இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் அவரது அரசைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தருகின்றன. அவற்றில் முதலாவது மதுராவில் உள்ள கல்வெட்டு. கன்னிங்ஹாமால் கண்டறியப்பட்டு ப்ளீட் தன்னுடைய Corpus Inscriptionum Indicarum புத்தகத்தின் மூன்றாம் தொகுதியில் பதிப்பித்த இந்தக் கல்வெட்டில் பன்னிரண்டு வரிகள் மட்டுமே தெளிவாக உள்ளன.

இதிலுள்ள ‘மகாராஜாதிராஜஸ்ரீ சமுத்ரகுப்தஸ்ய புத்ரேண தத் பரிக்ரிஹிதேன மஹாதேவ்யாம் தத்ததேவ்யாம் உத்பன்னேன பரமபாகவதேன மகாராஜாதிராஜஸ்ரீ சந்திரகுப்தேன’ என்ற வாசகங்களை வைத்து சமுத்திரகுப்தருக்கும் தத்ததேவிக்கும் பிறந்தவர் சந்திரகுப்தர் என்றும் அவர் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் தெரிந்துகொள்ள முடிகிறது. மற்றபடி இந்தக் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் புகழையே பாடுகிறது. வருணன், இந்திரன், அந்தகன் ஆகியோருக்கு ஈடானவர் சமுத்திரகுப்தர் என்றும் பொன்னையும் ஏராளமான பசுக்களையும் தானம் செய்தவர் என்றும் பல காலம் செய்யப்படாமலிருந்த அஸ்வமேதயாகத்தைச் செய்தவர் என்றும் சமுத்திரகுப்தர் புகழப்படுகிறார். இவற்றிலிருந்து இது இரண்டாம் சந்திரகுப்தரின் ஆரம்பகாலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என்பது தெரிகிறது.
மதுராவில் இரண்டாம் சந்திரகுப்தருடைய தூண் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதைப் பற்றிய தகவல்களை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ரங்கேஸ்வர மஹாதேவர் கோவிலுக்கு அருகிலுள்ள கிணற்றின் தூண் ஒன்றில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இப்போது மதுரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டில்தான் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியாண்டைப் பற்றிய தகவல் உள்ளது.
குப்தர்கள் ஆண்டு 61, அதாவது பொயு 380ம் ஆண்டைச் சேர்ந்த இந்தச் சாசனம் உதிதாச்சார்யர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர் சைவத்தில் மாகேஸ்வரப் பிரிவைச் சேர்ந்த குருவாகக் குறிப்பிடப்படுகிறார். அவர் குஸிகர் என்ற ஆசார்யரின் வழியில் பத்தாவதாக வந்தவர் என்றும் பராசரர் என்ற குருவின் நான்காவது சீடர் என்றும் அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. உதிதாச்சார்யரின் குருவாக உபமிதர் என்பவரும் உபமிதருடைய குருவாக கபிலர் என்பவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். குஸிகர் என்ற குருவை இந்தக் கல்வெட்டு முக்கியமாகக் குறிப்பிடுவதிலிருந்து அவரே இந்த குருபரம்பரையின் முதலாவது ஆசார்யர் என்று ஊகிக்கலாம்.
பாசுபதச் சைவப் பிரிவைத் தோற்றுவித்த லகுலீசரின் சீடர்களாக நான்கு பேர் குறிக்கப்படுகின்றனர். குஸிகர், கர்கர், மித்ரர், கௌருஷ்யர் ஆகியோரே அந்த நான்குபேர். அந்த சீடர்களின் ஒருவரான குசிகரே இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசார்யர் ஆவார். பாசுபதமும் மாகேஸ்வரப் பிரிவாகக் கருதப்படுவதிலிருந்து கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள குரு பரம்பரை லகுலீசரின் பாசுபதத்தைச் சேர்ந்த ஆசார்யர்களே என்பது தெளிவு. தவிர இந்தத் தூணில் உள்ள சிற்பம் லகுலீசருடையதாக அறியப்பட்டுள்ளது.
உபமிதேஸ்வரர், கபிலேஸ்வரர் ஆகிய இருவரின் விக்கிரகங்களை உதிதாச்சார்யர் குரு ஆயதனத்தில், அதாவது குருக்களை வழிபடும் இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதிலுள்ள ஈஸ்வர என்ற பின்னெட்டிலிருந்து தன்னுடைய குருவுக்கும் பரமகுருவுக்கும் இரண்டு சிவலிங்கங்களை உதிதாச்சார்யர் பிரதிஷ்டை செய்ததாகக் கொள்ளலாம். குரு ஆயதனம் என்ற இடத்தில் இதுபோன்ற குருக்களை சிவலிங்கத்திருமேனிகளாக பிரதிஷ்டை செய்யும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கவேண்டும். இந்த லிங்கங்களில் அந்த ஆசார்யர்களின் உருவமும் வடிக்கப்பட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேபோன்று லகுலீசரின் வடிவமும் சிவலிங்கங்களில் வடிக்கப்படும் வழக்கம் இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இப்படியாக இந்தக் கல்வெட்டு சந்திரகுப்தரின் காலத்தை மட்டுமின்றி லகுலீசரின் காலத்தையும் (பொயு 105-130) பாசுபத சைவம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தையும் தோராயமாக அறிந்துகொள்ள பெரும் உதவி செய்கிறது.
உதயகிரிக் கல்வெட்டுகள்
மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவிற்கு அருகில் உள்ள உதயகிரி என்ற இடத்தில் பல குகைக்கோவில்கள் உள்ளன. அங்குள்ள ‘தவா’ குகையில் உள்ள ஒரு கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தைச் சேர்ந்தது. சமஸ்கிருத மொழியைச் சேர்ந்த இக்கல்வெட்டும் ஸித்தம் என்றே தொடங்குகிறது. மேலும் கல்வெட்டில் உள்ள வரிகள் எண்களின் மூலம் வரிசையிடப்பட்டுள்ளன. சம்பு என்ற பெயருடைய சிவபெருமானுக்கு குகைக்கோவில் ஒன்றை சந்திரகுப்தரின் போர் மற்றும் அமைதிக்கான அமைச்சராக இருந்த வீரசேனன் அமைத்ததை கல்வெட்டு தெரிவிக்கிறது. அவர் கௌத்ஸ கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும் சாபன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் என்றும் தெரிவிக்கும் கல்வெட்டின் வாசகங்கள் அவர் ஒரு கவி என்ற செய்தியையும் தெரிவிக்கின்றன.

வீரசேனன் பாடலிபுத்திர நகரைச் சேர்ந்ததாக கல்வெட்டு குறிப்பிடுவதை வைத்து இரண்டாம் சந்திரகுப்தரின் தலைநகர் பாடலிபுத்திரமே என்று வாதிடுவோர் உண்டு. ஆனால் அமைச்சர் பாடலிபுத்திரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்று இதை எடுத்துக்கொள்ளலாமே தவிர தலைநகராக பாடலிபுத்திரம் இருந்தது என்பதற்கு இந்தக் கல்வெட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும். சந்திரகுப்தரின் திக்விஜயங்களில் அவரது அமைச்சரான வீரசேனன் பங்குபெற்றதை ‘உலகத்தை வெல்லச் சென்ற அரசனோடு தானும் சென்றதாக’ வீரசேனன் குறிப்பிடுவதிலிருந்து அறிந்துகொள்ளலாம். அந்தப் பயணங்களில் பெற்ற வெற்றிகளுக்குக் காணிக்கையாக பெரும் சிவபக்தனான வீரசேனன் இந்தக் கோவிலை எழுப்பியிருக்கவேண்டும் என்பதை கல்வெட்டின் வாசகங்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. இந்தக் கல்வெட்டு எந்த ஆண்டைச் சேர்ந்தது என்பதைப் பற்றிய தகவல்கள் இல்லை.
உதயகிரியிலுள்ள மற்றொரு குகை ‘சந்திரகுப்தர் குகை’ என்று கன்னிங்காமால் அழைக்கப்பட்டது. குகை 6 என்று தற்போது பெயரிடப்பட்ட இந்தக் கோவிலில் விநாயகர், மகாவிஷ்ணு, மகிஷாசுரமர்த்தனி ஆகியோரின் விக்ரஹங்கள் உள்ளன.
இந்தக் குகையில் உள்ள கல்வெட்டு குப்தர்கள் ஆண்டு 82ஐச் சேர்ந்தது (பொயு 401). அந்த ஆண்டு ஆஷாட மாதம் சுக்லபட்ச ஏகாதசியன்று பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு சந்திரகுப்தரை பரமபட்டாரக மகாராஜா என்று மரியாதையுடன் விளிக்கிறது. மகாராஜ சகலகனின் பௌத்திரனும் மகாராஜா விஷ்ணுதாசனின் புத்திரனுமான சனகானிகன் அளித்த தர்மம் இது என்று அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதிலிருந்து அந்தக் குகைக்கோவில் சனகானிகனால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது தெரிகிறது.
உதயகிரியில் உள்ள இன்னும் சில கல்வெட்டுகள் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது.
சாஞ்சிக் கல்வெட்டு
சாஞ்சியில் உள்ள ஸ்தூபம் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. குப்தர்கள் ஆண்டு 93 (பொயு 412) பாத்ரபத மாதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இக்கல்வெட்டு புத்த சமயத்தைச் சேர்ந்தவரும் சந்திரகுப்தரின் அலுவலருமான ஆம்ரகார்த்தவரின சாசனமாகும். ‘ஸித்தம்’ என்ற மங்கல வாழ்த்துடன் தொடங்கும் கல்வெட்டு காகநாட (சாஞ்சியின் பழைய பெயர்) என்ற இடத்தில் உள்ள புத்தவிஹாரத்தின் ஆர்ய சங்கத்திற்கு (துறவிகளுக்கு) நிலமும் பணமும் நன்கொடையாக அளிக்கப்பட்டதை தெரிவிக்கிறது. அந்த நன்கொடையை வைத்து ஐந்து பிக்ஷுக்களுக்கு உணவளிக்கவும் ஸ்தூபத்தில் விளக்கெரிக்கவும் தக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று தெரிவிக்கும் கல்வெட்டில் புத்தத் துறவிகளும் ‘ஸ்ரமணர்கள்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த நன்கொடைக்கு இடையூறு ஏற்படுத்துபவர் பசுவையோ பிராமணனையோ கொன்ற பாவத்திற்கு உள்ளாவர் என்றும் பஞ்சமாபாதகத்தைப் புரிந்ததற்கு அது ஈடாகும் என்றும் எச்சரிக்கை செய்து கல்வெட்டு நிறைவடைகிறது.
இந்தக் கல்வெட்டில் இருந்து இரண்டாம் சந்திரகுப்தருக்கு தேவராஜர் என்ற பெயரும் இருந்ததைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் மற்ற சமயங்களையும் மதித்துச் செயல்படும் சமயப் பொறையுடையவராக சந்திரகுப்தர் இருந்ததும் இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
அதிகாரிகள்
மேற்கண்ட கல்வெட்டுகளிலிருந்து சந்திரகுப்தரின் ஆட்சியின் போது நிர்வாகிகளாக இருந்த சிலரின் தகவல்களும் தெரியவருகிறது.
• சந்திரகுப்தரின் போர் மற்றும் அமைதிக்கான அமைச்சராக இருந்தவர் வீரசேனன். குப்தர்கள் காலத்திலும் பின்னால் வந்த சாளுக்கியர்களின் காலத்திலும்கூட இத்தகைய ஒரு துறை இருந்ததைப் பார்க்கிறோம். தற்போதைய ராணுவ அமைச்சருக்கு ஈடான ஓர் அமைச்சுத்துறையாக இது விளங்கியிருக்கக்கூடும். அன்வயப்ராப்த சசிவ்ய என்ற கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து இது பரம்பரையாக வரும் அமைச்சுத்துறை என்றும் தெரிகிறது.
• பௌத்த சமயத்தைச் சேர்ந்தவரும் சுகுதேசத்தைச் சேர்ந்தவருமான ஆம்ரகார்த்தவர் சந்திரகுப்தருக்காக பல போர்களை வென்று கொடுத்தவர் என்று சாஞ்சிக் கல்வெட்டு தெரிவிப்பதானால் அவர் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்திருக்கக்கூடும்.
• உதயகிரி சந்திரகுப்தர் குகையில் குறிப்பிடப்பட்டுள்ள சனகானிகர், தங்கள் பரம்பரையை மகாராஜா என்ற விளியோடு குறிப்பிடுவதால் அந்தப் பகுதியை ஆண்ட சிற்றரசராகவோ அல்லது குப்தர்களால் மாளவத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ஆளுநராக நியமிக்கப்பட்டவராகவோ இருக்கலாம்.
• குமாரகுப்தரின் ஒரு கல்வெட்டிலிருந்து சிகாரஸ்வாமி என்பவர் குமாராமாத்யராகவும் மந்திரியாகவும் சந்திரகுப்தரின் அமைச்சரவையில் பணியாற்றியதாகத் தெரிகிறது. இளவரசரைப் பற்றிய விவகாரங்களைக் கவனிப்பவருக்கு குமாராமாத்யர் என்று பெயர்
• சந்திரகுப்தரின் மகனான கோவிந்த குப்தர் வைசாலியின் ஆளுநராக இருந்த அங்கு நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பது அங்கே கிடைக்கும் அவரது முத்திரைகளால் தெரியவருகிறது.
(தொடரும்)
படம் : ‘சந்திரகுப்தர் குகை’ என்று கன்னிங்காமால் அழைக்கப்பட்டது. குகை 6 என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளது. (விக்கிமீடியா)