Skip to content
Home » குப்தப் பேரரசு #9 – சமுத்திரகுப்தரின் திக்விஜயம்

குப்தப் பேரரசு #9 – சமுத்திரகுப்தரின் திக்விஜயம்

மகாராஜாதிராஜ சமுத்திரகுப்தரின் திக்விஜயத்தைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் உள்ள பல்வேறு அரசுகளைப் பற்றிய விவரங்களை மீண்டுமொருமுறை வாசித்துவிடுங்கள். அதோடு, அக்காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் புவியியல் ரீதியான பிரிவுகளைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

ஆரியவர்த்தமும் தக்ஷிணபாதமும்

வடக்கில் இமயமலையையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் எல்லையாகக் கொண்டுள்ள பாரதத்தில், நாட்டின் மத்தியில் விந்திய மலை குறுக்கே ஓடி அதை இரண்டாகப் பிரிக்கின்றது. விந்தியத்தின் வடக்கே இருப்பது கங்கை, யமுனை போன்ற ஆறுகளால் உருவாக்கப்பட்ட சமவெளிப்பகுதி. தெற்கில் உள்ளதோ உயர்ந்த பீடபூமிப் பகுதி. விந்தியத்தின் வடக்கே உள்ள பகுதி பண்டைய நூல்களால் ஆர்யவர்த்தம் என்று அழைக்கப்பட்டது. ‘ஆர்ய’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பிரபுக்கள், உயர்ந்தவர்கள் என்று பொருள். அப்படிப்பட்டவர்கள் ஆண்ட பகுதி ஆர்யவர்த்தம் என்று அழைக்கப்பட்டது.

கோட்டிற்கு மேலே ஆர்யவர்த்தம், கீழே தக்ஷிணபாதம்
கோட்டிற்கு மேலே ஆர்யவர்த்தம், கீழே தக்ஷிணபாதம்

பௌதாயன சூத்திரம் சரஸ்வதி ஆறுக்கும் திருஷட்வதி ஆற்றுக்கும் இடையில் உள்ள பகுதியை பிரம்மவர்த்தம் (கடவுளர்களின் இருப்பிடம்) என்று அழைக்கிறது. ஆனால் நாளடைவில் அந்த நிலப்பரப்பும் ஆர்யவர்த்தத்தின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. வடக்கில் இமயமும் தெற்கில் விந்திய மலையையும் கிழக்கில் வங்கக் கடலையும் மேற்கில் மேற்குக் கடலையும் (அரபிக் கடல்) கொண்டது ஆர்யவர்த்தம் என்று மனுஸ்மிருதி குறிப்பிடுகிறது. போலவே விந்தியமலைக்குத் தெற்கில் உள்ள பகுதி தக்ஷிணபாதம் என்று அழைக்கப்பட்டது.

தமிழ் இலக்கியங்கள் இந்தக் குறிப்புகளை வைத்தே வடக்கிலுள்ள மன்னர்களை வென்ற செய்திகளை ‘ஆரியப்படை கடந்தவன்’, ‘ஆரிய மன்னர்களை வென்றவன்’ என்றெல்லாம் கூறுகின்றன. அது ஒரு புவியியல் பகுதியைக் குறிக்குமே அல்லாது எந்தவோர் இனத்தையும் குறிப்பதல்ல. அந்தப் பகுதியில் பேசப்பட்ட மொழியான சமஸ்கிருத மொழி ஆரியம் என்ற பெயரில் தமிழில் குறிப்பிடப்படுகிறது.

ஆர்யவர்த்தமும் தக்ஷிணபாதமும் சமுத்திரகுப்தரின் பிரயாகைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரயாகைக் கல்வெட்டு

சமுத்திரகுப்தரின் வெற்றிகளைப் பற்றிய விவரங்களை அளிப்பது (அலகாபாத் என்று அழைக்கப்பட்ட) பிரயாகையில் உள்ள தூண் கல்வெட்டு ஆகும். இந்தத் தூணுக்கும் ஒரு வரலாறு உள்ளது. கௌசாம்பியில் இருந்த இந்தத் தூண் பின்னாளில் பிரயாகைக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்வதுண்டு. இந்தக் கல்வெட்டின் வரிகளை கவிதையாக வடித்தவனுடைய பெயர் ஹரிசேனன். சமுத்திரகுப்தரின் அவையில் சந்திவிக்ரஹிகனாக, அதாவது போருக்கும் அமைதிக்குமான அமைச்சனாகவும், காத்யதபாகிகனாகவும் (அரசரின் சமையலறைக் கண்காணிப்பாளர்), குமாராமாத்யனாகவும் (இளவரசனின் அந்தரங்க அமைச்சர்), மகாதண்டநாயகனாகவும் பல்வேறு பதவிகளை வகித்தவன் ஹரிசேனன். பரம்பரையாக குப்த அரசர்களுக்குச் சேவை செய்யும் குடும்பம் அவனுடையது. சமுத்திரகுப்தரின் பல போர்களின் நேரடியாகப் பங்கேற்ற அனுபவம் அவனுக்கு இருந்ததால் அதைக் கல்வெட்டாக வடிப்பதில் அவனுக்குச் சிரமம் ஏதும் இல்லை என்று தெரிகிறது.

இந்தக் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் காலத்திற்குப் பிறகு வடிக்கப்பட்டது என்று சிலர் கூறுவதுண்டு. சமுத்திரகுப்தர் உலகையே வென்ற செய்தி பிரபஞ்சம் முழுவதையும், ஏன் சொர்க்கலோகத்தையே எட்டியது என்ற வரிகள் அந்தக் கல்வெட்டில் வருவதை வைத்து சமுத்திரகுப்தர் வீரசொர்க்கம் அடைந்தவுடன் இந்தக் கல்வெட்டு ஹரிசேனனால் இயற்றப்பட்டது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. கல்வெட்டில் அது எந்த அரசனின் காலத்தில் வெட்டப்பட்டது என்ற குறிப்புகள் இல்லை. மேலும் சமுத்திரகுப்தர் செய்த அஸ்வமேதயாகத்தைப் பற்றியும் அதில் கூறப்படவில்லை. அஸ்வமேத யாகம் செய்வது என்பது ஒரு பெரும் கௌரவம். அதைக் கல்வெட்டில் பொறிக்காமல் சமுத்திரகுப்தரின் விசுவாசமான ஊழியனான ஹரிசேனன் விட்டிருப்பானா? ஆகவே இது சமுத்திரகுப்தர் அஸ்வமேதயாகம் செய்வதற்குமுன், அவருடைய காலத்திலேயே வெட்டப்பட்டது என்பதே சரியான செய்தியாகும்.

சமுத்திரகுப்தரின் வெற்றிகளைக் குறிப்பிடும் ஹரிசேனன் ‘உலகம் முழுவதையும் வென்றதால்’ அவர் புகழடைந்தார் என்றும் ‘தன்னுடைய கரத்தின் வலிமையால் உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்தார்’ என்றெல்லாம் வர்ணிக்கிறான். பின்னாளில் வந்த தமிழக மன்னர்களின் மெய்க்கீர்த்திகளைப் போலவே எழுதப்பட்ட இந்தக் கல்வெட்டில் சமுத்திரகுப்தரின் வெற்றிகளை எல்லாம் காலப்பிரமாணப்படி ஹரிசேனன் கல்வெட்டில் எழுதவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக ராஜேந்திர சோழரின் மெய்க்கீர்த்தி அவருடைய வெற்றிகளைக் காலவரிசைப்படி சொல்கிறது. அதன் காரணமாகத்தான் அவருடைய ஆட்சியின் முதல் ஆண்டுகளில் உள்ள கல்வெட்டுகளில் மெய்க்கீர்த்தி சில வரிகளோடு உள்ளதையும், காலப்போக்கில் அது வளர்ந்துகொண்டே செல்வதையும் காணமுடிகிறது. ஆனால் சமுத்திரகுப்தரின் வெற்றிகள் எல்லாவற்றிற்கும் பிறகு பொறிக்கப்பட்டதாலோ என்னவோ அந்த நடைமுறை இங்கே பின்பற்றப்படவில்லை. குப்தர்களின் அரசுக்கு மேற்கிலுள்ள சில நாடுகளை சமுத்திரகுப்தர் வென்ற செய்திகளோடு தொடங்கும் பிரயாகைக் கல்வெட்டு அதன் பின்னர் அவர் பெற்ற வெற்றிகளை நான்கு பிரிவுகளாகக் குறிப்பிடுகிறது.

இந்த நான்கு பிரிவுகளில் முதலில் வருவது தக்ஷிணபாதத்தில் உள்ள பன்னிரண்டு அரசுகள் மீதான சமுத்திரகுப்தரின் வெற்றிகள். இந்தப் பகுதியில் இருந்த அரசுகளின் பெயர்களும் அவற்றை ஆண்ட அரசர்களின் பெயர்களும் வரிசையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அரசர்கள் முதலில் சிறைப்பிடிக்கப்பட்டு (கிரஹண) பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் (மோக்ஷ) அவர்களுக்கு அந்த அரசுகள் திரும்பத் தரப்பட்டதாகவும் (அனுக்ரஹ) கல்வெட்டு தெரிவிக்கிறது. இரண்டாவது பிரிவில் ஆர்யவர்த்தத்தில் உள்ள எட்டு அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் (போரில்) கொல்லப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

மூன்றாவது பிரிவில் சேவகம் புரியுமாறு அறிவுறுத்தப்பட்ட காட்டுப்புறமிருந்த (ஆடவிக) அரசுகளும் எல்லாவிதமான வரிகளைக் கட்டவும் ஆணைகளை நிறைவேற்றவும் (ஆஞ்ஞாகரண) வணங்கிச்செல்லவும் பணிக்கப்பட்ட ஐந்து எல்லைப்புற நாடுகளும் ஒன்பது குடியரசுகளும் உள்ளன. நான்காவது பிரிவில் சாகர்களும், முருந்தர்களும் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர்களும் மற்ற தீவுகளைச் சேர்ந்த அரசுகளும் இருக்கின்றன. அந்த அரசுகள் குப்தச் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக அவர்கள் நாட்டிலிருந்து பணியாளர்களையும் பணிப்பெண்களையும் அனுப்பிவைத்ததாகவும் கருட முத்திரையோடு கூடிய சாசனங்களுக்கு விண்ணப்பித்ததாகவும் (கருத்மத்-அங்க-ஸ்வ-விஷ்ய-புக்தி-சாசன-யாசன) கல்வெட்டு குறிக்கிறது.

காலவரிசைப்படி வெற்றிகளைக் குறிக்காமல், இப்படி பல்வேறு பிரிவுகளில் வெற்றிகளைக் கல்வெட்டில் ஹரிசேனன் குறிப்பிடக் காரணம் என்ன என்பதைப் பற்றி பல்வேறு ஊகங்கள் உலவுகின்றன. சமுத்திரகுப்தர் ஒரு பகுதியை வென்றவுடன் அந்த அரசுகளையும் அரசர்களையும் எந்த விதத்தில் நடத்தினார் என்பதன் அடிப்படையில் இந்தப் பிரிவுகள் இருக்கின்றன என்பதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது. ஆனால், அப்படி வேறு வேறு விதமாக சமுத்திரகுப்தர் அந்த அரசுகளை நடத்தக் காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகின்றதல்லவா. முதலில் ஆர்யவர்த்தத்தைப் பார்போம். பல்வேறு ஆறுகள் பாய்வதால் வளமான இந்தப் பகுதி கனிமவளம் நிறைந்ததாகவும் உள்ளது. ஆகவேதான் இந்தியாவின் பேரரசுகள் இந்தப் பகுதியை மையமாகக் கொண்டே எழுந்தன. அந்தப் பகுதியில் வலிமை பெற, மற்ற அரசுகள் எல்லாவற்றையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவருவதே ஒரு பேரரசு உருவாவதற்கான அடிப்படையாகும். அதனால்தான், ஆர்யவர்த்தத்தில் உள்ள அரசர்கள் கொல்லப்பட்டு அந்த அரசுகள் குப்தர்களின் அரசோடு இணைக்கப்பட்டன.

எல்லைப்புறப் பகுதியில் இமயத்திற்கு அருகில் இருந்த அரசுகளையும் குடியரசுகளையும் பொருத்தவரை, அவை கப்பம் கட்டுவதே போதுமானது என்று சமுத்திரகுப்தர் நினைத்திருக்கலாம். அகலக்கால் வைப்பது அரசின் நிர்வாகத்தை பலவீனமாக்கும் என்ற காரணத்தால் அவற்றிலிருந்து வரி வசூலிக்கும் முறையை மட்டும் உருவாக்கி நிர்வாகத்தை அந்த அரசுகள் கையிலேயே கொடுத்துவிட்டார். இவற்றை ஒப்பிடும்போது தக்ஷிணபாதத்தில் உள்ள அரசுகள் தொலைவில் உள்ளவை. மலைகளையும் காடுகளையும் தாண்டிச்சென்றே அந்த அரசுகளை வெல்ல முடியும். ஆகவே, அந்த அரசர்களை பணியச்செய்ததோடு சமுத்திரகுப்தர் நிறுத்திக்கொண்டார். அவற்றை தன் அரசோடு சேர்க்கும் வேலையில் அவர் இறங்கவில்லை. நூற்றாண்டுகளுக்குப் பின் வடபகுதிக்குப் படையெடுத்துச் சென்ற ராஜேந்திர சோழனும் இதே போன்ற ஒரு அணுகுமுறையைப் பின்பற்றியது இங்கே குறிப்பிடவேண்டிய ஒன்று.

மற்ற அரசுகள் எல்லாம் ‘தானாகவே முன்வந்து’ சமாதானம் செய்துகொள்ள விரும்பின. ஆகவே அந்த அரசுகளின் சமாதானத்தை ஏற்று பரிசுகளையும் அவர் பெற்றுக்கொண்டார் என்று கொள்ளவேண்டும். இப்படிப் பல்வேறு பகுதிகளில் இருந்த அரசுகளுக்கு எதிராகப் பலவிதமான வியூகங்களை சமுத்திரகுப்தர் கையாண்டது அவரது அரசின் ஆதிக்கத்தை வட இந்தியா முழுவதும் நிலைக்கச்செய்தது.

படையெழுச்சிகள்

இனி அவரது படையெழுச்சிகளைப் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அவர் முதலில் தாக்கியது நாட்டின் மேற்கிலிருந்த நாகர்களை. தக்காணத்தில் ஆட்சி செய்த வாகாடகர்களும் பத்மாவதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாரசிவ நாகர்களும் மண உறவு கொண்டு ஒரு வலிமையான அரசை உருவாக்க முயன்றதைப் பற்றிப் பார்த்தோம். அந்தக் காரணத்தால் குப்தர்களுக்கும் நாகர்களுக்கும் இடையில் ஒரு போட்டி நிலவியது.

வாகாடகர்களின் அரசனான முதலாம் ப்ரவரசேனனுடைய மகன் கௌதமிபுத்திரனுக்கும் பாரசிவ நாகர்களின் அரசன் பாவநாகரின் மகளுக்கும் நடந்த திருமணத்தின் மூலம் ஒரு பேரரசை உருவாக்க வாகாடகர்களும் நாகர்களும் திட்டமிட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக கௌதமிபுத்திரன் இறந்துபடவே, அவனுக்குத் தம்பிகள் இருந்தும் கௌதமிபுத்திரனின் மகனான முதலாம் ருத்ரசேனனுக்கு முடிசூட்டினான் ப்ரவரசேனன். ப்ரவரசேனனின் மறைவுக்குப் பிறகு பாவநாகரின் துணை ருத்ரசேனனுக்கு சில காலம் இருந்தது. ஆனால் பாவநாகர் காலம் முடிந்ததும் பல சிக்கல்கள் எழுந்தன.

கௌதமிபுத்திரனின் சகோதரர்களின் ஒருவனான சர்வசேனன், வாகாடக அரசின் ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டு அதைத் தனிநாடாக அறிவித்தான். அதையடுத்து, நாகசேனன் என்ற பாவநாகரின் உறவினன் ஒருவன், பத்மாவதியைப் (தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள பவாயா என்ற ஊர்) பிடித்துக்கொண்டு பாரசிவ நாகர்களின் அரசனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டான். அதனால் வாகாடகர்களும் நாகர்களும் இணைந்து பேரரசு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மண் விழுந்தது. இதையெல்லாம் கண்டு ஆத்திரமடைந்த ருத்ரசேனன், நாகர்களின் அரசில் ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டு வாகாடகர்களோடு இணைத்துக்கொண்டான்.

அண்டையில் இப்படிப் பெருங்குழப்பம் நிலவுவதைக் கண்ட சமுத்திரகுப்தர் அதை நல்வாய்ப்பாகக் கருதி தனது படைகளை மேற்கு நோக்கி, நாகர்களின் தலைநகரான பத்மாவதி இருந்த திசையில் செலுத்தினார். அந்தப் படைக்குத் தானே தலைமை தாங்கிச் சென்றார் அவர். என்னதான் சண்டையிருந்தாலும் நாகர்களின் அரசை தன்னோடு இணைத்துக்கொள்ளும் கனவில் இருந்த வாகாடகர்கள் படைகளோடு வந்து நாகர்களுக்கு உதவும் சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கண்ட சமுத்திரகுப்தர் அப்படி இரு அரசுகளும் இணைந்த வலுவான படையைச் சந்திப்பது சுலபமான விஷயமல்ல என்ற எண்ணத்தால் மின்னல்வேகத்தில் தாக்குதல் ஒன்றை நாகர்களின் மீது நிகழ்த்தினார்.

கோட்டிற்கு மேலே ஆர்யவர்த்தம், கீழே தக்ஷிணபாதம்
கோட்டிற்கு மேலே ஆர்யவர்த்தம், கீழே தக்ஷிணபாதம்

‘ஏன க்ஷணாத் உன்மூலி’ – கணநேரத்தில் பாரசிவ நாகர்களின் அரசனான நாகசேனனையும், மற்ற நாக அரசர்களான அஹிச்சத்ராவின் (தற்போதைய ராம்நகர் – பரேலிக்கு அருகில் உள்ளது) அச்சுதனையும் மதுராவின் கணபதிநாகனையும் சமுத்திரகுப்தர் வீழ்த்தியதாக ஹரிசேனன் குறிப்பிடுகிறான். அவர்களோடு ஒருபுறம் சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது, தனது படைத்தலைவர்களில் ஒருவனின் தலைமையில் படைப்பிரிவு ஒன்றை கோட்டா என்ற அரசின் மீது அனுப்பி அதன் இளவரசனைத் தாக்கச் செய்தார் சமுத்திரகுப்தர். அங்கேயும் அவரது படைகளுக்கே வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிகளை புஷ்பபுரம் என்ற நகரில் தங்கி சமுத்திரகுப்தர் கொண்டாடியதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பாடலிபுத்திரத்திற்கும் புஷ்பபுரம் என்ற பெயர் இருந்தாலும், இந்த மூன்று அரசுகளின் போர் முனையிலிருந்து பாடலிபுத்திரம் வெகு தூரத்தில் இருப்பதால் அங்கே சென்று சமுத்திரகுப்தர் வெற்றியைக் கொண்டாடி இருக்கும் சாத்தியம் இல்லை என்பதால் இது வேறு ஒரு ஊராக இருக்கும் என்று ஊகிக்கலாம். சீன யாத்திரீகரான சுவான்சங் கன்யாகுப்ஜத்திற்கு (கன்னோஜி) குஸுமபுரம் என்றும் புஷ்பபுரம் என்றும் வேறு பெயர்கள் இருப்பதாக எழுதியிருக்கிறார். ஆகவே சமுத்திரகுப்தர் தன்னுடைய வெற்றியைக் கொண்டாடத் தேர்ந்தெடுத்த இடம் கன்யாகுப்ஜமாகத்தான் இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

நாகர்களின் மீதான வெற்றியை அடுத்து சமுத்திரகுப்தர் தன் பார்வையை தங்களது மற்றொரு எதிரிகளான வாகாடகர்கள் மீது திருப்பினார்.

0

பிரயாகைத் தூண்பிரயாகைத் தூண்

அலகாபாத் தூண் என்று அழைக்கப்படும் இந்தக் கல் தூணில் பல்வேறு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அசோகரின் காலத்தைச் சேர்ந்தது இது என்றும் அவரால் கௌசாம்பியில் நிர்மாணிக்கப்பட்டது என்றும் பொதுவாகக் கருதப்படும் இந்தத் தூணில் அசோகரது பொயுமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உண்டு. அதைத் தவிர அசோகரது அரசி அளித்த கொடை பற்றிய கல்வெட்டு ஒன்றும் அந்தத் தூணில் உண்டு. பிறகு சமுத்திரகுப்தரின் காலத்தில் அவரது அமைச்சனும் கவிஞனுமான ஹரிசேனன் சமுத்திரகுப்தரின் வெற்றிகளைக் கல்வெட்டு பாடலாக இந்தத் தூணில் எழுதியிருக்கிறான்.

மொகலாய அரசர் அக்பரின் காலத்தில் இந்தத் தூண் கௌசாம்பியிலிருந்து பெயர்க்கப்பட்டு அலகாபாத் கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன்பின் அந்தத் தூணில் அக்பரின் மகனான ஜஹாங்கீர் ஒரு கல்வெட்டைப் பொறித்திருக்கிறார். பின்னாளில் பலமுறை பெயர்க்கப்பட்டும் மீண்டும் நிறுவப்பட்டும் இந்தத் தூண் அல்லாடியிருக்கிறது. அதன் மேல் ஒரு சிங்கத்தின் சிலையை வைத்து வேறு அழகுபார்த்திருக்கிறார்கள்.

1834ம் ஆண்டு ஜான் பிரின்ஸெப் என்பவர் அலகாபாத் கோட்டைக் கதவின் அருகே இந்தத் தூணை விழுந்துகிடந்த நிலையில் பார்த்தபோது அதிலிருந்த எழுத்துகள் மழையிலும் வெயிலிலும் மங்கிப்போனதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் போன்ற தொல்லியலாளர்களின் முயற்சியால் அதிலுள்ள கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன. இந்தக் கல்வெட்டு மட்டும் இல்லையென்றால் சமுத்திரகுப்தரின் போர்த்திறமையும் வெற்றிகளும் அறியப்படாமலேயே போயிருக்கும்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *