பாரத தேசத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ பேரரசுகளும் சிற்றரசுகளும் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்திருக்கின்றன. அவை எல்லாவற்றிற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு குப்தர்களின் அரசுக்கு உண்டு.
அரசாட்சியையும் சிறந்த நிர்வாகத்தையும் தவிர கலை, இலக்கியம், அறிவியல், வானியல், கணிதம், சமயம் போன்ற பல துறைகளிலும் புதிய உச்சங்களை இந்தியா தொட்டது குப்தர்களின் காலகட்டத்தில்தான். நாட்டின் பல பகுதிகளில் இருந்த அரசுகள் ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் பொதுவான அமைதி நிலவிய காலமாகவும் அது இருந்தது.
இத்தனைக்கும் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுக்காலமே குப்தர்களின் ஆட்சிக்காலம் இருந்தது. அதற்குள் எப்படி இத்தனை விஷயங்களில் அந்த அரசின் சாதனைகள் நிகழ்ந்தன ? பல்வேறு துறைகள் எப்படி ஓங்கி வளர்ந்தன ? பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களால் இந்தியாவின் பொற்காலம் குப்தர்கள் ஆட்சி என்று புகழப்படும் நிலையை அந்த அரசு எப்படி எட்டியது என்பதையெல்லாம் கொஞ்சம் ஆராயலாம்.
பின்னணி
குப்தர்களின் ஆட்சிக்காலத்திற்கு உள்ளே செல்வதற்கு முன்னால், அப்போது அகண்ட பாரதமாக இருந்த நம்முடைய நாட்டின் நிலைமையைக் கொஞ்சம் அறிந்துகொள்ளவேண்டும்.
வரலாற்றுக் காலத்தில் இந்தியாவில் முதலில் தோன்றிய மௌரியப் பேரரசு கிட்டத்தட்ட நாடு முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்தாலும் அதனால் நீண்ட காலம் அந்த நிலையைத் தக்க வைக்க முடியவில்லை. சாணக்கியரின் உதவியுடன் சந்திரகுப்த மௌரியரால் தோற்றுவிக்கப்பட்ட அந்தப் பேரரசில் அசோகவர்த்தனருக்குப் பின்னால் வந்த அரசர்களின் திறமையின்மையினால் நாட்டின் பரப்பளவு குறைந்துகொண்டு வந்தது மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் வெளியிலும் அந்த அரசு பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டது. மௌரியர்களின் கடைசி அரசனான பிரஹத்ரதனை அவனுடைய தளபதியான புஷ்யமித்திர சுங்கன் கொலை செய்து மௌரிய வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தான்.
புஷ்யமித்திரனால் பொயுமு 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சுங்க வம்ச ஆட்சி கங்கைச் சமவெளியில் தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்த முடிந்தாலும் நாட்டின் மற்ற பகுதிகள் கிட்டத்தட்ட அவர்களின் கையை விட்டுச் சென்றுவிட்டன. ஆயினும் பல சிற்றரசர்களை வென்று அஸ்வமேத யாகம் ஒன்றைச் செய்த பெருமையை புஷ்யமித்திரன் தேடிக்கொண்டான்.
புஷ்யமித்திரனுக்குப் பின்னால் வந்த அரசர்களுக்கு வெளியிலிருந்து பல தொல்லைகள் வந்தன. அசோகரால் நிலைகுலைந்த கலிங்கம் மீண்டும் காரவேலன் தலைமையில் வலுப்பெற்றது. மேற்கிலிருந்தும் பல படையெடுப்புகளை சுங்கர்கள் சந்திக்க நேரிட்டது. அந்த வம்சத்தின் பத்தாவது அரசனான தேவபூதி அவனுடைய அமைச்சனான வாசுதேவனால் கொல்லப்பட்டான். அதன்பின் வாசுதேவனே அரசனாகப் பொறுப்பேற்றுக்கொண்டு கண்வ வம்சத்தை ஸ்தாபித்தான். ஆனால் அந்த அரசு நீண்ட நாள் நிலைக்கவில்லை. சுமார் 45 ஆண்டுகளே கண்வ வம்ச அரசர்கள் ஆட்சியில் இருந்தனர்.
இக்காலகட்டத்தில் மத்திய இந்தியாவில் வலுவான அரசு ஒன்று தோன்றியிருந்தது. ஆந்திர வம்சம் என்று புராணங்களால் அழைக்கப்பட்ட சாதவாகனர்கள் தற்போதைய மகாராஷ்ட்ரம், தெலங்கானா, ஆந்திரப் பகுதிகளை ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். வீரமும் திறமையும் கொண்ட பல அரசர்கள் அந்த வம்சத்தில் தோன்றினர். அதன் முதல் அரசனான சிமுகன் கண்வ வம்ச அரசனைத் தோற்கடித்துக் கொன்றதாக புராணங்கள் குறிக்கின்றன.
தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நூற்றுவன் கண்ணன் (சதகர்ணி) போன்ற அரசர்கள் சாதவாகன அரசைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களிடமிருந்த வலுவான படைபலத்தைக் கொண்டு மத்திய இந்தியாவின் பெரும்பகுதியைத் தங்களது ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். மகாராஷ்ட்ராவில் உள்ள பிரதிஷ்டானபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சாதவாகனர்கள் ஆட்சி செய்தனர். சமஸ்கிருதமும் பிராகிருதமும் இவர்களின் மொழியாக இருந்தது. இவர்களின் தலைசிறந்த அரசனான கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சியில் பேரரசு உச்சத்தை அடைந்தது.
அயல்நாட்டுப் படையெடுப்புகள்
இந்தியாவில் இப்படிப் பல்வேறு அரசுகள் தோன்றி மறைந்துகொண்டிருந்த காலத்தில், தொடர்ந்து மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியா பல்வேறு வம்சத்தினரின் படையெடுப்புகளைச் சந்தித்துக்கொண்டிருந்தது. பெரும் வீரனான அலெக்ஸாண்டரின் தலைமையில் வந்த கிரேக்கப் படை ஜீலம் நதிக்கரை வரை வந்து திரும்பிச்சென்றது. அலெக்ஸாண்டரால் வெல்லப்பட்ட இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் கிரேக்கர்களின் பிரதிநிதிகள் ஆட்சி செய்தனர்.
அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த செலூகஸ் நிகேடார் சந்திரகுப்த மௌரியனால் தோற்கடிக்கப்பட்டு மேற்கு நோக்கி மீண்டும் துரத்தப்பட்டான். இருப்பினும் வடமேற்கு இந்தியாவில் சில இடங்களில் அவர்களுடைய ஆதிக்கம் சிறிது காலம் நிலவியது. அதன்பின் கிரேக்கத்திலிருந்து மினாண்டர் (மிலிந்தன்) என்பவன் ஒரு பெரும் படையோடு இந்தியாவை நோக்கி வந்தான். சிந்து சமவெளியையும் தற்போதைய சௌராஷ்ட்ராவையும் முதலில் கைப்பற்றிய கிரேக்கப்படை யமுனை நதிக்கரை வரை முன்னேறி ராஜஸ்தானின் பெரும் பகுதியைக் கைப்பற்றிக்கொண்டது. சுங்க வம்ச அரசர்கள் கடுமையாகப் போர் செய்து கிரேக்கர்களை மீண்டும் மேற்கு நோக்கித் துரத்தினர்.
பொயுமு இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மத்திய ஆசியாவில் (தற்போதைய துர்க்மேனிஸ்தான் பகுதி) சாகர்கள் என்ற நாடோடி இனத்தவர் நிலை கொண்டிருந்தனர். சீனாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து கிளம்பிய யுஎசி என்ற இன்னொரு நாடோடி இனத்தவர் அங்கிருந்து கிளம்பி மத்திய ஆசியாவிற்கு வந்தனர். இரு இனத்தவருக்கும் ஏற்பட்ட மோதலில் சாகர்கள் தோல்வியடைந்து அங்கிருந்து தெற்கு நோக்கி உந்தப்பட்டனர்.
இந்தோ-ஸித்தியர்கள் என்றும் அழைக்கப்பட்ட இவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் ஆட்சி செய்துகொண்டிருந்த கிரேக்கர்களை வென்று அவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். தக்க்ஷசீலம், மதுரா ஆகிய இடங்களைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டு இந்தியாவின் மேற்கு நோக்கித் திரும்பினர். சிந்து சமவெளியில் உள்ள மிந்நகரம், குஜராத்தில் உள்ள பரூச் ஆகிய இடங்களைத் தலைநகரகங்களாகக் கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். தங்களை க்ஷத்ரபர்கள் என்றும் அழைத்துக்கொண்டனர்.
சாதவாகனர்களின் அரசனான கௌதமிபுத்திர சதகர்ணி, சாகர்களின் சிறந்த அரசனான நாகபாணனை வென்று அவர்களது பலத்தை ஒடுக்கினான். நாளடைவில் இந்திய மதங்களையும் மொழிகளையும் தழுவிக்கொண்டு சாகர்கள் இந்தியர்களோடு ஒன்றாகக் கலந்துவிட்டனர்.
அடுத்ததாக பாரசீகத்திலிருந்து பஹ்லவர்கள் (பார்த்தியர்கள்) என்ற வம்சத்தினரும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து மேற்கில் சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர்.
பொயுமு முதல் நூற்றாண்டில் காபூல் பள்ளத்தாக்கில் அவர்களின் ஆதிக்கம் நிலவியது. கோண்டோபெரஸ், அப்டகாஸஸ் ஆகிய பார்த்திய சகோதரர்களின் ஆட்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. ஆனால் அவர்களுக்கும் ஆபத்து யுஎசி இனத்தவரிடம் இருந்தே வந்தது. மத்திய ஆசியாவிலிருந்து சாகர்களை விரட்டிவிட்டு சிறிது காலம் அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த யுஎசி நாடோடிகளை, சீனாவிலிருந்து கிளம்பிய இன்னொரு நாடோடி இனத்தவர் தாக்கவே அவர்களும் அங்கிருந்து புறப்பட வேண்டியதாயிற்று. பாக்டீரியாவைத் தாண்டி இந்தியாவிற்குள் புகுந்த அவர்கள், அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த பார்த்தியர்களைத் தோற்கடித்து தங்களது ஆட்சியை அங்கே நிறுவினர்.
இப்படி சிந்து நதிக்கரையை ஒட்டி சாகர்கள், பஹ்லவர்கள், யுஏசி இனத்தவர் ஆகியோர் இந்திய அரசர்களுடன் பல்வேறு பகுதிகளைப் பிரித்துக்கொண்டு பொது யுகத்தின் ஆரம்ப நூற்றாண்டில் ஆட்சி செய்துகொண்டிருந்தனர்.
இந்த யுஎசி இனத்தவரின் ஒரு பிரிவினர் குஷாணர்கள் என்று அழைக்கப்பட்டனர். குஜுலா கட்பைஸஸ் என்ற அரசனே குஷாணர்களின் ஆட்சியை வடமேற்கு பாரதத்தின் நிலை நிறுத்திய பெருமைக்கு உரியவன். தன்னுடைய ஆட்சியை மேற்கே பாரசீகம் வரை விஸ்தரித்தான் கட்பைஸஸ்.
அதற்குப் பிறகு பொயு முதல் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த இரண்டாம் கட்பெஸஸ் சீனாவின் மீது படையெடுத்து அங்கே வெற்றி பெற முடியாமல் போகவே, தன்னுடைய கவனத்தை இந்தியாவின் மற்ற பகுதிகள்மீது திருப்பினான். சிந்து நதிக்கரை நாடுகளை வென்ற பிறகு கங்கைச் சமவெளி வரை தன்னுடைய ஆதிக்கத்தை கட்பைஸஸ் செலுத்தினான்.
அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கனிஷ்கரின் காலத்தில் குஷாணப் பேரரசு உச்சத்தை எட்டியது. புருஷபுரத்தைத் (பெஷாவர்) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கனிஷ்கர் வட இந்தியாவின் பெரும்பகுதியையும் வடமேற்கில் உஸ்பெக்கிஸ்தான் வரையிலும் தன்னுடைய ஆட்சியை விரிவாக்கினார். மிகவும் புகழ்பெற்ற காந்தாரக் கலை உருவாகியது கனிஷ்கரின் காலத்தில்தான்.
கனிஷ்கருக்குப் பிறகு அவரது மகன் ஹுவிஷ்கரும் அதன்பின் அவரது மகன் வாசுதேவனும் ஆட்சி செய்தனர். எங்கிருந்தோ வந்த நாடோடிக் கூட்டத்தினர் இந்தியர்களுடன் ஒன்றாகக் கலந்ததற்கு இந்தப் பெயர் மாற்றமே ஒரு சாட்சியாகும். வாசுதேவனின் நாணயங்களில் சிவபெருமானின் நந்தியும் இடம்பெற்றன. வாசுதேவனுக்குப் பிறகு குஷாணர்களின் ஆட்சியும் வலுவிழக்கத் தொடங்கியது. அவர்களது ஆட்சிப்பரப்பு தற்போதைய ஆப்கானிஸ்தானுக்குள் சுருங்கியது.
கபீசபுரம் என்று அழைக்கப்பட்ட காபூல் அவர்களின் தலைநகராகியது.
அதன்பின், பாரசீகத்திலிருந்து சசானியர்கள் குஷாணர்களைத் தாக்கி வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளைப் பிடித்துக்கொண்டனர். அந்தக் காரணத்தால் நான்கு சிறு அரசுகளாகப் பிரிந்த குஷாணர்களுக்கும் சசானியர்களுக்கும் மண உறவுகள் ஏற்பட்டன.
கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் (பொயு மூன்றாம் நூற்றாண்டின் முதல் பகுதி) சாதவாகனப் பேரரசும் வலுவிழந்த காரணத்தால் இந்தியாவில் பற்பல சிறிய அரசுகள் தோன்றி பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்ய ஆரம்பித்தன. அவர்களில் கௌசம்பியைச் சேர்ந்த மித்ர வம்சத்தினர் பாடலிபுத்திரத்தைப் பிடித்துக்கொண்டு மகதத்தை ஆட்சி செய்தனர். மதுராவைத் தலைநகராகக் கொண்டு க்ஷத்ரபர்களின் ஒரு பிரிவினர் ஆட்சி செய்தனர். ராஜூலா, சோடசா ஆகிய அரசர்கள் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
சாதவாகனர்களால் தோற்கடிக்கப்பட்டிருந்த போதிலும் சாகர்களின் ஒரு பிரிவினர் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு தங்களது அரசாட்சியைத் தொடர்ந்தனர். மாளவத்தில் வாகாடகப் பேரரசு செங்கோலோச்சத் தொடங்கியது. அந்த வம்சத்தில் பிரவரசேனன், ருத்ரசேனன் போன்ற சிறந்த அரசர்கள் ஆட்சி செய்தனர். அஜந்தா குகைக்கோவில்களைப் பிற்காலத்தில் செம்மைப்படுத்திய பெருமை வாகாடகர்களையே சேரும்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில், நேபாளத்தில் உள்ள காட்மண்டுப் பள்ளத்தாக்கில் லிச்சாவி என்ற வலுவான அரச வம்சம் ஆட்சி செய்யத் தொடங்கியது. இவர்கள் கௌதம புத்தரின் காலத்தில் பிகாரின் பல பகுதிகளை ஆட்சி செய்துகொண்டிருந்தனர் என்றும் அதன் பின் நேபாளத்திற்குச் சென்று அங்கே சில பகுதிகளைப் பிடித்துக்கொண்டு ஆட்சி அமைத்தனர் என்றும் சொல்வது உண்டு. இப்படி நாட்டின் பல பகுதிகள் சிதறிக்கிடந்த நிலையில்தான் குப்தர்களின் அரசு தோன்றியது.
(தொடரும்)