Skip to content
Home » குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

சந்திரகுப்தரின் நாணயங்கள்

இந்திய வரலாற்றில் பல அரசர்கள் தங்கள் பெயரில் நாணயங்களை அச்சடித்துக்கொண்டிருக்கிறார்கள். குப்தர்களுக்கு முன்னால் மௌரியர்களும், குஷாணர்களும், யௌதேயர்களும், தமிழகத்தின் சங்க கால அரசர்களும் பொன், வெள்ளி நாணயங்களை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் செய்யாத புதுமையை முதலாம் சந்திரகுப்தர் தன்னுடைய நாணயங்களில் செய்தார்.

அதுவரை வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்டிருந்த நாணயங்களில் வெளிநாட்டு நாணயங்களின் தாக்கம் இருந்தது. குறிப்பாக கிரேக்க, ரோமானிய நாணயங்களைப் பின்பற்றி குஷாணர்களும் யௌதேயர்களும் தங்களது நாணயங்களை அச்சடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சந்திரகுப்தர் இந்த முறையை அடியோடு மாற்றி இந்தியாவிற்கு என்று ஒரு புதிய பாணியை நாணயங்களில் கொண்டு வந்தார். அரசர்களின் உருவங்கள் கிரேக்க உடையை (அதாவது கால்சராயை) அணியாமல் இந்திய உடைகளை அணிந்திருந்தன. வில், கோடாரி போன்ற ஆயுதங்கள் இடம்பெறத் தொடங்கின. அர்டோக்‌ஷோ போன்ற கிரேக்கக் கடவுளர்களுக்குப் பதிலாக துர்க்கையும் லக்ஷ்மியும் இடம்பெறத் தொடங்கினர்.

இவையெல்லாவற்றையும் விட சந்திரகுப்தர் செய்த புதுமை தன்னுடைய மனைவியான குமாரதேவியையும் தன்னுடைய நாணயங்களில் அவர் இடம்பெறச் செய்ததாகும். அதன் காரணமாகா இந்த வகை நாணயங்கள் சந்திரகுப்தர்-குமாரதேவி நாணயங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் நாணயங்களிலும் பெண்ணுக்குச் சம உரிமை அளித்துச் சிறப்பித்த முதல் மன்னராக சந்திரகுப்தரைச் சொல்லலாம்.

இந்த வகை நாணயங்களில் ஒன்றை இங்கே பார்க்கலாம். நாணயத்தின் ஒரு புறம் சந்திரகுப்தரும் குமாரதேவியும் இணைந்து காணப்படுகின்றனர். சந்திரகுப்தரின் அருகே ‘ச-ந்த்ர/கு-ப்த’ என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. குமாரதேவியின் அருகே அவருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. நாணயத்தின் மறுபுறம் சிங்கத்தின் மேல் வீற்றிருக்கும் ஒரு உருவமும் அதன் அருகே ‘லி-ச்சா-வ-ய’ என்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எழுத்துகள் எல்லாம் குப்தர்களின் எழுத்துருவைச் சேர்ந்தவை.

இந்திய மரபுப்படி பொதுவாக அரசர்-அரசி உருவங்கள் சேர்ந்து இருக்கும்படி உள்ள சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அரசியின் உருவம் மன்னனின் உருவத்திற்கு இடப்பக்கம் இருக்கும். ஆனால் சந்திரகுப்தரின் நாணயங்களில் குமாரதேவி மன்னனின் வலப்பக்கத்தில் காணப்படுகிறார். இதற்கான காரணத்தைக் கூறும் ஆய்வாளர் பதக், இந்தத் தோற்றம் ‘வைவாஹிக’ – அதாவது திருமணம் செய்துகொள்ளும் நிலையைக் குறிக்கிறது என்கிறார். திருமணம் செய்துகொள்ளும் பொழுது மனைவி கணவனின் வலப்பக்கம் இருப்பது மரபு. இதை வைத்து பதக் அந்தக் கருத்தை முன்வைக்கிறார். இது உண்மையென்றே தோன்றுகிறது. அப்படி இருக்குமானால், இது திருமணம் என்ற நிகழ்வைக் குறிக்க வெளியிடப்பட்ட நாணயங்கள் (Commemorative Medals) என்று கொள்ளலாம்.

ஸோஹோனி என்ற ஆய்வாளர் சந்திரகுப்தர் போருக்குக் கிளம்பும் ஒரு தருணத்தை இந்த நாணயங்கள் குறிக்கின்றன என்கிறார். ஆனால் யுத்த சன்னதத்தைக் குறிக்கும் குறியீடுகள் எதுவும் இந்த நாணயங்களில் இல்லை.

நாணயத்தின் பின்புறம் சிம்ம வாகனத்தில் உள்ளது துர்கை என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. சிம்மவாஹினியாக துர்கையை வழிபடுவது அக்காலத்தில் பரவலாக இருந்த முறை. குப்தர்கள் சாக்த வழிபாட்டு முறையை மேற்கொண்டவர்கள் என்று நாணயங்களில் காணப்பட்ட இந்த துர்கை தேவியின் உருவத்தைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். ஆனால் இது லக்ஷ்மி தேவியின் உருவம் என்றும் செல்வத்திற்கு அதிபதியான திருமகளை குப்தர்கள் நாணயங்களில் பொறித்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் சிம்ம வாகனத்தோடு லக்ஷ்மி தேவி காணப்படுவது அரிதினும் அரிதான விஷயமாகும்.

இந்த நாணயங்கள் நாம் ஏற்கனவே பார்த்தபடி குப்தர்களின் ஆரம்பகால ஆட்சிப்பகுதியான கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. சில ஆய்வாளர்கள் இந்த நாணயங்கள் குப்த-லிச்சாவி இரு அரசுகளாலும் விநியோகிக்கப்பட்டன என்று கருதுகிறார்கள். நாணயத்தின் மறுபுறம் உள்ள லிச்சாவி என்ற வார்த்தையை அதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். அப்படி இருந்தால் குப்தர்களின் ஆட்சிப் பகுதியிலும் லிச்சாவிகளின் ஆட்சிப் பகுதியிலும் இந்த நாணயங்கள் கிடைத்திருக்கவேண்டும். ஆனால் லிச்சாவிகளின் ஆட்சி நிலவிய பீகாரின் பகுதிகளில் இந்த வகை நாணயங்கள் கிடைக்கப் பெறாததால், இந்த வாதத்தில் உண்மையில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இன்னும் சிலர், லிச்சாவி என்ற பெயர் மட்டுமே இந்த நாணயங்களில் இருப்பதால் அது லிச்சாவிகளால் மட்டும் அச்சிடப்பட்ட நாணயங்கள் என்று கூறுகின்றனர். இதிலும் உண்மையில்லை என்பதை மேலே பார்த்த சான்று தெளிவாக்குகிறது. தவிர, குப்தர்களின் நாணயம் இது என்பதை நாணயத்தின் ஒரு புறம் உள்ள சந்திரகுப்த என்ற பெயரே தெளிவாக்கிவிடுவதால் அதை மற்றொருமுறை பொறிக்கவேண்டிய அவசியமில்லை.

லிச்சாவி என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது, அதை முதலாம் சந்திரகுப்தர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தனித்த ஒரு பகுதியாகக் கருதியதால் இருக்கலாம். உண்மையில் அதற்கு உரிமையானவர் தன்னுடைய மகனான சமுத்திரகுப்தர் என்பதாலும், அவர் வயதுக்கு வரும் வரை இரு அரசுகளும் இணைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகவும் இது இருக்கலாம். இல்லையெனில், தன்னுடைய மனைவிக்குக் கௌரவம் அளிப்பதற்காக அவருடைய நாட்டின் பெயரையும் நாணயங்களில் பொறிக்கச் செய்திருக்கலாம்.

ஜான் ஆலன் போன்ற பல ஆய்வாளர்கள் இந்த நாணயங்களை சமுத்திரகுப்தர் அச்சடித்ததாகக் கருதுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. முதலாம் சந்திரகுப்தரின் நாணயங்கள் மதுரா, அயோத்தி, சிதாப்பூர், வாரணாசி ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. ஆனால் சமுத்திரகுப்தரின் நாணயங்களோ பீகாரின் பல இடங்களிலும் கிடைத்துள்ளன. ஆகவே சந்திரகுப்தரின் நாணயங்கள் சமுத்திரகுப்தரின் காலத்திற்கு முன்பே அச்சடிக்கப்பட்டிருக்கவேண்டும்.

மேலும் சமுத்திரகுப்தரின் நாணயங்களில் பிரசஸ்திகளும் விருதுகளும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். ஆனால் சந்திரகுப்தரின் நாணயங்கள் அப்படி எதையும் கொண்டிருக்கவில்லை. ஆய்வாளர் ஜெயஸ்வால் கூறுவதைப் போல “தன் தாய் தந்தையர்களின் திருமணத்தை கொண்டாடும் நாணயங்களைச் சமுத்திரகுப்தர் வெளியிட்டிருப்பாரா” என்பது சந்தேகத்திற்குரியது.

சில ஆய்வாளர்கள் சாகர்கள், குஷாணர்கள் ஆகியோரின் நாணயங்களைப் பின்பற்றியே சந்திரகுப்தரின் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். ஆனால் இந்த வாதத்திலும் உண்மையில்லை. குப்தர்கள் பிரயாகைப் பகுதியில் ஆட்சிக்கு வருவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே குஷாணர்கள் அங்கிருந்து அகன்றுவிட்டனர். எப்படி குஷாணர்கள் ரோமானியர்களின் நாணயங்களை உருக்கி தங்களுக்கான நாணயங்களை அச்சடித்துக்கொண்டிருக்கவேண்டுமோ, அப்படி குப்தர்களும் குஷாணர்களின் நாணயங்களை உருக்கி தங்களுக்கான நாணயங்களை அச்சடித்துக்கொண்டிருக்கலாமே தவிர, அவர்களின் பாணியைப் பின்பற்றி தங்களின் நாணயங்களை குப்தர்கள் அச்சடித்துக்கொள்ளவில்லை.

முதலாம் சந்திரகுப்தரின் நாணயங்கள் குஷாணர்களின் நாணயங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்த நிலையில் சமுத்திரகுப்தர் அச்சிட்ட நாணயங்கள் சிலவற்றில் அவர்களின் தாக்கம் சிறிது இருந்தது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். இதற்குக் காரணம் முதலாம் சந்திரகுப்தரின் காலத்தில் குப்தர்களின் அரசு கங்கைச் சமவெளியில் மட்டுமே இருந்தது. அந்தப் பகுதியில் நாணயம் அச்சிடும் வேலை குஷாணர்களின் காலத்தோடு வழக்கொழிந்துவிட்டபடியால் குஷாணர் நாணயங்களின் தொடர்பு இல்லாத அங்கிருந்த உள்ளூர் பொற்கொல்லர்களின் உதவியைக் கொண்டு இந்த வகை நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் சமுத்திரகுப்தரின் ஆட்சியில் குப்தப் பேரரசு விரிவடைந்தபோது, நாட்டின் மேற்கு, வடமேற்கு எல்லையிலிருந்து பொற்கொல்லர்கள் கொண்டுவரப்பட்டு அவர்களின் துணையோடு சமுத்திரகுப்தரின் நாணயங்கள் அச்சிட்டப்பட்டன். அவர்கள் குஷாணர்களின் ஆட்சியின் மையப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமுத்திரகுப்தரின் நாணயங்களில் குஷாணர்களின் தாக்கம் இருந்ததில் வியப்பேதுமில்லை.

அடுத்த வாரிசு

முதலாம் சந்திரகுப்தர் தனக்குப் பிறகு தன் மகனான சமுத்திரகுப்தரை வாரிசாக அறிவித்தார் என்று சமுத்திரகுப்தரின் பிரயாக்ராஜ் தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கவித்துவமாக ‘வா, மகனே என்று அழைத்து, தன் ரோமங்கள் குத்திட்டு நிற்கும்படி அணைத்துகொண்டு கண்களில் அன்பு நிறைந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட ‘இந்த உலகை நீதான் காக்கவேண்டும்’ என்று அவன் (சமுத்திரகுப்தரின்) தந்தை கூறினார். அதைக்கண்டு சபையோர் இன்பப் பெருமூச்சு விட்டனர். (அதேசமயம்) அரசுக்கு உரிமையான மற்றவர்களின் கண்களில் வருத்தம் தெரிந்தது.’

இதிலிருந்து சந்திரகுப்தர் தன்னுடைய ஆட்சிக்காலத்திலேயே சமுத்திரகுப்தரை அரசராக அறிவித்துவிட்டார் என்பது தெளிவாகிறது. அதேசமயம் இதில் உள்ள கடைசி வரியிலிருந்து ஆட்சியுரிமைக்குப் பலர் போட்டியிட்டனர் என்பதுவும் தெரிகிறது. அதன் விளைவுகள் என்ன? சமுத்திரகுப்தர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிகழ்வு சுமுகமாக நடந்ததா?

0

குப்தர்களின் எழுத்துரு

தங்களுடைய கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் நாணயங்களிலும் ஒரு புதுவிதமான எழுத்துருவை குப்தர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். மொழி சமஸ்கிருதமாக இருந்தாலும் அதை எழுத குப்தர்கள் பயன்படுத்தியது இந்த எழுத்துருவைத்தான். குப்தர்கள் எழுத்துரு (Gupta Script) என்று அழைக்கப்படும் இது பிராமியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று மொழியியலாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து சாரதா போன்ற எழுத்துருக்களும் பின்னாளில் சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளை எழுதப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட தேவநகரி, பஞ்சாபி மொழியை எழுதப் பயன்படும் குர்முகி எழுத்துரு போன்றவை தோன்றின. பொயு 4ம் நூற்றாண்டிலிருந்து காணப்படும் இந்த எழுத்துரு குப்தர்கள் ஆண்ட பகுதிகள் முழுவதிலும் காணப்பட்ட போதிலும் சிறு சிறு வேற்றுமைகளும் உள்ளன.

இந்த எழுத்துருவில் ஐந்து உயிரெழுத்துகளும் முப்பத்து இரண்டு உயிர்மெய் எழுத்துகளும் உள்ளன. குறில், நெடில் ஆகிய ஒலிகளைக் குறிக்க குறிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கயாவின் அருகே உள்ள கோபி-கா-குகைக் கல்வெட்டு வளர்ச்சியடைந்த குப்தர்களின் கல்வெட்டிற்குச் சிறந்த ஒரு உதாரணமாகும்.

0

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *