குப்தர்களின் காலம் பொற்காலம் என்றால் அந்த வம்சத்தின் பொற்காலம் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சி நடந்த காலம் என்று சொல்லலாம். அவருடைய கல்வெட்டுகள் மட்டுமின்றி பாஹியானின் குறிப்புகளும் மக்கள் செல்வச் செழிப்போடும் அமைதியாகவும் வாழ்ந்ததைக் குறிப்பிடுகின்றன. சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் இருந்த கருத்துச் சுதந்தரம் சீனாவில்கூட இல்லை என்கிறார் பாஹியான்.
தன்னுடைய தந்தை அளித்த மாபெரும் சாம்ராஜ்யத்தோடு தாம் வென்ற சில அரசுகளைச் சேர்த்துக்கொள்ள அவருக்குக் குறுகிய காலமே பிடித்ததால், மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் நாட்டின் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார். சகல அதிகாரங்களையும் படைத்தவராக அவர் இருந்தாலும், அரசு நிர்வாகத்தைக் கவனிக்க சிறந்த அமைச்சர்கள் கொண்ட குழுவை அவர் அமைத்திருந்தார். சந்திரகுப்தரின் ஆட்சி இந்து தர்மத்தில் குறிப்பிடப்பட்ட சாஸ்திரங்களின் அடிப்படையில் நடந்தது. தனக்கு அறிவுரை கூற தர்மசாஸ்திரங்களின் வல்ல அமைச்சர்களை அருகிலேயே வைத்திருந்தார்.
மந்திரிகள், மகாதண்டநாயகர் (தலைமை நீதிபதி), மகாசேனாதிபதி, மகாசந்திவிக்ரஹிகா (போருக்கும் அமைதிக்குமான அமைச்சர்), ஆவணக் காப்பாளர் என்று பல நிர்வாகிகள் அவருடைய ஆட்சியில் துணை புரிந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. நிர்வாகம் பல துறைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் தலைமைப் பொறுப்பில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். குப்தர்களின் ஆட்சியில் குடிமைத் துறைப் பணிகளுக்கும் ராணுவப் பதவிகளுக்கும் இடையில் அதிக வேறுபாடுகள் இல்லை என்று பலர் கருதுகின்றனர். இது ஆய்வுக்குரியது. ஆயினும் பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களும் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஒருவருடைய பின்னணி என்ன என்பதைக் கவனிக்காமல் திறமைக்கே முன்னுரிமை அளித்த அரசாக குப்தர்களை நாம் கருதலாம். அவருடைய ஆட்சியில் இருந்த பல்வேறு அதிகாரிகளின் பட்டியலை ஆர். கே. முகர்ஜி பல்வேறு கல்வெட்டுகளிலிருந்தும் நாணயங்களிலிருந்தும் தொகுத்துத் தந்திருக்கிறார். அவை :
⁃ உபரிகர் (மாகாணத்தின் ஆளுநர்)
⁃ குமாராமாத்யாதிகர் (இளவரசர்களின் அமைச்சர்)
⁃ பாலாதிகரணா (ராணுவத் தளபதியின் தலைமை அலுவலர்)
⁃ ரணபந்தாதிகரணா (படைக் கருவூல அதிகாரி)
⁃ தண்டபசதிகரணா (ஊர்க்காவல் படைத்தலைவர்)
⁃ விநயஸ்திதிஸ்தாபகர் (சட்டம் ஒழுங்கைக் கவனிக்கும் அமைச்சர்)
⁃ படஸ்வபதி (காலாள், குதிரைப் படைத் தலைவர்)
⁃ மஹாப்ரதிஹாரா (அரண்மனை அதிகாரி)
⁃ விநயசுரர் (தணிக்கை அதிகாரி)
சில நாணயங்களில் ஸ்ரீபரமபட்டாரகபாதீய என்றும் யுவராஜ பாதீய என்றும் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அரசர், இளவரசர் ஆகியோரின் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் தலைமை அமைச்சர் ஒருவர் இருந்தார் என்பதும் தெரிகிறது. மத்தியில் செயல்பட்ட அதிகாரிகளைத் தவிர மாகாண அளவிலும் பல்வேறு அதிகாரிகள் இருந்து உள்ளூர் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தனர். உதாரணமாக வைசாலி மாவட்டத்தின் அதிகாரி ‘வைசாலி அதிஷ்டான அதிகாரய’ என்று அழைக்கப்பட்டார். உதானகூப நகரின் நிர்வாகம் பரிஷத் என்ற நகரசபையினரால் கவனிக்கப்பட்டது. காகனாடபோதத்தில் உள்ள விஹாரம் ஆர்ய சங்கம் என்ற சபையினராலும் பஞ்ச மண்டலி என்ற ஐந்து பேர் கொண்ட குழுவாலும் நிர்வகிக்கப்பட்டது.
இந்தப் பெயர்களையும் பதவிகளையும் கவனிக்கும்போது, ஒரு சிறந்த கட்டமைப்புக் கொண்ட அதிகாரவர்க்கம் நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்தது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். ஒரு பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டியாள இது போன்ற ஓர் அமைப்பு இருக்கவேண்டியது அவசியம் என்பதும் அப்படி இருந்ததன் காரணமாகவே சந்திரகுப்தரின் ஆட்சி சிறப்பு மிக்கதாக இருந்தது என்பதும் கண்கூடு.
பாரதத்தின் மேற்கிலிருந்து கிழக்கு வரையுள்ள நீண்ட பகுதியை ஆட்சி செய்ததன் காரணமாக இரு புறத்திலும் உள்ள துறைமுகங்களிலிருந்தும் வர்த்தகம் செழிப்பாக நடைபெற்றது. அதனால் பொருளாதாரமும் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் சிறந்து விளங்கியது. பல புதிய நகரங்கள் உருவாகின. பழைய நகரங்கள் புதுப்பொலிவு பெற்றன. உஜ்ஜயினி, தாஸபுரம், மதுரா, பத்மாவதி, பிரயாகை, கௌசாம்பி, வாரணாசி, ஏரன், உதயகிரி போன்ற பல நகரங்களைப் பற்றிய குறிப்புகள் சமகால இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. அந்த நகர்களில் எல்லாம் வானுயர்ந்த கட்டடங்களும், மக்கள் கூட்டம் நிறந்த சந்தைகளும், செல்வச்சீமான்கள் நடமாடும் வீதிகளும் இருந்ததாக பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. உல்லாச விடுதிகளும், அபானகா என்னும் மதுவருந்தும் விடுதிகளும் நகரங்களில் இருந்தன. சமாஜங்கள், உத்யான யாத்திரைகள் ஆகியவை மக்களுடைய வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது. மக்களின் செல்வச் செழிப்பு மிக்க வாழ்க்கைக்கு இவையெல்லாம் உதாரணமாக இருந்தது. இருப்பினும் செல்வத்தைத் தானே அனுபவிக்காமல் அவற்றைத் தானம் செய்யும் குணத்தை மக்கள் கொண்டிருந்தனர் என்பதற்கு அங்கே இருந்த அன்னதானச் சாலைகளும் சத்திரங்களும் எடுத்துக்காட்டாக இருந்தன. இலவச மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு அங்கே கனிவுடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகமங்கள் என்ற பெயருடைய வர்த்தகச் சங்கங்கள் நாட்டில் இருந்தன. அவற்றின் முத்திரைகளிலிருந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு அவை ஆற்றிய பங்கைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. ஸ்ரேஷ்டிகள் என்ற வங்கிகள் (சேட் என்ற வார்த்தை இதிலிருந்துதான் வந்தது), சார்த்தவாகர்கள் என்ற வர்த்தகர்கள், குலிகர்கள் என்ற வணிகர்கள் ஆகியவை முக்கியமான வணிகச் சங்கங்களாகும். தனியாகவோ கூட்டாகவோ இவை முத்திரைகளை வெளியிட்டன. உதாரணமாக ஸ்ரேஷ்டி-சார்த்தவாக-குலிக-நிகம என்று ஒரு முத்திரை காணப்படுகிறது. அந்த முத்திரைகளில் அடையாளமாக கஜானா குறிக்கப்பட்டிருந்தது.
வழிபாட்டு இடங்களோடு இணைந்து செயல்படும்போது இந்தச் சங்கங்கள் வங்கிகளாகவும் அதே சமயம் அறங்காவலர்களாகவும் இருந்தன என்பதற்கு சாஞ்சி விஹாரத்தில் செயல்பட்ட ஆர்ய சங்கம் ஒரு சிறந்த உதாரணமாகும். ஸ்ரீமஹாவிஹாரத்தின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்ட அந்தச் சங்கத்தில் 25 தினாரங்கள் நிரந்தர வைப்பு நிதியாகக் கொடுக்கப்பட்டது. அந்த நிதியிலிருந்து கிடைக்கும் வட்டி தினமும் ஐந்து பிக்ஷுக்களுக்கு உணவளிப்பதற்காகவும் ரத்னக்ருஹத்தின் விளக்கெரிப்பதற்காகவும் செலவிடப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சந்திராத்தர் உள்ளவரை இந்த தர்மம் நிலைத்திருக்கவேண்டும் என்று கல்வெட்டில் இந்த ஏற்பாடு பொறித்துவைக்கப்பட்டிருந்தது. இப்படியாக இந்தச் சங்கம் முதலீட்டை வாங்கி அதைப் பாதுகாக்கும் அறங்காவலராகவும், அதேசமயம் அந்தப் பணத்தைக் கொண்டு வட்டி வசூலித்து அதிலிருந்து விஹாரத்திற்கான செலவீடுகளைச் செய்யும் வங்கியாகவும் இருந்தது.
மக்களோடு தொடர்பு
தந்தை பல இடங்களை வென்றிருந்தாலும் அங்கேயெல்லாம் உள்ள மக்கள் குப்த அரசை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சந்திரகுப்தர் கண்டார். அரசனையும் அரசையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாதவரை பெற்ற வெற்றிகளெல்லாம் தாற்காலிகமே என்பதை உணர்ந்த அவர், மக்களின் மனதைக் கவர்வதில் முனைந்தார். அதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அவர் தாமே பயணம் செய்து மக்களோடு உரையாடினார் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் மக்களின் மனத்தோடு அவர் பேச முடிந்தது. அவர்களின் குறைகளைப் பொறுமையாகக் கேட்டு அவற்றை உடனுக்குடன் களைவதில் முனைப்புக் காட்டினார் சந்திரகுப்தர். காளிதாசர் போன்ற சமகாலக் கவிகளின் காவியங்களில் வரும் அரசர்களின் உதாரணமாக அவர் இருந்தார். அந்தக் காவியங்களில் சொல்லப்படுகின்ற நாட்டு நடப்புகளை வெறும் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. அவை ஓரளவுக்கு குப்தர்களின் அரசில் இருந்த நிலைமையைப் பிரதிபலிப்பதாகவே நாம் கருதலாம்.
அக்கம் பக்கத்து நாடுகளோடு போர் செய்து கைப்பற்றுவதை மட்டுமே குறிக்கோளாக எண்ணாமல் பலமிக்க எதிரிகளோடு மண உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டார் இரண்டாம் சந்திரகுப்தர். அந்த வகையில் ஒரு சிறந்த ராஜதந்திரியாகவும் விளங்கினார். குப்தர்களின் பரம விரோதிகளும் தொடர்ந்து அவர்களோடு பல களம் கண்டவர்களுமான நாகர்களோடு மண உறவை ஏற்படுத்திக்கொண்ட அவர், அந்நாட்டு இளவரசியைத் திருமணம் செய்துகொண்டார். இது வட இந்தியாவில் குப்தர்களின் வலுவை அதிகப்படுத்தியது. போலவே நாகர்களின் சம்பந்தியாக இருந்தவர்களும் ஒரு காலத்தில் சமுத்திரகுப்தரால் தோற்கடிக்கப்பட்டவர்களுமான வாகாடகர்களோடு மண உறவு கொள்வதிலும் சந்திரகுப்தர் ஆர்வம் காட்டினார்.
தக்காணத்தில் வலுவான அரசாக இருந்த வாகாடகர்களின் உறவு இந்தியாவின் தெற்குப் பகுதியிலும் மேற்கிலும் உள்ள அரசுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று அவர் எண்ணினார். அதன் காரணமாக தன்னுடைய மகளான ப்ரபாவதியை வாகாடக இளவரசனான இரண்டாம் ருத்ரசேனனுக்கு அவர் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் ருத்ரசேனன் இளவயதிலேயே இறந்துபடவே, தன்னுடைய சிறிய வயது மகன்களான திவாகரசேனனுக்கும் தாமோதரசேனனுக்கும் காப்பாளராக ப்ரபாவதியே வாகாடர்களின் அரசியாக ஆளத்தொடங்கினார். இது குப்தர்களின் செல்வாக்கை அந்த நாட்டில் அதிகரிக்கச் செய்தது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ப்ரபாவதி அரசுப் பொறுப்பு வகித்தார்.
குடும்பம்
சந்திரகுப்தருக்கு துருவதேவி, குவேரநாகா (குபேரநாகா) என்று இரு மனைவிகள் இருந்தனர். துருவதேவியின் மூலம் அவருக்கு கோவிந்தகுப்தர், குமாரகுப்தர் ஆகிய மகன்கள் பிறந்தனர். மேற்குறிப்பிட்ட ப்ரபாவதி குபேரநாகாவின் மகளாவார். நாட்டின் மேற்குப்பகுதின் ஆளுநராக கோவிந்தகுப்தர் சிறிது காலம் செயல்பட்டார் என்று தெரிகிறது. அங்கே கிடைக்கும் முத்திரைகளில் ‘மகாராஜாதிராஜர் சந்திரகுப்தரின் மனைவியும் மகாராஜா கோவிந்தகுப்தரின் தாயுமான மகாதேவி துருவஸ்வாமினி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அரசில் துருவதேவி மிக முக்கியமான பங்கை வகித்தார் என்பது தெரியவருகிறது.
(தொடரும்)