பாரதத்தில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக உருவெடுத்த குப்தர்களின் அரசை அந்த நிலைக்குக் கொண்டுவந்த மும்மூர்த்திகளான சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர் ஆகிய மூவரும் ஒவ்வொரு வகையில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். சமுத்திரகுப்தரைப் பொருத்தவரை கங்கைச் சமவெளியின் ஓரத்தில் சிறியதாக இருந்த அரசை அவரது வாளின் வலிமையினால் வட இந்தியா முழுவதிலும் பரவச் செய்தார். நேரடியாகவே களத்தில் இறங்கி இந்தச் சாதனையை அவர் செய்தது இந்திய சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கிட்டத்தட்ட நாடு முழுவதிலும் திக்விஜயம் செய்து தன் வலிமையைப் பறைசாற்றினாலும், தான் வென்ற அத்தனை பகுதிகளையும் தன்னுடைய நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவராமல் மிகவும் சாதுரியமாக அவர் செயல்பட்டார். போலவே அவரது நேரடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசுகளை ஆண்ட வம்சங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட அழிந்தே போயின என்பதையும் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட எதிரிகளே இல்லாத ஓர் அரசை அவர் தன் மகனான (இரண்டாம்) சந்திரகுப்தருக்கு விட்டுச் சென்றார்.
இரண்டாம் சந்திரகுப்தரும் பெரும் வீரர் என்பதில் எந்தச் சந்தேகமில்லை. அவரது தகப்பனின் மறைவைப் பயன்படுத்திக்கொண்டு தலைதூக்க முயன்ற சாகர்களான மேற்கு க்ஷத்திரபர்களை முறியடித்து அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளைத் தன்னுடைய அரசோடு மொத்தமாக இணைத்துக்கொண்டார். போலவே, வடமேற்கு இந்தியாவில் சிக்கல்கள் தலைதூக்கியபோது அங்கேயும் படையோடு சென்று மிலேச்சர்களை வென்று தன் வலிமையை அவர் நிலைநாட்டினார். இந்த இரண்டு பெரிய போர்களைத் தவிர அவரது ஆட்சி பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தைக் கலையையும் இலக்கியத்தையும் வளர்ப்பதற்கு அவர் பயன்படுத்திக்கொண்டார். குப்தர்களின் ஆட்சி அவர் காலத்தில் மிகச் செழிப்பாக இருந்ததற்கு அப்போது நிலவிய அமைதியே முழுமுதற்காரணம்.
சந்திரகுப்த விக்கிரமாதித்தரின் மகனான முதலாம் குமாரகுப்தரை எடுத்துக்கொண்டால், சமுத்திரகுப்தருக்கும் சந்திரகுப்தருக்கும் கிடைத்த புகழைப் போல அவருக்கு அதிகமான புகழ் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இத்தனைக்கும் அவரது பங்களிப்பு மற்ற இருவரின் பங்களிப்பிற்குச் சிறிதும் சளைத்ததல்ல. குப்தர்களின் நிர்வாகக் கட்டமைப்பை மிகச் சிறந்ததாக ஆக்கியவர் குமாரகுப்தர்.
அவரது ஆட்சியின் பெரும்பகுதி போர்கள் இல்லாமலே நடைபெற்ற காரணத்தாலும் பெரும் பேரரசு ஒன்றை அவர் கட்டிக்காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் நிர்வாகத்தில் அவர் கவனம் செலுத்த நேரிட்டது. அதற்காக அவரது வீரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. அஸ்வமேத யாகம் ஒன்றைச் செய்வது அக்காலத்தில் சாதாரண விஷயமல்ல. சாஸ்திர விரோதமாக அப்படிப்பட்ட யாகங்களை அரசர்களாக இருந்தாலும் செய்யமுடியாது. ஆகவே அவர் பெரும் வீரராகவும் இருந்திருக்கவேண்டும் என்பது தெளிவு. நிர்வாகத்தைப் பொருத்தவரை அதிகாரங்கள் பரவலாக பகிர்ந்தளிக்கப்பட்டு மிகச் சிறந்த இரண்டாம் கட்டத் தலைவர்களால் அவரது அரசு நிர்வகிக்கப்பட்டது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தகவல் தொடர்பு எளிதாக இல்லாத காலகட்டத்தில் ஒரு பெரும் பரப்பளவு கொண்ட அரசை அமைதியாக நடத்திச் சென்றது அவருடைய நிர்வாகத் திறனுக்குச் சான்றாக உள்ளது.
போர்களையும் நிர்வாகத்தையும் தவிர்த்துப் பார்த்தால், குமாரகுப்தரின் ஆகச் சிறந்த செயலாகப் பெரும் பல்கலைக் கழகமான நாலந்தா பல்கலையை அவர் உருவாக்கியதைச் சொல்லலாம். பாஹியான் இந்தியாவிற்கு வந்தபோது அவர் நாலந்தாவிற்குச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு பல்கலைக்கழகம் ஒன்று இருந்ததாக அவர் குறிப்பிடவில்லை. ஆகவே அவருக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தப் பல்கலை கட்டப்பட்டிருக்கும் என்பது தெளிவு. அங்கே கிடைத்த முத்திரை ஒன்று சக்ராதித்யர் என்ற அரசரால் நாலந்தா பல்கலை ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. அதோடு அங்கே புத்தமடாலயம் ஒன்றை நிறுவுவதற்கும் அவர் நிவந்தங்கள் அளித்திருக்கிறார்.
சக்ராதித்யர் என்பது முதலாம் குமாரகுப்தரின் மற்றொரு பெயர். அதை வைத்தும், அங்கே கிடைத்த குமாரகுப்தரின் நாணயங்களை வைத்தும் நாலந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் முதலாம் குமாரகுப்தர் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் மிகப் பெரும் புகழைப் பெற்று உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து கல்வியாளர்களை ஈர்த்த நாலந்தாவை நிறுவி பெரும் கீர்த்தியை அடைந்தவர் முதலாம் குமாரகுப்தர்.
பொயு 415-16 ஆண்டு வாக்கில் அரசுக் கட்டிலில் ஏறிய குமாரகுப்தர் பொயு 455 வரை, கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலம் தன் அரசை திறம்பட நடத்திச் சென்றார். பரப்பளவிலும் சரி, கலை, இலக்கியம், நிர்வாகம் ஆகியவற்றிலும் சரி, குப்தப் பேரரசு உச்சத்தைத் தொட்டிருந்தது. ஆனால், அவரது ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் பேரரசுக்குச் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. வெளிப்பகைகளோடு உட்பகையும் சேர்ந்து கொண்டு குப்தர்களுக்குத் தொல்லைகள் தர ஆரம்பித்தன.
குமாரகுப்தருக்கு மூன்று மகன்கள் இருந்ததாகக் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது. குப்த அரசர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருப்பதும் அவர்கள் அரியணைக்குப் போட்டியிடுவதும் புதிதான விஷயம் அல்ல. முதலாம் சந்திரகுப்தரின் காலத்திலிருந்தே இந்தப் பிரச்சனை இருந்து வந்ததைப் பார்த்தோம். ஆனால் தனக்கு அடுத்து அரியணைக்குத் தகுதியுள்ளவர் யார் என்பதை அரசர்கள் அறிவித்துவிடும் நடைமுறை சுலபமான தீர்வாக இருந்தது. தனக்கு அடுத்தபடியாக ‘பூவுலகை ஆளத் தகுதியானவர்’ என்று சமுத்திரகுப்தரைத் தன்னுடைய சபையிலேயே வைத்து முதலாம் சந்திரகுப்தர் சுட்டிக்காட்டினார். சமுத்திரகுப்தரும் அப்படியே இரண்டாம் சந்திரகுப்தரைத் தன்னுடைய வாரிசாக அடையாளம் காட்டினார்.
குமாரகுப்தரின் அரசுரிமையைப் பொருத்தவரை அம்மாதிரிச் சிக்கல்கள் எதுவும் எழவில்லை என்பதைப் பார்த்தோம். ஆனால் அவர் தன்னுடைய மகன்களான கடோத்கஜ குப்தர், பூரகுப்தர், ஸ்கந்த குப்தர் ஆகிய மூவரில், தனது அடுத்த வாரிசாக யாரைத் தேர்ந்தெடுத்தார் என்பது தெளிவாக இல்லை. அரசிகளை அடிப்படையாகக் கொண்டு இதைப் பற்றி ஆராயலாம் என்று பார்த்தால், முதலாம் சந்திரகுப்தரின் மனைவியான குமாரதேவியும், சமுத்திரகுப்தரின் மனைவியான தத்ததேவியும் இரண்டாம் சந்திரகுப்தரின் மனைவியான துருவதேவியும் பட்டமகிஷிகளாக இருந்தவர்கள். ஆகவே அவர்களுடைய மகன்கள் அடுத்த அரசர்களாக வருவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் குமாரகுப்தரைப் பொருத்தவரை அவரது பட்டமகிஷி யார் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. குப்தர்களின் வரலாற்றை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சிக்கலைப் பலவிதமாகப் புரிந்துகொண்டு தங்களுடைய முடிவுகளை முன்வைக்கின்றனர்.
குமாரகுப்தர் வெளியிட்ட பிரதாப (பின்பக்கம் அப்ரதிக என்று எழுதப்பட்ட) வகை நாணயங்களில் குமாரகுப்தரும் அவரது இருபுறம் அரசிகள் இருக்கும் உருவமும் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம்.
அதில் குமாரகுப்தர் உடலில் ஆபரணங்கள் ஏதுமில்லாமல் வெறும் அரையாடையை மட்டும் அணிந்துகொண்டிருக்கிறார். அவரது கரங்கள் இடுப்போடு குவிக்கப்பட்டிருக்கின்றன. அவரது இடதுபுறம் உள்ள பெண் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாரோ என்று தோன்றும்படி கைகளை உயர்த்திய வண்ணம் உள்ளார். இதையெல்லாம் வைத்து குமாரகுப்தர் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்ததையே இந்த வகை நாணயங்கள் குறிப்பிடுகின்றன என்றும் அதைத் தடுக்க அரசி முயல்கிறார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே, குமாரகுப்தர் தனது ஆட்சியின் இறுதிப்பகுதியில் துறவறம் மேற்கொண்டார் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். ராஜ்யபாரத்தின் மீதுள்ள வெறுப்பினால் அவர் துறவு மேற்கொண்டாரா அல்லது தன் மகன்கள் வாரிசுரிமைக்காகச் சண்டையிட்டுக்கொள்வதைக் கண்டு வெறுப்படைந்து துறவு கொள்ளத் தீர்மானித்தாரா என்பது கேள்விக்குறி.
குமாரகுப்தர் துறவுபூண்டார் என்பதற்கு மேலும் சான்றளிப்பது கதாசரித்சாகரம் என்ற கதைப் புத்தகமும் சந்திரகர்ப்ப பரிப்ரிச்சா என்ற புத்தமத நூலும்தான். கதாசரித்சாகரத்தில் மகேந்திராதித்தன் என்ற அரசன் தன்னுடைய மகனான விக்கிரமாதித்தனை அடுத்த வாரிசாக அறிவித்துவிட்டு காசிக்குச் சென்றுவிடுகிறான், விக்கிரமாதித்தன் மிலேச்சர்களைத் தோற்கடித்துத் துரத்திவிடுகிறான் என்று கூறப்பட்டுள்ளது. மகேந்திராதித்தன் என்பது குமாரகுப்தரின் பெயர், விக்கிரமாதித்தன் என்பது ஸ்கந்தகுப்தரின் அடைமொழிகளில் ஒன்று. இந்தத் தகவல்களைக் கொண்டு குமாரகுப்தர் துறவு மேற்கொண்டு காசிக்குச் சென்றார் என்பதை உறுதிசெய்கின்றனர் சில ஆய்வாளர்கள்.
சந்திரகர்ப்ப பரிப்ரிச்சா என்ற நூல் மகேந்திரசேனன் என்ற அரசன், யவனர்களையும் பால்ஹிகர்களையும் வென்ற தன்னுடைய மகனான துப்ரசஹஹஸ்தனுக்கு முடிசூட்டிவிட்டு ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ளுகிறான் என்று குறிப்பிடுகிறது. இதிலுள்ள மகேந்திரசேனன் குமாரகுப்தரையும் துப்ரஹஹஸ்தன் ஸ்கந்தகுப்தனையும் குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கண்ட நூல்கள் குமாரகுப்தர் துறவு பூண்டதைத் தெரிவித்தாலும் அவர் அதற்காக அரச பதவியிலிருந்து முற்றிலும் விலகவில்லை என்பதே பல்வேறு சான்றுகளால் தெரியவரும் உண்மையாகும்.
அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்
வாரிசுரிமையினால் ஏற்பட்ட சிக்கல்கள் ஒருபுறமிருக்க, வெளியிலிருந்தும் குப்தர்களுக்குப் பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. ‘குப்தகுல வ்யோமசசி’ – அதாவது குப்தர்கள் குலத்தின் சந்திரன் என்று அழைக்கப்பட்ட குமாரகுப்தரை மேகங்கள் மறைக்கத் தொடங்கின. அப்படி வெளியிலிருந்து வந்த பகைவர்களை முறியடிக்க குமாரகுப்தர் தன் மகனான ஸ்கந்தகுப்தரை நியமித்தார். இதிலிருந்து தன் மகன்களில் சிறந்தவராகவும் வீரமிக்கவராகவும் ஸ்கந்தகுப்தரையே குமாரகுப்தர் கருதினார் என்பது தெரிகிறது. பகைவர்களோடு மோதி ஸ்கந்தகுப்தர் பெற்ற வெற்றிகளைப் பற்றி அவரது இரு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
பிடரி என்ற இடத்திலுள்ள ஒரு கல்தூணில் ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் எதிரிகள் வெற்றிப்பாதையில் செல்லத் தொடங்கினர். குப்தர்களின் ‘குல லக்ஷ்மி’ ஆட்டம் காணத் தொடங்கினாள் (விசலித) என்று கல்வெட்டு ஒன்று இந்தக் காலகட்டத்தைக் குறிப்பிடுகிறது. அப்படி ஆட்டம் காணத் தொடங்கிய குலத்தை ஸ்கந்தகுப்தர் நிலைநிறுத்தினார் (ஸ்தம்பநாய உத்யதேன) என்றும் அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் ‘தன்னுடைய குலத்திற்கு நேர்ந்த அபகீர்த்திகளை அழித்து அதன் மேன்மையை நிலைநிறுத்தி, மிகுந்த வலிமையும் செல்வத்தையும் (சமுத்திதபலகோஷான்) கொண்ட புஷ்யமித்திரர்களை வென்று திரும்பிய ஸ்கந்தகுப்தனின் புகழ் குழந்தைகள் உட்பட அனைவராலும் பாடப்பட்டது. வெற்றியோடு (அவன்) நாடு திரும்பியபோது அவன் தந்தை விண்ணுலகை அடைந்துவிட்டார் (பிதரி திவம் உபேதே). ‘வெற்றி அடைந்துவிட்டோம்’ என்ற மகிழ்வோடு அவன் தன் தாயைத் தழுவிகொண்டபோது அவன் அன்னையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அது தன்னுடைய எதிரிகளை வென்ற பிறகு தன் தாயை நமஸ்கரித்த கிருஷ்ணனைக் கண்டதுபோல இருந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் செய்திகள்:
- குமாரகுப்தரின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் குப்தர்களுக்குச் சில பின்னடைவுகள் நேர்ந்திருக்கின்றன. குப்தர்களுக்கு நேர்ந்த அபகீர்த்தியைப் பற்றி மூன்று முறை அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- பிரச்சனை புஷ்யமித்திரர்களிடம் இருந்து வந்திருக்கிறது. அவர்கள் வலிமையும் செல்வமும் உள்ளவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.
- அதைச் சரிசெய்ய ஸ்கந்தகுப்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார். போரின்போது ‘வெறும் தரையில் ஓர் இரவை அவர் கழிக்க நேர்ந்ததாக’ கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- புஷ்யமித்திரர்களை வென்று ஸ்கந்தகுப்தர் திரும்பியபோது, குமாரகுப்தர் விண்ணுலகை அடைந்துவிட்டார்
தந்தையினால் குப்தர்கள் குலத்தின் செல்வாக்கை மீட்டெடுக்க ஸ்கந்தகுப்தர் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், அவர் அந்த முயற்சியில் வெற்றியடைந்ததாலும் (குப்தவம்ஸைகவீர) அரசை அடைய அவருக்கு அதிக சிரமம் இருந்திருக்காது. ஜூனகத்தில் உள்ள அவரது இன்னொரு கல்வெட்டு ‘ராஜ்யலக்ஷ்மி தன்னுடைய மணாளனாக அவரை வரித்ததாகவும் அரசரின் மற்ற மகன்களை அவள் நிராகரித்ததாகவும்’ கூறுகிறது. இதிலிருந்து அரசை அடைய வாரிசுகளிடையே உரசல்கள் இருந்தது என்பதும் ஸ்கந்தகுப்தர் தன்னுடைய வாளின் வலிமையால் அதை அடைந்ததாகவும் புரிந்துகொள்ளலாம்.
ஆர்ய மஞ்சுஸ்ரீ மூல கல்பம் என்கிற நூல் குப்தர்களின் அரச பரம்பரையின் விவரங்களைத் தருகிறது. அதில் சமுத்ரா, விக்ரமா, மஹேந்திரா, தேவராஜா ஆகிய அரசர்களின் பெயர்கள் வரிசையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை முறையே சமுத்திரகுப்தர், இரண்டாம் சமுத்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர், ஸ்கந்தகுப்தர் ஆகியோர்களைக் குறிக்கிறது. தன்னுடைய பாட்டனாரின் சிறப்புப் பெயர்களான விக்ரமாதித்தன், தேவராஜன் ஆகிய பெயர்களை ஸ்கந்தகுப்தரும் வரித்துக்கொண்டது கல்வெட்டுகளாலும் நாணயங்களாலும் தெரியவருகிறது.
இப்படி குமாரகுப்தருக்கு அடுத்து அரியணையில் ஏறிய ஸ்கந்தகுப்தர் தன்னுடைய கல்வெட்டுகளில் குப்தர்களின் வம்சாவளியைக் குறிப்பிடும்போது தன்னுடைய தாயின் பெயரைக் குறிப்பிடாததால், அவர் குமாரகுப்தரின் ஆசைநாயகிக்குப் பிறந்த மகன் என்று சில ஆய்வாளர்கள் முடிவுகட்டிவிட்டனர். அதன் காரணமாகவே குமாரகுப்தர் அவரை வாரிசாக முறைப்படி அறிவிக்கவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ‘தத்பாதானுத்யாத’ என்ற வார்த்தை அவர் முறையான வாரிசு என்பதைச் சுட்டுகிறது என்றும் அந்த வார்த்தை ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டுகளில் காணப்படாததால் அவர் அப்படிப்பட்ட வாரிசு இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த வாதத்தில் சாரமில்லை. இது போன்ற வார்த்தை குப்த அரசர்களின் எல்லாக் கல்வெட்டுகளிலும் இல்லை என்பது இங்கே கவனிக்கவேண்டியது. அதற்குப் பதிலாக ‘பித்ருபரிகத பாதபத்மவர்தி’ என்று தன் தகப்பன் மீதுள்ள பக்தியை அவர் வெளிக்காட்டும் வார்த்தை பிடரிக் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய தாயைப் பொருத்தவரை, தாயின் பெயர்கள் எல்லாப் பிரஸஸ்தியிலும் வரும் வழக்கம் இல்லை என்று ஆய்வாளர் ராய்சவுத்ரி சுட்டிக்காட்டுவது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஹர்ஷவர்த்தனரின் தாயின் பெயர் அவரது மதுபன் செப்பேடுகளில் வரவில்லை என்பதை அவர் உதாரணமாகக் காட்டுகிறார்.
தன்னுடைய தாயின் பெயரை ஸ்கந்தகுப்தர் பெருமையாகக் குறிப்பிட்டுக்கொள்வதை பிடரிக் கல்வெட்டு தெளிவாகக் காட்டுகிறது. கிருஷ்ணரின் தாயான தேவகிக்குச் சமமாக ஸ்கந்தகுப்தர் தன் தாயைக் கருதியிருக்கிறார் எனும்போது அவரிடம் ஸ்கந்தகுப்தர் குறைகண்டார் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. தன்னுடைய தகப்பனான குமாரகுப்தரின்மீதும் ஸ்கந்தகுப்தர் பெரும் மரியாதை வைத்திருந்ததை மேற்கண்ட வாக்கியத்தினாலும் குமாரகுப்தரின் நினைவாக அவர் உருவம் ஒன்றைப் பொறித்ததிலும் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
அவரது போட்டியாளர்களைப் பொருத்தவரை கடோத்கஜ குப்தர் கிழக்கு மாளவ மாகாணத்தின் ஆளுநராக இருந்தார் என்பது மட்டுமே தெரிகிறது. அங்கே கிடைத்த அவரது கல்வெட்டு ஒன்றில் சமுத்திரகுப்தரும் இரண்டாம் சந்திரகுப்தரும் குறிப்பிடப்படுகிறார்கள். முதலாம் குமாரகுப்தர் உலகம் முழுவதையும் காப்பவராகப் புகழப்படுகிறார். அப்படிப்பட்ட குமாரகுப்தர் ஆண்டுகொண்டிருக்கும்போது கடோத்கஜ குப்தர் தன்னுடைய ஆயுதங்களின் பலத்தைக் கொண்டு தன்னுடைய முன்னோர்கள் அடைந்த புகழைப் பெற்றார் என்றும் அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆகவே இவரும் குமாரகுப்தரின் மகன்களில் ஒருவர் என்றும் குப்தர்களின் வழக்கத்தை ஒட்டி அவர் அந்தப் பகுதியின் ஆளுநராகச் செயல்பட்டவர் என்றும் தெரிந்துகொள்ளலாம். அவரைப் பற்றிய வேறு விவரங்கள் தெரியவில்லை.
ஆனால் பூரகுப்தர், முதலாம் குமாரகுப்தரின் மகாதேவியான ஆனந்ததேவியின் மகன் என்று அவரது வம்சத்தில் வந்த இரண்டாவது குமாரகுப்தரின் முத்திரை ஒன்று குறிக்கிறது. பிகாரிலுள்ள ஒரு கல்வெட்டு முதலாம் குமாரகுப்தர் அவருடைய அமைச்சரான ஆனந்தசேனரின் சகோதரியான ஆனந்ததேவியை மணந்துகொண்டார் என்ற தகவலைத் தருகிறது. இதிலிருந்து ஆனந்ததேவிக்கு அமைச்சர்களின் பெரும் பகுதியின் ஆதரவு இருந்திருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் ஸ்கந்தகுப்தருக்குப் படைகளின் ஆதரவு இருந்தது கண்கூடு. பெரும் வீரராகத் தனது படைகளை நடத்திச் சென்று பேரரசின் புகழை மீட்ட அவருக்கு ராணுவத்தின் ஆதரவு இருந்ததில் வியப்பில்லை அல்லவா. இப்படி இரு பெரும் சக்திகள் வாரிசுரிமைக்கு மோதிக்கொண்டதில் ஸ்கந்தகுப்தருக்கே வெற்றி கிடைத்திருக்கவேண்டும். அப்படியானால் பூரகுப்தருக்கு என்ன நடந்தது? அதைப் பின்னால் பார்ப்போம்.
யார் அந்தப் புஷ்யமித்திரர்கள் ?
குமாரகுப்தரின் ஆட்சியின் பிற்காலத்தில் குப்தர்களுக்கும் வாகாடகர்களுக்கும் இருந்த சுமுகமான உறவு முறிந்ததைப் பற்றிப் பார்த்தோம். நள வம்ச அரசன் பவத்தவர்மனோடு சேர்ந்துகொண்டு வாகாடகர்களின்மீது குப்தர்கள் போர் தொடுத்ததால், வாகடக அரசன் நரேந்திரசேனன் அந்தப் போரில் தோற்று தனது அரசை இழக்க நேரிட்டது. ஆனால் தன்னுடைய மனைவியின் வீடான கதம்பர்களின் துணை கொண்டு நரேந்திரசேனன் தனது அரசை விரைவில் மீட்டான். தனது அரசைப் பறித்துக்கொண்ட குப்தர்கள்மீது போர் தொடுக்க தகுந்த சமயம் பார்த்திருந்தான் நரேந்திரசேனன். இருப்பினும் வலிமையான குப்தர்கள்மீது நேரடியாக மோதுவதில் அவனுக்குத் தயக்கம் இருந்தது. அந்தச் சமயத்தில் அவனுக்குக் கை கொடுத்தவர்கள் புஷ்யமித்திரர்கள்.
புஷ்யமித்திரர்களின் இருப்பிடம் பற்றிப் பல சர்ச்சைகள் இருந்தாலும் மேகலா என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பது பெரும்பாலானோர் ஒப்புக்கொண்ட விஷயம். விஷ்ணுபுராணத்தை மேற்கோள் காட்டி, வில்சன் என்ற ஆய்வாளர் ‘புஷ்பமித்திரர்கள்’ என்போர் நர்மதை ஆற்றங்கரையில் மேகலா என்ற இடத்தை ஆண்டவர்கள் என்று குறிப்பிடுகிறார். வாயுபுராணத்திலும் இதே போன்ற ஒரு குறிப்பு இருப்பதால், புஷ்யமித்திரர்கள் மத்திய இந்தியப் பகுதியில் நர்மதை ஆற்றங்கரையில் உள்ள பகுதியை ஆண்டவர்கள் என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக, பாண்டவ வம்சத்தைச் சேர்ந்த அரசனான பாரதபாலன் என்ற இந்திரனுடைய செப்பேடு ஒன்று மேகலா என்ற பகுதியைச் சேர்ந்த வர்த்தமானகா என்ற கிராமம் நிவந்தமாக வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. இது மத்தியப் பிரதேசத்திலுள்ள ரேவாவுக்கு அருகிலுள்ள இடமாகும். இதிலிருந்து மத்திய இந்தியப் பகுதியில் மேகலா என்ற இடம் இருந்தது உறுதிசெய்யப்படுகிறது. இந்த வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் ஆரம்பத்தில் குப்தர்களின் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் பாரதபாலனோ கோசலத்தின் இளவரசியை மணந்திருக்கிறான். தன்னுடைய பேரரசனாக நரேந்திரன் என்பவனை அவன் அந்தச் செப்பேட்டில் குறிப்பிட்டிருக்கிறான். அது நரேந்திரசேனனே என்பது பலரின் கருத்து. ஆகவே குப்தர்களுடைய சிற்றரசர்களாக இருந்தவர்கள் என்ன காரணத்தாலோ வாகாடகர்களின் சிற்றரசர்களாக தங்கள் நிலையை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். நரேந்திரசேனனுடைய மகனான இரண்டாம் ப்ருத்விசேனனுடைய பாலகாட் செப்பேடு அவனுடைய ஆணைகளை கோசலம், மேகலா, மாளவம் ஆகிய இடங்களின் அரசர்கள் ஏற்று நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறான். இதுவும் மேகலா அரசர்கள் வாகடகர்களோடு கூட்டணி அமைத்ததை உறுதி செய்கிறது.
மேற்குறிப்பிட்ட விஷயங்களிலிருந்து மேகலாவை ஆண்ட பாண்டவ வம்ச அரசர்களே புஷ்யமித்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்றும் ஒரு காலத்தில் குப்தர்களுக்கு அடங்கியவர்களாக இருந்த அந்த வம்சத்தினர் வாகடகர்களோடு நட்புக்கொண்டு குமாரகுப்தரின் ஆட்சியின் இறுதிக்காலத்தில் அவர்மீது போர் தொடுத்து சில வெற்றிகளை ஈட்டினர் என்பதும் தெளிவாகிறது. அவர்களைத் தோற்கடித்து அரசின் கௌவரத்தை ஸ்கந்தகுப்தர் மீட்டதையே தன்னுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
குப்தர்கள் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு வாகாடக – புஷ்யமித்திரர் கூட்டணி மட்டும் காரணமல்ல. பிரச்சனை இந்தியாவின் வடமேற்கிலிருந்தும் வந்தது. அது என்ன?
(தொடரும்)
Hello sir,
Thanks for your information and I would appreciate your efforts to educate people and create intrigue to learn more our history. In my school history book, I read Skantha Gupta was the last king in Gupta dynasty and their kingdom lost power because of the Huns invasion like Mikirakulan and Thoramana’s. Later I came to know the successor issue after Skantha Gupta and sibling rivalry with poora Gupta after reading Sandilyan’ s Malaivasal in which he described about the beauty of Padaliputra as well.
My best wishes and please keep educate us. Thanks
Mathu