் துளிகள் அல்லது 60 நாழிகைகள் கொண்டது. பிந்தையதுதான் மிகவும் இயல்பான கால அலகு.
பூமியை, சந்திரன் சுற்றிவருவதன் அடிப்படையில் மாதம் கணக்கிடப்படுகிறது. பெளர்ணமியில் தொடங்கி அமாவாசை வரை அல்லது அமாவாசையில் தொடங்கி பெளர்ணமி வரை என இது கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்துக்கு சராசரியாக 30 நாட்கள்.
பருவங்கள் : கோடை காலம், இலையுதிர் காலம், வசந்த காலம், மழைக்காலம், குளிர்காலம்.
சந்திர, சூரிய கிரஹணங்கள். அவை எதனால் ஏற்படுகின்றன?

வகுப்பு – 3

1. பயிர்களுக்கு உணவு, தண்ணீர், சூரிய ஒளி தேவை.
வெவ்வேறு பாத்திகளில் வெவ்வேறு உரங்கள், தண்ணீர், சூரிய ஒளியின் அளவில் வேறுபாடு என பரிசோதனை செய்து விளைச்சலை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
திரவத்தின் கரைக்கும் திறன். தாவரங்களின் உணவு திரவங்களில் மேலேறும் விதம்; வேர்கள், தண்டுகள், இலைகள், மலர்கள், விதைகள் இவற்றின் செயல்பாடுகள்.
2. விதைகளும் முளைவிடுதலும். குறைந்தது மூன்று விதைகள் கீழ்க்கண்டவற்றில் இருந்து
(அ) கோதுமை, பார்லி
(ஆ) பட்டாணி, பருத்தி, பருப்புவகைகள்
(இ) வேம்பு, ஆமணக்கு
இரு வித்திலைத் தாவரம், ஒரு வித்திலைத் தாவரம் இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள். மண்ணுக்குள் முளைவிடுதல், மண்ணுக்கு மேல்முளைவிடுதல்.
விதைப் பரவல். காற்று, விலங்குகள், பழங்கள், தண்ணீர்.
3. மூன்று வளர்ப்பு விலங்குகள் பற்றி விரிவாகப் படிக்கவேண்டும்: பசு, பூனை, நாய். கன்றுகள்,குட்டிகளை அவை கவனித்துக்கொள்ளும் விதம்.
4. அக்கம் பக்கத்தில் வசிக்கும். சிலந்திகள், பூச்சிகள்; அவற்றை இனம் காணுதல். அவற்றின் உணவு, வீடு, பழக்க வழக்கங்கள். ஈ. முட்டையில் இருந்து லார்வா, அடுத்த கட்டம். கூட்டுப் புழு, ப்யூபாவில் இருந்து வண்ணத்துப் பறவை. ஈக்கள் வளரும் இடம். நோய்களைப் பரப்பும் விதம். வீடுகளை மொய்க்கும் கொசு, ஈக்களை விரட்ட என்னவகை தாவரங்களை நடவேண்டும்.
5. உள்ளிழுக்கப்படும் காற்று, வெளிவிடும் காற்று இரண்டின் வேறு பாடு தொடர்பான பரிசோதனைகள்; காற்றோட்டத்தின் முக்கியத்துவம்.
6. தூய்மையான, அசுத்தமான தண்ணீரின் குணங்கள்; நீரை எப்படி சுத்திகரிப்பது; வடிகட்டுதல், கொதிக்கவைத்தல், குளிர்வித்தல்.
7. வீட்டில் தூய்மையின் அவசியம். கழிவுகளை அகற்றுதல். சாணம், மலம். அவற்றை உரங்களாகப் பயன்படுத்துதல்.
8. முழுமையான ஊட்டச் சத்து நிறைந்த உணவு. நேரம் தவறாமல் உண்ணுதல். முறையான, போதிய உறக்கம். உடற்பயிற்சிகள்.
9. மூன்றாம் நான்காம் வகுப்புகளுக்கானவை:
ஒன்றாம் வகுப்புக்கான எண் ஏழில் சொல்லப்பட்டிருப்பதையும் இரண்டாம் வகுப்புக்கான எண் எட்டில் சொல்லப்பட்டிருப்பதையும் விரிவாகப் படிக்கவேண்டும்.
பல்வேறு முக்கியமான நட்சத்திர மண்டலங்கள், விசித்திரமான உருவங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.
நட்சத்திர அமைப்புகள், மண்டலங்களின் படங்களை மாணவர்கள் வரையவேண்டும். அவர்களே புதிதாக வானில் பார்த்து புதிய அமைப்புகளை, உருவங்களை வரைலாம்.

வகுப்பு – 4

1. தாவரவியல் : நீர் மற்றும் உயிர்ச் சத்துகளைக் கொண்டு செல்லும் ஊடகமாக, சுவாச உறுப்பாக, கரிமத்தை உட்கொள்ளும் உறுப்பாக இலைகள் செயல்படும் விதம்.
வேர்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள். சல்லிவேர்கள், வேரால் நீர் உறிஞ்சப்படும் விதம்.
2. கிராமத்துக் குட்டை: நீர் பறவைகள். அவற்றின் உணவு, வாழிடங்கள், கூவும் குரல்கள், எங்கு, எப்படி முட்டைஇடுகின்றன? வலசை போதல்.
3. பூச்சிகளின் வாழ்க்கை: கொசு. முட்டையில் இருந்து கொசுவாக மாறுவது வரை. கொசுவினால் வரும் நோய்கள். எங்கு அவை இனப்பெருக்கம் செய்கின்றன. மலேரியாவும் அதைத் தடுக்கும் வழிகளும். மலேரியாவினால் கிராமங்களில் ஏற்படும் துயரம், இழப்புகள். தேனீ, எறும்புகள்: வேலைப் பங்கீடு, சமூக அமைப்பு,
4. சிலந்திகள், தேள்கள், பாம்புகள். சிலந்திகளின் குணங்கள். பூச்சிகளிடமிருந்து அவற்றைப் பிரித்துப் பார்ப்பது எப்படி? மனிதர்களுக்குப் பூச்சிகள் செய்யும் நன்மைகள். தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்தல்.
விஷமுள்ள, விஷமில்லாத பாம்புகளை அடையாளம் காணுதல். விவசாயிகளுக்கு விஷமில்லாத பாம்புகள் உதவும் விதம். தேள், பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி.
5. பருப்பொருளின் மூன்று நிலைகள். தண்ணீர் திடப்பொருளாக, திரவமாக, ஆவியாக இருப்பது. வடிகட்டுதல், இறுகச் செய்தல்.
6. காற்றும் ஒரு பருப்பொருளே என்று நிரூபிக்கும் சோதனைகள். காற்று, வெளியை ஆக்கிரமிக்கும் விதம். காற்றுக்கு எடை உண்டு. அதுவே அழுத்தத்தை உருவாக்குகிறது. வாயுக்கள், திரவங்கள், திடப்பொருட்கள் எல்லாம் வெப்பநிலை மாறும்போது சுருங்கி விரியும் தன்மைகொண்டவை என்பதை விளக்கும் பரிசோதனைகள். நீராவி எப்படிக் குளிர்ந்து நீர்த் திவலைகள் ஆகிறது என்பதை விளக்கும் பரிசோதனை.
7. மனித உடலியல் : சுவாசம், ரத்த ஓட்டம், குடல் இயக்கம். பொதுவான நோய்கள், தொற்று நோய்கள்: காலரா, பிளேக், பெரியம்மை, சின்னம்மை, மலேரியா.
நோய்கள் எதனால் ஏற்படுகின்றன; அவை பரவுவதை எப்படித் தடுக்கலாம்?
8. மூன்றாம் வகுப்புக்கான 9-ம் எண் விவரங்களின் அடுத்த கட்டப் படிப்பு.

வகுப்பு – 5

1. தாவரங்கள், விலங்குகள் தொடர்பான பாடங்களின் அடுத்த கட்டம். கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில்
(அ) மலர்கள், அவற்றின் பாகங்கள், செயல்பாடுகள்.
(ஆ) விதைகள், அவற்றின் பாகங்கள், செயல்பாடுகள்
(இ) விதை, கனி உருவாகும் விதம்
(ஈ) கனிகள், விதைகள் பரவும் விதம்.
(உ) விதைப் பரவலில் பூச்சிகள், பறவைகளின் பங்கு
(ஊ) விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள். விஷக்கடியின் அறிகுறிகள். பாம்பு, நாய்க்கடிக்கான முதலுதவி.
2. பல்வேறு விதமான உணவுகள் அவற்றின் சத்துகள். ஜீரணமாதல், ஜீரண உறுப்புகள், செயல்படும் விதம். எதைச் சாப்பிடவேண்டும்; எப்போது சாப்பிடவேண்டும். அனைவருக்கும் ஒரே பொதுவான கோப்பை, அதன் அபாயம்.
3. காற்று: அதன் உட்பொருட்கள், தூசிகள், அதைத் தூய்மைப்படுத்தும் விதம், மரங்கள் காற்றைச் சுத்தப்படுத்தும் விதம். பலர் இருக்கும் அறையில் உள்ள காற்றின் தன்மை, காற்றோட்டத்தின் வழிகள், வறட்சி, வெளியின் அழுத்தம்.
4. தண்ணீர்: அதன் உட்பொருட்கள்; சுத்தப்படுத்தும் வழிகள்; அசுத்தமான தண்ணீரினால் ஏற்படும் காலரா, வயிற்றுப் போக்கு, டைஃபாய்ட், வயிற்றுப் பூச்சி நோய்கள். அவற்றைத் தடுக்கும் வழிகள். பாதுகாப்பு வழிகள்.
கரைசல்கள்; கரையும் தன்மை, பூரிதக் கரைசல், படிகங்கள்.
5. காந்த ஊசி. காந்தங்கள். காந்தத்தின் தன்மைகள்.
6. இடி, மின்னல், உராய்வு மின்சாரம், எளிய மின் சேமக்கலம்
7. புகழ் பெற்ற விஞ்ஞானிகள், அவர்களுடைய கண்டுபிடிப்புகள், உண்மையின் தேடல் பற்றிய கதைகள்.
8. சூரியக் குடும்பம் : நவ கிரஹங்கள். விண் கற்கள், கிரஹங்கள், அவற்றின் துணை கிரகங்கள், நிலாக்கள், சனி கிரஹத்தின் வளையம். விண்வெளி தூசியில் பட்டுப் பிரதிபலிக்கும் சூரிய ஒளி.
நிலவின் புவியியல் : சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் நாட்கள், சூரியனுக்கு அருகில் பூமி வரும் நாட்கள்.

வகுப்பு – 6 – 7

1. முந்தைய வகுப்புகளில் படித்தவற்றின் மறு வாசிப்பு.
2. அமிலங்கள், காரங்கள், உப்புகள் இவற்றின் ஆய்வு. அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உதாரணங்களில் இருந்து.
3. மனித உடலின் முழுமையான படிப்பு, அவற்றின் செயல்பாடுகள். மனித உடல் ஒரு கோட்டை:
(அ) அதன் வெளிப்புறச் சுவர்: தோல்
(ஆ) கோட்டைக் காவலர் : உணர்வு உறுப்புகள், பார்வை, ஒலி, மணம், சுவை, ஸ்பரிசம்.
(இ) கோட்டை
(1) காற்று – சுவாச அமைப்பு
(2) காற்று, ரத்தம், உணர்ச்சி சுழற்சி அமைப்பு
(3) உணவும் அது ஜீரணமாகும் விதமும்
(ஈ) கழிவு – மல, ஜலம்
(1) தோல்
(2) சிறுநீரகம்
(3) மூச்சு
(4) குடல்
(5) நோய் எதிர்ப்புப் படை – பாக்டீரியா
(6) அதிகாரிகள் – உளவுத்துறை – நரம்பு மண்டலம்
4. இந்த இரண்டு ஆண்டுகளில் உடல் நலம் தொடர்பான பாடங்கள் மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். நோய் வரும் முன் காப்பாற்றுதல், ஆரோக்கிய மேம்பாடு.
தனி நபர் மற்றும் சமூகக் கடமை. உடல் ஆரோக்கியத்துக்கு தூய்மையான சுற்றுச் சூழல்;
நோய்க்கான காரணங்கள். அறியாமை, கவனமின்மை, ஏழ்மை, உணவு, பானங்கள் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளுதல், அதிக வேலை, அதீத கேளிக்கை.
புற்று நோய், என்புருக்கி நோய், தொழுநோய்: ஏற்படும் விதம், அறிகுறிகள், தடுப்பு வழிகள். தனிப்பட்ட வேதனை, சமூகப் பங்களிப்பு இழப்பு.
தனி நபர்களின் விழிப்பு உணர்வு, சமூகப் பொறுப்புணர்வு (மாணவர்கள் இந்த இரண்டு ஆண்டுகளில் கிராமப்புறங்களில் சுகாதார விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்).
5. பள்ளியை விட்டுச் செல்லும்போது கீழ்க்கண்ட விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும்
அ. தினமும் குளித்தல்
ஆ. தினமும் உடற்பயிற்சி செய்தல்
இ. தூய்மையான காற்று, சுவாசப் பயிற்சி (யோகா)
ஈ. அனைத்திலும் மிதமான துய்ப்பு
உ. சிரிக்கும் குணம்
6. பூமியின் கதை, பரிணாம வளர்ச்சி. எளிய மொழியில்
7. இயற்கை மீதான மனிதர்களின் வெற்றி. நோய்க் கட்டுப்பாடு. தகவல் தொடர்புகள், தொழில் துறைகள்.
8. வீடுகளில் பயன்படுத்தும் எளிய கருவிகள். கப்பிகள், நெம்புகோல்கள், ஸ்க்ரூ; ஊசல் கடிகாரம், நீராவி இன்ஜின், உள்ளெரி இன்ஜின், காந்தம், காந்தப் புலம், மின் கலம், மின்சாரம், மின்சார மணி.
9. காயம்பட்டவர்களுக்கு முதலுதவி : காயங்கள், வெட்டுகள், சிராய்ப்புகள், தீப்புண், மூக்கில் அடி படுதல், நாய்க் கடி, பாம்புக் கடி, எலும்பு முறிவு, எலும்பு இடம் பெயர்ந்துவிடுதல். பேண்டேஜ் கட்டுதல், மாவுக்கட்டு போடுதல். கண்ணில் தூசி விழுதல், காது, மூக்கில் குச்சி, கம்பு, சிராய் போன்றவை நுழைந்துவிடுதல்; நீரில் மூழ்குதல், செயற்கை சுவாசம், காயம்பட்டவர்களை, சிகிச்சைக்குக் கொண்டு செல்லுதல்.
10. ஐந்து முக்கியமான விஞ்ஞானிகள் மற்றும் அவர்களுடைய ’சத்திய சோதனைகள்’.
11. புவி ஈர்ப்பு விசை. பூமியைச் சுற்றும் நிலவு. வெள்ளி கிரகத்தின் நகர்வு. எரி நட்சத்திரங்கள். நெபுலா
வானியல் தொலைவு – ஒளி ஆண்டுகள் – நட்சத்திரங்களின் தொலைவு. ஒளி மிகு நட்சத்திரங்கள். அவற்றின் தொலைவுகள். பால்வீதி என்றால் என்ன? நெபுலாவின் வடிவங்கள்.
நாட்காட்டி. சூரிய, சந்திர நாட்காட்டிகள். லீப் ஆண்டு. போப் கிரிகேரியின் ஆண்டு கணிப்பு சீர்திருத்தம், காலக் கணக்கில் நவீன சீர்திருத்தங்கள்.
சூரியன், நட்சத்திரங்களைப் பார்த்து பகல், இரவில் நேரத்தைக் கணிக்கும் விதம். சந்திரனைப் பார்த்து நாட்களைக் கணக்கிடுதல். சந்திரனின் இடத்தை வைத்து மாதத்தைக் கண்டுபிடித்தல். நடத்திரங்களை வைத்து பருவ காலத்தைக் கணித்தல். நட்சத்திரங்களில் இருந்து திசைகளைக் கண்டறிதல்.
நவீன சாதனைகள். நிறப்பிரிகை ஆய்வுகள், உஜ்ஜைனி, ஜெய்பூர், செகந்தராபாத், கொடைக்கானல், க்ரீன்விச், மெளண்ட் வில்சன் கோளரங்கங்கள். நட்சத்திரங்களுக்குள் இருப்பது என்ன?

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *