Skip to content
Home » குப்தப் பேரரசு #14 – சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #14 – சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

பிரயாகை / ஏரான் கல்வெட்டுகளை அடுத்து சமுத்திரகுப்தரைப் பற்றிப் பல தகவல்களைத் தருவது அவர் அச்சிட்ட நாணயங்கள்தான். பண்டைய இந்தியாவின் நாணயவியலில் சமுத்திரகுப்தர் வெளியிட்ட நாணயங்களின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் அவ்வளவு அதிகமான முறையில் நாணயங்களை வெளியிட்ட முதல் அரசர் அவராகவே இருக்கக்கூடும். அது மட்டுமல்ல, பல்வேறு விதமான நாணயங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதுவரை மேற்கத்திய முறைகளைப் பின்பற்றியே அச்சிடப்பட்ட நாணயங்களை முழுவதும் இந்திய மயமாக்கிய பெருமையும் சமுத்திரகுப்தரையே சாரும்.

அவரது நாணயங்களைப் பின்வரும் முறையில் பிரிக்கலாம்.

பொது வகை நாணயங்கள்

சமுத்திரகுப்தரின் ஆரம்ப ஆட்சிக்காலத்தில் அவரால் வெளியிடப்பட்ட நாணயங்கள் இவை. அதன்காரணமாக இவற்றில் குஷாணர்களின் நாணயங்களின் தாக்கம் உண்டு. இந்த வகை நாணயங்களின் ஒரு பகுதியில் அரசர் யாகக்குண்டத்தின் (இதை துளசிமாடம் என்று சொல்வோரும் உண்டு) முன்பு நின்ற நிலையில் காணப்படுகிறார். அரசருக்குப் பின் ஒளிவட்டம் காணப்படுகிறது. கால்சராயும் தலைக்கவசமும் அணிந்திருக்கும் அவருக்கு அருகில் குப்தர்களின் சின்னமான கருடக்கொடி காணப்படுகிறது. குப்தர்களின் குலதெய்வமான மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். அது சமுத்திரகுப்தரின் ஆரம்பகால நாணயங்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க ஒன்று. அதே பக்கத்தில் சமுத்திரகுப்தரின் பெயர் மேலிருந்து கீழாக எழுதப்பட்டுள்ளது. அதைச் சுற்றி ‘சமர ஸத விதத விஜயோ ஜித ரிபுராஜிதோ திவம் ஜயதி’ – எதிரிகளின் வெல்லமுடியாத அரண்களைத் தகர்த்து, நூற்றுக்கணக்கான போர்களில் வெற்றியைப் பரப்பி, சொர்க்கத்தையும் வென்றவன் என்று பொறிக்கப்பட்டுள்ளது. அரசரின் இடதுபக்கம் இருப்பது ஈட்டி என்று வின்சென்ட் ஸ்மித் கருதுகிறார். ஆனால் இது பலரால் மறுக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்குக் கழுத்திலும் கையிலும் ஆபரணங்கள் உள்ளன. அவரது வலது கை நீண்டிருக்கிறது. இடது கையில் கிரேக்கக் கடவுளான ஆட்டு உருவம் கொண்ட அமல்தியாவின் கொம்பு உள்ளது (இது மேலை நாட்டு நாணயங்களின் பாதிப்பினால் வந்தது). இந்தக் கொம்பு அள்ளக்குறையாத செல்வங்களை அளிப்பதாக மேல்நாட்டுப் புராணங்கள் கூறுகின்றன. அன்னையின் கால்கள் தாமரையின் மீது உள்ளன. ‘பராக்ரமா’ என்று நாணயத்தின் இந்தப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

குஷாணர்களின் நாணயங்களோடு இதை ஒப்பிட்டால் சிற்சில மாறுதல்களை நாம் காணமுடியும். குல்லாவைப் போன்று குவிந்த தலைக்கவசத்திற்குப் பதிலாக தலையோடு சேர்ந்த தலைக்கவசம் குப்தர்களின் நாணயத்தில் இடம்பெற்றுள்ளது. திரிசூலத்திற்குப் பதிலாக கருடன் உள்ளது. அரசரின் ஆபரணங்கள் இந்திய முறைப்படி உள்ளன.

இரண்டு நாணயங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைப் பார்த்தால், இந்திய அரசர் குஷாணர்களின் உடையை அணிந்திருக்கிறார். அவரது பெயர் மேலிருந்து கீழாக எழுதப்பட்டுள்ளது. யாககுண்டமும் குஷாணர்களின் நாணயங்களில் உள்ளதே. நாணயத்தின் மறுபக்கத்தில் உள்ள தேவியின் உருவம் குஷாணர்களிடமிருந்து அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. குஷாணர்களின் அர்டாஷோவுக்கு பதில் இந்தியாவின் லக்ஷ்மி இடம்பெறுகிறார். மற்றபடி அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள், கொம்பு ஆகியவை குஷாணர்களின் நாணயங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் காலப்போக்கில் இந்த வெளிநாட்டு அம்சங்கள் மறைந்துபோவதையும் இந்தியக் குறியீடுகள் நாணயங்களில் இடம்பெறத் தொடங்கியதையும் நாம் காணலாம்.

வில்வீரர் வகை நாணயங்கள்

சமுத்திரகுப்தரின் வில்லைக் கையாளும் திறமையைக் குறிக்கும் வகையில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். இந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் இடது கையில் வில்லுடனும் வலது கையில் அம்புடனும் அரசர் காட்சியளிக்கிறார். இடது புறம் கருடன் உள்ளது. அந்தப் பக்கத்தில் ‘அப்ரதிரத விஜித்ய க்ஷிதீம் சுசரிதைர் திவம் ஜயதி- எதிர்த்து வரும் தேர்களால் வெல்ல முடியாதவர், உலகை வென்றபின் தமது நற்செயல்களால் சொர்க்கத்தையும் வென்றவர்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் பொதுவகை நாணயங்களைப் போன்றே லக்ஷ்மி தேவியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் அப்ரதிரத என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வகை நாணயங்கள் அரசின் கிழக்குப் பகுதிகளில் அதாவது புத்தகயா, பயனா ஆகிய இடங்களில் அதிகமாகக் கிடைத்துள்ளன. பின்னால் இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில் இந்தவகை நாணயங்கள் பெரும் அளவில் அச்சிடப்பட்டன.

கோடாரி வகை நாணயங்கள்

சமுத்திரகுப்தரின் போர்த்திறனையும் எதிரிப் படைகளின்மீது அவர் வெற்றிவாகை சூடியதையும் வெளிக்காட்டுபவை இந்த வகை நாணயங்கள். நாணயத்தின் ஒரு பக்கம் தலைக்கவசம் அணிந்த அரசர் அவரது இடக்கையில் கோடாரி ஒன்றைத் தாங்கியிருக்கிறார். வலது கை அவரது இடுப்பில் உள்ளது. இடக்கையின் அருகில் ‘சமுத்ர’ என்று எழுதப்பட்டுள்ளது. சில வகை நாணயங்களில் ‘கண்ணுக்குத் தெரியாத காலனின் ஆயுதமான கோடாரியைத் தாங்கியவர், வெல்லமுடியாத அரசர்களை வென்ற வெல்லமுடியாத அரசருக்கு வெற்றி’ என்று எழுதப்பட்டுள்ளது. இதை வைத்து சமுத்திரகுப்தர் திசைகள் எங்கும் பெற்ற வெற்றிகளைக் கொண்டாடும் விதமாக இந்த வகை நாணயங்களை வெளியிட்டார் என்று நாம் கருதலாம். அவரது இடப்பக்கத்தில் ஒரு குள்ள உருவம் உள்ளது. அக்காலத்தில் அரசரது தனிப்பட்ட உதவியாளர்கள் தோற்றத்தில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள் என்று ஆய்வாளர் ராதா குமுத் முகர்ஜி கூறுகிறார். அதாவது அவர்கள் குப்ஜர்களாகவோ (கூனர்கள்) வாமனர்களாகவோ (குள்ளர்களாக), கிராடர்களாகவோ (சிறிய உருவம் கொண்டவர்கள்), மூகர்களாகவோ (ஊமை) இருந்தார்கள் என்கிறார் அவர்.

நாணயத்தின் மறுபக்கத்தில் லக்ஷ்மி சிம்மாசனத்தின் அமர்ந்திருக்கிறார். சில வகை நாணயங்களில் அவரது கரத்தில் தாமரை மலர் உள்ளது. கன்னோஜி, வாரணாசி, பயனா போன்ற இடங்களில் இது போன்று 23 நாணயங்கள் கிடைத்துள்ளன. சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் இவை வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

புலி வகை நாணயங்கள்

சமுத்திரகுப்தர் வேட்டையின்மீது கொண்டிருந்த ஆர்வம் இந்த வகை நாணயங்களில் வெளிப்படுகிறது. மிகவும் அரிதாகக் கிடைக்கும் நாணயமான இதற்கு ஆறு உதாரணங்களே உள்ளன. நாணயத்தின் ஒருபுறம் அரசர் அரைக்கச்சு மட்டும் அணிந்து காணப்படுகிறார். அவருடைய கழுத்தில் ஆபரணமும் காதணிகளும் உள்ளன. ஒரு புலியின்மீது அவர் அம்பு எய்கிறார். அதன் காரணமாக புலி பின்னால் சாய்கிறது. ‘வ்யாக்ரஹபராக்ரமா’ என்று அந்தப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் கங்கை அம்மன் அவருடைய வாகனமான மகரத்தில் (முதலை) நிற்கிறார். அவரது இடக்கையில் தாமரை காணப்படுகிறது. நீட்டியுள்ள வலக்கையின் அருகில் சந்திர வடிவமான ஆயுதம் காணப்படுகிறது. தேவியின் இடப்புறத்தில் ‘ராஜா சமுத்ரகுப்தஹ’ என்று எழுதப்பட்டுள்ளது. சமுத்திரகுப்தரின் அரசு கங்கைச் சமவெளியிலிருந்து தக்காணத்தில் புலிகள் உலவும் காடுகளைக் கொண்ட மகாகாந்தாரம் வரை பரவி இருந்ததற்கான குறியீடு இந்த நாணயங்கள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வீணை வகை நாணயங்கள்

சமுத்திரகுப்தரின் இசைத்திறனை அறிவிப்பவை இவை. இந்த வகை நாணயங்களின் ஒருபுறம் பத்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அரசர் வீணையை வாசிக்கும் தோற்றம் காணப்படுகிறது. அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கீழ் ‘ஸி’ என்று எழுதப்பட்டுள்ளது. அது ‘ஸித்தம்’ என்பதன் குறியீடாக இருக்கக்கூடும். நாணயத்தில் அரசரின் பெயர் ‘மகாராஜாதிராஜ ஸ்ரீ சமுத்ரகுப்தஹ’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபுறம் அமர்ந்திருக்கும் தேவியின் உருவம் காணப்படுகிறது. அது சரஸ்வதி தேவியின் உருவம் என்பது சிலரின் கருத்து. இந்தப் பக்கமும் அரசரின் பெயர் மேலிருந்து கீழாக எழுதப்பட்டுள்ளது. பிரயாகைக் கல்வெட்டில் தும்புருவுடனும் நாரதருடனும் அவரை ஒப்பிட்டு எழுதியிருப்பது மிகையல்ல. சமுத்திரகுப்தர் நல்ல இசைத்திறன் கொண்டவர் என்பதற்கு இந்த வகை நாணயங்கள் சான்றாகும்.

புலிவகை நாணயங்களும் வீணை வகை நாணயங்களும் முற்றிலும் இந்தியமயமாக்கப்பட்ட சமுத்திரகுப்தரின் நாணயங்களாகும். அரசரது உடை, நாணயத்தில் உள்ள தேவியின் உருவம், ஆபரணங்கள் ஆகிய அனைத்தும் குஷாணர்களின் தாக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுக் காணப்படுகின்றன.

அஸ்வமேத நாணயங்கள்

பல ஆண்டுகளுக்குப் பின் அஸ்வமேத யாகம் ஒன்றைச் செய்த பெருமையுடையவர் என்று குப்தர்களின் ஆவணங்கள் குறிப்பிடும் செயற்கரிய செயலைச் செய்தவர் என்பதால் அதைக் கொண்டாடும் விதத்தில் அஸ்வமேத யாக நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்து சமய நூல்களில் அஸ்வமேத யாகம் ஒன்றைச் செய்வதற்கான தகுதிகள் விளக்கப்பட்டுள்ளன. அந்தத் தகுதிகள் அனைத்தையும் அடைந்த பிறகே இந்த யாகத்தைச் செய்திருக்கிறார் சமுத்திரகுப்தர். ஆகவே அதைக் குறிக்கும் வகையில் நாணயங்களை வெளியிட்டதில் வியப்பில்லை. வேத முறைப்படி நடந்த அரசன் என்ற சமுத்திரகுப்தரின் பெருமிதத்தையும் இந்த வகை நாணயங்கள் குறிக்கின்றன. பாரதத்தின் மற்ற அரசர்களை வென்று பேரரசு ஒன்றை உருவாக்கியதின் குறியீடு அஸ்வமேத யாக நாணயங்கள்.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் யாகத்தூணின் எதிரில் ஒரு குதிரை நிற்கிறது. நாணயத்தின் விளிம்பைச் சுற்றி ‘ராஜாதிராஜ ப்ருத்வீம் அவித்வா திவம் ஜயத்யப்ரதிவார்யவீர்ய – வெல்லமுடியாத வலிமையைக் கொண்ட அரசர்களுக்கு அரசர் இவ்வுலகை வென்றபின் சொர்க்கத்தையும் வெல்கிறார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தில் ‘ப்ருத்வீம் விஜித்ய’ என்றும் மற்றொன்றில் ‘ப்ருத்வீம் விஜித்ய திவம் ஜயத்யாஹ்ரித வாஸ்வமேதஹ’ என்றும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. யாகம் செய்த புண்ணியத்தின் விளைவாக சொர்க்கத்தை வென்ற சமுத்திரகுப்தரின் செயலை இது வெளிப்படுத்துகிறது.

நாணயத்தின் மறுபக்கத்தில் அரசியின் உருவம் உள்ளது. இந்து முறைப்படி யாகங்களில் மனைவிக்கு முக்கியமான இடம் உண்டு. அதைக் குறிக்கவே அரசியின் உருவம் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆபரணங்கள் அணிந்திருக்கும் அரசி தனது வலப்புறத்தில் சாமரத்தைத் தாங்கியிருக்கிறார். எதிரில் யாகத்திற்குப் பயன்படுத்தப்படும் வேல் ஒன்று உள்ளது. அரசியின் இடதுபுறத்தில் ‘அஸ்வமேத பராக்ரமா’ என்று எழுதப்பட்டுள்ளது. அஸ்வமேதத்தின் மூலம் தன் வலிமையை நிரூபித்தவன் என்று அதற்குப் பொருள் கொள்ளலாம். நாணயங்களில் சமுத்திரகுப்தரின் பெயர் இல்லாவிட்டாலும், அவற்றின் எடையை வைத்தும் அஸ்வமேத பராக்ரமா என்று எழுதப்பட்டதை வைத்தும் இவை சமுத்திரகுப்தரின் நாணயங்களாக அடையாளம் காணப்படுகின்றன. இதில் காணப்படும் அரசி சமுத்திரகுப்தரின் பட்டமகிஷியான தத்ததேவி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவ்வகை நாணயங்கள் யாகத்தில் கலந்து கொண்ட அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். பாட்னாவிற்கும் சஹரன்பூருக்கும் இடையே மிகவும் அரிதாக இந்த வகையைச் சேர்ந்த 43 நாணயங்களே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட நாணயங்களைத் தவிர இன்னும் சில நாணய வகைகள் சமுத்திரகுப்தருடையது என்று சிலரால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அவை இரண்டாம் சந்திரகுப்தருடையது என்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவை இங்கு ஆராயப்படவில்லை. போலவே காசன் என்று பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களும் சமுத்திரகுப்தருடையவை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் காசனும் சமுத்திரகுப்தரும் வேறு வேறு நபர்கள் என்று ஏற்கனவே பார்த்தோம்.

இந்திய நாணயவியலில் ஒரு முக்கியமான திருப்பத்தை சமுத்திரகுப்தரின் நாணயங்கள் ஏற்படுத்தின என்று சொன்னால் அது மிகையாகாது. குஷாணர்களின் பாதிப்பிலிருந்து நாணயங்களை முழுதும் மீட்டு அவற்றை இந்தியமயமாக்கிய பெருமை சமுத்திரகுப்தரையே சாரும்.

ஒரு விஷயத்திற்கு வேறுபட்ட பார்வைகள் உண்டு என்பதற்கு உதாரணமாக ‘நாணயத்திற்கு இரு பக்கங்கள் உள்ளன’ என்று சொல்வது வழக்கம். ஆனால் சமுத்திரகுப்தர் தன்னுடைய நாணயங்களின் இரு பக்கத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவற்றை அச்சிட்டார். விஷ்ணுவின் வாகனமான கருடனின் உருவம் ஒரு பக்கம் பொறிக்கப்பட்டால் மறுபக்கம் விஷ்ணுவின் தேவியான திருமகள் காணப்படுகிறார் (பொது, வில்வீரர் வகை நாணயங்கள்). கலைகளில் சிறந்தவர் என்பதைக் குறிக்க வெளியிடப்பட்ட வீணை வகை நாணயங்களின் மறுபக்கத்தில் கலைகளின் தெய்வமான சரஸ்வதி இருக்கிறார். காடுகளை வென்றதைக் குறிக்கும் புலிவகை நாணயங்களில் கங்கைச் சமவெளி முழுவதையும் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்ததைக் குறிக்கும் வகையில் கங்கை காணப்படுகிறார். அஸ்வமேத யாக நாணயங்களில் ஒருபுறம் யாகக் குதிரையும் மறுபுறம் யாகத்திற்குத் துணை செய்யும் அரசியும் காணப்படுகிறார்கள். ஒருபுறம் நூறு போர்களை வென்றவர் என்று குறித்திருந்தால் மறுபுறம் ‘பராக்ரமா’ என்ற பெயர் காணப்படுகிறது. இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நாணயங்களை அச்சிட்டுப் பெரும் புகழ் பெற்றவர் சமுத்திரகுப்தர்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *