Skip to content
Home » குப்தப் பேரரசு #22 – குமாரகுப்தரின் கல்வெட்டுகள்

குப்தப் பேரரசு #22 – குமாரகுப்தரின் கல்வெட்டுகள்

குமாரகுப்த மகேந்திராதித்யர்

குமாரகுப்தரின் ஆட்சிமையைப் பற்றியும் அவரது நிர்வாகத்தின் சில கூறுகளைப் பற்றியும் பார்த்தோம். அவர் காலத்துக் கல்வெட்டுகள் குமாரகுப்தரின் நிர்வாகம் எப்படி நடந்தது, அரசாங்கப் பரிவர்த்தனைகள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பதைப் பற்றியெல்லாம் சுவையான தகவல்களைத் தெரிவிக்கின்றன.  இனி, நில உரிமை எப்படி இருந்தது, நில விற்பனைகள் எவ்வாறு நடந்தன என்பதைப் பற்றிச் சொல்லும் சில கல்வெட்டுகளைப் பார்ப்போம்.

நில விற்பனை

நிலங்கள் அரசின் அனுமதி இல்லாமல் விற்கப்படவோ மாற்றப்படவோ கூடாது என்ற விதி இருந்தது. அரசால் நிலம் அளிக்கப்படும்போது அது பொதுப் பயன்பாட்டிற்காகவோ தர்மச் செயல்களுக்காகவோ மத சம்பந்தமாகவோதான் கொடுக்கப்பட்டது.  அதாவது நீவீதர்மம் என்ற அடிப்படையில் நிலங்கள் வழங்கப்பட்டன.  நீவி என்பதற்கு மூலதனம் என்று பொருள். நிலத்தின் மூலதனம் அப்படியே மாற்றப்படாமல் இருக்கவேண்டும். நிலத்திலிருந்து வரும் வருவாயை அதன் உரிமையாளர் அனுபவித்துக்கொள்ளலாமே தவிர, அதை விற்று லாபம் அடைய அவருக்கு உரிமையில்லை. ஆகவே நிலத்தை கைமாற்றுவதோ அதைத் தனியாருக்கு விற்பதோ தடை செய்யபட்டிருந்தது. அரசு அனுமதி பெற்ற பின்னரே நிலங்களை விற்கவோ உரிமையை மாற்றவோ இயலும். ஒவ்வொரு ஊரிலும் நிலங்களைப் பற்றிய ஆவணங்கள் புஸ்தபாலர்கள் என்ற குழுவிடம் இருக்கும். ஏறக்குறைய மூன்று பேர் புஸ்தபாலர்களாக இருந்தனர்.

ஒரு நிலத்தை வாங்கவோ விற்கவோ வேண்டுமானால் புஸ்தபாலர்களிடம் விண்ணப்பம் செய்யவேண்டும். அதற்கான காரணங்களும் விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும். உதாரணமாக,

  • நீவீதர்மத்தின் அடிப்படையில்தான் இந்தப் பரிமாற்றம் நிகழ்கிறது. விற்கப்படும் நிலம் அக்னிஹோத்திரத்திற்கு அல்லது பஞ்சமஹாயஞ்யத்திற்குப் பயன்படுத்தப்படும். போலவே நிலத்தை விற்பவர் பின்வரும் உறுதிமொழிகளையும் விண்ணப்பத்தில் அளிக்கவேண்டும்.
  • இந்த நிலம் இன்னும் உழப்படவில்லை எவருக்கும் விற்பனை செய்யப்படவும் இல்லை.
  • கிராமத்தில் நிலவும் விலையை அடிப்படையாகக் கொண்டே நிலத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அந்தச் செய்தியை கிராமத்தில் உள்ள மூத்தோர்களிடமும் அஷ்டகுலாதிகரணர்கள் என்ற கிராம அதிகாரிகளிடமும் கிராமத் தலைவர்களாக இருந்த க்ராமிகர்களிடமும் குடும்பினர்கள் என்ற கிராமப் பிரதிநிதிகளிடமும் கொடுத்துப் பரிசீலனைச் செய்யச் சொல்வார்கள். இதில் அஷ்டகுலாதிகரணர்கள் என்பவர்கள் எட்டு வீடுகளுக்கு ஒருவர் என்ற கணக்கில் இருந்த அதிகாரிகள். இப்படி நான்கு விதமானோர் அந்த நிலப் பரிமாற்றத்தைப் பரிசீலனை செய்து அதை அந்தக் கிராமத்தில் உள்ள அந்தணர்கள், முக்கியமான குடிமக்கள் ஆகியோரிடம் தெரிவிப்பார்கள். அதன்பின் அந்த நிலம் மேற்குறிப்பிட்ட கிராம அதிகாரிகளாலும் முக்கியக் குடிமக்களாலும் பரிசீலிக்கப்படும். அந்தப் பரிசீலனையின் முடிவை அவர்கள் புஸ்தபாலர்களிடம் தெரிவிப்பார்கள். அந்த முடிவு பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

  • நிலத்தை விற்கலாம்.
  • விண்ணப்பம் சரியாக உள்ளது. நிலப்பரிமாற்றத்தின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன.

மேலே உள்ள முடிவுகளில் ஒன்றாக அதிகாரிகளின் பரிந்துரை இருக்கும் பட்சத்தில் நிலப்பரிமாற்றம் அனுமதிக்கப்படும். அந்த நிலத்தின் மீதான விற்பனைத் தடை தாற்காலிகமாக முறைப்படி விலக்கிக்கொள்ளப்படும். கிராமத்தில் உள்ள மூத்தோர்கள் மீண்டும் ஒருமுறை விற்கப்படும் நிலத்தைச் சரியாக அளந்து மற்ற நிலங்களிலிருந்து எல்லைகள் வகுத்து அதைப் பிரித்து வைப்பார்கள். இரண்டு கலப்பைகளால் உழக்கூடிய நிலத்தின் அளவிற்கு குல்ய என்று பெயர். ஒரு குல்ய நிலத்திற்கு இத்தனை என்ற அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டது.

குப்தர்கள் ஆண்டு 120ஐச் சேர்ந்த போக்ரா செப்பேடுகள் மேலே கண்டபடி நிலப் பரிவர்த்தனைகள் நடந்தன என்பதற்குச் சான்றாக இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்த இடம் அப்போது புண்டரவர்தன மாகாணம் என்று அழைக்கப்பட்டது. அதன் தலைநகராக புண்டரவர்த்தன நகரே இருந்தது. நான்கு வேதங்களிலும் தேர்ச்சி கொண்ட மூன்று அந்தணர்களுக்கு விடப்பட்ட நிலக்கொடையைப் பற்றி இந்தச் செப்பேடு பேசுகிறது. குலிகர்கள், காயஸ்தர்கள், புஸ்தபாலர்கள், குடும்பின்கள் போன்ற அதிகாரிகள் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர். நிலம் விற்பதற்கான நிபந்தனைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது நிலம் வேளாண்மை செய்யப்படாத நிலமாக இருந்தது, அந்த நிலக்கொடை காலவரையின்றி தரப்பட்ட ஒன்று, அது பொது உபயோகத்திற்காகவும் மத சம்பந்தமான விஷயத்திற்காகவும் தரப்பட்டது, அந்தப் பகுதியில் நிலவிய விலையே அந்த நிலத்திற்குத் தரப்பட்டது போன்ற தகவல்களைத் தருகிறது. குறிப்பிடத்தக்க விஷயமாக, கொடையளிக்கப்பட்ட நிலம் ஒரே பகுதியில் இல்லாமல் மூன்று கிராமங்களில் துண்டுத் துண்டாக இருந்தது என்ற தகவலும் அந்தச் செப்பேட்டில் தரப்பட்டுள்ளது.

இதைப் போலவே குமாரகுப்தர் காலத்தைச் சேர்ந்த இன்னொரு செப்பேடு பைக்ராம் என்ற இடத்தைச் சேர்ந்தது. குப்தர்கள் காலம் 128ஐச் சேர்ந்த இந்தச் செப்பேடு தரும் சில சுவையான தகவல்கள் பின்வருமாறு.

அந்தப் பகுதியில் இருந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த (வாஸ்தவ்ய குடும்பி) சகோதரர்களான பொயிலா, பாஸ்கரா ஆகிய இருவரும் கோவிந்தசாமியின் கோவிலுக்கு நிலக்கொடை அளிக்க விரும்பினர். அவரது தகப்பனார்தான் அந்தக் கோவிலைக் கட்டியவர். ஆனால் அதற்கு வருமானம் இல்லாத காரணத்தால் இந்த நிலக்கொடையைச் செய்ய அவர்கள் தீர்மானித்தனர். அந்த நிலத்திலிருந்து வரும் வருமானத்தை வைத்து கோவிலைச் செப்பனிட்டுத் திருப்பணி செய்யவும் தினப்படி பூஜைக்கான சந்தனம், தூபம், தீபம் ஆகியவற்றிற்கான செலவினங்களைச் செய்யவும் அவர்கள் தீர்மானித்தனர்.

இந்த நிலத்தை வாங்குவதற்கான விண்ணப்பம் குலவ்ருத்தி என்ற பெயருடைய மாவட்ட அதிகாரியிடம் செய்யப்பட்டது. அவர் குமாராமத்யர் என்றும் குறிப்பிடப்படுவதால், மைய அரசிலும் அவர் பதவி வகித்தார் என்று தெரிகிறது. மூன்று குல்ய நிலத்தை வாங்கச் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தில் பின்வரும் நிபந்தனைகள் கூறப்பட்டிருந்தன.

  • நிலம் தரிசு நிலமாக இருக்கவேண்டும்.
  • அரசுக்கு எந்தவித வாடகையோ வரியோ செலுத்தாத நிலமாக இருக்கவேண்டும் (சமுதாயபாஹ்ய).
  • செடி, கொடிகள் இல்லாமல் இருக்கவேண்டும் (அஸ்தம்ப).
  • வில்லங்கம் ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும்.

மேற்கண்ட விண்ணப்பம் இருவர் கொண்ட புஸ்தபாலர்களின் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதைப் பரிசீலனை செய்த அவர்கள் அரசு நிலங்கள் சிலவற்றை மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விற்கச் சம்மதம் தெரிவித்தனர். அத்தோடு அரசருக்கு நிதி இழப்பு ஏதும் ஏற்படாமலும் அதே சமயம் லாபம் எதுவும் இந்தப் பரிவர்த்தனையால் கிடைக்காமல் இருக்குமாறும் நிபந்தனைகளைச் சேர்ந்தனர். ஆறு தினாரங்கள் விலை கொடுக்கப்பட்டு இந்த மூன்று குல்ய நிலம் வாங்கப்பட்டது.

கோவில்களைப் பற்றிய கல்வெட்டுகள் – பில்சர் கல்வெட்டு

உத்தரப்பிரதேசத்தின் எடாவுக்கு அருகில் உள்ள இடம் பில்சர் (பில்சர் பட்டி). அங்கே ஆய்வாளர் கன்னிங்ஹாமால் இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. சமஸ்கிருத மொழியில் உள்ள இந்தக் கல்வெட்டு குமாரகுப்தரின் காலத்தைச் சார்ந்ததாக அறியப்படுகிறது. துருவசர்மன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வெட்டில் ஸ்வாமி மகாசேனர் என்ற பெயரில் கார்த்திகேயக் கடவுளுக்கு அங்கே இருந்த கோவிலில் படிகளோடு வாயில் ஒன்றை அவர் அமைத்ததாகவும் அன்னதானக் கூடம் ஒன்றைக் கட்டியதாகவும் இதையெல்லாம் தெரிவிக்கும் வகையில் கல்வெட்டுகளோடு கூடிய தூண் ஒன்றை அவர் எழுப்பிதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்தர்களின் வம்சாவளியோடு இந்தக் கல்வெட்டு ஆரம்பிக்கிறது. ஸ்ரீகுப்தர், கடோத்கஜகுப்தர், முதலாம் சந்திரகுப்தர், அவருக்கும் குமாரதேவிக்கும் பிறந்த சமுத்திரகுப்தர், சமுத்தரகுப்தருக்கும் தத்ததேவிக்கும் பிறந்த இரண்டாம் சந்திரகுப்தர், அவருக்கும் துருவதேவிக்கும் பிறந்த குமாரகுப்தர் என்று அனைத்து அரசர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அப்படிப்பட்ட ‘குமாரகுப்தரின் வெற்றி நிரம்பிய ஆட்சிக்காலத்தின் போது’, பிரஹ்மண்யர் என்று அழைக்கப்படுபவரும் – ‘ப்ரஹ்மண்ய தேவஸ்ய’, மூவுலகின் ஒளியும் நிரம்பிய ஸ்வாமி மகாசேனரின் கோவிலில் ‘த்ரிலோக்ய தேஜஸ் ஸம்பார ஸ்வாமி மஹாசேனஸ்யாயதனே’ க்ருதயுகத்தின் நியதிகளைப் பின்பற்றுபவனும் உண்மையான மதத்தைப் பின்பற்றுபவனுமான த்ருவசர்மன், முத்துமாலையைப் போன்ற படிக்கட்டுகளுடன் கூடியதும் நவரத்தினங்களைப் போல ஒளிவீசக்கூடியதுமான தோரணவாயில் ஒன்றையும் நல்ல குணத்தோடு கூடியவர்கள் உணவருந்தக்கூடிய அன்னதானக் கூடம் ஒன்றையும் அமைத்தான். இந்த நீண்ட தூணைக் கட்டிய த்ருவசர்மன் அதில் இந்தச் செய்திகளைப் பொறித்துவைத்தான்.

இந்தக் கல்வெட்டில் இருந்து கார்த்திகேயரான முருகக் கடவுளின் வழிபாடு வட இந்தியாவில் செழித்து இருந்தது என்று அறிந்து கொள்ளலாம். அவருடைய பெயர்களான மகாசேனர், ப்ரஹ்மண்யர் போன்றவை கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். குமரக் கடவுளின் பெயரையே தன்னுடைய பெயராகக் கொண்ட குமாரகுப்தன் தன் மகனுக்கும் ஸ்கந்த குப்தன் என்ற பெயரை வைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

கர்மதண்டா சிவலிங்கம்

கர்மதண்டாவில் உள்ள சிவலிங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டு அதை வழிபடுவதற்கு குமாரகுப்தரின் அமைச்சரான ப்ருத்விசேனன் நிவந்தங்களை அளித்தது பற்றிக் குறிப்பிடுகிறது. அந்தச் சிவலிங்கத்திலேயே பொறிக்கப்பட்டுள்ள இதில் பிராமண குலத்தைச் சேர்ந்த ப்ருத்விசேனனின் வம்சவாளி குறிப்பிடப்பட்டுள்ளது. அஸ்வ, வாஜின் கோத்திரங்களைச் சேர்ந்தவர்களுடைய வம்சத்தில் அவன் பிறந்ததாகவும் அவனுடைய தந்தை சந்திரகுப்தரின் குமாராமாத்யராக இருந்த சிகரஸ்வாமி என்றும் அது தெரிவிக்கிறது.

கர்மதண்டா சிவலிங்கம்
கர்மதண்டா சிவலிங்கம்

அந்த நிவந்தம் மகாதேவ சைலேஸ்வரரை வழிபடும் அந்தணர்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாகவும் தவத்திலும் ‘ஸ்வாத்யாயத்திலும்’ சிறந்தவர்களாகவும் ‘மந்த்ர, சூத்ர, பாஷ்ய, ப்ரவசனங்களில்’ திறமை படைத்தவர்களாகவும் இருந்தனர் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தேவத்ரோணி என்ற விழாவின்போது சிவபெருமானின் உருவச்சிலை ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது என்றும் அந்தக் கல்வெட்டில் குறிப்பு உண்டு. இந்தக் கல்வெட்டின் ஆண்டு பொயு 436 ஆகும்

போலவே மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாண்டசோரில் குமாரகுப்தரைப் பற்றிக் குறிப்பிடும் இன்னொரு கல்வெட்டு உள்ளது. மாளவ வருடம் 529 (பொயு 472) ஐச் சேர்ந்ததாக இது இருந்தாலும் குமாரகுப்தரின் காலத்தில் சூரியனுக்கு (தீப்த ரஸ்மி) கோவில் ஒன்று எழுப்பப்பட்டதாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. லதா விஷயம் என்று அழைக்கப்பட்ட மேற்கு மாளவத்திலிருந்து தாசபுரத்தில் (மாண்டசோர்) குடியேறிய பட்டு நூல் நெசவாளர்களின் வணிகச் சங்கம் ஒன்று இந்தக் கோவிலைக் கட்டியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. அங்கே ஆட்சி செய்த அரசர்களான விஸ்வவர்ம ந்ருபன் அவருடைய மகனான பந்துவர்ம ந்ருபன் ஆகியோரால் கவரப்பட்டு அங்கேயே தங்க முடிவுசெய்தனர் என்றும் தாங்கள் வழிபட பொயு 436ல் சூரியனுக்குக் கோவில் ஒன்றை எழுப்பினர் என்றும் கல்வெட்டு குறிக்கிறது. இங்க குறிப்பிடப்பட்ட ந்ருப அரசர்கள் அந்தப் பகுதியின் ஆளுநர்களாக இருந்திருக்கக் கூடும்.

கங்காதரரில் உள்ள குமாரகுப்தர் காலக் கல்வெட்டு ஒன்று அங்கே விஷ்ணுவிற்கும் சக்திக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் குடிநீருக்காக கிணறு ஒன்று அங்கே வெட்டப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.

இப்படி இந்து சமயத்தின் பல கடவுளர்களுக்கும் கோவில் எழுப்பி வழிபாடுகளைச் செய்த குமாரகுப்தரின் காலத்தில்,  மற்ற சமயங்களையும் அவர் அன்போடு நடத்தினார் என்பதற்குச் சான்றாக உள்ளது அலகாபாத்திற்கு அருகில் உள்ள மன்குவார் என்ற இடத்தில் இருக்கும் புத்தமதக் கல்வெட்டு ஒன்று. புத்தரின் சிலையின் கீழ் வடிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு  குமாரகுப்தரின் காலத்தில் நூற்று இருபத்து ஒன்பதாம் ஆண்டு ஜேஷ்ட மாதம் பத்தாம் நாள், சுத்தமான அறிவை அடைந்தவரும் முறியடிக்க முடியாத கொள்கையைக் கொண்டவருமான (புத்தருடைய) சிலையை உலகின் துன்பங்களைப் போக்குவதற்காக புத்தமித்திரர் என்ற பிக்ஷு பிரதிஷ்டை செய்தார் என்று குறிப்பிடுகிறது.

மன்குவார் புத்தர் –  Photo: Joseph David Beglar c. 1870s – ASI

இதைப் போலவே உதயகிரியில் உள்ள பொயு 425ம் ஆண்டுக் கல்வெட்டு குப்த அரசர்களின் நன்மைக்காக சங்கரர் என்பவர் ஜைன தீர்த்தங்கரர் பார்ஸ்வநாதருக்கு சிலை எழுப்பி வழிபாடுகள் செய்ததாகக் குறிப்பிடுகிறது. பொயு 432ஐச் சேர்ந்த மதுராக் கல்வெட்டு அங்கே ஜைன தீர்த்தங்கரர்களுக்கு சிலை எழுப்பப்பட்டதைப் பற்றித் தெரிவிக்கிறது.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *