லிச்சாவி அரசகுமாரியான குமாரதேவியை சந்திரகுப்தர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு இந்திய வரலாற்றின் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதுவரை சிறிய அரசுகளாகப் பிரிந்து கிடந்த வட இந்தியாவில் ஒரு பேரரசு அமைவதற்கான அடித்தளம் இட்ட நிகழ்வு அது. அரசியல் ரீதியாகவும் படைபலத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும் மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் குப்தர்களுக்கு பெரும் அனுகூலத்தை ஏற்படுத்தியது இந்த மண உறவு.
எப்படியென்றால், குப்தர்கள் ஆட்சி செய்த பகுதிகளைவிட லிச்சாவிகளின் ஆட்சிப் பரப்பு பெரியது. வளம் மிக்கது. தெற்கு பீகார் பகுதியில் அப்போதே பல உலோகச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ‘சோட்டாநாகபுரிப் பகுதி தங்கம், தாமிரம், இரும்பு போன்ற உலோகங்களின் தாதுக்களை அளிக்கும் சுரங்கங்களைக் கொண்டிருந்தது. மேற்கே சக்ரதார்பூரிலிருந்து கிழக்கே தால்பூம் வரையான சிங்பூம் பகுதி முழுவதும் தாமிரச் சுரங்கங்களைக் கொண்டது. மயூர்பஞ்ச் பகுதி (தென்மேற்கு பர்கானா) தங்கத்தை அளிக்கும் சுரங்கங்களைக் கொண்டிருந்தது’ என்கிறார் பண்டைக்காலப் பொருளாதாரத்தை ஆய்வு செய்த எஸ்.கே. மைத். குஷாணர்களின் காலத்திலிருந்தே இந்தச் சுரங்கங்களிலிருந்து உலோகங்கள் எடுக்கப்பட்டு வந்தன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பின்னாட்களில் அங்கிருந்து குப்தர்கள் உலோகங்களைப் பிரித்து எடுத்ததற்கான முக்கியமான சான்றாக உள்ளது துருப்பிடிக்காத மெஹரொலி இரும்புத் தூண். (பார்க்க பெட்டிச்செய்தி). மேலும் குப்தர்களின் தங்க நாணயங்கள் இந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட பொன்னைக் கொண்டே அச்சடிக்கப்பட்டன.
இப்படியோர் உலோக வளம் மிக்க பகுதியைத் தன்னகத்தே கொண்டிருந்த காரணத்தால் அப்போது இருந்த பல அரசுகளுக்கு இதன் மேல் ஒரு கண் இருந்தது. அப்படிப்பட்ட அரசை தங்களோடு சேர்த்துக்கொண்டது குப்தர்களுக்குப் பெரும் வலுவை அளித்ததில் வியப்பில்லை அல்லவா?
வெறும் மண உறவால் மட்டும் எப்படி நாடுகள் இணைய முடியும்? சில ஆய்வாளர்கள் மகத அரசு வரதட்சணையாக சந்திரகுப்தருக்கு அளிக்கப்பட்டது என்று கருதுகிறார்கள். ஆனால் இதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. வாகாடர்களும் நாகர்களும் மண உறவில் இணைந்த போது எந்த மாதிரியான ஏற்பாட்டைச் செய்தார்களோ அதே போன்ற ஒப்பந்தமே குப்த-லிச்சாவி அரசுகளின் மண உறவிலும் செய்யப்பட்டது என்று ஊகிப்பதற்கு இடம் உள்ளது. சந்திரகுப்தருக்கும் குமாரதேவிக்கும் பிறக்கும் மகனே இந்த இரு அரசுகளையும் ஆளவேண்டும் என்ற ஏற்பாடு இருந்தது என்பதற்கு அவர்களின் மகனான சமுத்திரகுப்தர் ‘லிச்சாவிகளின் தௌஹித்திரர்’ என்று கல்வெட்டுகளின் தெளிவாகக் குறிப்பிடுவது ஒரு சான்றாகும்.
இரு நாடுகளும் இப்படி நெருங்கி வந்ததையே விஷ்ணு புராணம் ‘அனு கங்கம் ப்ரயாகான் ச மாகதா குப்தாச் ச’ – குப்தர்களும் மாகதர்களும் கங்கைச் சமவெளியில் ஆட்சி செய்தனர் என்று குறிப்பிடுகிறது. இதில் கவனிக்கவேண்டும் இன்னொரு முக்கியமான செய்தி, குப்தர்கள் ஆட்சி செய்த மேற்கு கங்கைச் சமவெளிப்பகுதி பெரும்பாலும் வைதீக நெறியை பின்பற்றி வந்தது என்பது. மாறாக மகதம் பன்னெடுங்காலமாக வைதீகத்தோடு பௌத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய சமயங்களைப் பின்பற்றியவர்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. அதைத்தவிர குப்தர்கள் முழுக்க முடியாட்சியை அடிப்படையாகக் கொண்டிருந்தனர். ஆனால் லிச்சாவிகளோ குடியாட்சி முறையையும் பின்பற்றி வந்தனர். இந்த வேறுபாடுகளின் காரணமாக தொடக்கத்தில் இரு அரச வம்சத்தினருக்கும் இடையில் பல உரசல்கள் ஏற்பட்டன.
தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு பொயு 319ம் ஆண்டு முதலாம் சந்திரகுப்தர் அரியணை ஏறியபோது லிச்சாவியிலும் அரசர்கள் இல்லாத நிலை இருந்தது தெரிகிறது. ஆகவே அந்த அரசுக்கு உரிமையாக அவரது மகன் சமுத்திரகுப்தர் இருந்த போதிலும் அவர் வயதில் சிறுவனாக இருந்ததால் இரு அரசுகளையும் இணைத்து சந்திரகுப்தரே முடிசூட்டிக்கொண்டார். அடுத்ததாக அண்டையில் இருந்த சாகேத நாட்டின் (தற்போதைய அயோத்தி) மீது அவரது கவனம் திரும்பியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்து அதையும் தன்னுடைய நாட்டோடு இணைத்துக்கொண்டார்.
இப்படி கங்கைச் சமவெளி முழுவதையும் குப்தர்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்ததால் முதலாம் சந்திரகுப்தர் ‘மகாராஜாதி ராஜா’, அதாவது மன்னர்களின் மன்னன் என்று குறிப்பிடப்படும் முதல் மன்னனாகத் திகழ்கிறார். வாயு புராணம் குப்தர்கள் சாகேதத்தையும் ஆட்சி செய்தனர் என்று குறிப்பிடுவதால், அது இந்த வெற்றியின் பிறகு எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சமுத்திரகுப்தரின் வெற்றிகளைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகள் சாகேதத்தை குறிப்பிடாததால், அது சந்திரகுப்தராலேயே வெற்றி கொள்ளப்பட்டிருக்கும் என்பது அவர்களின் முடிவு. இந்தக் காரணங்களால் குப்தர்கள் ஆண்டு என்ற காலக்கணக்கு அது ஒரு பேரரசாக உருவாகத் தொடங்கிய 319ல் தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கிறது.
அதன்பிறகு பெரிய வெற்றிகள் எதையும் சந்திரகுப்தர் ஈட்டியதாகத் தெரியவில்லை. வங்காளத்தை அவர் வென்று இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதிய போதிலும் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. கங்கைச் சமவெளி முழுவதையும் ஒன்றிணைத்து தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பிறகு அதைச் செம்மைப் படுத்துவதிலேயே அவரது கவனம் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கௌமுதி மஹோத்ஸவம் என்ற அவரது சமகால இலக்கியம் ஒன்று அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாக சிலர் குறிப்பிடுகின்றனர். சமஸ்கிருதத்தில் எழுத்தப்பட்ட இந்த நாடகத்தின் கதாநாயகனான சந்திரசேனன், சந்திரகுப்தரையே குறிப்பதாக ஜெயஸ்வால் கருதுகிறார். அந்த நாடகத்தின் கதை என்ன?
மகத நாடு சுந்தரவர்மன் என்ற க்ஷத்திரிய அரசனால் ஆளப்பட்டு வந்தது. சுந்தரவர்மனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத காரணத்தால் சந்திரசேனன் என்ற ஒருவனை அவன் தத்தெடுத்துக்கொண்டான். ஆனால் சில காலம் கழித்து சுந்தரவர்மனுக்குக் குழந்தை பிறந்தது. அவனுக்குக் கல்யாணவர்மன் என்ற பெயரை வைத்து அவனையே தனது வாரிசாகவும் அறிவித்துவிட்டான் சுந்தரவர்மன். இது மூத்தவனான சந்திரசேனனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
மகத நாட்டின் பகை நாடான லிச்சாவிகளின் அரச குமாரியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான் சந்திரசேனன். அதற்குப் பிறகு மகதத்தைக் கைப்பற்ற நினைத்த சந்திரசேனன், லிச்சாவிகளின் வலிமையான படைகளைக் கொண்டு மகதத்தைத் தாக்கி பாடலிபுத்திரத்தை முற்றுகையும் இட்டான். வயதாகிவிட்ட காரணத்தால் சுந்தரவர்மனால் சந்திரசேனனை எதிர்த்து நிற்க முடியவில்லை. போரில் சுந்தரவர்மன் இறக்கவே, மகதத்தை சந்திரசேனன் கைப்பற்றினான். சுந்தரவர்மனுக்கு விசுவாசமான சில அமைச்சர்களால் கல்யாணவர்மன் பத்திரமாக நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டு மலைப்பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டான்.
உண்மையான வாரிசைத் தோற்கடித்து மகதத்தைக் கைப்பற்றிய சந்திரசேனனை நாட்டு மக்கள் விரும்பவில்லை. அவன் இந்து பாரம்பரிய முறைப்படி ஆட்சி செய்யவில்லை என்ற காரணத்தால் அவனை அவர்கள் வெறுத்தனர். ஆகவே ஆங்காங்கே கிளர்ச்சிகள் தோன்றின. தனக்கு எதிராகத் தோன்றிய கிளர்ச்சிகளை வன்முறையால் அடக்கிய சந்திரசேனன், நாட்டின் மூத்த குடிமக்கள் பலரைச் சிறையில் அடைத்தான். ஆனால் இது அவனுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது. சந்திரசேனன் மகதத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதும் மகதத்தின் பரம எதிரிகளான லிச்சாவி அரசகுமாரியைத் திருமணம் செய்துகொண்டவன் அவன் என்பதும் தனது வளர்ப்புத் தந்தையையே போர்க்களத்தில் கொன்றவன் அவன் என்பதும் அவனுக்கு எதிராக இருந்தன.
புலிந்தர்கள், சாபரர்கள் ஆகிய இடங்களின் ஆட்சியாளர்கள் அவனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அவனை ஒரு கொடுங்கோலனாகப் பார்த்த மக்கள் அவனுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் கல்யாணவர்மன் மதுராவின் யாதவ அரசனான கீர்த்திசேனனின் மகளைத் திருமணம் செய்துகொண்டான். இப்படி ஒரு வலுவான கூட்டணி தனக்கு எதிராக அமைந்ததால், நடைபெற்ற போரில் சந்திரசேனன் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டான். மகதத்தின் ஆட்சியைப் பிடித்த கல்யாணவர்மன் அதைக் கொண்டாட கௌமுதி மஹோத்ஸவம் என்ற விழாவை நடத்தினான் என்கிறது கௌமுதி மஹோத்ஸவம் என்ற நாடகம்.
இந்தக் கதையில் லிச்சாவி அரசகுமாரியைச் சந்திரசேனன் திருமணம் செய்துகொண்டான் என்பதைத் தவிர அந்தப் பாத்திரத்தை சந்திரகுப்தரோடு தொடர்பு படுத்தக்கூடிய தரவுகள் ஏதும் இல்லை. நாட்டில் கிளர்ச்சிகள் வெடித்தன என்றோ அதனால் சந்திரகுப்தர் கொல்லப்பட்டார் என்றோ வரலாறு கூறவில்லை. தனது மகனை வாரிசாக அறிவித்துவிட்டு சிறிது காலம் ஓய்வெடுத்துக்கொண்ட பின்னரே சந்திரகுப்தர் இறந்துபட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. ஆகவே தற்காலத்தில் காந்தளூர்ச்சாலைப் போர், ஆதித்த கரிகாலன் கொலை போன்ற நிகழ்வுகளை மட்டும் வைத்துக்கொண்டு தங்கள் இஷ்டப்படி எழுதும் புனைவுகளை வரலாறு என்று நிறுவ முயல்வது போன்ற முயற்சியாகவே இந்த கௌமுதி மஹோத்ஸவ நாடகத்தைப் பற்றி நாம் கருதலாம்.
0
பெட்டிச்செய்தி: டில்லி இரும்புத்தூண் என்று பொதுவில் அழைக்கப்படும் மெஹ்ரோலி இரும்புத்தூண், குதுப்மினார் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தத் தூணில் இரண்டாம் சந்திரகுப்தரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. சுமார் 23 அடி உயரமும் 16 இஞ்ச் விட்டமும் கொண்ட இந்தத் தூணின் எடை 6 டன்களாகும். இது ஒட்டுமொத்தமாக ஒரே துண்டு உலோகத்தால் ஆனது. வெயிலிலும் மழையிலும் பல நூற்றாண்டுகள் வெட்ட வெளியில் நின்ற போதிலும் துருப்பிடிக்காமல் உள்ளது. இந்தக் காரணங்களால் ஏதோ ஒரு சாதாரண, சிறிய தொழிற்கூடத்தில் அல்லாமல் அரசர்களுக்குச் சொந்தமான ஒரு தொழிற்கூடத்தில் அது செய்யப்பட்டது என்பது தெளிவு.
(தொடரும்)