Skip to content
Home » குப்தப் பேரரசு #20 – இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #20 – இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

தன் தந்தையான சமுத்திரகுப்தரைப் போலவே, இரண்டாம் சந்திரகுப்தரும் பல்வேறு வகையான நாணயங்களை வெளியிட்டார். பேரரசின் பரப்பு அவரது தந்தையின் காலத்தில் இருந்ததைவிட அதிகமாக இருந்ததால் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப வேறுபட்ட நாணயங்களை அவர் வெளியிட நேர்ந்தது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

தங்க நாணயங்கள்

வில்வீரர் வகை

சந்திரகுப்தரின் நாணயங்களில் அதிகமாகக் கிடைப்பது வில்வீரர் வகையாகும். அவரது காலத்தில் குப்தர்கள் ஆட்சி செய்த பகுதி முழுவதும் பரவலாகக் கிடைத்தது இந்த வகை நாணயங்களே. சந்திரகுப்தர் ஒரு பெரும் வில்வீரராக இருந்தார் என்பதை இந்த நாணயங்கள் பறைசாற்றுகின்றன.

இதிலேயே இரண்டு வேறுபாடுகளுடன் கூடிய நாணயங்கள் கிடைக்கின்றன. முதல் பிரிவில், நாணயத்தின் ஒரு பகுதியில் அரசர் நின்றுகொண்டிருக்கிறார். அவரது இடது கரத்தில் வில்லும் வலது கரத்தில் அம்பும் உள்ளது. இடப்புறத்தில் கருடனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அரசருடைய பெயர் ‘தேவஸ்ரீ மகாராஜாதிராஜ ஸ்ரீசந்திரகுப்த’ என்று மேலிருந்து கீழாக எழுதப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மிதேவியின் உருவம் உள்ளது. தேவி ஓர் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவரது கால் தாமரைப் பூவில் வைக்கப்பட்டிருக்கிறது. நாணயத்தின் விளிம்பில் ஸ்ரீவிக்ரம என்று எழுதப்பட்டுள்ளது. சில வகை நாணயங்களில் லக்ஷ்மிதேவியின் கையிலும் தாமரைப் பூ உள்ளது.

இன்னொரு பிரிவில் அரசர் அம்பை எடுப்பது போன்ற தோற்றம் உள்ளது. மறுபுறத்தில் லக்ஷ்மிதேவி தாமரை மலரில் அமர்ந்திருக்கிறார். தாமரைப் பூவைக் கையிலும் வைத்திருக்கிறார். இதுதவிர, இவ்வகை நாணயங்களில் மேலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரசரின் உருவத்திற்கு மேல் பிறை உள்ள நாணயங்களும், சுதர்சன சக்கரம் உள்ள நாணயங்களும் கிடைத்துள்ளன.

லக்ஷ்மிதேவி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நாணயங்கள் குப்தர்கள் ஆட்சிப்பகுதியின் வடக்கிலும் தாமரையில் அமர்ந்திருக்கும் நாணயங்கள் மத்தியிலும் கிழக்கிலும் கிடைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்து இந்த வகை நாணயங்களே அதிகம் புழக்கத்தில் இருந்தன என்பதைப் புரிந்துகொள்ளலாம். வைஷ்ணவ சமயச் சின்னங்களான விஷ்ணு சக்கரம், லக்ஷ்மிதேவி, கருடன் ஆகியவை இந்த நாணயங்களில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசனத்தில் அமர்த்திருக்கும் வகை

இந்த வகை நாணயங்களின் ஒரு புறத்தில் அரசர் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவரது வலது கரத்தில் ஒரு மலர் உள்ளது. இடது கரத்தை ஆசனத்தின் மேல் வைத்திருக்கிறார். இடுப்புவரை ஆடை அணிந்திருக்கிறார் அவர். நாணயத்தின் மறுபக்கதில் சிங்காதனத்தில் லக்ஷ்மிதேவி அமர்ந்திருக்கிறார். அவரது கரத்தில் தாமரை மலர் உள்ளது. அவரது பாதமும் தாமரை மலரின் மேல் உள்ளது. இந்தவகை நாணயங்களில் இன்னொரு பிரிவில் அரசரும் அரசியும் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி பொறிக்கப்பட்டிருக்கிறது. நாணயத்தில் ‘தேவஸ்ரீ(மகாராஜாதிராஜ ஸ்ரீசந்திரகுப்தஸ்ய” என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தில் அதோடு ‘ஸ்ரீ விக்ரமாதித்யஸ்ய’ என்றும் ஆசனத்தின் கீழே ‘ரூபாக்ரதி’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அரிதாகவே இந்த வகை நாணயங்கள் கிடைத்துள்ளன. இதுவரை ஏழு நாணயங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இவை சந்திரகுப்தரின் ஆட்சியின் ஆரம்பகாலத்தில் வெளியிடப்பட்டிருக்கக்கூடும். தன்னுடைய செல்வாக்கை விளக்கும் விதமாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் உருவத்தைப் பொறித்துக்கொண்ட அரசன், அதன் காரணமான லக்ஷ்மிதேவியை மறுபக்கத்தில் பொறித்திருக்கலாம்.

சக்ர விக்கிரம வகை

இதுவரை ஒரே ஒரு நாணயம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ள இந்த வகை நாணயங்கள் தன்னைப் பரமபாகவதனாகவும் பரமவைஷ்ணவனாகவும் அறிவித்துக்கொண்ட சந்திரகுப்தரின் விஷ்ணுபக்தியை வெளிப்படுத்துகின்றன. நாணயத்தின் ஒருபுறம் விஷ்ணுவின் உருவத்தையும் அவரது பின்னால் சுதர்சனச் சக்கரத்தையும் கொண்டுள்ளது. அவர் அரசருக்கு வரங்களை வழங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது நாராயணனிடம் பக்தி கொண்டு அவரிடத்திலிருந்து நேரடியாக வரங்கள் பெற்றவராக சந்திரகுப்தர் தன்னை இதன்மூலம் காட்டிக்கொள்கிறார். நாணயத்தின் மறுபுறத்தில் சக்ரவிக்ரமா என்று எழுதப்பட்டுள்ளது.

குதிரைவீரர் வகை

குப்தர்கள் பரம்பரையில் முதன்முதலாக குதிரைவீரர் வகை நாணயங்களை வெளியிட்டவர் இரண்டாம் சந்திரகுப்தரே ஆவார். அவரது மகன் தொடங்கி அவர் வம்சத்தில் பல அரசர்கள் இந்த வகை நாணயங்களை அதன்பின் வெளியிட்டனர். இந்த வகை நாணயங்களின் ஒருபுறம் அரசர் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றில் சவாரி செய்யும் காட்சி உள்ளது. இடுப்புவரை ஆடை அணிந்திருக்கும் அவர் சில ஆபரணங்களையும் அணிந்திருக்கிறார். சில வகை நாணயங்களில் அவரது கையில் வில் உள்ளது.

மற்ற நாணயங்களில் வாளேந்திய அவரது உருவம் உள்ளது. நாணயத்தின் மறுபுறம் ஆசனத்தில் அமர்ந்த தேவியின் உருவம் உள்ளது. அவரது பின்புறம் இலைகளுடன் கூடிய தாமரை மலர் காணப்படுகிறது. உத்தரப் பிரதேசத்திலும் பயனாவிலும் சுமார் 144 நாணயங்கள் இந்த வகையில் கிடைத்துள்ளன.

சிங்கத்தை வீழ்த்துபவர் வகை

மிகுந்த கலையம்சம் கொண்ட இந்த வகை நாணயங்களின் ஒருபுறத்தில் வில்-அம்பைத் தாங்கிய அரசர் சிங்கத்தோடு சண்டையிடுகிறார். இதிலேயே பல உட்பிரிவுகள் உள்ளன. அதில் அரசர் வேட்டையாடும் காட்சி பல்வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒன்றில் அவர் சிங்கத்தின்மீது அம்பெய்துகிறார். இன்னொன்றில் அந்தச் சிங்கம் பின்னால் விழுகிறது. வேறொன்றில் சிங்கம் திரும்பிச் செல்கிறது, அதன் முதுகில் அரசர் காலை வைத்துத் துரத்துகிறார். மற்றொரு வகை நாணயத்தில் சிங்கம் அவரைத் தாக்க முயல்கிறது. அரசர் அதை வாளால் வீழ்த்துகிறார்.

நாணயத்தின் மறுபக்கத்தில் தேவி சிங்கத்தின் மீது வீற்றிருக்கும் காட்சி உள்ளது. சிம்மவாஹினியாக துர்க்கையே கருதப்படுவதால், இந்த தேவி துர்கையாகவே இருக்கக்கூடும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாகர்களை வென்று மேற்கு இந்தியாவில் சௌராஷ்டிரத்தை குப்தர்கள் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக்கொண்டதன் அடையாளமாக, சௌராஷ்டிரத்தில் அதிகம் காணப்படும் சிங்கத்தை வீழ்த்தியவர் போலச் சித்தரித்து சந்திரகுப்தர் இந்த வகை நாணயங்களை வெளியிட்டிருக்கலாம். இந்த நாணயங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் :

‘நரேந்த்ரசந்த்ரா ப்ரதிதஸ்ரியா திவம்
ஜயத்யஜெயோ புவி சிம்ஹவிக்ரமா’

அரசர்களின் சந்திரனைப் போன்றவனும் எல்லையில்லாப் புகழ் படைத்தவனும் பூமியில் அவனுக்கு இணை இல்லாதவனுமான (அரசன்) சிங்கத்தின் வலிமையைக் கொண்டு விண்ணுலகை வெல்கிறான் என்று இதற்குப் பொருள்.

குடை வகை

சந்திரகுப்தர் வெளியிட்ட மிக வித்தியாசமான நாணயம் இது. இந்த வகை நாணயங்களின் ஒரு பக்கத்தில் குள்ளமான ஒருவர் குடை ஒன்றைத் தாங்கி நிற்கிறார். பக்கத்தில் அரசர் ஒருவர் யாகம் ஒன்றைச் செய்கிறார். மறுபுறம் லக்ஷ்மிதேவி தாமரை மலரைத் தாங்கியபடி நிற்கிறார். இந்த வகை நாணயங்களில் சிலவற்றில் மகாராஜ ஸ்ரீ சந்திரகுப்த என்று எழுதப்பட்டுள்ளது. இன்னும் சிலவகை நாணயங்களில் க்ஷிதிம் அவஜித்ய சுசரிதைர் திவம் ஜயதி விக்ரமாதித்யா, அதாவது மண்ணுலகை வென்ற விக்ரமாதித்தன் தன் நற்செயல்களால் விண்ணுலகையும் வெல்கிறான் என்று பொறிக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் லக்ஷ்மிதேவி தாமரை மலரில் இருந்து எழுவதுபோலச் சித்தரிக்கப்பட்டுள்ளது (பத்மசம்பவ)

வெள்ளி நாணயங்கள்

குப்தர்கள் பரம்பரையில் வெள்ளி நாணயங்களை முதலில் அறிமுகப்படுத்தியவர் இரண்டாம் சந்திரகுப்தரே ஆவார். பாரதத்தின் மேற்குப் பகுதியில் ஆட்சி செய்த சாகர்களை வென்று குஜராத்தையும் மாளவத்தையும் அவர் கைப்பற்றிக்கொண்ட பிறகு வெள்ளி நாணயங்களை அந்தப் பகுதிகளில் வெளியிட்டதாகத் தெரிகிறது. அதன் காரணமாகவே இந்த வகை நாணயங்களில் சாகர்களின் நாணயங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாணயத்தின் ஒருபுறத்தில் மார்பளவு உயரம் உள்ள அரசரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. நாணயத்தின் தேதி பிராமி எழுத்துருவில் உள்ளது.

மறுபுறத்தில் குப்தர்களின் அடையாளங்களான கருடனின் உருவமும் பிறைச்சந்திரனும் காணப்படுகின்றன. எழுத்துக்களால் ‘பரமபாகவத மகாராஜாதிராஜ ஸ்ரீசந்திரகுப்த விக்கிரமாதித்யா’ என்று அந்தப் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாணயங்களில் ‘ஸ்ரீகுப்த குலஸ்ய மகாராஜாதிராஜ ஸ்ரீசந்திரகுப்த விக்ரமாங்கஸ்ய’ என்று எழுதப்பட்டிருக்கிறது. கத்தியாவாரில் புழங்கிய எழுத்துருவகை இவ்வகை நாணயங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தாமிர நாணயங்கள்

சந்திரகுப்தர் வெளியிட்ட தாமிர நாணயங்கள் சமுத்திரகுப்தர் வெளியிட்ட நாணயங்களிலிருந்து மாறுபடுகின்றன.

பொது வகை

பொதுவகை தாமிர நாணயங்களில் ஒரு புறத்தில் அரசரும் மறுபுறத்தில் கருடனின் உருவமும் காணப்படுகிறது. இதில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. சில நாணயங்களில் அரசரின் உருவம் மார்பளவே காணப்படுகிறது. சிலவற்றில் முழு உருவமும், சிலவற்றில் மலர் ஒன்றைத் தாங்கியவராகவும் அரசர் சித்தரிக்கப்பட்டுள்ளார். போலவே கருடனின் உருவமும் சிறகுகள் விரிக்கப்பட்டும் மனிதர்களைப் போன்ற கைகளோடும் அலகில் நாகத்தோடும் பல்வேறு விதமாகக் காணப்படுகின்றது.

குடை வகை

குடை வகை நாணயங்களில் அதே வகை தங்க நாணயத்தில் உள்ளது போலவே அரசர் யாகம் செய்யும் காட்சியும் அருகில் குள்ள வடிமான ஒருவர் குடை ஒன்றைத் தாங்கி நிற்கும் காட்சியும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் கருடனின் உருவம் உள்ளது. சில வகை நாணயங்களில் அரசரின் உருவம் இல்லாமல் கருடனின் உருவம் மட்டுமே உள்ளது. நாணயத்தின் ஒருபுறம் ஸ்ரீசந்திர என்றும் மற்றொருபுறம் குப்த என்றும் எழுதப்பட்டுள்ளது. சிலவற்றில் ஸ்ரீ இல்லாமல் சந்திர என்று மட்டுமே உள்ளது.

பூச்சாடி வகை

குடை வகை நாணயத்தைப் போன்றதே இந்த வகை நாணயமும். கருடனுக்குப் பதிலாக மலர்களோடு கூடிய பூச்சாடி ஒன்று நாணயத்தின் பின்பக்கத்தில் காணப்படுவது மட்டுமே இதிலுள்ள வேறுபாடு. இந்தத் தாமிரநாணயங்கள் அளவில் மிகச் சிறியதாக இருந்தன.

சந்திரகுப்தர் வெளியிட்ட நாணயங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்க்கும்போது, நாணய வெளியீட்டில் ஒரு புரட்சியைச் செய்த அவரது தந்தையான சமுத்திரகுப்தருக்கு ஒரு படி மேலே போய் வெள்ளி நாணயங்களையும் தாமிர நாணயங்களையும் குப்தர்களின் அரசில் அறிமுகம் செய்திருக்கிறார் அவர். மேலும் ரூபாக்ருதி, விக்ரமாதித்யா, விக்ரமாங்க, சிம்ஹவிக்ரம, நரேந்த்ரசந்திரா போன்ற தன்னுடைய பல விருதுப்பெயர்களையும் நாணயத்தில் அச்சடித்திருக்கிறார். விஷ்ணுபக்தியை வெளிப்படுத்தும் விதமாக பரமபாகவத என்றும் நாணயத்தில் அவர் பொறித்திருக்கிறார். எப்படி சமுத்திரகுப்தர் புலியை வீழ்த்தும் நாணயங்களை வெளியிட்டாரோ அதேபோல் சிங்கத்தை வீழ்த்தும் நாணயங்களைச் சந்திரகுப்தர் வெளியிட்டார்.

தந்தைக்கும் மகனுக்கும் வேட்டையில் உள்ள விருப்பத்தை இது காட்டுவது மட்டுமின்றி, புலி உலவும் கங்கைச் சமவெளி வெற்றியைக் கொண்டாட சமுத்திரகுப்தர் புலிவேட்டை நாணயங்களை வெளியிட்டார் என்றால் சிங்கம் உலவும் குஜராத், சௌராஷ்டிரப் பகுதிகளை வென்றதைக் கொண்டாடும் விதத்தில் சந்திரகுப்தர் சிங்கவேட்டை நாணயங்களை வெளியிட்டார். புலி நாணயங்களின் மறுபுறம் கங்கையின் உருவம் இருந்ததென்றால் சிங்க நாணயங்களின் மறுபுறம் சிம்மாவாஹினியான துர்கையின் உருவம் இருந்தது. அது மட்டுமல்லாமல், பலவிதமான சிங்க வேட்டைச் சித்திரங்களைப் பொறித்து கலையம்சம் மிக்கதாக அந்த வகை நாணயங்களை சந்திரகுப்தர் உருவாக்கினார்.

மிக முக்கியாக, பொதுவகை நாணயங்களைத் தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவற்றுக்குரிய சிறப்பு வகை நாணயங்களையும் இரண்டாம் சந்திரகுப்தர் வெளியிட்டிருக்கிறார். தங்க நாணயங்களிலேயே சில மாற்று அதிகமாகவும் சில மாற்று குறைவாகவும் இருப்பதைக் கவனிக்கலாம். அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு இவை அச்சடிக்கப்பட்டிருக்கக்கூடும்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *