Skip to content
Home » குப்தப் பேரரசு #2 – தோற்றம்

குப்தப் பேரரசு #2 – தோற்றம்

பௌத்தத் துறவி யி ஜிங்

இந்தியாவில் தோன்றிய மிக முக்கியமான பேரரசுகளில் ஒன்றான குப்தர்களின் தோற்றம் பற்றிய செய்திகள் இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகின்றன. அவர்கள் எந்த இடத்திலிருந்து வந்தனர், அவர்களின் வம்சாவளி என்ன என்பது பற்றியெல்லாம் பல்வேறு ஆய்வாளர்கள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பேரரசுகள் பெரும்பாலும் தாங்கள் வெளியிட்ட சாசனங்களில் தங்களின் மூதாதையர் யார் என்பது குறிப்பது வழக்கம். உதாரணமாக தமிழகத்தில் பல்லவர்கள் தங்களை பாரத்வாஜ கோத்திரத்தினர் என்றும் அஸ்வத்தாமனிடம் இருந்து தோன்றியவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தினர் என்று கூறி சூரியன், மனு, சிபி என்று தங்கள் குலமுன்னோர்களை செப்பேடுகளில் பட்டியலிடுகின்றனர். அதுபோன்று குப்தர்கள் எந்த விவரத்தையும் பதிவு செய்யாததால் இந்தக் குழப்ப நிலை நீடிக்கிறது.

அதுபோலவே அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பது பற்றியும் தெளிவாகத் தெரியவில்லை. உத்தரப் பிரதேசம், பிகார், வங்காளம், மத்தியப் பிரதேசம் என்ற பல்வேறு இடங்கள் குப்தர்கள் முதலில் ஆட்சி செய்த இடங்களாகச் சொல்லப்படுகிறது. அது பற்றிய பல்வேறு கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

புராணங்கள்

குப்தர்களைப் பற்றி பல குறிப்புகளைத் தெரிவிக்கும் புராணங்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் விஷ்ணு புராணத்தில் ‘அனு கங்கம் ப்ரயாகான் ச மாகதா குப்தாச் ச’ என்ற ஒரு வரி வருகிறது. கங்கைக் கரையை ஒட்டி ப்ரயாகை, மகதம் ஆகிய பகுதிகள் மகதர்களாலும் குப்தர்களாலும் அனுபவிக்கப்பட்டது என்ற பொருளில் இது படிக்கப்படுகிறது. பாகவத புராணம் ‘அனு கங்கம் அ ப்ரயாகம் குப்தா போக்ஸ்யந்தி மேதினீம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு குப்தர்கள் ப்ரயாகை வரையுள்ள கங்கைக் கரையை (ஆண்டு) அனுபவித்தனர் என்று பொருள்.

இந்த இரண்டு குறிப்புகளையும் வைத்துக்கொண்டு குப்தர்கள் வேறு மகதர்கள் வேறு என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருவரும் கங்கைக் கரைப் பகுதிகளை அனுபவித்தனர் (அதாவது ஆட்சி செய்தனர்) என்று கூறப்படுவதால் குப்தர்கள் இன்று அலகாபாத் என்று அழைக்கப்படும் ப்ரயாகையில் தோன்றினர் என்றும் மகதம் (பீகார்) வரை ஆட்சி செய்தனர் என்றும் அவர்கள் குறிக்கின்றனர்.

ஆனால் வாயுபுராணமோ இந்த இரண்டு இடங்களோடு சாகேதம் (அயோத்தி) என்பதையும் சேர்த்து குப்தர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகக் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பகுதிகளில் எது அவர்களின் ஆரம்ப கால ஆட்சிப் பகுதி என்று தெரியவில்லை. விஷ்ணு புராணத்தில் உள்ள வரிகளை வைத்து அவர்கள் ப்ரயாகையில் தோன்றினர் என்று சொல்ல முடியாது என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். எஸ். சட்டோபத்தியாயா, எஸ்.ஆர். கோயல் போன்றோர் அனு கங்கம் என்பது கங்கைக் கரையோரம் என்பதை மட்டுமே குறிக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் பி.பி. சின்ஹா, ஹெச்.சி. ராய்சவுத்ரி போன்றோர் அனு-கங்கம்-ப்ரயாகான் என்பதைச் சேர்த்துப் படிக்கவேண்டும் என்றும், அது கங்கைக் கரையில் உள்ள ப்ரயாகை என்பதை மட்டுமே குறிக்கிறது, அங்கே ப்ரயாகை என்பதே பிரதானம் என்று கூறி அவர்களில் தோற்றம் அங்கிருந்துதான் நிகழ்ந்தது என்று வாதிடுகின்றனர்.

பாணிணியில் சமஸ்கிருத இலக்கியத்தின் படி ‘அனுகங்கம் ப்ரயாகம்’ என்பது சேர்த்துப் படிக்கவேண்டியது என்பதை மேலும் சிலரும் சுட்டுகின்றனர். அனுகங்கம் ஹஸ்தினாபுரம், அனுகங்கம் வாராணசி போன்ற சொற்றொடர்கள் மற்ற இலக்கியங்களில் வருவதை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

பவிஷ்ய புராணம் குப்தர்களின் முதல் அரசனான ஶ்ரீகுப்தன், ஶ்ரீபர்வதத்தின் அரசனாக இருந்தான் என்று ஓரிடத்தில் சொல்கிறது (ஶ்ரீபர்வததேந்திராதிபதே ஶ்ரீகுப்த பூபதே). இந்த ஶ்ரீபர்வதம் என்பது நேபாளத்திற்கு அருகில் இமயமலையில் உள்ளது. இதைச் சுட்டிக்காட்டி அங்கிருந்துதான் குப்தர்கள் வந்தனர் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள், இது பிற்சேர்க்கை என்று கூறி இதை மறுக்கின்றனர்.

சீன யாத்திரிகர்

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு ஏழாம் நூற்றாண்டில் யாத்திரை வந்த பௌத்தத் துறவியான யி ஜிங் என்பவர் சி-லி-கி-தோ என்ற மன்னனால் கட்டப்பட்ட மி-லி-கியா-சி-கியா-பொ-னோ என்ற கோவிலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்தக் கோவிலுக்கு இருபத்து நான்கு கிராமங்களை நன்கொடையாக அந்த மன்னர் அளித்ததாகவும் அவர் தனது குறிப்புகளில் எழுதியிருக்கிறார். சி-லி-கி-தோ என்ற சீன வார்த்தை ஶ்ரீகுப்தர் என்ற பெயரைக் குறிக்கிறது என்றும் அது குப்தர்களின் முதல் அரசரான ஶ்ரீகுப்தர்தான் என்றும் வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், இந்த முடிவை பலர் ஆட்சேபிக்கின்றனர். முதலில் இந்தக் குறிப்புகளில் உள்ள ஶ்ரீகுப்தரும் குப்தர்களின் முதல் அரசரான ஶ்ரீகுப்தரும் ஒருவர்தானா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குப்தர்களின் சாசனங்களில் அவர்களின் முதல் அரசரின் பெயர் குப்தர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஶ்ரீ (திரு என்ற அடைமொழிபோல) என்பது வெறும் முன்னெட்டுதான் என்று அவர்கள் சுட்டுகின்றனர். சமுத்திர குப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு ‘மகாராஜ ஶ்ரீ குப்த ப்ரபௌத்ரஸ்ய’ என்று குப்தர்களின் குல முதல்வரைக் குறிப்பிடுகிறது.

மேலும் காலக்கணக்கில் உள்ள முரண்பாட்டையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். யி ஜிங் அந்த அரசரின் காலம் பொயு 2ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் குப்தர்களின் முதல் அரசர் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தவிர குப்தர்களின் முதல் அரசர் சாதாரணமான அரசரே அன்றி இருபத்து நான்கு கிராமங்களை நன்கொடையாக அளிக்கும் அளவிற்கு பெரும் அரசரல்ல என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த வாதத்தை மறுக்கும் ஆய்வாளர்கள், ஶ்ரீ என்பது முன்னொட்டாக இருக்கலாம், ஆனால் அதைச் சேர்த்தே பலர் அழைத்ததை வைத்து யி ஜிங்கும் அப்படியே தனது குறிப்புகளில் எழுதியிருக்கலாம் என்கிறார்கள். காலக்கணக்கில் உள்ள குழப்பத்திற்கு மறுமொழியாக, பல சீன யாத்திரிகளின் குறிப்புகளில் இதே போன்ற காலக் கணக்குப் பிரச்சனைகள் இருந்ததை அவர்கள் சுட்டுகின்றனர். பல நூற்றாண்டுகள் கழித்து வெளிநாட்டிலிருந்து வந்த அவர்களுக்கு உள்நாட்டு ஆண்டுக்கணக்குகள் தெரியாமல் எழுதியிருக்கச் சாத்தியம் உள்ளது என்கின்றனர் அவர்கள்.

உதாரணமாக சுவான்சங் (யுவான் சுவாங் என்று தமிழ்ப்புத்தகங்களில் குறிப்பிடப்படுபவர்) எழுதிய குறிப்புகளில் நாலந்தா பல்கலைக்கழகத்தின் காலத்தையும் அசோகரின் காலத்தையும் தவறாகக் குறிப்பிட்டிருப்பதை உதாரணமாகக் காட்டுகின்றனர். அதைப் போலவே அக்காலத்தில் ஓர் அரசர் இருபத்து நாலு கிராமங்களைக்கூட நிவந்தமாக விடமுடியாத அளவிற்கு சக்தி இல்லாதவர் என்ற கருத்தையும் மறுக்கின்றனர்.

யி ஜிங்கின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சீனக் கோவில், கங்கைக் கரையை ஒட்டி நாலந்தாவிலிருந்து நாற்பது யோஜனை தூரம் கிழக்கில் இருப்பதாக மொழிபெயர்க்கப்பட்டு அதை வைத்து தற்போது வங்காளத்தில் உள்ள மூர்ஷிதாபாத் என்ற இடத்தில் அந்தக் கோவில் இருந்தது என்ற முடிவுக்கும் சிலர் வந்தனர். மி-லி-கியா-சி-கியா-பொ-னோ என்பது மிருகஷிகாவன என்ற சீன கோவில்தான் என்று பலர் அறுதியிட்டுக் கூறி, குப்தர்களின் தோற்றம் வங்காளத்தின் வடபகுதி என்று அவர்கள் கூறினர். இதிலும் சில ஆய்வாளர்களுக்கு இடையில் வேறுபாடுகள் இருந்தன. டி.சி. கங்குலி இந்தக் கோவில் இருந்தது மூர்ஷிதாபாத் என்று சொன்னார். ஆனால் ஆர்.சி. மஜூம்தார் அந்த இடம் ராஜ்ஷாகி என்ற இடம்தான் என்று தெரிவித்தார். இரண்டும் வங்காளத்தில்தான் உள்ளது. ஆகவே குறிப்பாக இடம் எதுவாக இருந்தாலும் யி ஜிங்கால் குறிப்பிடப்பட்ட கோவில் வங்களாத்தில்தான் இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது இருந்த இடம் வரேந்திர பகுதி என்று அழைக்கப்படும் வட வங்காளம் என்பதிலும் குழப்பம் ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் யி ஜிங் குறிப்பிட்ட அரசர் குப்தர்களின் முதல் அரசரான ஶ்ரீகுப்தர்தான் என்ற முடிவுக்கு பல வரலாற்றறிஞர்கள் வந்தாலும், அவர் முதலில் ஆட்சி செய்தது வங்காளம்தானா என்பதில் சந்தேகம் எழுப்புகின்றனர். சீனக் கோவில் வங்காளத்தில் இருந்தது என்று கூறிய ஆர்.சி மஜூம்தாரே வங்காளம் குப்தர்கள் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது என்று சொல்லலாமே தவிர அங்கேதான் குப்தர்கள் தோன்றினர் என்பது சரியல்ல என்கிறார்.

இந்தக் குறிப்புகளையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் புராணங்களின் படி குப்தர்களின் ஆட்சி ப்ரயாகை, மகதம், சாகேதம் ஆகிய இடங்களில் இருந்திருக்கிறது. ஆனால் புராணங்கள் வங்காளத்தின் வட பகுதியைக் குறிப்பிடவில்லை. சீன யாத்திரிகரின் குறிப்புகளை வைத்துப் பார்த்தால், வட வங்காளத்தில் அவர்கள் ஆட்சி இருந்தது ஆனால் கங்கைக் கரை பகுதி அந்தக் குறிப்புகளில் இல்லை.

அப்படியென்றால் குப்தர்களின் தோற்றம் எந்த இடத்தில் நிகழ்ந்தது. அவர்களின் முதல் மன்னனான ஶ்ரீகுப்தர் எங்கிருந்து ஆட்சி செய்தார்? கல்வெட்டு, நாணய ஆதாரங்கள் என்ன சொல்கின்றன?

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *