ஒரு சாராருக்கு அவர் இறைதூதர். இன்னொரு சாராருக்கு அவர் சாத்தான். வேறு எப்படியும் அவர் இதுவரை அணுகப்படவில்லை. வேறு எப்படியும் அவர் இதுவரை மதிப்பிடப்படவில்லை. சோவியத் யூனியனின் கடைசி தலைவரான மிகெய்ல் கோர்பசேவை உணர்ச்சிக் கொந்தளிப்பின்றி நிதானமாக அணுகி ஆராய்வதற்கு இன்னும் நிறைய காலம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். இதை வேறெவரையும்விட நன்கு உணர்ந்திருந்தவர் கோர்பசேவ். தன் வாழ்க்கை வரலாற்றை எழுத வந்த ஒருவரிடம் நிதானமான குரலில் அவர் ஒருமுறை சொன்னார். ‘எழுதுங்கள். ஆனால் என்னைப் புரிந்துகொள்வது கடினம்!’
சோவியத் யூனியன் எனும் பெருங்கனவை முடிவுக்குக் கொண்டுவந்தவராக அறியப்படும் கோர்பசேவ் கடந்த 30ஆம் தேதி மாஸ்கோவில் மரணமடைந்தார். இன்றைய ரஷ்யாவை முன்பிருந்ததுபோல் மீண்டும் அகலப்படுத்தவேண்டும் எனும் பெருங்கனவோடு இருக்கும் விளாதிமிர் புடின் கோர்பசேவுக்கு நெருடலோடுதான் இறுதி மரியாதை செலுத்தியிருக்கிறார். தனது இரங்கல் உரையில் கோர்பசேவை புடின் புகழவும் இல்லை, விமரிசிக்கவும் இல்லை. ‘உலக வரலாற்றில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்’ என்று சடங்கு போல் சொல்லி முடித்துக்கொண்டுவிட்டார். இருந்தாலும் அவர் சொல்லியிருப்பது நிஜம். 20ஆம் நூற்றாண்டின் வரலாற்றை கோர்பசேவைப் புறக்கணித்துவிட்டு எவராலும் எழுதமுடியாது.
‘ஆஹா’ என்று பாரதி ஆரவாரம் செய்து வரவேற்ற யுகப் புரட்சியை ‘ஐயோ’ என்று எண்ணற்றோர் கலங்கும்படி முடிவுக்குக் கொண்டு வந்தவர் கோர்பசேவ். அதனால்தான் மேற்குலகிலிருந்து வெளிவந்திருக்கும் இரங்கல் பதிவுகளில் அவர் ஒரு மாபெரும் சீர்திருத்தவாதியாக வானளவு உயர்ந்து நிற்கிறார். மாறாக, சோஷலிசத்தின்மீது பற்று கொண்டிருப்போர் அவர் மரணத்தை அமைதியாகக் கடந்த செல்லவே விரும்புகிறார்கள். ஒரு எதிர்ப் புரட்சியாளரை, துரோகியை, சீர்குலைப்பின் மொத்த உருவை நினைவுகூர்ந்து என்ன ஆகிவிடப்போகிறது?
0
‘காலம்தான் எனக்கான தீர்ப்பை எழுதவேண்டும். ஆனால் அது ஒரு கருணையற்ற நீதிபதி’ என்று தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார் கோர்பசேவ். மிகவும் கொந்தளிப்பான, மிகவும் சிக்கலான ஒரு தருணத்தில் சோவியத் யூனியனின் தலைமைப் பொறுப்பை கோர்பசேவிடம் அளித்தது காலம். நான் காலத்தின் தேவையை நிறைவேற்றிவிட்டேன். எனது நாட்டின் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் இயன்றவரை சீர்செய்துவிட்டேன். இனி சோவியத் யூனியன் புதிய பாதையில் வலுவோடும் நம்பிக்கையோடும் முன்னேறிச் செல்லும் என்று பெருமிதத்தோடு அறிவித்தார் கோர்பசேவ். ஆனால் அவர் நினைத்து ஒன்று, நடந்தது வேறொன்று. சில சீர்திருத்தங்கள் போக, அடிப்படையான மாற்றங்களை அவரால் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.
தெற்கு ஸ்டாவ்ரோபோல் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் கோர்பசேவ். பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அவரை அடையாளம் கண்டு தன் பக்கம் இழுத்துக்கொண்டுவிட்டது. அதன்பின் வேகவேகமாகப் படிக்கட்டுகளில் தாவியேற ஆரம்பித்துவிட்டார் அவர். இதற்குமேல் ஒன்றுமில்லை என்னும் நிலையை 54 வயதிலேயே அடைந்துவிட்டார். 1985ஆம் ஆண்டு மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். சோவியத்தில் அதற்கு மேல் உயர்வான பதவி வேறொன்றில்லை. நான் சோவியத் யூனியனைச் சீர்திருத்தப்போகிறேன். ஒரு நவீன தேசமாக மாற்றியமைக்கப்போகிறேன் என்று பதவியேற்ற சில வாரங்களில் அறிவித்தார் கோர்பசேவ்.
கோர்பசேவுக்கு முன்பே நிகிதா குருஷேவ் சோவியத் யூனியனை வேறோரு திசை நோக்கிச் செலுத்தத் தொடங்கியிருந்தார். தனக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜோசப் ஸ்டாலினின் குற்றங்களைப் பட்டியலிட்ட குருஷேவ் இனி சோவியத் பழைய வழியில் செல்லாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். அவருக்குப் பிறகு வந்த பிரெஷ்னேவின் அணுகுறையும் அதுவேதான். பழைய வழிமுறை தோல்வியடைந்துவிட்டது. இறுக்கமான ஒரு கோட்டையாக சோவியத் யூனியனைக் கட்டிக்காப்பது இதற்குமேல் சாத்தியமில்லை எனும் முடிவுக்கு சோவியத் ஆட்சியாளர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.
ஸ்டாலினின் சோவியத் யூனியன் அமெரிக்காவுக்குச் சவால்விடும் அளவுக்கு வலுவோடு இருந்தது. ஹிட்லரை வீழ்த்தியதில் ஸ்டாலினின் பங்களிப்புக் கணிசமானது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகளின் படைகளோடும் இணைந்து நாஜிசம் என்னும் பேரபாயத்தை ஸ்டாலின் முடிவுக்குக் கொண்டுவந்தார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் அமெரிக்காவும் சோவியத்தும் எதிரெதிர் துருவங்களில் பிரிந்து நின்று மோதிக்கொள்ள ஆரம்பித்தன. பனிப்போர் தொடங்கியது.
ஒரு போரிலிருந்து மீண்ட கையோடு இன்னொரு போருக்குள் நுழைந்தது சோவியத். அமெரிக்காவைக் காட்டிலும் நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகம் ராணுவத்துக்காகச் செலவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தச் சுமை சோவியத் யூனியனைக் கடுமையாக அழுத்தத் தொடங்கியது. மற்றொரு பக்கம், களையெடுப்பு எனும் பெயரில் அழித்தொழிப்புகளும் அதிகரித்தன. அப்போதே ஒரு வகையில் சோவியத் யூனியன் உள்ளுக்குள் உடையத் தொடங்கிவிட்டது எனலாம். எந்தக் கோட்பாட்டின் அடித்தளத்தில் அத்தேசம் கட்டியெழுப்பப்பட்டதோ அதுவே ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது.
உடையத் தொடங்கிவிட்ட சோவியத் யூனியனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் ஸ்டாலினுக்குப் பிறகு வந்தவர்களுக்கு இருக்கவில்லை. 1982ஆம் ஆண்டு 76 வயது பிரெஷ்னெவ் பதவி விலகினார். அடுத்து வந்த 68 வயது ஆண்ட்ரோபோவ் மூப்பு காரணமாக நடுங்கிக்கொண்டேதான் பதவியேற்றார். ஓராண்டில் இறந்தும்போனார். அவருக்குப் பிறகு பொறுப்பேற்ற 72 வயது செர்னோகோவால் ஆண்ட்ரோபோக்கான எழுதிக்கொடுக்கப்பட்ட இரங்கல் உரையை முழுக்க வாசிக்கக்கூட முடியவில்லை. ஓராண்டும் ஒரு மாதமும் கழிந்தபோது அவரும் இறந்துபோனார்.
ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருப்பவர்களால் தள்ளாடும் ஒரு தேசத்தை எப்படிக் காக்கமுடியும்? பொருளாதாரச் சுமை நாள்பட நாள்பட மலைபோல் வளர்ந்துகொண்டே போனது. மக்கள் அதிருப்தியின் உச்சத்தில் இருந்தனர். சோஷலிசக் கனவு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருந்தது. படகிலுள்ள ஓட்டைகளை அடைப்பதற்கான ஆற்றல் இல்லை என்பது மட்டுமல்ல; ஓட்டைகள் எங்கெங்கே இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்கான திறனும் அற்றவர்களாக இருந்தனர் கட்சியிலிருந்தவர்கள். பழைய பாதையில் தொடரமுடியாது என்று தெரிந்திருந்ததே தவிர, புதிய பாதை என்னவாக இருக்கவேண்டும், அதை எப்படி அமைக்கவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இந்தப் பின்னணியில்தான் 11 மார்ச் 1985 அன்று ஆட்சிப் பொறுப்பேற்றார் கோர்பசேவ்.
0
கோர்பசேவ் புதிய கனவுகளோடு தனது சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்தார். பெரெஸ்த்ரொய்கா (அரசியல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள்), கிளாஸ்னோஸ்ட் (வெளிப்படைத்தன்மை) ஆகிய இரு பெயர்களும் உலகம் முழுக்கப் பரவிப் புகழ்பெற்றன.
சோஷலிசப் பொருளாதாரத்தின் இடத்தில் முதலாளித்துவப் பொருளாதாரத்தை நிலைநாட்டினார். ‘ஒரு கனவை வளர்த்து வைத்துக்கொண்டு அதற்குள் யதார்த்த சமூகத்தைத் திணிக்கும் வழக்கம் இனி இருக்காது’ என்று ஓர் உரையாடலில் குறிப்பிட்டார் கோர்பசேவ்.
அரசியல் அமைப்பிலும் மாற்றங்கள் கொண்டுவந்தார். மேற்கத்திய நாடுகளில் உள்ளதுபோல் சர்வ கட்சி ஜனநாயகம் சோவியத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றார். ‘எதேச்சதிகார அரசு அதிகாரம் முறியடிக்கப்பட்டுவிட்டது. தங்களுக்கு வேண்டியவற்றை மக்கள் இனித் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஜனநாயகப் பன்மைத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது’ என்று அறிவித்தார்.
சோஷலிசத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்று இவற்றைப் பலரும் விமரிசித்தபோது, ‘கிடையாது. இந்த மாற்றங்களால் சோஷலிசம் மறையாது. மேலதிகம் வலுப்படும். ஜனநாயகத்திலிருந்து சோஷலிசத்தைப் பிரிக்கமுடியாது’ என்று பதிலளித்தார் கோர்பசேவ்.
தணிக்கை முறை அதிகாரபூர்வமாக விலக்கிக்கொள்ளப்படவில்லை என்றாலும் பல்லாண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த கலை, இலக்கிய, அரசியல் படைப்புகள் வெளிச்சத்துக்கு வந்தன. கைது செய்யப்பட்டிருந்த அனைத்து அரசியல் கைதிகளும் இரண்டு ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டனர்.
உள்நாட்டில் தொடங்கிய கோர்பசேவின் சீர்திருத்தங்கள் எல்லைகள் கடந்து நீண்டு சென்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்து, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்து சேர்ந்திருந்தன. சோவியத்தின் ஆதரவு பெற்றவர்களே இந்நாடுகளின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தனர்.
கோர்பசேவின் வருகைக்குப் பிறகு இந்த சோஷலிச நாடுகளில் பேராட்டங்கள் வலுத்தன. ராணுவத்தை அனுப்பி இப்போராட்டங்களை ஒடுக்குவதற்குப் பதிலாக அவற்றின்மீதான தன் பிடியை கோர்பசேவ் 1989ஆம் ஆண்டு தளர்த்தினார். அதைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத்திடமிருந்து விடுபட்டு விடுதலையடைந்தன.
சோவியத் யூனியனுக்குள் இருந்த பிரதேசங்களும் இதே போல் விடுபட முயன்றபோது கோர்பசேவ் அமைதி காக்கவில்லை. ஜார்ஜியா, லாட்வியா, லித்துவேனியா போன்ற நாடுகளில் நடைபெற்ற கிளர்ச்சிகள் ராணுவத்தால் ஒடுக்கப்பட்டன. சோவியத்துக்கு வெளியிலிருப்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை, உள்ளுக்குள் இருப்பவர்களுக்கு அல்ல என்பதுதான் கோர்பசேவ் உணர்த்த விரும்பிய செய்தி. ஆனால் இதுவும் பின்னர் மாறியது.
சோவியத் ஒன்றியம் என்பது 15 அங்கத்தினர்களை, பல இனக்குழு மக்களை, பல மொழிகளை, பல புவியியல் பிரதேசங்சளை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய கூட்டமைப்பு. 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு ஜார் ஆட்சிக்கு உட்பட்ட ரஷ்யப் பேரரசுக்குள் இருந்த பிரசேங்கள் சோவியத் யூனியனாகத் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பை உடைத்துக்கொண்டு எஸ்டோனியா நவம்பர் 1988இல் முதல் நாடாக வெளியில் வந்தது. டிசம்பர் 1991இல் கடைசி நாடாக கஸகஸ்தான் வெளிவந்தபோது சோவியத் யூனியன் அதிகாரபூர்வமாகச் சரிந்தது.
ஸ்டாலின் காலத்தில் பகை சக்தியாக இருந்த அமெரிக்காவோடு கோர்பசேவ் பணிந்து நடந்துகொண்டார். ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டார். இதன்மூலம் பனிப்போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. ராணுவத்துக்கான செலவுகளும் குறைந்தன. பனிப்போர் அணு ஆயுதப் போராக நீண்டுவிடுமோ என்னும் அச்சமும் மறைந்தது.
கோர்பசேவ் கொண்டுவருவது சீர்திருத்தமா சீரழிவா எனும் கேள்வியும் அப்போதே எழ ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவுக்குச் சமபலமாக ஒரு காலத்தில் நின்ற சோவியத்தின் பெருமிதத்தை கோர்பசேவ் சிதைத்துவிட்டார். உலகம் முழுக்க சோஷிலிசக் கனவை விதைத்து வந்த சோவியத்தை உலக வங்கி முன்பும் சர்வதேச நிதியத்தின் முன்பும் கோர்பசேவ் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் என்று பலர் குற்றம்சாட்டினார்கள். மகத்தான சீர்திருத்தங்கள் என்று மேற்குலகமும் அதன் ஆதரவாளர்களும் எவற்றையெல்லாம் கொண்டாடினார்களோ அவற்றையெல்லாம் சோலிஷசப் பற்றாளர்கள் சீற்றத்தோடு நிராகரித்தனர்.
சோஷலிசத்துக்கு எதிரானவர் என்று குற்றம்சாட்டப்படும் கோர்பசேவ் இறுதிவரை தன்னை ஒரு சோஷலிஸ்ட் என்றே அழைத்துக்கொண்டார். ஸ்டாலினை நிராகரித்தாலும் லெனின்மீதான் தன் பற்றை அவர் இறுதிவரை குறைத்துக்கொள்ளவில்லை. எதிர்கால சோவியத்துக்குத் தேவை ஸ்டாலினியம் அல்ல லெனினியம்தான் என்றும் தான் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் அனைத்தும் லெனினியத்தின் பெயரால் அல்லது சோஷலிசத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்டவைதான் என்றும் அவர் வாதிட்டார்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தொடங்கிய கோர்பசேவின் அரசியல் வாழ்க்கை சோவியத் யூனியனோடு சேர்ந்து சரிந்து விழுந்தது. ஆகஸ்ட் 1991இல் ஒரு ராணுவப் புரட்சி வெடித்து, கோர்பசேவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ‘முன்பிருந்த நிலையை’ மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று சொல்லித் தொடங்கப்பட்ட இந்தப் புரட்சி மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும் இழந்த தன் அதிகாரத்தை கோர்பசேவால் மீட்கமுடியவில்லை. தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கோர்பசேவால் சில முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடிந்த அளவுக்கு அடிப்படையான புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவரமுடியவில்லை. ஊதி வளர்ந்து நின்ற பொருளாதாரச் சிக்கல்களை அவரால் இறுதிவரை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. எதேச்சதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகத்தான் அவர் நினைத்தார். ஆனால் சர்வ அதிகாரங்களையும் தன் உள்ளங்கையில் குவித்திருக்கும் விளாதிமீர் புடின் போன்ற ஒருவர் தோன்றி நிலைபெறுவதை பார்க்கவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
சோவியத்திலிருந்து வெளியேறிய நாடுகள் இனிச் சுதந்தரமாக இருக்கும் என்று அவர் நம்பினார். அதுவும் நடக்கவில்லை. 2014இல் ரஷ்யா கிரீமியாவை இணைத்துக்கொண்டபோது கோர்பசேவால் அமைதி காக்க மட்டுமே முடிந்தது. உக்ரேனை தன் உறுதியான பிடிக்குள் வைத்திருப்பதற்காக புடின் நடத்திக்கொண்டிருக்கும் போரையும் அவர் காணத்தான் வேண்டியிருந்தது.
தன் இறுதிக்காலத்தை கோர்பசேவ் பெரும்பாலும் அமைதியாகவே கழித்திருக்கிறார். தன்னுடைய கல்லறையில் பொறிக்கவேண்டிய வாசகம் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டது இதைத்தான். ‘நான் முயன்றேன்.’
0
(ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரை)