சமுத்திரகுப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பு அவர் ஆர்யவர்த்தம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவந்த பிறகே நடந்திருக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தக்காணத்தின்மீது படையெடுத்தது ஒரு முறையா அல்லது இரண்டு – மூன்று முறைகளா என்பது பற்றிப் பல கருத்துகள் உலவுகின்றன. வடஇந்தியாவில் தன்னிகரில்லா மன்னனாக அவர் ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவின் மீது போர்ப்பயணம் ஒன்றை அவர் மேற்கொண்டது ஏன் என்பது பற்றியும் சர்ச்சைகள் உண்டு.
ஆய்வாளர் ஜெயஸ்வால், பல்லவ அரசரை அடக்குவதற்காக இந்தப் போர்கள் நடத்தப்பட்டதாகக் கூறுகிறார். சமுத்திரகுப்தர் பல்லவர்களையும் வாகாடகர்களையுமே தன்னுடைய ஆதிக்கத்திற்கு எதிரான பெரும் அச்சுறுத்தல்களாகக் கருதினார் என்றும் அவர்களுக்கு இடையே ஒரு ‘கூட்டணி’ இருந்தது என்றும் அவர் தெரிவிக்கிறார். ஆனால் இந்தக் கருத்தில் அதிகச் சாரம் இல்லை. தெற்கே நெடுந்தூரத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவர்கள் குப்தர்களுக்கு எந்த விதத்தில் அச்சுறுத்தலாக இருந்திருக்க முடியும்? மேலும் வாகாடகர்களோடு அவர்கள் கூட்டணி வைத்திருந்தால், பல்லவர்கள் தாக்கப்படும்போது வாகாடகர்களின் உதவி ஏன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் வரலாற்றறிஞர் கோயல்.
இது ஒருபுறமிருக்க இந்தப் படையெடுப்பு தென்னிந்திய அரசுகளிடம் குவிந்திருந்த செல்வத்தின் காரணமாக நடத்தப்பட்டது என்ற கோயலின் வாதமும் சரியானதாகத் தோன்றவில்லை. பொயு நான்காம் நூற்றாண்டில் குப்தர்களோடு ஒப்பிடும்போது தென்னகத்து அரசர்களிடம் இருந்த செல்வம் குறைவுதான். குப்தர்கள் ஆட்சி செய்த கங்கைச் சமவெளி வளம் மிக்கதாகவும் தாதுக்களால் நிரம்பியதாகவும் வணிகம் மூலம் கொழித்த பகுதியாகவும் இருந்தது. அப்படிப்பட்ட பகுதியை ஆட்சி செய்தவர் தென்னாட்டின்மீது செல்வத்தை அள்ளிச்செல்வதற்காகப் படையெடுத்தார் என்பது நம்பும்படி இல்லை. பின்னாளில் சோழ, பாண்டிய அரசுகள் வணிகத்தின் மூலமும் படையெடுப்புகளின் மூலம் பெரும் செல்வத்தைச் சேர்த்ததும் அதனால் மாலிக்கபூர் போன்றவர்கள் வடக்கிலிருந்து அந்தச் செல்வத்தைக் கொள்ளையடிக்க தென்னாடு வந்ததும் உண்மை. அப்படி ஒரு நிலை நான்காம் நூற்றாண்டில் இல்லை. பல்வேறு அரசுகளாக, அடையாளம் அதிகம் தெரியாத மன்னர்களால் ஆளப்பட்டவை தக்காணத்தில் உள்ள அரசுகள். அதிலும் விந்தியமலையைத் தாண்டி தன்னுடைய படைகளோடு பல்வேறு அரசுகளை எதிர்த்துப் போரிட வருவது அவ்வளவு எளிய விஷயம் அல்ல. அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் தெற்கே மௌரியர் படையெடுத்து வந்தபோது
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய்
அதாவது மௌரியர்களுடைய தேர்ச்சக்கரம் செல்ல ஏதுவாக அருவி பாயும் மலைப் பகுதிகளில் பாறைகள் உடைக்கப்பட்டு வழி அமைக்கப்படதாக மாமூலனார் என்ற சங்க காலப் புலவர் எழுதியிருக்கிறார். இதிலிருந்து காடுகளும் மலைகளும் பெரிய ஆறுகளும் உள்ள தென்னகத்திற்கு படையெடுத்து வருவது எவ்வளவு கடினம் என்பது தெரிகிறது. அப்படி ஒரு கடினமான போர்ப்பயணத்தை வெறும் செல்வத்திற்காக மட்டும் சமுத்திரகுப்தர் செய்திருக்கமாட்டார் என்பது உறுதி. அப்படியானால் அதற்கான காரணம் என்னவாக இருந்திருக்க முடியும்?
பெரும் வெற்றிகளைப் பெற்று ஆர்யவர்த்தம் முழுவதையும் குப்தர்களின் கீழ் கொண்டு வந்த சமுத்திரகுப்தருக்கு தானும் பழங்காலத்து அரசர்களைப் போல அஸ்வமேத யாகம் ஒன்றைச் செய்யவேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. அந்த யாகத்தைச் செய்யும் அரசன் பல அரசுகளை வெல்லவேண்டும், அதன்பின் யாகக் குதிரையைக் கொண்டு வந்து வேள்வி ஒன்றைச் செய்யவேண்டும். அப்படிப்பட்ட வெற்றிகளைப் பெறுவதற்காகவே சமுத்திரகுப்தர் தென்னகத்தை நோக்கிப் படையெடுத்தார். அதை ‘தர்ம விஜயம்’ என்று தன்னுடைய கல்வெட்டில் அவர் குறிப்பிட்டிருப்பது இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று.
அதற்கு முன்பு மேற்கிலும் கிழக்கிலும் அவர் படையெடுத்த போது அங்குள்ள அரசர்களைத் தோற்கடித்து அவர்கள் ஆண்ட பகுதிகளை குப்தர்களின் அரசோடு அவர் இணைத்துக்கொண்டார். ஆனால் தெற்கிலுள்ள அரசுகளை அவர் வெற்றி கொண்டாலும், அத்தகைய வெற்றிகளுக்குப் பிறகு அந்தந்த அரசர்களுக்கே அவற்றைத் திருப்பிக்கொடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே சமுத்திரகுப்தரின் தென்னக திக்விஜயம் அஸ்வமேத யாகத்தை முன்னிட்டே நடத்தப்பட்டது என்பது தெளிவு. அதற்கு முன்னோடியாக தெற்கிலுள்ள சில நாடுகளை அவர் வென்ற பிறகு முழுமூச்சாக ஒரு படை திரட்டிக்கொண்டு தெற்கிலுள்ள நாடுகள் அனைத்தின்மீதும் அவர் படையெடுத்திருக்கக்கூடும்.
இந்திய வரலாற்றில் எந்த ஒரு மன்னரும் செய்திராத ஒன்று இப்படிப்பட்ட திக்விஜயம் என்று சொல்லலாம். மேற்குறிப்பிட்டபடி கடப்பதற்குச் சிரமமான பல தடைகளைக் கடந்து தன்னுடைய படைகளைச் சமுத்திரகுப்தர் செலுத்தியது சாதாரண விஷயம் அல்ல. ஆகவேதான் தன்னுடைய தென்னகப் பயணத்தை அவர் கிழக்குக் கரையோரமாகவே நடத்தினார். பின்னாளில் வடநாட்டுப் படையெடுப்பை நடத்திய ராஜேந்திரனும் கிட்டத்தட்ட இதே பாதையைத் தேர்ந்தெடுத்ததை நாம் காண்கிறோம். கேந்திரமான துறைமுகங்களில் ஒன்றான தாம்ரலிப்தியை ஏற்கெனவே வென்றுவிட்ட சமுத்திரகுப்தர் ஒரு கடற்படையையும் உருவாக்கி, இந்தப் படையெடுப்பில் தனக்குத் துணையாக அவற்றை வரச்செய்திருக்கலாம் அல்லது கப்பல்களில் தன்னுடைய படையின் ஒரு பகுதியை ஏற்றி ஆங்காங்கே உள்ள துறைமுகங்களின் மூலம் உள்நாட்டிற்குக் கொண்டுவந்திருக்கலாம்.
கலிங்கப் போர்
விந்தியத்திற்குத் தெற்கே அவர் முதலில் போர் தொடுத்தது கலிங்கத்துடன்தான். வட இந்தியாவிலிருந்து தென்னகம் வரும் வழியில் முதலில் உள்ள வலிமையான நாடு கலிங்கம். இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், வெளிநாட்டு அரசன் ஒருவனின் படையெடுப்பை எதிர்கொள்ள இயலாமல் கலிங்க இளவரசி ஹேமமாலா அங்கிருந்து புத்தரின் புனிதப் பல்லை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றதாகவும் இலங்கை அரசன் ஸ்ரீமேகவர்ணனின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அவர் இலங்கை வந்து சேர்ந்ததாகவும் குறிப்பிடுகிறது. மகாவிஹாராவில் புத்தரின் பல்லுக்கு ஆலயம் ஒன்றை ஸ்ரீமேகவர்ணன் கட்டினான் என்றும் வருடாவருடம் ஒரு திருவிழா நடத்த ஏற்பாடு செய்ததாகவும் மகாவம்சம் தெரிவிக்கிறது. அதற்குச் சில ஆண்டுகள் பின்னால் இலங்கை வந்த சீன யாத்திரிகர் பாஹியான் அங்கே புத்தரின் பல் வழிபடப்பட்ட கோவிலைத் தான் தரிசித்ததாகவும் அங்கே நடந்த திருவிழாவைக் கண்டு களித்ததாகவும் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார். இந்த ஆதாரங்களைக் கொண்டு கலிங்கத்தின் மீது படையெடுத்த அந்த அரசன் சமுத்திரகுப்தர் என்று ஊகிக்கலாம்.
தென்திசை திக்விஜயம்
கலிங்கத்தின் மீதான வெற்றியை அடுத்து தெற்கிலுள்ள அரசர்கள் அனைவரின் (சர்வ தக்ஷிணாபதராய) ஆதிக்கத்தை அழித்துவிடும் நோக்கத்தோடு அவர் படையெடுத்ததாக பிரயாகைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அவருடைய திக்விஜயத்தில் முதலாவதாகக் குறுக்கிட்டது கோசல நாடு. தற்போதைய மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் ஜபல்பூரைச் சுற்றியுள்ள பகுதிகள் தெற்குக் கோசலம் என்று அழைக்கப்பட்டன. அதன் தலைநகர் ஸ்ரீபுரம் என்ற ஊர். அதனுடைய அரசனாக மகேந்திரன் என்பவனைப் பிரயாகைக் கல்வெட்டு குறிக்கிறது. மகேந்திரனோடு போரிட்டு கோசல நாட்டை வெற்றி கொண்ட சமுத்திரகுப்தர் அடுத்து மகாகாந்தார நாட்டைத் தாக்கினார்.
பெரும் மலைகளால் சூழப்பட்ட வனப்பகுதி மகாகாந்தாரம். அதனுடைய அரசனின் பெயர் வ்யாக்ரராஜன், அதாவது புலிகளின் அரசன். உச்சகல்ப வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியின் அரசர்களாக அப்போது இருந்தனர். வாகாடர்களின் குறுநில அரசாக இருந்தது மகாகாந்தாரம். வ்யாக்ரராஜனுடைய மகனான ஜெயந்தன் இரண்டாம் சந்திரகுப்தரின் சமகாலத்தவனாகக் குறிப்பிடப்படுகிறான். ஆகவே சமுத்திரகுப்தரின் சமகாலத்தவனாக வ்யாக்ரராஜனே இருந்திருக்கக்கூடும். மகாகாந்தரத்தின் தலைநகர் ஒடிசா மாநிலத்தில் மகாநதியின் கரையில் உள்ள சம்பல்பூர் என்ற நகர் ஆகும்.
அடுத்ததாக சமுத்திரகுப்தரின் தாக்குதலுக்கு ஆளானது கௌராலகம் என்ற இடம். இந்த அரசு இருந்தது எங்கே என்பதைப் பற்றிப் பலவிதமான ஊகங்கள் உண்டு. சிலர் இதை கொல்லேறு ஏரியைச் சுற்றி உள்ள பகுதி என்கின்றனர். இன்னும் சிலர் சோன்பூர் பகுதி என்று கூறுகின்றனர். இன்னும் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி குலூத அரசே அக்காலத்தில் கௌராலா என்று அழைக்கப்பட்டு வந்தது என்று தெரிகிறது. இது ஒடிசாவின் தென்பகுதியில் உள்ளது. ராஜேந்திர சோழனின் மகேந்திரகிரிக் கல்வெட்டு இந்தப் பகுதியைப் பற்றி குலூத அரசனான விமலாதித்தனை ராஜேந்திரனின் தளபதி ஒருவன் தோற்கடித்ததாகக் குறிப்பிடுகிறது. ஆகவே இது ஒடிசாவில் பஞ்சன் நகருக்கு அருகே உள்ள கொலடாவாகவே இருக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் முடிவு. இந்தப் பகுதியை மந்தராஜன் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனைத் தோற்கடித்துவிட்டு சமுத்திரகுப்தரின் படைகள் முன்னேறின.
அடுத்ததாக பிஷ்தபுரம் என்று பிரயாகைக் கல்வெட்டு குறிப்பிடும் ஆந்திராவில் உள்ள பித்தாபுரம் அரசை சமுத்திரகுப்தர் தாக்கி வெற்றி கொண்டார். அதனுடைய அரசன் மகேந்திரகிரி என்பவன்.
பித்தாபுரத்திற்கு அடுத்து கொட்டுரா என்ற அரசை ஆண்ட ஸ்வாமிதத்தன் என்ற அரசன் சமுத்திரகுப்தரால் தோற்கடிக்கப்பட்டான். இது தற்போது ஆந்திராவில் கஞ்சம் பகுதியில் உள்ள கொத்தூர் என்ற இடமாகும். அடுத்ததாக எரண்டபல்லா என்ற இடத்தில் ஆட்சி செய்த தமனா என்ற அரசன் சமுத்திரகுப்தரை எதிர்த்துப் போரிட்டான். இது எண்டபல்லி என்ற பெயருடன் தற்போது அழைக்கப்படுகிறது. அவனை வெற்றிகொண்டுவிட்டு சமுத்திரகுப்தரின் படைகள் சென்ற இடம் வேங்கி. அங்கே சாலங்காயனர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். அவர்களின் அரசனான ஹஸ்திவர்மனுக்கும் சமுத்திரகுப்தரின் படைகளுக்கும் இடையே நடந்த கடும்போரில் ஹஸ்திவர்மன் தோற்கடிக்கப்பட்டான். இந்தப் போரில் பல்லவப் படைகளும் கலந்துகொண்டிருந்தன என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.
அடுத்ததாக பல்லவ அரசில் நுழைந்த சமுத்திரகுப்தரின் படைகள் அவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தை நெருங்கின. அங்கே விஷ்ணுகோபன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். தென்னாட்டில் வலுவான அரசாக அப்போது பல்லவர்கள் இருந்தனர். ஆனால் நீண்டதூரம் வந்தபோதிலும் சளைக்காமல் போரிட்ட குப்தர்களுக்கு பல்லவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. பல்லவர்கள் இந்தப் போரில் தோல்வியடைந்தனர். இருப்பினும் அவர்களிடம் அரசைத் திருப்பிக் கொடுத்துவிட்ட சமுத்திரகுப்தர் அதற்குத் தெற்கே வலிமையான அரசர்கள் யாரும் இல்லாத காரணத்தால் தனது தெற்கு நோக்கிய யாத்திரையை முடித்துக்கொண்டார்.
காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் பல்லவ அரசர்களின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அதில் அஸ்வத்தாமன் தொடங்கி பல்லவ வம்சாவளியில் வந்த பல அரசர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள் சிற்பங்களாகச் செலுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் சிற்பங்களின் இடையில் ஒரு வெற்றிடத்தை மட்டுமே கொண்ட ஒரு சிற்பம் உள்ளது. அதன் ஒரு பக்கம் கவலையோடு அமர்ந்திருக்கும் ஓர் அரசனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
பல்லவ அரசனான விஷ்ணுகோபன் என்றும் சமுத்திரகுப்தரிடம் அவன் அடைந்த படுதோல்வியில்தான் வெற்றிடமாக அங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் ஆய்வாளர் மீனாட்சி கருதுகிறார். இப்படி பல்லவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தோல்வியை அளித்த பிறகு சமுத்திரகுப்தரின் படைகள் குஸ்தலபுரம் என்ற இடத்தைத் தாக்கின. இது வேலூருக்கு சமீபத்தில் குசஸ்தலை ஆற்றின் கரையில் இருந்திருக்கலாம் என்றும் இதை ஆண்டுகொண்டிருந்தவன் பல்லவர்களின் சிற்றரசனான தனஞ்செயன் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் இந்த குஸ்தலபுரம் ஆந்திராவில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
அடுத்ததாக அவமுக்தா என்ற இடத்தில் ஆட்சி செய்த நீலராஜன் என்ற அரசனை வெற்றி கொண்டன குப்தப் படைகள். இந்த அவமுக்தா என்பதும் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருந்திருக்கக்கூடும். இது இருந்த இடம் சரியாகத் தெரியவில்லை. அநேகமாக சித்தூருக்கு வடக்கே இந்த அரசு இருந்திருக்கலாம்.
மேலும் வடக்கு நோக்கிச் சென்று உக்ரசேனன் என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்த பாலக்கா என்ற அரசை குப்தர்களின் படைகள் தாக்கின. இதைச் சிலர் பாலக்காடு என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் அவ்வளவு தூரம் சமுத்திரகுப்தர் வந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இது கேரளாவில் உள்ள பாலக்காடு இல்லை என்பதே தற்போதைய ஆய்வுகளின் முடிவு. பல்லவர்களின் உருவப்பள்ளிச் செப்பேடுகள் யுவமகராஜா விஷ்ணுபகோப வர்மன் அந்தச் சாசனத்தை பாலக்காடாவிலிருந்து அளித்ததாகக் குறிப்பிடுகின்றன. ஆகவே இது மேற்கு ஆந்திராவில் உள்ள ஒரு பகுதியாக இருந்திருக்கக் கூடும்.
திரும்பும் வழியில் தேவராஷ்ட்ரா என்ற அரசைத் தாக்கிய சமுத்திரகுப்தரின் படைகள் அங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த குபேரன் என்ற அரசனைத் தோற்கடித்தன. இது மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு அரசு என்று தெரிகிறது.
இப்படித் தெற்கில் நீண்ட தூரம் படைகளை நடத்திச் சென்று பல அரசுகளை வென்று தோல்வியே காணாமல் சமுத்திரகுப்தர் தன்னுடைய தலைநகரான பாடலிபுத்திரத்திற்குத் திரும்பினார். அதன்பின் தன்னுடைய திக்விஜயத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அஸ்வமேத யாகம் ஒன்றையும் செய்தார்.
(தொடரும்)