மகாராஜா ஸ்ரீகுப்தரால் ஒரு சிறிய பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட குப்தர்களின் அரசைச் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள் மகராஜாதிராஜா சமுத்திரகுப்தர் பேரரசாக, இந்திய நிலப்பரப்பில் பெரும்பான்மையைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்ட அரசாக மாற்றினார் என்றால் அது சாதாரணமான விஷயமல்ல. வீரத்தாலும் விவேகத்தாலும் இந்த அரிய செயலை அவர் செய்தார் என்பது ஏதோ வழக்கமாகச் சொல்லப்படும் உபசார மொழியும் அல்ல. உண்மையிலேயே அவர் பல்வேறு விதமான வியூகங்களைக் கையாண்டே இதைச் செய்தார்.
சமுத்திரகுப்தர் பெரும் வீரர். ஆனால் அதுமட்டும் அவரது வெற்றிகளுக்குக் காரணமல்ல. தற்காலத்தில் தலைமைப் பண்புகளுக்கான பயிற்சிகளில் முக்கியமான பண்பாகச் சொல்லப்படும் ‘தாமே முன்னின்று வழிகாட்டுவது (Leading from front)’ அவரிடம் இருந்தது. பெரும்பாலான போர்க்களங்களில் அக்கால வழக்கப்படி தளபதிகளிடம் தலைமையை ஒப்படைக்காமல் தாமே முன்னிலை வகித்துச் சென்றார் சமுத்திரகுப்தர். பிரயாகைக் கல்வெட்டு ‘சங்க்ரமேஷு ஸ்வபூஜ விஜிதா’ என்று இதையே குறிப்பிடுகிறது.
மேலும் ‘அவரது கை வலிமையை நம்பியே அவர் நூற்றுக்கணக்கான போர்களில் இறங்கினார். புலியைப் போன்று வேகமாகவும் வலிமையாகவும் தாக்குவது அவரது பாணி (வ்யாக்ர பராக்ரமா). அவரது அழகான உடலை கோடாரிகளாலும் அம்புகளாலும் வேல்களாலும், குத்துவாட்களாலும் கத்திகளாலும் கதைகளாலும் ஈட்டிகளாலும் இன்னும் பல ஆயுதங்களாலும் ஏற்பட்ட காயங்கள் மேலும் அழகுபடுத்தின’ என்று கூறுகிறது அது. அவரது உடலில் ஏற்பட்ட விழுப்புண்களை விண்ணில் உள்ள நட்சத்திரங்களுக்கு ஒப்பிடுகிறது அக்கல்வெட்டு.
சமுத்திரகுப்தரின் இன்னொரு குணம் அவரது துணிச்சல். வெள்ளம் பெருக்கெடுத்ததால் போரஸோடு போர் புரியத் துணியாமல் ஜீலம் நதிக்கரையில் தயங்கி நின்ற அலெக்ஸாண்டரைப் போல இல்லாமல், கரைபுரண்டு ஓடும் கங்கையாற்றின் வெள்ளத்திலும் தன்னுடைய படைகளை ஆற்றைக் கடக்கச் செய்து நாக அரசர்களோடு மோதினார் அவர். புலியோடு நேருக்கு நேர் மோதிய தருணத்தில் அவருடைய உடல் வலிமை மட்டுமல்லாது இந்தத் துணிச்சலும் வெளிப்பட்டது. தைரியமானவனுக்கே வெற்றி என்பது அவரது தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் குணத்தால் அவர் வெல்லமுடியாதவராக விளங்கினார் (அப்ரதிவார்யவீர்ய) என்கிறது ஏரான் கல்வெட்டு.
அதேசமயம் அதீதத் துணிச்சலால் அகலக்கால் வைக்காமல் ஒரு தேர்ந்த ராஜதந்திரியாகவும் சமுத்திரகுப்தர் செயல்பட்டார். மேலும் மேலும் நிலப்பரப்பை வென்று தன்னுடைய ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற ஆசை அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆர்யவர்த்தத்தில் உள்ள அரசர்களை அழித்து அந்தப் பகுதிகளை மட்டும் தன்னுடைய மைய அரசாக ஆக்கிக்கொண்டார். அதாவது இமயமலைக்குத் தெற்கேயும் விந்தியத்திற்கு வடக்கேயும் உள்ள பகுதிகளையே அவர் தன்னுடைய அரசாகக் கருதினார். அதன் எல்லைகளைச் சுற்றியுள்ள நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தாலும் அவற்றை கப்பம் மட்டும் கட்டச் செய்துவிட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள அரசர்களையே ஆளச் செய்தார்.
அவர் வென்ற குடியரசுகளையும் அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் தன்னாட்சி செய்ய வழிசெய்தார். வடமேற்கில் குஷாணர்களோடும் சசானியர்களோடும் சமாதானம் செய்துகொண்டு சுமூக உறவைக் கையாண்டார். கடல் கடந்து தீவாந்தரங்களில் உள்ள இலங்கை போன்ற நாடுகளோடும் ராஜரீக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு அவற்றால் எந்தவிதத் தொல்லையும் ஏற்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். தென்னகத்தில் உள்ள அரசர்களை வென்றது மட்டும் போதும் என்ற நினைப்பால் அவர்களுக்கே அரசுகளைத் திருப்பிக்கொடுத்துவிட்டார். இப்படி ஒவ்வொரு அரசையும் சீர்தூக்கிப் பார்த்து சாதக பாதகங்களை ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்ப தன்னுடைய அணுகுமுறையை அவர் மாற்றிக்கொண்டதைப் பார்க்கிறோம்.
சமுத்திரகுப்தர் பெற்ற வெற்றிகளை வைத்து அவரை இந்திய நெப்போலியன் என்ற அடைமொழி கொண்டு வின்சென்ட் ஸ்மித் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இது சரியல்ல. நெப்போலியன் சமுத்திரகுப்தரது ஆட்சிக்காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் வந்தவன் என்பது ஒருபுறமிருக்க, சமுத்திரகுப்தர் நினைத்திருந்தால் தன்னுடைய படைகளை மத்திய ஆசியாவரை இட்டுச் சென்று வெற்றிகளைக் குவித்திருக்கலாம். அதன்மூலம் சரித்திரத்தில் தனக்கென ஓர் இடத்தையும் பெரும் புகழையும் அவர் அடைந்திருக்கலாம். இருப்பினும் அவர் அதைச் செய்யவில்லை. தன்னுடைய அரசு நிலையானதாக, நீண்டநாட்கள் நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். நெப்போலியனைப் போல அகலக்கால் வைத்து படுதோல்வி அடைந்து அவர் மாண்டுபோகவில்லை. ஆகவே அவரை இந்திய நெப்போலியன் என்று அழைப்பது அபத்தம்.
குப்தர்களின் அரசைக் கட்டமைத்து ஒரு நிலைக்குக் கொண்டுவந்தபின், நல்லாட்சி தருவதில் அவர் கவனம் செலுத்தினார். அஸ்வமேதயாகம் ஒன்றையும் அவர் செய்தார். அவரது ஆட்சியில் மக்கள் அமைதியைக் கண்டனர். கலையும் கல்வியும் சமுத்திரகுப்தர் ஆட்சியில் செழித்து வளர்ந்தது.
பிரயாகைக் கல்வெட்டு அவரை ஒரு சிறந்த கல்வியாளராகவும் அறிவாளியாகவும் குறிப்பிடுகிறது. பல்வேறு கல்வியாளர்களையும் அவர் ஆதரித்தார். இலக்கியம், நாடகம் போன்றவை அவர் ஆட்சியில் பெரும் வளர்ச்சியைக் கண்டன. கல்வெட்டை எழுதிய ஹரிசேனனும் சிறந்த புலவர்களில் ஒருவர்தான். அவர் சமுத்திரகுப்தரின் கல்வியறிவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘சமுத்திரகுப்தர் கல்வியில் சிறந்தவர்களின் கூட்டத்தில் இருக்கும்போது பெருமகிழ்ச்சியடைந்தார். சிறந்த நூல்களில் குறிப்பிட்டிருப்பது உண்மை என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த அவர் அவற்றை ஆதரிக்கவும் செய்தார். அவரே ஒரு சிறந்த கவியாகவும் விளங்கினார்’ என்கிறார். நாட்டின் கல்வியறிவு அவர் ஆட்சிக்காலத்தில் சிறந்து விளங்கியது. அதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து பலர் இங்கே வந்து கல்வி கற்றனர்.
அதுபோலவே இசையில் வல்லுநராகவும் சமுத்திரகுப்தர் இருந்தார். ஹரிசேனன் அவரை கஸ்யபரோடும் நாரதரோடும் தும்புருவோடும் ஒப்பிடுகிறார்.
‘இந்திரனின் குருவான கஸ்யபர், தும்புரு, நாரதர் போன்ற சிறந்த இசைவாணர்களின் புகழ் சமுத்திரகுப்தரின் கூர்மையான சிறந்த இசையறிவு, திறமை ஆகியவற்றின் முன்னே மங்கிப்போயின. அவருடைய அருமையான கவிதைகளால் மற்ற கற்றறிந்த கவிகளுக்கெல்லாம் அரசனைப் போல இருந்தார் சமுத்திரகுப்தர். அவருடைய இந்தத் திறமையும் இசை மீட்டும் தன்மையும் எப்போதும் புகழுக்கு உரியன’ என்கிறது பிரயாகைக் கல்வெட்டு. இது ஏதோ மிகைப்படுத்திச் சொன்ன ஒன்று அல்ல என்பதை வீணை மீட்டும் சமுத்திரகுப்தரின் சித்திரம் நிரூபிக்கிறது.
இப்படிப் பல திறமைகளைக் கொண்டு சகல அதிகாரமும் கொண்ட அரசனாக இருந்தாலும் சமுத்திரகுப்தர் சமூகத்தின் கடைநிலையில் இருந்த மக்களிடமும் அளவற்ற அன்பு வைத்திருந்தார். மென்மையான இதயம் படைத்தவராக (ம்ருதுஹ்ருதய) அவர் இருந்தார். மக்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யத் தகுந்த நடவடிக்கைகளை அவர் எடுத்தார். அதனால் மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். ‘லோகானுக்ரஹ ஸமீத்தவிஹ்ரகவான்’ – அதாவது வள்ளல்தன்மையைப் பொருத்தவரை ஒளிபொருந்திய உதாரண புருஷராக அவர் இருந்தார் என்கிறார் ஹரிசேனன்.
நல்லாட்சியின் ஒரு முக்கியமான பகுதி மக்களின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதே என்பதை சமுத்திரகுப்தர் நன்கு உணர்ந்திருந்தார். ஆகவே வெறும் போர் வெற்றிகளை ஈட்டியது மட்டுமல்லாமல், வணிகத்திலும் அவர் பெரும் கவனம் செலுத்தினார். வடமேற்கு அரசர்களோடு அவர் கொண்டிருந்த நல்லுறவு நாட்டின் குறுக்கே ஓடிய பட்டுச் சாலையின் வழியாக வணிகம் தங்குதடையின்றி நடைபெற வழிசெய்தது. தாம்ரலிப்தி துறைமுகத்திலிருந்து பல்வேறு விதமான வணிகப் பொருட்கள் கடல் கடந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. உலகெங்கிலும் இந்தியப் பொருட்களுக்கு நல்ல சந்தை இருந்தது. கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளோடு குப்தர்களின் வர்த்தகம் செழித்து இருந்ததாக சீன யாத்திரிகரான பாஹியான் குறிப்பிட்டிருக்கிறார்.
பல்வேறு அரசுகளாகச் சிதறுண்டு கிடந்த வட பாரதத்தை ஒன்றிணைத்த பெருமை சமுத்திரகுப்தருக்கு உண்டு. அந்தச் சிதறிய பகுதிகளில் பல இடங்களை ஆட்சி செய்த வெளிநாட்டு சக்திகளையும் அவர் விரட்டியடித்து இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர் அவர். ‘சமுத்திர’ என்ற அடைமொழிக்கு ஏற்ப இருபுறம் கடல்களால் சூழப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த அரசராக அவர் இருந்தார்.
மேற்கண்டபடி, பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் குடியேற்றத்தாலும் உள்நாட்டில் ஏற்பட்ட பல மாறுதல்களாலும் மங்கிப் போயிருந்த வைதீக சமயத்திற்குப் பெரும் எழுச்சி அளித்தவர் சமுத்திரகுப்தர். தன்னுடைய வெற்றிகளைக் கொண்டாட அஸ்வமேத யாகத்தை முறைப்படி அவர் செய்தார். அதன் காரணமாகவே பல காலத்திற்குப் பிறகு அஸ்வமேதத்திற்குப் புத்துணர்ச்சி அளித்தவர் (சிரோத்ஸன்னாஸ்வமேதாஹர்தா) என்று அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். அவர் செய்த அஸ்வமேத யாகத்தைக் குறிக்கும்வகையில் அவரது நாணயங்கள் ‘ராஜாதிராஜ ப்ருதிவீமவித்வா திவம் ஜயதி அப்ரதிவார்யவீர்ய’ மண்ணுலகம் முழுவதையும் வென்ற ராஜாதிராஜன் அடுத்ததாக விண்ணுலகை அவனுடைய தீரத்தால் வென்றான் என்று குறிக்கின்றன. உலகை வீரத்தால் வென்ற சமுத்திரகுப்தர், அஸ்வமேதம் போன்ற தர்மத்திற்கு உவப்பான யாகத்தைச் செய்ததன்மூலம் தேவர்கள் வாழும் விண்ணுலகையும் வென்றான் என்பது சமத்காரமான உவமை. அவனுடைய பேத்தியான பிரபாவதிகுப்தாவின் பூனா சாசனத்தில் பல அஸ்வமேத யாகங்களைச் செய்தவராக (அனேகாஸ்வமேதாயாஜி) சமுத்திரகுப்தர் குறிப்பிடப்படுகிறார்.
அப்படிப்பட்ட யாகத்தைச் செய்தது மட்டுமல்லாது ஸ்வர்ணதானம், அதாவது பொன்னைத் தானமாக அளிக்கும் சடங்குகளையும் அவர் செய்திருக்கிறார். ஏரான் கல்வெட்டு ‘அனேக-கோ-ஹிரண்யகோடி ப்ரதாஸ்ய’ என்று பல கோதானங்களையும் பொன் தானங்களையும் சமுத்திரகுப்தர் செய்ததாகக் கூறுகிறது. இந்தத் தானங்கள் வேதங்களில் குறிப்பிடப்பட்டவையாகும்.
சமுத்திரகுப்தர் விஷ்ணுவின் பக்தராக இருந்தார் என்று சில குறிப்புகளால் அறிகிறோம். ஏரான் கல்வெட்டு அவர் கட்டிய விஷ்ணு கோவிலைக் குறிக்கிறது என்று கன்னிங்ஹாம் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். குப்த அரசர்கள் பெரும்பாலும் வைஷ்ணவர்களாக இருந்ததையும் நாம் பார்க்கிறோம்.
இப்படி வைதீக சமயத்தை உயர்த்திப் பிடித்த அதேசமயம் சமுத்திரகுப்தர் மற்ற சமயங்களையும் சரிசமமாகவே நடத்தினார். கயாவில் புத்த மடாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு இலங்கை அரசனுக்கு அவர் உதவிகள் செய்தார். புருஷபுரத்தைச் சேர்ந்தவரும் பௌத்தமத குருக்களில் ஒருவருமான முதலாம் வசுபந்து சமுத்திரகுப்தரால் ஆதரிக்கபபட்டவர். கற்றறிந்தவர்களின் நெருக்கத்தில் சமுத்திரகுப்தர் மகிழ்ச்சி அடைந்ததாக பிரயாகைக் கல்வெட்டினால் குறிப்பிடப்படுபவரில் ஒருவராக இந்த வசுபந்து இருக்கக்கூடும். பல முக்கியமான பௌத்த நூல்களை எழுதிய இந்த வசுபந்துவின் நூல்கள் பின்னாளில் குமாரஜீவரால் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)