பண்டைக் காலத்தில் பாரத தேசத்தை ஆட்சி செய்த அரச வம்சங்களில் தாங்கள் ஆட்சி செய்த ஆண்டுகளைச் சரியாகக் குறித்து வைத்தவை மிகச் சில அரசுகளே. சக ஆண்டு, கலி ஆண்டு என்று பல்வேறு ஆண்டுகளை அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் பின்பற்றியபோதிலும், மன்னர்களின் சாசனங்களில் இந்த வருடங்கள் குறிப்பிடப்படுவது மிகவும் அரிதாகவே இருந்தது.
உதாரணமாக தமிழகத்தில் கிடைக்கும் பழங்காலக் கல்வெட்டுகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே இந்தக் கலி ஆண்டும் சக ஆண்டும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அரசர்களின் ஆட்சியாண்டுகளையே கல்வெட்டுகள் கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட அரசர் ஆட்சிக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்ற விவரம்தான் கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறதே தவிர அவர் எப்போது ஆட்சிக்கு வந்தார் என்பதை சாசனங்கள் தெரிவிப்பதில்லை. ஆகவே மன்னர்கள் ஆட்சி செய்த வருடங்களை கல்வெட்டுகளில் உள்ள வானியல் குறிப்புகளின் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்து வந்தனர்.
இதேபோன்ற குழப்பமே குப்தர்களின் ஆரம்ப கால ஆட்சியாளர்களின் விஷயத்திலும் இருந்தது. குப்தர்களைப் பொருத்தவரை சமுத்திரகுப்தர் காலத்திலிருந்தே அவர்களது சாசனங்கள் கிடைக்கின்றன. ஆனால் சமுத்திரகுப்தரும் அவரது ஆட்சியாண்டையே குறிப்பிட்டு இருக்கிறார். இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்திலிருந்துதான் பொதுவாகப் பின்பற்றப்படும் ஆண்டுக் கணக்குகள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவர் குப்தர்கள் காலம் என்ற ஒரு புது ஆண்டுக் கணக்கைக் குறிப்பிடுகிறார். இது ஆய்வாளர்களைச் சிக்கலில் ஆழ்த்தியது. இந்த ஆண்டுக் கணக்கின் ஆரம்பம் என்ன? அதை உருவாக்கியவர் யார்? அதனோடு ஒப்பீட்டளவில் உள்ள மற்ற ஆண்டுகள் என்ன என்பதை ஆராய்வதில் அவர்கள் ஈடுபட்டனர்.
வரலாற்று அறிஞரும் குப்தர்களின் பல கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து உலகிற்கு அறிவித்தவருமான ஜே.எஃப். ப்ளீட், குப்தர்கள் ஆண்டுக்கான ஆதாரத்தை இஸ்லாமிய வரலாற்று ஆசிரியரான அல்பெருனியின் குறிப்புகளிலிருந்து கண்டறிந்தார். பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்பெருனியின் குறிப்புகளில் இந்துக்கள் பயன்படுத்திய ஆண்டுகளின் பெயர்கள் இருக்கின்றன. ஶ்ரீஹர்ஷ காலம், சக காலம், குப்த காலம், வல்லபி ஆண்டு, விக்கிரம ஆண்டு போன்றவற்றை அவர் குறிப்பிடுகிறார். குப்தர்கள் ஆண்டுக்காலத்தைப் பற்றி கூறும்போது ‘குப்தர்கள் என்பவர்கள் தீயவர்களாகவும் அதிகாரம் படைத்தவர்களாகவும் இருந்தனர். இந்த குப்தர்கள் காலம் என்ற ஆண்டுக் கணக்கு அவர்கள் அழிந்த பிறகு உருவானது. வல்லபி ஆண்டைப் போலவே சக வருடம் 241ல் இந்த ஆண்டுக்கணக்கு உருவாக்கப்பட்டது’ என்கிறார் அல்பெருனி.
மேலும் சோமநாதபுரம் ஆலயம் கஜினி முகமதுவால் இடிக்கப்பட்ட ஆண்டைக் குறிப்பிடும்போது இந்துகள் அந்த ஆண்டை வித்தியாசமான முறையில் கணக்கிட்டனர் என்கிறார் அவர். அதாவது ‘முதலில் சக ஆண்டு 242 குறிக்கப்பட்டு அதனுடன் 606 ஆண்டுகளும் அதன் பின் 99 ஆண்டுகளும் கூட்டப்பட்டு சக ஆண்டு 947ல் சோமநாதபுரம் ஆலயத்தை கஜினி முகமது இடித்த ஆண்டு இந்துக்களால் கணக்கிடப்பட்டது’ என்று அவர் குறிப்பிடுகிறார்.
அந்த ஆலயம் இடிக்கப்பட்டது ஆங்கிலேய ஆண்டுக்கணக்கில் பொயு 1025-1026 ஆண்டுகளில். இதை வைத்தும் ஏற்கனவே சக ஆண்டு என்பது பொயு யுகம் தொடங்கி 78 ஆண்டுகள் கழித்துத் தொடங்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் உறுதி செய்ததையும் வைத்துப் பார்த்தால், குப்தர்களின் ஆண்டுக் கணக்கு பொயு 319-20ம் ஆண்டு தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கு ப்ளீட் வந்தார்.
குப்தர்கள் காலம் தொடங்கியது பொயு 319 என்ற முடிவு ஒருபுறமிருக்க, அல்பெருனி குறிப்பிட்டதுபோல இது குப்தர்கள் ஆட்சிக்காலம் முடிந்த பிறகு தொடங்கியதா என்ற விவாதம் அடுத்து எழுந்தது. இதேபோன்று சக ஆண்டும் சாகர்களுடைய வீழ்ச்சிக்குப் பிறகு தொடங்கப்பட்டது என்ற குறிப்பையும் அல்பெருனி எழுதிவைத்திருந்தார். எப்படி ஓர் அரச வம்சம் அழிந்த பிறகு அந்தப் பெயரை வைத்து ஒரு ஆண்டுக் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, சக ஆண்டைப் பொருத்தவரை அது குறிப்பிடப்பட்டிருந்த கல்வெட்டுகளில் தெளிவாக ‘சக-ந்ருப-சம்வத்ஸர‘ அதாவது சக அரசர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.
ஆக, சக வம்ச அரசர்கள் அழிந்த பிறகு அந்த ஆண்டுக் கணக்கு தொடங்கப்பட்டது என்ற அல்பெருனியின் கூற்றில் உண்மையில்லை என்று எடுத்துக்காட்டிய ஆய்வாளர்கள் அது போலவே குப்தர்கள் அழிந்த பிறகு அந்த ஆண்டுக் கணக்குத் தொடங்கப்பட்டிருக்கும் என்பதும் உண்மையல்ல, அது குப்தர்களாலேயே தொடங்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் உறுதி செய்தனர்.
அடுத்ததாக எந்த குப்தரின் ஆட்சியில் இந்த ஆண்டுக் கணக்கு தொடங்கப்பட்டது என்ற ஆராய்ச்சியில் இறங்கினார் ப்ளீட். குப்தர்களின் கல்வெட்டுகளும் நாணயங்களும் ஆராயப்பட்டன. முதலாம் குமாரகுப்தரின் வெள்ளி நாணயம் ஒன்றில் 136 என்ற ஆண்டு எழுதப்பட்டிருந்தது. போலவே ஸ்கந்தகுப்தரின் வெள்ளி நாணயங்கள் குப்தர் ஆண்டு 148 என்ற எண்ணைக் கொண்டிருந்தன. இந்த இரு அரசர்களின் கடைசி ஆட்சி ஆண்டைப் பற்றிய குறிப்புகள் இவை. அதற்குப் பிறகு அவர்களின் ஆட்சிக்காலத்தைக் குறிக்கும் நாணயங்களோ கல்வெட்டுகளோ கிடைக்கவில்லை.
அதுபோல, இரண்டாம் சந்திரகுப்தரின் மதுரா தூண் கல்வெட்டு குப்தர்கள் ஆண்டு 61 என்ற ஆண்டையும் அது சந்திரகுப்தரின் ஐந்தாம் ஆட்சியாண்டு என்பதையும் குறிப்பிடுகிறது. இதிலிருந்து இரண்டாம் சந்திரகுப்தர் குப்தர்கள் ஆண்டு 56ல், அதாவது பொயு 375ல் அரியணை ஏறினார் என்பதும் குமாரகுப்தர் குப்தர்கள் ஆண்டு 136 வரை ஆட்சி செய்தார் என்றும் ஸ்கந்தகுப்தர் குப்தர்கள் ஆண்டு 148 வரை ஆட்சி செய்தார் என்ற முடிவுக்கும் ஆய்வாளர்கள் வந்தனர்.
இவற்றிலிருந்து குப்தர்கள் ஆண்டு இரண்டாம் சந்திரகுப்தருக்கு முன்பு பின்பற்றப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் அவருக்கு முந்தைய அரசர்களின் ஆட்சியாண்டுகள் தெளிவாகத் தெரியவில்லை. அவருக்கு முன்னால் நான்கு அரசர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். அப்படியானால் அவருக்கு முந்தைய 56 ஆண்டுகளில் இந்த நான்கு அரசர்களும் ஆட்சி செய்திருக்கலாம். இல்லையென்றால் மூன்று / இரண்டு அல்லது ஓர் அரசரோ கூட ஆட்சி செய்திருக்கலாம்.
அப்படியானால் குப்தர்கள் ஆண்டைத் தொடங்கியது யார்? இந்தப் புதிருக்கான விளக்கத்தை அறிய சமுத்திரகுப்தரின் கல்வெட்டுகள் ஆராயப்பட்டன. ஆய்வாளர் ஆர்.சி. மஜூம்தார் சமுத்திரகுப்தரின் நாலந்தா கல்வெட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் பொயு 324ம் ஆண்டு ஆட்சி செய்திருக்கிறார் என்று கூறினார். அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்தான் குப்தர்கள் ஆண்டு தொடங்குவதால், அந்த ஆண்டுக்கணக்கை உருவாக்கியவர் சமுத்திரகுப்தர்தான் என்பது அவர் வாதம்.
ஆனால் பல வரலாற்றறிஞர்கள் நாலந்தா கல்வெட்டின் உண்மைத்தன்மையை ஏற்கவில்லை. அது சமுத்திரகுப்தரின் கல்வெட்டு ஒன்றின் பிரதி, பல ஆண்டுகள் கழித்துப் பிரதி எடுக்கப்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து. அப்படிப் பிரதி செய்யப்பட்டபோது ஆண்டுக் கணக்கு மாற்றி எழுதப்பட்டிருக்கலாம் என்றும் அதன் காரணமாக அது பொயு 324ம் ஆண்டைச் சேர்ந்தது என்பது ஏற்க இயலாத வாதம் என்றும் அவர்கள் தெரிவித்துவிட்டனர். அலகாபாத் கல்வெட்டு, ஏரான் கல்வெட்டு போன்ற சமுத்திரகுப்தரின் கல்வெட்டுகள் அனைத்தும் அவரது ஆட்சியாண்டுகளையே கொண்டிருந்தனவே தவிர குப்தர்களின் ஆண்டு அவற்றில் குறிப்பிடப்படவில்லை.
இதைத் தவிர குப்தர்களின் சமகால அரசர்களுடைய ஆட்சிக்காலமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. வாகடகர்கள், பாரசிவ நாகர்கள் ஆகியோரின் ஆட்சிக்காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தன் மகனான கௌதமிபுத்திரனை நாகர்களின் அரசனான பாவநாகரின் மகளுக்குத் திருமணம் செய்துகொடுத்த முதலாம் பிரவரசேனன், பொயு 335 வரை ஆட்சி செய்திருக்கிறான் என்பது வாகாடகர்களின் குறிப்புகளிலிருந்து தெரிகிறது.
அவன் இறந்த பிறகு வாகாடகர்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தன் பேரனான முதலாம் ருத்ரசேனனுக்கு உதவியாக பாவநாகர் இருந்தார் என்பதும் அவர் பொயு 340ல் இறந்துபட்டார் என்பதும் நாகர்களின் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. சமுத்திரகுப்தர் நாகர்களைத் தோற்கடிக்கும்போது அவர்களின் அரசனாக இருந்தது நாகசேனன் என்ற அரசன். ஆகவே சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் பொயு 340க்குப் பிறகே இருந்திருக்கவேண்டும் என்ற காரணத்தால் குப்தர்கள் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டிருக்கச் சாத்தியம் இல்லை என்பதே ஆய்வாளர்களின் முடிவு.
அப்படியானால் குப்தர்களின் ஆண்டுக் கணக்கு அவருக்கும் முன்னால் தொடங்கப்பட்டிருக்கவேண்டும். குப்தர்களின் முதல் இரண்டு அரசர்களான ஶ்ரீகுப்தரும் கடோத்கஜரும் சிறிய பகுதிகளையே ஆண்டவர்கள். மகாராஜா என்ற அடைமொழியோடு மட்டும் அழைக்கப்பட்டவர்கள். ஆகவே அவர்கள் ஒரு புது ஆண்டுக்கணக்கை தொடங்கியிருக்கும் சாத்தியங்கள் மிகக்குறைவு. இந்தக் காரணத்தால் குப்தர்கள் ஆண்டுக் கணக்கை தொடங்கியது கடோத்கஜரின் மகனும் சமுத்திரகுப்தரின் தந்தையும் ஆன முதலாம் சந்திரகுப்தர் ஆகத்தான் இருக்கமுடியும். பொயு 319 அவர் ஆட்சிக்கட்டிலில் ஏறிய ஆண்டாக இருக்கக்கூடும். அதை வைத்தே இந்த ஆண்டுக்கணக்குத் தொடங்கியிருக்கலாம். அவருக்கு முன்னால் ஆட்சி செய்த கடோத்கஜரின் ஆட்சிக்காலம் பொயு 300லும் ஶ்ரீகுப்தரின் ஆட்சிக்காலம் அதற்கு முன்னாலும் இருந்திருக்கவேண்டும்.
முதலாம் சந்திரகுப்தர் ஆட்சியில் ஏறியது அப்படியென்ன சிறப்பான நிகழ்வு ? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள நாம் மீண்டும் கடோத்கஜ குப்தரின் காலத்திற்குச் செல்லவேண்டும். அண்டை நாடுகளான வாகாடகர்களும் நாகர்களும் மண உறவு கொண்டு வலுவான கூட்டணி ஒன்றை அமைத்த கடோத்கஜர் தானும் அப்படி ஒரு கூட்டணியை உருவாக்க முடிவெடுத்தார். தன் மகனும் பெரும் வீரனுமான சந்திரகுப்தருக்கு அண்டை நாடுகளில் பெண் தேட ஆரம்பித்தார். அவரது கண்ணில் பட்டது மகத நாட்டை ஆண்ட லிச்சாவி வம்சத்தவர்.
குப்தர்களை ஒப்பிடும்போது லிச்சாவிகள் பெரும் பாரம்பரியம் கொண்டவர்கள். வலிமையானவர்கள். பொது யுகத்திற்கு முன்பிருந்தே மகதத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்கள். மிகச்சிறந்த வீரனான அஜாதசத்ரு பொயுமு 5ம் நூற்றாண்டில் லிச்சாவிகளோடு போரிட்டு அவர்களை வெல்ல படாதபாடு பட்டது வரலாறு. கடைசியில் தன்னுடைய அமைச்சனான வச்சக்கரனை லிச்சாவிகளிடத்தில் ஊடுருவச் செய்து பிரித்தாளும் சூழ்ச்சியெல்லாம் செய்துதான் அஜாதசத்ருவால் லிச்சாவிகளை வெல்ல முடிந்தது.
அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்டவர்களும் பாடலிபுத்திரத்தைத் தலைமையாகக் கொண்டு மகதத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்களுமான லிச்சாவிகள் அதிகம் அறியப்படாத குப்தர்களோடு மண உறவு கொள்ள முன்வந்ததின் காரணம் என்ன?
லிச்சாவிகளின் குலமே அதற்கான காரணமாக இருக்கக்கூடும் என்பது பலரின் கருத்து. பண்டைய நூல்கள் லிச்சாவிகளின் குலத்தைப் பற்றி அவ்வளவு உயர்வாகப் பேசவில்லை. சுத்தமில்லாத குலம் என்று அக்காலத்தைய நீதி நூல்களால் வர்ணிக்கப்பட்ட லிச்சாவிகள், அந்தப் பெயரைத் துடைக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
குப்தர்களின் மண உறவு அவர்களுக்கு அந்த வாய்ப்பை அளித்தது. மேலும் சந்திரகுப்தர் ஒரு சிறந்த வீரனாக இருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். எப்படியிருந்தாலும் சந்திரகுப்தருக்கும் லிச்சாவி அரசகுமாரி குமாரதேவிக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு அவர்களின் திருமணம் பொயு 305ம் ஆண்டு நடந்தது.
இந்தத் திருமணத்தின் தாக்கம் இந்திய வரலாற்றில் என்னவாக இருந்தது. பார்ப்போம்.
(தொடரும்)