குப்தர்கள் தங்களது தொடக்க காலத்தில் எங்கிருந்து ஆட்சி செய்தார்கள் என்பதைப் பற்றி புராணங்களும் சீன யாத்திரிகரின் குறிப்புகளும் மாறுபட்ட செய்திகளைத் தந்தன என்பதால், அவர்களின் கல்வெட்டுகள் நாணயங்களைக் கொண்டு குப்தர்களின் பூர்வீகம் எங்கே இருந்தது என்பதைப் பற்றி அறிய ஆய்வாளர்கள் முயன்றனர். மேற்குறிப்பிட்ட குறிப்புகளை வைத்து மூன்று பகுதிகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வுகள் நடந்தன.
– கங்கைச் சமவெளிப் பகுதியான கிழக்கு உத்தரப் பிரதேசம்
– குப்தர்களின் தலைநகராக இருந்த பாடலிபுத்திரத்தைத் தன்னகத்தே கொண்ட மகதம் (பீகார்)
– சீனக் கோவில் இருந்த வங்காளம்
நாணயங்கள்
குப்தர்களின் தொடக்க கால அரசர்களில் ஒருவரான சந்திரகுப்தர் – அரசி குமாரதேவி ஆகியோர் அச்சிட்ட தங்க நாணயங்கள் பெரும்பாலும் கிழக்கு உத்தரப் பிரதேசத்திலேயே கிடைத்தன. மதுரா, அயோத்தியா, லக்னோ, வாரணாசி ஆகிய இடங்களில் இவ்வகை நாணயங்கள் கிடைக்கப்பெற்றன.
ஆனால் மகதத்தில் இந்த நாணயங்கள் கிடைக்கவே இல்லை. ஒட்டுமொத்தமாக குப்தர்களின் நாணயங்கள் கிடைக்கப்பெற்ற இடங்களை எடுத்துக்கொண்டால் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பதினான்கு இடங்களிலும், பீகாரிலும் வங்காளத்திலும் தலா இரண்டு இடங்களிலும் கிடைத்தன. குறிப்பாக வங்காளத்திலும் பீகாரிலும் கிடைக்கப்பெற்றவை இரண்டாம் சந்திரகுப்தர், குமாரகுப்தர் போன்ற பிற்கால குப்தர்களுடையவை.
கல்வெட்டுகள்
கல்வெட்டுகளைப் பொருத்தவரையில் குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் முதல் நூற்றைம்பது ஆண்டுகளைச் சேர்ந்த பதினைந்து கல்வெட்டுகளில் ஒன்பது கல்வெட்டுகள் கிழக்கு உத்தரப் பிரதேசத்திலும் இரண்டு பீகாரிலும் ஐந்து வங்காளத்திலும் கிடைத்தன. இதில் மகதத்தில் கிடைத்த இரண்டு சாசனங்களும் சமுத்திரகுப்தரின் கயா, நாலந்தா செப்பேடுகள். வங்காளத்தில் கிடைத்த கல்வெட்டுகள் குமாரகுப்தரின் காலத்தைச் சேர்ந்தவை. குப்தர்களின் சாசனங்களில் மிக முக்கியமான பிரயாகை (அலகாபாத்) தூண் கல்வெட்டு இருப்பது உத்தரப் பிரதேசத்தில். குப்தர்களின் வம்சாவளி பிரசஸ்திகளுடன் கூடிய தனித்தன்மை வாய்ந்த கல்வெட்டு இதுவாகும். அப்படிப்பட்ட ஒரு கல்வெட்டைத் தங்களது பூர்வீக ஊரில் சமுத்திரகுப்தர் அமைத்ததில் வியப்பில்லை அல்லவா.
இதைத் தவிர பிடாரி என்ற இடத்தில் கிடைத்த ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டு அங்கே அவரால் நிறுவப்பட்ட ஒரு புனித மூர்த்தத்தைப் பற்றியும் அவருடைய தகப்பனாருடைய ஆன்மிகத் தேடல்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த விஷயங்களைப் பற்றிக் குறிப்பிட தன்னுடைய பூர்வீகமான ஊரையே ஸ்கந்தகுப்தர் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் என்கிறார் வரலாற்றறிஞர் எஸ்.ஆர்.கோயல். மேலும் குப்தர்களின் சித்திரங்களில் அடிக்கடி கங்கையும் யமுனையும் குறிப்பிடப்படுவது தங்களது சொந்த நிலத்தைப் பற்றிய அவர்களது பெருமிதத்தால்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இவற்றைத் தவிர சமுத்திரகுப்தர் மேற்கொண்ட திக்விஜயத்தைப் பற்றிய குறிப்புகளும் குப்தர்களில் தொடக்க கால ஆட்சிப் பகுதியை உறுதி செய்கின்றன. ஏற்கெனவே புராணங்களில் காணப்பட்ட குறிப்புகளும் குப்தர்களைப் பிரயாகையோடு தொடர்புபடுத்துகின்றன. அப்படியானால் மகதம் யாருடைய ஆட்சியின் கீழ் இருந்தது என்பது பற்றிய கேள்வி எழுகிறது.
மகதத்தின் நிலை
பொயுமு ஆறாம் நூற்றாண்டில் பீகாரின் வடபகுதியை லிச்சாவி என்ற அரச வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். அஜாதசத்ருவால் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அவர்களது ஆட்சிப் பகுதி மிகவும் குறுகிப் போயிற்று. அதன்பின் அவர்கள் பொது யுகத்தின் ஆரம்பத்தில் நேபாளத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் என்று பார்த்தோம்.
சந்திரகுப்தரின் மனைவியான குமாரதேவி, நேபாளத்தில் ஆட்சி செய்த லிச்சாவிகளின் அரசகுமாரி என்று ஆய்வாளர் சுதாகர் சட்டோபாத்தியாயா குறிப்பிடுகிறார். ஆனால், சந்திரகுப்தர்-குமாரதேவி ஆகியோரின் மகனான சமுத்திரகுப்தர், நேபாளம் தன்னுடைய சிற்றரசு என்று கல்வெட்டுகளில் குறிக்கிறார். தன்னுடைய தாய்வீட்டை அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்க மாட்டார் என்ற காரணத்தால் லிச்சாவிகள் அந்தச் சமயத்தில் நேபாளத்தில் ஆட்சி செய்திருக்க மாட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
லிச்சாவி வம்ச அரசரான இரண்டாம் ஜெயதேவரின் கல்வெட்டில் அவர் தங்களுடைய முன்னோரான சுபுஷ்பா லிச்சாவி புஷ்பபுரம் என்ற இடத்தில் பிறந்ததாகக் குறிப்பிடுகிறார். புஷ்பபுரம் என்பது பாடலிபுத்திரமாகவே இருக்கக்கூடும். ஆகவே குஷாணர்களுக்குப் பிறகு வட இந்தியாவில் அரசுகள் சிதறுண்டபோது, லிச்சாவிகள் தங்களது பூர்விக இடமான மகதத்தை மீண்டும் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி செய்திருக்கக்கூடும். ஆகவே விஷ்ணுபுராணம் குறிப்பிடும் மகதர்கள், லிச்சாவி வம்சத்தினராகவே இருக்கக் கூடும்.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், பொயு மூன்றாம் நூற்றாண்டில் குப்தர்களுடைய ஆட்சி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பிரயாகையில் தோன்றியிருக்கலாம். அதேசமயம் மகதத்தை லிச்சாவி வம்சத்தினர் ஆட்சி செய்து கொண்டிருந்திருக்கின்றனர். சந்திரகுப்தர் – லிச்சாவி அரச குமாரியான குமாரதேவியை மணந்ததை அடுத்து அவர்களது ஆட்சிப் பகுதி மகதத்திற்கும் விரிந்து அதற்கு அப்பால் வங்காளம் வரைக்கும் விரிவடைந்தது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆய்வாளர் வின்ஸ்டன் ஸ்மித், ‘இந்தத் திருமணம் நடந்த போது பழைமை வாய்ந்த பெரும் நகரமான பாடலிபுத்திரத்தின் ஆட்சி லிச்சாவிகளின் கையில் இருந்தது. அதன்பின் சந்திரகுப்தர் தன்னுடைய மனைவியின் உறவினர்களின் அதிகாரத்தை இந்த மண உறவின் மூலம் தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டார்’ என்று இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஆனால் மேற்குறிப்பிட்ட தரவுகளும் சில ஆராய்ச்சியாளர்களால் மறுக்கப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். நாணயங்கள் கிடைப்பதை மட்டும் வைத்து குப்தர்களின் பூர்விகத்தை முடிவு செய்ய இயலாது. மௌரியர்கள் போன்ற சில வம்சத்தினரின் தொடக்க கால ஆட்சிப் பகுதி வேறாகவும் அவர்களின் நாணயங்கள் வேறு இடத்திலும் கிடைக்கின்றன என்று இவர்கள் ஆட்சேபம் எழுப்புகின்றனர்.
இதே காரணத்தைக் கல்வெட்டுகள் தொடர்பாகவும் அவர்கள் கூறுகின்றனர். பி.பி.சின்ஹா “ஆர்ய மஞ்சுஶ்ரீ மூல கல்ப” என்ற சொற்றொடரை வைத்துக்கொண்டு குப்தர்கள் தோன்றியது மதுராவில்தான் என்று கூறுகிறார். சமுத்திரகுப்தரின் நாணயங்கள் மதுராவில் ஆட்சி செய்த குஷாணர்களின் நாணயங்களைப் பின்பற்றி இருப்பதை அவர் சுட்டுகிறார். புராணங்களில் சாகேதம் என்ற பகுதியே குப்தர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அவர் எடுத்துக்காட்டுகிறார்.
இந்தக் காரணங்கள் நன்கு ஆராய்ந்தால், அவர் கூறியதில் பல தவறுகள் இருப்பது புலப்படும். புராணக்குறிப்புகளில் சாகேதம் முதலில் வரவில்லை என்பது அதில் ஒன்று. சமுத்திரகுப்தரின் நாணயங்களில் குஷாணர்களின் தாக்கம் இருப்பது உண்மை என்றாலும் அவை பஞ்சாப் பகுதியில் கிடைக்கும் பிற்கால குஷாணர்களின் நாணயங்கள் போன்று இருக்கின்றனவே தவிர, மதுரா பகுதியில் கிடைக்கும் குஷாணர்களின் நாணயங்களைப் போல அல்ல. சமுத்திரகுப்தர் மதுராவை ஆட்சி செய்த நாகர்களின் அரசனான கணபதி நாகனைத் தோற்கடித்த பிறகே அது குப்தர்களின் ஆட்சியின் கீழ் வந்திருக்கிறது. எனவே மதுரா குப்தர்களின் பூர்வீகம் என்ற வாதமும் அடிப்பட்டுப் போகிறது.
இப்படியாக, கிடைக்கும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது குப்தர்களின் தொடக்கம் கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதியில்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. மற்ற இரு பகுதிகளும் அவர்களின் பூர்வீகமாக இருப்பதற்கு சாத்தியங்கள் இருந்தாலும் அதற்கான வலுவான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
குலம்
பூர்வீக இடத்தைப் போலவே குப்தர்களின் குலம் என்ன என்பது பற்றியும் பல்வேறு விதமான வாதங்கள் ஆய்வாளர்களால் முன்னெடுத்து வைக்கப்படுகின்றன.
எஸ்.ஆர். கோயல் போன்ற சில ஆய்வாளர்கள் குப்தர்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். விஷ்ணுகுப்தர், பிரம்மகுப்தர் போன்று குப்த என்று வரும் பெயர்களை பிராமணர்களே வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை சுட்டும் இவர்கள், குப்தர்கள் கொண்டிருந்த மணத்தொடர்புகளை அவர்கள் பிராமணர்கள் என்பதற்கான ஆதாரமாக நிறுவுகின்றனர்.
உதாரணமாக இரண்டாம் சந்திரகுப்தரின் மகளான பிரபாவதிகுப்தா, பிராமணனான வாகாடக அரசன் ருத்ரசேனனைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். போலவே பிராமண குலத்தைச் சேர்ந்த கடம்ப மன்னான காகுஸ்தவர்மன் குப்த அரசகுமாரி ஒருவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ஆகவே ஒரே சமூகத்தில் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தின்படி குப்தர்கள் பிராமணர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது இந்த ஆய்வாளர்களின் வாதம். வைதீக நெறியை குப்தர்கள் உயர்த்திப் பிடித்ததையும் இதற்கான ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் அக்காலத்தில் ஒரே சமூகத்தில் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம், அதுவும் உயர்குடியினரில் அவ்வளவு கடுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. ஆகவே அதை வைத்து மட்டுமே குப்தர்கள் பிராமணர்கள் என்று முடிவுகட்டிவிட இயலாது. ஒருவேளை அவர்கள் பிராமணர்களாக இருந்திருந்தால் அவர்கள் ஏன் தங்களின் சமூகத்தை பெருமையாக தங்களுடைய கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிப்பிட்டுக்கொள்ளவில்லை என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
விஷ்ணு புராணம் குப்தர்கள் என்பவர்கள் வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, குப்தர்கள் வைசிய சமூகத்தினர் என்கின்றனர் சிலர். ஆனால் அக்காலத்தில் பல சமூகங்கள் குப்தர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டிருந்தனர். ஆகவே இந்த வாதமும் அடிப்பட்டுப் போகிறது.
இரண்டாம் சந்திரகுப்தரின் மகளான பிரபாவதி குப்தா தான் வெளியிட்ட பூனா செப்பேட்டில் தனது கோத்திரம் தாரண கோத்திரம் என்றும் தனது கணவனான இரண்டாம் ருத்ரசேனன் விஷ்ணுவிருத்த கோத்திரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதை எடுத்துக்கொண்டு கே.பி.ஜெயஸ்வால் போன்றோர், ஜாட்களின் குலத்தில் இந்த தாரண கோத்திரம் உண்டு. ஆகவே குப்தர்கள் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நிறுவுகிறார். ஆனால், ஸ்கந்த புராணத்தின்படி பிராமணர்களிலும் தாரண என்ற கோத்திரம் இருப்பதை இன்னும் சிலர் சுட்டுகின்றனர். இன்னும் சிலரோ, குப்தர்கள் பிராமணர்கள் அல்ல, ஆனால் பிராமணர்களின் கோத்திரத்தை சுவீகரித்துக்கொண்டனர் என்று கூறி மேலும் குழப்புகின்றனர்.
இப்படியாக குப்தர்களின் குலம் பற்றிய விவாதம் எந்த முடிவுக்கும் வரமுடியாத வண்ணம் அப்படியே நிற்கிறது.
(தொடரும்)