இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அவர் காலத்துக் கல்வெட்டுகளையும் இலக்கிய ஆதாரங்களையும் தவிர சீன யாத்திரிகரான பாஹியானின் குறிப்புகளும் துணை செய்கின்றன. சீனாவிலிருந்து அவரும் மற்ற யாத்திரிகர்களும் இந்தியா வருவதற்கான தூண்டுகோல் என்ன என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
குமாரஜீவன்
காஷ்மீரில் ஒரு பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்தவர் குமாராயனர். அவர் ஓர் இளவரசர் என்றும் அமைச்சரின் மகன் என்றும் பல்வேறு கதைகள் உண்டு. தன்னுடைய இளவயதிலேயே செல்வங்கள் அனைத்தையும் விட்டு சித்தார்த்தரைப் போலவே துறவியாகி காஷ்மீரை விட்டு வெளியேறினார் குமாராயனர். கடுமையான இமயமலைப் பகுதிகளைக் கடந்து தற்போது சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள குசீன நாட்டை அடைந்த அவரை அங்குள்ள அரசர் அன்போடு வரவேற்று தன்னுடைய நாட்டின் தலைமைக் குருவாக ஆக்கினார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சகோதரியான ஜீவகாவையும் அவருக்குத் திருமணம் செய்துகொடுத்தார்.
குமாராயனருக்கும் ஜீவகாவுக்கும் பிறந்தவர்தான் குமாரஜீவன். சிறு வயதிலேயே அறிவுத்திறன் நிரம்ப விளங்கிய மகனைக் கல்வி கற்பதற்காக தன்னுடைய தாய் நாடான காஷ்மீருக்கு அனுப்பி வைத்தார் குமாராயனர். அங்கே புத்த மதத்தின் ஒரு பிரிவான சரஸ்வதிவாதப் பாடசாலையில் சேர்ந்து அதன் அடிப்படைகளை முழுக்கக் கற்றார் குமாரஜீவன். அதன் பிறகு, என்ன காரணத்தாலோ சரஸ்வதிவாதப் பிரிவிலிருந்து விலகி, புத்த மதத்தின் இன்னோரு பிரிவான மஹாயானப் பிரிவில் சேர்ந்து அதன் தத்துவ நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தார். பௌத்த மதத்தின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவராக மிக விரைவில் உருவெடுத்தார் குமாரஜீவன். நாடு திரும்பிய அவருக்கு அங்கே சிறப்பான இடம் கிடைத்தது. அவரை குசீன மக்கள் தங்களுக்கு அரிதாகக் கிடைத்த சொத்தாகக் கொண்டாடினர்.
இப்படி பௌத்தமதத்தில் ஒரு பெரும் அறிவாளியும் சிந்தனையாளருமாக அக்காலகட்டத்தில் இருந்த அவரது புகழ் சீனாவின் தலைநகரை விரைவிலேயே எட்டியது. சீனாவின் அரசராக அப்போது (பொயு 379) இருந்தவர் ஃபூஜான் என்பவர். பௌத்தமதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ள அவருக்கு சீன நாட்டில் அந்த மதத்தைப் பற்றி அறிந்துகொள்ள அதிகமான நூல்கள் இல்லை என்பது ஒரு பெரும் குறையாக இருந்தது. பௌத்த மத அறிஞரான குமாரஜீவனைத் தன் தலைநகருக்குத் தருவித்து, முக்கியமான புத்த மத நூல்களை அவர் மூலமாக சீன மொழியில் மொழிபெயர்க்க வைத்தால் அந்தக் குறை நீங்கிவிடும் என்று நினைத்தார் சீன அரசர். அதனால், குசீன அரசரிடம் குமாரஜீவனைத் தன்னுடைய நாட்டிற்கு அனுப்புமாறு கூறினார். இதை குசீன அரசரும் குமாரஜீவனும் ஏற்கவில்லை.
அதனால் வெகுண்ட ஃபூஜான், தன்னுடைய படைத்தலைவரான ல்யூகாங்கின் தலைமையில் ஒரு படைப்பிரிவை குசீனத்தை நோக்கி அனுப்பி வைத்தார். எப்படியாவது குமாரஜீவனைச் சிறைப்பிடித்து தலைநகருக்கு அனுப்பிவிடும்படி படைத்தலைவருக்குக் கட்டளையிட்டார் சீன அரசர். அதன்படி குசீனத்தைத் தோற்கடித்து குமாரஜீவனைச் சிறைப்பிடித்தார் ல்யூகாங். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. சீன நாட்டில் அப்போது புரட்சி ஏற்பட்டு அரசரான ஃபூஜான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். மைய அரசில் ஏற்பட்ட குழப்பங்களைக் கேள்விப்பட்ட ல்யூகாங், அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்துத் தானே குசீனத்தின் அரசர் என்று பிரகடனம் செய்துவிட்டார். அவருக்கு புத்த மதத்தின்மீது அவ்வளவாக அக்கறை இல்லை. ஆகவே தன்னிடம் அகப்பட்ட நாற்பது வயதான குமாரஜீவனைச் சிறையில் அடைத்தார்.
சில ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த குமாரஜீவன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சீன மொழியை நன்கு கற்றுத்தேர்ந்தார். இதற்கிடையில் சீன அரசராக யோ ஸிங் என்பவர் பொறுப்பேற்றார். அவருக்கும் புத்த மதத்தில் பெரும் ஈடுபாடு உண்டு. நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட அவர், குமாரஜீவனை விடுவித்துத் தலைநகர் அனுப்புமாறு ல்யூகாங்கிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அதை ஏற்காத ல்யூகாங் குமாரஜீவனைப் பிணைக்கைதி என்று கூறி சீன அரசரை மிரட்டினார். இதனால் பெரும் கோபம் அடைந்த அரசர், தன்னுடைய படையை குசீனத்திற்கு அனுப்பினார். இம்முறையும் சீனப்படைகளே வென்றன. ல்யூகாங் தோற்கடிக்கப்பட்டார். குமாரஜீவன் விடுவிக்கப்பட்டு சீனத்தலைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கே யோ ஸிங் அவரை வரவேற்று தன்னுடைய தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கக் கோரினார். அவருக்குத் துணையாக அறிஞர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. பல பௌத்தத் துறவிகள் அவரின் சீடர்களாக வந்து சேர்ந்தனர். அவர்களோடு சேர்ந்து பௌத்த மதத்தைச் சேர்ந்த பல சமஸ்கிருத நூல்களை சீன மொழியில் மொழிபெயர்த்தார் குமாரஜீவன். கிட்டத்தட்ட முப்பத்து ஐந்து சூத்திரங்களையும் முந்நூற்றுக்கும் அதிகமான நூல்களையும் குமாரஜீவன் மொழிபெயர்த்தார். இது சீனாவில் பௌத்தமதத்தின் தாக்கத்தை பெருமளவில் அதிகரித்தது.
பாஹியான்
இந்த நிகழ்வுகளெல்லாம் ஒரு புறம் நடந்துகொண்டிருந்த போது அவற்றால் உந்தப்பட்ட சீனாவிலிருந்த பல பௌத்த அறிஞர்கள் நேரடியாக இந்தியாவிற்கு வந்து பௌத்தம் தொடர்பான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிவெடுத்தனர். அவர்களில் ஒருவர்தான் பாஹியான். ஹ்யூசின், தாவ்செங், ஹ்யுவீ போன்ற அறிஞர்களின் குழு ஒன்றை அமைத்து இந்தியா செல்ல முடிவெடுத்தார் அவர். ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர்கள் சீனாவிலிருந்து கிளம்பினர். முதலில் அவர்கள் ‘ஷான் ஷான்’ என்ற நாட்டை அடைந்தனர். அங்கே நான்காயிரம் பௌத்த குருமார்கள் இருந்தனர் என்றும் ஹீனயான புத்தப் பிரிவை அவர்கள் பின்பற்றினர் என்றும் பாஹியான் குறிப்பிடுகிறார். அதை அடுத்து கடுமையான மலைவழிகளில் பல தார்த்தாரிய நாடுகளை அந்தக் குழு கடந்தது. வழியில் கோடன் என்ற இடத்தில் மஹாயானப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மதகுருக்கள் இருந்ததாகவும் பல பெரிய மடாலயங்கள் இருந்ததாகவும் சொல்கிறார் பாஹியான். அங்கே உள்ள மடாலயம் ஒன்று இருநூற்று ஐம்பது அடி உயரமாகவும் பொன்னாலும் வெள்ளியினாலும் தகடுகள் பதிக்கப்பட்டு ஜொலித்ததாகவும் அதைக் கட்டிமுடிக்க 80 ஆண்டுகள் ஆனதாகவும் அவர் குறிப்பிடுகிறார். கஷ்கர் என்ற இடத்தின் அரசன் பஞ்ச பரிஷத் என்ற துறவிகளின் கூட்டத்தைக் கூட்டியதாகவும் அங்கே ஆயிரம் ஹீனயானத் துறவிகள் இருந்ததாகவும் அவருடைய குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆளில்லாத பல மலைவெளிகளையும் அடர்ந்த காடுகளையும் கடந்து அந்தக் குழு சிந்து நதியின் கரையை அடைந்தது. நதியைக் கடந்து புத்த மதம் செழித்திருக்கும் பல பகுதிகளைத் தாண்டி காந்தாரத்தில் உள்ள தக்ஷசீலத்தை அடைந்தார் பாஹியான். அங்கேயெல்லாம் சமஸ்கிருத மொழி பேசப்பட்டதாகக் குறிப்பிடும் அவர், புருஷபுரம் என்ற பெயருடைய தற்போதைய பெஷாவர் நகரை அடைந்தார். அங்கே கனிஷ்கர் கட்டிய நானூறு அடி உயரமான விஹாரத்தைக் கண்டு வியந்ததாகக் கூறுகிறார் பாஹியான். அதன் பிறகு இந்தியாவின் மையப்பகுதிக்குச் செல்லத்தீர்மானித்தார். ஆனால் அதை அவரோடு வந்த சிலர் ஏற்காமல், சீனாவிற்கே திரும்பிச் சென்றுவிட்டனர். அதனால் ஹ்யூசின், தாவ்செங் ஆகிய இருவரோடு மட்டுமே தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார் பாஹியான்.
புத்தருடைய மண்டையோடு வைக்கப்பட்டிருக்கும் இடமான நகரஹாரம் என்ற இடத்தை அந்தப் பயணக்குழு அடைந்தது. அங்கே புத்தரின் நினைவாக பல கோவில்கள் அமைக்கப்பட்டிருந்தன என்று கூறும் பாஹியான், அவருடைய பல்லுக்காக ஒரு கோவிலும் புத்தருடைய உடைகள் வைக்கப்பட்டிருந்த ஒரு கோவிலும் புத்தர் நிழல் பதிந்திருந்த ஒரு குகையும் இருந்ததாகவும் அவற்றையெல்லாம் தான் தரிசித்ததாகவும் குறிப்பிடுகிறார்.
பயணத்தைத் தொடர்ந்த அந்தக் குழுவை துயரம் சூழ்ந்தது. கடுங்குளிரைச் சமாளிக்க முடியாமல் ஹ்யூசின் இறந்துபோனார். அவருடைய உடலுக்குத் தகுந்த மரியாதைகள் செய்துவிட்டு வருத்தத்துடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார் பாஹியான். சிந்து நதியை மீண்டும் கடந்து பஞ்சாபை அடைந்த அவர் பத்தாயிரம் சாதுக்கள் நிறந்த விஹாரங்கள் அங்கே இருந்தன என்கிறார். அடுத்ததாக மதுராவுக்குச் சென்ற அவர் ‘அங்கே இருபதுக்கும் மேற்பட்ட பௌத்த மடாலயங்கள் இருந்தன, மூவாயிரம் பிக்ஷுக்கள் அங்கே வசித்தனர்’ என்கிறார்.
‘மதுராவிற்குத் தெற்கே பிராமணர்களுடைய அரசு இருந்தது. அங்கே இருந்தவர்கள் செல்வச்செழிப்போடு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அரசருடைய நிலத்தை உழுதவர்கள் தங்களுக்குக் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை அரசுக்கு அளித்தனர். அரசருடைய நிர்வாகத்தில் பெரும் தண்டனைகள் ஏதும் அளிக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப அபராதங்கள் மட்டுமே விதிக்கப்பட்டன. அரசருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்களுடைய வலது கரம் வெட்டப்பட்டது மட்டுமே அதிகபட்ச தண்டனையாக இருந்தது. நாடு முழுவதும் யாரும் கொலை செய்வதில்லை, மது அருந்துவதில்லை, வெங்காயம், பூண்டு போன்றவற்றை உண்பதில்லை, கசாப்புக் கடைகளோ மதுபானத் தொழிற்சாலைகளோ நாட்டில் இல்லை’ என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார் பாஹியான். இங்கே அவர் குறிப்பிடுவது குப்தர்களின் அரசின் மையப்பகுதியை என்பது தெளிவு.
‘பயணம் செய்பவர்களுக்கும் துறவிகளுக்கும் படுக்கையோடு கூடிய அறைகள் அளிக்கப்பட்டன. உணவும் உடையும் கூட அவர்களுக்கு இலவசமாகத் தரப்பட்டன. நாடு முழுவதும் இந்த தர்மம் நடைபெற்றது. சாரிபுத்தர், ஆனந்தர் ஆகியோருக்குக் கோவில்கள் கட்டப்பட்டிருந்தன. பல குடும்பங்கள் பிக்ஷுக்களுக்குத் தானம் அளிக்கும் செயலைக் கூட்டாகச் செய்தன’ என்றும் அவருடைய குறிப்புகள் தெரிவிக்கின்றன.
புத்த மதத்தைச் சேர்ந்த பல முக்கியமான இடங்களுக்குச் சென்றார் பாஹியான். சாஞ்சி, ஸ்ராவஸ்தி போன்ற இடங்களுக்குச் சென்று அசோகர் கட்டிய பல விஹாரங்களையும் ஸ்தூபிகளையும் அவர் தரிசனம் செய்தார். ஸ்ராவஸ்தியில் ஜீதவன விஹாரத்திற்குச் சென்ற அவர் ‘அது பொன் தோட்டத்தால் ஆன விஹாரம், அதைக் கட்டுவதற்காக சுதத்தா என்பவர் தனது தங்கத்தை எல்லாம் செலவு செய்தார்’ என்று எழுதியிருக்கிறார். அங்கெல்லாம் ஆயிரக்கணக்கான புத்தத் துறவிகள் இருந்தனர் என்று அவர் பதிவு செய்திருக்கிறார். தாவ் செங் உடன் அந்த இடங்களுக்கெல்லாம் சென்றபோது அங்கிருந்து புத்தத் துறவிகள் அவரை ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்’ என்று கேட்டதாகவும் அதற்குச் சீனாவிலிருந்து என்று பதிலளித்தபோது ‘இவ்வளவு தூரம் நம்முடைய மதத்தைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் வந்தது வியப்பை அளிக்கிறது. பல்வேறு தலைமுறைகளாக புத்த மதத்தை உங்கள் நாட்டில் பல துறவிகள் சென்று பரப்பியபோதிலும், அங்கிருந்து பௌத்த மதத்தைச் சேர்ந்த யாரும் இங்கே வரவில்லை. உங்களைத்தான் முதலில் பார்க்கிறோம்’ என்று அவர்கள் சொன்னதாகவும் தன் குறிப்புகளில் பாஹியான் எழுதிவைத்திருக்கிறார்.
புத்த மதத்தைச் சேராத பல மடாலயங்கள் இந்தியாவில் இருந்தன. அந்த மடங்கள் அமைந்திருந்த இடங்களில் அங்கே வருபவர்களுக்கு உணவும், உடையும் இருப்பிடமும் தானமாக வழங்கப்பட்டன. துறவிகளுக்கு மட்டுமல்ல அந்த இடங்களைக் கடந்து பயணம் செய்யும் சாதாரண வழிப்போக்கர்களுக்குக் கூட அவை வழங்கப்பட்டன என்று அதிசயிக்கிறார் பாஹியான். சாதி மத பேதமில்லாமல் வருபவர்களுக்கு எல்லாம் அந்த மடங்கள் தொண்டு செய்தன. பிராமண மதத்தைச் சேர்ந்தவைகளாக அவை இருந்தாலும் அந்தத் தர்மசாலைகளின் கதவுகள் எல்லோருக்கும் திறந்திருந்தன என்கிறார் அவர்.
அதன்பின் கபிலவஸ்துவை அடைந்த பாஹியான், அந்த ஊர் பாழடைந்து கிடந்தது, யானைகள் போன்ற காட்டு மிருகங்களின் தொல்லைகளைச் சமாளிக்கவேண்டியிருந்தது என்று குறிப்பிடுகிறார். லும்பினி, ராமநகரம், வைசாலி ஆகிய இடங்களுக்குச் சென்று கங்கை நதியைக் கடந்து மகதத்தின் தலைநகரான பாடலிபுத்திரத்தை அடைந்தார் அவர். ‘அசோகர் ஆட்சிசெய்த பாடலிபுத்திரத்தில் பெரும் அரண்மனைகளும் நீண்ட சுவர்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பல மண்டபங்களும் இருந்தன. ஆனால் மக்கள் அதிகமாக வசிக்கவில்லை’ என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து பாடலிபுத்திரம் குப்தர்கள் அரசில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறவில்லை என்று தெரிகிறது.
மகதத்தில் பல பெரும் நகரங்கள் இருந்ததாகவும் அங்குள்ள மக்கள் செல்வச்செழிப்போடு இருந்ததாகவும் குறிக்கிறார் பாஹியான். தங்களிடம் இருந்த செல்வத்தைத் தானே வைத்துக்கொள்ள விரும்பாமல் தானம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தனராம் அவர்கள். அங்கே பெரும் விழாக்கள் நடந்தன என்றும் பிராமணர்களின் திருவிழாக்கள் நடைபெறும் சமயங்களில் அவர்கள் பௌத்தர்களை அவற்றில் பங்குபெற அன்புடன் அழைத்தனர் என்று தெரிவிக்கிறார். முக்கிய நகரங்களில் இலவச மருத்துவமனைகள் இருந்தன. அங்கே ஏழைகளும் ஆதரவற்றோரும் வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டனர். அவர்களை அங்குள்ள மருத்துவர்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டனர். தேவையான மருந்துகளும் உணவும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. உடல் குணமடைந்தவுடன் அங்கிருந்து செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்றெல்லாம் புகழ்கிறார் பாஹியான்.
பாடலிபுத்திரத்திலிருந்து பாஹியான் கிளம்பியபோது அவருடன் செல்ல தாவ்செங் மறுத்துவிட்டார். புத்தர் பிறந்த இடமான இந்தியாவிலேயே தான் தங்கப்போவதாக அவரிடம் தெரிவித்த தாவ்செங், அங்கிருந்த விஹாரம் ஒன்றில் தங்கி புத்த மதத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளப்போவதாகக் கூறவே, தனியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தார் பாஹியான். நாலந்தா, ராஜக்ருஹம், புத்த கயா, காசி போன்ற பல இடங்களுக்குச் சென்றுவிட்டு கங்கை நதியின் கரையோரமாக இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குச் சென்றார் அவர். துறைமுக நகரான தாம்ரலிப்தியை அடைந்த பாஹியான் அங்கே 24 மடாலயங்கள் இருந்ததாகக் கூறுகிறார். அங்கிருந்து ஒரு பெரும் வணிகக் கப்பல் மூலம் இலங்கை சென்று அங்கே 6 ஆண்டுகள் தங்கிவிட்டு அங்கிருந்து கடல் மார்க்கமாக சீனா திரும்பினார் பாஹியான். ஆனால் அவர் சென்ற கப்பல் புயலால் தாக்கப்பட்டது. தத்தளித்துத் திண்டாடி ஒரு வழியாக ஜாவாத் தீவின் கரையில் ஒதுங்கிய அவர், அங்கிருந்து சீனாவிற்குச் சென்றார்.
இந்தியாவிலிருந்து பல புத்த மத நூல்களின் பிரதிகளை எடுத்துச் செல்லலாம் என்ற நோக்கத்தோடு இங்கு வந்த அவருக்கு இங்கு நிலவிய கல்வி அமைப்பு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது. ‘வட இந்தியாவின் பல பகுதிகளில் புனித நூல்கள் வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டன. எழுதப்பட்ட நூல்கள் மிகமிகக் குறைவாகவே இருந்தன. ஒவ்வொரு நூலும் கேட்டு, கிரஹிக்கப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டு அடுத்தவர்களுக்குக் கடத்தப்பட்டது. ஆகவே ஏற்கனவே எழுதப்பட்ட நூல்களை பிரதி எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவற்றை அறிந்தவர்களிடமிருந்து கேட்டே எழுதிக்கொள்ள முடிந்தது’ என்கிறார் அவர். எனவேதான் இந்தப் பணியை அவர் முடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.
(தொடரும்)
இந்த கட்டுரையை முழுவதுமாக படித்தேன் . புதிதாக குமார ஜீவன் பற்றி அறிந்து கொண்டேன் . பாஹியான் இந்திய வருகையின் பொழுது இந்து மதத்தின் நிலை என்ன ?