பொயு ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தாலும், வட மேற்கு இந்தியாவை அவ்வளவாக குப்தர்கள் கவனிக்கவில்லை. அதுவே அவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் காரணம் ஆயிற்று என்று பல ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியா முழுவதிலும் வெற்றி கொண்ட சமுத்திரகுப்தர், வடமேற்குப் பகுதியைப் பொருத்தவரை அங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த கிடார குஷாணர்களோடு நட்புக் கொண்டு, அவர்களின் எதிரிகளான சாசானியர்களை வெற்றி கொண்டதோடு மட்டும் திருப்தி அடைந்துவிட்டார். அவர்களோடு கொண்ட நட்புரிமை காரணமாக, அந்தப் பகுதியை கிடார குஷாணர்களே ஆளட்டும் என்று விட்டுவிட்டார் சமுத்திரகுப்தர். தன்னுடைய நட்பு அரசு அங்கு நிலைத்திருக்கிறது என்றும் அந்தப் பகுதி முழுவதையும் நேரடி ஆட்சிக்குக் கொண்டுவந்து அகலக்கால் வைப்பது பேரரசைப் பலவீனமாக்கும் என்றும் சமுத்திரகுப்தர் நினைத்திருக்கலாம். அங்கிருந்து பெரும் தொல்லைகள் எதுவும் சமுத்திரகுப்தருக்கு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் வடமேற்குப் பகுதியில் வாஹ்லிகர்களால் சலசலப்பு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் விரைவிலேயே அங்கு படையோடு சென்று ‘ஏழு முகங்களைக் கொண்ட சிந்து நதியின் கரையில்’ அவர்களைச் சந்திரகுப்தர் வெற்றி கொண்டதாக மெஹ்ரோலித் தூண் குறிப்பிடுகிறது. அவரும் தன்னுடைய ஆட்சியில் நேரடியாக வடமேற்குப் பகுதியைக் கொண்டுவரவில்லை என்றாலும் அதன்மீது ஒரு கண் வைத்திருந்தார் என்று தெரிகிறது. ஆனால் அவருடைய மகனான குமாரகுப்தர், இந்தியாவின் வடமேற்குப் பகுதியை கிட்டத்தட்ட அனாதரவாக விட்டுவிட்டார். அவரது படையெடுப்பு எதுவும் அந்தப் பகுதியின்மீது நடைபெறவில்லை. ஆட்சியின் பின்பகுதியில் அவரது கவனம் முழுவதும் தக்காணப்பகுதியின்மீதும் வாகடகர்கள்மீதும் இருந்தது. இது அரசுக்குப் பெரும் பலவீனம் ஒன்றை வடமேற்கில் ஏற்படுத்தியது.
இந்திய வரலாற்றைப் பார்க்கும்போது வட இந்தியாவில் கங்கைச் சமவெளியில் தோன்றிய பேரரசுகளில் மௌரியர்களைத் தவிர வேறு எவரும் வடமேற்குப் பகுதியில் தங்களுடைய நேரடி ஆட்சியை ஏற்படுத்தவில்லை என்பதைப் பார்க்கலாம். அதன் காரணமாக வடமேற்குப் பகுதியின் ஆட்சி கைமாறிக்கொண்டே இருந்தது. மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து வெளிநாட்டவர்கள் வடமேற்குப் பகுதியில் குடியேறுவதும் அங்கே அவர்களின் ஆட்சி சில காலம் நடப்பதும் அதன் பின் வேறு குடியினர் அவர்களை அங்கிருந்து துரத்துவதும் வடமேற்கு இந்தியாவில் தொடர்ந்து நடந்தது என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இந்தோ-ஸித்தியர்கள் எனப்பட்ட சாகர்கள் அப்படி அங்கிருந்து வந்து முடிவில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் குடியேறியவர்கள்தான். அதன்பின் குஷாணர்கள் அங்கே சில காலம் ஆட்சி செய்தனர். அவர்களையும் அங்கிருந்து துரத்த இன்னோரு கூட்டம் அங்கே வந்து சேர்ந்தது. அவர்கள்தான் கொடூரமானவர்கள் என்று சரித்திரம் சித்தரிக்கும் ஹூணர்கள்.
ஹூணர்களின் தோற்றம் பற்றி இன்றளவும் சர்ச்சை நிலவுகிறது. ஆனால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு அவர்கள் மத்திய ஆசியப் பகுதியைச் சேர்ந்த நாடோடிக் கூட்டம் என்பது. அவர்களிலும் பல பிரிவுகள் உண்டு. கிடாரர்கள், அல்கானியர்கள் போன்ற பிரிவினர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலை அலையாக பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் யூரோப்பில் செய்த கொடுமைகளைப் பற்றி பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமுத்திரகுப்தரின் ஆட்சியின் இறுதிப் பகுதியிலேயே அவர்களில் ஒரு பிரிவினர் பாக்டீரியாவை வென்று அதைத் தங்களின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்துவிட்டனர். சாசானிய அரசரான இரண்டாம் ஷாபுரை அவர்கள் தோற்கடித்து அவரை அங்கிருந்து அவர்கள் விரட்டியடித்தனர்.
அதற்கு முன் அவர்கள் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களால் ஸபுலிஸ்தான் என்ற ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியில் சிறிது காலம் தங்கியிருந்தனர். ஸபுல் என்பது ஹூணர்களின் மற்றொரு பெயர். கபீசபுரம் என்னும் காபூல் ஹூணர்களின் தலைநகராக அப்போது இருந்தது. அவர்களில் ஒரு பிரிவினரான கிடாரர்கள் வடமேற்கு இந்தியாவைத் தாக்கி போலன் கணவாய் வழியாக பாரதத்திற்குள் நுழைந்தனர். அதன் பின் இந்தியாவின் மத்தியப் பகுதிகளுக்குள் நுழைய முயன்றபோது ஸ்கந்தகுப்தரை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டு குறிப்பிடும் மிலேச்சர்கள் அவர்களாகத்தான் இருக்கக்கூடும். ‘காட்டுமிராண்டிக் கூட்டம்’ என்று இந்திய நூல்களால் குறிப்பிடப்படும் அவர்களை தற்போது பெஷாவர் என்று அழைக்கப்படும் புருஷபுரத்திற்கு அருகில் வெற்றிகரமாக முறியடித்து ஸ்கந்தகுப்தர் திருப்பி அனுப்பினார். யூரோப்பிய அரசுகளைத் திக்குமுக்காடச் செய்த ஹூணர்களை ஸ்கந்தகுப்தர் தோற்கடித்தது சாதாரண விஷயமல்ல. இந்தப் போர் அநேகமாக குமாரகுப்தரின் ஆட்சியின் இறுதிப்பகுதியிலோ அல்லது ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின் ஆரம்பத்திலோ நிகழ்ந்திருக்கக்கூடும்.
பெரும் மலைத்தொடர்கள் அரண்போல காத்து நிற்கும் இந்தியாவிற்கு வந்த ஹூணர்களின் பலம் யூரோப்பிற்குச் சென்றதுபோல அவ்வளவு அதிகமல்ல, ஆகையால் ஸ்கந்தகுப்தரின் வெற்றிகள் அவ்வளவு முக்கியமானதல்ல என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால் இங்கேயும் அவர்கள் அலை அலையாக மீண்டும் மீண்டும் வந்ததை நாம் நினைவுகூரவேண்டும். அதைத் தவிர அவர்களது போர்முறையும் முரட்டுப் போர்முறையாக இந்திய அரசர்களுக்கு முற்றிலும் புதிதாக இருந்ததையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். பாரசீகத்தை ஆண்ட வலிமையான சசானியர்கள், ஹூணர்களோடு தொடர்ந்து போரிட்டு அழிந்தே போனார்கள். ஆனால் ஸ்கந்தகுப்தர் ஹூணர்களைத் தடுத்து நிறுத்தி பெரும் நாசம் ஏதும் இங்கே ஏற்படாதவாறு செய்தார். அந்த வகையில் அவரது திறமை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாதது ஆகும்.
ஸ்கந்தகுப்தரால் தோற்கடிக்கப்பட்டு பின்வாங்கிச்சென்ற கிடார ஹூணர்களை இன்னொரு பிரிவினரான அல்கானிய ஹூணர்களைத் தோற்கடித்தனர். அல்கானிய ஹூண அரசனான கிங்கலனின் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் முழுவதும் அவர்களது ஆட்சியின்கீழ் சென்றது. ஹூணர்களின் இந்தப் பிரிவினர் ஒரு விசித்திரமான வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். அவர்களுடைய குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதே தலைக்கவசம் ஒன்றை மாட்டி அவர்களின் தலை நீண்டதாக இருக்கும்படி செய்துவிடுவார்கள். எனவேதான் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் ஹூணர்களின் மண்டையோடு நீண்டதாக உள்ளது. அவர்களின் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள அரசர்களின் உருவமும் அவ்வாறே சித்தரிக்கப்பட்டுள்ளது. அதேபோலவே இவ்வகை ஹூணர்கள் மீசை மட்டுமே வைத்துக்கொண்டனர். அவர்களுக்குத் தாடி வைத்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது.
ஸ்கந்தகுப்தர் ஆட்சியின் பிற்பகுதியில் ஹூணர்கள் இந்தியாவில் நுழைவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் காரணமாக ஸ்கந்தகுப்தர் அவர்களோடு தொடர்ந்து போரிட நேரிட்டது. ஹூண அரசனான தோரமானா குஜராத் வரை வந்தாலும் ஸ்கந்தகுப்தர் அவர்களை ஓரளவு தடுத்து நிறுத்தியிருந்தார். ஆனால் அவருக்குப் பின்வந்த அரசர்களால் அதைச் செய்ய இயலவில்லை. தோரமானா இந்தியாவின் மேற்குப் பகுதிகளை வென்று மாளவ நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான். எரான் சிறிது காலம் ஹூணர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தோரமானாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவனுடைய மகன் மிகிரகுலன் மத்திய இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். அதன் பின், இந்திய அரசர்களின் கூட்டணிப்படையால் தோற்கடிக்கப்பட்டு வடமேற்குப் பகுதிகளுக்கு ஹூணர்கள் பின்வாங்கினர்.
வெளிநாட்டிலிருந்து வந்தாலும் ஹூணர்கள் இந்திய சமயங்களையே பெரும்பாலும் பின்பற்றியதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் ஸ்டெப்பிப் புல்வெளி நாடோடிகளைப் போல சூரிய வழிபாட்டை மேற்கொண்ட அவர்கள், அங்கிருந்து வட பாரதத்தை நோக்கி நகர்ந்தபோது இந்திய சமயங்களைப் பின்பற்றத்தொடங்கினர். கிங்கலன், தோரமானா ஆகியோர்களது நாணயத்தில் விஷ்ணுவும் லக்ஷ்மிதேவியும் இடம்பெற்றனர். கிங்கலன் ஆப்கானியப் பகுதிகளை ஆட்சி செய்தபோது அங்கே விநாயகருக்கான கோவில் ஒன்றையும் எழுப்பினான்.
காபூலுக்கு அருகே உள்ள கோவில் ஒன்றில் இந்த விநாயகரின் பின்னப்பட்ட விக்ரஹம் உள்ளது. அதன் கீழ் உள்ள கல்வெட்டு
“ஸித்தம். சம்வத்ஸரே அஷ்டமே சம் 8 ஜேஷ்டமாச சுக்ல பக்ஷ திதௌ
த்ரயோதஸ்யாம்ஸு தி 10-3 ஜிரிக்ஷே விசாகே சுபே சிம்ஹே சைத்ரக
மஹத் பிரதிஷ்டாபிதம் இதம் மஹா விநாயக பரமபட்டாரக
மஹாராஜாதிராஜ ஶ்ரீசாஹி கிங்கால உத்யான சாஹிபாதைஹி”
என்று பரமபட்டாரக மகாராஜாதிராஜ சாஹி கிங்கலா இந்த விநாயகரைப் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடுகிறது. இப்படி இந்திய கடவுளர்களை வணங்கிய ஹூணர்களின் அரசனான மிகிரகுலன் சைவ சமயத்தவனாகக் கருதப்படுகிறான். கஷ்மீரில் சிவனுக்காகக் கோவில் ஒன்றைக் கட்டியவன் மிகிரகுலன். ஒரு கட்டத்தில் புத்த மதத்தினருக்கும் ஹூணர்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பௌத்தர்கள் பெரும் அளவில் ஹூணர்களால் கொன்று குவிக்கப்பட்டனர். பௌத்த மடாலயங்கள் இடிக்கப்பட்டன. ஒரு விதத்தில் இந்தியாவில் பௌத்தமதம் குன்றுவதற்குக் காரணமாக ஹூணர்கள் இருந்தனர் என்று சொல்லலாம்.
அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப் பிறகு இந்திய வரலாற்றில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஹூணர்களின் படையெடுப்பாகும். பேரரசாக இருந்த குப்தர்களை பலவீனப்படுத்தியது மட்டுமன்றி கலை, சமயம் ஆகியவற்றில் பெரும் மாறுதல்களை ஹூணர்கள் நிகழ்த்தினர். பொருளாதாரத்தைப் பொருத்தவரை, மேற்கத்திய நாடுகளோடு குப்தர்களின் அரசு கொண்டிருந்த வணிகத்தை நிலைகுலையச்செய்து வர்த்தகத்தை வீழ்ச்சி அடையச்செய்தவர்கள் ஹூணர்கள். இந்தியாவின் மேற்குப் பகுதியில் உருவான பல கலப்பினத்தவர்கள் ஹூண வம்சாவளியினர்தான்.
இப்படிப் பெரும் மாற்றத்தை இந்திய அரசியலில் ஏற்படுத்திய ஹூணர்களை ஸ்கந்தகுப்தர் எவ்வாறு சந்தித்தார்? பலமான எதிரி ஒருவனை வடமேற்கில் வைத்துக்கொண்டு அவர் செய்த சாதனைகள் என்ன? பார்ப்போம்.
(தொடரும்)